மரணத்திற்குப் பின்….ஏதேனும் இருக்கின்றதா அல்லது இல்லையா என்றே நாம் கண்டு வருகின்றோம். மரணத்தினைப் பற்றிப் பேசுவது என்பது நிச்சயமாக ஒரு ருசிகர தலைப்பாக இருக்காது தான். மரணத்தினைப் பற்றியே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தான் என்றால் அவனால் வாழவே முடியாது போய் விடும். ஆகையால் தான் அர்த்தமற்றதாக தோன்றும் இந்த வாழ்வினில் மரணத்தினைப் பற்றிய சிந்தனைகளை மறப்பதற்காகவும் வாழ்ந்தாக வேண்டிய நேரத்தினை கவலையின்றி தன் விருப்பம் போல் செலவழித்துக் கொள்வதற்காகவும் மனிதன் பல்விதமான கேளிக்கைகளை தனக்குத் தானே உருவாக்கிக் கொள்கின்றான். சரி இருக்கட்டும்…மனிதனையும் கேளிக்கைகளையும் பற்றி நாம் வேறு பதிவினில் கண்டு கொள்ளலாம்…இப்பொழுது நாம் நம்முடைய தேடலினையே தொடர வேண்டி இருக்கின்றது. மரணத்திற்குப் பின்பு என்ன? என்ற கேள்விக்கு சமயங்கள் கூறுகின்ற விடயங்களையும் அறிவியலானது கூறுகின்ற விடயங்களையுமே நாம் மேலோட்டமாக கண்டு இருக்கின்றோம். அதன் படி,

அனைத்து சமயங்களும், அவை கொண்டுள்ள நம்பிக்கைகளில் மாறுபாடுகள் இருந்தாலும், இறப்பிற்கு பின் வாழ்வென்று ஒன்று இருக்கின்றது என்றும் மரணமானது முடிவல்ல என்றுமே கூறுகின்றன. ஆனால் அறிவியலோ, மரணம் என்ற ஒன்றுடன் ஒருவனுக்கு அனைத்தும் முடிந்து விடுகின்றது என்றே கூறுகின்றது. இவற்றில் நாம் எதனை நம்புவது என்ற கேள்வியே இப்பொழுது நம் முன்னே நின்றுக் கொண்டிருக்கின்றது. அதனைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது…முதலில் நாம் அறிவியலில் இருந்தே தொடங்குவோம்.

சென்ற பதிவிலேயே நாம் கண்டு இருக்கின்றோம் அறிவியலானது உயிர் என்ற ஒன்றினையோ அல்லது ஆன்மா என்ற ஒன்றினையோ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. அதனால் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. காரணம் ஐம்புலன்களினால் வருகின்ற அறிவினை வைத்து உயிரினையோ அல்லது ஆன்மாவினையோ அறிவியலால் அறிந்துக் கொள்ள முடியாது. அவ்வாறு தன்னால் அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றினை அறிவியலால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஆகையால் அறிவியலால், அதாவது ஐரோப்பிய அறிவியலால் உயிர் என்ற ஒன்றினை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதன் கூற்றுப்படி,
இந்த உடலானது செல்களால் உருவாகி இருக்கின்றது. நம்முடைய தோல் முதற்கொண்டு இருதயம், மூளை என்று அனைத்து உடல் உறுப்புக்களும் செல்களாலேயே ஆகி இருக்கின்றன. அந்த செல்கள் அனைத்தும் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. மேலும் இந்த செல்களானவை தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்தவை. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்தினில் பழைய செல்லானது அழிந்து அதற்கு பதிலாக முற்றிலுமாக புதிய ஒரு செல்லானது தோன்றி விடும். அதாவது, 10 வருடங்களுக்கு முன்பு நம்முடைய எலும்புகளில் இருந்த செல்கள் எவையும் இப்பொழுது இருக்காது…அவை அனைத்தும் அழிந்துப் போய் முற்றிலுமாக புதிய செல்களால் நம்முடைய எலும்பானது இப்பொழுது உருப்பெற்று இருக்கின்றது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் நம்முடைய எலும்பானது புதிய எலும்பாக மாறி இருக்கின்றது. சரி இருக்கட்டும்…செல்களின் இந்த தன்மையினாலேயே, அதாவது தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளக் கூடிய தன்மையினாலேயே இந்த உடலானது இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் அச்செல்களால் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாது போய் விடுகின்றது. அச்சூழலில் உடலானது அழிந்து விடுகின்றது. இந்த நிலையே மரணம். இது தான் அறிவியல்.

தன்னுடைய ஐம்புலன்களை வைத்து உடலினை அறிவியல் காணுகின்றது…அதனால் செல்களை காண முடிகின்றது…செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளுவதனையும் அதனால் காண முடிகின்றது. அவ்வாறு செல்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் உடலானது இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனையும் அது காணுகின்றது. அவ்வாறே எப்பொழுது அந்த செல்களின் இயக்கம் நின்று போய் விடுகின்றதோ அப்பொழுது உடலின் இயக்கமும் நின்று விடுகின்றது என்பதனையும் தனது ஐம்புலன்களின் வழியாக அறிவியல் காணுகின்றது. எனவே தான் அறிந்த அந்த அறிவினைக் கொண்டு செல்களின் இயக்கம் வாழ்க்கை…செல்களின் இயக்கமின்மை மரணம் என்றே அது கூறுகின்றது.

ஆனால் இந்த கூற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன…ஒரு செல்லானது தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது…’புதுப்பித்தல்’ என்ற அந்த செயலின் மூலமாக பழைய செல்லானது அழிந்து கழிவாக வெளியேற புதிய செல்லானது தோற்றம் பெறுகின்றது. இந்நிலையில் எவ்வாறு அந்த ‘புதுப்பிக்கும்’ செயலானது திடீரென்று நின்று போகின்றது? எதனால் ஒரு செல்லின் இயக்கம் தடைபடுகின்றது? இயங்கிக் கொண்டு இருக்கும் ஒன்று திடீரென்று இயங்காமல் போகின்றது…அந்நிலையில், இயங்கிக் கொண்டிருந்த அது எதனால் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் திடீரென்று எதனால் அது இயங்காமல் போயிற்று என்றும் விடையினை ஒருவர் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. ஆனால் இந்த கேள்விக்கு தான் அறிவியலால் எளிதாக விடையினைத் தர முடியாது இருக்கின்றது.

‘வயதாகி விடுவதால் இயக்கம் தடைபடுகின்றது’ என்ற ஒரு பதில் வரத் தான் செய்கின்றது. ஆனால் இதிலும் கேள்விகள் இருக்கத் தான் செய்கின்றன. நம்முடைய செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றமையினால் பழைய செல்கள் என்பதே நம்முடைய உடலில் கிடையாது. அந்நிலையில் வயதாகின்றது என்றால் எதற்கு வயதாகின்றது? செல்களுக்கா? அல்லது வேறு ஏதேனும் ஒன்றிற்கா?

சரி…வயதாவதால் தான் செல்களின் இயங்கும் தன்மை குறைந்து மரணம் சம்பவிக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம்…அந்நிலையில், இளைஞன் ஒருவன் இருதய கோளாறினால் இறந்து விடுகின்றான் என்றால், அவன் இறந்ததற்குப் பின்னர் அவனுக்கு சரியான இருதயம் ஒன்றினையோ அல்லது இருதயத்தின் வேலையினை செய்யக் கூடிய ஒரு பொருளினையோ வைத்தால் அவன் உயிர்த்தெழ வேண்டுமே? ஏனென்றால் அவனது உடல் இன்னும் இளமையாகத் தானே இருக்கின்றது. அந்நிலையில் செல்களும் இயங்கும் தன்மையினைக் கொண்டே தானே இருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு நிகழ்வது இல்லையே…தற்சமயம் வரைக்கும் இறந்தவன் இறந்தவனாகத் தானே இருக்கின்றான். இதற்கு என்ன விடை என்றால் அறிவியலிடம் அதற்கான பதில்கள் இன்று வரை கிடையாது. அவர்கள் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்…ஆனால் இன்று வரை அக்கேள்விகளுக்கு விடைகள் கிடையாது. எதிர் காலத்தில் கிட்டுமா…அதனைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். அனைத்தும் மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது என்பதே அவர்கள் இன்றளவில் தருகின்ற பெருவாரியான பதிலாக இருக்கின்றது. நிற்க.

செல்கள், அது இது என்று கொஞ்சம் பள்ளிக்கூட அறிவியல் வகுப்பினை இப்பதிவு நினைவுப் படுத்தி தான் இருக்கும்…யப்பா…பள்ளிகூடத்துல தான் இத எல்லாம் படிக்கணும்னு இருந்திச்சினா இங்கேயுமா என்கின்ற ஒரு எண்ணமும் எழக் கூடும்…ஆனால் வேறு வழியில்லை...இவற்றைப் பற்றி நாம் சிந்தித்தாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது நமது உலகினைப் பற்றியே நாம் சிறிது காண வேண்டி இருக்கின்றது...காணலாம்...!!!
தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

உண்மையான விஞ்ஞானம் தமிழில், இந்து மதநூல்களில் இருக்கிறது. நாம் விஞ்ஞானம் என்று அறிந்து வைத்து இருப்பது எல்லாம் போலி விஞ்ஞானம். முழுமையாக அறிந்த விஞ்ஞானமல்ல. அது ஒரு அரைகுறை விஞ்ஞானம். உண்மையான விஞ்ஞானம் பல அதிசயங்களும் பேராபத்துக்களும் உள்ளடக்கியது. அது அனைவரும் அறியத்தக்கதல்ல. அதனால்தான் அதை ரகசியமாக நல்லவர்கள் மட்டுமே அறியக்கூடிய வகையில் மத நூல்களில் சாஸ்திர நூல்களில் என மறைத்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். அந்த விஞ்ஞானத்தை அறிந்தவர்களே சித்தர்களாக, சாமியார்களாக (உண்மை சாமியார்களாக) இருக்கிறார்கள். நிறைகுடம் ததும்பாது என்று பழமொழி உண்டு. அதுபோல உண்மை அறிந்தவர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறிக்கொண்டு திரிய மாட்டார்கள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு