ஒரு வழியாக தஸ்தோவஸ்கியின் ‘கேலிக்குரிய
மனிதனின் கனவு’ என்ற நூலினை மொழிப்பெயர்த்து முடித்தாயிற்று. இப்பொழுது
அந்த நூலினை மொழிப்பெயர்த்த காரணத்தினைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி
இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் சில விடயங்களைப் பற்றி பார்க்க வேண்டி
இருக்கின்றது…சாதாரண விடயங்கள் தான்…மரணம்…மரணத்திற்குப் பின்…கனவு…என்று
நாம் அனைவரும் அறிந்திருக்கும் விடயங்களைப் பற்றியே தான் நாம் சிறிது
பார்க்க வேண்டி இருக்கின்றது.
மரணம் என்றால் என்னவென்று நாம் அனைவரும்
அறிந்தே தான் இருக்கின்றோம்…நம்முடைய உடலின் இயக்கம் நின்று போய்
விடுகின்றது…உடலும் அழிந்து விடுகின்றது…நாம் என்ற ஒரு நபர் இந்த உலகில்
இல்லாது போய் விடுகின்றோம்…!!! இதனை அனைவரும் அறிந்தே தான்
இருக்கின்றோம்…எனவே இதனைப் பற்றி மேற்கொண்டு நாம் காணப்போவதில்லை…!!!
ஆனால்…மரணத்திற்குப் பின்னர் என்ன? என்ற
கேள்வி வரும் பொழுது தான் பலவிதமான எண்ணங்களும் கருத்துக்களும் எழுந்த
வண்ணம் இருக்கின்றன. மரணத்திற்குப் பின்னர் ஏதேனும் இருக்கின்றதா அல்லது
ஒன்றுமே இல்லையா? என்ற கேள்விக்கு விடையினை பல்வேறு விதமாக பல்வேறு
சமயங்களும் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. அச்சமயங்கள் கூறும் கூற்றுகளில்
எந்த கூற்று உண்மையானது என்பதனை அனுபவத்தால் அன்றி நம்மால் தற்போதைக்கு
அறிந்துக் கொள்ள முடியாது…எனவே இப்போதைக்கு அச்சமயங்கள் கூறும் கூற்றுகள்
சரியானவையா இல்லையா என்ற ஆராய்ச்சியினை விடுத்து, அவை கூறுகின்ற கூற்றுகள்
யாவை என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.
சமணமும் பௌத்தமும் –
மனிதன் இறப்பிற்கு பின்னால் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மீண்டும்
பிறக்கின்றான். அவன் விலங்காய் பிறக்கலாம்…பறவையாய்
பிறக்கலாம்…மனிதனாகவும் பிறக்கலாம். எப்பொழுது அவன் தியானம் செய்து
பற்றுகளை நீக்கி முக்தி அடைகின்றானோ அவன் அப்பொழுது மீண்டும் பிறப்பதில்லை.
இதுவே சமண பௌத்த கொள்கையாகும். இதற்கு பெயர் பிறவிச் சுழற்சிக் கொள்கை.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் மனித பிறவியில் மட்டுமே ஒருவனால்
முக்தியினை அடைய முடியும். அதுவும் சமண சமயத்தின் ஒரு பிரிவிலுள்ள
நம்பிக்கையின்படி ஒருவன் ஆணாக பிறந்தால் மட்டுமே தான் முக்தி அடைய
முடியும். இவை சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நம்பிக்கைகள்.
இந்து சமயம் -
மரணத்திற்கு பின்பு என்னவாகும் என்பதனைக் குறித்த இந்து மதத்தின் பார்வைகள்
ஒவ்வொரு பிரிவுகளுக்கிடையேயும் சிறிது மாறுபட்டு தான் இருக்கின்றது. பல
பிரிவுகள் பொதுவாக பிறவிச் சுழற்சிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளுகின்றன.
சில பிரிவுகளோ பிறவிச் சுழற்சிக் கொள்கையினை மறுக்கின்றன. ஆனால் பௌத்த சமண
சமயங்களில் காணப்படும் பிறவிச் சுழற்சிக் கொள்கைக்கும் இந்து சமயத்தில்
காணப்படுகின்ற கொள்கைக்கும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பௌத்த சமண கொள்கைகளில் இறை நம்பிக்கை கிடையாது…அனைத்தும் மனித
முயற்சியிலேயே அடங்கி இருக்கின்றது. ஆனால் இந்து சமய நம்பிக்கைகளிலோ
பெரும்பாலும் முக்தி அடைவதற்கு மனித முயற்சி மட்டுமே போதாது, இறைவனின்
அருளும் வேண்டும் என்ற நம்பிக்கை அடங்கி இருக்கின்றது. ஆயினும் மனித
முயற்சி மட்டுமே போதும் என்றுக் கூறும் பிரிவுகளும் இந்து சமயத்தில்
இருக்கத் தான் செய்கின்றன. மேலும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றினைப் பற்றிய
நம்பிக்கைகளும் இந்து சமயத்தில் இருக்கத் தான் செய்கின்றன.
இசுலாம் - இசுலாமின்
நம்பிக்கையின்படி மக்கள் இறந்ததற்கு பின்பு தீர்ப்பு நாளுக்காக காத்து
இருப்பர். அந்த தீர்ப்பு நாளின் அன்று இறைவன் மக்கள் அவர்கள் செய்த பாவ
புண்ணியங்களின் படி அவர்களை சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்புவார்.
இச்சமயம் மறுபிறப்பினை ஏற்றுக் கொள்ளாது. மனிதன் இவ்வுலக வாழ்வில்
மரித்தாலும் அவன் ஒரு ஆன்மீக நிலையில் உயிர் பெற்றுத் தான் இருப்பான்
என்றும் அவன் அந்த இறுதி நாளுக்காக காத்துக் கொண்டிருப்பான் என்பதுமே
இசுலாமின் நம்பிக்கையாகும்.
கிருத்துவம் -
கிருத்துவமும் மறுபிறப்பினை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அதனைத் தவிர்த்து
மரணத்திற்கு பின்பு என்னவாகும் என்பதனைக் குறித்த கிருத்துவத்தின்
பார்வைகள் ஒவ்வொரு பிரிவுகளுக்கிடையேயும் சிறிது மாறுபட்டு தான்
இருக்கின்றது. சில பிரிவுகளின் கூற்றின் படி மனிதன் இறந்ததற்கு பின்னர்
உடனேயே அவன் செய்த பாவ புண்ணியக் கணக்குகளின் படி சொர்கத்திற்கோ அல்லது
நரகத்திற்கோ அனுப்பப்பட்டு விடுகின்றான். சில நம்பிக்கைகளின் படி மனிதன்
அவனது மரணத்திற்கு பின்னர் ஒரு இடைப்பட்ட உலகினில் அவனது பாவங்கள் கழியும்
வரை இருக்கின்றான்…பின்னர் அவன் சொர்கத்திற்கு தயாராகின்றான். வேறு சில
நம்பிக்கைகளின்படி மனிதன் இறந்த உடனேயே சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ
செல்வதில்லை..மாறாக இறுதியான தீர்ப்பு நாள் அன்றே அவன் செய்த பாவ புண்ணியக்
கணக்குகளுக்கு ஏற்ப அவன் சொர்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ
செல்லுகின்றான். சில கிருத்துவர்கள் நரகம் என்ற ஒன்றையே ஏற்றுக் கொள்வதும்
இல்லை. மேலும் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகியவற்றினைப் பற்றிய
சிந்தனைகளிலும் கிருத்துவர்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.
சிலரோ சொர்க்கமும் நரகமும் உண்மையாகவே இருக்கின்ற இடங்கள் என்று
கூறுவர்..வேறு சிலரோ சொர்க்கமும் நரகமும் உணர்ச்சி நிலைகள் என்பர்…அதாவது
இறைவனுடன் இருப்பது சொர்க்கம்..இறைவனை விட்டு விலகி இருப்பது நரகம் என்றே
அவர்கள் கூறுவர்…சரி இருக்கட்டும்…பொதுவாக கூற வேண்டும் என்றால்
கிருத்துவம் மறுப்பிறப்பினை ஏற்றுக் கொள்வதில்லை…மரணத்திற்குப் பின்னர்
மனிதன் அவனது செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பினை எதிர்பார்த்து இருக்கின்றான்.
அறிவியல் (இதுவும்
இப்பொழுது ஒரு வகையான சமயம் தான்) – அறிவியல் உயிர் என்ற ஒன்று இருப்பதனையே
ஏற்றுக் கொள்ளாது. அதனால் உயிரினை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால்
ஐம்புலன்களைக் கொண்டு அதனால் எதனை உணர்ந்து ஆராய்ச்சி செய்ய முடியுமோ அதனை
மட்டுமே தான் அறிவியலால் நம்ப முடியும். ஆனால் உயிர் என்ற ஒன்றினையோ அல்லது
ஆன்மா என்ற ஒன்றினையோ அதனால் ஐம்புலன்களைக் கொண்டு எவ்வாறு அறிய முடியும்.
எனவே அதன் பார்வையில், உயிர் என்றும் ஆன்மா என்றும் எதுவும் கிடையாது.
செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளுகின்ற தன்மையினால் ஒருவன்
இயங்கிக் கொண்டு இருக்கின்றான். எப்பொழுது அந்த செல்களால் தம்மைத் தாமே
புதுப்பித்துக் கொள்ள முடியவில்லையோ அப்பொழுது ஒருவனது இயக்கம் நின்று
விடுகின்றது. அந்த தன்மையினையே மரணம் என்று அறிவியல் அழைக்கின்றது.
அந்நிலையில் மரணத்திற்கு அப்பால் ஒன்றுமே கிடையாது என்பதே அறிவியலின்
பார்வையாகும்.
மிகவும் மேலோட்டமாகவே நாம் மேற்கண்ட
அந்த சமயங்களின் நம்பிக்கைகளை கண்டு இருக்கின்றோம். அதுவே இங்கே நம்முடைய
நோக்கத்திற்கு போதுமானதாகவும் இருக்கின்றது. மாறாக, நாம் அந்த ஒவ்வொரு சமய
கூற்றுகளை ஆராயத் துவங்கினோம் என்றால், நாம் பல்வேறு தத்துவங்களைப்
பற்றியும் அவற்றின் தோற்றங்கள் அவற்றின் விளக்கங்கள் மற்றும் அவை ஏன்
ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு இருக்கின்ற என்பதனைப் பற்றியும் மிகவும் விரிவாக
காண வேண்டி வரும். ஆனால் இப்போதைக்கு அவை நமக்குத் தேவை இல்லை (இப்போதைக்கு
மட்டுமே அவை தேவை இல்லை…ஆனால் நிச்சயம் அவற்றை நாம் காண வேண்டும்).
சரி…இப்போதைக்கு நாம் கண்டு இருக்கின்ற விடயங்களை வைத்து இரண்டு பிரிவுகளை உருவாக்கலாம்,
ஒரு பிரிவு – மரணத்திற்கு பின் வாழ்வு இருக்கின்றது என்ற பிரிவு (அறிவியலைத் தவிர்த்து அனைத்து சமயங்களும்)
மற்றொரு பிரிவு – மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லை என்ற பிரிவு (அறிவியல்)
இப்பொழுது இந்த வேறுபாட்டினைப் பற்றியே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்…கனவு காண்போம்…!!!
தொடரும்….!!!
பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே
கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக்
கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக்
கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு
தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக