நாம் இது வரை கண்டு வந்திருப்பவைகளை சற்று சுருக்கமாக காண்பது நலமாக என்றே எண்ணுகின்றேன்.
மரணத்திற்குப் பின்னர் ஒன்றுமே இல்லை என்றே
அறிவியல் கூறுகின்றது. மரணம் என்பது முடிவல்ல, அதற்கு பின்னும் வேறு ஏதோ
ஒன்று இருக்கின்றது என்றே சமயங்கள் கூறுகின்றன. இவ்விரண்டு கூற்றுகளில்
அறிவியலின் கூற்றினைப் பற்றியே நாம் இது வரை கண்டு இருக்கின்றோம். வாழ்வின்
சில விடயங்களுக்கு எவ்வாறு இன்றைய ஐரோப்பிய அறிவியலினால் பதில் அளிக்க
முடியாது இருக்கின்றது என்பதனையும் நாம் மேலோட்டமாக கண்டு இருக்கின்றோம்.
அதாவது,
தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலினை உடைய செல்கள் எதனால் அவ்வாற்றலினை இழக்கின்றன? என்பதனைக் போன்ற கேள்வியிற்கும்
கனவுகள் எதனால் உருவாகின்றன? ஏன்
உருவாகின்றன? அவற்றின் அர்த்தம் யாது? என்பன போன்ற கேள்விகளுக்கும் இன்று
வரை அறிவியலால் தகுந்த பதிலினைத் தர முடியாமல் தான் இருக்கின்றது.
பிற்காலத்தில் அதனால் அக்கேள்விகளுக்கு விடையினைத் தர முடியுமா? அதனை நாம்
பொறுத்திருந்து தான் காண வேண்டி இருக்கின்றது. எனவே இப்போதைக்கு
மரணத்திற்குப் பின்பு ஒன்றுமே இல்லை என்ற அறிவியலின் கூற்றினை நாம் ஏற்றுக்
கொள்ள முடியாது. சரி…இப்பொழுது நாம் சமயங்களின் கூற்றினை காண்போம்.
மரணத்தினை சமயங்கள் எவ்வாறு விளக்குகின்றன
என்று கண்டோமே என்றால் ‘உயிர்/ஆன்மா’ என்ற ஒன்று எப்பொழுது உடலினை விட்டு
நீங்குகின்றதோ அப்பொழுது மரணம் நிகழ்கின்றது என்றே சமயங்கள் கூறுகின்றன
(இங்கே உயிரும் ஆன்மாவும் ஒன்றா அல்லது இரண்டும் வேறா என்ற கேள்விகளும்
இருக்கத்தான் செய்கின்றன…ஆனால் அவை இந்த பதிவிற்கு முக்கியம் இல்லாததால்
அந்த விடயத்தினைப் பற்றி நாம் இங்கே காண வேண்டியதில்லை). அதாவது உயிர் என்ற
ஒன்று இருக்கும் வரை உடலானது இயங்கிக் கொண்டே இருக்கின்றது. எப்பொழுது
உயிரானது பிரிகின்றதோ அப்பொழுது உடலானது அழிகின்றது. இது தான் சமயங்கள்
தரும் விளக்கம் ஆகும். இதனைச் சற்று விரிவாக காண்போம்.
நமது உடலானது செல்களால் உருவாகி
இருக்கின்றது. அப்படி செல்களால் உருவாகி இருக்கின்ற உடலினை உயிரானது
இயக்கிக் கொண்டிருக்கின்றது. உடலின் இயக்கம் முழுக்கவே உயிரினைச் சார்ந்து
இருக்கின்றது. அணுக்களின் இயங்கும்/புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உயிரின்
மூலமாகவே சாத்தியப்படுகின்றது. ஆகையால் தான் உயிர் எப்பொழுது பிரிகின்றதோ
அப்பொழுது உடலினது இயக்கம் (அணுக்களின் புதுப்பித்துக் கொள்ளும்/இயங்கும்
தன்மை) நின்று போய் உடல் தனது அழிவினைச் சந்திக்கின்றது.
இதனால் தான், அணுக்கள் அனைத்தும் புதிதாக
இருக்கக்கூடிய உடலினை ஒரு இளைஞர் பெற்று இருந்தாலும், எப்பொழுது உயிர் அவரை
விட்டு பிரிகின்றதோ அப்பொழுது அவர் மரணமடைகின்றார். அவருடைய உடலில்
அனைத்தும் சரியாக இருக்கின்றன…இருந்தும் அவற்றை இயக்கக் கூடிய ஆற்றல்,
அதாவது உயிர் அங்கே இல்லை. எனவே அவர் மரணமடைகின்றார். அதனால் தான் இறந்த
ஒருவருக்கு அறிவியல் எந்த பாகத்தினை மாற்றினாலும் அவரால் உயிர்த்தெழ
முடிவதில்லை. காரணம் அறிவியலால் பாகங்களை வழங்க முடியும்..ஆனால் அந்த
பாகங்களை இயக்கக் கூடிய உயிரினை வழங்க முடியாது. சரி இருக்கட்டும். உடலினை
உயிர் இயக்குகின்றது என்றே நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இதனை அனைவரும்
நம்ப வேண்டும் என்பதில்லை. சிலர் நிச்சயமாக இக்கூற்றினை மறுக்கத் தான்
செய்வர்.
‘உயிர் என்ற ஒன்று இருக்கின்றது என்று
நீங்கள் சொல்லுகின்றீர்கள்…ஆனால் அதனை நாங்கள் எப்படி நம்புவது? அணுக்கள்
இயங்குகின்றன என்று நாங்கள் கூறுகின்றோம்…அதனை உங்களுக்கு நாங்கள்
காட்டவும் செய்கின்றோம்…அவை ஏன் இயங்காது போகின்றன என்பதனைக் குறித்து
நாங்கள் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கின்றோம்…பிற்காலத்தில் அதனையும்
நாங்கள் கண்டறியலாம். ஆனால் உடலுக்கு அப்பாற்பட்டு உயிர்/ஆன்மா என்ற ஒன்று
இருக்கின்றது என்று நீங்கள் சொல்வதனை எவ்வாறு நம்ப முடியும்?’ என்றே
அவர்கள் கேள்விகளும் எழுப்பக் கூடும். அக்கேள்விக்கும் விடையினை நாம் தேட
வேண்டி தான் இருக்கின்றது.
உயிருள்ள மனிதன் ஒருவனுக்கும் உயிரற்ற
ஒருவனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டினை நம்மால் அறிந்துக் கொள்ள
முடிகின்றது. அனைவராலும் அதனை அறிந்துக் கொள்ள முடியும் தான். மரணம் என்ற
ஒன்று (அதாவது உயிரானது பிரிந்துச் செல்லுகின்ற நிகழ்வானது)
அவ்வேறுபாட்டினை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது தான். ஆனால், மரணத்தின்
மூலமாக அல்லாது, வேறு வகையில் உயிர்/ஆன்மா என்ற ஒன்று இருப்பதனை நம்மால்
அறிந்துக் கொள்ள முடியுமா? என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
ஏனென்றால் மரணத்திற்குப் பின் என்ன இருக்கலாம் என்று கூறுவதனை அனுபவித்துப்
பார்க்காத வரையில் உண்மையானது என்னவென்பதனை எவராலும் உறுதியாக கூறவோ
நம்பவோ முடியாது.
அதாவது ஒருவன் தனது மரணத்திற்குப் பின்னர்
தீர்ப்பு நாளிற்காக காத்து இருப்பான் என்றே நம்பி இருக்கலாம்…மற்றொருவன்
மறுபிறவியில் நம்பிக்கையினைக் கொண்டிருக்கலாம்…ஆனால் அவற்றை அவன்
அனுபவிக்காத வரை அவை வெறும் நம்பிக்கைகளாகத் தான் இருக்க முடியும். அவை
நடக்கலாம், நடக்காமலும் போகலாம். மரணமடைந்த பின்னர் எவராவது வந்து
சொல்லிவிட்டுச் சென்றால் தான் நம்மால் அதனை அறிந்துக் கொள்ள முடியும். எனவே
மரணத்தினை மட்டுமே வைத்து உயிர் என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறுவது
போதுமானதாக இருக்காது. எனவே வேறு எவ்வழியிலாவது, ஒரு மனிதன் தான் உயிருடன்
இருக்கும் பொழுதே, உடலினைத் தவிர்த்த வேறொன்று தன்னிடம் இருக்கின்றது
என்பதனை அறிய முடியுமா என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அப்படி அறிய முடியுமா என்ற கேள்விக்கு ‘ஆம்…’ என்றே விடையினை அளித்துக் கொண்டிருக்கின்றன கனவுகள்….!!!
மீண்டும் கனவு காண்போம்…!!!
தொடரும்…!!!
பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே
கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக்
கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக்
கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு
தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.
1 கருத்துகள்:
ஆய்வு நன்று !வாழ்த்துகள்!
கருத்துரையிடுக