வியாழன், 1 நவம்பர், 2012

நன்னூல் கூறும் ஆசிரியனின் இயல்புகள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோடு நில்லாமல் நல்லதொரு சமுகத்தையும் தோற்றுவிக்கின்றனர். நல்ல ஆசிரியர்கள் இல்லாத சமுகம் நிச்சயம் நல்லதொரு சமுகமாக இருத்தல் இயலாது. நல்ல கருத்துகளையும் பண்புகளையும் மாணவர்களுக்கு ஊட்டி அதன் வாயிலாக அவர்களை நெறிப்படுத்தி அவர்களின் வாயிலாகவே சமூகத்தினை சீர்படுத்தும் ஒரு அளப்பரிய பணியைச் செய்பவர்கள் தாம் ஆசிரியர்கள். அத்தகைய பணியினைச் செய்யும் ஆசிரியர்களைக் குறித்தும் அவர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியைச் செய்ய வேண்டும் என்பன குறித்தும் தமிழ் இலக்கியங்கள் சில விடயங்களைக் கூறுகின்றன. அவற்றைக் காணலாம்.
முதலில் ஆசிரியன் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது தமிழ் இலக்கண நூலான நன்னூல் என்ன கூறுகின்றது என்பதனை நாம் கண்டு விடலாம்.

ஒரு நல்ல ஆசிரியன் என்பவனைக் குறிக்க நான்கு பொருட்களை உவமையாக கூறுகின்றார் பவணந்தி முனிவர் (நன்னூலின் ஆசிரியர்- சமண சமயத்தினைச் சார்ந்தவர்). அவை முறையே நிலம், மலை, தராசு, மலர். இப்பொழுது அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

நன்னிலமும் நல்லாசிரியனும்:

தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே


ஒரு நிலமானது தன்னில் கணக்கிடமுடியாத பொருட்களை கொண்டு விளங்கும். அவ்வாறே எவற்றையும் தாங்கும் உறுதியினையும் பெற்று விளங்கும்.
மேலும் தம்மை மக்கள் எவ்வளவு தோண்டினாலும் அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் அவர்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் பெற்று இருக்கும். அவ்வாறே மக்களின் முயற்சிகளுக்கேற்ப தக்க தருணத்தில் அவர்களுக்குரிய பலனையும் தரும் இயல்பையும் உடையதாகவும் இருக்கும்(உதா. விவசாயம்). இவையே நல்ல நிலத்தின் குணங்களாம்.

அவ்வாறே நல்ல ஆசிரியரும், நிலம் எவ்வாறு தன்னுள் பல பொருட்களை கொண்டு பெருமைப் பெற்று விளங்குகின்றதோ அதைப் போன்றே, தாம் பல்வேறு நூல்களின் வாயிலாக கற்றறிந்த பொருள்களை செம்மையாக தம்மில் கொண்டு இருக்க வேண்டும். பின்னர் அப்பொருட்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வாறே நல்ல ஆசிரியர் என்பவர் எந்த நிலை வந்தாலும் அதனைக் கண்டு வாடாத மனத் திண்மையையும் கொண்டு இருக்க வேண்டும். கூடவே மாணவர்கள் அறியாது செய்யும் தவறினை பொறுத்துக் கொள்ளும் தன்மையும், மாணவர்கள் கல்வியினை கற்கும் ஆர்வத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பலனினைத் தரும் தன்மையையும் உடையவராய் இருத்தல் வேண்டும்.

எவ்வாறு நாம் விதைத்த உழைப்பினை விளைச்சலாக ஒரு நல்ல நிலம் தருமோ அவ்வாறே மாணவர்கள் தாங்கள் கல்வியினைப் பெற மேற்கொள்ளும் முயற்சிக்குத் தகுந்த பலனைத் (அறிவினைத்) தருபவரே நல்ல ஆசிரியராவார்.

இவையே நிலத்தை உவமையாகக் கொண்டு ஒரு நல்லாசிரியனின் இயல்புகளை விளக்கும் நன்னூலின் கருத்தாகும்.

மாமலையும் நல்லாசிரியரும்:

அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே


இதன் அளவு இவ்வளவு தான் என்று அளந்துக் கூற இயலா வண்ணம் அளவும் பொருளும் ஒருங்கே பெற்று விளங்குவது மலையாகும். மேலும் எளிதில் துளையிடப்பட முடியாத உறுதியும், அத்தகைய உறுதியினை வெளிப்படுத்தும் தோற்றமும் ஒரு மலையின் தன்மைகளாகும். தொலைவில் இருந்து காண்பவர் வியக்கும் வண்ணம் ஓர் மலையின் தோற்றமும் உறுதியும் இருக்கப்பெறும். மேலும் வறுமையில் மக்கள் வாடுங்கால் அவர்களுக்கென்று வழங்க என்றும் வற்றாத கனிகளும் இன்ன பிற பொருட்களும் பெற்று விளங்குவதே மலையாகும். இத்தகைய இயல்புகளை உடைய மலையே சிறந்த மலையாக அறியப்படும்.

அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், ‘இவரின் கல்வி அளவு இவ்வளவு தான்’ என்று மற்றவர்களால் அளந்துக் கூற இயலா வண்ணம் ஆழ்ந்த கல்வி அறிவினை நூல்கள் பல கற்றுப் பெற்று இருத்தல் வேண்டும். மேலும் விவாதம் என்று வரும் பொழுது தன்னை மற்றவர்கள் கேள்விகளால் துளைக்க இயலாத வண்ணம் அவர்களின் கேள்விகள் அனைத்தையும் சமாளிக்கும் உறுதியினை வழங்கும் கல்வி அறிவினைக் கொண்டு இருத்தல் வேண்டும். மேலும் மக்களால் ‘இவர் மிகுந்த கல்வி அறிவினை உடையவர்’ என்று கண்ட உடனேயே அறிந்துக் கொள்ளும் வண்ணம் தோற்றத்தையும் அறிவினால் பெற்று இருத்தல் வேண்டும். இந்த விடயங்களுடன் சேர்த்து மக்கள் அறியாமை இருளில் துயரப்படும் பொழுது தம்மிடம் இருக்கும் கல்விச் செல்வங்கள் மூலமாக மக்களின் அறியாமையை போக்கும் வண்ணம் ஆற்றலையும் அறிவையும் பெற்று இருத்தலும் நல்லாசிரியரான ஒருவரின் இயல்புகள் ஆகும் என்றே நன்னூல் கூறுகின்றது.

தராசுக்கோலும் நல்லாசிரியரும்:

ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே


தராசுகோலானது எவர் ஒருவர் பக்கமும் சாராது நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்க கூடிய தன்மைப் பெற்றதாகும். மேலும் ஒரு பொருளின் அளவுக் குறித்து சந்தேகங்கள் தோன்றினால் அதனை ஆராய்ந்து அந்த சந்தேகத்தினை தீர்த்து வைக்கும் தன்மையும் தராசுக்கோலுக்கு உண்டு.

அவ்வாறே ஒரு நல்லாசிரியர் ஆனவர், மாணவர்கள் சந்தேகங்களுடன் தம்மை அணுகினால் மாணவர்தம் ஐயங்களைத் தெளிவாகத் தீர்த்து வைக்கும் ஆற்றலையும், எந்த ஒரு சூழலிலும் மாணவர்களுள் வேற்றுமைகளைக் காணாது அனைவரையும் சமமாகக் கண்டு உண்மையின் வழியே நடுநிலையாக நிற்கும் பண்பினையும் கொண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பவரே நல்ல ஆசிரியர் ஆவர்.

மலரும் நல்லாசிரியரும்:

மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே


மலரானது அனைத்து நல்ல காரியங்களுக்கும் உரித்தான ஒன்றாக அறியப்பெறும். மலர்கள் இன்றி எந்த ஒரு நற்காரியமும் நிகழ்வதில்லை. மக்கள் அனைவரும் மலரினை விரும்பி ஏற்றுக்கொள்வர். மேலும் சரியான பொழுதில் மலர்ந்து இருக்கும் தன்மையையும் பெற்று இருப்பது மலராகும்.

அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும், நல்ல செயல்கள் நடைப்பெறும் இடங்களில் தவறாது இடம்பெறுபவராய், அவரின்றி எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெற முடியாத வண்ணம் மக்கள் இடையே நற்பெயர் உடையவராய் இருத்தல் வேண்டும். மேலும் மலர்ந்து இருக்கும் மலரானது எவ்வாறு மக்கள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருமோ அதனைப் போன்றே ஒரு நல்லாசிரியரும் எப்பொழுதும் முக மலர்ச்சியோடு (மகிழ்ச்சியாய் சிரித்த வண்ணம்) மாணவர்களுக்கு பாடத்தினை கற்றுத் தர வேண்டும்.

இத்தகைய இயல்புகளை உடையவரே நல்லாசிரியர் ஆவார் என்று நன்னூல் கூறுகின்றது.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சமயங்களும் வரலாறும் - சில விடயங்கள்!!!

சமயங்களைப் பற்றிய நமது ஆராய்ச்சிப் பயணத்தில் பல பதிவுகளைக் கடந்தாயிற்று...இந்த பயணத்தில் நாம் இன்னும் பயணிக்க சில தகவல்களை அறிந்துக் கொண்டால் நல்லது என்று எண்ணியே இந்தப் பதிவு.

முதலில் சைவ சமயத்தினையும் வைணவ சமயத்தினையும் பற்றி சைவரான திரு. கா.சு.பிள்ளை அவர்கள் என்ன சொல்கின்றார் என்றுக் கண்டு விடுவோம்.

1) "நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இருசமயத்திற்கும் (சைவம் வைணவம்) பொது அடையாளமாக இருந்தது. 'கரிய மேனி மிசை வெளிய நீறு', 'நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்" முதலிய நம்மாழ்வார் வாக்கியங்களுள் நீறு என்பது திருநீற்றினைக் குறிப்பது போலும்." - (இதன் மூலம் திருநீறே முதலில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவான அடையாளமாக இருந்தது என்றக் கருத்து இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

2) ஒரு காலத்தில் ஆறு சமயங்களுக்கும் பொதுவாகக் கடவுளின் அருவுருவாகிய சிவலிங்க வழிபாடு விளங்கிற்று. தமிழர் கருத்தே தந்திரங்களில் உள்ளது. வடநாட்டுத் தந்திரங்களிளுள் ஒன்றாகிய லிங்கார்ச்சன தந்திரத்துள், ஒருவன் கணபதி மதத்தையாவது, கௌமார மதத்தையாவது சைவ சமயத்தையாவது வைணவ சமயத்தையாவது சாத்தேய மற்றும் செளர மதத்தையாவது தழுவி ஒழுகினாலும் முதலில் சிவலிங்க பூசை செய்து விட்டு தன் இட்ட தேவதையை வழிபட வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆதலில் ஒரு பெரும் சமயத்துள் ஆறு பகுதிகளாகவே ஆறு சமயங்களும் விளங்கின என்பது ஊகித்தற்பாலது.

3) "இப்பொழுதும் சிவன் கோவில்களில் திருமால், சக்தி, முருகன், பிள்ளையார், கதிரவன் முதலியோருக்கு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவிலில் திருமால் சயனித்து இருக்கும் இடத்தில் சிவலிங்கம் காணப்படுகின்றது. பிற்காலத்தில் வைணவம் தனி மதம் ஆகி விடவே பெருமாள் கோவில்களில் சிவ வடிவங்களைக் காண்பது அரிதாயிற்று."

4) வங்காள நாட்டில் காளி கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் காணப்படுகின்றது.

(மேலே உள்ள வரிகள் மூலம் அனைத்து சமயங்களும் ஒரு சமயத்தில் இருந்து பிரிந்தனவையே என்றும் அவை அனைத்துக்கும் பொதுவாய் சிவலிங்க வழிபாடு இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. கூடுதலாக வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கும் ஒரு சமயம் என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

சரி..இப்பொழுது சிவனைப் பற்றி அவர் என்ன கூறுகின்றார் என்றுக் காண்போம்...!!!

1) சிவலிங்க வழிபாடு தந்திரங்களில் முதல் இடம் பெற்று உள்ளது.

2) "கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று." "பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது." (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்...சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்)

3) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)

4) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

5) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."

6) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

7) அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவ ஆகமங்கள் கூறும்.

(இதில் இருந்து பெருமாள்/விஷ்ணு/அம்மன் என்றப் பெயர்கள் இறைவனின் ஆற்றலையும் அருளையும் குறிக்கும் பெயர்களே அன்றி அவை தனிக் கடவுளர் அல்லர் என்றக் கருத்தும் இங்கே இருக்கின்றது என்று நாம் அறிகின்றோம். எனவே அம்மன் என்பது ஒரு உருவகமே என்றால் சிவனுக்கும் அம்மனுக்கும் பிறந்த குழந்தைகளாக அறியப்படும் முருகனும் பிள்ளையாரும் யார்? மேலும் விஷ்ணுவும் இறைவனின் ஆற்றலைக் ஆண்வடிவமாகக் குறிக்கும் உருவகம் தான் என்றால் விஷ்ணுவின் பிள்ளையான பிரமனும் ஐயப்பனும் யார்? ஏன் அந்தக் கதைகள்...உருவகங்கள் வந்தன என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது தானே.)

சரி...திருமால்/விஷ்ணு என்பது இறைவனின் ஆற்றலின் உருவகமே என்றால் விஷ்ணுவின் அவதாரங்களாக அறியப்படும் கடவுளரைப் பற்றி திரு.கா.சு.பிள்ளை என்னும் சைவர் என்ன கூறுகின்றார் என்று நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

1) "கடவுளின் சக்தி உலகத்தைப் பரிபாலிப்பது போல அரசர்களும் தம்முடைய ஆற்றலால் உலகைப் பரிபாலித்தலின் கடவுட் சக்தியின் ஆண்வடிவமாகிய திருமாலின் இனம் என்று அரசர்களைச் சொல்லுதல் வழக்கமாயிற்று."

2) இராமன் வழிபாடு வீர வணக்கத்தைச் சார்ந்ததே ஆகும். இராமன் சிறந்த அரசனாய் விளங்கினமையால் அவன் திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டான்.

3) இராமன் அரச குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த திருவாளர் ம.ச.இராமசாமி ஐயர் முதலியோர் அக்குடும்பம் தமிழ் அரசர் குடும்பம் என்றே துணிந்தனர். இராமனுக்கு கரு நிறம் கூறப்படுதல் அதற்கு ஒரு சான்றாம் என்ப.

(இதன் மூலம் அவதாரங்கள் என்பனவும் உருவகங்களே என்றக் கருத்து இருக்கின்றது என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

சரி இப்பொழுது அவர் இந்து மதத்தினைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றும் கண்டு விடலாம்..

௧) இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்து மதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர். தற்காலத்தில் வடமொழி வேதத்தை பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்து உள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானிய மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்று ஒன்று உண்டு எனலாம். ஆனால் அவ்வாறு மதங்கள் இல்லாதது போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது.

௨) வேதத்தையும் சிமிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதம் இந்து மதம் என்றால் அது இந்தியாவில் உள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமே அன்றி இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மதமாகாது.

௩) ஆதலால் வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களுடைய தமிழ் சைவ வைணவர்கள் தங்கள் சமயங்களை இந்து மதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை.

(இதன் மூலம் இந்து மதம் என்பது வேறு சைவ வைணவ சமயங்கள் என்பது வேறு என்றும் வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

மேலும் இப்பொழுது கோவில்களில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் அவர் கூறுகின்றார். அவற்றைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

௧) இக்கோவில்களில் உள்ள (சைவ வைணவ கோவில்கள்) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ் குருக்கள் தம்மை ஆரியராய் எண்ணிக் கொள்வதும் வருணவரம்புகள் பற்றி இன்னின்னார் இன்ன இடத்தில நிற்க வேண்டும் என்பதும் தாழ்த்தப்பட்டவருக்கு இடம் இல்லாமையும் பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்தராற் செய்யப்படுவதும் வடமொழி வேதபாராயணம் முதலியவைகளும் வேதச் சார்பான ஓமச் சடங்கும் ஆம் என அறிக.

௨) 'பிற்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நாயனார் கொள்கைப்படி வருணவரம்புகள் ஒழிய வேண்டும்.

௩) தொண்டுகள் யாவற்றிக்கும் பூசனை செய்வதற்கும் பிறப்புத் தடை இருத்தல் கூடாது.

(இதன் மூலம் இன்று கோவில்களுள் பிறப்பின் காரணமாக பிரிவினைகள் இருப்பது வேதக் கொள்கைகளால் என்றும் அவை சைவ வைணவ கொள்கைகளுக்கு மாறான கொள்கைகள் என்றும்...வருணங்கள் எனப்படுபவை தமிழர்களுக்கு உரியன அல்ல என்றும் அவை சைவ வைணவத்திற்கு உரியன அல்ல என்றும் அவை ஒழிக்கப் பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

இக்கருத்துக்கள் திரு.கா.சு.பிள்ளை அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஆகாது...இன்னும் பல அறிஞர்கள் இதே கருத்தினைக் கூறி இருக்கின்றனர். ஏற்றும் இருக்கின்றனர். மேலும் அனைத்திந்திய தமிழர் சமய மாநாட்டிலும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

இப்பொழுது நாம் எவ்வாறு சைவ வைணவ சமயங்கள் வேத சமயத்தினால் (வைதீக சமம்) ஆட்கொள்ளப்பட்டன என்று மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதனைக் காண வேண்டி இருக்கின்றது.

1) குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது.

2) ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது.

(இதன் மூலம் சைவ வைணவத்தில் தொடர்பு இல்லாத வைதீக சமயம் அது பிழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ வைணவத்தோடு இணைந்துக் கொண்டு பின்னர் அச் சமயங்களையே மாற்றியது என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது)

எனவே சுருக்கமாகக் காண வேண்டும் என்றால்,

௧) சைவ வைணவ சமயங்களுக்கும், வேதங்களுக்கும் சரி வருணவரம்புகளுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை.

௨) இன்று கோவில்களில் சைவ வைணவ சமயங்களுக்கு மாறான வேதக் கொள்கைகள் பெருமளவுக் காணப்படுகின்றன. அதற்கு காரணம் வைதீக சமயம் சைவ வைணவ சமயங்களை தன் கட்டுக்குள் வைத்து இருப்பது தான்.

௩) அம்மன்/விஷ்ணு என்பது கடவுளின் ஆற்றலின் உருவகமே. அதேப் போல அவதாரங்களும் உருவகங்களே.

௪) சைவ சமயமே பின்னர் பல்வேறு சமயமாக பிரிந்துச் சென்று இருக்கின்றது. வைணவமும் சைவமும் ஒன்றே. வைணவர்களின் சின்னம் முதலில் திருநீராகத்தான் இருந்து இருக்கின்றது.

௫) சைவ வைணவ சமயங்களுள் சாதி ஏற்றத் தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு இடமோ அல்லது தொடர்போ கிடையாது.

தொடரும்...!!!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

அழகுச் சாதன நிறுவனங்களும் சில தந்திரங்களும்!!!

இன்றைய தேதியில் இந்தியா ஒரு மாபெரும் சந்தை. கணக்கிடப்பட முடியாத அளவுக்கு பணம் கொழிக்கும் ஒரு மிகப் பெரிய சந்தை. அதனால் தான் இன்றைக்கு உலகின் பல்வேறு நிறுவனங்களும் இந்தச் சந்தையில் நுழைந்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்றன...அதற்காக அவை எந்தச் செயலை செய்வதற்கும் தயாராக இருக்கின்றன. ஆனால் இங்கேதான் சில பெரிய பிரச்சனைகள் அவர்களுக்குக் காத்து இருக்கின்றது.

௧) அவர்களின் பொருட்களுக்கு இங்கே உண்மையிலேயே தேவை கிடையாது.
௨) அவர்களின் பொருட்களை விட சிறந்த பொருட்கள் இங்கே ஏற்கனவே அனைவருக்கும் பொதுவாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் அவர்கள் என்ன தான் இந்தியச் சந்தையினுள் நுழைந்தாலும் அவர்களின் பொருட்களுக்கு இங்கே சந்தைக் கிடைக்குமா என்பது ஒரு மாபெரும் கேள்விக்குறியே? இந்நிலையில் தான் அந்த நிறுவனங்கள் மிகவும் கேவலமான வழிமுறையினை கையாள ஆரம்பிக்கின்றன...!!!

உதாரணத்துக்கு, கருப்பு என்பது ஒரு நிறம்...இந்தியர்களின் இயல்பான நிறமே கருப்பு தான்...நமது கடவுளர் அனைவரும் கருப்புத் தான். இந்த நிலையில் நமக்கு வெள்ளை நிறமாக வேண்டும் என்ற தேவையோ அல்லது எண்ணமோ எழ வாய்ப்புகளே இல்லை. ஆனால் அத்தைகைய எண்ணங்கள் நம்மிடம் இல்லை என்றால் பன்னாட்டு அழகுச் சாதனப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் எவ்வாறு இங்கே வந்து அவற்றின் கடையை விரித்து பணம் பார்க்க முடியும் ?...அவைகளின் பொருளுக்குத் தான் இங்கேத் தேவையே இல்லையே. இந்நிலையில் தான் அவை மனரீதியான தாக்குதலைத் தொடங்குகின்றன...அமைதியாய்...தெளிவாய்!!!

"கருப்பு என்பது நிறம் அல்ல...அது அவமானம்...வெள்ளை என்றால் தான் அழகு...!!! வெள்ளை உயர்ந்தது...கருப்புத் தாழ்ந்தது... நீங்கள் வெள்ளையாக இருந்தால் தான் மற்றவர்கள் உங்களைக் காண்பார்கள்...விரும்புவார்கள்...மேலும் அப்பொழுது தான் உலகமே உங்களைப் பார்க்கும்" என்றச் செயய்தியினைக் கொண்ட விளம்பரங்கள் மூலமாக கருப்பான மக்களிடம் முதலில் தாழ்வு மனப்பான்மைக்கான விதையை மெதுவாய் அவர்கள் விதைக்கின்றனர். பின்னர் அணைத்து விதமான ஊடகங்களிலும் வெள்ளை நிறம் கொண்டவர்களையே முன்னிலைப் படுத்தி விதைத்த அந்த விதையை மெதுவாக வளர்க்கின்றனர். ஒரு நிலையில் "ஐயோ நாம் கருப்பாக இருக்கின்றோமே" என்ற ஒரு எண்ணத்தை மக்களுள் வர வைத்தப் பின் "நீங்கள் கருப்பாக இருக்கின்றீர்களா...பிரச்சனை இல்லை...இதோ எங்கள் நிறுவனத்தின் களிம்பினை வாங்கி பூசிநீர்கள் என்றால் நான்கே வாரங்களின் சிகப்பழகு மிளிரும்...இதோ இதை அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் பூசுகின்றார்கள்...சப்பானில் சாக்கிசான் பூசுகின்றார்கள்" என்றுக் கூறி மக்களின் அந்த தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வணிகத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஒருவனின் மனதினைப் பற்றிய எந்த ஒரு அக்கறையும் இல்லாது வெறும் பணத்தினை மட்டுமே குறியாகக் கொண்டே அவர்கள் இயங்குகின்றனர். இந்த ஈன செயலைச் செய்வதற்கு அவர்கள் தனியொரு அமைப்பையே வைத்துத் தான் செயல்லாற்றுகின்றனர். இன்றைய வியாபார நிர்வாகப் படிப்புகள் அனைத்தும் பெரும்பாலும் இத்தகைய செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.

1991 ஆண்டில் தான் அன்றைய நிதி அமைச்சராக இருந்த திரு.மண் மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் நுழையலாம் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்றார். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அதுவரை இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண் தான் உலக அழகிப் பட்டத்தினைப் பெற்று இருக்கின்றார். ஆனால் திரு.மண் மோகன் சிங் அவர்கள் எப்பொழுது அந்தச் சட்டத்தினை இயற்றினாரோ, அடுத்த எட்டு வருடங்களுக்குள் இந்தியாவுக்கு ஆறு விருதுகள் உலக அழகிப் போட்டிகளில் கிடைத்து இருக்கின்றது. அசாத்தியமான சாதனை தான் அல்லவா. இந்தியா பன்னாட்டு அழகுச் சாதன நிறுவனங்களை இந்தியாவினுள் நுழைய அனுமதித் தந்து இருக்கின்றது...அதனைத் தொடர்ந்து அழகிப் போட்டிகளில் இந்திய பெண்கள் வரிசையாக வெற்றிப் பெற்று இருக்கின்றனர். இவ்விரண்டு சம்பவங்களும் எதேச்சையாக நிகழ்ந்த சம்பவங்களா அல்லது இவ்விரண்டுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் முதல் முறையாக அந்நிய அழகுச் சாதனப் பொருள்கள் நுழைகின்றன...அனால் அவற்றை வாங்க வேண்டியத் தேவை இங்கே யாருக்குமே கிடையாது. அந்நிலையில் அந்தப் பொருள்களை பயன்படுத்திய பெண்களை உலகமே கண்டு வியப்பது போலும் அவர்கள் அந்தப் பொருள்களை பயன்படுத்திய ஒரே காரணத்தினால் உலகப் புகழ் அடைந்து விட்டது போன்றும்...அவர்களையே ஆண்கள் அனைவரும் விரும்புவது போலும் தோற்றத்தினை உருவாக்கி, அக்கருத்தை 'உலகமே வியக்கும்' அந்தப் பெண்களின் வாயிலாகவே பரப்பினால், மற்றப் பெண்களின் மனம் சற்று அலைக்கழியுமா கழியாதா?...அலைபாயும் தானே... நம்மளும் அந்தப் 'உலகப் புகழ்' பெண்களைப் போல் ஆக மாட்டோமா என்றும் 'இப்படியே இருந்து விட்டோம் என்றால் ஆண்கள் யாரும் நம்மை விரும்ப மாட்டார்களோ?' என்ற எண்ணம் அவர்களுக்குள்ளும் வரும் தானே. அவ்வாறு வந்தால் அவர்களும் அந்த அழகுச் சாதனப் பொருட்களை வாங்க ஆரம்பிப்பர் தானே. அவ்வாறு அவர்கள் வாங்க ஆரம்பித்தால் யாருக்கு லாபம்...வாங்குபவர்களுக்கா அல்லது அந்த அழகுச் சாதன நிறுவனத்துக்கா? அழகுச் சாதன நிறுவனத்திற்குத் தானே.

 அவ்வாறே தான் நடந்தது. உலக அழகி பட்டம் பெற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட அழகுச் சாதனப் பொருட்களைச் சுமந்துக் கொண்டே இந்தியாவில் வலம் வரத் தொடங்கினர். அவர்களை மையமிட்டே அனைத்து ஊடகங்களும் நஞ்சை 'அதாவது வெள்ளை தான் அழகு என்றக் கருத்தை' மக்களிடம் பரப்ப ஆரம்பித்தன. இறுதியாக எந்த மக்கள் அழகுக்காக ஒரு நயா பைசாக் கூட செலவழிக்காது இருந்தனரோ அவர்களே செலவழித்தால் தான் அழகினைப் பெற முடியும் என்று எண்ணி அந்த அழகுப் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இன்றைக்கு எந்த ஒரு பெண்ணின் கைப்பையை எடுத்துப் பார்த்தாலும் அதில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் பொருட்களுமே சொல்லும் அந்த வணிக நிறுவனங்கள் பெற்ற வெற்றியை...அது தான் அவர்களுக்கு வேண்டும்...அது தான் அவர்களின் வணிகம். மனம் முக்கியமில்லை...பணமே முக்கியம். இந்தக் கேடுக் கேட்ட பிழைப்பிற்கு பெரிய பெரிய படிப்புகள் வேற!!!

மேலும் இவ்வாறு அந்த நிறுவனங்கள் இந்தியாவில் வேர் ஊன்ற ஆரம்பித்த காலத்தில் அவர்கள் சந்தடிச் சாக்கில் செய்த மற்றொரு முக்கியமானக் காரியம், அதுவரை இங்கே மக்கள் கொண்டு இருந்த அழகுப்படுத்திக் கொள்ளும் வழக்கங்களை மாற்றியது தான். அதையும் ஊடகங்களின் துணைக் கொண்டே செம்மையாக அந்த நிறுவனங்கள் சாதித்துக் கொண்டன. உதாரணத்துக்கு 20 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் மஞ்சள் பூசிக் கொள்வது வழக்கம். மஞ்சளில் பல்வேறு நலன்கள் இருக்கின்றன. ஆனால் மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்கள் எல்லாம் நாகரீகமற்றவர்கள் என்றும் பட்டிக்காடுகள் என்றும் எண்ணம் தோன்றுவதுப் போல செய்திகளையும் விளம்பரங்களையும் பரப்பி இன்றைக்கு மஞ்சள் என்றாலே ஒருவித இளக்காரமான பார்வையோடு மக்கள் காணும் வண்ணம் செய்து விட்டார்கள். அவ்வாறு கருத்தினையும் பார்வையையும் அவர்கள் விதைத்து விட்டதினால் நம் முன்னோர்கள் கொண்டு இருந்து முறைகள் மற்றும் ஞானம் ஆகியவற்றில் இருந்து நம்மை நாமே துண்டித்துக் கொள்ளுமாறு ஒரு நிலை இங்கே உருவாக்கி விட்டது. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் நம்முடைய முன்னோர்கள் இம்முறையை இயல்பாகவே இலவசமாக பின் பற்றி வந்தனரோ அந்நிலையையே நாம் பெரும் காசினைக் கொடுத்து அந்நிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

இதுவே அவர்களின் தந்திரம்....!!! அது வரை இருந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானவை என்றும் அந்த நிறுவனங்களின் பொருள்கள் தான் சிறந்தவை என்ற எண்ணத்தினை மனரீதியான தாக்குதல்கள் மூலம் மக்களின் மனதினில் பதித்துவிட்டு அதன் மூலம் காசினைப் பார்ப்பது தான் அந்த நிறுவனங்களின் திட்டம். அப்பாவி மக்கள் அந்த நிறுவனங்களின் சதியினை உணர மாட்டார்கள். எனவே அவர்களைச் சொல்லிக் குறை இல்லை. ஆனால் இந்த அரசாங்கங்கள், அதற்குமா தெரியாது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடியே இந்த வணிக நிறுவனங்கள் காசு பார்கின்றன என்று? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் இப்படியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் தங்களின் மக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு அடுத்தவனின் லாப வெறிக்காக ஆட்படுவதை? மக்களுக்காக இருக்கும் அரசாங்கங்கள் நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஆனால் நம்முடைய அரசாங்கங்கள் வேடிக்கைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றன...இல்லை இல்லை அவையும் அந்த வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மக்களிடம் இருந்துக் கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கின்றன...காரணம் அவை தான் மக்களுக்கான அரசாங்கங்கள் இல்லையே...!!!

ஏற்கனவே நான் உயர்ந்தவன் நீ தாழ்த்தப்பட்டவன் என்று மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஊட்டி அதன் மூலம் அதிகாரத்தையும் செல்வதையும் பெற்று ஆண்டுக் கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கமான இந்திய அரசாங்கத்துக்கு, மற்றுமொரு நிறுவனம் வந்து ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனை மேலும் தாழச் செய்வது என்பது லாபம் தானே...தாழ்ந்து இருக்கும் காரணங்கள் வேண்டும் என்றால் வேறாக இருக்கலாம்...ஆனால் முடிவு....தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்கின்றான். இதுவே அவர்களுக்கு வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்களை எப்பொழுதும் எவரும் கேள்விக் கேட்க முடியாது. இந்நிலையிலேயே நமது அரசாங்கமும் அந்நிய நிறுவனங்களின் இந்த மனிதத் தன்மை அற்ற செயலை ஊக்குவிக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் தங்களிடம் இருக்கும் வைரத்தினை அறியாமையினால் வெறும் கல்லுக்கு மாற்றாக விற்று விட்டு பிழைப்பைத் தேடி அலையும் வணிகரைப் போலவே நம்முடைய மக்களும் அவர்கள் கொண்டு இருந்த நல்ல பழக்கங்களை சதிக்கு இரையாக்கி விட்டு இன்று மன அமைதி இன்றி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் விரோத அரசாங்கமும் அமைதியாக அவர்களின் திண்டாட்டத்தில் குளிர் காய்ந்துக் கொண்டு இருக்கின்றது.

திங்கள், 1 அக்டோபர், 2012

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!

ஒரு கேள்வி?

உங்களுக்கு உங்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா அல்லது மற்றவர்களின் குழந்தைகள் முக்கியமானவர்களா? யாரை நீங்கள் அதிக அக்கறையுடன் பேணிக் காப்பீர்கள்?

"அட என்னங்க இது ஒரு கேள்வி? அவரவர்களுக்கு அவர் அவர் குழந்தைகள் தானே முக்கியம். அவர்களைத் தானே அவர்கள் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பாக வளர்ப்பர். இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்கின்றீர்களா....ம்ம்ம்...சரி தான் நீங்கள் சொல்வது...ஆனால் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடக்காமல் தன்னுடைய குழந்தைகளை பசியோடு வீதியில் விட்டுவிட்டு மற்ற வீட்டுக் குழந்தைகளை அனைத்து வித ஊடச்சத்துக்களுடன் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றதே... அந்த நிகழ்வினைப் பார்க்கும் பொழுது தான் எனக்கு அந்த சந்தேகம் வருகின்றது. ஏன் நம்முடைய அரசுகள் மட்டும் அவ்வாறு நடந்துக் கொண்டு இருக்கின்றன?. இப்பொழுது இதனைப் பற்றி விரிவாகப் பார்க்க சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

சம்பவம் 1:

நண்பர் ஒருவருக்கு முதுகில் திடீரென்று கரும் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. ஏன் எதனால் அவை வந்தன என்றுத் தெரியவில்லை ஆனால் அவர் என்ன முயன்றும் அவை போன பாடில்லை. இறுதியில் ஒரு தோல் நிபுணரிடம் சென்றுக் காட்டலாம் என்றே முடிவு செய்து நிபுணர் ஒருவரிடம் சென்றுக் காட்டினார். அந்த நிபுணரும் அந்த கரும் புள்ளிகளை ஆராய்ந்து விட்டு 'இது ஒன்றும் இல்லை...சரியாகி விடும்...இந்த களிம்பினை மட்டும் போடுங்கள்' என்றுக் கூறி ஒரு களிம்பினையும் அவனிடம் கொடுத்து அனுப்பினார். அவனும் சிறிது நாட்கள் அந்தக் களிம்பினை பயன்படுத்திப் பார்த்தான்...களிம்பு தீர்ந்ததே தவிர அந்தக் கரும் புள்ளிகள் மட்டும் மறையவே இல்லை. மீண்டும் அவன் அந்த நிபுணரிடம் செல்ல இம்முறை வேறு ஒரு களிம்பினைக் கொடுத்து அனுப்பினார் அந்த நிபுணர். களிம்பு மாறியது...ஆனால் விளைவு மாறவே இல்லை. கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருந்தன. என்னடா இது என்று எண்ணியவாறே அவன் வேறொரு மருத்துவரை அணுக, மருந்தாக மற்றுமொரு களிம்பு கிட்டியது. அவ்வளவே... ஆனால் கரும் புள்ளிகள் தொடர்ந்து இருந்துக் கொண்டேத் தான் இருந்தன. இந்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாது அவன் முழித்துக் கொண்டு இருந்த பொழுது தான் அவனுடைய பாட்டியிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு ஒரு முறைக் கிட்டியது. அப்பொழுது அவனுடைய அந்தக் கரும் புள்ளிகளைப் பற்றி அவனுடைய பாட்டியிடம் அவன் கூற, உடனே அவனது பாட்டி "சில வேப்ப இலைகளை நன்றாக அரைத்து ஒரு பசை மாதிரி செய்து அதனை முதுகில் தேய்த்து வா...கரும் புள்ளிகள் சரியாகி விடும்...வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை" என்றே அறிவுரை வழங்கி இருக்கின்றார். அவனும் அவ்வாறே செய்ய மூன்றே தினங்களில் கரும் புள்ளிகள் மறைந்து விட்டன.


சம்பவம் 2:

சமீபத்தில் ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு செல்வதற்காக நண்பர்களைக் காணச் சென்று இருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் நீண்ட நாட்களாக தனது வலது நெஞ்சுப் பகுதியில் வாயுத் தொல்லை இருந்துக் கொண்டே இருப்பதாகவும், மருத்துவர்கள் 'அது பலருக்கும் இருப்பது தான்...பிரச்சனை இல்லை' என்றே கூறி அனுப்பியதாகவும் மற்றொரு நண்பரிடம் கூறிக் கொண்டு இருந்தார். அதனைக் கேட்ட அந்த நண்பர் "அட.. இது தான் பிரச்சனையா...ஒரே நிமிசம் பொறு...எங்க அப்பா இத சரி செஞ்சிடுவாரு" என்றுக் கூறி விட்டு அவரின் தந்தையை அழைத்து வரச் சென்றார்.

"டேய்...என்னடா...!!! அவங்க அப்பா விவசாயி தானடா அப்புறம் எப்படிடா அவருக்கு மருத்துவம் தெரியும்?" என்றே நான் கேட்க..."தெரியும் மச்சி... விவசாயி தான் ஆனா வர்மக் கலையும் அவருக்குத் தெரியும்,,,ஏற்கனவே இப்படி பல பேருக்கு அவரு வைத்தியம் பார்த்து இருக்கார்" என்பதே விடையாக வந்தது. 'வர்மம்' என்றச் சொல் காதினில் விழவே ஆர்வமாக அடுத்து நடக்க இருந்த நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் வந்த நண்பரின் தந்தையார் வீட்டுக்கு முன்னர் ஒரு இருக்கையை கிழக்கே பார்க்கும்படி வைத்து விட்டு அந்த உடல் சரி இல்லாத நண்பரை அதிலே அமர வைத்தார். அந்த நண்பரும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பது போல் அந்த இருக்கையிலே அமர்ந்து இருக்க மெதுவாக அந்த நண்பரின் கழுத்துப் பகுதியில் அழுத்த ஆரம்பித்தார் அவர். ஆரம்பத்தில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை...'அட வர்மம்னா இவ்வளவு தானா' என்று நான் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே திடீர் என்று நண்பரின் கழுத்துப் பகுதியில் ஓர் இடத்தில அவர் அழுத்தம் கொடுத்து அழுத்த அவ்வளவு தாங்க...'ஒரு நிமிசம் கண்ணு ரெண்டும் உள்ள போயி..கழுத்து தொங்கிடுச்சி....அப்படியே அவன் உடலும் ஒரு உலுக்கு உலுக்க...' பதறித் தான் போனேன் சற்று. ஆனால் அடுத்த நிமிசமே தலையை சற்று அசைத்தவாறு இயல்பான நிலைக்கு அந்த நண்பன் திரும்பி விட்டான்...ஆனால் அவன் கொடுத்த பாவனையை வைத்துப் பார்த்தால் ஏதோ மறு உலகைப் பார்த்து விட்டு வந்தவன் போலவே இருந்தது.

'இனிமே அந்த பிரச்சனை இருக்காது தம்பி...சரி பண்ணியாச்சி' என்றுக் கூறி விட்டு கிளம்ப ஆரம்பித்த அவரிடம் சற்று பேச்சிக் கொடுக்க ஆரம்பிக்க 'அவனின் இரத்தக் குழாயில் காற்று சிறிது இருந்தது என்றும், அதனால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயினை சிறிது நேரம் அடைத்துவிட்டு காற்றினை வெளியே எடுத்ததாகவும்...மூளைக்கு சென்ற இரத்த ஓட்டத்தினை அடைத்ததினால் தான் மூளைக்கு இரத்தம் செல்லாமல் அவனின் உடல் சற்று உலுக்கியதாக்கவுமே' அவர் கூறினார்...மேலும் இது ஆபத்தான வழிமுறை இல்லையா என்றதுக்கு 'இம்முறையினை தெளிவின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது...நன்கு பயிற்சிப் பெற்றவர்களே இதனை செய்ய வேண்டும்... எனக்கு பயிற்சி இருப்பதினால் நான் செய்தேன்...நான் அழுத்திய நரம்பிற்கு பதிலாக வேறு நரம்பினை அழுத்தி இருந்தால் உயிர் போயிருக்கும்... எனவே இம்முறைக்கு பயிற்சியும் கவனமும் மிக முக்கியம்..." என்றுக் கூறிவிட்டு அவர் புகைப் பிடித்துக் கொண்டே சென்று விட்டார்.

சம்பவம் 3:

கைதராபாதினில் நான் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவம். முதல் முறையாக பணிக்கு சேர்ந்து இரு வாரங்களே ஆகி இருந்தன. புதிய ஊர்...புதிய வகை உணவுகள் என்பதினால் உடல் ஒத்துழைக்காமல் காய்ச்சல் வந்து விட்டது. இருந்தும் அப்பொழுது பணிக்குரிய பயிற்சிகள் ஓடிக்கொண்டு இருந்தமையால் விடுப்பு எடுக்க முடியாத ஒரு நிலையில் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். காய்ச்சல் சற்று அதிகமாக, மதியவேளை உணவினையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே ஏற்கனவே குன்றி இருந்த உடல் நலம் மேலும் குன்றலாயிற்று. அந்நிலையில் நிச்சயம் மருத்துவரைப் போய் பார்த்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வர "புதிய ஊரில்...எவர் எப்படிப்பட்ட மருத்துவர் என்று யாருக்குத் தெரியும்...எனவே பிரச்சனை இல்லாமல் இருக்க பெரிய மருத்துவமனைக்கே செல்லலாம்" என்று 'இமேஜ்' மருத்துவமனை என்ற ஒரு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர்(அது என்னவோ தெரியலைங்க பெரிய மருத்துவமனைனா நல்ல மருத்துவமனை அப்படினும் சின்ன மருத்துவமனைனா ஏதோ சராசரியா மருத்துவம் பார்க்கும் இடங்கள் அப்படினும் எண்ணங்கள் எப்படியோ நம்மில் பதிந்து தான் விடுகின்றன...). அதுவரை பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து பழக்கம் இல்லை ஆதலால் 'நம்ம ஊர்ல 30 ரூபா வாங்குவாங்க...இங்க மிஞ்சிப் போனா 100 ல இருந்து 150 ரூபாகுள்ளத் தான் வாங்குவாங்க என்று எண்ணியே சென்றேன். ஆனால் என்னுடைய அந்த எண்ணம் எவ்வளவு தவறான எண்ணம் என்று அடுத்த சில நொடிகளில் நான் உணர்ந்துக் கொண்டேன். உள்ள நுழைந்ததும் 'அங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே நமக்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும் என்றும் அதற்கு 400 ரூபாய் கட்டணம் என்றும் அவர்கள் கூற வாழ்க்கையிலேயே மருத்துவரைப் பார்க்காமலேயே மருத்துவத்திற்காக 400 ரூபாய் தண்டம் அழுதேன். சரி காச வாங்கிடானுங்க...மருத்துவமாவது ஒழுங்காப் பார்பானுங்க என்று எண்ணிக் கொண்டே மருத்துவரைக் காணச் சென்றேன்(நம்பிக்கைக்கு இன்னொரு காரணம் அந்த மருத்துவர் பெயர் என்னுடைய பெயராக இருந்ததே)...!!!

ஆனால் அந்த மருத்துவரும் சாதரணமாக அனைத்து மருத்துவரும் செய்யும் சோதனைகளைச் செய்து விட்டு 'உங்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் கம்மியான நிலையில் இருக்கின்றது...இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே சேர்ந்து மருத்துவம் பார்த்துக் கொண்டால் தான் நல்லது..." என்றுக் கூற அந்த நம்பிக்கையும் பொய்த்துப் போனது (பேரக் கெடுக்குரானுங்க மை லார்ட்..)..."ஏன்டா...எவனா இருந்தாலும் உடம்பும் சரியில்லாம சாப்பாடும் சாப்பிடாம இருந்தானா அவனுக்கு இரத்த அழுத்தம் கம்மியாத் தான்டா இருக்கும்...அதுக்கு என்னவோ அடுத்த நாளே சாவப் போற மாதிரி ஏத்தி விடுறீங்களேடா" என்று மனதினுள் எண்ணிக் கொண்டு "இல்லைங்க இருக்கட்டும்...மாத்திரை மட்டும் கொடுங்க" என்றுக் கூறி மாத்திரை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்(மாத்திரைக்கு தண்டம் 100 ரூபாய் ...). அதாவது எந்த ஒரு உருப்படியான மருத்துவமும் பார்க்காமல் வெறும் 50 ரூபாய் செலவழித்து இருக்க வேண்டிய இடத்தில நான் செலவழித்த தொகை 500. ஆனால் நான் பரவாஇல்லை....நீண்ட நாட்களுக்கு பின்னர் என்னுடைய தோழி ஒருவர் காய்ச்சலுக்காக அதே மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றார்...அவரிடமும் இதேக் கதையினைக் கூறி மருத்துவமனையில் ஒரு நாள் சேரச் சொல்லி இருக்கின்றனர். அவரும் சேர்ந்து இருக்கின்றார். இறுதியில் அவர் கட்டியத் தொகை வெறும் 25000 ரூபாய் மட்டுமே!!! இதில் இருந்து நாம் அந்த மருத்துவமனை உண்மையில் எதன் மேல் அக்கறையோடு இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம் தானே. சரி இருக்கட்டும். இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம்.

மேலே நாம் கண்ட மூன்று சம்பவங்களும் உண்மைச் சம்பவங்களே. வெவ்வேறு சம்பவங்களாக இருப்பீனும் அவைகள் கூறும் செய்திகளை நாம் உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது இன்றைய சூழலில்.

முதல் சம்பவத்தில், எளிமையான மருத்துவமுறை நம்மை சுற்றியும் பரவிக் கிடக்கின்றது என்ற விடயம் இருக்கின்றது. வேப்ப மரம் இல்லாத ஊரினை நாம் தனியொரு படை அமைத்துத் தான் தேட வேண்டும் தமிழகத்தில். அவ்வளவு எளிதாக ஒரு மாபெரும் மருத்துவக் களஞ்சியம்/கருவூலம் நம்மிடையே காலம் காலமாக நின்றுக் கொண்டுத் தான் இருக்கின்றது. ஆனால் அதன் பயனைப் பற்றிய அறிவினை மட்டும் நாம் மறைந்துக் கொண்டு இருக்கின்றோம்...அல்லது சிலரால் மறக்கடிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றோம். வேம்பு தான் என்றில்லை இன்னும் பல அறிய செல்வங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டே இன்று கிடக்கின்றன.
இரண்டாவது சம்பவத்தில், நாம் அழிந்தே விட்டது என்று என்னும் கலைகள் இன்னும் கிராமப் புறங்களில் இன்னும் உயிர் கொண்டு இருப்பதை நமக்கு நினைவூட்டுகின்றது. ஆனால் அவை அழிந்துக் கொண்டு வருகின்றன...வேகமாக!!! வர்மத்தின் சில கூறுகளை நண்பனின் தந்தை அவர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார். ஆனால் என்னுடைய நண்பனுக்கோ அதனைப் பற்றி எதுவுமே தெரியாது. அதனைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஆவல் இருக்கின்றதா என்றும் தெரியவில்லை. மேலும் அத்தகைய கலைகளுக்கு மிக முக்கியம் முறையான பயிற்சியும் மேற்பார்வையும் கவனமுமே...அவை மூன்றும் இருந்தால் தான் அந்தக் கலை முறையாக வளரும்....காரணம் அவை நுண்ணியக் கலைகள்.

மூன்றாவது சம்பவத்தில் நாம் நம்முடைய நாட்டில் இன்று இருக்கும் மருத்துவர்களின் நிலையையும் மருத்துவமனைகளின் நிலையையுமே காணுகின்றோம். அனைத்தும் வியாபார நிறுவனங்களாக மாறி நீண்ட காலம் ஆகின்றன. அவற்றின் ஒரே குறி பணம்....பணம் மட்டுமே. உணர்ச்சிகளையும் நம்பிக்கைகளையும் காசாக்கும் ஒரு மனிதாபிமானம் இல்லாத இயந்தரங்களாகி விட்டனர் அங்கே அனைவரும். அட உண்மைதாங்க, நாம் நேசிக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றார் அந்நிலையில் 'அவரைக் காப்பாற்ற முடியாது என்று நன்கு அறிந்த நிலையிலும்' மருத்துவர்கள் "ஒரு 10 சதவீத வாய்ப்பு இருக்குங்க ஆனால் ரொம்ப செலவாகும்" என்றுக் கூறி விட்டால் நம்முடைய மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா அல்லது "ரொம்ப செலவாகும்" என்ற வார்த்தையை பிடித்துக் கொள்ளுமா?


மனம் உள்ளவர்களின் மனம் "வாய்ப்பு இருக்குங்க" என்ற ஒன்றையே பிடித்துக் கொண்டு எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்....அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் பரவாஇல்லை "வாய்ப்பு இருக்கின்றது என்றுக் கூறிவிட்டார்கள்" என்றே ஒருவர் காத்து இருக்க ஆரம்பித்து விடுவார் (10 சதவீத வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதற்காக 20 லட்சம் கடன்பட்டு நிற்பவர்களின் கதையினை நான் அறிந்து இருக்கின்றேன்). அவரின் அத்தகைய உன்னதமான உணர்ச்சியையும் நம்பிக்கையையும் வெறும் காசுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டத்தினையே இன்றைய மருத்துவ உலகில் நாம் பார்க்க முடிகின்றது. ஒன்று உணர்ச்சிகளின் மூலம் பணம் பார்கின்றது...இல்லையெனில் பயத்தின் மூலம் பணம் பார்கின்றது....இதுவே இன்றைய ஆங்கில மருத்துவ உலகின் கொள்கை..வழி எவ்வழியாக இருந்தாலும் பரவாஇல்லை...பணம் வந்தாக வேண்டும். அவ்வளவே அவைகளின் நீதி...அவ்வளவே அவற்றின் எண்ணம்!!! நிற்க.


 
சில வைத்திய முறைகள் செலவே இன்றி மேலும் பக்க விளைவுகள் ஏதுமின்றி எளிதான வகையில் இருக்கின்றன...ஆனால் அவை எல்லாம் மக்களின் மத்தியில் பரவலாக அறியப்பெறாமல் இருக்கின்றன...இன்னும் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால் அவை அழிந்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றிக்கு பதிலாய் மிகுந்த செலவுகளும் எதிர்பாராத பக்க விளைவுகளும் கிட்டப்பெரும் மருத்தவ முறைகள் பரவலாகப் பரவி இருக்கின்றன...அம்முறைகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் மழையில் தோன்றியக் காளான்கள் போல் அங்கங்கே முளைத்த வண்ணம் இருக்கின்றன. இன்று மருத்தவம் என்றாலே ஆங்கில மருத்துவம் தான் என்ற நிலை.

இங்கே தான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது....ஒரு வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு வைத்திய முறையோ செழித்து வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது. ஏன் நிலைமை இவ்வாறு இருக்கின்றது என்பதனை அறிய நாம் இந்தக் கேள்விக்கு விடையினைக் காணத் தான் வேண்டி இருக்கின்றது...நம்முடைய வைத்திய முறை அழிந்துக் கொண்டு இருப்பதால் ஆங்கில வைத்திய முறை வளருகின்றதா...அல்லது நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு வளருகின்றதா?..இக்கேள்விக்கு நம்முடைய மருத்துவ முறையினை அழித்துக் கொண்டு தான் ஆங்கில வைத்திய முறை வளருகின்றது என்பதே பதிலாக வரும்.

அது எவ்வாறு அழிக்கின்றது...அதனை தடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அடுத்தப் பதிவில் காணலாம்...!!!

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

தீபாவளி என்றொரு சமணப் பண்டிகை...!!!

இன்று நாம் தீபாவளி என்றுச் சொன்னாலே அது ஒரு இந்துப் பண்டிகையாகத் தான் அறியப்படும். அப்பண்டிகையை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிருசுனர் நரகாசுரன் என்ற அசுரனை கொன்ற தினத்தை சிறப்பிப்பதற்காக தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இராமர் தனது பதினான்கு ஆண்டு வனவாசத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய நாளை சிறப்பிக்க தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்கின்றனர். இன்னும் பல காரணம் கூறுகின்றனர்...ஆயினும் கிருசுனர் நரகாசுரனை கொன்றதை சிறப்பிக்கவே தீபாவளி கொண்டாடப்படுகின்றது என்பதே பலரின் நம்பிக்கை.

ஆனால் நம்மில் பலர் அறியாத விடயம் என்னவென்றால் இந்து மக்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு பண்டிகை அல்ல தீபாவளி...மாறாக சமணர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையே தீபாவளி ஆகும். ஆம்...சமணர்களும் தீபாவளியினைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்கள் அத்திருவிழாவை கொண்டாடுவதற்கு வேறு காரணங்கள் வைத்து இருக்கின்றனர். அக்காரணத்தை தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டு...!!!

சமணர்களின் கடைசி தீர்தங்கரான வர்த்தமான மகாவீரர் அவர்கள் பாவாபுரி நகரத்திலே அங்கு கூடி இருந்த மக்களுக்கு அறஉரை செய்துக் கொண்டு இருக்கின்றார். அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கூட்டமும் மெய் மறந்து அவரின் அருகேயே அமர்ந்து இருக்கின்றனர். இரவு முழுவதும் அவரின் உரை தொடர்கின்றது. மக்களும் அவரவர் தம் இல்லங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றனர். உரை முடிந்த உடன் அவ்விடத்திலேயே உறங்கியும் விடுகின்றனர். வர்த்தமான மகாவீரரும் தான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்தவாறே வீடு பேற்றினை அடைந்து விடுகின்றார் (சாதாரண வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால் மரணம் அடைந்து விடுகின்றார் அல்லது முக்தி அடைந்து விடுகின்றார்). காலையில் விழித்து எழுந்து மக்கள் மகாவீரர் வீடு பேற்றினை எய்தியதைக் கண்ட உடன் அவர்களின் அரசனுக்குத் தெரிவிக்க, அவ்வரசன் மேலும் சில அரசர்களை அழைத்து ஆலோசனை நடத்தி இறுதியில் உலகிற்கே ஒளிவிளக்காய் திகழ்ந்த மகாவீரரை மக்கள் அனைவரும் நினைவுக் கொண்டு வழிபடுமாறு அவர் வீடு பெற்ற நாளில் (முக்தி அடைந்த நாளில்) மக்கள் அனைவரின் வீட்டிலும் விளக்கினை ஏற்றி வைத்து ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முடிவினைக் கொண்டு வருகின்றான். அன்று முதல் மக்கள் அனைவரும் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்த அந்த நாளில் வீடுகளில் வரிசையாக விளக்கினை ஏற்றி வைத்து அவரை நினைவுக் கூற ஆரம்பித்தனர். வரிசையாக தீபங்களை வைப்பதால் 'தீப ஆவலி' அதாவது தீபங்களின் வரிசை (ஆவலி - வரிசை) என்றுப் பொருள் பட 'தீபாவளி' என்று அந்தத்தினம் பெயர் பெற ஆரம்பித்தது. மகாவீரர் விடியற்காலையில் வீடுபேற்றினை அடைந்தப்படியால் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகின்றது. நிற்க.

இதுவே சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குரிய காரணம் ஆகும்.

இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் இரு வேறு சமயத்தினர் தீபாவளி என்னும் ஒரே பண்டிகையை வெவ்வேறுக் காரணத்திற்காக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சாரார் இறைவன் அசுரனை அழித்ததை நினைவில் கொள்வதற்காக கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மற்றொரு சாரார் எங்களின் இறுதி தீர்த்தங்கரர் அந்த தினத்தில் வீடு பேற்றினை அடைந்தார் அதனை நினைவில் கொள்ளும் வண்ணம் தான் நாங்கள் கொண்டாடுகின்றோம் என்றுக் கூறுகின்றனர். மேலும் இவ்விருசமயங்களுக்குள்ளே மாபெரும் சண்டைகள் வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றன. அந்நிலையில் தீபாவளி உண்மையிலேயே யாருடைய பண்டிகை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.

மகாவீரரைக் குறித்து நமக்குச் சான்றுகள் கி.மு காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் கி.மு வில் கிருசுனர் என்று ஒரு கடவுள் இருந்ததற்கோ அல்லது அசுரர்கள் என்றச் சாரார் இருந்தமைக்கோ எவ்வித சான்றுகளும் இதுவரைக் கிட்டப்பெற வில்லை. எனவே காலத்தில் சமணர்களின் கதை முந்தியதாக இருக்கின்றது. அப்படி இருக்க இந்து சமயத்தில் புதிதாய் தீபாவளியைக் கொண்டாட வேண்டியத் தேவை யாது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நம்முடைய உதவிக்கு வருகின்றார் ஆராய்ச்சியாளர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள். அவரின் கூற்றுப்படி


"சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்தப் பிறகும் அவர்கள் தாம் வழக்கமாகக் கொண்டாடி வந்த தீபாவளியை விடாமல் தொடர்ந்துக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி மறுநாள் சூரியன் புறப்பட்ட பிறகு தான் போரைத் துவங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்களின் நடைமுறைப் பழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறு அடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்டக் கதை தான் நரகாசுரன் கதை!!!" (புத்தகம்: சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி)


மேலே உள்ள அவரின் கூற்றின் படி இந்து சமயத்தில் சேர்ந்த சமண மக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தம் இந்து சமயத்திற்கு வந்தமையால் அது தீபாவளி என்ற சமணப் பண்டிகையை தத்து எடுத்துக் கொண்டு வெவ்வேறு புராணக் கதைகளை அப்பண்டிகைக்கு கற்பித்துக் கொண்டது என்கின்ற கருத்து வருகின்றது. அக்கருத்து சற்று பொருந்தவும் செய்கின்றது. அதாவது,

சமணர்கள் மகாவீரரை வணங்குகின்றனர். மகாவீரர் இறந்த நாளை தீபாவளியாக அவர்கள் கொண்டாடுகின்றனர். இந்துமக்களுக்கு சமணர்கள் எதிரிகளாக இருந்தால் மகாவீரரும் எதிரியாகத் தான் இருப்பார். எதிரியினை அசுரனாக சித்தரிப்பது என்றுமே நிகழும் ஒன்று தான். எனவே இந்துக்கள் மகாவீரர் இறந்த நிகழ்வை 'கிருசுனர் அசுரனை வென்றார்...அதாவது அந்த தினம் அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான்" என்றுக் கூறி கொண்டாடுகின்றார்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். அதாவது சமணர்களை பொறுத்தவரையில் அந்த தினத்தில் மகாவீரர் வீடு பேற்றினை அடைந்து இருக்கின்றார்...இந்துக்களைப் பொறுத்த வர அசுரன் ஒருவன் இறந்து இருக்கின்றான். பொருத்தமாகத் தோணுகின்றது தானே.

ஆனால் நாம் இங்கே சிந்தித்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் அக்காலத்தில் பல விடயங்கள் நல்ல எண்ணங்களுடனேயே செய்யப்பட்டு இருக்கின்றன. அத்தகைய விடயங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் உண்மையிலேயே மகாவீரர் இறந்ததைத் தான் அசுரன் இறந்தான் என்று வைணவச் சமயம் கூறுகின்றதா அல்லது அதில் வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டித் தான் இருக்கின்றது.

ஆனால் தீபாவளி என்பது சமணப் பண்டிகை என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

இந்து மடங்கள் - ஆன்மீக மடங்களா?

சமயங்கள் என்றால் என்ன?

அவை கூறுகின்ற முழுமுதற் கடவுளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அவ்விறைவனின் கருத்துக்களை மக்கள் அனைவரிடத்தும் கொண்டு சேர்த்து, அம்மக்களை நல்வழியில் நடத்தி இறுதியில் அவர்கள் அனைவரும் அந்த முழுமுதற் இறைவனை சென்று அடையும் வழியினைக் காட்டும் ஒரு வழி...ஒரு நெறி. அது தான் ஒரு சமயமாக இருக்க முடியும். அப்படி இருக்க அப்பேற்பட்ட சமயத்தின் கருத்துக்களை பரப்புவதற்காக இருக்கும் சமய மடங்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்?
அவை அந்த சமயத்தின் கருத்துக்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். அச்சமய நெறியினை பின்பற்றுவோர் அனைவருக்கும் பொதுவாக இருந்து உண்மையான பொருளினை அனைவரும் உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

அதாவது இறைவன் இலக்காக இருக்கின்றான்...சமயங்கள் அவனை அடையும் வழியாக இருக்கின்றன...அப்பேற்பட்ட வழியில் மக்கள் தடங்கலின்றி பயணிக்க அங்கே அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளாக இந்த மடங்கள் இருக்கின்றன. எந்த ஒரு வழியும் சரி வழிகாட்டிப் பலகைகளும் சரி எவ்வாறு அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டுமோ அதேப் போல் தானே இந்த சமயங்களும் சரி....சமய மடங்களும் சரி...மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்... அதனை விடுத்து ஒரு சிலர் மட்டுமே அச்சமயங்களுக்கும் சரி அந்த மடங்களுக்கும் சரி சொந்தம் கொண்டாடினால் என்ன அர்த்தம்?

இறைவன் அனைவருக்கும் பொதுவானவனாமாம்...ஆனால் அவனை அடையும் வழியினைக் கூறும் சமயங்களும் சரி சமயங்களைக் கட்டிக் காக்கும் மடங்களும் சரி ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பாக உரியவனவாம்... அச்சிறப்பினை அவர்கள் பிறப்பிலேயே பெற்று விட்டார்களாம். எப்படி இருக்கின்றது கதை.

ஊரில் ஒரு கிணறு இருக்கின்றது. அதில் அனைவரும் தண்ணி எடுக்கலாம் என்று ஊர் பெரியவர் சட்டம் இயற்றி விட்டார்...ஆனால் ஒரு நிபந்தனை...அந்த கிணறில் அவருடைய வீட்டு வாளியை கொண்டு மட்டுமே தண்ணீரினை பிடிக்க வேண்டும்...அதுவும் அந்த வாளியினை அவருடைய வீட்டில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற விடயம் வேறு. இந்நிலையில் அக்கிணறு மக்கள் அனைவருக்கும் உரிய கிணறாக விளங்குமா அல்லது அந்தப் பெரியவரின் வீட்டுக் கிணறாக மட்டுமே விளங்குமா? அவருடைய வீட்டுக் கிணறாகத் தானே விளங்கும். அந்த நிலை தான் இந்து மடங்களிலும். அனைத்து மடங்களும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப் பட்டு அந்த சாதியினரை மட்டும் சமயத்தின் பேரினைக் கூறிக் கொண்டு வளர்க்கும் பணியை செம்மையாகச் செய்துக் கொண்டு வருகின்றன.


உதாரணத்துக்கு, நித்யானந்தாவின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அட அதாங்க நம்ம நித்தியானந்தா மதுரை ஆதீனத்தில் இளைய ஆதீனமாக தேர்ந்து எடுக்கப்பட்ட கதை தான். வெகு நாட்களாக பத்திரிக்கைகளில் முக்கியமான இடத்தினைப் பிடித்து இருந்த இந்தச் செய்தியில் ஒரு விடயத்தினை நீங்கள் கவனித்து இருப்பீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை இருந்தும் இங்கே அதனைக் கூற நான் விரும்புகின்றேன்.





அதாவது மதுரை ஆதீனத்தில் 'சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ செட்டியார்' ஆகிய மூன்று சாதிகளில் இருந்து மட்டும் தான் அடுத்த ஆதீனம் வர வேண்டும் என்பதே அந்த ஆதீனங்களின் உள்ள விதி. அந்த சாதிகளைத் தவிர வேற சாதி மக்களால் அவர்கள் எவ்வளவு ஆன்மீகச் சிறப்பினைப் பெற்று இருப்பீனும் ஆதினமாக வர முடியாது. "தான் ஒரு சைவ வேளாளர் சமூகத்தினைச் சார்ந்தவன் தான்" என்று நித்தியானந்தா தனது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நிகழ்வை நியாயப்படுத்திய நிகழ்வும் இங்கே நடந்தும் இருக்கத் தான் செய்து இருக்கின்றது.

இந்நிலையில், அதாவது வேறு சமூகத்தினரால் உரிமைக் கொண்டாடப்பட முடியாத அந்த ஆதினங்களை எவ்வாறு அனைத்துச் சமூகத்தினருக்கும் பொதுவான சைவ வைணவ சமயங்களின் கொள்கைகளைக் கட்டிக் காக்கும் மடங்கள் என்று நாம் கூற முடியும்?... அவை சைவ பிள்ளை, முதலியார், செட்டியார் ஆகிய சாதிகளை கட்டிக் காத்துக் கொண்டு இருக்கின்றன..இந்நிலையில் அந்த மடங்களை அந்த சமூகத்தினரின் மடங்கள் என்றுத் தானே கூற முடியும் அதனைத் தவிர்த்து எவ்வாறு அவை சைவ வைணவ சமய மடங்கள் என்று நாம் கருத முடியும்? இந்த மடங்கள் அனைத்தும் அவை சார்ந்து நிற்கும் சாதியினருக்காக மட்டுமே இயங்கும் அரசியல் நிறுவனங்களாகவே திகழ்கின்றன. மற்றவாறு சைவ சமயத்தின் மீதோ அல்லது இறைவனின் மீதோ உண்மையான பக்தி என்பது வெறும் பேச்சளவில் இவர்களிடையே நின்று விடுகின்றது.


அதனால் தான், சைவ சமயத்தினைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதாக கூறிக் கொள்ளும் இந்த மடங்கள்

௧) இன்று ஆதீனத் தலைமைப் பதவி ஒன்றுக்காக மடாதிபதிகள் கூட்டம் போடும் இவர்களுக்கு, இலங்கையில் இராசப்பக்சே அரசால் இந்துக்களாகிய தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டப் போதும் சரி இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்ட போதும் சரி, சொந்த இனம் அழிகின்றதே என்றும் சரி சொந்தச் சமயக் கோவில்கள் அழிகின்றனவே என்றும் சரி இரத்தம் துடிக்கவில்லை!!!

௨) மலையகத் தமிழர்களாகிய இந்துக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது அத்தமிழர்களுக்காக இவர்களுள் யாரும் குரல் கொடுக்கவில்லை!!!

௩) "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று சட்டம் போட்ட பிறகும் அனைத்து சாதியினரும் கோவில்களில் அருச்சகராக முடியாத நிலை இருக்கின்றது. அந்நிலையை நீக்க இப்படி ஒன்றுகூடி ஒரு தீர்மானம் கூட போடவில்லை"

௪) சாதிக்கலவரங்கள் ஏற்ப்படும் போது எல்லாம் பெரும்பாலும் இந்து மதத்தினைச் சார்ந்த ஏதோ ஒரு சாதிக்காரர் தாம் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே சாதிக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க இவர்கள் களப்பணி ஆற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட வரலாறே இவர்களிடம் இல்லை!!!

௫) அண்ணல் அம்பேத்கரின் காலம் முதல் இன்று வரை பெரும்பாலும் சாதி ஏற்றத் தாழ்வு என்னும் கொடிய மன நோயின் தாக்கத்தினால் தான் இந்து சமயத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோர் பிற மதங்களுக்கு மாறுகின்றனர். அந்த மனநோயினைத் தீர்க்க இந்த மடாதிபதிகள் எந்த ஒரு தீர்வினையும் எடுக்க வில்லை.

உண்மையிலேயே இந்து சமயம் மீதும் மக்களின் மீதும் மதிப்பும் அக்கறையும் இருந்து இருக்கும் என்றால் அந்த மடங்கள் மேலே உள்ள விடயங்களுக்காக நிச்சயம் பாடுபட்டு இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு அவை நடந்துக் கொள்ளவில்லை. காரணம் எளிது.

இந்த மடங்களுக்கு இந்து சமயங்களின் மீதும் சரி மக்களின் மீதும் சரி, யாதொரு உண்மையான பக்தியும் மரியாதையும் கிடையாது. அவற்றிக்கு அவைகள் சார்ந்து நிற்கும் சாதிகளும் அச்சாதியினரின் மேன்மையுமே முக்கியம். அதற்காகவே சைவ வைணவ சமயங்களை கருவிகளாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் கிட்டிய கணக்கில்லா செல்வத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அந்த மடங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதன் விளைவாகத் தான் இன்று மக்கள் அனைவருக்கும் பொதுவான சைவ சமயமும் வைணவ சமயமும் இன்று சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையான 'இந்துத்துவா (வருணாசிரம கொள்கை)' வை தாங்கிக் பிடிக்கும் சைவ மடாதிபதிகள், வைணவ மடாதிபதிகள், காஞ்சி சங்கர மடம் ஆகியவற்றின் கையில் சிக்கி சீர் அழிந்துக் கொண்டு வருகின்றன. அந்த மடாதிபதிகளுக்கு அவரவர்களின் சாதிகளே முக்கியமே தவிர இந்து மதம் அல்ல. அதனால் தான் அந்த மடங்களில் வேற்று சாதியினர் மடாதிபதிகளாக வர முடியாத நிலை இருக்கின்றது. சாதிகளை மட்டுமே இவர்கள் பார்பதனால் தான் பெரும்பாலான பிற சாதி இந்துக்கள் இன்னலுறும் போது இவர்கள் குரல் தருவதில்லை. அவ்வாறே மெல்ல மெல்ல உண்மையான இந்துச் சமயத்தினை இவர்கள் அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

எனவே இன்றைய நிலையில் சமய மடங்கள் அனைத்தும் உண்மையிலேயே சமயத்திற்காக இல்லாது குறிப்பிட்ட சாதியினருக்காகவே செயல் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அவை ஆன்மீக மடங்கள் அல்ல... அரசியல் மடங்கள்!!!

இந்நிலையில் உண்மையிலேயே இறை பக்தியும் சமயத்தின் மீது அக்கறையும் உடைய இந்துக்கள் இத்தகைய சதியினை கண்டுக் கொண்டு அச்சதியில் இருந்து இந்து சமயத்தினை விடுவித்தால் மட்டுமே உண்மையிலேயே ஆன்மீக ஒளி நம்முடைய தேசத்தில் ஒளி வீசும். இனியாவது விழிப்போம்...சாதி ஏற்றத்தாழ்வினை நிலை நிறுத்தி இந்துக்களை அழிக்கும் மடாதிபதிகளை அடையாளம் காண்போம்...!!!சாதி வெறிக் கொண்ட மடாதிபதிகளிடம் இருந்து சைவ சமயத்தினை மீட்டு எடுப்போம். இந்துக்கள் விழிப்படையாதவரை இந்தியா விழிக்காது...இந்துக்கள் வளராத வரை இந்தியா வளராது.

சில கேள்விகள்: ('சங்கர மடம் - தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்' - யாதுமாகி பதிப்பகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

௧) மற்ற மடங்களுக்கும் சங்கர மடங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் ஏராளமான மடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மடமும் ஏதோ ஒரு இறைத் தத்துவத்தை முன்னிறுத்துகின்ற மடங்கள். ஜீயர் மடங்கள் இருக்கின்றன. திருவாடுதுறை மடம் திருப்பனந்தாள் மடம் என்று சைவ வைணவ மடங்கள் பல இருக்கின்றன. எல்லா மடத்துக்கும் ஒரு இறைக் கொள்கை உண்டு. அதாவது, முன் முதலாக "இறைவன் ஒருவன் உண்டு" என்பது தான் எல்லா மடத்துக்கும் உடன்பட்ட செய்தி! சங்கரமடத்துக்கு அப்படி கிடையாது. சங்கர மடத்துக்கு வேதம் தான் தெய்வம். உருவ வழிபாடே இல்லாத ஒரு மதம் இந்த சுமார்த மதம். எனவே தான் இவர்கள் யாரும் இன்றைக்கும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராக இருக்க முடியாது. சங்கராச்சாரியாருக்கும் காமாட்சியம்மன் கோவிலில் கும்பிடத்தான் உரிமையே தவிர மூலத் திருமேனியைத் தொடுவதற்கோ அர்ச்சனை செய்வதற்கோ எந்த உரிமையும் கிடையாது.

௨) மடங்கள் எல்லாம் சாதி சார்ந்தனவா?

ஆம். தத்துவம் என்று பெயருக்கு வெளியிலே சொன்னாலும் எல்லா மடங்களின் பொருளாதார வளங்களும் ஏதோ ஒரு சாதிக்குரிய சொத்து தான். ஜீயர் மடங்கள் எல்லாம் வைணவப் பிராமணர்களுக்கு உரிய சொத்து. திருவாடுதுறை மடமும், தருமபுர மடமும் சைவ வேளாளர்களின் சொத்து. இது போன்ற வேறு சில சாதியார்கள்- விஸ்வகர்மா போன்றோர் - ஒன்றிரண்டு இடங்களில் மடம் வைத்து இருக்கிறார்கள். எல்லா மக்களுக்கும் எல்லா சாதியினருக்கும் உள்ள மடம் என்று தமிழ்நாட்டிலே எதுவும் கிடையாது.




மத மாற்றம் - மதவாதிகளின் ஆயுதம்-3!!!

கிருத்துவ சமயமும் இசுலாமிய சமயமும் அவைகளின் புனிதநூல்களை மக்கள் அனைவருக்கும் பொதுவாக வைத்து இருக்கும் பொழுது, இந்து சமயம் மட்டும் அது புனித நூல்கள் என்றுக் கூறுவனவற்றை மக்களில் ஒரு சாராருக்கு மட்டுமே உரிய ஒன்றாக வைத்து விட்டு மற்ற மக்களை அந்நூல்களில் இருந்து விலக்கி வைத்து இருக்கின்றது. அதாவது அந்த மக்கள் அந்த சமயத்தினைச் சார்ந்தவர்கள் தானாம்...அதே கடவுளரைத் தான் வணங்குவராம்...அதே பண்பாடு நாகரீகத்தினை உடையவர்கள் தானாம்...ஆனால் அந்த சமயத்து புனித நூல்களை மட்டும் அவர்கள் படிக்கவும் கூடாதாம்...அதனைப் பற்றிக் கேட்கவும் கூடாதாம். வித்தியாசமான சட்டங்களாகத் தான் இருக்கின்றன. ஆனால் இந்த வித்தியாசங்கள் இத்தோடு முற்றுப்பெறவில்லை. இன்னும் பல வடிவங்களில் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு,

௧) கோவில் கருவறையில் நுழையவும் பூசை செய்யவும் ஒரு சாரார் மக்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கின்றது.

இதனை எதிர்த்து தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தினைக் கொண்டு வந்து அனைத்து சாதியினரில் இருந்தும் மக்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு அர்ச்சகராக பயிற்சி அளித்து கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு எதாக தயார் செய்து வைத்து இருக்கின்றது. ஆனால் "மற்ற சாதிக்காரன் கோவிலில் பூசை செய்வதா" என்று ஆவேசப்பட்ட ஏற்கனவே கோவிலில் பூசை செய்துக் கொண்டு இருக்கும் சாரார் அச்சட்டத்துக்கு மறுப்பு ஆணையை உச்ச நீதி மன்றத்தில் பெற்று இருக்கின்றனர். உச்ச நீதி மன்றமும் "மக்கள் அனைவரும் சமம்..எந்த தொழிலையும் எவர் வேண்டும் என்றாலும் செய்யலாம்" என்று தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக "அனைத்து சாதியினரும் எவ்வாறு அர்ச்சகராகலாம்...அவ்வாறு ஆகா முடியாது" என்றேக் கூறி தமிழக அரசின் ஆணையை கிடப்பில் போட்டு விட்டது. அதாவது 'யாருங்க சாதிய இப்ப எல்லாம் பார்குறா' என்ற இக்காலத்திலும் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்ய முடியுமாம்...இந்திய உச்ச நீதி மன்றம் சொல்லுகின்றது. எவ்வாறு இருக்கின்றது நீதி...மன்னிக்கவும்...மனு நீதி!!!

௨) கோவிலில் உள்ளே நுழையவே பல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கின்றது.

இது தான் இருப்பதிலே உச்சகட்டம்...ஒரு சமயத்தினைச் சார்ந்தவன் அவனது சமயத்து புனித இடமான கோவில்களுக்குள் நுழைய கூடாதாம். நுழைந்தால் தீட்டாம். மற்ற சமயங்கள் எல்லாம் "ஐயா நீர் பாவம் செய்து இருக்கின்றீர்...எங்கள் இறைவனை உண்மையிலேயே நம்பினீர்கள் என்றால் இறைவன் நிச்சயம் உங்கள் பாவங்களை போக்கி அருள்வார்" என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, இந்து சமயம் பல மக்களை அவன் பாவம் செய்தவன் ....அவனைக் கண்டாலே தீட்டு என்றுக் கூறி விலக்கி வைத்து இருக்கின்றது. அதுவும் அந்த மக்கள் எதனால் பாவம் செய்தவர்களாக அறியப்படுகின்றர்கள் என்றால் விடையாக நமக்கு கிட்டும் பதில் அவர்கள் பிறப்பிலேயே பாவம் செய்தவர்களாம்...அவர்கள் பிறப்பே பாவமாம். நல்ல கதை அல்லவா. ஒருவன் ஒரு செயலின் மூலம் பாவம் செய்து விட்டான் என்றால் அதற்கு ஏதாவது தண்டனையைப் பெற்றுக் கொண்டு மனம் வருந்தி அந்த பாவத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறப்பே பாவம் என்றுக் கூறிவிட்டால், அவன் என்ன செய்வான்?...என்ன தான் செய்ய முடியும்...?

அத்தகைய மக்களை தொட்டாலே தீட்டாகுமாம்... சிலர் பத்து அடி தொலைவுக்குள் வந்தாலே தீட்டாகுமாம்...இன்னும் கொடுமை என்னவென்றால் சிலரை கண்டுவிட்டாலே தீட்டாகுமாம். என்ன கொடுமைங்க இது. ஒரே சமயத்தினைச் சேர்ந்த மக்களை இந்து சமயம் பிரித்து வைத்து இருக்கும் நிலையைக் கண்டீர்களா?

இது தான் இந்து சமயம் கூறும் நியதி. நீ பிறப்பால் தாழ்ந்தவன். நான் பிறப்பால் உயர்ந்தவன். இதனைக் கூறியது இறைவன். இதுவே சட்டம். முடிந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை.நிற்க.

இந்து சமயத்தின் நூல்களை அச்சமயத்தில் உள்ள மக்கள் பலர் படிக்க முடியாது. உள்ளம் உருகி இறைவனுக்கு பூசை செய்ய முடியாது...ஏன் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாது...இறைவனையும் காண முடியாது. இந்நிலையில் அம்மக்கள் எவ்வாறு இந்து சமயத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூற முடியும்?

அவர்களைத் தாழ்த்துவதை விட இந்துச் சமயம் எதையுமே அவர்களுக்கு செய்து விடவில்லையே அந்நிலையில் மற்ற சமயங்கள் "ஐயா...நீங்கள் எங்கள் சமயத்தில் சேர்ந்தீர்கள் என்றால் எங்களின் கோவில்களுக்குள் நீங்கள் வர முடியும்...நீங்களும் நாங்களும் ஒன்றுதான்...நம்மில் எவ்வித ஏற்றத் தாழ்வும் கிடையாது...இதோ இறைவன் அவ்வாறே கூறி இருக்கின்றார்...இதோ எங்கள் புனித நூலில் குறிக்கப்பட்டு இருக்கின்றது பாருங்கள்...பொறுமையாய் படியுங்கள்...படித்து உங்கள் முடிவினைக் கூறுங்கள்..நம்முடைய கடவுள் நம்மை காப்பாற்றுவார்" என்றே அந்த மக்களை அணுகும் போது அம்மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு சமயம் நீ மனிதனாக இருக்க தகுதி இல்லாதவன் என்றுக் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு சமயம் நாம் அனைவரும் ஒன்று தான் என்று கூறி வருகின்றது... இந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்? மனிதனாக இருப்பீரா இல்லை அடிமையாகவே இருப்பீர்களா?

இந்நிலையில் தான் மக்கள் இந்து சமயத்தில் இருந்து மாற ஆரம்பிக்கின்றனர்...எந்த ஒரு மனிதன் தான் அடிமைத்தனத்திலேயே கட்டுப்பட்டுக் கிடக்க எத்தனிப்பான்? இன்றைய இந்தியாவில் மதம் மாறிய மக்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்களே. அவர்களின் உரிமையை ஏன்...அவர்களும் மனிதர்களே என்ற விடயத்தைக் கூட இந்து சமயம் மறுத்தது...பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?...அவர்களை மனிதனாக பாவித்த சமயங்களுக்கு மாறி விட்டனர். மக்களுக்கு என்றுமே அவர்களைப் புரிந்துக் கொண்டு அவர்களுக்கென இருக்கும் இறைவனே தேவைப் படுகின்றது. இந்நிலையில் அத்தகைய மாற்றங்கள் சமுகத்தில் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இங்கே தான் நாம் இந்த மத மாற்றங்கள் குறித்த இந்து அமைப்புகளின் நிலையினை பார்க்க வேண்டி இருக்கின்றது.

அவர்களும் சரி அவர்களின் சமயமும் சரி ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக் கூட எண்ண மாட்டார்களாமாம் ஆனால் அம்மக்கள் மட்டும் எவ்வித மாற்றுக் கருத்துக்கள் இன்றி அவர்களின் சமயத்திற்கும் சரி கட்டுப்பாட்டுக்கும் சரி ஒடுங்கியே இருக்க வேண்டுமாம்... வேறு சமயங்களுக்கு மாறக் கூடாதாம்... என்ன நியாயம் இது?

அவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு ஒரு காரணமும் இருக்கின்றது...எளிய காரணம் தான்..."ஆள்வதற்கு மக்கள் இருந்தால் தானே ஆள முடியும்...மாறாக மக்கள் அனைவரும் பக்கத்து நாட்டுக்கு சென்று விட்டார்கள் என்றால் இங்கே ஆட்சி எது...அரசன் எது...?" சரி தானே. இந்த ஒரு காரணத்துக்காகத் தான் இந்து அமைப்புகள் சமய மாற்றத்தினை வன்மையாக எதிர்கின்றன. காரணம் கீழே உள்ள மக்கள் அனைவரும் மதம் மாறி விட்டார்கள் என்றால் இவர்கள் 'நாங்கள் உயர் சாதியினர்' என்று எவரிடம் போய் தங்களின் அதிகாரத்தினை செலுத்துவர்?...அவர்களின் கொள்ளைக் கூடங்களான கோவிலுக்கு எவ்வாறு செல்வம் வந்துச் சேரும்? அவர்களின் பிழைப்பு எவ்வாறு ஓடும்? இதுவே தான் அவர்களின் தலையாயக் கவலை...மாறாக கடவுளரின் கருத்துக்களைப் பற்றி அவர்களுக்கு யாதொறுக் கவலையும் இல்லை.

மக்கள் மாறி விட்டால் இவர்களின் (இந்து அமைப்புகள், பிராமணர்கள்) அதிகாரம் செல்லாக் காசாகி விடும். எனவே தங்களின் அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கவுமே இவர்கள் மதம் மாறாதீர்கள் என்ற பிரச்சாரத்தினை முன் வைக்கின்றனர். அரசியலே இவர்களின் இலக்காக இருக்கின்றதே அன்றி ஆன்மிகம் துளியும் கிடையாது. இதனை அறிந்தே திருமூலர் அக்காலத்திலேயே

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

என்று கூறி வைத்து விட்டு சென்று விட்டார்.


இந்து சமயம் தங்களுக்கு உரிய உரிமைகளையும் மதிப்பினையும் தரவில்லை என்பதாலேயே தான் மக்கள் மதம் மாறுகின்றனர் (இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கல்வி பெற்று இருக்கின்றனர் என்றால் அதற்கு கிறுத்துவர்களே முக்கிய காரணம்...இந்து சமயம் அவர்களுக்கு கல்வியினையும் தடை செய்து வைத்து இருந்தது). அவ்வாறு மதம் மாறுவதால் தாங்கள் இழந்த பல உரிமைகளை அவர்கள் மீட்டு எடுத்துத் தான் கொள்கின்றனர். ஆனால் கிருத்துவ அமைப்புகளும் அவர்களின் இலாப நோக்கிலேயே மக்களை கணக்கிடுவதினால், இந்தியாவில் மதம் மாறிய பின்னும் சாதியின் கொடுமைகளில் இருந்து வெளிவர இயலாது மக்கள் இருக்கின்றனர். ஒரு தாழ்த்தப்பட்ட இந்து கிருத்துவத்தில் இணைந்தால் அவன் தாழ்த்தப்பட்ட கிருத்துவனாகவே மாற்றப்படுகின்றான். சாதி ஏற்றத்தாழ்வு என்னும் நோய் இங்கே கிருத்துவத்தையும் பிடித்து இருக்கின்றது.

காரணம் இந்து சமயமும் சரி கிருத்துவ சமயமும் சரி மக்களை வெறும் அரசியல் கருவிகளாகவே பார்கின்றன. கிருத்துவத்தில் மக்கள் சேர்ந்தால் கிருத்துவம் பலம் பெரும்...அதன் மூலமாக அரசியல் செல்வாக்கினை அச்சமயம் அடையும். மாறாக இந்து சமயத்தில் மக்கள் இருந்தனர் என்றால் அவர்கள் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள் தொடர்ந்து ஆதாயம் அடைந்துக் கொண்டே இருப்பார்கள்...அவர்களின் அரசியல் செல்வாக்கும் அவ்வாறே இருக்கும். இதற்காகவே தான் இரு சமயங்களும் மக்களைக் கவரப் பார்க்கின்றன. வேறு ஆன்மீக என்னமோ அல்லது மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற என்னமோ இவ்விரண்டு சமயங்களுக்கும் துளியும் கிடையாது என்பதனை நாம் வரலாற்றில் இருந்து அறிந்துக் கொள்கின்றோம்.

இவ்விரண்டு சமயங்களின் அரசியல் காய் நகர்த்தலில் பாவம் மக்களே பகடைக் காய்களாக ஆக்கப்படுகின்றனர். எப்பொழுதும்!!!

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

மத மாற்றம் - மதவாதிகளின் ஆயுதம்-2!!!

சென்ற பதிவில் இரண்டு விடயங்களைப் பற்றி பார்த்து இருந்தோம்.
௧) கிருத்துவ அமைப்புகள் எவ்வாறு அரசியல் அமைப்புகளாக செயல்படுகின்றன என்றும்
௨) வெறும் பணத்திற்காக சமயத்தினை உண்மையாக நேசிப்பவர்கள் மத மாற்றம் செய்ய மாட்டார்கள் என்றும் கண்டு இருந்தோம்.

இப்பொழுது நாம் இந்தியாவில் 'மத மாற்றத்தில்' தொடர்பினை உடைய மற்றுமொரு சமயமான இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டும். "என்ன இந்து மதம் 'மத மாற்றத்தில்' தொடர்பினைக் கொண்டு இருக்கின்றதா...இந்துக்கள் எங்கே அடுத்த சமய மக்களை மதம் மாற்ற முயற்சிக்கின்றார்கள்...வீணாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்" என்று கூற வருகின்றீர்களா...சற்று பொறுங்கள். இது ஒரு வட்டம்... கிருத்துவ அமைப்புகள் மக்களை மதம் மாற்றுகின்றன...இந்து மக்கள் மதம் மாறுகின்றனர்...இந்து மதம் மத மாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மக்கள் அடுத்த மதத்திற்கு போவதை தடுக்க பார்க்கின்றது. எனவே மத மாற்றத்தோடு இந்து சமய மக்களும் சரி இந்து சமய அமைப்புகளும் தொடர்புக் கொண்டுத் தான் இருக்கின்றன. இப்பொழுது நாம் இந்து மக்கள் ஏன் மதம் மாறுகின்றனர் என்றும் இந்து சமயம் ஏன் அவர்கள் மதம் மாறுவதை தடுக்கப் பார்க்கின்றது என்றும் தான் காண வேண்டி இருக்கின்றது.

எந்த ஒரு சமய மக்களும், அவர்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மற்றொரு சமயத்தினை வெறும் பணத்திற்காக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.மேலும் நமது கலாச்சாரம் குடும்பங்கள் கூட்டாக சேர்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட ஒன்றாகும். எனவே ஒருவன் சமயம் மாறுகின்றான் என்றால் அவன் அதுவரை அன்பினால் கட்டுண்டு கிடந்த அந்த குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்லும் நிலையாகவே அது இருக்கும்.எனவே அத்தகைய நிலையில் தனி ஒருவன் வெறும் பணத்திற்காக அனைத்தையும் துறந்து விட்டு செல்ல மாட்டான். அவ்வாறு செல்லவும் அவனது சமுகம் அவனை எளிதில் விடாது.

ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தநிலையிலும் மக்கள் மதம் மாறத்தான் செய்கின்றார்கள். இதன் காரணம் என்னவென்று நாம் இப்பொழுது ஆராய வேண்டி இருக்கின்றது. அட என்னங்க "அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை அவர்கள் சமயக் கருத்துக்களைப் பரப்பி மூளைச் சலுவை செய்கின்றார்கள். அதன் விளைவாகவே மக்கள் மதம் மாறுகின்றார்கள்...இதைப் போய் இன்னும் ஆராயணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க" என்று கூறுகின்றீர்களா...இப்பொழுது ஒருக் கேள்வி, சமயங்களின் தேவை யாது? அவைகளின் கடமை யாது?

வெறுமனவே காசினை வாங்கிக் கொண்டு பூசை செய்வதா? இல்லை வெறும் மந்திரங்களை மட்டுமே ஓதிக் கொண்டு கல்லுக்கு அபிசேகம் செய்வதா? அவ்வாறு செய்தால் தான் இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார் என்றக் கருத்தினைப் பரப்புவதா?. ஆம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் இதோ ஏதோ கேள்விகளை சித்தரான சிவவாக்கியார் உங்களுக்காக எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கேட்டு வைத்து விட்டு சென்று இருக்கின்றார்

"`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

நிற்க.

சமயங்கள் என்பன அவைகள் கூறும் முழுமுதற் கடவுளின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், அம்மக்கள் அக்கருத்துக்களின் வழி அன்பாய் நின்று இறுதியில் அச்சமயங்கள் கூறும் பரம்பொருளை அடைவதற்குரிய வழிகளாக இருக்க வேண்டியவைகளே அன்றி வேறு கொள்கைகளை உடையனவைகளாக இருத்தல் இயலாது. இறைவனை அறியாத நிலையில் இருக்கும் மக்களை, இருட்டில் வழி தெரியாது கடலில் தத்தளிக்கும் படகுகளை எவ்வாறு கலங்கரை விளக்கம் பத்திரமாக ஒளியினைக் காட்டி கரை சேர்க்க உதவுகின்றதோ, அதனைப் போல் அற ஒளிக் காட்டி இறைவனை உணர்ந்து அவனை அடையும் வழியினை காட்டுவதே சமயங்களின் குறிக்கோளாக இருக்க முடியும். இருக்கவும் வேண்டும்.

கிருத்துவ சமயம் என்றால் கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மக்களை நல்வழி படுத்தி அவர்கள் கிருத்துக் கூறிய நெறிப்படி வாழ செய்ய வேண்டும்.
இசுலாமிய சமயம் என்றால் அல்லாவின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சைவம் சிவனை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.
வைணவம் பெருமாளினை அடைவதற்கான வழிகளை மக்களுக்கு கூற வேண்டும்.

அவ்வாறுக் கூறி மக்களின் அறியாமையை போக்க வேண்டும். மக்களிடத்து ஆன்மீக கருத்துக்களைக் கொண்டுச் சென்று அவர்களைத் தெளிவுற செய்ய வேண்டும். அவ்வாறு இருக்க 'எங்கள் சமயத்து மக்கள் அறியாமையில் இருக்கின்றனர்...அதனை மற்ற சமயத்து மக்கள் பயன்படுத்திக் கொண்டு மாற்றி விடுகின்றனர்" என்றுக் கூறுவது உங்கள் சமயத்து கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நீங்களே ஒப்புக் கொள்வதைப் போலத் தானே இருக்கின்றது. அப்பொழுது தவறு எங்கே இருக்கின்றது. மதம் மாறுபவன் அறியாமையால் மாறுகின்றான் என்றால் அவனை அந்த அறியாமை இருளில் வைத்தது யார்? அந்த அறியாமை இருளைப் போக்காமல் அதனில் குளிர் காய்ந்தது யார்? என்றாவது ஒரு நாள் அவன் அறியாமை நீங்கித் தான் தீர வேண்டி இருக்கின்றது. அந்நிலையில் அவன் அறியாமையை நீங்கள் விலக்கவில்லை என்றால் இன்னொருவன் நீக்குகின்றான் அதனைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்.

இப்பொழுது ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே கூற விரும்புகின்றேன். அலுவலகத்தில் எனது இசுலாமிய நண்பர் ஒருவர் தினமும் குர்ஆனில் இருந்து சில வரிகளைப் படித்து விட்டு வந்து அதனை என்னிடம் கூறி அதற்குரிய விளக்கமும் கூறுவார். நானும் ஆர்வமாக கேட்டுக் கொள்வேன். அச் செயலுக்கு அவர் கூறிய காரணம் "இது எங்களுடைய கடமை...அல்லாவின் கருத்துக்களை படித்து அதனை மக்களுக்கு கூற வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை". அருமையான ஒரு செயல் தான். இறைவனின் கருத்துக்களாக அவர்கள் நம்பும் கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் முயல்கின்றனர். இங்கே தான் நாம் இந்து சமயதினைக் காண வேண்டி இருக்கின்றது...

கிருத்துவர்களின் புனித நூல் விவிலியம் - அக்கருத்துக்களை மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம். மேலும் விவிலியத்தினை மக்கள் அனைவரும் படிக்கவும் செய்யலாம். தன்னிடம் விவிலியம் அல்லாத அல்லது விவிலியக் கருத்துக்களை அறியாத ஒரு கிருத்துவனை நீங்கள் காண முடியாது.
இசுலாமியர்களின் புனித நூல் குரான் - குரானின் கருத்துகளையும் மக்கள் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்...படிக்கவும் செய்யலாம். அதைப் போன்றே அனைத்து இசுலாமியர்களும் நிச்சயம் குரானை தங்களுடன் வைத்து இருப்பர்.
இப்பொழுது இந்து சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம் (சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இந்து சமயத்திற்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை என்றே நாம் மற்ற பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம்...அந்த விடயங்கள் இங்கே தேவை இல்லை என்பதால் அதனை பற்றிப் பார்க்காமல் இந்து சமயத்தினை பற்றி மட்டுமே காண்போம்).

இந்து சமயத்தின் புனித நூல் என்ன?
இக்கேள்விக்கு பெரும்பாலானோர் வேதங்கள் என்றே விடை தருவர்.
சரிப்பா வேதம் என்றால் என்ன? அவற்றில் என்ன கூறி இருக்கின்றது? என்றால் பெரும்பாலான மக்களுக்கு விடை நிச்சயம் தெரியாது. காரணம் விவிலியம் மற்றும் குரான் ஆகிய நூல்களைப் போன்று அனைத்து மக்களும் வேதங்களைப் படித்து விட முடியாது. இந்து சமயத்தில் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கே அவ்வேதங்களை பயிலும் உரிமையை இந்துச் சமயம் வழங்கி இருக்கின்றது. அதுவும் எந்த அடிப்படையில்...பிறப்பின் அடிப்படையில். அதனால் தான் வேதங்கள் என்று அறிந்த மக்களுக்கு வேதங்கள் என்றால் என்னவென்றும் வேதத்தில் என்ன கருத்துக்கள் கூறி இருக்கின்றன என்றும் தெரியாத நிலை இருக்கின்றது. ஒருவேளை ஒரு சாதாரண மனிதன் வேதங்கள் என்ன தான் சொல்லுகின்றன என்று பக்தி ஆர்வத்தில் வேதங்களைப் படித்து விட்டான் என்றால் அவனை என்ன செய்ய வேண்டும் என்றும் இந்து சமயத்தில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்". - மனுநூல் அத்தியாயம் 12, ஸ்லோகம் 4

அருமையான சட்டம் அல்லவா. இந்த சட்டத்தினை நாம் முழுமையாக அறிய வேண்டும் என்றால் சூத்திரன் என்பவன் யார் என்றே நாம் அறிய வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் நம்மில் பலர் அந்தச் சட்டம் சூத்திரன் என்ற ஒருவனைத் தானே கூறுகின்றது அச்சட்டம் நமக்கு பொருந்தாது என்றே எண்ணக்கூடும். அந்த எண்ணம் ஒரு வேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். சரி நாம் ஏன் வீணாக யூகிக்க வேண்டும். சூத்திரன் யார் என்று மனுநூலையே கேட்டுவிடலாமே. அதற்கு முன்னர் இந்து சமயம் மக்களை பிரித்து வைத்து இருக்கும் நான்கு பிரிவுகளை(பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன்) சற்று நினைவில் கொள்வது நல்லதாக இருக்கும். இப்பொழுது மனுநூலைக் காணலாம்..."ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்". - மனு நூல் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம்.

"பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது." - மனுநூல் அத்தியாயம் 2 சுலோகம் 44


மேலே உள்ள வாக்கியங்களின் மூலம் சூத்திரன் என்பவன் பிரமனின் காலில் இருந்து பிறந்தவன் என்றும் அவனைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவரும் பூணூல் பூண்டு இருப்பர் என்றே நாம் அறிந்துக் கொள்ளலாம். எனவே பூணூல் போடாத எவரும் வேதங்களைப் படிக்க கூடாது...படிக்கவும் முடியாது இந்து சமயத்தில். இப்பொழுது அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் வேதங்களைப் படிக்க இந்து சமயத்தில் அனுமதி இருக்கின்றதா இல்லையா என்று. ஆச்சர்யவசமாக இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் (90%) பேருக்கு இந்து சமயம் அந்த அனுமதியை வழங்கி இருக்கவில்லை. வேதங்களை படிப்பதற்கு மட்டும் என்றில்லை, சூத்திரர்கள் என்ற மக்களுக்கு மேலும் பல அனுமதிகளை இந்து சமயம் வழங்கி இருக்கவில்லை.


"அட என்னங்க வேதங்கள் இறைவன் அருளியவை...எவ்வளவு சிறப்பு மிக்கவை... அவற்றை எவ்வாறு சூத்திரன் படிக்கலாம்...தகுதியானவர் தானே படிக்கலாம்...அடுத்தப் பிறப்பில் அவன் புண்ணியம் செய்து இருந்தான் என்றால் பிராமனாகவோ அல்லது மற்ற வர்ணத்தில் ஒருவனாகவோ பிறந்து வேதங்களைப் படிக்கலாம்" என்று கூறினீர்கள் என்றால், இதோ மீண்டும் சிவவாக்கியார் வருகின்றார் சில கேள்விகளோடு... 
இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.


ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!


இதில் வேதத்தையும் யாகத்தையும் கிழிக்கும் அவர், தகுதியானவர் என்று கூறப்படுபவர்களை

பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?


நோக்கி கேள்விகளை வீசுகின்றார்...மேலும் அதோடு நிற்காது மறுபிறப்பையும் ஒரு கை பார்க்கின்றார்,


கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


எனவே மேலே உள்ள வரிகள் மூலம் வேதங்களின் இறவாத்தன்மையும் அத்தகைய வேதங்களை ஒரு சிலர் தான் படிக்கலாம் என்பது ஒரு சிலரின் சதிதான் என்றும் நாம் அறிய முடிகின்றது. சரி இப்பொழுது நாம் அதனுள் செல்ல வேண்டியதில்லை.


கிருத்துவ சமயமும் இசுலாமியச் சமயமும் அவைகளின் புனித நூல்களை அனைவரும் படிக்கலாம் என்றும் அச் சமயங்களின் ஆலயங்களுக்குள் அச்சமயத்தினர் எவர் வேண்டும் என்றாலும் எவ்வித பாகுபாடுமின்றி வரலாம் என்றுமே கூறுகின்றன. ஆனால் இந்துச் சமயமோ புனித நூல்கள் என்றுக் கூறப்படுபவையை ஒரு சிலர் தான் படிக்க வேண்டும் என்றும் மற்ற மக்கள் எவரும் அதனை படிப்பது ஏன்..அதனைப் பற்றிக் கேட்டாலே பாவம் என்றுக் கூறுகின்றது. இந்நிலையில் அவ்வாறு அவர்களின் புனித நூல்கள் என கூறப்படுபவைகளில் உள்ள இறைவனின் கருத்தினை அறிய முடியாத மக்கள் மற்ற சமயத்தில் இறைவன் கூறி உள்ள கருத்தினை அறிய வாய்ப்பு கிட்டினால் கற்பார்களா மாட்டார்களா? இங்கே மறுக்கப்படும் அனுமதி அங்கே கிட்டினால் அவர்கள் செல்வார்களா மாட்டார்களா? கற்பார்கள் தானே...செல்வார்கள் தானே...அதனை நாம் தவறென்று நாம் எவ்வாறு கூற இயலும்.

சரி இன்னும் வேறு சில விடயங்களையும் நாம் இப்பதிவுத் தொடர்பாக காண வேண்டி இருக்கின்றது....

காண்போம்...!!!

மத மாற்றம் - மதவாதிகளின் ஆயுதம்-1!!!

நீங்கள் மதம் மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?

மதம் மாற்றம் வெகு சுலபம் தான். எங்களின் சமய பழக்க வழக்கங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப நீங்கள் மாறிக் கொள்ள வேண்டும். நாங்கள் வணங்கும் இறைவனை நீங்கள் வணங்க வேண்டும். உங்களுடைய பழைய பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவைகள் முற்றிலுமாக புறக்கணித்து எங்களின் கொள்கைகளையே பேண வேண்டும். இந்நாள் வரை நீங்கள் வணங்கிக் கொண்டு இருந்த கடவுளரை இனி வணங்கக் கூடாது... ஏன்...நினைத்துக் கூடப் பார்க்க கூடாது...அவர்கள் இனி உங்களுக்கு அந்நிய கடவுளர் ஆக மாறி விடுவர். ம்ம்ம்...உங்களின் பெயர் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பெயரினையும் எங்கள் சமயத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப மாற்றி விட்டால் நலமாக இருக்கும். இன்னும் சில இதரச் சட்டங்கள் இருக்கும்...ஆனால் அவற்றை எல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்... இப்பொழுது சொல்லுங்கள்...

நீங்கள் எங்கள் மதத்திற்கு மாற எவ்வளவு பணம் எதிர் பார்ப்பீர்?...

இக்கேள்வியோடு ஒருவர் உங்களை அணுகினால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்.

 "ஆகா...பணம் வருகின்றதே..அது போதாதா..." என்பது உங்களின் பதிலாக இருக்குமா அல்லது "நன்றிகள் ஐயா...இருக்கட்டும்....நாங்கள் வணங்கும் இறைவன் எங்களை நன்றாக வைத்து இருக்கின்றார்... எங்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிப்பாட்டு முறைகள் போன்றியவைகளை வாங்கும் அளவுக்கு இன்னும் இந்த உலகில் பணம் படைத்தவர்கள் தோன்றவில்லை...தோன்றப் போவதுமில்லை. எங்களின் கடவுள் என்றும் எங்களைக் கண்டுக் கொண்டே இருக்கின்றார்...உங்களின் கடவுள் உங்களைக் கண்டுக் கொண்டு இருப்பதைப் போன்றே...எனவே மன்னிக்கவும் நண்பரே...உங்களின் சமயத்திற்கு நாங்கள் மாற வேண்டியத் தேவை என்றுமே எங்களுக்கு அமையாது" என்று இருக்குமா?.

மேலே உள்ள பதில்களில் முதல் வகையான பதில்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர்களுக்கு பணம் தான் இறைவன். அவர்கள் ஒரு சமயத்தில் இருப்பதும் ஒன்றுத் தான் இல்லாததும் ஒன்றுத் தான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் அந்த சமயத்தில் இல்லாததே அந்த சமயத்திற்கு நல்லதாக அமையும். எனவே அவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியத் தேவை இல்லை. (இதில் ஒரு வகையான விதிவிலக்கான மக்களும் இருக்கின்றனர் அவர்களைப் பற்றி நாம் தனியாகப் பார்க்கலாம்).

இரண்டாவது வகையான பதிலினை உடையவர்களைப் பற்றி நாம் கவலைக் கொள்ள வேண்டியதே இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அவர்களிடம் மதமாற்றம் என்ற ஆயுதம் வேலை செய்வதில்லை. பெரும்பாலான மக்கள் அனேகமாக இந்தப் பிரிவினைச் சார்ந்தவர்களாகத் தான் இருக்கின்றனர்.

எனவே மேலே நாம் கண்ட விடயங்கள் மூலம் உண்மையான பக்தியினை உடைய மக்களைக் கொண்ட சமயத்தின் மீது மத மாற்றம் என்றக் கருவி எவ்வித மாற்றத்தினையும் எப்பொழுதிலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதனை அறிந்துக் கொள்ளலாம். அத்தகைய சமயம் மற்றச் சமயதினைக் கண்டு அஞ்ச வேண்டியத் தேவையும் கிடையாது. அவ்வாறு அச்சமயம் அஞ்சும் என்றால் அச்சமயம் அதன் மக்களின் மேல் நம்பிக்கை இன்றி இருக்கின்றது என்றே நாம் அறிந்தும் கொள்ளலாம்.

"தம்பி...கொஞ்சம் பொறுங்க... எந்த அந்நிய மதமும் வெறும் பணத்தினைக் கொடுத்து மக்களை மாற்றுவது கிடையாது... அவர்களின் கடவுளை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, மதக் கருத்துக்களைப் பரப்பி... அப்பாவி படிப்பறிவில்லாத மக்களை மூளைச் சலுவைச் செய்து மதம் மாற்றுகின்றனர். அப்பாவி மக்களும் ஏமாறுறாங்க...இதைப் பத்தி பேசாம நீங்க மற்றத பத்தியே பேசிகிட்டு இருக்கீங்க" என்று சிலர் வினா எழுப்பலாம். அருமையான கேள்வி. இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக 'மதக் கருத்துக்களைப் பரப்பி'...'மூளைச் சலுவை'...மற்றும் 'அப்பாவி படிப்பறிவில்லாத மக்கள்' ஆகிய சொற்களைப் பற்றியும் நாம் விரிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மத மாற்றம் என்றாலே இரு மதங்களாவது குறைந்தபட்சம் அச்செயலில் நிச்சயம் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் மத மாற்றம் என்றுக் கூறினாலே கிருத்துவம் அவ்விரு சமயங்களில் ஒன்றாக அமர்ந்துக் கொள்கின்றது. இந்தியாவினைப் பொறுத்த வரை அந்த மற்றொரு சமயம் இந்துச் சமயமாக இருக்கின்றது. எனவே இந்தியாவில் மத மாற்றம் என்றத் தலைப்பினை நாம் காண வேண்டும் என்றால் அவ்விருச் சமயங்களைப் பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. முதலில் இன்றைய கிருத்துவச் சமயத்தினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு உண்மைச் சம்பவத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம்... என்னுடைய நண்பன் ஒருவன் படித்து முடித்தும் நீண்ட காலமாக வேலை இல்லாது தேடிக் கொண்டே இருந்தான். மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வேலைக் கிடைத்து விட தனக்கு மட்டும் வேலைக் கிடைக்காத நண்பன் எவ்வாறு இருப்பான்?... ஒரு வித மன வருத்தத்தில் இருப்பான் தானே... அவ்வாறுத் தான் அவனும் இருந்தான். அப்பொழுது தான் அவனுக்கு அந்த அழைப்பு வந்தது. ஒரு கிருத்துவ நிறுவனத்திடம் இருந்து.

"மாதம் 20,000 சம்பளத்தில் வேலை பெற்றுத் தருகின்றோம்...நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்... எங்கள் சமயத்திற்கு மாறி விடுங்கள்...மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" இதுவே அவர்கள் அவனுக்கு தந்த வாய்ப்பு.

"இல்லை...இருக்கட்டும்" இது அவன் அவர்களுக்குத் தந்த பதில். வேலை இல்லாவிடினும் பிரச்சனை இல்லை ஆனால் என்னுடைய நம்பிக்கைகளை நான் விற்க போவதில்லை என்பதே அவனது முடிவாக இருந்தது. நிற்க...
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்த கிருத்துவ அமைப்பு அவனுக்குத் தந்த வியாபார ஒப்பந்தத்தினைப் பற்றியே.

என்ன வியாபார ஒப்பந்தமா என்று எண்ணுபவர்களுக்கு "ஒரு நிறுவனம் ஒருவனுக்கு வேலை தருகின்றேன் ஆனால் நீ என்னில் சேர்ந்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் இடுகின்றது" என்றால் அது வியாபார ஒப்பந்தம் தானே. ஒரு பொருளை இன்ன விலை என்று பேரம் பேசுவது வியாபாரம் தானே. அவ்வாறு பேரம் பேசும் நிறுவனம் வியாபார நிறுவனம் தானே.

அத்தகைய ஒரு வியாபார அமைப்பாகத் தான் கிருத்துவ சமயம் இன்று இருக்கின்றது. கிருத்துவ சமயத்தினை தன வசம் வைத்துக் கொண்டு உலகில் உள்ள மக்களை எல்லாம் ஆளும் எண்ணம் கொண்ட ஒரு அரசியல் மற்றும் வணிக அமைப்பாகத் தான் அது இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. மாறாக கிருத்துவின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று மனித நேயம் மக்கள் மத்தியில் செழித்து வளர வழி செய்யும் ஒரு அமைப்பாக அது இயங்கவில்லை. அது ஒரு அரசியல் அமைப்பாக மாறி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த மாற்றம் ஆரம்பித்தது ரோம பேரரசன் கோன்சுடண்டின் என்பவனின் காலமான கி.பி நான்காம் நூற்றாண்டில் இருந்து தான் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

அக்காலத்தில் தான் கிருத்துவம் அரச சமயமாக அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது.

சிலுவை அதன் சின்னமாக மாறுகின்றது.

ரோம பேரரசு புனித ரோமப் பேரரசாக மாறுகின்றது. கிருத்துவம் மெதுமெதுவாக அரசியல் கருவியாக மாற ஆரம்பிக்கின்றது.

கோன்சுடண்டினின் காலம் வரை கிருத்துவர்களை வேட்டையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவனின் காலத்துக்கு பின்னர் கிருத்துவர்கள் அல்லாதவர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அனைத்தும் அரசியலாக்கப்பட்டது. அரசியலாக்கப்பட்டக் கொள்கைகள் ஏதேனும் உண்மையானக் கொள்கைகளாக இருந்து இருக்கின்றனவா? இல்லைதானே... அவ்வாறே கிருத்துவமும் சரி மாற்றம் காணப்பெற்றது. அவ்வாறு மாறிய கிருத்துவம் தான் இன்று உலகில் நின்றுக் கொண்டு இருக்கின்றது....ஒரு மாபெரும் அரசியல் அமைப்பாக!!!

சிந்தித்துப் பாருங்கள்,

௧) கிருத்துவும் சரி அவரது சீடர்களும் சரி ரோமர்கள் அல்லர். ஆனால் இன்று கிருத்துவர்களின் சமயத் தலைவராக விளங்கும் போப் என்னும் பதவியில் இது வரை அனேகமாக ரோமர்கள்...இன்னும் விரிவாகக் கூற வேண்டும் என்றால் ஐரோப்பியர்களே அமர்ந்து உள்ளனர் பெருமளவில். இதன் மூலம் கிருத்துவ சமயம் உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

௨) யூதனுக்கு யுதனாகவும்...கிரேக்கனுக்கு கிரேக்கனாகவும் கருத்துக்களைப் பரப்புங்கள் என்றக் கிருத்துவின் கொள்கைக்கு மாறாக அனைவருக்கும் ஐரோப்பியர்களாகவே கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்களுக்கே மக்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்...அரசியல் நலன்களுக்காக.

௩) மற்ற சமய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் அறிந்துக் கொண்டு அதன் வாயிலாகவே மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற கிருத்துவின் கருத்துக்களுக்கு மாறாக மற்ற சமயங்களின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத மனப்பான்மையையும் அவற்றைத் தாழ்வுப்படுத்தும் ஆதிக்க எண்ணத்தையுமே இன்றைய கிருத்துவ சமயம் விதைக்கின்றது.

௪) ஒரே மந்தை...ஒரே மேய்ப்பன் என்ற வாக்கியத்தின் உண்மையான பொருளினை விளங்கிக் கொள்ளாமலும், பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தினை உணர்ந்துக் கொள்ளாமலும் பல கடவுளர் இருக்கின்றனர் என்றும் அவர்களை நாம் வணங்கக் கூடாது என்றும் எண்ணத்தினைக் மக்களுள் வளர்க்கின்றனர்.

௫) மேலும் மக்கள் அனைவரும் சமம் என்றக் கருத்தினை மக்களுள் விதைக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்காது ஒரு சாரார் மற்றொரு சாராரினை அடக்கி ஆள்வதற்கே இன்றைய கிருத்துவ சமயம் வழி செய்கின்றது...

அதனால் தான் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்க கிருத்துவர்களால் கொல்லப்பட்ட பொது அதனை கிருத்துவ சமயம் எதிர்க்கவில்லை. அம்மக்கள் அடிமைகளாக துன்புறுத்தப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயினை மூடிக் கொண்டே இருந்தன.

அதனால் தான் மாயன் இன மக்கள் முற்றிலுமாக இசுபானிய காட்டுமிராண்டிகளால்(வீரர்கள் என்று அவர்களை அவர்களே அழைத்துக் கொள்ளட்டும்) அழிக்கப்பட்ட போதும் அவ்வமைப்புகள் வாயை மூடிக் கொண்டு இருந்தன.

இன்னும் பல விடயங்களைக் கூறிக் கொண்டே போகலாம்... சுருக்கமாக கூற வேண்டும் என்றால்....இன்றைய கிருத்துவ சமயம் கிருத்துவின் சமயமே அல்ல. அது ஒரு அரசியல் நிறுவனமாகவே இருக்கின்றது.

ஒரு நிறுவனத்திற்கு என்ன என்ன விடயங்கள் முக்கியமாக வேண்டி இருக்கும்... பண பலம்...? ஆட் பலம்...? இவை இரண்டும் நிச்சயம் தேவைதானே. அவைகளைத்தான் அந்த நிறுவனமும் சேகரித்துக் கொண்டு இருக்கின்றது...தனது அரசியல் செல்வாக்கின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்கின்றது... பின்னர் கிருத்துவின் கொள்கைகள் மூலமாகவும் பணத்தின் மூலமாகவும் மக்களிடம் சென்று ஆட் பலத்தினைப் பெற்றுக் கொண்டு தனது அரசியல் செல்வாக்கினை வளர்த்துக் கொள்கின்றது.

மற்றப்படி உண்மையான கிருத்துவின் மீதோ, அவர்தம் கருத்துக்களின் மீதோ அல்லது மக்களின் மீதோ மனித நேயத்தின் மீதோ அவ்வமைப்புகளுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதனைப் போன்று தோன்றவில்லை. அவ்வாறு இருந்து இருந்தால் எப்பொழுதோ தனது செல்வாக்கினை வைத்து உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சமம், உண்மையான செல்வம் கிருத்துவின் அருளே என்றக் கருத்துக்களைத் தான் மக்களின் மத்தியில் அது பரப்பி இருக்கும்...மனித நேயத்தினை விதைத்து இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கையில் அது இன்று வரையிலும் அவ்வாறு எதையுமே செய்யாது வேடிக்கை மட்டுமே கண்டுக்கொண்டு இருக்கின்றது. அதற்கு ஒரே தேவை மனிதர்களின் எண்ணிக்கை... அதன் மூலம் அதிகாரம்...அதன் மூலம் பணம். அவ்வளவே.

அதனால் தான் இன்று இந்தியாவில் கிருத்துவர்களான பின்னும் 70% மக்கள் தலித் கிருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர். சில இடங்களில் அவர்கள் தேவாலயங்களுள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றது. இது என்னங்க கொடுமை... இயேசு கிருத்து தாழ்த்தப்பட்டவரா...இல்லை பிற்படுத்தப்பட்டவரா...அல்லது உயர்ந்த சாதியினறாங்க? அவர் அனைத்து மக்களும் சமம் அப்படின்னு சொன்னவர். அவ்வாறு இருக்க அவரை வழிபடுறவங்க மட்டும் பல பிரிவா இருப்பாங்களாம்...சீரிய கிருத்துவர்கள் உயர் சாதியினராம்...அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட கிருத்துவர்களாம்...இந்தப் பிரிவுகளைப் பத்தி விவிலியத்துல எங்கங்க சொல்லி இருக்கு? இதைப் பற்றி போப் விளக்குவாரா?

எனவே இன்றைய கிருத்துவ சமயம் என்பது மக்களை வைத்து அரசியல் லாபத்தினை பார்க்கும் ஒரு அரசியல் அமைப்பாகவே விளங்குகின்றது. அது உண்மையான ஆன்மீக சமயமாக இருந்து இருப்பீன், உலகை மக்கள் அனைவருக்கும் சமமான ஒன்றாக அன்பு நிறைந்து இருக்கும் ஒரு பூங்காவாக வைத்து இருந்து இருக்கும். ஆனால் வருந்தத்தக்க விடயமாக அவ்வாறு அது இல்லை.

சரி... கிருத்துவ சமயம் இன்று மக்களை அரசியல் நோக்கிற்காக பிடிக்கும் ஒரு சமயம் என்றுக் கண்டு இருக்கின்றோம்...இப்பொழுது 'மத மாற்றத்தில்' தொடர்புக் கொண்ட மற்ற சமயமான இந்துச் சமயத்தினை பற்றிப் பார்ப்போம்...!!!

தொடர்புடைய பதிவுகள்:
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
கிருத்துவத்தின் வரலாறு
கிருத்துவமும் திருநீறும்
விவிலியமும் சிவலிங்கமும்
இந்தியாவில் தோமா

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...