ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தமிழர் சமயத்தின் ஆதிக் கோவிலை விடுவிக்கப் போராட்டம் - இரண்டாம் கட்டம்

இன்று தமிழர்களும் சரி தமிழர்களால் உருவாக்கப்பட்ட சமயங்களும் சரி அடிமைத்தளையில் கட்டுண்டு கிடக்கின்றனர். மாபெரும் அறிவுக் களஞ்சியத்திற்கு உரிமையாளர்களான தமிழர்கள் அச்சிறப்பினை அறியாது அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் உழன்றுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இருந்து அவர்களை விடுவிக்க அவர்களது உண்மையான வரலாற்றையும் அவர்களது சிறப்பையும் அவர்களை அறியச் செய்து அவர்களது உரிமைகளை அவர்கள் மீட்டு எடுக்க செய்வதன் மூலமே முடியும். அவ்வாறு தமிழர்கள் விடுதலை அடைந்தால் தான் அவர்களது 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்ற உயர்ந்த உண்மைகள் வெளியாகி உலகில் இன்று நிலவிக் கொண்டு இருக்கும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் சண்டைகளுக்கும் ஒரு நிரந்திரமான முடிவினைக் கொண்டு வர முடியும். அத்தகையத் தீர்வு தமிழ் இனம் விடுதலை அடைவதில் தான் அடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கூறாக தான் தமிழர் சமயத்தின் விடுதலைப் போராட்டங்கள் நிகழப் பெறுகின்றன. நிற்க.

இங்கே நிச்சயம் பல கேள்விகள் எழும்பும்...மாற்றுக் கருத்துக்களும் தான். அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.

1) கபாலீசுவரர் ஆதிக் கோவில் கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்டது ஏன்?

2) அதன் மீது இயேசுவின் சீடரான தோமாவிற்காக சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டது ஏன்?

3) ஏன் அப்பேராலயம் 1950 இல் போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது?

4) கபாலீஸ்வரர் பெயர்க் காரணம் என்ன? இப்பொழுது புனையப்பட்டுள்ள கதையான கபாலத்தில் பிச்சை எடுத்தவர் என்பது கடவுளுக்குப் பொருந்துமா?

5) கபாலீஸ்வரர் கோவிலில் பலி பீடம் இருக்கின்றது ஆனால் பலி இல்லை...அது ஏன்?

6) காசியில் உள்ள சிவலிங்கத்தை தொட்டுக் கும்பிட இயலும் தமிழர்களுக்கு கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தொட்டு வணங்க சங்கராச்சாரியார்கள் தடை விதித்து உள்ளது ஏன்?

7) உருவ வழிபாட்டை ஏற்காத 'நான் தான் கடவுள்' என்ற நாத்திக கொள்கையை அடிப்படையாக கொண்ட நாத்திக சமயமான ஸ்மார்த்த சமயத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்களின் கட்டுப்பாட்டுக்கு எப்பொழுது/எவ்வாறு இறை நம்பிக்கையை உடைய சைவ வைணவ சமயங்கள் சென்றன?

என்பன போன்ற பல கேள்விகளுக்கும் அக்கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும். மேலும்,

உடலைப் பற்றி ஆராய்வது அறிவியல்...உயிரைப் பற்றி ஆராய்வது மெய்யியல்...இறைவனைப் பற்றி ஆராய்வது இறையியல். இந்த மூன்றையும் ஆராயும் மனிதனின் ஆறாவது அறிவிற்கு காரணமான ஆன்மாவைப் பற்றி ஆராய்வது ஆன்மவியல். ஆன்மவியலில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் அடங்கி விடுகின்றன. உலக மொழிகளில்தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆன்மவியலின்உலகவளாவிய சிறப்பும் கூட்டத்தில் விளக்கப்படும்.

தமிழர் வரலாற்றில், சமயங்களின் வரலாற்றில், சமூக மாற்றத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உள்ளவர்கள் தயைக் கூர்ந்து கலந்துக் கொள்ளலாம்.

கண்ணால் காண்பதும் பொய்...காதால் கேட்பதும் பொய்...தீர விசாரிப்பதே மெய்.

பி.கு:

1) வரலாற்றைக் குறித்து நாம் பல பதிவுகளை கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். அப்பதிவுகளை கீழே உள்ள இணைப்பில் காணலாம்...

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்

2) மேலும் தொடர்புடைய பதிவுகள்

தமிழர் ஆன்மீக எழுச்சிப் போராட்டம் - 19-01-2014
தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!
கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

சனி, 15 பிப்ரவரி, 2014

புத்தகம் : தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

ஒரு சராசரியின் வாழ்க்கை மிகவும் எளிதானது தான்.

அணுமின் நிலையங்கள் குறித்தோ அல்லது அதனை எதிர்த்துப் போராடும் மக்களைக் குறித்தோ அல்லது நாட்டில் நிலவும் மின்வெட்டினைக் குறித்தோ பெரிதும் மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய தேவைகள் ஒரு சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் இருப்பதில்லை.

"மின்சாரம் இல்லையா...சரி பிரச்சனை இல்லை பாழாய்ப் போன நாட்டினை சிறிது திட்டி விட்டு மின்சாரம் இல்லாது எவ்வாறு வேலையைப் பார்ப்பது என்பதனை யோசிக்கலாம்...அப்படியே மின் வாரியத்திற்கு ஒரு அழைப்பினை விடுத்து 'அண்ணே..இங்க மின்சாரம் இல்ல...எப்பனே விடுவீங்க' என்று கேட்டுக் கொள்ளலாம்...கூடவே மின்சாரம் இல்லாததற்கு இவர்கள் தான் காரணம் என்று ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சில மனிதர்களை நோக்கி கை காட்டினால் அவர்களையும் கடிந்துக் கொள்ளலாம்."

ஒரு சராசரியின் பணி பொதுவாக அத்துடன் முற்றுப் பெற்று விடுகின்றது. மின்சாரம் ஏன் இல்லை? எதனால் மின் வெட்டு நிலவுகின்றது...அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்ட மின்சாரத்தின் பின்னால் உள்ள அரசியல் இதனைக் குறித்து சிந்திக்கவோ அல்லது தகவல்களை அறிந்துக் கொள்ளவோ பெரும்பாலும் நமக்கு தேவையோ அல்லது நேரமோ இருப்பதில்லை. அதனை விட முக்கியமான பல விடயங்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் இருக்கின்றன. பிரச்சனை அங்கே தான் இருக்கின்றது.

அக்கேள்விகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று நம் நாட்டு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 1,16,089 கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றது. அதுவும் குறிப்பாக தமிழக மின்சார வாரியம் 53,298 கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் நம் நாட்டின் அரசு அப்பெரும் கடன் தொகையை நம் மீது (நாட்டு மக்களின்) தலையில் வைக்க முடிவு செய்து இருக்கும் நிலையில்

 "2011-2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் 1,16,089 கோடி நஷ்டத்தை ஈட்டும்; அதனால், மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்துக் கொண்ட கொள் முதல் ஒப்பந்தங்களின் படி பணத்தை உடனடியாக தருவதற்கு வழி இல்லாது போகும். எனவே 1,16,089 கோடி ரூபாயையும் மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களுக்கும் வழங்க வேண்டும்" என்று மத்திய மின்துறை அமைச்சகம் இல் மின்சார மேல்முறையீட்டுத் தீர்பாயத்திற்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டு உள்ளது. அதற்கு மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயமும் அனுமதி தந்து உள்ளது (OP1 of 2011 of APTEL (Appellate Tribunal for electricity) dated 11.11.2011). அதன்படி ஆண்டுதோறும் ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் மின் கட்டண உயர்வை மக்கள் சந்தித்தாக வேண்டிய ஒரு நிலை உருவாகி உள்ளது".""
நாம் மின்சாரத்தினைக் குறித்தும் அதனைச் சூழ்ந்து இருக்கும் அரசியலைக் குறித்தும் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச் சிறந்த அடித்தளமாக அமைகின்றது தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் திரு.சா.காந்தி அவர்கள் எழுதிய 'தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்' என்றப் புத்தகம்.

இப்பொழுது அந்த புத்தகத்தைப் பற்றியும் அது கூறி இருக்கும் தகவல்களைப் பற்றியும் தான் நாம் சற்று பார்த்தாக வேண்டி இருக்கின்றது.

1) தமிழக மின் வாரியம் கடுமையான நஷ்டத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இத்தனைக்கும் 2001 ஆம் ஆண்டு வரையில் ஆண்டிற்கு 300 கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டித் தந்த ஒரு துறை அது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இன்று திடீரென்று மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றது?


2) மத்திய மின்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தின் படி தனியார் மின் விநியோக நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்கின்றன என்றும் அவைகளுக்கே அரசாங்க மின் வாரியங்கள் கடன் பட்டு இருக்கின்றன என்றும் அவற்றை அடைப்பதற்கே அக்கடன் தொகையை மக்களின் தலையில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்பதும் நமக்கு புலனாகின்றது. ஆனால் புலனாகாத விடயங்கள் - என்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை தயாரிக்கின்றன - ஏன் அவற்றிக்கு இவ்வளவு பெரியத் தொகையை அரசாங்க நிறுவனங்கள் கடன் பட்டு இருக்கின்றன - ஏன் தனியாரிடம் இருந்து நாம் மின்சாரம் பெற வேண்டி இருக்கின்றது என்பன போன்றவை ஆகும். இவை ஏன் என்றும் நாம் அறிந்தாக வேண்டி இருக்கின்றது.

3) மத்திய மின்துறை அமைச்சகம் மின்சார கட்டண உயர்வைக் குறித்து வெறும் பரிந்துரையை மட்டுமே தந்துள்ளது. ஆனால் முடிவினை எடுக்கும் உரிமையோ மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம் என்ற ஒன்றிடம் இருக்கின்றது என்பதும் நமக்கு புலனாகின்றது. இங்கே நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அது என்ன 'மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம்' என்பதும் ஏன் அதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தினை விடகூடுதல் அதிகாரம் இருக்கின்றது என்பதுமே ஆகும்.

சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மேலே உள்ள விடயங்களைப் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால்அவ்வனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள தனியார்மயமாக்கத்தைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் 1991 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசான காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்கின்ற கொள்கையைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட ஆமாங்க...1991 ஆம் ஆண்டே தான். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே ஆண்டு தான். அமெரிக்காவை எதிர்த்த ஒரு தலைவர் (இராசீவ் காந்தி) கொலை செய்யப்பட, அவரது மரணத்தை மையமாக வைத்தே ஆட்சியினைப் பிடித்து அவர் எதிர்த்த அமெரிக்காவிற்கு நாட்டினுள் நுழைய சிவப்பு கம்பளத்தை அத்தலைவரது கட்சியே (காங்கிரஸ்) விரித்த நாடகக் காட்சி அரங்கேறிய வருடமே தான்.

அந்நாடகத்தைப் பற்றி நாம் விரிவாக கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது, இருந்தும் அதற்கு இப்பதிவினில் இடம் இல்லாததால் அதனை வேறொரு பதிவினில் காண்போம். இப்போதைக்கு நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அமெரிக்காவினை எதிர்த்த ஒரு தலைவர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவ்வருடமே அமெரிக்கா அவரது நாட்டினுள் நுழைந்து இருக்கின்றது.

இவ்விரண்டு சம்பவங்களும் தற்செயலாக நிகழ்ந்தவைகளாகக் கூட இருக்கலாம்...ஆனால்

'எங்களுக்கு அடிபணியாத நாட்டின் தலைவர்களை கொலை செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக எங்களுக்கு உதவக் கூடிய பொம்மைத் தலைவர்களை முன்னிறுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பது எங்களது வழிமுறைகளில் ஒன்று. தென் அமெரிக்க நாடுகளான ஈகுவேடார் மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் தலைவர்கள் எங்களை எதிர்த்தப் பொழுது அவர்களை திட்டமிட்டு கொலை செய்தது எங்களின் உளவு அமைப்புத் தான்'

என்று அமெரிக்க நாட்டின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றும் வேலையை செய்துக் கொண்டு வரும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் என்பவர் அவரது நூலில் குறிப்பிடும் பொழுது ராஜீவ் காந்தியின் கொலையையும் அதற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்ததையும் வெறும் தற்செயலான சம்பவங்களாக மட்டுமே நம்மால் காண முடியவில்லை.

சரி இருக்கட்டும் நாம் முன்னர் கண்டதைப் போலவே இது ஒரு பெரிய தலைப்பு ஆகையால் இதனை மற்றுமொரு தனிப் பதிவினில் விரிவாகக் காணலாம். இப்பொழுது மின்சாரத் துறையினைப் பற்றி மட்டுமே காண முயற்சிக்கலாம். (ஜான் பெர்கின்ஸ் எழுதிய அந்த நூலின் பெயர் -  பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். இதனைப் பற்றிய குறிப்பைக் காண இந்த இணைப்பைப் படிக்கவும்).

எனவே இப்பொழுது இந்தப் பின்னணியிலேயே தான் நாம் உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையினைக் காண வேண்டி இருக்கின்றது.

1991 இல் அரசாங்கம் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக பல்வேறுத் துறைகளையும் தனியார் மயப்படுத்த ஆரம்பிக்கின்றது. பல்வேறு துறைகளில் மின்சாரத் துறையும் அடங்கத் தான் செய்கின்றது. அது வரை முழுக்க முழுக்க மின்சார தயாரிப்பும் விநியோகமும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மின்சாரத் துறையை தனியார் கைவசம் ஒப்படைக்கும் நிலையையே அரசுகள் கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் கைகள் புதிய சட்டங்கள் வாயிலாக கட்டப்படுகின்றன. இதனை தெளிவாக இந்நூலின் ஆசிரியர் தக்க சான்றுகள் மூலமாக இப்புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைக் காணவும்.
  
 இதில் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2008-09 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சார வாரியம் உற்பத்தி செய்த/ தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்துக் கொண்ட மின்சார அளவுகள் குறிக்கப்பட்டு உள்ளன.

கவனித்தோம் என்றால் கிட்டத்தட்ட அந்த 15 வருடங்கள் காலங்களில் தமிழக அரசின் மின் உற்பத்தி 8650 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 7801 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதாவது அரசாங்க நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு கடந்த 15 வருடங்களில் 16451 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளன. ஆனால் தனியாரின் உற்பத்தியோ கடந்த 15 வருடங்களில் 21,024 மில்லியன் யூனிட்டுகளாக கூடி உள்ளது.

அதாவது மக்களின் மின்சார தேவை கடந்த 15 வருடங்களில் பெருமளவு கூடி உள்ளது. ஆனால் அதனைத் தீர்க்க வேண்டிய கடமையை உடைய அரசோ மின் உற்பத்தியை தனியார் வசத்திடம் விடும் வேலையை செம்மையாக செய்து வந்துக் கொண்டு இருக்கின்றது. அதாவது மக்களின் அடிப்படைத் தேவையான ஒன்று மெதுவாக அரசின் கைகளில் இருந்து விலகி தனியாரின் வசம் சென்றுக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் அமெரிக்கா விரும்புகின்றது. இதைத் தான் இந்திய நாட்டு பெரு முதலாளிகள் விரும்புகின்றனர். மின்சாரம் என்பது மக்களின் அடிப்படைத் தேவை அதனை நமது கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நிச்சயம் இலாபம் பார்க்கலாம்...சாதாரண இலாபம் அல்ல...கொள்ளை இலாபம். அவர்களின் அந்த இலாபத்திற்காகத்தான் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் இடையறாது முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை நாம் அறிந்துக் கொள்ள 1991 ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் கொள்கையை பார்த்தாலே தெரியும்

1) 1991 ஆம் ஆண்டில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களான மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் போன்றவை வளரும் மின் தேவைகளுக்கு ஏற்ப புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவக்குவதற்கு மத்திய அரசு அனுமதியினை மறுத்து இருக்கின்றது.

2) 1992-97  காலகட்டத்தில் வந்த எட்டாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் புதிய மின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டு வந்த மூலதன ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது மின் தேவைகள் நிச்சயம் அதிகரிக்கும் என்று நன்றாக அறிந்த காலக்கட்டத்தில் அரசு மின்சாரம் தொடர்பான வேலைகளை நிறுத்தி அதனை தனியார்களிடம் தந்து உள்ளது.

3) தனியார்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கும் பல சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் மக்களுக்கான சேவையாகப் பார்க்கப்பட்ட மின்சாரம், தனியார்மயமாக்கம் என்ற ஒன்றினால் வணிகப் பொருளாக மாறி விட்டது. இதனை மாற்றியது 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய மின்சாரத் திட்டமே ஆகும். நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின் மூலமாக மின்சாரம் என்பதன் பின்னணியில் மாபெரும் அரசியல் நிகழப்ப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. இதனைப் பற்றி முழுதாக அறிந்துக் கொள்ள பல அறிய விடயங்களை தன்னுளே சான்றுகளுடன் கொண்டு எளிதாக விளக்கிப் கொண்டு இருக்கின்றது இப்புத்தகம்.

இப்புத்தகத்தை நிச்சயம் படிக்கவும்...படித்து விவாதிக்கவும்...விவாதித்து கருத்தினை மக்களிடையே பரப்பவும் வேண்டிய கடமை இன்று நம்மிடையே இருக்கின்றது. காரணம் அவ்வாறு செய்தால் தான்,

1) ஏன் இன்று மின்வெட்டினை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும்

2) ஏன் மின்சார கட்டணம் உயர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதையும்

3) நம்மை சுற்றி ஒரு சூழ்ச்சி அரசியல் எவ்வாறு உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதையும்

4) ஏன் மாநில மின்சார வாரியம் தயாரிக்கும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை 1.83 ரூபாய் ஆக இருக்கும் பொழுது அதிகக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டும் என்பதையும்

5) மின்சாரக் கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையோ அல்லது மின்சாரத்தினை யாரிடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையோ மாநில அரசிடம் இருந்து பறிபோய் விட்டது என்பதையும்

6) மின்சாரத்தை தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றும் அதற்கு பின்னர் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்காத வீடியோகான் நிறுவனத்தின் உரிமத்தை தமிழக மின்வாரியம் இரத்து செய்ததை எதிர்த்து வாதாடி அந்நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வாங்கி ஏன் திருவாளர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்கள் தந்தார்கள் என்பதையும்

7) இன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக போராடும் அரவிந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்தையும் மக்களின் உரிமைகளை எந்த அளவு அனைத்துக் கட்சிகளும் காற்றில் பறக்க விட்டு உள்ளன என்பதையும்

8) நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு கிடைக்காத மின்சாரம், அந்நிய நாட்டு மளிகைக் கடைகளுக்காக கணினியின் முன்னர் அமர்ந்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு தடை இல்லாமல் எதனால் கிடைக்கின்றது என்பதையும்

9) இன்று பரவலாக அறியப்பெறும் 2ஜி அலைக்கற்றை ஊழல், பிரதமரின் நிலக்கரி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளின் விளைவுகள் தான் என்பதையும்

நாம் அறிந்துக் கொள்ள முடியும். அவ்வாறு அறிந்துக் கொண்டால் தான் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு மாய சதி வலையில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.

மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக நமது நாட்டினில் நமது வாழ்வினில் உருவாகி இருக்கும் இக்காலத்தில் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலை அறிந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைவது என்பது இன்று இன்று நம் முன்னர் இருக்கும் முக்கியமான ஒரு விடயமாகும்.

இதற்கு நமக்கு மாபெரும் துணையாக இந்த அருமையான புத்தகத்தை தந்து இருக்கும் ஐயா சா.காந்தி அவர்களுக்கு நமது நன்றிகள்.

இந்த புத்தகத்தை குறிப்பாக இன்று மின்சாரத் துறையில் பொறியியல் படிப்பினை மேற்கொண்டு இருக்கும் மாணவர்கள் கற்கவும் விவாதிக்கவும் சிந்திக்கவும் செய்வது நிச்சயம் அருமையான பலன்களைத் தரும்.

புத்தகம் வெளியீடு : முகம் மற்றும் மே 17 இயக்கம்
விலை : 110 ரூபாய்

பி.கு:

1) உலகமயமாக்கல் என்பதில் ஒளிந்து உள்ள அரசியலைப் பற்றி அறிந்துக் கொள்ள இப்பதிவையும் படிக்கவும்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

2) வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

தமிழக கிரிக்கெட்டில் நிலவும் சாதி வெறி

அலுவலகத்தில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றி பேச்சு எழுந்த பொழுது 'தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடச் சென்ற வீரர்களுள் பெரும்பான்மையானோர் (ஏன் அனைவருமே) பிராமணர்கள்' என்று கருத்து எழுந்த பொழுது ஏறக்குறைய அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகத் தான் செய்தனர். விளையாட்டினை வெறும் விளையாட்டாக மட்டுமே கண்டு வந்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு இத்தகவல் முற்றிலுமாக புதிதாக ஒன்றாக இருந்தது.

7 கோடி மக்கள் தொகை இருக்கும் ஒரு மாநிலத்தில்வெறும் 3 சதவீதம் இருக்கும் ஒரு பிரிவினரில் இருந்து மட்டுமே அனைத்து வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது தற்செயலான ஒன்றா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டை உயிர் மூச்சாகவே கொண்டு தமிழகத்தின் தெருவெங்கும் இளைய தலைமுறையினர் அவ்விளையாட்டினை ஆடிக் கொண்டு வரும் பொழுது வெறும் ஒரு பிரிவு மக்கள் மட்டுமே திறமை பெற்று இருக்கின்றனர் என்பது ஏற்க கூடிய ஒன்றா என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இதோ தமிழகத்தில் இருந்து இந்திய அணி (மன்னிக்கவும் பிசிசிஐ-யின் அணிக்கு) விளையாடச் சென்ற வீரர்களின் பட்டியல் (ஏதோ நான் அறிந்த வரையில்)

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - பிராமணர்
ரவீந்திர அஷ்வின் - பிராமணர்
சடகோபன் ரமேஷ் - பிராமணர்
W.V. இராமன் - பிராமணர்
L. சிவராம கிருஷ்ணன் - பிராமணர்
ஹேமங் பதானி - பிராமணர்
லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர்
S.பத்ரிநாத் - பிராமணர்
முரளி கார்த்திக் - பிராமணர்
தினேஷ் கார்த்திக் - பிராமணர்
அபினவ் முகுந்த் - பிராமணர்
முரளி விஜய் - பிராமணர்
ராபின் சிங் - சரியாகத் தெரியவில்லை
திரு குமரன் - பிராமணர் (சந்தேகம் இருக்கின்றது)

வியப்பாகத் தான் இருக்கின்றது. பிராமணர்களே தேர்வு செய்யப் பட்டு இருக்கின்றனர் என்ற விடயத்தை விட அதிகமாக வியப்பூட்டும் விடயம் என்னவென்றால் இச்செய்தி இது வரை வெளியே பேசப்படாமலே இருப்பது தான்.

மாநிலமே விளையாடும் ஒரு விளையாட்டில் நிலவும் சாதிவெறியினை மக்களுக்கு புலப்படுத்தாமல் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் என்ன தான் செய்கின்றனவோ?

பி.கு:

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி ஏற்கனவே விரிவான பதிவினை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.


வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

புதன், 15 ஜனவரி, 2014

கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

பொதுவாக இன்றைக்கு தோமாவின் இந்திய வருகை என்பது சீரியக் கிருத்துவர்களுடன் இணைத்தே பேசப்படுகின்றது. அது உண்மையா இல்லையா என்பதை நான் பின்னர் விரிவாக பதிவுகளாக காணலாம்....இப்போதைக்கு சீரியக் கிருத்துவத்திற்கும் தோமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை விளக்கிக் கூறும் சீரிய மலபார் கத்தோலிக்கச் திருச்சபையிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்து விடலாம்.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட மூல காரணம் யார்?


தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!

தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் இயேசு கிருத்துவிற்கு எதிரானதாக கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதா?




இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மனிதனும் மாயையும் சுய சிந்தனையும் - 2!!!

சென்ற பதிவினில் மனிதன் என்பவன் இயந்திரமாகப் படைக்கப்படவில்லை என்றும் அவனது முடிவுகளை அவனே எடுக்கும் வல்லமையை அவன் பெற்று உள்ளான் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.


இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சில கேள்விகளையும் காண வேண்டி இருக்கின்றது.

1) இறைவன் மனிதனைப் படைத்தான் சரி. இறைவன் உங்களின் கூற்றின் படி நன்மையே வடிவானவன். அவ்வாறு இருக்கையில் அவன் படைத்த மனிதனும் நல்லவனாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் தீமை எவ்வாறு வந்தது? தீமையைப் படைத்தது யார்?

இறைவனைப் பற்றிப் பேசுகையில் நிச்சயமாய் இக்கேள்வியினை நாம் கடந்து வராது இருக்க முடியாது. எனவே இக்கேள்விக்கு நாம் விடையினைக் காணுவது இங்கே முக்கியமானதொன்றாகின்றது. அதற்கு நாம் இருளையும் வெளிச்சத்தையும் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு இடத்தில் இருள் இருக்கின்றது. அங்கே நாம் ஒளியைக் கொண்டு வந்தால் இருள் மறைந்து விடுகின்றது. அதாவது ஒளி இருந்தால் அங்கே இருள் இருப்பதில்லை. ஒளி இல்லாத இடத்தில் தான் இருள் இருக்கின்றது. அதாவது ஒளி இல்லாத நிலையே இருள் ஆகும்.

எனவே ஒளி-இருள் ஆகியவை இரு வெவ்வேறு பொருட்கள் அல்ல. ஒளி இல்லாத இடத்தில் இருள் இருக்கும். அவ்வளவே.

அதனைப் போன்று தான் நன்மையையும் தீமையும்..எங்கே நன்மை இல்லையோ அங்கே தீமை இருக்கும். நன்மை இல்லாத நிலை அனைத்தும் தீமை ஆகும்.

சமயங்கள் இறைவனை அன்பின் வடிவமாகவே கூறுகின்றன.

சைவம் 'அன்பே சிவம்' என்கின்றது.

கிருத்துவம் 

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

என்றுக் கூறுகின்றது.

எனவே இறைவன் அன்பின் வடிவாக இருக்கின்றார் என்றே நாம் அறியப் பெறுகின்றோம். இந்நிலையில் அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் இருக்கின்றார். அன்பு எங்கே இல்லையோ அங்கே தீமை இருக்கின்றது. அதாவது தீமை என்று ஒன்று தனியாகக் கிடையாது...அன்பு இல்லாத நிலையே தீமையாகும்.

நாம் சென்றப் பதிவினில் கண்டவாறு மனிதனால் இவ்விரண்டு நிலைகளும் எந்த நிலையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்ய இயலும். அன்பின் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும்...அன்பிலாத சுயநலப் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும். அவனுடைய அத்தேர்வின் படியே உலகம் அமைகின்றது. அவன் எதனைத் தேர்வு செய்து இருக்கின்றான் என்பதனை இன்றைக்கு உலகம் இருக்கும் நிலையை வைத்தே அறிந்துக் கொள்ளலாம்.

சரி அதனைப் பற்றி மற்றக் கேள்விகளில் விரிவாகக் காணலாம் இப்போதைக்கு தீமையைப்/சாத்தானைப் படைத்தது யார் என்றக் கேள்விக்கு விடை, தீமை/சாத்தான் என்று ஒன்று தனியாகக் கிடையாது...நன்மை/அன்பு/கடவுள்தன்மை இல்லாத நிலையே அது ஆகும். அது ஆணவ நிலை. அன்பு வரும் பொழுது அந்த ஆணவ நிலை ஒடுங்கி விடும்.

2) சரி இறைவன் தீமையைப் படைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்...பின்னர் ஏன் மனிதன் தீய நிலைக்கு சென்றதை இறைவன் கண்டிக்கவில்லை? அவன் தீமை செய்யாது ஏன் தடுக்கவில்லை? எல்லாம் வல்ல இறைவனால் தீமையைத் தடுக்க முடியாதா?

இந்தக் கேள்வியையும் நாம் இறைவனைப் பற்றிப் பேசுகையில் எதிர்கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது இதற்கும் விடையினைக் காண முயற்சிப்போம்.

சமயங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை தந்தை-பிள்ளைஎன்ற நிலையிலேயே கூறுகின்றன. இந்நிலையில் இறைவன் மனிதனுக்கு அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகைப் படைத்து தந்து விட்டான். அந்த உலகத்தின் ஆட்சி மனிதனின் கைகளில் இருக்கின்றது.

அவ்வுலகத்தின் ஆட்சியோடு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் மனிதனுக்கு இறைவன் வழங்கி உள்ளார். காரணம் மனிதனை வெறும் விலங்கினைப் போல் இல்லாது அவரது மகனினைப் போலவே படைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு சுதந்திரமும் இருக்கின்றது அதே நேரம் ஆட்சிப் புரிய ஒரு உலகமும் இருக்கின்றது. ஆனால் இங்கே தான் மனிதன் தவறு செய்ததாக சமயங்கள் கூறுகின்றன.

முதல் மனிதன் 'இறைவனின் சொல்லினைக் கேட்காமல் அவரது கூற்றினை மீறியதால் இறைவனின் தொடர்பை இழந்து தீமையுள் மூழ்கினான்' என்று கிருத்துவம் கூறுகின்றது.

அதைப் போன்றே சைவ சித்தாந்தமும்

"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41"

""அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்" - சிவஞானபோதம் 1

என்று முதல் மனிதன் பாவத்தில் வீழ்ந்த நிலையைக் கூறுகின்றது. அதாவது சுதந்திரமாக முடிவினை எடுக்கும் வல்லமையை பெற்று இருந்த மனிதன் அன்பிற்கு மாறான முடிவினை எடுத்ததால் தீமையில் விழுந்து நன்மையை விட்டு விலகி விட்டான் என்பதே அவை கூறும் கருத்தாகும்.

இதனைப் பற்றி இன்னும் விரிவாக பார்க்க நாம் விவிலியத்தின் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. விவிலியத்தின் படி இறைவன் உலகைப் படைத்து விட்டு அதன் ஆட்சியை மனிதனிடத்து கொடுத்தார் என்று இருக்கின்றது.

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." - ஆதியாகமம் 1:27-28

ஆனால் இயேசு வருகையிலோ நிலைமை வேறாக இருக்கின்றது. இயேசுவிடம் சாத்தான், அவர் சாத்தானை வணங்கினால் உலகின் அனைத்து அரசுகளையும் அவருக்குத் தருவேன் என்றுக் கூறுவதனைப் போல் வருகின்றது.

"மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்." - மத்தேயு 4:8-9

இங்கே தான் ஒரு கேள்வி...மனிதனுக்காக இறைவன் படைத்த உலகின் ஆட்சியை எப்படித் தீயது மற்றொருவருக்கு வழங்க முடியும்? ஒரு பொருள் என்னுடைய பொருளாக இருந்தால் தானே என்னால் அதனை மற்றவருக்கு வழங்க முடியும்?

எனவே உலகின் ஆட்சியை சாத்தான் வழங்க வல்லதாக இருக்கின்றது என்றால் உலகின் ஆட்சி யாரிடம் இருக்கின்றது என்றுப் பொருள்? தீமையிடம் அல்லவா இருக்கின்றது என்றுப் பொருள்!!! அது தான் நிலவரம்.

அன்பின் வழி ஆட்சி செய்ய வேண்டிய மனிதன் தீமைக்கு வீழ்ந்ததால் அவனது ஆட்சி இன்று தீமையின் வசம் இருக்கின்றது. மனிதன் அவனது ஆட்சியை தீமையிடம் இழந்து விட்டு நிற்கின்றான். இதனை நாம் இன்றைய உலகினைக் கண்டாலே அறிந்துக் கொள்ளலாம்.

இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்றவர்களும் பேராசை பொறாமை ஆகியத் தீய குணங்களை அடிப்படையாகக் கொண்ட மனிதர்களும் அரசுகளும் தான் இன்று ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அன்பிற்கு மாற்றாக பயமும் சுயநலமும் இன்று உலகத்தின் அடிப்படையாக இருக்கின்றன. தீமை உலகை ஆண்டுக் கொண்டு இருக்கின்றது.

இது தான் நிலவரம்.

மனிதன் அவனது ஆட்சியினை இழந்து விட்டான். அதனை மீட்டு எடுக்கத் தான் அவன் முயன்றுக் கொண்டு இருக்கின்றான். நிற்க.

இதுவரை மனிதன் அவனது ஆட்சியை இழந்தான் என்றும் இன்று தீமை தான் ஆண்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் கண்டோம்...இங்கே சில கேள்விகள் எழலாம், இவ்வளவு நடக்கும் பொழுது எல்லாம் உங்க எல்லாம் வல்ல இறைவன் எங்கே சென்றார் என்று....ஏன் இதனை எல்லாம் அவர் அனுமதித்தார் என்று?

அக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நாம் ஒரு சூழலைக் காண வேண்டி இருக்கின்றது.

நமக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல பெற்றோராக நாம் அவனுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவனிற்கு கொடுத்து வைப்போம். அது தான் கடமை. மேலும் ஒரு பெற்றோராக நமது பிள்ளை நல்லதே செய்வான் என்ற நம்பிக்கையுடனே இருப்போம். அவன் தவறு செய்தால் "தம்பி...நீ செய்வது தவறு" என்று அன்பின் அடிப்படையிலேயே கூறுவோமே தவிர அவனை வெறுக்க மாட்டோம். வேறு வழி இல்லை அவன் நமது பிள்ளை. அவனை நல்வழிக்கு கொண்டு வர நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஆனால் நம்முடைய அன்பினை உணர்ந்துக் கொண்டு நல்வழிக்கு வருவதும் வராததும் முற்றிலும் அவனைப் பொறுத்தது. அந்த சுதந்திரம் நாம் அவனுக்கு வழங்கியது. எனவே அவனாக உணர்ந்து திருந்தினால் ஒழிய அம்மாற்றம் நிரந்திரமான உண்மையான மாற்றமாக இருக்காது. நல்ல குணங்கள் அவனுக்கு உள்ளே இருக்கின்றன...நிச்சயம் ஒரு நாள் அவன் திருந்தி வருவான் என்ற நம்பிக்கையுடனே தான் நாம் காத்து இருப்போம்.

அதே நிலைமை தான் இறைவனுக்கும். இறைவனால் நிச்சயம் மாற்ற முடியும்...ஆனால் அதற்காக சுய சிந்தனையையும் சுதந்திரத்தையும் மனிதர்களுக்கு அவன் வழங்கவில்லை...முடிவெடுக்கும் உரிமை நமக்கு இருக்கின்றது. அதனை வைத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்றே அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்...வழி காட்டியவாறே. அவன் காட்டும் வழியினில் போவதும் போகாததும் நமது கைகளிலேயே இருக்கின்றன.

" இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்." -மத்தேயு7:13

எனவே உலகை மாற்ற வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டியக் கேள்வி இறைவன் என்ன செய்தான்/என்ன செய்வான் என்பதல்ல...மாறாக சகோதரர்களாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே ஆகும். காரணம் வழிகாட்ட அவன் தயாராக இருக்கின்றான் ஆனால் அன்பின் வழியாக பயணிக்க நாம் தயாராக இருக்கின்றோமா?

சரி இருக்கட்டும்...இன்னும் பல விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

மனிதனும் மாயையும் சுய சிந்தனையும் - 1!!!

கடந்தப் பதிவுகளில் உயிரும் ஆன்மாவும் வேறானவை என்றும் ஆன்மா மாயையால் சூழப்பட்டு இருப்பதினால் இறைவன் உணர்த்தாமல் அதனால் இறைவனை உணர முடியாது என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இங்கே தான் நண்பர்கள் சிலர் சில கேள்விகளை முன் வைக்கின்றனர்.

இறைவன் தான் மனிதனை மாயையினுள் வைத்து இருக்கின்றான் என்றால் மனிதன் தவறு புரிவதற்கு இறைவன் தான் காரணமா? இறைவன் உணர்த்தினால் மனிதன் உணர்ந்துக் கொள்வான் என்றால் ஏன் அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்தி உலகை இறைவன் நல்வழிப்படுத்தாது இருக்கின்றான்? இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மனிதனைப் பற்றி இங்கே அறிய வேண்டி இருக்கின்றது.

மனிதன் இந்த உலகம் முழுவதையும் அறிந்துக் கொள்ளவும் அதனைக் கட்டுப்படுத்தி ஆண்டுக் கொள்ளவும் ஆற்றல் பெற்று இருக்கின்றான். மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக மாறாமலே அதனதன் இயல்புகளுடனே வாழ்ந்துக் கொண்டு வர மனிதன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஒருவனால் தனக்காக ஆயிரம் பேரை கொலை செய்யவும் முடிகின்றது அதே நேரம் ஒருவனால் பிறருக்காக தன் உயிரைத் தியாகம் செய்யவும் முடிகின்றது. அதனால் தான் மனிதனை யாராலும் வரையறை செய்ய முடிவதில்லை. ஒரு மனிதன் அவனது சிந்தனைகளின் படியே அமைகின்றான். நிற்க.

இப்பொழுது இந்த எண்ணங்களைப் பற்றியும் சுய சிந்தனையை (ஆங்கிலத்தில் free will) பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதனை இயந்திரமாகவோ அல்லது மற்ற உயிரினங்களைப் போலவோ படைக்கவில்லை...மாறாக அவனை சுதந்திரமான ஒருவனாய் படைத்து அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகையும் தந்துள்ளார். அதாவது மனிதனின் முடிவுகள் மனிதனின் கைகளிலேயே இருக்கின்றன. அவனால் நல்லது செய்யவும் முடியும் தீமை செய்யவும் முடியும். எவற்றை தான் செய்ய வேண்டும் என்கின்ற முடிவினை எடுக்கும் உரிமை மனிதனிடத்தே தரப்பட்டு உள்ளது.

உதாரணத்திற்கு, விவிலியக் கதைகளில் மனிதனைப் படைத்த இறைவன் அவனை ஒரு பழத்தினை உண்ணாதே என்று கூறினார் என்றக் கதை வருகின்றது. ஆனால் அக்கதையின் படி மனிதன் அப்பழத்தை உண்ணுகின்றான். அதாவது இறைவன் கூறியதை மீறுகின்றான். அதற்குரிய உரிமையை அதாவது சுய விருப்பத்தை அவன் பெற்று இருக்கின்றான். இறைவன் அவனுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கின்றார்.

மனிதனை படைத்த இறைவன் அவன் முழு சுதந்திரத்தோடு இருக்கும் வண்ணமே படைத்து இருக்கின்றார். மனிதனின் செயல்களை மனிதனே முடிவு செய்யும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரச்சனை இங்கே தான் ஆரம்பிக்கின்றது. இதனை ஒரு சிறு கதை மூலம் காணலாம்...

ஒரு தந்தை ஒரு மாபெரும் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் பல்வேறு கனி தரும் மரங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகளை அமைத்து அதனை

"மக்களே...இங்கே உங்கள் அனைவருக்கும் சரி...உங்களுக்கு பின்னர் வர போகும் அனைவருக்கும் சரி போதுமானவைகள் தாராளமாக இருக்கின்றன...அனைவரும் அங்கே சென்று நன்றாக வாழுங்கள்" என்றே தனது மக்களுக்கு தருகின்றார்.

ஆனால் அத்தோட்டத்திற்கு சென்ற மக்களோ, ஒவ்வொருவருடன் பொறாமையும் பேராசையும் கொண்டு சண்டை இட ஆரம்பித்தனர். இங்கே உள்ளது அனைவருக்கும் பத்தாது என்ற எண்ணம் அவர்களின் மனதினில் வளர ஆரம்பித்தது. அதனால் ஒவ்வொருவரை கொலை செய்துக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் அத்தோட்டத்தையே நாசமாக்கத் துவங்கினர்.

அவர்களின் இந்தச் செயல்களால் அவர்களுக்கும் சரி அவர்களுக்கு பின் வரக் கூடிய மக்கள் அனைவருக்கும் போதுமானவைகளை தர வல்லமைப் பெற்று இருந்த அந்த தோட்டம் நிலை குலைய ஆரம்பித்தது. பொருட்கள் வீணாகி கொண்டு இருந்தன. மக்கள் அச்சத்துடனும் பேராசையுடனும் நிம்மதி இன்றியே வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்.

அதனைக் கண்ட தந்தையோ "ஐயகோ...மக்கள் தவறு இழைக்கின்றனரே" என்றே மனம் வருந்தி"மக்களே இங்கே உங்கள் தேவைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றது...அன்புடன் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு வாழுங்கள்...பேராசை பொறாமை ஆகியவற்றைக் களைந்து ஒழியுங்கள்...அவைகள் இங்கே தேவை இல்லை" என்றே கூறியும் அவற்றைப் பெரிதாய் கேட்பார் யாரும் இல்லை.

ஒரு சில மக்களுக்கு தந்தையின் கூற்று புரிய ஆரம்பிக்க அவர்கள் மற்றவர்களுக்கு கூற ஆரம்பிக்கின்றனர். "அன்பு தான் தேவை சகோதரர்களே...இங்கே நமக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன...நாம் அச்சம் கொள்ளத் தேவை இல்லை...போதும் என்ற மனதுடன் நன்றாக வாழ்வோம்...நாம் அனைவரும் சகோதரர்கள்" என்றே அவர்கள் கூற ஆரம்பிக்கின்றனர். இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள் அவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையினைப் புரிந்துக் கொள்ளாது தொடர்ந்து பேராசையுடனும் பயத்துடனுமே வாழத் தலைப்படுகின்றனர்.

அனைவரின் தேவைக்கும் அதிகமான பொருட்கள் இங்கே இருக்கின்றன என்ற உண்மையை அவர்களது சுயநலமும் பயமும் மறைத்து விடுகின்றது. அதனாலே அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களும் வேரூன்றி நிற்கின்றது. அதனாலே உலகம் அழிவுப் பாதையில் செல்லத் துவங்குகின்றது.

அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டு அன்பால் இணைந்து வாழ முடியும் என்ற உண்மை அனைவரின் முன்னேயும் சரி அனைவரின் மனதிற்குள்ளேயும் சரி உலகில் நிற்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக் கொண்டு அன்பால் உலகை இயக்குவதும் அல்லது ஏற்றுக் கொள்ளாது பயத்தாலும் பேராசையாலும் உலகை அழிப்பது என்ற முடிவு மனிதனின் சுய சிந்தனைக்கே விடப்பட்டு இருக்கின்றது.

சரியானதை தேர்ந்தெடுத்து செய்யும் வல்லமையும் அவனுக்குள் இருக்கின்றது. தவறானதை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொள்ளும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது. இந்த முடிவுகள் முழுக்க முழுக்க மனிதனின் கைகளிலேயே கொடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.

மனிதனுள் நல்லதும் இருக்கின்றது...தீமையும் இருக்கின்றது...அவன் அதனுள் எதனைத் தேர்ந்து எடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே உலகம் அமைகின்றது. நிற்க.

சரி...ஒரு சிறு கதையைப் பார்த்தாயிற்று. ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இங்கே உதவுவதில்லை. ஏனெனில் பல்வேறுக் கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் இங்கே உலவிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாம் வெறும் கதைகளை மட்டுமே கூறுவது பெரிய நன்மைகளுக்கு வழி வகுக்காது. இந்நிலையில் தான் நாம் நமது சமயங்களையும் அவைகள் கூறும் கருத்துக்களையும் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவைகளைக் காணாது பல்வேறுக் கேள்விகளுக்கு நம்மால் விடைகளைக் காண முடியாது.

காண்போம்...!!!

பி.கு:

இத்தலைப்பிற்கு தொடர்புடைய இடுகைகள்...

புதன், 18 டிசம்பர், 2013

திருக்குறளும் எண் ஏழும்…!!!

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர். அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7? காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும். அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…!!!

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்.

தொடர்புடைய பதிவுகள்:

தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!!
திருக்குறள் என்ற உலகப் பொதுமறை - ஐந்தவித்தான்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...