ஒரு சராசரியின் வாழ்க்கை மிகவும் எளிதானது தான்.

அணுமின் நிலையங்கள் குறித்தோ அல்லது அதனை எதிர்த்துப் போராடும் மக்களைக் குறித்தோ அல்லது நாட்டில் நிலவும் மின்வெட்டினைக் குறித்தோ பெரிதும் மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய தேவைகள் ஒரு சராசரி வாழ்க்கையில் பெரும்பாலும் இருப்பதில்லை.

"மின்சாரம் இல்லையா...சரி பிரச்சனை இல்லை பாழாய்ப் போன நாட்டினை சிறிது திட்டி விட்டு மின்சாரம் இல்லாது எவ்வாறு வேலையைப் பார்ப்பது என்பதனை யோசிக்கலாம்...அப்படியே மின் வாரியத்திற்கு ஒரு அழைப்பினை விடுத்து 'அண்ணே..இங்க மின்சாரம் இல்ல...எப்பனே விடுவீங்க' என்று கேட்டுக் கொள்ளலாம்...கூடவே மின்சாரம் இல்லாததற்கு இவர்கள் தான் காரணம் என்று ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் சில மனிதர்களை நோக்கி கை காட்டினால் அவர்களையும் கடிந்துக் கொள்ளலாம்."

ஒரு சராசரியின் பணி பொதுவாக அத்துடன் முற்றுப் பெற்று விடுகின்றது. மின்சாரம் ஏன் இல்லை? எதனால் மின் வெட்டு நிலவுகின்றது...அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்ட மின்சாரத்தின் பின்னால் உள்ள அரசியல் இதனைக் குறித்து சிந்திக்கவோ அல்லது தகவல்களை அறிந்துக் கொள்ளவோ பெரும்பாலும் நமக்கு தேவையோ அல்லது நேரமோ இருப்பதில்லை. அதனை விட முக்கியமான பல விடயங்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் இருக்கின்றன. பிரச்சனை அங்கே தான் இருக்கின்றது.

அக்கேள்விகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று நம் நாட்டு மின்சார வாரியம் கிட்டத்தட்ட 1,16,089 கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றது. அதுவும் குறிப்பாக தமிழக மின்சார வாரியம் 53,298 கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் நம் நாட்டின் அரசு அப்பெரும் கடன் தொகையை நம் மீது (நாட்டு மக்களின்) தலையில் வைக்க முடிவு செய்து இருக்கும் நிலையில்

 "2011-2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் 1,16,089 கோடி நஷ்டத்தை ஈட்டும்; அதனால், மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்துக் கொண்ட கொள் முதல் ஒப்பந்தங்களின் படி பணத்தை உடனடியாக தருவதற்கு வழி இல்லாது போகும். எனவே 1,16,089 கோடி ரூபாயையும் மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களுக்கும் வழங்க வேண்டும்" என்று மத்திய மின்துறை அமைச்சகம் இல் மின்சார மேல்முறையீட்டுத் தீர்பாயத்திற்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டு உள்ளது. அதற்கு மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயமும் அனுமதி தந்து உள்ளது (OP1 of 2011 of APTEL (Appellate Tribunal for electricity) dated 11.11.2011). அதன்படி ஆண்டுதோறும் ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் மின் கட்டண உயர்வை மக்கள் சந்தித்தாக வேண்டிய ஒரு நிலை உருவாகி உள்ளது".""
நாம் மின்சாரத்தினைக் குறித்தும் அதனைச் சூழ்ந்து இருக்கும் அரசியலைக் குறித்தும் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு ஒரு மிகச் சிறந்த அடித்தளமாக அமைகின்றது தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் திரு.சா.காந்தி அவர்கள் எழுதிய 'தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்' என்றப் புத்தகம்.

இப்பொழுது அந்த புத்தகத்தைப் பற்றியும் அது கூறி இருக்கும் தகவல்களைப் பற்றியும் தான் நாம் சற்று பார்த்தாக வேண்டி இருக்கின்றது.

1) தமிழக மின் வாரியம் கடுமையான நஷ்டத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இத்தனைக்கும் 2001 ஆம் ஆண்டு வரையில் ஆண்டிற்கு 300 கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டித் தந்த ஒரு துறை அது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இன்று திடீரென்று மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றது?


2) மத்திய மின்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தின் படி தனியார் மின் விநியோக நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்கின்றன என்றும் அவைகளுக்கே அரசாங்க மின் வாரியங்கள் கடன் பட்டு இருக்கின்றன என்றும் அவற்றை அடைப்பதற்கே அக்கடன் தொகையை மக்களின் தலையில் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்பதும் நமக்கு புலனாகின்றது. ஆனால் புலனாகாத விடயங்கள் - என்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை தயாரிக்கின்றன - ஏன் அவற்றிக்கு இவ்வளவு பெரியத் தொகையை அரசாங்க நிறுவனங்கள் கடன் பட்டு இருக்கின்றன - ஏன் தனியாரிடம் இருந்து நாம் மின்சாரம் பெற வேண்டி இருக்கின்றது என்பன போன்றவை ஆகும். இவை ஏன் என்றும் நாம் அறிந்தாக வேண்டி இருக்கின்றது.

3) மத்திய மின்துறை அமைச்சகம் மின்சார கட்டண உயர்வைக் குறித்து வெறும் பரிந்துரையை மட்டுமே தந்துள்ளது. ஆனால் முடிவினை எடுக்கும் உரிமையோ மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம் என்ற ஒன்றிடம் இருக்கின்றது என்பதும் நமக்கு புலனாகின்றது. இங்கே நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அது என்ன 'மின்சார மேல் முறையீட்டுத் தீர்பாயம்' என்பதும் ஏன் அதற்கு மத்திய மின்துறை அமைச்சகத்தினை விடகூடுதல் அதிகாரம் இருக்கின்றது என்பதுமே ஆகும்.

சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மேலே உள்ள விடயங்களைப் பற்றி விரிவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால்அவ்வனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ள தனியார்மயமாக்கத்தைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் 1991 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசான காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்கின்ற கொள்கையைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட ஆமாங்க...1991 ஆம் ஆண்டே தான். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே ஆண்டு தான். அமெரிக்காவை எதிர்த்த ஒரு தலைவர் (இராசீவ் காந்தி) கொலை செய்யப்பட, அவரது மரணத்தை மையமாக வைத்தே ஆட்சியினைப் பிடித்து அவர் எதிர்த்த அமெரிக்காவிற்கு நாட்டினுள் நுழைய சிவப்பு கம்பளத்தை அத்தலைவரது கட்சியே (காங்கிரஸ்) விரித்த நாடகக் காட்சி அரங்கேறிய வருடமே தான்.

அந்நாடகத்தைப் பற்றி நாம் விரிவாக கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது, இருந்தும் அதற்கு இப்பதிவினில் இடம் இல்லாததால் அதனை வேறொரு பதிவினில் காண்போம். இப்போதைக்கு நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அமெரிக்காவினை எதிர்த்த ஒரு தலைவர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவ்வருடமே அமெரிக்கா அவரது நாட்டினுள் நுழைந்து இருக்கின்றது.

இவ்விரண்டு சம்பவங்களும் தற்செயலாக நிகழ்ந்தவைகளாகக் கூட இருக்கலாம்...ஆனால்

'எங்களுக்கு அடிபணியாத நாட்டின் தலைவர்களை கொலை செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக எங்களுக்கு உதவக் கூடிய பொம்மைத் தலைவர்களை முன்னிறுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பது எங்களது வழிமுறைகளில் ஒன்று. தென் அமெரிக்க நாடுகளான ஈகுவேடார் மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் தலைவர்கள் எங்களை எதிர்த்தப் பொழுது அவர்களை திட்டமிட்டு கொலை செய்தது எங்களின் உளவு அமைப்புத் தான்'

என்று அமெரிக்க நாட்டின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றும் வேலையை செய்துக் கொண்டு வரும் ஒருவரான ஜான் பெர்கின்ஸ் என்பவர் அவரது நூலில் குறிப்பிடும் பொழுது ராஜீவ் காந்தியின் கொலையையும் அதற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்ததையும் வெறும் தற்செயலான சம்பவங்களாக மட்டுமே நம்மால் காண முடியவில்லை.

சரி இருக்கட்டும் நாம் முன்னர் கண்டதைப் போலவே இது ஒரு பெரிய தலைப்பு ஆகையால் இதனை மற்றுமொரு தனிப் பதிவினில் விரிவாகக் காணலாம். இப்பொழுது மின்சாரத் துறையினைப் பற்றி மட்டுமே காண முயற்சிக்கலாம். (ஜான் பெர்கின்ஸ் எழுதிய அந்த நூலின் பெயர் -  பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம். இதனைப் பற்றிய குறிப்பைக் காண இந்த இணைப்பைப் படிக்கவும்).

எனவே இப்பொழுது இந்தப் பின்னணியிலேயே தான் நாம் உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையினைக் காண வேண்டி இருக்கின்றது.

1991 இல் அரசாங்கம் தனியார்மயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக பல்வேறுத் துறைகளையும் தனியார் மயப்படுத்த ஆரம்பிக்கின்றது. பல்வேறு துறைகளில் மின்சாரத் துறையும் அடங்கத் தான் செய்கின்றது. அது வரை முழுக்க முழுக்க மின்சார தயாரிப்பும் விநியோகமும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மின்சாரத் துறையை தனியார் கைவசம் ஒப்படைக்கும் நிலையையே அரசுகள் கடைப்பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் கைகள் புதிய சட்டங்கள் வாயிலாக கட்டப்படுகின்றன. இதனை தெளிவாக இந்நூலின் ஆசிரியர் தக்க சான்றுகள் மூலமாக இப்புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தினைக் காணவும்.
  
 இதில் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2008-09 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சார வாரியம் உற்பத்தி செய்த/ தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்துக் கொண்ட மின்சார அளவுகள் குறிக்கப்பட்டு உள்ளன.

கவனித்தோம் என்றால் கிட்டத்தட்ட அந்த 15 வருடங்கள் காலங்களில் தமிழக அரசின் மின் உற்பத்தி 8650 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 7801 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளது. அதாவது அரசாங்க நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு கடந்த 15 வருடங்களில் 16451 மில்லியன் யூனிட்கள் மட்டுமே கூடி உள்ளன. ஆனால் தனியாரின் உற்பத்தியோ கடந்த 15 வருடங்களில் 21,024 மில்லியன் யூனிட்டுகளாக கூடி உள்ளது.

அதாவது மக்களின் மின்சார தேவை கடந்த 15 வருடங்களில் பெருமளவு கூடி உள்ளது. ஆனால் அதனைத் தீர்க்க வேண்டிய கடமையை உடைய அரசோ மின் உற்பத்தியை தனியார் வசத்திடம் விடும் வேலையை செம்மையாக செய்து வந்துக் கொண்டு இருக்கின்றது. அதாவது மக்களின் அடிப்படைத் தேவையான ஒன்று மெதுவாக அரசின் கைகளில் இருந்து விலகி தனியாரின் வசம் சென்றுக் கொண்டு இருக்கின்றது.

இதைத் தான் அமெரிக்கா விரும்புகின்றது. இதைத் தான் இந்திய நாட்டு பெரு முதலாளிகள் விரும்புகின்றனர். மின்சாரம் என்பது மக்களின் அடிப்படைத் தேவை அதனை நமது கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நிச்சயம் இலாபம் பார்க்கலாம்...சாதாரண இலாபம் அல்ல...கொள்ளை இலாபம். அவர்களின் அந்த இலாபத்திற்காகத்தான் இந்திய அரசும் அரசியல்வாதிகளும் இடையறாது முயன்றுக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை நாம் அறிந்துக் கொள்ள 1991 ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் கொள்கையை பார்த்தாலே தெரியும்

1) 1991 ஆம் ஆண்டில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களான மாநில மின் வாரியங்கள் மற்றும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் போன்றவை வளரும் மின் தேவைகளுக்கு ஏற்ப புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் துவக்குவதற்கு மத்திய அரசு அனுமதியினை மறுத்து இருக்கின்றது.

2) 1992-97  காலகட்டத்தில் வந்த எட்டாவது ஐந்தாண்டு கால திட்டத்தில் புதிய மின் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டு வந்த மூலதன ஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது மின் தேவைகள் நிச்சயம் அதிகரிக்கும் என்று நன்றாக அறிந்த காலக்கட்டத்தில் அரசு மின்சாரம் தொடர்பான வேலைகளை நிறுத்தி அதனை தனியார்களிடம் தந்து உள்ளது.

3) தனியார்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கும் பல சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் மக்களுக்கான சேவையாகப் பார்க்கப்பட்ட மின்சாரம், தனியார்மயமாக்கம் என்ற ஒன்றினால் வணிகப் பொருளாக மாறி விட்டது. இதனை மாற்றியது 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய மின்சாரத் திட்டமே ஆகும். நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின் மூலமாக மின்சாரம் என்பதன் பின்னணியில் மாபெரும் அரசியல் நிகழப்ப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. இதனைப் பற்றி முழுதாக அறிந்துக் கொள்ள பல அறிய விடயங்களை தன்னுளே சான்றுகளுடன் கொண்டு எளிதாக விளக்கிப் கொண்டு இருக்கின்றது இப்புத்தகம்.

இப்புத்தகத்தை நிச்சயம் படிக்கவும்...படித்து விவாதிக்கவும்...விவாதித்து கருத்தினை மக்களிடையே பரப்பவும் வேண்டிய கடமை இன்று நம்மிடையே இருக்கின்றது. காரணம் அவ்வாறு செய்தால் தான்,

1) ஏன் இன்று மின்வெட்டினை நம் நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும்

2) ஏன் மின்சார கட்டணம் உயர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதையும்

3) நம்மை சுற்றி ஒரு சூழ்ச்சி அரசியல் எவ்வாறு உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதையும்

4) ஏன் மாநில மின்சார வாரியம் தயாரிக்கும் மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை 1.83 ரூபாய் ஆக இருக்கும் பொழுது அதிகக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டும் என்பதையும்

5) மின்சாரக் கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையோ அல்லது மின்சாரத்தினை யாரிடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையோ மாநில அரசிடம் இருந்து பறிபோய் விட்டது என்பதையும்

6) மின்சாரத்தை தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றும் அதற்கு பின்னர் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்காத வீடியோகான் நிறுவனத்தின் உரிமத்தை தமிழக மின்வாரியம் இரத்து செய்ததை எதிர்த்து வாதாடி அந்நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வாங்கி ஏன் திருவாளர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்கள் தந்தார்கள் என்பதையும்

7) இன்று ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக போராடும் அரவிந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்தையும் மக்களின் உரிமைகளை எந்த அளவு அனைத்துக் கட்சிகளும் காற்றில் பறக்க விட்டு உள்ளன என்பதையும்

8) நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு கிடைக்காத மின்சாரம், அந்நிய நாட்டு மளிகைக் கடைகளுக்காக கணினியின் முன்னர் அமர்ந்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு தடை இல்லாமல் எதனால் கிடைக்கின்றது என்பதையும்

9) இன்று பரவலாக அறியப்பெறும் 2ஜி அலைக்கற்றை ஊழல், பிரதமரின் நிலக்கரி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளின் விளைவுகள் தான் என்பதையும்

நாம் அறிந்துக் கொள்ள முடியும். அவ்வாறு அறிந்துக் கொண்டால் தான் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு மாய சதி வலையில் இருந்து நாம் விடுதலை அடைய முடியும்.

மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக நமது நாட்டினில் நமது வாழ்வினில் உருவாகி இருக்கும் இக்காலத்தில் அதனைச் சுற்றி இருக்கும் அரசியலை அறிந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைவது என்பது இன்று இன்று நம் முன்னர் இருக்கும் முக்கியமான ஒரு விடயமாகும்.

இதற்கு நமக்கு மாபெரும் துணையாக இந்த அருமையான புத்தகத்தை தந்து இருக்கும் ஐயா சா.காந்தி அவர்களுக்கு நமது நன்றிகள்.

இந்த புத்தகத்தை குறிப்பாக இன்று மின்சாரத் துறையில் பொறியியல் படிப்பினை மேற்கொண்டு இருக்கும் மாணவர்கள் கற்கவும் விவாதிக்கவும் சிந்திக்கவும் செய்வது நிச்சயம் அருமையான பலன்களைத் தரும்.

புத்தகம் வெளியீடு : முகம் மற்றும் மே 17 இயக்கம்
விலை : 110 ரூபாய்

பி.கு:

1) உலகமயமாக்கல் என்பதில் ஒளிந்து உள்ள அரசியலைப் பற்றி அறிந்துக் கொள்ள இப்பதிவையும் படிக்கவும்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

2) வழக்கம் போல் உங்களின் கருத்துக்களும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

Maayai vilagudhu. Bayam pidikudhu. Namma naata kaapaatha vazhiye illaya. Adutha thalaimuraya adimathanathula vittutu poiduvumonu bayama irukungaya. Idha maatha vazhiye illiya. Enna seiyalaanu sollunga. Naanga irukom kooda.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு