கடந்தப் பதிவுகளில் உயிரும் ஆன்மாவும் வேறானவை என்றும் ஆன்மா மாயையால் சூழப்பட்டு இருப்பதினால் இறைவன் உணர்த்தாமல் அதனால் இறைவனை உணர முடியாது என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இங்கே தான் நண்பர்கள் சிலர் சில கேள்விகளை முன் வைக்கின்றனர்.
இறைவன் தான் மனிதனை மாயையினுள் வைத்து இருக்கின்றான் என்றால் மனிதன் தவறு புரிவதற்கு இறைவன் தான் காரணமா? இறைவன் உணர்த்தினால் மனிதன் உணர்ந்துக் கொள்வான் என்றால் ஏன் அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்தி உலகை இறைவன் நல்வழிப்படுத்தாது இருக்கின்றான்? இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மனிதனைப் பற்றி இங்கே அறிய வேண்டி இருக்கின்றது.
மனிதன் இந்த உலகம் முழுவதையும் அறிந்துக் கொள்ளவும் அதனைக் கட்டுப்படுத்தி ஆண்டுக் கொள்ளவும் ஆற்றல் பெற்று இருக்கின்றான். மற்ற உயிரினங்கள் ஆண்டாண்டுக் காலமாக மாறாமலே அதனதன் இயல்புகளுடனே வாழ்ந்துக் கொண்டு வர மனிதன் மட்டும் மாறிக் கொண்டே இருக்கின்றான். ஒருவனால் தனக்காக ஆயிரம் பேரை கொலை செய்யவும் முடிகின்றது அதே நேரம் ஒருவனால் பிறருக்காக தன் உயிரைத் தியாகம் செய்யவும் முடிகின்றது. அதனால் தான் மனிதனை யாராலும் வரையறை செய்ய முடிவதில்லை. ஒரு மனிதன் அவனது சிந்தனைகளின் படியே அமைகின்றான். நிற்க.
இப்பொழுது இந்த எண்ணங்களைப் பற்றியும் சுய சிந்தனையை (ஆங்கிலத்தில் free will) பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.
இறைவன் மனிதனை இயந்திரமாகவோ அல்லது மற்ற உயிரினங்களைப் போலவோ படைக்கவில்லை...மாறாக அவனை சுதந்திரமான ஒருவனாய் படைத்து அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகையும் தந்துள்ளார். அதாவது மனிதனின் முடிவுகள் மனிதனின் கைகளிலேயே இருக்கின்றன. அவனால் நல்லது செய்யவும் முடியும் தீமை செய்யவும் முடியும். எவற்றை தான் செய்ய வேண்டும் என்கின்ற முடிவினை எடுக்கும் உரிமை மனிதனிடத்தே தரப்பட்டு உள்ளது.
உதாரணத்திற்கு, விவிலியக் கதைகளில் மனிதனைப் படைத்த இறைவன் அவனை ஒரு பழத்தினை உண்ணாதே என்று கூறினார் என்றக் கதை வருகின்றது. ஆனால் அக்கதையின் படி மனிதன் அப்பழத்தை உண்ணுகின்றான். அதாவது இறைவன் கூறியதை மீறுகின்றான். அதற்குரிய உரிமையை அதாவது சுய விருப்பத்தை அவன் பெற்று இருக்கின்றான். இறைவன் அவனுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கின்றார்.
மனிதனை படைத்த இறைவன் அவன் முழு சுதந்திரத்தோடு இருக்கும் வண்ணமே படைத்து இருக்கின்றார். மனிதனின் செயல்களை மனிதனே முடிவு செய்யும் உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரச்சனை இங்கே தான் ஆரம்பிக்கின்றது. இதனை ஒரு சிறு கதை மூலம் காணலாம்...
ஒரு தந்தை ஒரு மாபெரும் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் பல்வேறு கனி தரும் மரங்கள், விவசாய நிலங்கள் போன்றவைகளை அமைத்து அதனை
"மக்களே...இங்கே உங்கள் அனைவருக்கும் சரி...உங்களுக்கு பின்னர் வர போகும் அனைவருக்கும் சரி போதுமானவைகள் தாராளமாக இருக்கின்றன...அனைவரும் அங்கே சென்று நன்றாக வாழுங்கள்" என்றே தனது மக்களுக்கு தருகின்றார்.
ஆனால் அத்தோட்டத்திற்கு சென்ற மக்களோ, ஒவ்வொருவருடன் பொறாமையும் பேராசையும் கொண்டு சண்டை இட ஆரம்பித்தனர். இங்கே உள்ளது அனைவருக்கும் பத்தாது என்ற எண்ணம் அவர்களின் மனதினில் வளர ஆரம்பித்தது. அதனால் ஒவ்வொருவரை கொலை செய்துக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் அத்தோட்டத்தையே நாசமாக்கத் துவங்கினர்.
அவர்களின் இந்தச் செயல்களால் அவர்களுக்கும் சரி அவர்களுக்கு பின் வரக் கூடிய மக்கள் அனைவருக்கும் போதுமானவைகளை தர வல்லமைப் பெற்று இருந்த அந்த தோட்டம் நிலை குலைய ஆரம்பித்தது. பொருட்கள் வீணாகி கொண்டு இருந்தன. மக்கள் அச்சத்துடனும் பேராசையுடனும் நிம்மதி இன்றியே வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்.
அதனைக் கண்ட தந்தையோ "ஐயகோ...மக்கள் தவறு இழைக்கின்றனரே" என்றே மனம் வருந்தி"மக்களே இங்கே உங்கள் தேவைகளுக்கு அதிகமாகவே இருக்கின்றது...அன்புடன் ஒருவருக்கு ஒருவர் நேசம் கொண்டு வாழுங்கள்...பேராசை பொறாமை ஆகியவற்றைக் களைந்து ஒழியுங்கள்...அவைகள் இங்கே தேவை இல்லை" என்றே கூறியும் அவற்றைப் பெரிதாய் கேட்பார் யாரும் இல்லை.
ஒரு சில மக்களுக்கு தந்தையின் கூற்று புரிய ஆரம்பிக்க அவர்கள் மற்றவர்களுக்கு கூற ஆரம்பிக்கின்றனர். "அன்பு தான் தேவை சகோதரர்களே...இங்கே நமக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றன...நாம் அச்சம் கொள்ளத் தேவை இல்லை...போதும் என்ற மனதுடன் நன்றாக வாழ்வோம்...நாம் அனைவரும் சகோதரர்கள்" என்றே அவர்கள் கூற ஆரம்பிக்கின்றனர். இருந்தாலும் பெருன்பான்மையான மக்கள் அவர்களின் கூற்றுகளில் உள்ள உண்மையினைப் புரிந்துக் கொள்ளாது தொடர்ந்து பேராசையுடனும் பயத்துடனுமே வாழத் தலைப்படுகின்றனர்.
அனைவரின் தேவைக்கும் அதிகமான பொருட்கள் இங்கே இருக்கின்றன என்ற உண்மையை அவர்களது சுயநலமும் பயமும் மறைத்து விடுகின்றது. அதனாலே அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணம் அவர்களும் வேரூன்றி நிற்கின்றது. அதனாலே உலகம் அழிவுப் பாதையில் செல்லத் துவங்குகின்றது.
அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பகிர்ந்துக் கொண்டு அன்பால் இணைந்து வாழ முடியும் என்ற உண்மை அனைவரின் முன்னேயும் சரி அனைவரின் மனதிற்குள்ளேயும் சரி உலகில் நிற்கின்றது. ஆனால் அதனை ஏற்றுக் கொண்டு அன்பால் உலகை இயக்குவதும் அல்லது ஏற்றுக் கொள்ளாது பயத்தாலும் பேராசையாலும் உலகை அழிப்பது என்ற முடிவு மனிதனின் சுய சிந்தனைக்கே விடப்பட்டு இருக்கின்றது.
சரியானதை தேர்ந்தெடுத்து செய்யும் வல்லமையும் அவனுக்குள் இருக்கின்றது. தவறானதை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொள்ளும் வல்லமையும் அவனுக்கு இருக்கின்றது. இந்த முடிவுகள் முழுக்க முழுக்க மனிதனின் கைகளிலேயே கொடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும்.
மனிதனுள் நல்லதும் இருக்கின்றது...தீமையும் இருக்கின்றது...அவன் அதனுள் எதனைத் தேர்ந்து எடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே உலகம் அமைகின்றது. நிற்க.
சரி...ஒரு சிறு கதையைப் பார்த்தாயிற்று. ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இங்கே உதவுவதில்லை. ஏனெனில் பல்வேறுக் கருத்துக்கள் பல்வேறு வடிவங்களில் இங்கே உலவிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாம் வெறும் கதைகளை மட்டுமே கூறுவது பெரிய நன்மைகளுக்கு வழி வகுக்காது. இந்நிலையில் தான் நாம் நமது சமயங்களையும் அவைகள் கூறும் கருத்துக்களையும் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் அவைகளைக் காணாது பல்வேறுக் கேள்விகளுக்கு நம்மால் விடைகளைக் காண முடியாது.
காண்போம்...!!!
பி.கு:
இத்தலைப்பிற்கு தொடர்புடைய இடுகைகள்...
3 கருத்துகள்:
ஆழமான அலசல்
தங்கள் பதிவுகளைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
//"மக்களே...இங்கே உங்கள் அனைவருக்கும் சரி...உங்களுக்கு பின்னர் வர போகும் அனைவருக்கும் சரி போதுமானவைகள் தாராளமாக இருக்கின்றன...அனைவரும் அங்கே சென்று நன்றாக வாழுங்கள்" என்றே தனது மக்களுக்கு தருகின்றார்.//
தந்தை தம் மக்களுக்கு கொடுக்கும் தோட்டத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்திருக்கலாமே ஏன் அப்படி செய்யவில்லை?
@ Venkat Raja
சமமாகப் பிரித்துக் கொடுத்து இருப்பதற்கு பதிலாக ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகையே படைத்து இருக்கலாமே...எதற்காக அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்?
சரி...அப்படி இருந்தாலும் பிரச்சனைகள் வருமே...குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கும் அவர் தான் வந்து சரியாக பிரித்து தர வேண்டுமே...இதற்கு அவர் எதற்காக அனைவரையும் படைக்க வேண்டும்.
அன்புடன் இருந்து மக்கள் அனைவரையும் சமமாக எண்ணுவது அவ்வளவு கடினமாக இருக்கின்றது என்ன தோழரே :) நான் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கின்றது. அப்படினா யாராலையும் ஒண்ணும் பண்ண முடியாது. :)
கருத்துரையிடுக