கனவுகள் விசித்திரமானவை என்றும் அவை
பலவகைப் படும் என்றுமே நாம் முன்னர் கண்டிருக்கின்றோம். மேலும் தூக்கத்தில்
வரும் சிந்தனைகள் என்று கனவுகளை விளக்கலாம் என்றும்
கண்டிருக்கின்றோம்.இப்பொழுது அந்த கனவுகளைப் பற்றியே தான் விரிவாக காண
வேண்டி இருக்கின்றது.
உடலானது தனக்குரிய ஓய்வினை உறக்கத்தின்
வாயிலாக பெற்றுக் கொள்ளுகின்றது என்றே நாம் கண்டோம். அத்தகைய தூக்கத்தின்
பொழுது, நம்முடைய புலன்களும் ஓய்வெடுக்கத் தான் செய்கின்றன. விழித்து
இருக்கும் பொழுது நாம் அவற்றை பயன்படுத்துவதனைப் போன்று உறங்கும் பொழுது
நாம் அவற்றை பயன்படுத்துவதில்லை. அதாவது நாம் உறங்கும் பொழுது
ஐம்புலன்களுக்கும் பெரிதாக வேலை ஒன்றும் இருப்பதில்லை. உடல் தனது ‘தூக்க’
நிலையில் தேவையான உறுப்புக்களை மட்டும் இயக்கிக் கொண்டு ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கின்றது.
ஆனால் கனவிலோ நம்முடைய ஐம்புலன்களையும்
நாம் பயன்படுத்திக் கொண்டு சிந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது
நாம் உறங்கும் பொழுது நம்முடைய ஐம்புலன்கள் ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கின்றன அத்துடன் நம்முடைய சிந்தனையும் தான்…ஆனால் அதே நேரம்
கனவிலோ நம்முடைய ஐம்புலன்கள் மும்மூரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
அத்துடன் சிந்தனையும் தான். இதனை எவ்வாறு விளக்குவது என்றே நாம்
சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் முன்னே ஒரு கேள்வியினை சமயங்கள்
வைக்கின்றன :
உடல் ஓய்வெடுக்கின்றது சரி…ஆனால் உடலுடன்
சேர்ந்து ஆன்மா ஓய்வெடுக்கின்றதா இல்லை ஆன்மாவானது எப்பொழுதும் போல்
இருந்துக் கொண்டிருக்கின்றதா? இக்கேள்விக்கான விடையினை சமயங்கள், ‘ஆன்மா
எப்பொழுதும் போல் தான் இருந்துக் கொண்டிருக்கின்றது’ என்றே கூறுகின்றன.
அதனைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
அனைத்து மனிதர்களின் உடலும்,
நிறம்..குறைபாடுகள்…போன்ற விடயங்கள் நீங்கலாக ஒன்றைப் போலவே இயங்குகின்றது.
இருதயமாகட்டும், மூளையாகட்டும், எலும்பாகட்டும்…அனைத்தும் ஒன்றைப் போலவே
இருக்கின்றன. ஆகையால் தான் ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதனின் உறுப்புக்களை
கொண்டு உதவ முடிகின்றது. அனைத்தும் ஒன்றைப் போன்றே இருந்தாலும் மனிதர்கள்
அனைவரும் ஒன்றைப் போல் இருப்பதில்லை. இதனை நாம் அறிவோம். நம்முடைய வேறுபாடு
நம்முடைய சிந்தனையில் அடங்கி இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான
சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றோம். இங்கேயும் நமக்கு ஒரு கேள்வி
இருக்கத்தான் செய்கின்றது…ஒரே மாதிரியான உடலினைக் கொண்டிருந்தும் ஏன்
நம்முடைய சிந்தனைகள் வேறுபட்டு இருக்கின்றன?
இதற்கு விடையாய் நமக்கு கிட்டுகின்ற பதில்
இது தான். மனிதனின் சிந்தனை அவனது சூழலிற்கு ஏற்ப மாறுகின்றது…அவன் வளர்ந்த
சூழல்…அவனது சமூகம்…அவன் காணுகின்ற விடயங்கள் இவற்றினை அடிப்படையாகக்
கொண்டு அவனது மூளையானது பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றது. ஆகையால்
சூழலானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவதனால் ஒருவருக்கு ஒருவர் சிந்தனையும்
மாறுபடுகின்றது. அத்தகைய மாற்றத்திற்கு காரணம் மூளை தான், என்று மூளையினையே
அவர்கள் அனைத்திற்குமான காரணியாக கூறுகின்றனர். இதைத் தான் நாம்
கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கின்றது.
மனிதர்கள் அனைவரின் உடலும் ஒன்றினைப்
போன்றே இயங்குகின்றது. அனைவரின் இருதயமும் ஒன்றைப் போன்று தான்
துடிக்கின்றது. அப்படி அது சற்று மாறித் துடித்தது என்றால் இருதயம் சரியாக
வேலைப் பார்க்கவில்லை என்றும் நோய் என்றும் கூறுகின்றோம்…அதனைப் போன்றே
தான் மற்ற உறுப்புக்களுக்கும்…மனிதர்களின் உடலின் வெப்பம் அனைவருக்கும்
ஒன்றைப் போன்றே இருக்கின்றது…மனிதன் பாலைவனத்தில் இருந்தாலும் சரி பனி
பிரதேசத்தில் இருந்தாலும் சரி…உடலின் வெப்பம் 98.4 டிகிரி தான்
இருக்கின்றது. அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நாம் நோய் என்றும் உடல் சரியில்லை
என்றும் கூறுகின்றோம். அனைத்தும் அவ்வாறு இருக்க, தோற்றத்திலும்
அமைப்பிலும் அனைவருக்கும் ஒன்றினைப் போன்றே இருக்கின்ற இந்த மூளையானது
மட்டும் எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்கின்றது? அதன்
இயக்கமும் ஒன்றினைப் போன்று தானே இருக்க வேண்டும்? ஏழ்மையான சூழலில் ஒருவன்
இருந்தாலும் பணம் மிகுந்த சூழலில் ஒருவன் இருந்தாலும் அவனுடைய உடலின் மற்ற
பாகங்கள் எவ்வாறு ஒன்றைப் போல் வேலை செய்கின்றனவோ அதனைப் போன்று தானே
அவனுடைய மூளையும் ஒன்றினைப் வேலை செய்ய வேண்டும்? அதனை விடுத்து அது
மட்டும் ஏன் வெவ்வேறு சிந்தனைகளை உருவாக்குகின்றது?
சரி ஒரு உதாரணத்திற்கு விலங்குகளை
எடுத்துக் கொள்வோம்…அவைகளுக்கும் மூளை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்
ஆச்சர்யவசமாக அவைகள் அனைத்தின் மூளையும் ஒன்றினைப் போன்றே தான் வேலை
செய்கின்றது. அதாவது அனைத்து சிங்கங்களும் ஒன்றினைப் போல் தான்
சிந்திக்கின்றன. அவற்றின் சிந்தனைகள் மாறுவதில்லை. எந்தொரு சிங்கமும்
அமைதிக்காக தியானம் செய்வதோ அல்லது மற்ற விலங்குகள் அனைத்திற்காகவும்
உழைத்து தன்னுடைய வாழ்வினைத் தியாகம் செய்வதோ இல்லை. அதனைப் போன்றே அனைத்து
புலிகளின் சிந்தனையும் ஒன்றினைப் போன்றே இருக்கின்றது. ஒரு புலியின்
நடவடிக்கையினை வைத்தே மற்ற புலிகளின் குணங்களை நாம் கணித்து விடலாம்.
இதனைப் போன்றே தான் மற்ற பறவை இனங்கள் விலங்கினங்கள் என்று அனைத்திற்கும்
இருக்கின்றது. அவைகள் அனைத்திற்கும் மூளை இருக்கின்றது. அவைகளின் மற்ற உடல்
உறுப்புக்கள் எவ்வாறு ஒன்றினைப் போல் வேலை செய்கின்றதோ அதனைப் போன்றே தான்
அவற்றது மூளையும் வேலை செய்கின்றது.
இந்நிலையில் எதனை வைத்து மனிதனின் மூளை
மட்டும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக செயல்படுகின்றது என்று கூறுவதனை
நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்? அனைத்து மூளையும் ஒன்றினைப் போன்றே
இருக்கக் கூடிய நிலையில் அனைத்து சிந்தனைகளும் ஒன்றினைப் போன்றே அல்லவா
இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லாது சிந்தனைகள் மாறுகின்றன…மேலும் மாறிக்
கொண்டே ஏன் அவை இருக்கவும் செய்கின்றன?
இந்த கேள்விக்கு விடையினை நாம் தேடினோம்
என்றால் விடையாய் வருவது ‘மனிதனின் மூளையின் செயல்பாடு ஒன்றாகத் தான்
இருக்கின்றது ஆனால் அதனை பயன்படுத்தும் ஆன்மா தான் அதனை பல்வேறு விதமாக
பயன்படுத்துகின்றது, அதன் விளைவாகத் தான் அத்தனை வேறுபாடுகள் இங்கே நிகழப்
பெற்றுக் கொண்டிருக்கின்றன’ என்பது தான். அந்த ஆன்மா தான் மனிதனுக்கு
சுயமாக/சுதந்திரமாக சிந்திக்கும் ஆற்றலினை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மிருகங்களின் சிந்தனைகள் வரையறைக்குள்
கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் ஒரு சிங்கத்தால் சிங்கமாக
மட்டுமே இருக்க முடியும்…ஒரு கிளியால் கிளியாக மட்டுமே இருக்க
முடியும்…அவற்றின் மூளையும் அவை அவ்வாறு இருப்பதற்கு மட்டுமே பயன்படும்.
அவற்றிற்கு வேறு சுதந்திரம் கிடையாது. அதனால் தான் ஒரு புலியினை நன்கு
கவனித்தாலே நம்மால் அனைத்து புலிகளின் இயல்பினையும் கணிக்க முடிகின்றது.
ஏன் என்றால் அவை அனைத்தின் இயல்பும் ஒன்றாகவே தான் இருக்கும். வேறு
எப்படியும் அவற்றால் இருக்க முடியாது. ஒரு புலியின் மூளை அதனை ஒரு
புலியாகவே தான் வைத்திருக்கும்.
ஆனால் மனிதனின் சிந்தனையோ எந்தொரு
வரையறைக்குள்ளும் கட்டுப்பட்டு இருப்பதில்லை….அவனுக்கு சுதந்திரம்
இருக்கின்றது…அந்தச் சுதந்திரத்தினை அவனுக்கு அவனது ஆன்மாவானது வழங்கிக்
கொண்டிருக்கின்றது. அந்த சுதந்திரத்தினை மனிதனானவன் பயன்படுத்திக்
கொள்ளுகின்ற விதத்தினில் தான் அனைத்து வேறுபாடுகளும் அடங்கி இருக்கின்றன.
சரி இருக்கட்டும்…சும்மா ஆன்மா ஆன்மா என்று கூறி விட்டால் போதுமா? அந்த
ஆன்மா என்ற ஒன்று இருப்பதற்கு சான்றுகள் எங்கே? என்ற கேள்விகளுக்கு
விடையாய் தான் கனவுகள் இருக்கின்றன.
ஏனென்றால் நம்முடைய கனவுகளில் சிந்தித்துக் கொண்டும் ஐம்புலன்களைப் பயன்படுத்திக் கொண்டும் உலாவிக் கொண்டிருப்பது ஆன்மா தான்…!!!
அதனையே இப்பொழுது காணலாம்…!!!
பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே
கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக
அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக்
காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில்
எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக்
காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.