இன்று உலகம் முழுவதும் அமெரிக்கமயமாகிக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கம் என்றே வெளியில் கூறப்பட்டாலும் அமெரிக்க கொள்கைகள், அமெரிக்க அணுகுமுறைகள், அமெரிக்க பாணியிலான வாழ்க்கைமுறை, அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதாரம் என்ற உண்மையில் அது அமெரிக்கமயமாக்கலைத் தான் குறிக்கின்றது. இந்நிலையில் நாம் உலகமயமாக்கலைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலாளித்துவத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் குறிப்பாக தனியார்மயமாக்கல், பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுதல், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி செய்தல் என்பன போன்ற நிகழ்வுகள் இந்தியாவினில் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் நாம் நிச்சயமாக அமெரிக்காவினைப் பற்றியும் முதலாளித்துவத்தினைப் பற்றியும் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் அவற்றைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு ஒரு மிக அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது மைக்கேல் மூரே (Michael Moore) அவர்கள் இயக்கி இருக்கும் 'முதலாளித்துவம் - ஒரு காதல் கதை' என்ற ஆவணப்படம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உண்மையான வெற்றியினைப் பெற்ற நாடென்று ஒரு நாட்டினை நாம் கூற வேண்டும் என்றால் அமெரிக்காவினைத் தான் நாம் கூற முடியும். ஏனைய உலக நாடுகள் அனைத்தும் பேரழிவை சந்தித்து இருந்த நிலையில் அமெரிக்கா அடைந்திருந்த இழப்போ 'பியர்ல் ஹார்பர்' துறைமுகம் மட்டுமே. வேறு எந்தத் தாக்குதல்களையும் அமெரிக்க மண்ணானது சந்தித்து இருக்கவில்லை.  அதே சமயம் இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் ஒன்றியம், செர்மானி, சப்பான் போன்ற நாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலுமாக உருக்குலைந்து போயிருந்தன. மிகப்பெரிய இழப்புகளையும் கடன் சுமைகளையும் அவைகள் பெற்றே தான் இருந்தன. ஆனால் அமெரிக்காவோ மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் யுத்த காலத்தில் கடனுக்கு வழங்கி யுத்தத்தினால் மாபெரும் இலாபத்தினை அடைந்து இருந்தது. அன்றைய காலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் கண்ட வளர்ச்சி அசூரத்தனமானது. மற்ற நாடுகள் தங்களது நாட்டினை மறுகட்டமைப்பு செய்துக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்காவோ பொருள் உற்பத்தியில் எட்டுக் கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைய சூழலில் அதற்கு இருந்த ஒரே பிரச்சனை பொதுவுடைமை என்ற சோவியத் சித்தாந்தம் தான். ஆனால் மக்கள் அனைவரும் பெரிதாக கவலை இன்றி வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த அக்காலத்தில் பெரிய அளவில் பொதுவுடைமைக் கொள்கை அவர்களின் மத்தியில் பரவவில்லை. மேலும் தந்திரமான பிரசங்கங்களால் பொதுவுடைமைக் கொள்கை என்பது வாழ்விற்கு ஏற்ற ஒன்றல்ல என்பதனைப் போன்ற கருத்துக்களையும் அமெரிக்க அரசானது மக்களின் மத்தியில் பரப்பியே தான் வந்துக் கொண்டிருந்தது. இந்த அனைத்து விடயங்களையும் மிகவும் அருமையாக வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக நம் முன்னே கொண்டு வந்து வைக்கின்றது இந்த ஆவணப்படம்.

போட்டி என்று பெரிதாக யாரும் இல்லாத பொழுது வெல்வது என்பது எளிதான விடயம் தானே. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த காலங்களில் அமெரிக்காவின் நிலையும் அவ்வாறு தான் இருந்தது. ஆனால் நிலைமை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை தானே. மெது மெதுவாக மற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தங்களது உற்பத்தியைத் துவக்க அமெரிக்க நிறுவனங்கள் கண்டு வந்த அசூரத்தனமான வளர்ச்சியும் இலாபங்களும் சற்றுத் தள்ளாட ஆரம்பிக்கின்றன. அந்தச் சூழலில் அந்த நிறுவனங்கள் தங்களது இலாபங்களையும் செல்வாக்கினையும் தக்க வைத்துக் கொள்வதற்காக கையாண்ட வழிமுறைகள் தான் இன்று வரை உலக இயக்கத்தினையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வழிமுறைகளில் சில

1) பகாசுர நிறுவனங்களின் ஆட்கள் மறைமுகமாக ஆட்சியில் இருப்பது. அல்லது ஆட்சியில் இருப்பவர்களை நல்ல விலை பேசி தங்களுக்குச் சாதகமாக மாற்றி விடுவது.

2) அவர்களின் மூலம் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமான சட்டங்களை இயற்றி விடுவது.

மேலே கூறியுள்ள இந்த இரு வழிமுறைகளைப் பற்றி நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டதினால் அவற்றைப் பற்றி இங்கே நாம் மேலும் நுணுக்கமாக காணவில்லை. ஆனால் அவற்றைப் பற்றி இந்த ஆவணப்படம் மிகவும் அருமையாக விளக்குகின்றது.

3) காரணமின்றி இலாபம் குறைகின்றது என்ற காரணத்தினால் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வது. தொழிலாளர் ஒன்றியங்களை ஒழிப்பது.

இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட விவரங்களின் படி அமெரிக்காவில் சில நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாக பெற்று இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த இலாபம் வரவில்லை என்பதினால் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து இருக்கின்றனர்.

அவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பொழுது அரசாங்கம் எந்த ஒரு குறுக்கீடும் செய்யாததால் மற்ற ஊழியர்களும் தங்களின் பணியினைக் குறித்து அச்சம் கொள்ளுகின்றனர். அவர்களின் அச்சத்தினை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மேலும் அதிகமாக உற்பத்தியினை பெருக்கும் வண்ணம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றது.

மேலும் அந்த நிறுவனங்கள் மற்றும் அரசின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளாக இந்த ஆவணப்படம் முன்வைப்பது இதனைத் தான்,


  • தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்.
  • ஆனால் அவர்களின் சம்பளங்களில் பெரிதளவு மாற்றங்களே இல்லாமல் இருக்கின்றது.
  • தேவைகளுக்கு ஏற்றார்ப்போல் சம்பளம் இல்லாததால் மக்களை கடன் வாங்கி (வங்கிக் கடன்கள், கடன் அட்டைகள், தவணை முறைத் திட்டங்கள்) வாழ்வினை வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு உட்படுத்துகின்றார்கள்.
  • கடன் வாங்கித் தான் வாழ முடியும் என்ற சூழலில் வேலைகளில் இருந்து ஆட்குறைப்பு என்ற பெயரினால் மக்கள் துரத்தப்பட, கடனைக் கட்ட முடியாமல் திவாலாகிப் போன மக்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது.
  • மக்கள் துயரத்தை மறக்க ஊக்க பானங்களுக்கு அடிமையாக மது மற்றும் சோர்வினைப் போக்கும் மருந்துகளை அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின்றது
  • இத்தகைய சூழலில் குற்றங்களும் அதிகரிக்க சிறையில் அடைக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
இந்த தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம். இவற்றை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் இதே நிலை தான் இன்று இந்தியாவினில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மென்பொருள்துறை ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த நிறுவனங்களோ கோடிக்கணக்கில் இலாபங்களை ஈட்டிக் கொண்டு இருக்கின்றன. கடனிலேயே முடிந்து போகும் வாழ்விலே மக்கள் அடைக்கப்படுகின்றனர். ஒருவன் தன்னுடைய கல்வியினை முடித்து வெளி வரும் பொழுதே இலட்சக்கணக்கில் கடன் உடைய ஒருவனாகத் தான் வெளி வருகின்றான். அவனது சுதந்திரம் கடன் என்ற பெயரில் பறிக்கப்படுகின்றது. கடனும் இருக்கின்றது ஆனால் அதனை கட்ட வேலையும் இல்லை என்ற சூழலில் மதுவுக்கும் தவறான குற்றச் செயல்களுக்கும் இளைஞர்கள் ஆளாக மது அருந்துதலும் குற்றச் செயல்களும் சமூகத்தில் அதிகரிக்கின்றன. இவ்வாறு அமெரிக்காவில் நிலவிய/நிலவும் சூழலையே இன்று நம்முடைய நாட்டிலும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும்.

4) அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்து இருக்கும் துறைகளை தனியாருக்கு மாற்றிவிடுமாறு சட்டங்களை இயற்றி அதன் மூலம் கொள்ளை இலாபம் பார்ப்பது.

உதாரணமாக அமெரிக்காவில் அரசின் வசம் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றினை மூடிவிட்டு அந்த சீர்திருத்தப் பள்ளியினை நடத்தும் பொறுப்பினை தனியாரிடம் தருகின்றனர். அந்தத் தனியாரோ 8 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பள்ளியினை நிறுவி அதனை குத்தகைக்கு அரசிடம் விடுவதற்காக 58 மில்லியன் டாலர்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளுகின்றது. அதாவது ஒன்றுமே செய்யாமலே சுமார் 50 மில்லியன் டாலர்களை அந்த நிறுவனம் இலாபமாக அடைந்து உள்ளது. மக்களின் வரிப்பணமான 50 மில்லியன் டாலர்கள் மக்களுக்கு பயன்படுவதற்கு மாறாக அநியாயமாக சிலருக்குத் தாரை வாக்கப்பட்டு இருக்கின்றது.

இதே நிலை தான் இன்று இந்தியாவிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அரசின் வசம் இருக்கும் அனைத்தையும் தனியார் வசமாக்கும் பணி இன்று வெகு சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றது. இந்திய மக்களின் வரிப்பணத்தினை கொள்ளை அடிக்க இந்திய முதலாளிகளும் சரி உலக நிறுவனங்களும் சரி ஆர்வத்துடன் கழுகுகளைப் போல் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

5) மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு தந்து உதவுவது.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசத்தில் நிலவிய பொருளாதார சிக்கலை முன்னிட்டு மக்களின் வரிப்பணமான கிட்டத்தட்ட 660 பில்லியன் டாலர்களை அந்த நாட்டு அரசாங்கம், நிறுவனங்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு தந்த நடவடிக்கையை மிகவும் அருமையாக விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.

நமது நாட்டிலும் விஜய் மல்லையா போன்ற செல்வந்த ஏழைகள் நம்முடைய நாட்டு அரசாங்கத்திடம் உதவிகள் கேட்ட கதையினை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.

6) ஊடகங்களை பயன்படுத்தி மக்களை சிந்திக்க விடாமல் செய்து தவறான மற்றும் குழப்பமானத் தகவல்களைப் பரப்புவது.

என்பன போன்ற பல்வேறு வழிமுறைகளின் மூலமாக தங்களது இலாபத்திற்கும் செல்வாக்கிற்கும் யாதொரு பங்கமும் வராத வண்ணம் எவ்வாறு அந்த நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன என்பதனை அருமையான எடுத்துக்காட்டுகளோடு இந்த ஆவணப்படத்தில் விளக்குகின்றார் இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கேல் மூரே.

முதலாளித்துவம் என்றால் என்ன? அது எவ்வாறு பரப்பப்பட்டது? முதலாளித்துவத்தால் சமூகத்தில் நேர்ந்து இருக்கின்ற மாற்றங்கள் என்ன என்ன? சூரியனுக்கு யாராவது காப்புரிமை வழங்கி இருக்கின்றார்களா என்று முழங்கிய உண்மையான அறிவியல் போய் எவ்வாறு பணத்திற்காக பெரு நிறுவனங்களில் அமர்ந்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அடிமையாக்கும் போலி அறிவியல் வளர்ந்து இருக்கின்றது? இவற்றால் மக்கள் அடையும் இன்னல்கள் என்ன என்ன? அவற்றை ஒன்றிணைத்து மக்கள் எதிர்த்தக் கதைகள் என்னாயின? என்ற கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் தெளிவாக விடை அளிக்கின்றது இந்த ஆவணப்படம்.

மென்பொறியாளர்களும், பொதுவுடைமைக் கொள்கையினை உடையவர்களும், மேலும் பொதுவாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனை அறியும் ஆர்வம் உடையவர்களும் நிச்சயமாய் காண வேண்டிய ஒரு படம் இது.

தேர்ந்தெடுத்த தலைப்பு மிகவும் சிக்கலான தலைப்பாக இருந்தாலும், அதனை அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் தக்க சான்றுகளுடனும் இந்த படத்தை மைக்கேல் மூரே அவர்கள் எடுத்து உள்ளார். நிச்சயம் அனைவரும் காண வேண்டிய ஒரு படம் இது.

தொடர்புடைய இடுகைகள்:

சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் பரவிய வரலாறு)
குடிகாரர்களும் கடன்காரர்களும்
தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு