இன்று தமிழகத்தில் 'திராவிடம்' என்ற சொல்லுக்கு எதிராகவும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் குரல்கள் வலுவாக தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களிடம் இருந்து எழுந்து கொண்டே இருக்கின்றது. அவர்கள் முன் வைக்கும் கூற்றுகளில் நியாயம் இல்லாமலும் இல்லை.

"தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி இப்படி எல்லாருமே திராவிடர் அப்படின்னு சொல்றீங்க...ஆனா தமிழ் நாட்டைத் தவிர வேற எங்கேயும் இத சொல்றது கிடையாது...தெலுங்கர் தன்னை தெலுங்கு அப்படின்னு தான் சொல்றாப்ல...கன்னடரும் தன்னை கன்னடம் அப்படின்னு தான் சொல்றாப்ல...ஆனா தமிழன் மட்டும் தான் தன்னை திராவிடன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்...அப்படி அவன் சொல்லிக்கிட்டு இருந்தாத் தான் அவன தொடர்ந்து தெலுங்கு மக்கள் ஆட்சி பண்ணிகிட்டே இருக்க முடியும்..என்ன?" என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நிச்சயம் உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் "தெலுங்கு மன்னர்களான நாயக்கர் ஆட்சியில தான்யா தமிழன் தாழ்ந்தான்...தெலுங்குகாரனுங்க அவனுங்க ஆட்சியில தான் கிட்டத்தட்ட எல்லா கோவிலையும் பிராமணன்கிட்ட கொடுத்தானுங்க...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாக இருக்கட்டும்...பழனி முருகன் கோவிலாக இருக்கட்டும்...பிராமணன் அங்கே உள்ள போனதுக்கு நாயக்க மன்னர்கள் தானப்பா காரணம்...அப்ப அடிமையாகப் போன தமிழர்கள் இன்னிக்கு வரைக்கும் அடிமையாகத் தானயா இருக்காங்க...அதனால தமிழனுக்கு எதிரி பிராமணன் மட்டும் கிடையாது ஆனா திராவிடன் அப்படின்னு சொல்லியே முதுகுல குத்துன தெலுங்கு மக்களும் தான்" என்றும் அவர்கள் கூறும் வாதங்களில் வரலாற்று உண்மைகளும் இன்னும் ஆழமாக ஆராயக்கூடிய பல்வேறு விடயங்களும் ஒளிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

மாபெரும் வரலாற்றினையும் பழம்பெருமையையும் கொண்டிருந்த ஒரு சமூகம் தன்னுடைய அடிமை நிலையில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் தன்னுடைய வரலாற்றினை அறிய முற்படுகையில் நிச்சயமாய் ஒரு எழுச்சி இருக்கத்தான் செய்யும். அதுவும் தமிழ் சமூகம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக கல்வியறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் ஒடுக்கப்பட்டு இருந்த ஒரு சமூகமாகவே இருக்கின்றது. அத்தகைய ஒரு சமூகம் இன்று மீண்டும் கல்வியறிவினைப் பெற பெற தன்னுடைய இனத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிந்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது. எனவே இயல்பாகவே மேற்கூறிய கேள்விகள் அவர்களின் முன்னே எழத் தான் செய்யும். மேலும் அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடுவதும் இங்கே முக்கியமானதொன்றாகத் தான் இருக்கின்றது.

ஆனால் அத்தகைய தேடுதல்களின் பொழுது அனைத்து விடயங்களையும் நன்றாக கவனித்தே ஒரு முடிவிற்கு யாராக இருந்தாலும் வர வேண்டும். அநேக விடயங்களை தமிழ் தேசியம் பேசுவோர் சரியாக முன் வைத்தாலும் அவர்களும் பல இடங்களில் தவறுகள் செய்யத்தான் செய்கின்றனர். அதில் முக்கியமான ஒரு தவறு சாதியையும் வருணத்தையும் பிரித்து அறிவதில் வருகின்றது. அதைத் தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்று இது தான். தமிழர்கள் தான் உலகின் முதல் மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து கிளம்பிச் சென்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லுகின்றனர். தமிழர்கள் தங்களைத் தாங்களே செய்யும் தொழில்களின் அடிப்படையில் நான்காக வகுத்துக் கொள்கின்றனர். தங்களின் இனக் குழுவின் செயல்பாட்டினை முன்னேற்றுவதற்காகவே அவர்கள் அத்தகைய பிரிவினை உருவாக்கிக் கொள்கின்றனர். அந்த பிரிவுகளானது,

அந்தணர் - வழிபாடுகளைச் செய்பவர்/அறிஞர்
அரசர் - மக்களை ஆள்பவன்
வணிகர் - வணிகம் செய்பவர்
வேளாளர் - விவசாயம் செய்பவர்.

இவ்வாறு தமிழர்கள் செய்துக் கொண்ட பிரிவுகளே அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றடைந்து உருவாக்கிய நாகரீகங்களிலும் காணப்படுகின்றன என்றே அவர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாய் எகிப்து, இசுபானியா (Spain), சப்பான் போன்ற நாகரீகங்களைக் காட்டுகின்றனர். அவ்வாறு எடுத்துக்காட்டுவதன் மூலமாக அவர்கள் கூற வருவது இது தான். சாதிகளை ஆரியர்கள் கண்டுப்பிடித்தார்கள் என்பது வடிகட்டின பொய். சாதிகள் என்பது தமிழர்கள் தொன்றுதொட்ட காலத்தில் உருவாக்கியது. அதன் அடிப்படையிலேயே தான் பின்னர் நான்கு வருணங்கள் உருவாகி உள்ளன. எனவே நான்கு வருணங்களை உருவாக்கியது தமிழர்கள் தாம் என்பது தான் அவர்களின் வாதமாக இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் மத்தியில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. நான்கு வருணத்திலும் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. எனவே இரண்டும் ஒன்று தான். அவ்வளவே. அதாவது,

அந்தணர் = பிராமணர் = வழிபாடுகளைச் செய்பவர்
அரசர் = சத்திரியர் = அரசாள்பவர்
வணிகர் = வைசியர் = வணிகம் செய்பவர்
வேளாளர் = சூத்திரர் = விவசாயம் மற்றும் இதர வேலைகளைச் செய்பவர்கள்.

'ஆகா...எவ்வளவு அருமையாகப் பொருந்துகின்றது. இந்த எளிமையான பொருத்தத்தைக் கூட காண முடியாது 'நான்கு வருணத்தை' ஆரியர்கள் கொண்டு வந்தார்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றார்களே இந்த திராவிடம் பேசுவோர். நான்கு வருணம் என்பது தமிழர்கள் கொண்டிருந்த நான்கு பிரிவுகளின் மற்றொரு வடிவமே அன்றி வேறல்ல.' என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது. இங்கே தான் பிரச்சனை இருக்கின்றது. ஆகையால் நாம் இதனை மறுத்தாக வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அந்த தொழிற் பிரிவுகளைப் பற்றியும் நான்கு வருண அமைப்பினைப் பற்றியும் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் தொழிற்பிரிவுகளைப் பற்றிக் காண்போம். அந்தணர், அரசர், வணிகர்,வேளாளர் ஆகிய நான்கு பிரிவுகளும் தமிழர்கள் மத்தியில் இருந்த பிரிவுகளைக் குறிக்கின்றன. இவைகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. எனவே,

ஒரு அந்தணன் அரசனாகலாம். ஒரு அரசன் வணிகனாகலாம். ஒரு வேளாளன் அந்தணன் ஆகலாம். இதில் யாதொரு பிரச்சனையும் எழப் போவதில்லை. செய்யும் தொழிற்கு ஏற்றார்ப் போல் மக்கள் பிரிந்துக் கொள்கின்றனர். அவ்வளவே. இதில் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நிற்க.

இங்கே மற்றுமொரு முக்கியமான விடயத்தினைத் தான் நாம் இங்கே கண்டாக வேண்டி இருக்கின்றது. மேற்கூறிய பிரிவுகள் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியாக இருக்குமே அன்றி பல்வேறு இனங்களுக்கு ஒரே பிரிவு இருக்க முடியாது. அதாவது,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளர் - ஆகிய பிரிவுகள் தமிழர்களிடையே இருந்தது என்றால் அது அந்தந்த தமிழ் இனக் குழுக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்.

அதைப் போன்றே பாரோ (Pharoah - அரசன்), ப்ரீஸ்ட் (Priest - வழிபாட்டு குரு), வணிகர் (Artisans) , விவசாயிகள் - என்ற பிரிவுகள் எகிப்து நகர மக்களிடையே காணப்படுமானால் அந்த பிரிவுகள் எகிப்து இன மக்களுக்கு மட்டுமே உரியனவாக இருக்கும். ஒரு தமிழ் வணிகன் எகிப்தில் சென்று வணிகம் செய்தாலும் அவனை அவர்கள் அவர்களது வணிக பிரிவினில் ஒருவனாக வைத்துக் காண மாட்டார்கள். அந்நிய நாட்டினைச் சார்ந்தவனாகத் தான் பார்ப்பார்கள். செய்யும் தொழில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் இருவரும் வெவ்வேறு இனக் குழுவினைச் சார்ந்தவர்கள்.

இந்நிலையில் எகிப்து நகர மக்கள் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டார்கள் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்? எகிப்து மக்கள் தாங்கள் கொண்டிருந்த அதே நான்கு பிரிவுகளைக் கொண்டு இருப்பார்கள். கூடுதலாக அடிமைகள்/எதிரிகள் என்ற ஒரு பிரிவில் தமிழ் இனக்குழுவைச் சார்ந்த அனைவரும் சேர்க்கப்பட்டு இருப்பார்கள் (அவர்கள் அந்தணர்களாக இருக்கலாம் அல்லது அரசர்களாக இருக்கலாம், அல்லது வணிகர்களாக இருக்கலாம் - அவர்கள் யாராக இருந்தாலும் ஒன்று அடிமையாக இருப்பர் அல்லது எதிரியாக கருதப்பட்டு அழிக்கப்பட்டு இருப்பர்). இது தான் இயல்பு.

எனவே இரண்டு இனக்குழுக்கள் போரினால் ஒன்றிணையும் பொழுது, தோற்ற இனக்குழுவானது முற்றிலுமாக அடிமைகளாகவும் எதிரிகளாகவும் மாறி விடுகின்றது. அதாவது தமிழர்கள் தங்களைத் தாங்களே அந்தணர், அரசர், வணிகர் , வேளாளர் என்று கருதிக் கொண்டாலும் எகிப்தியர்கள் அவர்கள் அனைவரையும் அடிமைகள் அல்லது எதிரிகள் என்று தான் கருதுவர். நிற்க

இந்த அடிப்படையில் தான் நாம் நான்கு வர்ணப் பிரிவினைக் கண்டாக வேண்டி இருக்கின்றது (உண்மையில் அது நான்கு அல்ல ஐந்து பிரிவுகள்).

பிராமணர் - வேத வேள்வி செய்வோர் (ஆரியர்)
க்ஷத்ரியர் - அரசாள்வோர் (ஆரியர்)
வைசியர் - வணிகம் செய்வோர் (ஆரியர்)
சூத்திரர் - அடிமைகள் (திராவிடர்)
பஞ்சமர் - எதிரிகள் (திராவிடர்)

இந்தப் பிரிவுகளில் முதல் மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆரியர்களாக கருத்தப்படுவதையும் ஏனைய இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் திராவிடர்களாக கருதப்படுவதையும் நான்கு வர்ணத்தைப் பற்றி நன்கு அறிந்து இருக்கும் மக்கள் அறிந்தே தான் இருக்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் பேசும் மக்கள் சற்று கவனிக்க வேண்டி இருக்கின்றது. இனக்குழுக்களுள் வழங்கப்படும் நான்கு தொழிற்பிரிவுகளும் நான்கு வருண அமைப்பும் ஒன்று என்றால் ஏன் ஒரு இனம் மட்டும் அடிமையாகவும் எதிரிகளாகவும் கருதப்பட்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்குத் தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.காண்போம்...!!!

தொடரும்...!!!


தொடர்புடைய இடுகைகள்:

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்...!!!
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 1
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 2
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 3
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 4
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 5
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 6
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 7
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 8
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 9
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 11
தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 12

3 கருத்துகள்:

இது ஒரு முடிவில்லா ஆராய்ச்சி.

@ பழனி.கந்தசாமி அய்யா

இல்லை அய்யா...சாதிகள் வேறு...வருணங்கள் வேறு என்று நம்மால் நிரூபிக்க முடியும்.


பாா்பனா் அல்லாத மக்களுக்கு சுவாமி விவேகானந்தா் சொன்ன அறிவுரை
வீண் வாதம் செய்து காலத்தை வீணாக்க வேண்டாம்.பிறாமணா்களாக நீங்கள் உயர -உயா்ந்த கலாச்சார மற்றும் கல்வித்தகுதியைப் பெற முயலுங்கள். பிறாமணா்களை தகுதியில் தோற்கடியுங்கள் என்றாா்.

இதைச் செய்வதற்கு தமிழ்நாட்டில் என்ன முயறசி உள்ளது ? பிறாமண துவெசம் வேண்டாம். அவனும் இந்தியன் தான். நன்றாக இருககட்டும்.உனது தகுதியை உயாத்த்திக் கொள்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு