ஒரே கடவுள் மூவராக இருக்கின்றார் என்கின்ற கோட்பாட்டினைப் பற்றியே நாம் இந்தப் பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். முதலில் கிருத்துவ சமயத்தில் அந்தக் கோட்பாடானது எவ்வாறு இருக்கின்றது என்பதனையும் பின்னர் பௌத்த சமயத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்தில் ஒரே புத்தர் எவ்வாறு மூன்று நிலைகளில் அறியப்படுகின்றார் என்பதனையும் நாம் கண்டோம். அதன் தொடர்ச்சியாகத் தான் நாம் இப்பொழுது சைவ வைணவ சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடு காணப்படுகின்றதா என்றே நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.
சைவம் -
சிவனை முழு முதற்கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழு முதற்கடவுளாக கொண்டது.
மேலோட்டமாக பார்த்தோம் என்றால் இரு வேறு கடவுள்களை முழு முதற்கடவுளாக கொண்டு விளங்கும் வெவ்வேறு சமயங்களாகவே சைவமும் வைணவமும் தோன்றும். ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது. இதோ திருமூலரின் பாடல் ஒன்று,
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே - திருமந்திரம்
104
சிவனும், பெருமாளும், பிரமனும் பார்க்க மூன்றாகத் தோன்றினாலும் அவர்கள் உண்மையில் ஒருவரே. இந்த உண்மையினை அறியாது உலக மக்கள் அவர்களுக்குள் வேறுபாடுகள் கற்பித்துக்கொண்டு
இருக்கின்றார்களே என்றே திருமூலர் கூறுகின்றார்.
சைவ வைணவத்தில் மும்மூர்த்திகளாக அறியப்படுபவர்கள் சிவன், பெருமாள், பிரமன். இவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் என்ற கருத்தே கிட்டத்தட்ட அனைத்து மக்களின் உள்ளும் பதிந்து இருக்கின்றது. காரணம் அவ்வாறு தான் அவர்களுக்கு கூறப்பட்டு உள்ளது. ஆனால் திருமூலரோ, சிவன், விஷ்ணு, பெருமாள் ஆகிய மூவரும் மூன்று வெவ்வேறு கடவுளர் கிடையாது மாறாக அவர்கள் ஒருவரே என்றே கூறுகின்றார். அதாவது ஒரே கடவுள் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்பதே திருமூலரின் கருத்தாகும்.
இதேக் கருத்தினை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மற்றப் பெரியோர்களும் கூறியே தான் சென்றுள்ளனர்.
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே. - திருமங்கை ஆழ்வார் (3-1-10).
மேலும் 'அரியும் சிவனும் ஒன்று' என்பது சித்தர் பெருமக்களின் கூற்றுமாகும். அதாவது சிவனும் பெருமாளும் இரு வேறு கடவுளர் அல்லர். இருவரும் ஒருவரே என்றே சித்தர்கள் கூறி இருக்கின்றனர். இந்த உண்மையையே ஹரிஹரன் என்ற உருவமும் புலப்படுத்துகின்றது.
மேலும் முதல் ஆழ்வார்களும் சரி நாயன்மார்களும் சரி சிவனையும் பெருமாளையும் ஒருவராகவே உருவகப்படுத்தி உள்ளனர்.
மேலும், பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையே தொப்புள் கொடி உறவும் காட்டப்பட்டு உள்ளது. அதாவது தாயிற்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் உறவு முறையே பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் திருநாவுக்கரசரும் அவருடைய பாடலில்
ஆவியாய் அவியுமாகி அருக்கமாய் பெருக்கமாய்ப் பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகி' - திருநாவுக்கரசர் தேவாரம்
320
சிவன் பாவிகளின் பாவம் தீர்க்கும் பிரமன் ஆகின்றான் என்றே கூறுகின்றார். இவ்வாறு சிவன், பெருமாள், பிரமன் ஆகிய மூவரும் பொதுவாக வெவ்வேறு கடவுளர் என்றே அறியப்பட்டாலும் உண்மையான சமயக் கருத்துக்கள் அவர்கள் மூவரும் வெவ்வேறு கடவுளர் அல்ல மாறாக ஒரே கடவுள் தான் என்றே கூறுகின்றன. இதே உண்மை தான் சிவலிங்கத்திலும் வெளிப்படுகின்றது.
பொதுவாக சிவலிங்கத்தினைப் பற்றிய கதைகள் பல்வேறு விதமாக வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றன. சிவலிங்கம் என்பது இனப்பெருக்க கல் என்று சிலரால் கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ஆன்மீகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் சைவ வைணவ சமயத்தினைக் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் அறிவிற்கேற்ப பரப்பிவிட்ட ஆபாசக் கதைகளே ஆகும். உண்மையில் சில இனக்குழுக்கள் இனப்பெருக்க கல் வழிப்பாட்டினைக் கொண்டிருந்தாலும் சிவலிங்கம் என்பது அத்தகைய வழிப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. உண்மையில் சிவலிங்கம் என்பது இரு வேறு தத்துவங்களைக் அடிப்படையாக விளக்கிக் கொண்டு இருப்பது.
ஒன்று - சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அதன் தலைப்பகுதி சிவனைக் குறிப்பது. இடைப் பகுதி பெருமாளைக் குறிப்பது. அடிப்பகுதி பிரமனைக் குறிப்பது. அதாவது ஒரே வடிவம் சிவனையும் பெருமாளையும் பிரமனையும் ஒரு சேரக் குறிக்கின்றது.
இரண்டு - சிவலிங்கம் இறைவனின் அருவுருவமாக கருதப்படுகின்றது. சைவக் கருத்துக்களின்படி ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான். அருவமாகவும் இருக்கின்றான், அருஉருவமாகவும் இருக்கின்றான், உருவமாகவும் இருக்கின்றான். இதனையே பின்வரும் பாடல் விளக்குகின்றது
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. - சிவஞானசித்தியார்(1:38)
அதாவது உண்மையில் இறைவன் உருவமற்றவன். இதனை மாணிக்கவாசகர்,
ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! - திருவாசகம் (திருத்தெள்ளேணம்)
என்றே கூறுகின்றார்.
அத்தகைய இறைவன் உருவமாகவும் வந்தான். இதனைத் திருமூலர்,
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே - திருமந்திரம் 113
என்ற பாடலின் மூலம் தெளிவாக விளக்குகின்றார். அதாவது விண்ணில் இருந்து இறைவன் மக்களின் பாவத்தினை அழிக்க வினைகளை உடைய உடம்பினைக் கொண்டு உலகிற்கு வந்தான் என்றே அவர் கூறுகின்றார். எனவே உருவமில்லாத இறைவன் மக்களுக்காக உருவமானவராக ஆகின்றார்.
அதேநேரம் இறைவன் அருவமாகவோ அல்லது உருவமாகவோ மட்டும் தான் இருக்கின்றான் என்றால் அதற்கு இல்லை என்றே பதில் வருகின்றது. இறைவன் அருஉருவமாகவும் இருக்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. அருஉருவம் என்றால் என்னதென்று உறுதியாகக் கூற இயலாத வடிவம். உதாரணத்திற்கு தண்ணீருக்கு உருவம் இல்லை. ஆனால் அதனை எந்த வடிவ குடுவையில் ஊற்றி வைக்கின்றோமோ அந்தக் குடுவையின் வடிவையே தண்ணீரானது எடுத்துக் கொள்கின்றது. எனவே தண்ணீருக்கு உருவம் இருக்கின்றது என்றோ அல்லது உருவம் இல்லை என்றோ கூற இயலாது. இதனைப் போன்றே இறைவன் அருஉருவமாக திகழ்கின்றான் என்றே சைவம் கூறுகின்றது. இதனையே சிவலிங்கம் விளக்குகின்றது.
இறைவன் அருவம் - உருவம் - அருஉருவம் ஆகிய மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதே சிதம்பர இரகசியமுமாகும். சிதம்பரத்தில் கருவறையில் வெற்றிடம் மட்டுமே இருக்கும். அது இறைவன் அருவமாக இருக்கும் நிலையைக் குறிக்கின்றது. சிவலிங்கம் இறைவன் அருஉருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது. நடராசர் சிற்பமோ இறைவன் உருவமாக இருப்பதனைக் குறிக்கின்றது.
எனவே ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதே சைவ வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும்.
இங்கே சில கேள்விகள் எழலாம், சைவ வைணவ சமயங்கள் என்றுக் கூறி விட்டு அம்மன், முருகன், பிள்ளையார் போன்ற கடவுளரைப் பற்றி ஒன்றுமே கூறாது அது ஏன் என்ற கேள்வி நிச்சயமாக அவற்றுள் முக்கியமான கேள்வியாக இருக்கும். அக்கேள்விகளுக்கு விடைகளை நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கண்டாகி விட்டதனால் தான் நாம் அவர்களைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. இருந்தும் சுருக்கமாக காண வேண்டும் என்றால்
1) அம்மன் என்பது தனியான கடவுள் அல்ல. சிவன் என்ற முழுமுதற் கடவுளின் ஆற்றலே சக்தி என்று பெண் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டு இருக்கின்றார். இறைவனின் சக்தியே அம்மன்.
2) பிரமன், முருகன், பிள்ளையார், ஐயப்பன் ஆகியோர் அனைவரும் சிவனின் பிள்ளைகளே ஆவர். இறைவனின் மகன் என்பதனை கூற வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு உருவகங்களே அவர்கள் அனைவரும்.
3. இவர்கள் அனைவரையும் சேர்த்து சமயங்கள் ஆறு வகைப்படும்
சைவம் – சிவன் – அம்மை – மகன்
சாக்தம் –
சிவன் – சக்தி – மகன்
கௌமாரம் –
சிவன் – சக்தி – குமரன்
காணாபத்தியம் –
சிவன் – சக்தி – கணபதி
விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம் –
சிவன் – விஷ்ணு – பிரமன்
சௌரம் –
சிவன் – விஷ்ணு – ஐயப்பன்.
மேலும் சைவ சமயக் கோட்பாட்டின்படி இறைவனின் ஆற்றல் ஆகிய சக்தியே குருவாக வந்து தன்னை உணர்ந்த ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் வினையினை விட்டு அகல வழிகாட்டுகின்றார். இதனையே திருமூலர்
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே - திருமந்திரம் -
1527
என்றுக் கூறுகின்றார். இதுவும் நாம் முன்னர் கிருத்துவத்தில் கண்ட பரிசுத்த ஆவி மக்களை வழிநடத்துகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் மகாயான பௌத்தத்தில் சம்போக காயா வடிவில் புத்தர் போதிசத்துவர்களுக்கு வழிகாட்டுகின்றார் என்ற கோட்பாட்டினைப் போன்றும் இருக்கின்றது. இதுவும் சிந்திக்கத்தக்கது.
எனவே மேலே நாம் கண்டுள்ள விடயங்களின் மூலம் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கும் கோட்பாடானது சைவ வைணவ சமயங்களிலும் இருக்கின்றது என்பது புலனாகின்றது. அதாவது கிருத்துவத்திலும் சரி, பௌத்தத்தின் ஒரு பிரிவான மகாயான பௌத்தத்திலும் சரி சைவ வைணவ சமயங்களிலும் சரி ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடு வருகின்றது. இவை தற்செயலான ஒற்றுமைகளா அல்லது இவைகள் ஒரே இறைவனைக் கூறுவதனால் ஒரே கோட்பாடு இச்சமயங்களுக்குள் காணப்படுகின்றதா என்றே நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. ஆராய்ச்சிகள் நிச்சயமாக இந்த தலைப்பில் மக்கள் செய்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.
முற்றும்.
தொடர்புடைய இடுகைகள்:
0 கருத்துகள்:
கருத்துரையிடுக