சென்ற பதிவினில் ஒரே இறைவன் தான் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதனைக் குறிக்கும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றிச் சிறிதுக் கண்டோம். மேலும் உலகில் உள்ள சமயங்களில் ஒரே ஒரு சமயத்தினில் மட்டுமே இக்கருத்து காணப்படும் என்றால் இக்கருத்தினை நாம் ஏற்றுக் கொள்வது என்பது இயலாத ஒரு செயலாகி விடும். ஏனென்றால் இறைவன் ஒருவனே என்றால் அவனைப் பற்றிய கருத்துக்களும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அது இறைவன் என்ற ஒருவனின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும். இந்நிலையில் தான் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றான் எனப்படும் மூஒருமைக் கோட்பாட்டினைப் பற்றி நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவ சமயத்தில் காணப்படும் இந்தக் கோட்பாட்டினை நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இதே கோட்பாடு வேறு சமயங்களில் இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சைவ வைணவ சமயங்களையும் மகாயான பௌத்தத்தையும் காண வேண்டி இருக்கின்றது. முதலில் பௌத்தத்தில் இருந்தே தொடங்குவோம்.

பௌத்த சமயம் புத்தரின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்டது என்றே நாம் அறிவோம். இதன் தோற்றக் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்றே கணிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அறியாத கருத்து என்னவென்றால் பௌத்த சமயத்தில் இரு பெரும் பிரிவுகள் இருக்கின்றது என்பதே ஆகும். அவை,

ஹீனயான (தேரவாத) பௌத்தம் - புத்த சமயத்தின் முதல் பிரிவு.
மகாயான பௌத்தம் - புத்த சமயத்தின் இரண்டாம் பிரிவு. காலம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து இன்று வரை.

இவ்விரண்டு பிரிவுகளைப் பற்றியும் நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டோம். இருந்தும் இங்கே நாம் அவற்றுக்கு இடையில் இருக்கும் சில வேறுபாடுகளை கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.


மனிதன் தனது வினைப்பயன்களால் துயறுற்று மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றான். அவன் இந்த பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப அவனது அடுத்த பிறவி அமைகின்றது. வாழ்வு துன்பகரமானது. எனவே ஒவ்வொரு முறையும் மனிதன் பிறக்கும் போதும் துன்பத்திற்கே ஆளாகின்றான். ஆகையால் அவனது முழு கடமையும் அவனது வினைப் பயன்களைத் துறந்து முக்தி அடைவதே ஆகும். எப்பொழுது ஒரு மனிதன் தன்னுடைய புலன்களை அடக்கி பற்றற்று தன்னுடைய வினைகளைக் களைந்து விடுகின்றானோ அப்பொழுது அவன் முக்தி நிலையை அடைகின்றான். அவன் மறு பிறவி எடுப்பதில்லை. எனவே ஒவ்வொரு மனிதனின் கடமையும் அவன் முக்தி அடைவதே ஆகும். இது தான் ஹீனயான பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த கொள்கையின்படி புத்தர் இரண்டு நிலைகளில் இருக்கின்றார்.

  • வினைகளில் சிக்கி இருக்கும் மனித நிலை
  • வினைகள் நீங்கப் பெற்ற முக்தி நிலை

ஹீனயான பௌத்தம் புத்தரை இந்த இரு நிலைகளிலேயே காணுகின்றது. ஆனால் மகாயான பௌத்தம் இந்த நிலையில் இருந்து மாறுபடுகின்றது. மகாயான பௌத்தம் புத்தரை மூன்று நிலையில் காணுகின்றது.

மகாயான பௌத்ததில் புத்தருக்கு மூன்று உடம்புகள் இருப்பதாக அறியப் படுகின்றது. மூன்று உடம்புகளாக அறியப்பட்டாலும் அவை ஒன்று தான் என்பதே மகாயான பௌத்ததின் கருத்து. இதனை 'திரி காயா' என அவர்கள் வழங்குவர். புத்தரின் மூன்று உடல்களானவை யாதெனின்

  • நிர்மாண காயா (Nirmana Kaya : படைக்கப்பட்ட திருமேனி) - இந்த நிலை மனித வடிவில் வந்த புத்தரைக் குறிக்கும். 
  • தர்ம காயா (Dharma kaya : அறத் திருமேனி) - இந்த நிலை புத்தரின் பரிசுத்த நிலையைக் குறிக்கும்.
  • சம்போக காயா (Sambhoga kaya : இன்பத் திருமேனி) - இந்த நிலை புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை வழிநடத்துவதற்காக இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். இந்த நிலையில் சுயநலமற்று அனைவரும் ஒன்றே என்ற ஆன்மீக உணர்வினால் புத்தர் தன்னுடைய போதிசத்துவர்களை மற்ற மக்களுக்கு நன்மையைச் செய்து அவர்களையும் மீட்கும் வண்ணம் வழிநடத்துவார். இந்த நிலை ஒரு உணர்ச்சி நிலை. நிற்க.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டியது என்னவென்றால் ஒரே புத்தர் தான் மூன்று நிலைகளில் இங்கே அறியப்படுகின்றார். அதாவது மனிதனாக வந்த புத்தர் (நிர்மாண காயா) மக்களுக்கு மீட்படையும் வழியைக் காட்டிவிட்டு என்றும் இருக்கும் பரிசுத்த நிலையுடன் (தர்ம காயா) இணைகின்றார். தர்மகாயா நிலையே என்றும் இருக்கும் மெய்யான நிலையாக இருக்கின்றது. பின்னர் தன்னை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களுக்கு வழிகாட்ட சம்போக காயா என்ற உணர்ச்சி வடிவினைக் கொண்டே புத்தர் வழிநடத்துகின்றார்.

மகாயான பௌத்தக் கொள்கையின்படி ஒருவன் தன்னுடைய வினைகளில் இருந்து நீங்கி போதிசத்துவ நிலையை (முக்திக்கு தயாரான நிலை) அடைந்து விட்டான் என்றால் அவனுடைய கடமை மற்றவர்களையும் அந்நிலைக்கு கொண்டு வருவதாகவே ஆகின்றது. ஒருவன் அவனது முக்தி நிலைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக் கூடாது. மாறாக மனித குலத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் அவன் கடமையாற்ற வேண்டி இருக்கின்றது. இதுவே ஒவ்வொரு போதிசத்துவரின் கடமை.

வினைகளில் இருந்து விடுதலை அடைவதோடு ஹீனயான பௌத்ததில் ஒரு மனிதனின் கடமை முடிந்து விடுகின்றது. ஆனால் மகாயான பௌத்தமோ மக்கள் அனைவரும் ஒருவரே...எனவே ஒருவனின் முக்தி மற்றவர்களுக்கு பயன்படவில்லை என்றால் அம்முக்தியினால் யாதொரு பயனும் இல்லை என்றே கூறுகின்றது.

எனவே புத்தரை ஏற்றுக் கொண்ட போதிசத்துவர்களின் கடமை மற்ற மக்களை வழிநடத்துவதாகவே இருக்கின்றது. அவர்களின் அந்த கடமையில் அவர்களை புத்தர் தனது சம்போக காயா என்ற வடிவில் இருந்து வழிநடத்துகின்றார் என்பதே மகாயான பௌத்ததின் கருத்தாகும். சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார். எனவே தான் அந்த நிலையை ஓர் உணர்ச்சி நிலை என்றுக் கூறுகின்றனர். அதனை உணரத் தான் முடியும். சரி இருக்கட்டும். இங்கே நாம் கண்டது என்னவென்றால்,

பௌத்தத்திலும் ஓர் இறைவன் (புத்தர்) மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்ற கோட்பாடே இருக்கின்றது. இதுவும் கிருத்துவக் கோட்பாட்டினைப் போன்றே இருக்கின்றது.
மேலும் இக்கருத்துக்கள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே காணப்படுகின்றன எனபதும், பௌத்தரின் இயற்கைக்கு மீறிய பிறப்புக் கதையும் இன்னும் பல விடயங்களும் நிச்சயம் சிந்திக்கத் தக்கவைகளாகத் தான் இருக்கின்றன. இருந்தும் அவைகளை இந்த பதிவினில் காண்பது சரியானதொன்றாக இருக்காது. இந்தத் பதிவின் நோக்கம் ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருப்பதனைப் போன்ற கோட்பாடுகள் எந்தெந்த சமயங்களில் இருக்கின்றன என்பதனைப் பற்றிக் காண்பதே ஆகும். எனவே இப்பொழுது மகாயான பௌத்தத்திலும் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்ற கருத்து காணப்படுகின்றது என்பதனைக் கண்டாயிற்று. இனி நாம் இக்கோட்பாடு சைவ வைணவ சமயங்களில் இருக்கின்றதா என்றே காணலாம்...

தொடரும்...!!!

பி.கு:

தொடர்புடைய பதிவுகள் :

கடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு பார்வை - 1
புத்தன் எத்தனை புத்தனடா…!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு