முதலாம் உலக யுத்தம்...!!!

நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்...!!! நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.

அனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.

'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்து இருக்கின்றது. ஆரம்பிப்போம்...!!!" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.

யுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.

அன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.

இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.

அனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.

பின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.

1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.

மிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.

செர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.

"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன்னிப்பு கேட்டாக வேண்டும்..."

செம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.

ஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

செர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா? செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.
 ஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

செம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.

சாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்

"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...!!!"

அவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவில் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.

மேலும் சில குறிப்புகள்:

1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.

2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.

3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை? ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ?

தெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:
1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்
2) http://www.frontlineonnet.com/fl2621/stories/20091023262112500.htm
3) http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281908%29#Madras_to_Penang
4) http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
5) http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras

1 கருத்துகள்:

WOW! I was unaware of this history. Thanks for sharing.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு