வணக்கம் நண்பர்களே...!!!

வரலாற்றினைப் பற்றிய தொடரில் சமயங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வந்து இருக்கின்றேன். நன்றாகவே தெரியும்...வில்லங்கமான தலைப்புத் தான். இருந்தும் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது இயன்ற அளவு. காரணம் இன்று உலகம் இருக்கும் கவலைக்கிடமான நிலைக்கு ஒரே தீர்வு ஆன்மிகம் தான் என்று நான் உறுதிப்பட நம்புவதே ஆகும்.

ஆனால் சமயங்கள் என்று வரும் பொழுது ஒவ்வொரு சமயத்தினரும் ஒவ்வொரு கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றனர். அவை மட்டுமே உண்மை என்றும் அவர்கள் நம்பவும் செய்கின்றனர். பிழை இல்லை...அவர்களின் சமயத்தினைச் சார்ந்தவர்கள் அவ்வாறு தான் அவர்களுக்கு கூறி இருக்கின்றனர். ஆனால் நான் அனைத்துச் சமயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பினை உடையவை என்றும் இறைவன் ஒருவனே என்றும் நம்புகின்றேன். அனைத்துச் சமயங்களையும் நான் காணும் போதும் அந்த உண்மையையே காணுகின்றேன்.

அனைத்துச் சமயங்களுக்கு இடையிலும் மாபெரும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஒற்றுமைகளை மறைத்த வண்ணம் மாபெரும் அரசியலும் இருக்கின்றது. அந்த அரசியலினைப் புரிந்துக் கொண்டால் தான் அந்த ஒற்றுமைகளை நாம் காண முடியும். நான் என்னால் இயன்ற அளவு நான் அறிந்தவனவற்றை நான் உண்மைகள் என்று நம்புவனவற்றை, அறிந்துக் கொண்டு இருப்பதை உங்களுடன் பகிரவே முயல்கின்றேன். காரணம் ஒரு நம்பிக்கை.... என்னுடைய பதிவுகளில் ஆழ்ந்தக் கருத்துக்களாக இருப்பது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றக் கோட்பாடும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றக் கோட்பாடுமே என்ற உண்மைகளே ஆகும் என்பதனை படிப்பவர்கள் அறிந்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தான்.

இன்றுள்ள சமயங்கள் எவ்வாறு இருக்கின்றன என்றால் அரசியல் கட்சிகளைப் போலவே இருக்கின்றன.

கலைஞர் தவறு செய்கின்றார் என்றுக் கூறினால்... 'அப்படினா ஜெயலலிதா யோக்கியமா' என்றே பதில் வரும்... அவ்வாறே ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினால் 'உங்க கலைஞரப் பத்தி தெரியாதா'... என்றே பதில் வரும். அதாவது நாம் ஒரு கருத்தினை கூற விரும்பினால் உடனே நாம் எதிர் அணியினைச் சார்ந்தவராக மாற்றப்பட்டு விடுகின்றோம். திமுகவினைக் குறைக் கூறினோம் என்றால் நாம் அதிமுகவாக கருதப்படுகின்றோம். அவ்வாறே அதிமுகவினைக் குறைக் கூறினோம் என்றால் திமுகவாக கருதப்படுகின்றோம். இவ்வாறு மாறி மாறி மற்றவர்களைக் குறைக் கூறிக் கொள்வார்களே தவிர தாங்கள் தவறு செய்கின்றோம் என்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் திமுகவில் இருந்து பிரிந்தது தான் அதிமுக என்று கூறினால் அவ்வாறு கூறியவர் அன்று முட்டாளாகவே கருதப்படக் கூடுமாயிருக்கும். மேலும் அவ்விருகட்சிகளும் பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே எழுந்தவை என்றுக் கூறினோம் என்றால் நம்மை அன்று உலகம் பார்க்கும் பார்வையே வேறாக இருக்கக் கூடும். இன்றே பலர் திமுக தோன்றியதின் காரணத்தை மறந்து விட்டார்கள்...இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின் அக்காரணம் அவர்களுக்கு நினைவில் இருக்கவா செய்யும்? வரலாற்றினை மட்டும் மறைக்கும் வல்லமை அப்பொழுது கிடைத்தால் அக்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்களே முதலில் வந்த கட்சி என்றே கூற ஆரம்பித்து விடுவர்.

அதே நிலைமை தான் இன்று அனைத்துச் சமயங்களுக்கும்...அனைத்துச் சமயங்களும் அந்தந்த சமயங்களே உண்மையான சமயங்கள் என்றும் மற்ற சமயங்கள் எல்லாம் காலத்தில் எப்படியோ சிலரால் அரசியல் நோக்கிற்காக தோற்றுவிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே கருதுகின்றன.

ஆனால் உண்மை என்ன? அனைத்து சமயங்களும் தொடர்பில்லாமல் தனித்தனியாகவா தோன்றின? சமயங்களுக்குள் தொடர்பே இல்லையா? என்று நாம் காண வேண்டும் என்றால் அனைத்து சமயங்களைப் பற்றியும் நாம் நன்கு அறிய முயற்சி செய்ய வேண்டி இருக்கும்…சமயக் கருத்துகள், அன்றைய சூழலில் நிலவிய அரசியல் கொள்கைகள்…வரலாறு…போன்றியவற்றினை நாம் கேள்விகளோடே அணுக வேண்டி இருக்கும்.

காரணம் சமயங்கள் என்பவை அந்தளவு விடயங்களைக் கொண்டு விளங்குபவை… அத்துடன் நாம் காணுகின்ற கால அளவும் சாதாரணது அல்ல. உலகத் தொடக்கத்தில் இருந்து வரலாற்றினைக் காண்பது, சரியாகப் புரிந்துக் கொள்வது என்பது எளிதான ஒரு செயல் அல்ல…!!! அதுவும் இன்று சமயங்கள் அனைத்தும் அரசியலினால் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே கடினமான அந்தச் செயல் மேலும் கடுமையானதொன்றாக ஆகின்றது.

எனவே சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுக் கூறுவது யாதொரு பயனையும் தாராது மாறாக அந்தக் கூற்றுகள் விரைவில் அழிந்தும் போகும். அவ்வாறு இருக்க உண்மையினைத் தேடுவோர் அனைத்து விதத்திலும் ஆராய வேண்டித்தான் இருக்கின்றது. இறைவனையும் உண்மையான வரலாற்றையும் நம்புவோர்/விரும்புவோர் இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது.

என்னுடைய பதிவுகளும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியே…!!! எனது பதிவுகளை அப்படியே தாங்கள் நம்ப வேண்டும் என்று நான் கருதவில்லை. மாறாக அதனைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். சிந்திக்க வேண்டும் கேள்வி கேட்க வேண்டும்…உண்மையினைத் தேட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

நமக்கு நமது நூல்களில் உள்ள கருத்துக்கள் தெரியாது…ஏன் நமது சமய நூல்களையேத் தெரியாது…அவ்வாறு தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கின்றோம். ஆனால் அந்த நிலை போதும். உண்மையிலேயே நமது சமயம் என்ன சொல்கின்றது, இறைவன் இருக்கின்றானா இல்லையா? வாழ்கை என்றால் என்ன என்றும் நாம் தேடி ஆக வேண்டிய நிலை இன்று நம்மிடையே இருக்கின்றது. சமயங்களைக் கடந்து இறைவனைத் தேடுவோம்…ஒன்று அனைவரையும் சமமாக படைத்த ஒரே இறைவன் இருக்கின்றான் என்றுக் கூறுவோம் இல்லையேல் இறைவனே இல்லை என்றுக் கூறுவோம்.

காரணம் இறைவன் என்று ஒருவன் இருந்தான் என்றால் அவன் அனைவரையும் சமமாகவேத் தான் படைத்து இருப்பான்.

நம்முடைய பயணங்களில் முக்கியமாக இரண்டு சமயங்களைப் பற்றி நாம் கண்டு கொண்டு வந்து இருக்கின்றோம்…இறுதியாக அவற்றைப் பற்றி சில கேள்விகள்/விடயங்கள் ஆகியவற்றை உங்களின் சிந்தைக்கு விட்டுச் செல்ல முயல்கின்றேன்…முதலில் இந்து சமயத்தில் இருந்தே ஆரம்பிப்போம்…!!!

கல் வழிபாடு/இயற்கை வழிபாடு:

1) சிந்து சமவெளியில் காணப்படும் கல் வழிபாடு, விவிலியத்திலும் காணப்படுகின்றது....இசுலாமியச் சமயத்திலும் காணப்படுகின்றது. கிருத்துவர்கள் இயேசுவை 'வாழும் கல்' என்கின்றனர். மெக்காவில் 'மா கல்' என்று கல்லினை வழிப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். - இது எல்லாம் வெறும் அர்த்தமில்லா ஒற்றுமைகளா?

திருநீறு:

1) இன்று திருநீறு என்றாலே அது சைவர்களின் சின்னம்...கிருத்துவர்களுக்கும் திருநீறுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று கருதுவதற்கு வாய்ப்பே இல்லை...அவ்வாறு இருக்கும் பொழுது விவிலியத்தில் திருநீற்றினைப் பற்றிய குறிப்புகளும் அவைகள் சமய சின்னமாக அணியப்பட்ட செய்திகளும் காணப்படுவது - வெறும் தற்செயலான ஒற்றுமைகளா?

2) மேலும் ‘நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்” என்று நம்மாழ்வார் அவர்களும் பாடி உள்ளார். நண்பர் ஒருவர் 'செவ்வே' என்பது நேராக இடப்படும் சின்னம். எனவே இது சின்னம் தான் என்றார். சரி தான். நேராக மூன்று கோடுகளை இட்டால் அது வைணவச் சின்னம் தான். ஆனால் இங்கே திருநீற்றினை அல்லவா நேராக சூடி இருப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. ஏன் அவ்வாறு கூறப்பட்டு உள்ளது - தற்செயலான ஒற்றுமையா அல்லது பிழையா?

3) இன்று சைவ சின்னமானது படுக்கை வசமாக திருநீற்றினால் மூன்று கோடுகள் போடுவது…அவற்றில் நடுக் கோட்டினில் குங்குமம் இட்டுக் கொள்வது. வைணவ சின்னமோ செங்குத்தாக மூன்றுக் கோடுகள் இட்டுக் கொள்வது அதன் நடுக் கோடு செந்நிறமாக இடப்படும்? – இந்த சின்னங்களுக்கு அர்த்தம் யாது?… ஏன் மூன்றுக் கோடுகள்?

4) மேலும் திருஞானசம்பந்தர் ‘வேதத்தில் உள்ளது நீறு’ என்று திருநீற்றினைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று வேதங்கள் என்றுக் கருதப்படுவனவற்றில் திருநீற்றினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட கிடையாது. அப்படி இருக்க ஞானசம்பந்தர் குறிப்பிட்ட வேதம் யாது?

கடவுளின் சக்தி ஆணா பெண்ணா:

1) சக்தியின் ஆண் வடிவம் தான் பெருமாள் என்று சைவ ஆகமங்கள் கூறுவதாக சைவ அறிஞர்கள் கூறுகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் படி சிவனுக்கு சக்தியோடு இரு பிள்ளைகளும், அவ்வாறே பெருமாளோடு இரு பிள்ளைகளும் கூறப்பட்டு உள்ளார்களே? - அது தற்செயலான ஒற்றுமையா அல்லது பிழையா? இல்லை சைவ ஆகமங்கள் தவறாக கூறுகின்றனவா?

2) “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்றே திருநாவுக்கரசர் கூறுகின்றார்…அதாவது அம்மனும் பெருமாளும் ஒன்றே என்றே கூறுகின்றார். அது ஏன்?

3) மேலே உள்ள கூற்றுகளை மெய்ப்பிப்பது போல ஏன் புராணங்களில் பெருமாளுக்கு மட்டும் மோகினி வடிவம் காணப்படுகின்றது?

இறைவனின் பிள்ளை:

1) பிள்ளையார் - ஒருவர் சக்தி பிள்ளையாரை அழுக்கினைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றார்...மற்றொருவர் சிவன் ஒரு யானையாகவும் சக்தி மற்றொரு யானையாகவும் மாறி பிள்ளையாரைப் படைத்ததாக கூறுகின்றார்...இன்னொரு கருத்தோ பௌத்தர்களால் அழிக்கப்பட்ட சைவர்களை எண்ணி பிள்ளையார் உருவாக்கப்பட்டார் என்று கூறுகின்றார்...ஆனால் இக்கருத்துக்களுக்கு எல்லாம் முன்னரே சமணத்தில் பிள்ளையாரைப் போன்ற தோற்றம் உடைய ஒரு இயக்கன் இருந்து இருப்பது ஏன்? அவ்வாறே புத்தர் இருந்த அரச மரத்தின் அடியில் பிள்ளையார் வந்தது எப்படி? - இவற்றில் எவை உண்மை... என்ன தான் நடந்தது?

2) வரலாற்றுச் சான்றுகளின்படி முருகன் என்றப் பெயர் பிள்ளையாருக்கு முன்னரே காணப்பட்டு இருக்க, எவ்வாறு பிள்ளையார் அண்ணன் ஆனார், எப்படி முருகன் தம்பி ஆனார்?

3) மேலும் பிரமனும் சிவனுக்கும் பெருமாளுக்கும் மகனாக அறியப் பெறுகின்றான். அது ஏன்? பிரமனுக்கும் பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு ஏன்?

4) ஏன் விநாயகரும் முருகனும் வினைத் தீர்க்கும் கடவுளராய் குறிக்கப் படுகின்றனர்? விநாயகர் - வினைத் தீர்க்கும் விநாயகர் என்று வழங்கப்பெருகின்றார்... முருகனோ - வேலுண்டு வினையில்லை என்று வழங்கப்பெருகின்றார். ஏன் இறைவனின் பிள்ளைகளாக அறியப் பெறுவோர் வினையினைத் தீர்பவராய் அறியப்படுகின்றார்கள்?

5) மேலும் பிரமன் - 'பாவியர் பாவம் தீர்க்கும் பரமன் ஆய் பிரமன் ஆய்' என்ற வரிகளின் மூலம் பாவம் தீர்பவனாய் அறியப்பட்டு இருக்கின்றான்... அது ஏன்?

பாவம் போக்குதல்:
*
1) நீரில் மூழ்கினால் பாவம் போகும் என்பது இன்றைக்கு இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் அதே கருத்தும் கொள்கையும் விவிலியத்தில் காணப்படுகின்றதே. ஆற்றினில் மூழ்க வைத்து ஒருவரின் பாவங்களை போக்குவது என்பது விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள ஒரு விடயமாயிற்றே... இவ்வாறு இருக்க இவையும் தற்செயலான ஒற்றுமையா? இந்த பழக்கங்களுள் எது முன்னர் வந்தது?

வேதங்களும் அவைகளின் காலமும்:

1) மேலும் சைவ வைணவ சமயங்கள் வேதத்தில் இருந்தே தோன்றின என்றே இது வரை கருதியும் கூறப்பட்டும் வந்துள்ளது. ஆனால் சமீப காலத்தில் தான் சைவ வைணவ சமயங்களுக்கும் இந்த ரிக்,யசுர்,சாம, அதர்வண ஆகிய வேதங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமீப காலத்திலேயே இக்கருத்துகள் தோன்றுவதற்கு காரணம் அது வரை வேதங்களை மற்ற மக்கள் படிக்க கூடாது என்று இருந்த சட்டமே ஆகும். ஒரு சமயத்தின் புனித நூல்கள் என்று கூறப்படுவனவற்றை மற்றவர் படிக்கக் கூடாது என்று கூற வேண்டியதன் அவசியம் என்ன?

2) மேலும் திருஞானசம்பந்தர் 'வேதத்தில் உள்ளது நீறு' என்று திருநீற்றினைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று வேதங்கள் என்றுக் கருதப்படுவனவற்றில் திருநீற்றினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட கிடையாது. அப்படி இருக்க ஞானசம்பந்தர் குறிப்பிட்ட வேதம் யாது?

3) மேலும் வேதங்கள் என்றாலே அவை நான்கு என்பது தான் எண்ணிக்கை. அவ்வாறு இருக்க மனு நீதி சாஸ்திரத்தில் அனைத்து இடங்களிலும் மூன்று வேதம் ஒதினவர்கள், மூன்று வேதங்கள் என்றே கூறப்பட்டு உள்ளதே அது ஏன்?

4) மேலும் மனு நீதியின் காலம் 10000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்புத்தகத்தினில் புத்தரைப் பற்றி குறிக்கப்பட்டு உள்ளது, அர்த்த சாஸ்திரம் என்னும் நூலினைப் பற்றிக் குறிக்கப்பட்டு உள்ளது... மேலும் அந்நியர்களால் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட ஆர்ய வர்த்தம் என்ற இடத்தினைப் பற்றியும் குறிப்பு வருகின்றது. அவ்வாறு இருக்க மனு நூல் எவ்வாறு 10000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு இருக்க முடியும்?

இராமாயணக் காலம்:

1) அதே போல் இராமாயணத்திலும் புத்தர்களைப் பற்றிக் குறிப்பு வருகின்றது. அப்படி என்றால் அந்த நூலும் புத்தர் தோன்றிய காலத்திற்கு பின்னர் தோன்றிய நூலாகத் தானே இருக்க வேண்டும்? புத்தர் தோன்றியதற்கு பின்னரா குரங்குப் படை இலங்கையை துவம்சம் பண்ணியது?

1. இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் ராமன் கேட்கும் பொழுது 'பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 100ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, 'திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கும் பேதமில்லை' என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மேற்படி காண்டம், 106 ஆவது சர்க்கம்; 412 ஆவது பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம் போல் கட்டப்பட்ட ஒரு உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தரகாண்டம் 15ஆவது சர்க்கம்; 69 ஆவது பக்கம்)

(சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு) - ராமாயணம் சில குறிப்புகள்- பெரியார்
*
மகாயான பௌத்தம்:

1) மகாயான பௌத்தம் இந்துக்களின் செல்வாக்கில் உருவான பௌத்தமாக இருந்தால் அதில் இந்துக் கொள்கைகள் தானே இருக்க வேண்டும்...மாறாக கிருத்துவின் கருத்துக்கள் அவற்றில் காணப்பட வேண்டியத் தேவை என்ன?

2) சிலர் மகாயான பௌத்தம் கி.மு விலேயே தோன்றிவிட்டது என்று கூறுகின்றனர்...ஆனால் வரலாற்றின் படி குசானப் பேரரசன் ஆன கனிஷ்கனின் காலத்தில் தான் மகாயான பௌத்தம் தோற்றுவிக்கப் படுகின்றது. அவன் காலத்தில் தான் புத்த சங்கத்தின் நான்காவது மாநாடு நடக்கப்பெருகின்றது. அதில் தான் மகாயான புத்தம் முழு உருப் பெறுகின்றது என்பதே இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள். அவனின் காலம் கி.பி முதல் நூற்றாண்டே.

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு