ஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன்? போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு.

ஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட விவசாயியோ "சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா?" என்றார்.

அதற்கு அந்த மனிதன் "இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். "ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன.

மீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். "அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க.

சற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

முதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன? அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன? இல்லை தானே.

ஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவதுஅவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா?. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது.

இன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தைய சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது.

"வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்." எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

1 கருத்துகள்:

நல்ல தேடல்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு