இன்றைக்கு நம்முடைய உலகத்தினை சற்று உற்றுப் பாருங்கள்.

௧) பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து நிலவுக்கு மனிதனை அனுப்புகின்றனர். ஆனால் பக்கத்துக்கு வீட்டில் உணவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவிட பாவம் அவர்களிடம் பணம்... மன்னிக்கவும் மனம் இருப்பதில்லை.

௨) பல லட்சங்கள் செலவு செய்து விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளை மேம்படுத்துவர், ஆனால் எலிகளால் உண்ணப்பட்டு வீணாகும் தானியங்களை சேமிக்க புது சாக்குத் துணிப்பைகளை வாங்குவதற்கு பணம் இருப்பதில்லை.

௩) அண்டை நாட்டிலே லட்சக்கணக்கான சகோதர சகோதிரிகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்படுவர், இருந்தும் பலரின் கவலை அதுவல்லை, அந்த நாட்டிடம் மட்டைப் பந்து விளையாட்டில் தோற்பதே பலரின் கவலையாக இருக்கின்றது.

சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் மனம் இருக்கின்றது ஆனால் மனிதம்....?. அதனால் பணமில்லை எனவே அது தேவை இல்லை.

எனவே இந்நிலையில் அனைத்துப் பிரச்சனைகளும் இரண்டாக பிரிகின்றன. ஒன்று என்னை பாதிக்கின்ற பிரச்சனைகள்...மற்றொன்று மீதம் உள்ள அனைத்துப் பிரச்சனைகளும். அவற்றைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்று அவை என்னை பாதிக்குமோ அன்று நான் பார்த்துக் கொள்ள வேண்டும். அது வரையிலும் அது என் பிரச்சனை அல்ல. அதனைப் பற்றி நான் கவலைப்படவும் வேண்டியது இல்லை. உதாரணத்துக்கு பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய நீர் நிலைகளை அழித்துக் கொண்டு இருப்பது எப்பொழுது நம்முடைய பிரச்சனை ஆகும் என்றால் நாம் அருந்த நீர் கிட்டாத நிலை வரும் போது தான் அது நம்முடைய பிரச்சனை ஆகும். அது வரையிலும் அதாவது நாம் குடிக்க நம்மால் நீரினைப் பெற்றுக் கொள்ளும் நிலை இருக்கும் வரை அந்தப் பிரச்சனை நம்முடைய பிரச்சனை ஆகாது. அவ்வாறு சிந்திக்கத் தான் இந்தச் சமூகமும் நம்மைச் சொல்கின்றது.

உண்மையைச் சொல்லுங்கள் நாளைக்கே கூடங்குளம் அணு மின் உலை வெடித்து ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் என்ற செய்தி வந்தால் உண்மையிலையே நம்முடைய மனம் அந்த மக்களுக்காக துடிக்குமா அல்லது 'ஐயகோ...இனிமேல் மின் வெட்டு பழையப்படி வந்து விடுமே' என்று மட்டுமே வருந்துமா?. சில செய்திகளின் படி சப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அந்த நாடே பேரழிவினை சந்தித்த பொழுது, அமெரிக்காவில் சப்பானியர்களின் உயிருக்கு மக்கள் வருந்தியதை விட 'ஐயகோ பங்குச் சந்தை சாய்ந்து விடுமே' என்று வருந்தியது தான் அதிகமாம். மனித உயிர்களை விட இக்காலத்தில் பங்குச் சந்தைகளும் பணமும் தான் அதிக மதிப்பினை பெற்று இருக்கின்றன. அதன் விளைவாக வாழ்வினை அமைதியாக வாழ வேண்டிய மனிதன் வாழ்வினை அவனை சுற்றி இருக்கும் நுகர்வுக் கலாசாரம் போன்ற பல வலைகளில் தவற விட்டுவிட்டு வெறுமையாக நிற்கின்றான். அவனின் வாழ்கை அவனை மீறிய வேகத்தில் அவன் விரும்பாத பாதையில் அவனை மீறியே பணம் என்ற ஒன்றைச் சுற்றி ஒரு முடியா வட்டத்தினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அவனது வாழ்க்கை அர்த்தம் ஏதுமற்ற ஒரு புதிராக போகின்றது. பயம் அவனை ஆள்கின்றது. இந்த நிலை மாறவே நாம் சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.சமயங்கள் எனப்படுபவை பொதுவாக மக்களிடத்தில் அன்பையும் இறை பக்தியையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டிய கடமைகள் உடையவை ஆகும். மக்களுக்கு வாழ்வினைப் பற்றி விளக்கி இறைவனின் கருத்துக்களை பரப்பி உலகம் முழுவதும் அமைதியும் அன்பும் பரவச் செய்வதே அவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றுமே நாம் அறிவோம். எனவே மக்கள் அமைதியின்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களுள் மனித நேயம் சுருங்கிக் கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் "ஐயா பிரச்சனைகள் இவ்வளவு இருக்கின்றனவே...அமைதியின்றி மக்கள் வாடுகின்றனரே...இந்நிலையை போக்குவதற்கு நீங்கள் என்ன செய்கின்றீர்" என்றக் கேள்விகளோடு சமயங்களை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஆனால் சமயங்களை நோக்கினால் பதில்களை விட கேள்விகளே மேலும் அதிகமாக கிடைக்கின்றன. அனைத்து சமயங்களும் தனித்தனியாக பிரிந்து நின்று அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலையையே நாம் காணுகின்றோம். ஒவ்வொரு சமயத்தினையும் அடிப்படையாகக் கொண்டே பெரும் அரசியல் கோட்டைகள் கட்டி எழுப்பப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் சமயங்களும் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் கருவியாக மாறி விட்டதை நாம் வரலாற்றில் காணுகின்றோம். அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்ப வேண்டிய சமயங்கள் வெறியையும் வேற்றுமை உணர்ச்சிகளையுமே பரப்புகின்றன. அவ்வாறு சமயங்கள் மூலமாக மக்களைப் பிரித்து அதன் மூலமாக ஆதாயமடையும் அரசியல் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இன்று நிலைப்பெற்று நின்றுக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் உண்மையான நோக்கம் மக்களின் நலன் அல்ல ... மாறாக அவற்றின் நலனே அந்த சமய நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதனால் தான்,

லட்சக்கணக்கான இந்துக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பொழுது எந்த ஒரு இந்து அமைப்பும் எதிர்த்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.

புத்த மதத்தினை பின்பற்றுபவர்கள் மற்ற மக்களை படுகொலை செய்யும் பொழுது எந்த ஒரு புத்த அமைப்பும் அதனை எதிர்த்து ஒரு குரலும் எழுப்பவில்லை.


கிருத்துவின் பெயரினைக் கொண்டு பெரிய நாடுகளுள் சில அநேக சிறு நாடுகளை தாக்கி அங்குள்ள மக்களை அடிமைப்படுத்தி அவற்றின் வளங்களைக் கொள்ளை அடிப்பதை எந்த ஒரு கிருத்துவ அமைப்பும் எதிர்க்கவில்லை.
 

அல்லாவின் பெயரினைக் கொண்டு இசுலாமியர்கள் சிலர் செய்யும் வன்முறைகளை எந்த ஒரு இசுலாமிய அமைப்பும் எதிர்ப்பதில்லை.

அந்த சமய நிறுவனங்களுக்கு மக்கள் தேவை. அவர்களின் நம்பிக்கைத் தேவை. ஆனால் மக்களின் உண்மையான முன்னேற்றம்...? அது அவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவ்வாறு மக்களின் உண்மையான நலன்களில் அவர்களுக்கு அக்கறை இருந்து இருக்குமாயின் மக்களின் இன்றைய இழி நிலை என்றோ மாறி இருக்கும். ஆனால் கொடுமையான விடயம் என்னவென்றால் எதனால் மக்கள் அனைவரும் நலம் பெற்று நல்ல எண்ணங்கள் மேலோங்கி ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டுமோ, அவற்றினாலையே பல பிரிவுகளாக பிரிந்துக் கொண்டு சுய நலமாக மாக்களாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தான் கடவுளைப் பற்றிய கேள்வி வருகின்றது. கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கின்றாரா இல்லை அவரும் ஒரு கற்பனையா?. இக்கேள்விக்குரிய விடையை சமயங்களிடம் கேட்டோம் என்றால் அவர்களின் பதில்கள் மேலும் நம்மை பிரிக்கத் தான் செய்கின்றன.

இந்துக்கள் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.
கிருத்துவர்கள் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.
இசுலாமியர்களும் அவர்கள் கடவுளை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்கின்றனர்.

இந்தப் பதில்களை இரண்டு விதமாக காணலாம்.

௧) அனைத்து சமயங்களும் மற்ற சமயங்களின் கடவுள் இல்லை என்றுக் கூறுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதே சமயங்களின் அந்தக் கூற்றுகளின் மூலம் நமக்கு புலனாகும். எனவே கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றும் அவர்களின் கூற்று மூலம் நாம் கருதலாம். இது நாத்திக கூற்றாகும்.

௨) அனைத்து சமயங்களும் அவற்றிற்குரிய கடவுள் இருக்கின்றார் என்றே கூறுகின்றன. இந்நிலையில் அனைத்து சமயங்களும் ஒரே கடவுளைத் தான் கூறுகின்றனவா? அந்தச் சமயங்களுள் ஒற்றுமைகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் தோன்றிய ஒரு இயக்கம் அல்லது ஒரு கருத்து நாளடைவில் பல பிரிவுகளாக பிரிந்து பின்னர் அவைகளுக்குள்ளையே சண்டை இட்டுக் கொள்ளும் நிகழ்வுகளை நம்முடைய காலத்திலேயே நாம் காணுகின்றோம். எனவே இந்த சமயங்கள் எவ்வாறு தோன்றின, அவற்றினுள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா,
அவை அனைத்தும் ஒரே இறைவனைத் தான் தொழுகின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறுக் கண்டால் தான் இன்றைய சமயங்கள் எவ்வாறு திரிபு பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன என்பதையும் அறிந்துக் கொண்டு, அதனை சீர்படுத்தி, சமயங்களின் உண்மையான இலக்கினை அவற்றினை அடைய செய்யலாம்.

அந்த இரண்டாவதுக் கருத்தை நோக்கியே நம்முடைய பயணம் சென்றுக் கொண்டு இருக்கின்றது. சமயங்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன, ஆனால் காலத்தில் சிலரால் அவை ஆட்கொள்ளப்பட்டு அவற்றின் நிலை மாறி மக்களை ஏமாற்றும் இன்றைய நிலைக்கு வந்து விட்டன என்பதே நம்முடைய கருத்து. அந்த கருத்தினை மெய்ப்பிக்கவே நாம் வரலாற்றினைக் காண வேண்டி இருக்கின்றது. நம்முடைய தேடல்களுக்கு எதாக பல கருத்துக்கள் அந்தந்த சமயங்களின் புனித நூல்களிலேயே மறைந்து இருப்பதும் நம்முடைய இந்தத் தேடலை மேலும் ஆர்வத்துடன் தொடரச் செய்கின்றது. உதாரணத்துக்கு,


 

இன்று சைவ சமயத்தில் காணப்படும் சிவலிங்க/கல் வழிபாடு போன்ற வழிபாடுவிவிலியத்திலும் காணப்படுவதும்
(இணைப்பு)


 

அதே போன்ற ஒரு கல்லைத் தான் மெக்காவில் (மெக்கா - 'மா' கல் என்ற சொல்லின் திரிபு என்றே மா.சோ. விக்டர் கருதுகின்றார் - மா கல் - பெரிய கல் - பெரிய இறைவன்) இசுலாமியர்களும் சுற்றி வந்து வணங்குகின்றனர் போன்ற செய்திகளும் வெறும் ஒற்றுமையாக சிலரின் பார்வைக்குப் பட்டாலும் அனைத்து சமயங்களும் ஒன்று தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தத்துவங்களை அடிப்படையாக நம்புவோரால் அவ்வொற்றுமைகள் நன்றாக ஆராயப்பட்டு மக்களிடையே சமயங்களால் ஏற்பட்டு உள்ள வேற்றுமைகள் களையப்பட வேண்டிய தேவை இன்றியமையாததாக இன்று இருக்கின்றது.

மேலும் கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் ஆப்பிரகாம் என்பவன் 'ஊர்' என்ற இடத்திலே இருந்து சென்றான் என்ற செய்தியும் அந்த சமயங்களில் குறிக்கப்பட்டு உள்ள மனிதர்கள் தமிழர்களா என்றும் நம்மை எண்ண வைக்கின்றன. ஆராயவும் வைக்கின்றன.
நிற்க.

நம்முடைய சமயங்கள் அனைத்திலும் பல ஆன்மீகக் கருத்துகளையும் வாழ்வியல் கருத்துக்களும் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றை மறைத்து பல அரசியல் கோட்டைகளும் கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் நம்முடைய வாழ்வினை புரிந்துக் கொள்ளவும், உண்மையான ஆன்மீகத்தை அறிந்துக் கொள்ளவும் நாம் வரலாற்றினைக் கண்டுக் கொள்ள தான் வேண்டி இருக்கின்றது. நம்முடைய செல்வங்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டித் தான் இருக்கின்றது.

மீட்டெடுப்போம்... உண்மைகளையும் வாழ்வினையும்!!!

பி.கு:

சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ தாக்கத்தில் எழுந்தன என்று கூறினால் நாம் கிருத்துவத்தை பரப்புவதாக அர்த்தம் அல்ல. அவ்வாறு கிருத்துவத்தை பரப்புவதாக இருந்தால் கிருத்துவின் தந்தை சிவன் என்றும் கிருத்துவர்களின் சின்னம் சிலுவை அன்று திருநீறு தான் என்றும் கூறி இருக்கத் தான் தேவை இல்லையே. (இணைப்பு)

நண்பர்களே இந்த பயணம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கோட்பாட்டினை அடிப்படையாக கொண்ட ஒன்றே அன்றி எந்த ஒரு சமயத்தினையும் குறிப்பாக தனிப்பட்ட முறையில் ஆதரித்து எழுதப்படும் ஒன்று அல்ல என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர் என்ற நம்பிக்கையிலையே தொடருகின்றேன். நன்றி.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு