நோவாவினை சந்திக்கும்  முன் உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது…!!!

உலகம் இதற்கு முன்னர் அழிந்து இருக்கின்றதா? ஆம் என்றால் எவ்வாறு?

இந்தக் கேள்விகளுக்கு,
கிருத்துவர்கள் - ஆம் உலகம் அழிந்து இருக்கின்றது. கடவுள் வெள்ளத்தின் மூலம் இவ் உலகத்தினை அழித்தார் என்றும்

இந்துக்கள் - ஆம், கிருசுனரின் மச்ச அவதாரத்தின் போது, உலகம் வெள்ளத்தால் அழிந்தது என்றும்

தமிழ் அறிஞர்கள் - ஆம், குமரிக்கண்டம் கடற்கோள்களால் அழிந்தது என்றும் கூறுவர்.

மேலாக சுமேரிய மக்களிடத்தும், மெசொபொடாமிய மக்களிடத்தும் உலகம் வெள்ளத்தால் அழிந்தக் கதைகள் உள்ளன. அப்படி என்றால் இந்த உலகம் எத்தனை முறை அழிந்து உள்ளது?.

அதுவும் கடற்கோள்களாலேயே அத்தனை முறையும் அழிந்து இருக்கின்றதா?நம்புவதற்கு இந்தக் கருத்து ஏதாக இல்லையே!!!

மேலும் விவிலியத்தில்,

 ”இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.” - ஆதியாகமம் (9 - 11 )

என்று இறைவன் வாக்குக் கொடுப்பதாக அமைந்து இருப்பதினால் இன்னொரு உலக அழிவு நீரினால் வந்து இருக்க வாய்ப்பில்லை.

மேலும் இந்துக் கதைகளிலும் உலகம் மச்ச அவதாரத்திற்கு பின்னர் அழிந்ததாக வரலாறு இல்லை.

இந்த கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்த்தோம் என்றால் உலகம் ஒரே ஒரு முறை நீரினால் அழிக்கப்பட்டு இருக்கின்றது  என்றும் அந்த வரலாறே காலப்போக்கில் மனிதன் சென்ற இடங்களில் எல்லாம் பல்வேறுக் கதைகளாக மாறி இருக்கின்றது என்றும் புலனாகும்.
சரி… இப்பொழுது நாம் நோவாவிடம் வருவோம்!!!

விவிலியத்தின்படி, நோவா பாவம் செய்து பெருகி இருந்த மனிதர்களுள் உத்தமனாக இருந்தவன். எனவே இறைவன் அவனைத் தேர்ந்து எடுத்து அவனை ஒரு படகினைச் செய்ய சொல்லுகின்றார். அவர் இந்த உலகினை வெள்ளத்தினைக் கொண்டு அழிக்கப் போவதாகவும், அவ்வாறு உலகம் அழியும் போது நோவா அவன் குடும்பத்தினரையும் உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் அந்தப் படகினில் ஏற்றி உயிர் பிழைக்குமாறும் சொல்லுகின்றார். அவ்வாறே நோவாவும் செய்து வெள்ளத்தில் பிழைக்கின்றான்.
மீண்டும் உலகில் அவன் வாழ்வினையும் தொடங்குகின்றான். இது தான் நோவாவின் கதை.

கதை இருக்கட்டும் நோவா உலகின் முதல் மனிதன் தமிழன் என்றுப் பறைசாட்டுவதாக சொன்னீர்களே அது என்னவாயிற்று என்று வினவுகிறீர்களா…!!!

இதோ நம் கதைக்கு வருகின்றேன்.

நோவா என்றவன் படகுடனேயே தொடர்புக் கொண்டவனாக விவிலியத்தில் அறியப்படுகின்றான். நோவா என்றால் அனைவருக்கும் படகு தான் நினைவிற்கு வரும். இங்கு தான் நாம் ஒரு தமிழ் வார்த்தையைப் பற்றிப் பார்க்க வேண்டி வருகின்றது.

‘நாவாய்’ - தமிழில் படகிற்கு வழங்கும் பலப் பெயர்களில் இதுவும் ஒன்று. இங்கு நமக்கு ஆச்சர்யம் அழைப்பது என்னவென்றால் ‘நாவாய்’ என்றச் சொல்லுக்கும் ‘நோவா’ என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தம் தான். வரலாற்று அறிஞர்களும் மொழி அறிஞர்களும் ’நாவாய்’ என்றச் சொல்லே மருவி ‘நோவா’ என்று மாறி இருக்கின்றது என்றுக் கூறுகின்றனர்.
இறைவன் ஓர் மனிதனை

‘நாவாயினைக்’ கட்டச் சொல்லுகின்றார். அந்த ’நாவாயினைக் கட்டிய மனிதனே’ காலப்போக்கில் மருவி ‘நோவாவாக’ மாறி விட்டான் என்பதே அறிஞர்களின் கருத்து.
மேலும் விவிலியத்தின்படி இறைவன் நோவாவிற்கு படகினைக் கட்ட சில அறிவுரைகள் தருகின்றார்.

“நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு” - ஆதியாகமம் ( 6 - 14)

இங்கே கொப்பேர் மரம் என்று ஒரு மரத்தினைக் குறிப்பிடுகின்றார். நீங்கள் யாராவது வேறு எங்கேயாவது ‘கொப்பேர் மரம்’ என்ற ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா?நான் கேள்விப்பட்டது இல்லை. எனவே அது கொப்பேர் மரம் தானா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது. அது ஏன் ‘காப்பெரு’ மரமாக இருக்கக் கூடாது.

‘காப்பெரு மரம்’ மொழியாக்கத்தின் போது ‘கோப்பெரு மரமாக’ மாறி இருக்கலாம் அல்லவா!!!

காப்பெரு மரமா?… அப்படி என்றால் என்ன என்றுக் கேட்கின்றீர்களா…

’காப்பெரு’ என்றால் காட்டில் உள்ள பெரிய மரம் என்று அர்த்தம். இறைவன் நோவாவை ஒரு மிகப் பெரிய கப்பலினைக் கட்டச் சொல்லுகின்றார் என்றுக் கண்டோம்.

அந்தக் கப்பலின் அளவையும் விவிலியத்தின் படி அவரே கூறி இருக்கின்றார்.

 ”நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.” - ஆதியாகமம் (6 - 15)

இந்த நீளத்தில் படகினைச் செய்ய ஒரு மரம் வேண்டும் என்றால் அது நிச்சயம் பெரிய மரமாகவே இருக்க வேண்டும். அத்தகைய பெரிய மரங்கள் காதினில் காணப்படுவதே இயற்கை. எனவே இறைவன் நோவாவினை ‘காட்டினில் உள்ள பெரிய மரத்தினைக்’ கொண்டு நாவாயினைக் கட்டு என்று சொல்லி இருக்க கூடும். அதுவே காலத்திலும் மொழியாக்கத்திலும் ‘கோப்பெரு மரம்’ என்று மருவி இருக்கக் கூடும்.நிற்க.

இது வரை நாம் நோவாவின் வரலாறு எவ்வாறு தமிழுடன் கலந்து வருகின்றது என்பதனைப் பார்த்தோம். இப்பொழுது நோவா செய்த ஒரு முக்கியமான செயலைப் பற்றிப் பார்ப்போம்.

வெள்ளம் வற்றி விட்டது. நோவாவின் கப்பலும் கரை தட்டி விட்டது. அவன் கப்பலில் ஏற்றிய உயிரினங்களோடும் அவனின் குடும்பத்தினரோடும் நோவா தரை இறங்கி விட்டான். அப்பொழுது அவனை அழியாமல் காப்பாற்றிய கடவுளுக்காக அவன் ஒருக் காரியம் செய்கின்றான். அவன் கடவுளிடம் தன நன்றியைத் தெரிவிப்பதற்காக சில மிருகங்களைப் பலி இடுகின்றான்.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.” - ஆதியாகமம் (8 - 20)

நோவாவின் இந்தச் செயலின் மூலமே உலகில் பலி இட்டு இறைவனை வேண்டும் வழிப்பாட்டு முறை தோன்றியது. அது இன்றைக்கும் நம் ஊரினில் தொடர்வதனை நாம் காணலாம். இந்தப் பலி வழிப்பாட்டு முறை தான் பின்னாளில் சமணமும் பௌத்தமும் தோன்றுவதற்கு காரணம் என்றும் நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சரி…பலி முடிந்தாயிற்று. நோவாவின் மக்களும் உலகில் பெருகுகின்றனர். பெருகி அவர்கள் உலகில் பரவ ஆரம்பிக்கின்றனர். அதைப் பற்றிய விவிலியத்தின் செய்திகள் ஆதியாகமம் 11 இல் தரப் பட்டு இருக்கின்றன…

“ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்” - 2

இங்கேயும் மக்கள் கிழக்கில் இருந்து வந்து இருக்கின்றார்கள் என்று கூறப்படும் செய்தியை கவனியுங்கள். நாம் முன்னரே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகத்தினை குறிக்கலாம் என்று கண்டு இருந்தோம். எனவே விவிலியத்தின் இந்தச் செய்தியின் படி மக்கள் கிழக்கில் இருந்து சிநேயார் என்னும் தேசத்திற்கு செல்லுகின்றனர்.

எனவே ‘கிழக்கு’ என்பது சிந்து சமவெளி நாகரீகமாக இருந்தால் இந்தச் செய்தியின் படி மக்கள் அதில் இருந்து அதற்கு மேற்கில் உள்ள சிநேயார் என்னும் தேசத்திற்கு சென்று இருக்க வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு மேற்கில் ‘சிநேயார்’ என்னும் தேசம் இல்லை. ‘சுமேரியா’ என்னும் தேசமே இருந்து இருக்கின்றது. இங்கு தான் மொழி அறிஞர்களின் உதவி நமக்குத் தேவைப்படுகின்றது.

அவர்களின் கூற்றுப்படி ‘சுமேரியர்’ என்ற சொல்லே ‘சிநேயார்’ என்று திரிந்து உள்ளது. எனவே மக்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கில் உள்ள சுமேரியாவிற்கு சென்றனர் என்பது வரலாற்று உண்மையாகின்றது.
அப்படி சுமேரியாவிற்கு பயணித்த மக்கள் யார் என்பதற்கும் விவிலியத்தில் அதே ஆதியாகமத்தில் விளக்கம் இருக்கின்றது…

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.” - 1

“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.” - 3

மேலே உள்ள வாக்கியங்களில் “ நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம்” என்ற வார்த்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
உலகிலேயே முதன்முதலில் செங்கல்லை சுட்டு கட்டிடங்கள் கட்டும் பழக்கம் தமிழனுக்கே உண்டு என்பது ஒரு வரலாற்று உண்மை. செங்கல்லை சுடும் பழக்கம் தமிழனால் கண்டுப் பிடிக்கப்பட்ட ஒன்று. சிந்து சமவெளி நாகரீகத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டு உள்ளன என்பதும் வரலாற்று ஆய்வு உண்மை. எனவே விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ள மக்கள் தமிழர்களே என்று நாம் கருத முடிகின்றது.

மேலும் அதே விவிலியத்தில் உலகத்தில் அப்பொழுது ஒரே மொழி தான் இருந்தது என்று கூறப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இருந்த மனிதன் தமிழன் தான் என்றால் இருந்த ஒரே மொழியும் தமிழாகத்தான் இருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எனவே விவிலியத்தின் படி உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிய முடிகின்றது!!!.

ஒரு நிமிடம்… சிந்து சமவெளி நாகரீகம் என்கின்றீர்… அது தமிழர் நாகரீகம் என்கின்றீர். ஆனால் ஆரியரும் அதற்கு உரிமைக் கொண்டாடுகின்றார்கள். எனவே அது தமிழர் நாகரீகம் என்பதற்கு நீங்கள் எந்த விதமான சான்றுகளையோ அல்லது விளக்கங்களையோ அளிக்கவில்லை.

இரண்டாவது நீங்கள் மக்கள் தோன்றியது ‘குமரிக் கண்டத்தில்’ என்கின்றீர் ஆனால் அதைப் பற்றியே வாய் திறக்கவில்லையே. சிந்து சமவெளியினைப் பற்றியே பேசி இருக்கின்றீர். அப்படி என்றால் மக்கள் தோன்றியது குமரிக் கண்டதிலேயா அல்லது சிந்து சமவெளியிலேயா?… தெளிவாக சொல்லுங்கள் என்றுக் கேட்கின்றீர்களா…!!!!

நியாயமான கேள்விகள். சரி அப்படி என்றால் நாம் சற்று குமரிகண்டத்தையும் சிந்து சமவெளியினையும் கண்டு விட்டு வந்து விடலாம்…!!!

சிந்து சமவெளி அதோ பரந்து விரிந்து நிற்கின்றது…!!!


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7


சில கூடுதல் தகவல்கள்:
‘Navy’ மற்றும் ’NAVAL’ என்ற ஆங்கிலச் சொற்களின் வேர்ச் சொல் ‘நாவாய்’ என்று நீங்கள் அறிவீர்களா?.

நாவாய் என்பதே ‘நாவி’ என்று மாறி பின்னர் ’நேவி (NAVY)’ என்று மாறி உள்ளது.

மேலும் விவிலியம் கூறும் ‘நோவாவின்’ கதையுடன் திருமாலின் ’மச்ச அவதாரக்’ கதையும் ஒத்துப்போவதை கவனத்தீரா?…இதேப் போல் இன்னும் பல விடயங்கள் விவிலியத்திற்கும் இந்துக் கதைகளுக்கும் இடையில் ஒன்றுப் போல இருக்கின்றன.

இது இப்பொழுது நமக்கு முக்கியம் அல்ல. பின்னர் பார்க்கலாம்.

தொடரும்…

5 கருத்துகள்:

நல்ல ஆராய்ச்சி நண்பரே. உங்கள் ஆராய்ச்சியை ஆராய்ச்சி பண்ணக்கூடிய வரலாற்று அறிவு எனக்கில்லை. ஆனால் நீங்கள் சொல்லிய விதம் நன்றாக இருந்தது.

தங்கள் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி நண்பரே...!!! இந்த ஆராய்ச்சிகள் யாவும் பலர் செய்தவையே... எனது சொந்த ஆராய்ச்சிகள் அல்ல... பலர் ஆராய்ந்ததை நான் தொகுத்து எனது வார்த்தைகளில் எழுதுவதே இந்தப் பதிவு ஆகும்...!!!

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!!!

ஆனால் குமரிக்கண்டம் மூன்று கடற்கோள்களில் அழிந்ததாக தமிழிலக்கியங்கள் கூறுகின்றனவே?

உன்னோட ஆய்வு முழுக்க முழுக்க பொய். விவிலியத்தில் உள்ள வசனங்களை பொய் என்று சொல்கிறாயே? நான் கேட்கிறேன் குரங்கிலிருந்து மனுஷன் வந்தான் என்று சொல்கிரிர்களே உங்களுக்கும் 5 அறிவா? , விவிலியம் பொய்னு சொல்றிங்க சரி உங்கள் சரித்திரம் உண்மையானால் உங்கள் சரித்திரத்தை வைத்து காலத்தை பிரித்துருக்கலாமே ஏன் ? இயேசுவை வைத்து காலத்தை கணக்கிட வேண்டும் 2013 வருடம் என்று அப்போ உங்க தெய்வ சரித்திரம் பொய்யா? சரி அதையும் விடுங்கள். ஒத்துபோகுது ஒத்துபோகுது என்று சொல்கிரிர்களே உங்கள் தெய்வம் உண்டானதுக்கு காலக்குறிப்பு ஏதாவது இருக்கா? இருந்தால் சமர்பியுங்கள். சரி அதையும் விடுங்கள் எனக்கு ஒரு கணக்கு தேவைபடுகிறது கொஞ்சம் உதவி செய்யுங்கள் தாங்கள் தான் பெரிய ஆய்வு செய்பவராட்சே தாங்கள் வணங்குகிற தெய்வங்களின் சரியான தொகையும் , பெயர்பட்டியலும் கொடுங்களேன். சரி அதையும் விடுங்கள் தாங்கள் சிந்திக்க வேண்டும் என்னவெனில் தெய்வம் என்று இருந்தால் அவைகள் ஓன்று தான் இருக்கவேண்டும் எப்படி உங்களது மட்டும் கணக்கில் வராத அளவுக்கு பெருகி இருக்கு. அப்போ அதுங்களும் குடும்பம் நடத்தி குட்டிபோடுதுங்க அப்படியா? அண்ணா. விவிலியத்தை வாசியுங்கள் நடந்தவைகளும் அதிலே இருக்கிறது நடக்க போரவைகளும் அதிலே இருக்கிறது. நண்பரே ரொம்ப சூடா இருபிங்க கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க நல்லது.

//உன்னோட ஆய்வு முழுக்க முழுக்க பொய்.//

அப்படி என்றால் உண்மை யாதென்று நீங்கள் கூற முடியுமா நண்பரே? மேலும் பல கேள்விகள் இருக்கின்றன நண்பரே...அவற்றைக் குறித்தும் நீங்கள் பதில் கூறினால் மிக்க நலமாக இருக்கும்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/05/blog-post.html
http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/04/blog-post_20.html
http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/04/blog-post_7181.html

மேலும் சமயங்களைக் குறித்த தொடரில் இப்பதிவு ஒரு பக்கமே ஆகும்... முழுதும் படித்தால் உங்களின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கக் கூடும்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html

//நண்பரே ரொம்ப சூடா இருபிங்க கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடுங்க நல்லது.//

மிக்க நன்றிகள் நண்பரே....!!! ஆனால் நான் சூடாகவும் இல்லை... குளிர் பானங்கள் அருந்தும் பழக்கமும் என்னிடையே இல்லை. இருந்தும் உங்களின் அக்கறைக்கு மிக்க நன்றிகள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு