"நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
 அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
 எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!" - அவ்வையார்
 
 
"ஏ நிலமே...!!! சில இடங்களில் நீ காடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் நாடாகவும் இருக்கின்றாய்...சில இடங்களில் பள்ளமாகவோ அல்லது மேடாகவோ இருக்கின்றாய்...அப்பேற்பட்ட நீ நல்ல மக்கள் எங்கே இருக்கின்றனரோ அவ்விடத்தில் நல்ல நிலமாகவும் திகழ்கின்றாய்...வாழ்க நீ" என்றே அவ்வையார் பாடிச் சென்று இருக்கின்றார். எளிமையான பொருள் தானே...இப்பொழுது இதன் அடிப்படையில் தான் நமது சமூகத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
ஒரு இடத்தில் இருக்கும் மக்களின் தன்மையைப் பொறுத்தே நிலத்தின் தன்மை அமையப் பெறுகின்றது. நல்ல மக்கள் இருக்கும் இடம் நல்ல இடமாகவும்...தீய மக்கள் இருக்கும் இடம் தீய இடமாகவும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் கண்டோம் என்றால்,
 
அன்பு, பரிவு, நல்லொழுக்கம், விருந்தோம்பல், முதலிய நற்பண்புகளை உடைய மக்கள் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி நல்லவைகளாகவே திகழும்.
 
அதே நேரம் கோபம், பேராசை, பயம், பகை, பொறாமை முதலிய தீய குணங்களை உடைய மக்கள் அதிகம் வசிக்கும் இடமும் சரி நாடும் சரி தீயவனவாகவே திகழும்.
 
இதனை மறுத்தல் இயலாது. இதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது நாட்டினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறே கண்டோம் என்றால் நிச்சயம் நமது நாட்டினை நாம் நல்லதொரு நாடாக காண முடியாது. காரணம் பெருன்பான்மையான மக்கள் நல்ல குணம் மிக்கவர்களாக இன்று இல்லை. அதற்கான காரணத்தைத் தான் நாம் இப்பொழுதுக் காண வேண்டி இருக்கின்றது.
 
இன்று நாம் மன்னராட்சிக் காலத்தைக் கடந்து மக்களாட்சிக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம். மன்னராட்சிக் காலம் என்பது வேறு...மக்களாட்சிக் காலம் என்பது வேறு.
 
மன்னராட்சிக் காலத்தில் மன்னரின் சொல் தான் அனைத்தும்..."மன்னன் எவ்வழி ..மக்கள் அவ்வழி..." என்றே அனைத்தும் மன்னனின் செயல்பாடுகளை நம்பியே இருந்தன. மக்களுக்கு பெரிதாக உரிமைகளோ அல்லது பொறுப்புகளோ இருக்காது. மன்னனுக்கு பின்னர் மன்னனின் மகன் அரசாள வருவான். இந்த நிலையில் மக்கள் அவர்களுக்கு பிடிக்காத ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் புரட்சி தான் ஒரே வழியாக இருக்கும். ஆனால் அரசனை எதிர்த்து புரட்சி என்பது நிச்சயம் வன்முறையால் ஒடுக்கப்படும் என்பதால் பெரும்பாலும் புரட்சிகள் வெறும் எண்ணத்துடனே நின்றுப் போய் விடும். காரணம் பெருவாரியான மக்கள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றார்கள்...அச்சத்தின் காரணமாக "நமக்கேன் வம்பு" என்றே பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி நின்று விடுகின்றார்கள். மன்னராட்சிக் காலத்தின் நிலை இது.

ஆனால் மக்களாட்சிக் காலத்தில் நிலை வேறு...இங்கு மக்கள் எவ்வழியோ...அரசாள்பவன் அவ்வழியாக இருக்க வேண்டி இருக்கின்றது. காரணம் தங்களை ஆளும் தகுதியை மக்களே ஒருவனுக்கு அவனைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் தருகின்றனர். அதனால் மக்களை நம்பியே ஆள்பவர்கள் இருக்கின்றார்கள். இங்கே ஆள்பவர்கள் சரி இல்லை என்றால் மக்கள் பெரிய புரட்சிகளெல்லாம் செய்ய வேண்டியதில்லை...மாறாக அவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு நல்ல நபரை தேர்ந்து எடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றத்தை அவர்களே கொண்டு வந்துவிடலாம். ஆட்சி மாற்றத்திற்கு தேவை எல்லாம் மக்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதும் அவர்கள் சிந்திக்கும் திறமையைப் பெற்று இருப்பதுமே ஆகும். நிற்க.

இந்த நிலையில், அதாவது மக்களாட்சிக் காலம் உலகெங்கும் பரவி உள்ள நிலையில், எந்த ஒரு நாட்டின் மக்கள் ஒற்றுமையாகவும் நற்பண்புகள் மிக்கவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்கள் நல்லவர்களை அவர்களின் மத்தியில் இருந்து தேர்ந்து எடுத்து அவர்களை வழிநடத்த ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் கொடுப்பர். அந்த நல்லாட்சியில் அந்த நாடும் நல்ல நாடாக இருக்கும். நல்ல நாட்டிற்கு நல்ல குடிமக்களே இன்றியமையாதத் தேவை என்பதை உணர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மக்களை சிந்திப்பவர்களாகவும் நற்பண்புகள் உடையவர்களாகவும் வைத்து இருப்பர். அது தான் நல்ல தலைவர்களின் அடையாளம்.

ஆனால் இங்கே தான் மற்றொரு விடயம் ஒளிந்து இருக்கின்றது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் நல்லவனாக இல்லை...ஆனால் அவனுக்கு ஆட்சியினை விட்டுச் செல்லவும் மனசில்லை என்று வைத்துக் கொள்வோம்...இந்நிலையில் அவனுக்கு அவனது ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன...

1) வன்முறையின் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது (ஆனால் மக்களாட்சிக் காலத்தில் இது உதவாது)

2) மக்களே அவனது ஆட்சியை தொடர அவனையே மீண்டும் தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் மக்களாட்சிக் காலத்தில் தீயவன் ஒருவன் ஆள்வதை மக்கள் அனுமதிக்க வேண்டும் என்றால் ஒன்று மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்..அல்லது தம்மைப் பற்றி மட்டுமே கவலைக் கொண்டு அச்சத்தால் ஒற்றுமை இன்றி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மீண்டும் அவனால் ஆட்சிக்கு வர இயலும்.

இந்த விடயங்களைக் கொண்டே நாம் நமது நாட்டினை இன்றுக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று நமது ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லை இருந்தும் அவர்கள் தான் தொடர்ந்து ஆட்சிப் புரிந்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலை சிந்திக்கவும் ஒற்றுமையாகவும் இருக்கத் தெரிந்த மக்கள் இருக்கும் ஒரு நாட்டில் நிலை பெற்று இருக்க யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆனால் நமது சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் நமது மக்கள் சிந்திப்பவர்களாகவும் இல்லை அச்சமின்றி ஒற்றுமையாக இருப்பவர்களாகவும் இல்லை. மாறாக அவர்கள்,

1) சிந்திக்கத் தெரியாதவர்களாகவும்
2) கடன்காரர்களாகவும்
3) குடிகாரர்களாகவும்

இருக்கின்றனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு காரணம் அந்த அரசியல்வாதிகள் வகுத்து இருக்கும் திட்டங்களே ஆகும்.

 
ஒருவன் சிந்திக்க வேண்டும் என்றால் அவன் கல்வியினைப் பெற்று இருக்க வேண்டும். ஒருவனது கல்வியறிவு தான் அவனை சிந்திக்க வைக்கின்றது. மக்களாட்சிக் காலத்தில் ஆள்பவர்களால் மக்களின் கல்வியை தடுக்க முடியாது. காரணம் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. இந்நிலையில் எவன் ஒருவன் கல்வியை தடுக்க முயல்கின்றானோ அவன் சமூகத்தின் ஆதரவினை இழந்து விடுகின்றான். இந்நிலையில் ஆள்பவர்களால் கல்வியினைத் தடுக்க முடியாது. ஆனால் அவர்களால் கல்வி முறையினை கட்டுப்படுத்த முடியும். அதனை வைத்தே அவர்கள் சிந்திக்க வைக்காத எதற்கும் பயனற்ற கல்விமுறையைக் கொண்டு சிந்திக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்...காரணம் மக்கள் சிந்திக்காத வரை தான் அவர்களுக்கு நல்லது. ஆகையால் சிந்திக்க வைக்காத கல்விமுறையையே அவர்கள் ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கல்வி முறையை வைத்து மட்டும் ஒரு மனிதனின் சிந்தனையை கெடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்து தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கு கை கொடுப்பது மது வகைகள் ஆகும். கற்றவனையும் சிந்திக்க வழியில்லாதவனாக செய்யும் மதுவினை சமூகத்தினுள் பரப்பி மக்களைக் குடிகாரர்களாக மாற்றுவதின் வாயிலாக சிந்திக்க இயலாத ஒரு சமூகத்தினைக் கட்டமைத்துக் கொண்டு அதில் அசைக்க முடியாத சக்தியாக அவர்கள் உலா வந்துக் கொண்டு இருக்கின்றனர்.

"கள்ளுண்ணாமை" யை வலியுறுத்தாத தமிழ் இலக்கியங்களே இல்லை என்றே கூறலாம்...அப்பேற்பட்ட ஒரு தேசத்திலே "தமிழ் வாழ்க" என்றுக் கூறிக் கொண்டு மதுவினைப் பரப்புவது என்பது எத்தகைய சதிச் செயல் என்பதனை சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

ஆனால் இன்னும் பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றது... அனைவரும் சிந்திக்காதவர்களாகவும் இருப்பதில்லை அனைவரும் மதுவையும் குடிப்பதில்லை...இந்நிலையில் அத்தகைய மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கேள்விகளை எழுப்பினால் சிந்திக்காத மனிதனும் சிந்திக்க ஆரம்பித்து விடுவான்...பின்னர் ஆட்சி ஆட்டம் கண்டு விடும். இதையும் ஆட்சியாளர்கள் நன்றாக அறியத்தான் செய்வார்கள். இதற்கு தீர்வாக அவர்கள் கண்டு பிடித்த ஒரு விடயம் தான் "கடன்",

ஒருவன் சிந்திக்கின்றானா...நல்லது.
மது போன்றவைகளுக்கு அடிமையாகவில்லையா...நல்லது.
அவனை கடன்காரனாக்கி விடு...அவன் நமக்குத் தொல்லை தர மாட்டான்.

இது தான் ஆள்பவர்களின் தாரக மந்திரமாக இருக்கின்றது. "கடன்" வாங்குவது என்பது மிகவும் எளிதான ஒரு செயல்...தேவை இல்லாத பொருள்களை கடனில் வாங்க மக்களும் சிறிதளவு பேராசையையும் பொறாமையையும் கெளப்பி விட்டால் போதும்...

"அட இப்ப விலை கம்மியா கிடைக்குதே...கடன வாங்கி அத வாங்கிட்டோம்னா அப்புறம் மெதுவா அடைச்சிக்கலாம்...அதான் கடன் தர வங்கிங்க இருக்கே..." என்றவாறே கடன் வாங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். காரணம் மது குடிப்பது போன்று கடன் வாங்குவது என்பது தவறான ஒன்றாக இன்று நமது சமூகத்தில் பார்க்கப்படவில்லை.

கூடவே மக்களின் இன்றியமையாத தேவைகளையும் கடன் வாங்கித் தான் பெற முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அந்த கடனை அரசாங்க வங்கிகளே தந்தன என்றால் நிச்சயம் மக்கள் கடன் வாங்கத் தான் தலைப்படுவர்.

 
கல்வி, தொழில், உறைவிடம் போன்ற முக்கியமான, மக்களின் இன்றியமையாத தேவைகளை கடன் பெற்றால் தான் பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டால் கடன் வாங்காது இருக்க மக்களால் முடியாது. இந்நிலையில் பெரும்பான்மையான மக்கள் கடன்காரர்களாகி விடுவர். இது தான் அரசாங்கத்திற்கு தேவை...காரணம் குடிக்காரர்களும் சரி கடன்காரர்களும் சரி...அரசாங்கத்திற்கு எதிராக..ஏன் எதற்கு எதிராகவும் குரலினை எழுப்ப மாட்டார்கள்.

குடிகாரர்கள் முழுக்க முழுக்க குடிக்கு அடிமையாகி விட்டு இருப்பர்...அவர்களுக்கு அவர்களது உலகம் குடியினைச் சுற்றியே இருக்கும்...பொழுதுபோக்கிலேயே காலத்தைக் கழிக்க விரும்புவர்...அரசாங்கத்தை எதிர்த்து அவர்களின் குரலினை அவர்கள் எக்காலமும் எழுப்ப மாட்டார்கள்.

கடன்காரர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம்...அவர்களுக்கு நடப்பது தவறென்று தெரியும்...ஏதாவது செய்து மாற்றிட மாட்டோமா என்ற எண்ணமும் மனதினுள் இருக்கும்...ஆனால் அதனை எல்லாம் பயம் ஓரம்கட்டி விடும்..."ஏதாவது பிரச்சனையில் சிக்கி விட்டு பின்னர் கடனுக்குரிய வட்டியைக் கட்ட வழியின்றி சென்று விட்டால் கடன் ஏறிக் கொண்டே போகுமே...அதனை நாம் தானே கட்ட வேண்டி இருக்குமே...எதற்கு நமக்கு தேவை இல்லாத வம்பு...நமக்கு ஏற்கனவே நமது கடன் பிரச்சனை இருக்கின்றது...அதனைக் கவனிப்போம்...வேறு எவன் எக்கேடுக் கெட்டால் நமக்கு என்ன?" என்றே அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயம் அவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து தனியாக்குவதுடன் அவர்களின் உணர்ச்சிகளையும் கட்டிப்போட்டு விடுகின்றது.

இது தான் அரசாங்கத்திற்கு வேண்டும்...மக்கள் ஒற்றுமையாகவும் இருக்கக் கூடாது...சிந்திக்கவும் கூடாது...அச்சமின்றியும் இருக்க கூடாது. அதற்காகத் தான் அது மதுவையும் கடனையும் வாரி வாரி வழங்குகின்றது. இதில் இருக்கும் அரசியலை உணராது இருக்க சிந்திக்க வைக்காத கல்வி முறையையும் ஊட்டி வளர்த்து பாதுகாக்கிறது.

அதாவது,

சிந்திக்க வைக்காத ஒரு கல்வி முறை..அந்த கல்வி முறையை கற்க கடன் வாங்கியாக வேண்டும்...கூடவே மதுவினைக் குடிக்க தூண்டும் ஒரு சமூக அமைப்பு..இதனைத் தான் இன்றைக்கு நமது நாடு வளரும் இளம் தலைமுறையினருக்கு தந்துக் கொண்டு இருக்கின்றது. தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலை அறிந்துக் கொள்ளும் முன்னரே ஒருவனை இந்த அரசு கையறு நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றது. அங்கே தான் அந்த அரசின் வெற்றி அடங்கி இருக்கின்றது.

காமராஜரின் காலத்தில் இலவசமாகவும் அரசாங்கத்தின் கையிலும் இருந்தக் கல்வி இன்று தனியார் வசமாகவும் காசிருந்தால் மட்டுமே கிடைக்கக் கூட ஒரு பொருளாகவும் இருக்கின்றது.

கிராமத்திற்கு கிராமம் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ...தெருவிற்கு தெரு மதுபானக் கடைகள் இருக்கின்றன...!!!

கல்வியினை முடித்து தனது கனவுகள் என்ன? தான் என்ன ஆக வேண்டும்...எனது திறமைகள் என்ன? என்பதை ஒருவன் அறியும் முன்னரே அவனைக் கடன்காரன் ஆக்கி..கடனை அடைத்து விட்டு என்னவேண்டும் என்றாலும் செய் என்று ஒரு முடிவில்லாத சக்கரத்தினுள் இந்த சமூகம் அவனை தள்ளி விட்டு விடுகின்றது.அவனும் அவனைப் பற்றி அறிந்துக் கொள்ளாமலே சுழல ஆரம்பித்து விடுகின்றான். பாவம் அவனது கல்வி முறை அவனுக்கு சிந்திக்கச் சொல்லித்தரவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் எவ்வாறு நாட்டில் புரட்சியையோ மாற்றத்தையோ கொண்டு வர முடியும்...அவனது இயலாமையை நொந்துக் கொண்டே காலத்தைக் கடத்த வேண்டும் என்றால் முடியும்...அவனுக்கு ஆறுதலாக மதுவையும் அரசே தருகின்றது. நிற்க

இது தான் நிலைமை...பெரிய சதி வலையினை மேலோட்டமாகத் தான் நாம் இங்கே கண்டுள்ளோம்...இருந்தும் இப்போதைக்கு இது போதும். உங்கள் அரசாங்கம் உங்களை ஒற்றுமை உள்ளவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் இருப்பதை விரும்பவில்லை.

"மக்கள் கடன் வாங்கினால் தான் வங்கிகள் செயல்பட முடியும்...நாடும் இயங்க முடியும்" என்று அரசியல்வாதிகள் கூறுவது உண்மை தான். காரணம் நாம் கடனினை வாங்கினால் தான் அரசாங்கத்தை எதிர்க்க மாட்டோம்...அப்படி இருந்தால் தானே அவர்கள் அரசாள முடியும்...அதனால் தான் அவர்கள் கடன் வாங்க மக்களை தூண்டுகின்றனர்...மூளைச் சலவை செய்கின்றனர்...கூடவே கடனினை வாங்கியே ஆக வேண்டிய நிலைக்கு மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு வருகின்றனர்.

இன்றைய அரசுக்கு தேவை,

கடன்காரர்களும் குடிகாரர்களும் தான்...இருவராலும் எந்த ஒரு மாற்றமும் நிகழப் பெறாது.

வருந்தத்தக்க விடயமாக நமது நாட்டினில் மக்களுள் பெரும்பாலானோர் அந்த இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது வந்து விடுவர்...நீங்களே சிந்தியுங்கள்,

1) குடி பழக்கம் உள்ளவர்
2) கடனில் இருப்பவர்
3) மேலே உள்ள இரண்டுமே இருக்கின்றவர்
4) மேலே உள்ள இரண்டுமே இல்லாதவர்

இந்த நான்கு பிரிவுகளில் நமது மக்கள் அல்லது நாம் எந்த பிரிவில் வருவோம் என்றே எண்ணிக் பாருங்கள். நிச்சயமாய் 20 வருடங்களுக்கு முன்னர் நாலாவது பிரிவில் எண்ணிக்கை அதிகமாக இருந்து இருக்கும்...ஆனால் இன்றோ மூன்றாவது பிரிவின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். இதில் தான் நமது வீழ்ச்சியும் அரசியல்வாதிகளின் வெற்றியும் அடங்கி இருக்கின்றது. (இவை மட்டுமே காரணம் கிடையாது...இன்னும் பல இருக்கின்றன...ஆனால் இந்த பதிவில் நாம் அவற்றைப் பற்றிப் பார்க்க நேராததால் அவற்றைக் குறிக்கவில்லை)

 
சரி இருக்கட்டும்...பிரச்சனைகளின் தன்மையையும் காரணத்தையும் மேலோட்டமாக கண்டாயிற்று...இதற்கான தீர்வினைக் காணாது விட்டோமென்றால் நாம் இது வரை கண்டவை வெறும் எழுத்துக்களாய்ப் போய் விடும்...எனவே நம்மால் என்ன செய்ய இயலும்...என்ன செய்ய வேண்டும் என்றும் நாம் காண்பது தான் நலமாக இருக்கும்...

1) "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழைய தத்துவத்தின் வழி பேராசையை குறைத்து நமக்கு இன்றியமையாத தேவைகளில் மட்டுமே கவனத்தினை செலுத்த முயல்வது.

2) "இன்றியமையாத தேவை" என்ன என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் நிச்சயம் இருக்கும் என்பதனால் தேவைகள் என்று கருதுபவைகளை கடனின்றி வாங்க முயல்வது. இன்றைய நிலையில் கல்வி போன்ற விடயங்களின் விலையினை மாற்ற அரசியல் மாற்றங்கள் தேவையாக இருக்கின்றன, எனவே அரசியல் மாற்றங்கள் நிகழும் வரை மாணவனை கடன் வாங்காதே என்றுக் கூறுவது அவனுடைய படிப்பினை மறைமுகமாக நிறுத்துவதாகவே அமையும்...எனவே இன்றைய நிலைக்கு ஆடம்பரம்/பேராசை காரணமாக வாங்கும் பொருட்களையாவது கடனின்றி வாங்க முயல்வது.

3) இயன்றவரை கடன் அட்டை முதலியவற்றை பயன்படுத்தாமல் இருப்பது.

4) நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாது பொருள் மோகத்தை விடுத்து சேமிக்க துவங்குவது.

5) குடிப்பது எனது தனி உரிமை அதில் குறை கூற யாருக்கும் உரிமை இல்லை என்று எண்ணாமல், நாம் குடிப்பது மற்றவரையும் (பள்ளிக் குழந்தைகள் முதற்கொண்டு) குடிக்க தூண்டுகிறது என்பதையும் அது ஒரு நிலையில்லாத சமூகத்தை உருவாக்குகின்றது என்பதையும் உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் குடியை நிறுத்த முயல்வது.

6) நண்பர்கள் குடித்தார்கள் என்றால் பொழுதுபோக்கிற்காக அவர்களுடன் சேர்ந்து குடிக்க பழகாமல், அவர்களின் மேலும் நமது சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறையுடன் அவர்களை குடியை நிறுத்துமாறு நட்புடனும் உரிமையுடனும் கூற முயல்வது

7) சிந்திக்கும் நண்பர்கள் சேர்ந்து சிந்தனைகளை ஒன்றிணைத்து மற்ற மக்களையும் எவ்வாறு சிந்திக்க வைப்பது என்று எண்ணத் துவங்குவது

8) அன்பால் ஒற்றுமையுடன் இருக்க முயல்வது

9) நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் சமூகத்தில் பரப்புவது

இவை மட்டுமே தீர்வுகள் கிடையாது...மேலும் சிந்திக்கச் சிந்திக்க தீர்வுகள் நிச்சயம் புலப்படத் தான் செய்யும்...அதற்கு நாம் சிந்திக்க வேண்டும்...!!!

செய்வோமா...நாம் செய்வோமா...!!!

5 கருத்துகள்:

நல்லதொரு பகிர்வு.

நீங்கள் கூறியவை அனைத்தையும் - மதுவை ஒழிப்பது, பேராசையைத் தவிர்ப்பது போன்றவற்றில் பெண்கள் பங்கேற்க முயல வேண்டும். அப்போது இது சாத்தியமாகும்.

கோபாலன்

nalavargal ondru iniya vendum
ungalathu fb id solling ila வெங்கட் பாண்டி friend rq kunduinga

good your fb id please send me ungalai mathiri annupavam niraithavarkalai nabithan naningal irukirom

goood

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு