சென்ற பதிவினில் உதவியினைப் பற்றியும் 'அனைத்து நேரங்களிலும் உதவ முடியாது' என்ற நிலையினைப் பற்றியும் கண்டோம். இப்பொழுது நாம் 'அனைத்து நேரங்களிலும் எங்களால் உதவி செய்ய இயலும்' என்ற நிலையைப் பற்றியும் அத்தகைய மக்களைப் பற்றியும் தான் சிறிது காண வேண்டி இருக்கின்றது.

உதவி செய்ய முடியும்:

இவர்கள் சற்று சிறப்பானவர்கள். நாம் முதல் பதிவில் கண்ட கதையில் வரும் அலுவலக நண்பர்களை இந்த வகையில் சேர்க்கலாம். சமூகத்திற்கு உதவி தேவைப்படுகின்றது, ஆனால் அதனை தனி மனிதனால் செய்ய இயலாத நிலையும் இருக்கின்றது அந்நிலையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தினை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஒன்று சேர்ந்து சமூகத்திற்கு உதவி செய்ய முன் வருகின்றனர். இவர்கள் சிறு குழுக்களாகவோ அல்லது ஒரு இயக்கமாகவோ உருப்பெற்று சமூகத்திற்கான உதவியினை செய்ய துவங்குகின்றனர்.

இன்றைய காலத்தில் நிச்சயம் இவர்களைப் போன்றவர்களை நாம் கடந்து வராது இருந்திருக்க முடியாது. ஏன் நாமும் அத்தகைய ஒரு நண்பர்கள் குழுவிலோ அல்லது இயக்கத்திலோ இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தான் இருக்கின்றன. இப்பொழுது அவர்களைப் பற்றித் தான் நாம் சற்று காண வேண்டி இருக்கின்றது.

இன்றைய காலத்தில் கல்விக் கட்டணங்கள் விண்ணளவு எகிறி விட்ட காரணத்தினால் நன்றாக படிக்கக் கூடிய திறமை இருந்தும் படிக்க இயலாத நிலையில் பல மாணவர்கள் இருக்கின்றனர். வங்கிகளின் உதவிகளும் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. நிச்சயம் கவலைப்பட வேண்டிய ஒரு சூழல் தான். "ஆனால் கவலைப்பட்டால் மட்டும் வழி கிடைத்து விடுமா? அந்த மாணாக்கர்கள் படித்து விடுவார்களா? மாட்டார்கள் தானே..அப்படி இருக்கையில் நாம் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்" என்ற எண்ணத்துடன் படிக்க வழியில்லாத மாணவர்களுக்கு உதவியினைப் புரிய பல குழுக்களும் இயக்கங்களும் இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம்.

இவர்கள் பொதுவாகச் செய்வது,

1) உதவியினை புரிய வேண்டும் என்ற சிந்தனையை உடைய நண்பர்களை ஒன்றிணைப்பது

2) அந்த நண்பர்களால் தர இயலும் ஒரு தொகையை மாதந்தோருமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக் காலத்திலோ பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக நிதியினை வளர்த்துக் கொள்வது

3) பின்னர் வருடந்தோறும் அவர்களிடம் இருக்கும் நிதிக்கேற்ப தங்களால் இயன்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணங்களையோ அல்லது சீருடை போன்ற மற்ற அத்தியாவசியப் பொருட்களையோ தந்து அவர்களுக்கு உதவியினைப் புரிவது.

இதன் மூலம் சில மாணவர்கள் தங்களது கல்வியினைத் தொடர இவர்கள் உதவியினைத் தொடர்ந்து புரிகின்றனர். நிச்சயம் பாராட்டக்கூடிய ஒரு செயல் தான். அதில் சந்தேகமேயில்லை.

அதுவும் குறிப்பாக இத்தகைய உதவியினைப் புரிபவர்கள் தங்களது இச்செயல்களால் தங்களுக்கு ஏதும் கைம்மாறு அல்லது வேறு பலன்கள் கிட்டுமே என்ற வியாபார நோக்கினில் செய்வது கிடையாது.

"மாசம் பத்தாயிரம் சம்பளம் வாங்குறேங்க...ஒரு 200 ரூவா பசங்க படிக்கிறதுக்காக மாசம் மாசம் தரது ஒண்ணும் பெரிய வேலை கெடையாதுங்க...ஏதோ நம்மளால முடிஞ்சது...பசங்க படிச்சி நல்லா இருந்தா நல்லது தானே" என்பன போன்ற நல்ல எண்ணத்தினில் தான் அவர்களுள் பலர் உதவியினைப் புரிகின்றனர்.

சுய பயனைக் கருதாது உதவி என்ற நல்ல விதையை அவர்கள் விதைக்கின்றனர். அதன் பயனாக

"படிக்க இயலாத சூழலில் யாரோ ஒருத்தங்க நமக்கு படிக்க உதவி இருக்காங்க...அதனால நாமளும் படிச்சி நல்லா சம்பாதிச்சி...இதே மாதிரிமற்றவங்களுக்கு உதவனும்" என்ற எண்ணத்தினைக் கொண்ட மாணவர்களும் பலர் உருவாகின்றனர்.

அவர்களும் பிற்காலத்தில் இன்று இவர்கள் உதவியினைப் புரிந்ததைப் போலவே தங்களால் இயன்ற அளவு உதவியினை மற்ற மாணவர்களுக்குச் செய்யக் கூடும். நிச்சயம் அதுவும் ஒரு நல்ல செயல் தான். இதில் நாம் குறை காண்பதற்கு எதுவுமே இருக்கப்போவதில்லை தான்...மேலோட்டமாகப் பார்த்தால்.

இருந்தும் மேலோட்டமாகப் பார்ப்பது யாருக்கும் நல்ல முடிவையோ அல்லது தெளிவான சிந்தனையையோ தராது என்பதனால் நாம் மேலே கண்ட விடயங்களை சற்று வேறு வகையாகவும் காண வேண்டித் தான் இருக்கின்றது.

மேலே நாம் கண்ட விடயத்தில் ஒரு மாணவனுக்கு சிலர் சுயநலம் கருதாது உதவுகின்றனர்.

ஏன் அவர்கள் உதவுகின்றனர்?
அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை அதனால் உதவுகின்றனர்.

ஏன் அவனால் கல்வியினைக் கற்க முடியவில்லை?
ஏனென்றால் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?
...........!!!!

இந்த கேள்விக்கு சரியான விடையினை தர இயலாத காரணத்தினால் பெரும்பாலும் இக்கேள்விக்கு மௌனமோ அல்லது "எல்லா பொருளோட விலையும் ஏறுது...உன்னோட சம்பளமும் வருஷம் வருஷம் ஏறுது...அப்புறம் ஏன் கல்வி கட்டணம் மட்டும் கூடுச்சினா கேள்வி கேட்குறீங்க...அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்" என்பன போன்ற ஒவ்வாத பதில்கள் தான் கிட்டப்பெருகின்றன பெரும்பாலும்.

ஆனால் இது தான் முக்கியமான கேள்வி.

நான் தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கும் பொழுது,

கல்விக் கட்டணம் :36,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம்: 6,௦௦௦ ரூபாய்/மாதம்

எனக்கு ஒரு வருடம் முந்தைய மாணவர்களது கல்விக்கட்டணமோ

கல்விக் கட்டணம் : 18,000 ரூபாய்
ஆசிரியரின் சம்பளம் : 6,௦௦௦ ரூபாய்/மாதம்

அதாவது வேறு எந்த மாற்றமும் நிகழப்பெறவில்லை இருந்தும் கல்விக்கட்டணம் இரண்டு மடங்காக ஆகி உள்ளது. இன்றைக்கு கல்விக்கட்டணங்கள் எழுபத்தி ஐந்தாயிரங்களில் உலா வந்துக் கொண்டு இருக்கும் என்றே எண்ணுகின்றேன். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் மேலே கண்ட கேள்விக்குத் தான் செல்ல வேண்டி இருக்கின்றது.

ஏன் கல்விக் கட்டணங்கள் அதிகமாக உள்ளன?

வருந்தத்தக்க விடயமாக இந்த கேள்விக்கு விடையினை பெரும்பாலானோர்அறிய முற்படுவதே இல்லை. ஏன்...அக்கேள்வியினைப் பற்றி சிந்திக்கக் கூட அவர்களால் முடிவதில்லை..."சிந்திச்சி என்ன ஆக போகுதுங்க...நம்மளால அதை எல்லாம் மாத்த முடியுமா...ஏதோ நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணிட்டு போறோம்...எத பண்ண முடியுமோ அத பண்ணுவோங்க...முடியாதத நெனச்சி ஏன் தேவ இல்லாம நேரத்தை வீணடிக்கனும்..." என்றே அவர்கள் அக்கேள்வியினைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து விடுகின்றனர்.

காரணம் எளிது தான்...

பிறருக்கு இயன்ற அளவு உதவியினைப் புரிவது என்பது வில்லங்கமில்லாத ஒரு செயல்...யாரையும் நாம் கேள்வி கேட்க வேண்டியதில்லை...நம்மையும் அச்செயல் பெரிதாக பாதிக்கப் போவதில்லை.

ஆனால் ஏன் அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்?...கடமையை அரசாங்கம் ஏன் ஒழுங்காகச் செய்யவில்லை? என்ற கேள்விகளை எழுப்புவது...சொல்ல வேண்டியதில்லை...பலரைப் பொருத்தவரைக்கும் அது ஒரு வில்லங்கமான விடயம் தான். பிறரையும் நாம் இங்கே கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது...சில நேரம் நம்மையும் அச்செயல் பாதிக்கலாம்.

உண்மையில் பிரச்சனை இல்லாத வாழ்வினைத் தான் மனிதன் இயல்பாக விரும்புகின்றான்...அந்நிலையில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று அறிந்தே அவன் செயல்களைச் செய்ய முயல்வானா...? நிச்சயம் மாட்டான்.

அதன் விளைவாகத் தான்,

ஏன் இந்த நிலை இருக்கின்றது என்று பிரச்சனைக்குரிய காரணியை கண்டுப்பிடித்து அதனைக் களைய முயலாமல்/ சிந்திக்காமல், தன்னைப் பாதிக்காது இருக்கும் தன்னால் இயன்ற உதவியினை செய்ய மட்டுமே முயலுகின்றான்.

இதன் விளைவாக சமூகத்தில்,

1. சுய நலம் கருதாது இவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி - "நமக்கு பிறர் உதவியினைப் புரிந்து இருக்கின்றனர்...எனவே நானும் வளர்ந்து பிறருக்கு உதவி செய்வேன்" என்ற எண்ணத்தோடு வளர்கின்ற தலைமுறையை உருவாக்குகிறது. இது ஒரு அருமையான செயல்.

ஆனால்,

2) அடுத்த தலைமுறையும் பிரச்சனைக்குரிய காரணியை ஆராயாமல் தங்களால் தங்களை பாதிக்காது பிறருக்கு உதவும் உதவிகளை மட்டும் செய்து விட்டு செல்லும் நிலையும்

3) அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாமலேயே சமூகத்தினில் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையும்

பக்க விளைவுகளாக சமூகத்தில் நிலைபெற்று விடுகின்றன.

காரணம் நம்முடைய உதவிகள் வெறும் உதவிகளாகவே அவனைச் சென்றடைகின்றன...மாறாக எதற்காக அவன் உதவி பெறும் சூழலில் இருக்கின்றான் என்றோ...அத்தகையதொரு சூழல் சரியானதொன்றா என்றோ அவனைச் சிந்திக்க வைக்கும் உதவிகளாக அவனைச் சென்றடையவில்லை.

அதாவது அவனுக்கு அவனுடைய பிரச்சனை தெரிய வருகின்றது...
படிப்பதற்கு பணம் இல்லை...!!!

அதனை சரி செய்யும் வழிமுறைகள் அவனுக்கு தெரிய வருகின்றது...
நம்முடைய உதவிகள்..வங்கிக் கடன்கள்...!!!

ஆனால் இறுதி வரை அந்த பிரச்சனைக்குரிய காரணியைப் பற்றியோ அல்லது அது சரியான ஒரு காரணி தானா என்பதனைப் பற்றிய ஒரு சிந்தனையோ...அப்பிரச்சனையைத் தீர்க்க அவன் ஏதாவது செய்ய வேண்டுமா என்ற சிந்தனையோ அவனுள் எழாமலே போய் விடுகின்றது.

சுற்றி இருக்கும் சமூகத்தைப் பார்த்து "இப்படித் தான் இருக்கும் போல இருக்கு...நம்மளும் சம்பாதிச்சி...ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு உதவுவோம்..." என்றவாறே அடுத்த தலைமுறையும் அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகம் சென்றுக் கொண்டிருக்கும் தவறான வழியினை அறியாமலேயே பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.

காரணம் வழிகாட்டிகளாக வழித்துணைகளாக இருக்க வேண்டிய கல்விக் கற்று சிந்திக்கும் திறனை உடையவர்களின் உதவிகள், அவ்வாறு இருப்பதற்கு மாறாக வெறும் ஆறுதல்களாகவும் உதவிகளாகவுமே நின்று விடுகின்றன.

இதனால்,

"நோய் நாடி நோய் முதல் நாடி" என்ற தத்துவத்திற்கு மாறாக நோயின் காரணத்தையே ஆராயாமல் "ஏதோ நம்மளால் ஆனதைச் செய்வோம்...நோயினை வேறு எவராவது தீர்க்க வழி காணுவர்" என்ற எண்ணத்துடன் செயல்படும் நபர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமாகத் துவங்குகின்றது.

இவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருந்தாலும், சமூகம் நல்லதொரு சமூகமாக இல்லாது மேன்மேலும் சீரழிந்துக் கொண்டு இருக்கும் ஒரு சமூகமாகவே இந்நிலையில் மாறத் துவங்குகின்றது.

அங்கே பிரச்சனைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...உதவிகளின் தேவைகளும் கூடிக் கொண்டே இருக்கும்...!!!

இந்த நிலையில் தான் மேலும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு