இன்றைய காலத்தில் பிறருக்கு நாம் உதவ வேண்டுமே என்று  நல்லெண்ணத்தில் செய்கின்ற உதவி, உண்மையிலேயே அவர்களுக்கு உதவியாக இருப்பதை விட அவர்களுக்கு மறைமுகமாக கெடுதலையே செய்கின்றது என்றே சென்ற பதிவில் கண்டு இருந்தோம்.

சற்றுப் புதிராக இருக்கும் இந்த விடயத்தினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதனை எளிதாகக் காண ஒரு சிறு எடுத்துக்காட்டினை எடுத்துக் கொள்வோம்,

அரசாங்கப் பள்ளியில் ஒரு ஏழை மாணவி படித்துக் கொண்டு வருகின்றாள். அவளது குடும்ப வருமானமோ மிகவும் குறைவு, இருந்தும் கல்வியின் மீது இருக்கும் ஆவலால் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகின்றாள். ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு வழங்கும் இலவச சீருடைத் திட்டம் அவளுக்கு உதவுகின்றது. இந்நிலையில் தரமற்ற சீருடைகளை அரசாங்கம் மாணவர்களுக்குத் தர வெகு விரைவிலேயே அந்த ஆடைகள் கிழியத் துவங்குகின்றன. வேறு ஆடை வாங்கிக் கொள்ள குடும்ப சூழல் உதவாத நிலையிலும் கிழிந்த ஆடையை அணிந்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல இயலாத நிலையிலும் அந்தப் பெண் தனது படிப்பினை நிறுத்த நேருகிறது. இந்த நிலையில் நல்ல மனம் படைத்த படித்த ஒருவர் அப்பெண்ணின் நிலையைக் கண்டு வருந்தி அந்த பெண்ணின் படிப்பிற்கு உதவும் வண்ணம் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்து உதவுகின்றார். அவருடைய உதவியைப் பெற்ற அந்த பெண்ணும் தொடர்ந்து படிக்க பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கின்றாள். நிற்க

இங்கே அந்த மனிதர் அந்த பெண்ணின் படிப்பிற்கு அவரால் இயன்ற உதவியினை செய்து இருக்கின்றார்.

இதில் நாம் குறையினைக் கூறுவதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை. மனிதம் மிக்க எவரும் இச்செயலையே செய்து இருப்பர். நம்மிடத்து பொருள் அதிகமாக இருக்கின்றது...அதே நேரத்தில் இன்றியமையாத தேவையுடன் சிலர் அல்லல் படுகின்றனர் அந்நிலையில் தம்மிடம் இருக்கும் மிகுதியான பொருளினைக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவுவது என்பது மிகவும் சரியானதொரு செயலே. இதில் நாம் குறை கூறுவதற்கு ஒரு காரணியும் கிட்டப் போவதில்லை.

ஆனால் இங்கே தான் நாம் வேறு சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது...

1) சீருடை கிழிந்து விட்டது எனவே புதிய சீருடை வாங்கித் தந்தாயிற்று...நல்லது, ஆனால் புதிய சீருடை மற்றுமொரு தருணத்தில் கிழிந்துப் போய் விட்டாலோ அல்லது அடுத்த வருடமும் இதே நிலை உருப்பெற்றாலோ மீண்டும் மீண்டும் நாம் புதிய சீருடையினை வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியுமா?

2) ஒரு பெண்ணுக்கு நடந்தது போல் பல்வேறு பேருக்கு நடந்தது என்றால் அனைவருக்கும் புதிய ஆடைகளை வாங்கித் தர முடியுமா?

மேலே உள்ள கேள்விகளுக்கு முடியும் அல்லது முடியாது என்ற இரண்டில் ஒன்றே விடையாக வர முடியும். அவ்விரண்டு விடைகளைப் பற்றியுமே நாம் காண வேண்டி இருக்கின்றது. முதலில் 'தொடர்ந்து புதிய ஆடைகள் வாங்கித் தந்துக் கொண்டே இருக்க முடியாது' என்ற விடையினையே காண்போம்..ஏனென்றால் இயல்பான விடை அதுவாகத் தான் நடைமுறையில் இருக்க கூடும்.

உதவி செய்ய முடியாது:

"தொடர்ந்து எல்லாம் உதவி செய்ய முடியாதுங்க...மனசுக்கு உதவனும்னு பட்டுச்சி...காசும் இருந்துச்சி...உதவுனேன்...ஆனா அதையே தொடர்ந்து செய்றது அப்படிங்கிறது இயலாத ஒரு காரியம்..." என்பது மேலே கண்ட கேள்விகளுக்கு ஒரு சாராரின் விடையாக இருக்கக் கூடும். இயல்பான பதில் தான். காரணம் ஒரு தனி சராசரி மனிதனால் இன்றைய நிலையில் அவனுடைய வலிமைக்கு உட்பட்ட உதவிகளையே செய்ய இயலும்...அதற்கு மாறாக செய்ய இயலாது. இந்த நிலையில் தான் ஒரு கேள்வி எழுகின்றது?

"தொடர்ந்து உதவி செய்ய இயலாத நிலையில், நாம் யாருடைய படிப்பு நின்றுப் போக கூடாது என்று எண்ணி உதவினோமோ, அப்பெண்ணுடைய படிப்பு நின்று தான் போகப் போகின்றது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும்?"

ஒன்றும் செய்ய இயலாது. விதியையும் நம்முடைய இயலாமையையும் எண்ணி நாட்டினையும் நாட்டு நடப்பையும் திட்டிக் கொண்டே செல்ல வேண்டியது தான்.

இந்த நிலையில் தான் நாம் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

1) அரசாங்கம் எதற்காக இலவச சீருடைத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்?

2) தனது மகளுக்கான சீருடையைக் கூட வாங்க முடியாத பொருளாதார நிலையில் பலர் உள்ள பொழுது, பிறரின் படிப்பிற்காக உதவி செய்யும் வண்ணம் பொருளாதார வசதியினை உடைய சிலரும் இருக்கின்றனர் என்று அரசுக்குத் தெரியுமா தெரியாதா?

இந்த கேள்விகளைப் பற்றித் தான் இங்கே நாம் கண்டாக வேண்டி இருக்கின்றது.

ஒரு அரசு என்பது மக்களிடம் இருந்து என்றுமே தனியான ஒன்றாக இருத்தல் இயலாது. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் அரசு. மனிதன் இனக் குழுக்களாக இருந்த போதும் சரி இன்று தேசங்களாக வளர்ந்து இருக்கும் போதிலும் சரி அரசு என்பது அந்த அரசின் குடிமக்களின் நலனுக்காக இருக்கும் ஒன்றே அன்றி வேறல்ல.

இந்நிலையில் நமது அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகத் தெரியும், தனது குடிமக்களாக வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களும் இருக்கின்றனர்...மிகுதியாக வருமானம் வாய்க்கப் பட்டவர்களும் இருக்கின்றனர் என்று. அதனால் தான் தனது அடிப்படையான கடமையான தனது குடிமக்கள் அனைவருக்கும் உரிய உரிமைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக தனது குடிமக்களின் வருமான வரம்பினை வைத்துக் கொண்டு வரியினை இட்டு அனைத்து மக்களுக்கும் உரிய கடமையினை அது ஆற்றுகின்றது.

கல்வி என்பதும் ஒரு அரசின் அத்தகைய கடமையே ஆகும். தனது குடிமக்கள் அனைவருக்கும் தரமான கல்வியினை தர வேண்டியது ஒரு அரசின் கடமை. அதற்காகத் தான் அது காலங்களில் பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவாறே இருக்கின்றது.

உதா. உண்பதற்கு உணவில்லாத காரணத்தினால் தான் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரவில்லை என்று அறிந்த காமராசர் இலவச மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்து அனைவரும் கல்வியினைப் பெற வழி புரிந்தார்.

அவர் மாணவர்களுக்கு உதவியினை செய்யவில்லை. அது அவரது கடமை. அவரது கடமையைத் தான் அவர் செய்தார்...அதற்காகத் தான் அவருக்கு பதவியையும் உரிமையையும் தந்து வரியையும் செலுத்தி நாட்டினை ஆளும் பொறுப்பில் வைத்து இருந்தோம்.

இதனைப் போன்றே தான் அரசின் இலவச சீருடைத் திட்டத்தையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

தனது மக்களுக்கு சீருடையை வாங்கித்தர வழி இல்லாத பல்வேறு குடும்பங்கள் இங்கே உள்ளன என்பதை அரசு அறியாமல் இல்லை...அதனை அது அறிந்த நிலையினில் தான் இலவச சீருடைத் திட்டத்தையே அரசு கொண்டு வந்து இருக்கின்றது. அவ்வாறு திட்டத்தினைக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை.

இந்நிலையில் சீருடையை தரமானதாக தரவில்லை என்றால் அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று தான் பொருள்படும். ஒழுங்காகச் செயல்படாத அரசினை கேள்விக் கேட்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் இருக்கின்றது. அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கேள்வி கேட்டால் அரசுக்கு பதில் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. காரணம் மக்களால் தான் அரசு இருக்கின்றதே ஒழிய அரசினால் மக்கள் இல்லை.

சீருடை இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி கற்கும் நிலை பாதிக்கப்படுகின்றது என்றால் அந்த முழுப் பொறுப்பும் அரசினையே சாரும்...காரணம்,

1) சீருடையை வாங்கக் கூட முடியாத பொருளாதார நிலையில் தனது குடிமக்களில் பலரை அந்த அரசாங்கம் வைத்து இருக்கின்றது

2) கல்வியின் இன்றியமையாமையை அறிந்தும் அனைவரும் அக்கல்வியினைப் பெரும் வண்ணம் திட்டங்களை ஒழுங்காகச் செயல்படுத்தாது இருக்கின்றது.

அதாவது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யாது இருக்கின்றது.

இது நிச்சயமாக நல்லதொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ அடையாளம் அல்ல...இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் மிகப் பெரிய கேடுகள் தான் வரக் கூடும்.

இந்நிலையில் அரசாங்கத்தினை அதனது கடமையை ஒழுங்காகச் செய்யச் சொல்லி வலியுறுத்துவதே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனைச் செய்வதே மெய்யான நிலை நிற்கக்கூடிய முடிவுகளுக்கு வழிவகுக்கக் கூடும். இதற்கு மாறாக வேறு தீர்வுகள் என்பன கிடையாது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

அரசாங்கம் தனது மக்களுக்காக திட்டங்கள் போடுவதோ அல்லது அரசாங்க திட்டங்கள் ஒழுங்காக நடைபெறாது போனால் மக்கள் அரசாங்கத்தைக் கேள்விக் கேட்பதோ 'உதவிகள் அல்ல' ஆனால் 'கடமைகள்'. உதவிகளை செய்யலாம் அல்லது செய்யாது போகலாம் அவை தனி மனிதரைப் பொறுத்தவை...ஆனால் கடமைகள் என்பன நிச்சயம் செய்தாக வேண்டியவைகள். அவைகள் தனி மனிதனைப் பொருத்தவைகள் அல்ல. சமூகமே அக்கடமைகள் மூலமாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. நிற்க

சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

ஒரு சிறுவனைப் படிக்க வைக்க வேண்டியது அவனது பெற்றோருக்கு கடமை. அவனைப் படிக்க வைக்க அவர்களால் இயலாத நிலையில் அவனது படிப்பிற்கு அவனது மாமா செய்வது உதவி.

மாமா நிச்சயமாக உதவி செய்யலாம் அதில் தவறில்லை...ஆனால் அச் சிறுவனை படிக்க வைக்க வசதிகள் இருந்தும் தங்களது கடமைகளை அவனது பெற்றோர் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவனது பெற்றோரின் கடமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை அவனது படிப்பிற்கு பொறுப்பினை ஏற்றுக் கொள்ள செய்வதே அவர் புரியும் உண்மையான உதவியாகும். இல்லையேல் அப்பையனின் பெற்றோர் பொறுப்பு இல்லாமலேயே வாழ்ந்து விடுவர். அந்த பையனின் வாழ்கையும் கேள்விக் குறியாகி விடும்.

அதனைப் போன்று தான் அரசாங்கமும், சேவை புரிவோரும் இருக்கின்றனர். அன்பினால் சேவை புரிவது என்றுமே தவறில்லை...ஆனால் பிறரின் கடமையாக இருக்கும் ஒன்றை நாம் உதவியாகச் செய்வது, அவர்கள் அவர்களது கடமையை செய்யாமல் இருக்க உதவுமானால் அவ்வுதவியினை நாம் தொடர்ந்து புரிவது நிச்சயம் சரியானதொன்றாக அமையாது. அது மாபெரும் தீங்குகளுக்கே வழி வகுக்கும். இந்நிலையில் அவர்களை அவர்களது கடமையை செய்யுமாறு ஒன்றிணைந்து வலியுறுத்துவதே மெய்யான உதவியாகும்...அதுவே மாற்றத்திற்கு வழி வகுக்கும்.

சரி இருக்கட்டும்...இதுவரை "ஒரு அளவிற்கு மேல் உதவி புரிய இயலாது" என்ற கூற்றினைக் கண்டோம்...இப்பொழுது "எந்த அளவிற்கும் உதவியினைப் புரிய முடியும்" என்ற கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்....!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

முந்தையப் பதிவு

2 கருத்துகள்:

சரியான பார்வையில் எழுதப்பட்ட உபயோகமான பதிவு.

வழுக்கியவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிடுவது உதவி என வைத்துகொண்டால், வழுக்கலுக்கான காரணத்தை அரசாங்கம் முதல் தனிமனிதர் வரை ஆராய்ந்து சரி செய்தல் வேண்டும்.

இதனால் தான் மேலை நாடுகளில் உதவி என்ற சொல்லைவிட சமூக விழிப்புணர்வு என்ற வார்த்தை பிரயோகம் அதிகம் உபயோகிக்கபடுகிறது. சமூகத்தில் அவரவர் கடமையை உணர்த்தும் பணியை கல்வியின் மூலமே ஊட்ட முடியும்.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

@சாமானியன்

:) ஆம் சாமானியரே...இங்கே உதவியை விட சமூக விழிப்புணர்வு தான் தேவைப் படுகின்றது...சரியாக கூறி இருக்கின்றீர்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு