நம்மில் சிலருக்கு டால்ஸ்டாயினைப் பற்றிச் சிறிது தெரியும். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்...ரஷ்ய நாட்டினைச் சார்ந்தவர்...'போரும் அமைதியும்' போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதி உலக சரித்திரத்தில் இறவாத ஒரு இடத்தினைப் பிடித்து இருப்பவர்...என்றே அவரைப் பற்றி அறிந்து இருப்போம். மேலும் அவரது பல சிறுகதைகளை பள்ளிப் பருவங்களில் நம்மில் பலர் படித்து இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. நிற்க

நம்மில் அனேகமாக அனைவருக்கும் காந்தியினைப் பற்றித் தெரிந்து இருக்கும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை அறவழியில் கொண்டு செலுத்தி இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட ஒருவர். மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் பரவலாக இந்திய தேசத்தில் அறியப்படுபவர். அவரைப் பற்றி பல விதமான கருத்துக்கள் நம்மிடையே நிலவினாலும் இந்திய வரலாற்றில்...ஏன் உலக வரலாற்றிலும் நிலைத்து நின்று விட்ட ஒரு மனிதர். அகிம்சை, ஒத்துழையாமை இயக்கங்கள் என்று வன்முறைக்கு மாற்றாக போராட்ட வழிமுறைகளை செயல்படுத்திக் காட்டிய ஒரு தலைவர். சரி இருக்கட்டும்.

மேற்கூறிய அனைத்து விடயங்களையும் நாம் அனைவரும் நிச்சயம் அறிந்து தான் இருப்போம். அனால் அறியாத சில விடயங்களே இங்கே முக்கியமானதாக இருக்கின்றன...அவை என்னவென்றால்...காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்கு தூண்டுதலாக...ஒரு வழிகாட்டியாக இருந்தது லியோ டால்ஸ்டாய் தான் என்பதே ஆகும்.

ஆம்...!!! காந்தியின் அகிம்சைக் கொள்கைகளாகட்டும் அறவழிப் போராட்டங்களாக இருக்கட்டும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருந்தது டால்ஸ்டாயின் படைப்புகளும் சிந்தனைகளுமே ஆகும். இதனைப் பற்றி நாம் மேலும் காண வேண்டும் என்றால் டால்ஸ்டாயினைப் பற்றியும் காந்தியினைப் பற்றியும் நாம் சிறிது கூடுதலாக அறிந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

டால்ஸ்டாய், வெறும் ஒரு எழுத்தாளராக மட்டும் இருந்து இருக்கவில்லை. தனது சிறு வயதில் நாத்திகராக இருந்த அவர் பிற்காலத்தில் வாழ்வின் அர்த்தத்தினைக் கண்டு கொண்டு ஒரு மாபெரும் ஆன்மீகப் போராளியாகத் திகழ்ந்தவர். அவருடைய ஆன்மீக நூல்களை ரஷ்யாவினில் வெளியிடத் தடை இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவன் அன்பாகவே இருக்கின்றார் என்பதையும் பிற மக்களுக்கு உதவி செய்வதிலேயுமே வாழ்வானது அடங்கி இருக்கின்றது என்பதையும் அறிந்துக் கொண்ட அவர் மற்ற சமயங்கள் கூறும் கருத்துக்கள் யாவை என்பதையும் அறிந்துக் கொள்ள அச்சமய நூல்களை ஆராய்ந்தவர்.

இறைவன் அன்பாகவே இருக்கின்றான் என்கின்ற பொழுது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் இயேசு கூறிய 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பதனைப் போல் ஒரு மனிதன் தீமையை வன்முறையால் வெல்ல முயலாது அன்பினால் வெல்ல வேண்டும் என்றும் கூறி அதனைப் நடைமுறைப்படுத்தியவர்.

அப்படிப்பட்ட டால்ஸ்டாயின் நூல்களும் கருத்துக்களும் தான் காந்தியைக் கவர்ந்தன. டால்ஸ்டாய் எழுதிய 'பரலோக இராஜ்யம் உன்னுள் இருக்கின்றது' என்ற நூல் காந்தியின் உள்ளே ஒரு மாபெரும் தாக்கத்தினை உண்டாக்கியது. தென்னாப்பிரிக்காவினில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் முதற் கொண்ட அறப்போராட்டங்களுக்கு டால்ஸ்டாயின் சிந்தனைகள் அடிப்படையாக இருந்தன. அதனால் தான் காந்தி தென்னாப்பிரிக்காவினில் தொடங்கிய தனது முதல் ஆசிரமத்திற்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயரிட்டார்.

மேலும் காந்தியும் டால்ஸ்டாயும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளும் பொழுது தான் காந்திக்கு டால்ஸ்டாய் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்கின்றார். உலகின் உள்ள அனைத்து சமயங்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் ஆங்கிலேயர்களின் வழியாகவே இந்தியாவில் இருந்த சமயத்தினை அறிந்து இருந்தார். எனவே அவருக்கு இங்கே சைவம், வைணவம், வைதீகம் என்று மாறுபட்ட பல சமயங்கள் இருந்தது தெரியாது. அவருக்கு இந்தியா என்றால் ஒரு தேசம், அங்கே இருந்தது ஒரு மதம்...அது இந்து மதம் என்றே தான் தெரியும். அதனால் தான் காந்திக்கு அவர் கடிதம் எழுதுகையில் 'இந்துக்கு ஒரு கடிதம்' என்றே எழுதுகின்றார்.

அக்கடிதத்தில் மக்களைப் பற்றியும், உலக சமயங்களைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் அவர் காந்தியிடம் பேசுகின்றார். மேலும் குறிப்பாக அன்பினைப் பற்றியும் பேசுகின்றார். அவ்வாறு பேசும் பொழுது திருக்குறளில் இருந்து சில குறள்களை எடுத்துக்காட்டாக காட்டியே அவர் பேசுகின்றார். பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதனைப் பற்றி பேசும் பொழுது 'இன்னா செய்யாமை' என்ற அதிகாரத்தில் இருந்து சில குறள்களை அவர் மேற்கோள்களாக காட்டுகின்றார்.

இதன் மூலமாக திருக்குறள் என்ற நூலினைப் பற்றி காந்தி அவர்கள் அறிந்துக் கொள்வதற்கு டால்ஸ்டாய் உதவி இருக்கின்றார் என்பதனை நாம் அறிந்துக் கொள்கின்றோம். நிற்க

திருக்குறளினை அறிமுகம் செய்ய உதவியது என்பதற்காக மட்டுமே டால்ஸ்டாய்க்கும் காந்திக்கும் இடையில் இருந்தத் தொடர்பினைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. மாறாக நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் சமயங்களைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி ஆன்மீகப் பொதுவுடைமையினைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி இவர்கள் இருவரும் மிக முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசியல் பொதுவுடைமை என்றக் கோட்பாடு ரஷ்ய நாட்டினில் லெனின் ஸ்டாலின் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தினில் ஆன்மீகப் பொதுவுடைமைக்கான விதை டால்ஸ்டாயின் மூலமாகவும் காந்தியின் மூலமாகவும் விதைக்கப்பட்டு கொண்டிருந்தது. இதனைப் பற்றி நாம் விரிவாகக் காண வேண்டும். எனவே வேறு பதிவுகளில் அவற்றைப் பற்றி காணலாம்.

பி.கு:

காந்திக்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தினை முன்னரே நாம் சில பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். அந்த பதிவுக்களுக்கான இணைப்புகள்:

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு