சமயங்களைப் பற்றியே நம்முடைய பதிவுகளில் நாம் பெருவாரியாகக் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். நம்முடைய கூற்றுகளுக்கு சான்றாகப் பல்வேறு விடயங்களையும் நாம் கண்டே தான் வந்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறு பல்வேறு சமய நூல்களும் சரி இதிகாச நூல்களும் சரி கடலினில் மூழ்கிய ஒரு கண்டத்தினைப் பற்றிப் பேசுகின்றன என்றும் எவ்வாறு அந்த செய்திகள் தமிழர்கள் கூறும் குமரிக்கண்டத்தினுடன் பொருந்திப் போகின்றது என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. முதல் மனிதனின் காலடித்தடம் என்றும் சிவனின் காலடித் தடம் என்றும் புத்தனின் காலடித் தடம் என்றும் உலக சமயங்கள் அனைத்தும் உரிமைப் பாராட்டும் ஒன்றைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் இலங்கையைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

இலங்கை...இந்தியாவின் தெற்கில் கண்ணீர் துளிப்போல் அமைந்து இருக்கும் ஒரு தீவு. குமரிக்கண்டமானது எங்கே அமைந்து இருந்தது என்று தமிழர்கள் கூறுகின்றனரோ அப்பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பாக இலங்கை வீற்று இருக்கின்றது. இலங்கை என்று இன்று இருக்கும் இந்தத் தீவானது கடற்கோள்களால் அழிந்தது போக மீதி இருக்கும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
குமரிக்கண்டமானது கடற்கோள்களால் அழிந்தது சரி. ஆனால் முழுமையாக அழிந்ததா அல்லது அதன் பகுதிகளில் இன்னும் எஞ்சி இருக்கும் பகுதிகள் இருக்கின்றனவா என்றால் இன்னும் பகுதிகள் எஞ்சி இருக்கும் என்றே தான் நாம் கருத முடிகின்றது. நம்முடைய பூம்புகார் நாகரீகமாக இருக்கட்டும் அல்லது ஏனைய கடற்கோள்களால் அழிந்த இடங்களாக இருக்கட்டும், அவற்றின் பகுதிகள் மீதம் இருக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவற்றை விட மிகப் பெரியதாக கருதப்படும் குமரிக்கண்டத்தின் பகுதிகளும் மிஞ்சி இருக்கத் தான் வேண்டும். சரி இருக்கட்டும்...இப்பொழுது இலங்கையில் இருக்கும் ஒரு மலையினைப் பற்றித் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
இலங்கையில் இருக்கும் ஒரு மலையான ஆதாம் முகடு மலை (அல்லது) சிவனொளி பாதமலை ஒரு வரலாற்றுச் சிறப்பும் சமயச் சிறப்பும் மிக்க ஒரு மலையாகும். அந்த மலையின் உச்சியில் ஐந்தடி பதினோரு அங்குலம் அளவிலான ஒரு மனிதனின் காலடித் தடம் இருக்கின்றது.
 
அதனை,
 
சிவனின் பாதம் – என்று சைவர்கள் அழைப்பர்
 
முதல் மனிதனான ஆதாமின் பாதம் – என்று இசுலாமியர்களும் கிருத்துவர்களும் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி முதல் மனிதனான ஆதாம் உலகில் வந்த பொழுது முதன் முதலில் பதிந்த காலடித்தடம் அது.
 
புத்தனின் பாதம் (ஸ்ரீ பாதம்) – என்று பௌத்தர்கள் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி புத்தர் இந்த உலகினை விட்டுச் செல்லும் பொழுது இறுதியாக பதிந்த காலடித்தடம் அது.
 
அந்த மலையானது சைவர்கள், இசுலாமியர்கள், கிருத்துவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய நான்கு சமயத்தினருக்கும் புனிதமான ஒரு இடமாக இருக்கின்றது. இறைவன் மனிதனை படைத்தது அங்கே தான் என்றே அவர்கள் நம்புகின்றனர்.
 
குமரிக்கண்டத்தில் மனிதன் தோன்றினான் என்று தமிழர்கள் கூறுவதும், குமரிக்கண்டத்தின் பகுதிகளுள் ஒன்று என்று கருதப்படும் இலங்கையில் முதல் மனிதனின் காலடித்தடம் இருக்கின்றது என்று சமயங்கள் கூறுவதும் சிந்திக்கத்தக்கவைகளாக இருக்கின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு