ஒருமுறை இயேசுவை சோதிக்கும் வண்ணம் பழைமைவாத யூத ஆசிரியர்கள் சிலர் அவரை அணுகினர். அவர்கள் அவரிடம் "ஒரு மனிதன் தன்னுடைய மனைவியைக் கைவிடலாமா?" என்றே கேட்டனர்.

அதற்கு இயேசு "உலகத் தொடக்கத்தில் இருந்தே மனிதனானவன் ஆணாகவும் பெண்ணாகவுமே படைக்கப்பட்டு இருக்கின்றான். அதுவே இறைவனின் சித்தமாக இருக்கின்றது. அந்த ஒரு காரணத்திற்காகவே ஆணானவன் தன்னுடைய தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு தன்னுடைய மனைவியினைப் பற்றிக் கொள்கின்றான். கணவனும் மனைவியும் ஓர் உடலாக இணைகின்றனர். எனவே ஒரு மனிதனுக்கு அவனது மனைவியானவள் அவனுடைய சொந்த மாமிசத்தினைப் போலவே இருக்கின்றாள். எனவே கடவுள் அமைத்துக் இருக்கும் இந்த இயற்கை விதியினை மனிதன் மீறக்கூடாது. எது இணைக்கப்பட்டதோ அதனை மனிதன் பிரிக்கக் கூடாது.

யூதர்களாகிய உங்களிடம் இருக்கும் மோசேவின் சட்டத்தின்படி ஒரு மனிதன் தன்னுடைய மனைவியினை விட்டுவிட்டு மற்றொருப் பெண்ணை மனைவியாகத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இறைவனின் சித்தத்தின்படி அது உண்மையல்ல. எவன் ஒருவன் தன்னுடைய மனைவியை கைவிடுகின்றானோ அவன் அவளை விபச்சாரத்தில் தள்ளுவதற்கு இணையானக் காரியத்தைச் செய்கின்றான் என்றே நான் உங்களிடம் கூறுகின்றேன். மேலும் அவளுடன் இணையும் பிறரையும் விபச்சாரத்தில் அவன் தள்ளுகின்றான். அவ்வாறு தனது மனைவியினை விட்டு அவன் பிரிவதன் மூலம் உலகத்தினில் அவன் விபச்சாரத்தினைப் பரப்புகின்றான்." என்றே கூறினார்.

அதனைக் கேட்ட இயேசுவின் சீடர்கள் அவரிடம் "ஒரே பெண்ணுடன் இறுதிவரை வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது. அது தான் மனிதனிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது என்றால் திருமணமே செய்யாமல் வாழ்வது என்பது சிறந்த ஒன்றாக இருக்கும்" என்றே கூறினர்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி "திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்வதை நீங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் தான். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் அறிந்து இருக்க வேண்டும். ஒருவன் எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ளாது வாழ விரும்பினான் என்றால் அவன் முற்றிலும் தூய்மையானவனாக பிற பெண்களுடன் தொடர்பு கொள்ளாதவனாக இருக்க வேண்டும். ஆனால் பெண்களை நேசிக்கின்றவன் ஒரு மனைவியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறே தான் ஒன்றாக ஒன்றிணைந்த தனது மனைவியைக் கைவிடாமலும் பிற பெண்களைக் காணாமலும் அவன் இருக்க வேண்டும்." என்றே கூறினார்.

சிவன் என்பவர் யார் - ஆண் கடவுள்.
பெருமாள் என்பவர் யார் - ஆண் கடவுள்.
ஐயப்பன் எவ்வாறு பிறந்தார் - சிவனும், மோகினி வடிவத்தில் பெருமாளும் ஒன்றிணைய ஐயப்பன் தோன்றினார்.
அப்படி என்றால் ஒரு ஆண் கடவுளும் மற்றொரு ஆண் கடவுளும் ஒன்றிணைந்து ஒரு குழந்தையைப் பெறுகின்றனர். இது ஓரினச் சேர்க்கையைக் குறிப்பது தானே?

என்றே தான் இன்று பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் கேள்வியினை முன் வைக்கின்றனர். இதற்கு விடையினைக் கூற முடியாமல் இறை நம்பிக்கையாளர்களும் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

அவர்கள் கேட்கும் கேள்வியும் மிகவும் சிக்கலானதொரு கேள்வி அல்ல...பொதுவான கேள்வி தான். அதனைப் போன்றே அதற்கு பதில் சொல்ல முடியாது இருக்கும் நிலையும் ஒரு பொதுவான நிலை தான். ஏனென்றால் சிவனும் பெருமாளும் ஆண் கடவுளர் என்றே அவர்கள் பொதுவாக அறிந்து இருக்கின்றனர். பிரச்சனை இங்கே தான் இருக்கின்றது...சமூகத்தில் பரவி இருக்கும் விடயங்களை 'பொதுவாக' மட்டுமே அறிந்து இருப்பதில் தான் இங்கே பிரச்சனையானது அடங்கி இருக்கின்றது. அதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டும்...அதற்கு நாம் முதலில் வேறு சில 'பொதுவான' கருத்துக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பொதுவாக நாம் பொதுவுடைமைவாதிகளைப் பார்த்து கேள்வி கேட்கலாம்...

'இந்த பொதுவுடைமைக்காரனுன்களே இப்படித் தான்பா...அமெரிக்காகாரன் கொண்டு வந்தா எதிர்பானுங்க...ஆனா ரஷ்யாகாரன கொஞ்சுவானுங்க...கேரளாவுல அணுவுலைய எதிர்பானுங்க...ஆனா தமிழ்நாட்டுல ஆதரிப்பானுங்க...தனி ஈழம் வேணாம்னு சொல்லுவானுங்க...ஆனா பாலஸ்தீன் வேணும்னு சொல்லுவானுங்க...எல்லாம் திருட்டுபயலுக...பொதுவுடைமையே திருட்டுத்தனம்...' என்றே நாம் கூறலாம்...!!!

இதனை நம்முடைய தோழர்கள் முற்றிலுமாக மறுக்க முடியாது...ஆனால் அவர்களுடைய பதில்கள் எவ்வாறு இருக்கும் என்றால்...

'தோழர்...!!! இன்றைக்கு பொதுவுடைமை என்றுக் கூறி கொண்டு அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுள் அனைவரும் உண்மையான பொதுவுடைமைவாதிகள் என்றுக் கூற முடியாது. அவர்கள் அரசியல்வாதிகள்...அரசியல் செய்கின்றார்கள்...அவர்களை வைத்து நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையையும்...உண்மையான பொதுவுடைமைவாதிகளையும் கணிக்காதீர்கள்...பொதுவுடமையினைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்...பொதுவுடைமை என்பது தூய்மையானது என்று நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள்' என்றே அவர்கள் நமக்கு சில புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைப்பர்.

இந்நிலையில் பொதுவான கருத்துக்களை மட்டும் வைத்துக் கொள்ளாது, அவர்கள் தந்த நூலினைப் படித்து அதனைப் பற்றிச் சிந்தித்து உண்மை என்னவென்று அறிந்துக் கொள்வது தான் நாம் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருக்கும். அதைத் தவிர்த்து பொதுவான கருத்துக்களை மட்டுமே நாம் கொண்டிருப்போம் என்றால் அதனால் எந்தொரு பயனும் இல்லை.

மேற்கூறிய அதே எடுத்துக்காட்டு பெரியாரின் இயக்கங்களுக்கும் பொருந்தும். பெரியார் வாழ்ந்த காலகட்டத்தையும், அவரின் எழுத்துக்களையும், செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துக் கொள்ளாது, இன்று அவரது பெயரினால் நடக்கும் கோமாளித்தனங்களை மட்டும் வைத்துக் கொண்டு பொதுவாக அவரை விமர்சனம் செய்வது என்பது பொருந்தாத ஒரு செயலாகும். இதனைச் சிந்திப்பவர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

இப்பொழுது அதனைப் போன்றே தான் நாம் அய்யனாரையும் காண வேண்டி இருக்கின்றது. சமூகத்தில் பொதுவாக பரவி இருக்கும் கருத்துக்களைத் தவிர்த்து சமயங்கள் அடிப்படையாக எதனைக் கூறுகின்றன என்றே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாக கிட்டுபவை இவை தாம்....

பெருமாள் என்றொரு கடவுள் தனித்து கிடையாது. இறைவனின் ஆற்றலினை சிலர் பெண்ணாக உருவகப்படுத்தினர். அது அம்மன் என்று பெண் உருவகமாயிற்று. இறைவனின் ஆற்றலினை சிலர் ஆணாக உருவகப்படுத்தினர். அது பெருமாள் என்று ஆண் உருவகமாயிற்று. அம்மனும் பெருமாளும் இரு வேறு தெய்வங்கள் அல்ல...அவர்கள் இறைவனின் ஆற்றலின் வெவ்வேறு உருவகங்களே...!!!

சைவ அறிஞரான கா.சு.பிள்ளை அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்,

1) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)
 
2) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

3) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."
 
4) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

மேலும் திருநாவுக்கரசரும்,

“அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று சக்தியும் பெருமாளும் ஒன்று என்றே கூறுகின்றார்.
அதனால் தான்,

சிவனுக்கு அம்மனின் மூலமாக இரண்டு குழந்தைகள் கூறப்படும் பொழுது சிவனுக்கு பெருமாளின் மூலமாகவும் இரண்டு குழந்தைகள் கூறப்படுகின்றன. மேலும் பெருமாளுக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சைவத்தில்,

சிவன் (இறைவன்) - சக்தி (ஆற்றல்) - முருகன்/பிள்ளையார் (மகன்)

என்றிருக்கும் நிலை தான் வைணவத்தில்

சிவன் (இறைவன்) - பெருமாள் (ஆற்றல்) - பிரமன்/ஐயப்பன் (மகன்)

என்று இருக்கின்றது.

எனவே உண்மையான சமயக் கருத்துக்களின் அடிப்படையில் ஐயப்பன் என்பவர் ஓரினச் சேர்க்கையின் மூலமாக பிறந்தவர் அல்ல. ஐயப்பனின் பிறப்பு ஒரு உருவகம் தான். ஏன் ஐயப்பனே ஒரு உருவகம் தான்...ஆனால் அதனைப் பற்றிய கருத்துக்கள் இங்கே தேவை இல்லை. அதனை நாம் மற்றொரு பதிவில் விரிவாக காணலாம்...

இங்கே நமக்குத் தேவையானது என்னவென்றால் ஐயப்பனின் பிறப்பு ஓரினைச் சேர்க்கையைக் குறிப்பது அல்ல என்பதே.

பி.கு:

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்...மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த காலத்தில் உருவான திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் இன்னும் 100 வருடங்களைக் கூட முழுமையாகக் காணவில்லை. இருந்தும் அவற்றுள் எத்தனை மாற்றங்கள். நூல்களைப் பத்திரமாக வைத்து இருக்கும் வசதி வாய்ப்புகள் வளர்ந்திருக்கின்ற இந்த காலத்திலேயே இத்தனை முரண்பாடுகள் இருந்தது என்றால்...அவ்வசதி இல்லாத காலத்தில் மன்னராட்சி நடக்கையில் கருத்துக்கள் எந்தளவு மாற்றப்பட்டு இருக்கும் என்பதனை நீங்கள் சிந்தித்தாலே அறிவீர்கள். எனவே சமயங்களைக் குறித்து நீங்கள் கற்கும் பொழுது பொதுவான கருத்துக்களை மற்றும் கருதாது, உங்களின் இயல்பின் படியே கேள்விகளைக் கேட்டே தெளிவாக அறிந்துக் கொள்ள முயலுங்கள்.

தொடர்புடைய இடுகைகள்:

மகாபலியும் மகாபலிபுரமும்...!!! தமிழர்களுக்கு இவ்விரண்டு பெயர்களும் நன்றாகப் பழக்கப்பட்ட பெயர்கள் தான். சிறிதளவு வரலாற்று அறிவும் இதிகாச அறிவும் ஒருவனிடம் இருந்தது என்றால் தெளிவாக அவன் கூறி விடுவான்...

மகாபலி என்பது வாமன அவதாரம் என்று கருதப்படும் பெருமாளின் அவதாரங்களில் வரும் ஒரு அரசன் என்று. அன்றைய சேர நாடான இன்றைய கேரளாவில் வருடத்திற்கு ஒரு முறை மகாபலியின் (மாபலி) வருகை மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையென கொண்டாடப்படுகின்றது என்றும் மக்கள் பலரும் அறிவர்.

அதனைப் போன்றே மகாபலிபுரம் என்றால் அது தமிழகத்தின் தொண்டை நாட்டினில் (இன்றைக்கு சென்னைக்கு அருகில்) பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிற்ப நகரம் என்றுமே மக்கள் பலரும் அறிவர். இவை எல்லாம் மக்கள் பலரும் பெருவாரியாக அறிந்து இருக்கும் விடயங்கள். புராணக் கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்காகவும் சுற்றுப் பயணத்திற்காகவும் மட்டுமே அந்த விடயங்களை பெருவாரியான மக்கள் அறிந்து வைத்து இருக்கின்றனர். எனவே அந்தப் மகாபலி என்ற அரசனைக் குறித்தோ அல்லது மகாபலிபுரத்தின் தோற்றத்தின் காரணத்தைக் குறித்தோ அல்லது இவ்விரண்டு பெயர்களில் இருக்கும் ஒற்றுமையினைக் குறித்தோ அவர்கள் அறிந்து இருக்க வேண்டியத் தேவை இல்லை. ஆனால் அறியாத விடயங்களையும் உண்மையினையும் குறித்தே நாம் நம்முடைய பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். அந்நிலையில் நாம் மகாபலியினைப் பற்றியும் மகாபலிபுரத்தினைப் பற்றியும் சற்றுத் தெளிவாக காண வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசனை வாமன அதிகாரத்தில் வந்த பெருமாள் பாதாள உலகத்திற்கு அனுப்பி விடுகின்றார். இருந்தும் அவன் தனது மக்களை காண விரும்புவதனால் வருடத்திற்கு ஒரு முறை அவன் அவனுடைய நாட்டு மக்களை வந்து சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவனுக்கு வரமும் அவர் அளிக்கின்றார்.  இது தான் சுருக்கமாக வாமன அவதாரத்தின் கதை. இங்கே தான் நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசன் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா? அவ்வாறு அவன் இருந்தான் என்றால் அவன் ஆண்ட காலம் எது? இன்றைக்கு கேரள நாட்டினில் தான் மகாபலி சிறப்பாக கருதப்பட்டு வருகின்றான். இன்றைக்கு கேரளா என்று இருக்கும் இடமானது தமிழர்களின் சேர நாடே ஆகும். அவ்வாறு இருக்கையில் தமிழ் சங்க இலக்கியங்களில் மகாபலியைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றனவா?

இந்த கேள்விகளுக்கு விடை மகாபலி என்ற அரசன் வரலாற்றில் இருந்தமைக்கு சான்றுகள் இல்லை என்றே வருகின்றது. மேலும் அவனது காலத்தினை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் புராணக் கதைகளைக் கூறுவோர் கூறலாம்...ஆனால் சான்றுகள் இன்றி அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே மகாபலி என்ற ஒரு வரலாற்று மன்னன் இருந்தமைக்கு சான்றுகள் புராணக் கதைகளைத் தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இல்லை. சரி இப்பொழுது மகாபலிபுரத்தினைப் பற்றி காண்போம். மகாபலிபுரத்தினைப் பற்றி பொதுவாக நாம் அறிந்து இருக்கும் விடயங்கள் என்னவென்றால்...

மகாபலிபுரம் உலகப்புகழ் பெற்ற ஒரு சிற்ப நகரமாகும். சிற்ப கலைகளின் மூலமாக இந்த நகரினை உலகப் புகழ் பெற வைத்தது பல்லவ மன்னவர்களாவர். இங்கே நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்லவ மன்னர்கள் என்பவர்கள் யார்? என்பதே அந்த கேள்வியாகும்.

சங்க இலக்கியங்களில் அவர்களைப் பற்றியக் குறிப்புகள் இல்லை. தமிழ் கூறும் மூவேந்தர்களுள் அவர்கள் இல்லை...தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்று அறியப்பெறும் களப்பிரர்களின் காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் செல்வாக்குடன் இவர்கள் ஆண்டு வந்து இருக்கின்றனர். காஞ்சியும் மகாபலிபுரமும் இவர்களின் காலத்தில் சிறப்புற்று விளங்கி இருக்கின்றது. சமஸ்கிருதம் இவர்களுடைய ஆட்சியில் செல்வாக்கில் இருந்து உள்ளது. இப்படிப்பட்ட இவர்கள் யார்? தமிழர்களா அல்லது வேற்று இனத்தவர்களா?

இந்த கேள்விக்கு விடையினைக் கண்டோம் என்றால் அதுவும் தெளிவில்லாத நிலையில் தான் இருக்கின்றது. (பல்லவர்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவினில் காண்போம். இப்பதிவில் அவர்களைப் பற்றி விரிவாகக் காணத் தேவை இல்லை)

இந்நிலையிலேயே தான் நாம் மகாபலி என்ற பெயரினையும் மகாபலிபுரம் என்ற பெயரினையும் காண வேண்டி இருக்கின்றது. இவ்விரண்டு பெயர்களும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. மகாபலி என்ற பெயர் தமிழகத்தின் மேற்குத் திசையில் பரவலாக அறியப்பட்டு இருக்கின்றது. மகாபலிபுரமோ தமிழகத்தின் கிழக்குத் திசையில் அமைந்து இருக்கின்றது. இந்நிலையில் மகாபலி என்ற அரசன் ஒருவன் அந்த நிலப்பரப்பு முழுமையினையும் ஆண்டானா என்ற கேள்வியினை நாம் முன் வைப்போமே என்றால் அதற்குரிய சான்றுகள் எவையும் நமக்கு கிட்டப் பெறவில்லை.

மேலும் பெருமாளின் அவதாரங்களைக் கூறும் நூல்களுள் மிகவும் பழமையான நூல் பரிபாடலாகும். இதன் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு என்று கூறுவர் அல்லது அதற்கும் பிந்திய காலம் என்றும் கூறுவர். அத்தகைய அந்த நூலினில் வாமன அவதாரத்தினைப் பற்றியக் குறிப்பு இல்லை. எனவே வாமன அவதாரம் என்பது கி.பி நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுந்த ஒரு கதை என்றே நாம் கருத முடிகின்றது.

மேலும் சைவ சமயமானது இறைவன் ஒருமுறை தான் உலகிற்கு வந்தான் என்றுக் கூறுவதையும், பெருமாளினை சக்தியின் ஆண் வடிவமாகக் கருதுவதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் மகாபலி என்றொரு அரசன் உண்மையில் வாழ்ந்து இருக்கவே இல்லை என்றே நாம் கருத வேண்டி வருகின்றது.

அந்நிலையில் சங்க இலக்கியங்களிலும் அந்த கால கட்டத்திலும் காணப்படாத மகாபலி என்கின்ற சொல், ஏன் பிற்காலத்தில் காணப்படுகின்றது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மகாபலி என்ற சொல்லினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அந்தச் சொல்லினை நாம் கண்டோம் என்றால்

மகாபலி - மகா + பலி = மிகப் பெரிய பலி என்றே அது பொருள் தருகின்றது.
மகாபலிபுரம் - மகா + பலி + புரம் = மிகப் பெரிய பலிக்கான இடம்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, இங்கும் ஒரு கேள்வி எழுகின்றது. அது என்ன மிகப் பெரிய பலி? எது அந்த மிகப் பெரிய பலி?

இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

தொடரும்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்
அம்மனும் பெருமாளும் 
தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!! 

நம்மில் சிலருக்கு டால்ஸ்டாயினைப் பற்றிச் சிறிது தெரியும். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்...ரஷ்ய நாட்டினைச் சார்ந்தவர்...'போரும் அமைதியும்' போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதி உலக சரித்திரத்தில் இறவாத ஒரு இடத்தினைப் பிடித்து இருப்பவர்...என்றே அவரைப் பற்றி அறிந்து இருப்போம். மேலும் அவரது பல சிறுகதைகளை பள்ளிப் பருவங்களில் நம்மில் பலர் படித்து இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. நிற்க

நம்மில் அனேகமாக அனைவருக்கும் காந்தியினைப் பற்றித் தெரிந்து இருக்கும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை அறவழியில் கொண்டு செலுத்தி இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட ஒருவர். மகாத்மா என்றும் தேசத் தந்தை என்றும் பரவலாக இந்திய தேசத்தில் அறியப்படுபவர். அவரைப் பற்றி பல விதமான கருத்துக்கள் நம்மிடையே நிலவினாலும் இந்திய வரலாற்றில்...ஏன் உலக வரலாற்றிலும் நிலைத்து நின்று விட்ட ஒரு மனிதர். அகிம்சை, ஒத்துழையாமை இயக்கங்கள் என்று வன்முறைக்கு மாற்றாக போராட்ட வழிமுறைகளை செயல்படுத்திக் காட்டிய ஒரு தலைவர். சரி இருக்கட்டும்.

மேற்கூறிய அனைத்து விடயங்களையும் நாம் அனைவரும் நிச்சயம் அறிந்து தான் இருப்போம். அனால் அறியாத சில விடயங்களே இங்கே முக்கியமானதாக இருக்கின்றன...அவை என்னவென்றால்...காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்கு தூண்டுதலாக...ஒரு வழிகாட்டியாக இருந்தது லியோ டால்ஸ்டாய் தான் என்பதே ஆகும்.

ஆம்...!!! காந்தியின் அகிம்சைக் கொள்கைகளாகட்டும் அறவழிப் போராட்டங்களாக இருக்கட்டும் அவற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருந்தது டால்ஸ்டாயின் படைப்புகளும் சிந்தனைகளுமே ஆகும். இதனைப் பற்றி நாம் மேலும் காண வேண்டும் என்றால் டால்ஸ்டாயினைப் பற்றியும் காந்தியினைப் பற்றியும் நாம் சிறிது கூடுதலாக அறிந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

டால்ஸ்டாய், வெறும் ஒரு எழுத்தாளராக மட்டும் இருந்து இருக்கவில்லை. தனது சிறு வயதில் நாத்திகராக இருந்த அவர் பிற்காலத்தில் வாழ்வின் அர்த்தத்தினைக் கண்டு கொண்டு ஒரு மாபெரும் ஆன்மீகப் போராளியாகத் திகழ்ந்தவர். அவருடைய ஆன்மீக நூல்களை ரஷ்யாவினில் வெளியிடத் தடை இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவன் அன்பாகவே இருக்கின்றார் என்பதையும் பிற மக்களுக்கு உதவி செய்வதிலேயுமே வாழ்வானது அடங்கி இருக்கின்றது என்பதையும் அறிந்துக் கொண்ட அவர் மற்ற சமயங்கள் கூறும் கருத்துக்கள் யாவை என்பதையும் அறிந்துக் கொள்ள அச்சமய நூல்களை ஆராய்ந்தவர்.

இறைவன் அன்பாகவே இருக்கின்றான் என்கின்ற பொழுது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் இயேசு கூறிய 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' என்பதனைப் போல் ஒரு மனிதன் தீமையை வன்முறையால் வெல்ல முயலாது அன்பினால் வெல்ல வேண்டும் என்றும் கூறி அதனைப் நடைமுறைப்படுத்தியவர்.

அப்படிப்பட்ட டால்ஸ்டாயின் நூல்களும் கருத்துக்களும் தான் காந்தியைக் கவர்ந்தன. டால்ஸ்டாய் எழுதிய 'பரலோக இராஜ்யம் உன்னுள் இருக்கின்றது' என்ற நூல் காந்தியின் உள்ளே ஒரு மாபெரும் தாக்கத்தினை உண்டாக்கியது. தென்னாப்பிரிக்காவினில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் முதற் கொண்ட அறப்போராட்டங்களுக்கு டால்ஸ்டாயின் சிந்தனைகள் அடிப்படையாக இருந்தன. அதனால் தான் காந்தி தென்னாப்பிரிக்காவினில் தொடங்கிய தனது முதல் ஆசிரமத்திற்கு 'டால்ஸ்டாய் பண்ணை' என்று பெயரிட்டார்.

மேலும் காந்தியும் டால்ஸ்டாயும் கடிதத் தொடர்பும் கொண்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளும் பொழுது தான் காந்திக்கு டால்ஸ்டாய் திருக்குறளை அறிமுகம் செய்து வைக்கின்றார். உலகின் உள்ள அனைத்து சமயங்களைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் ஆங்கிலேயர்களின் வழியாகவே இந்தியாவில் இருந்த சமயத்தினை அறிந்து இருந்தார். எனவே அவருக்கு இங்கே சைவம், வைணவம், வைதீகம் என்று மாறுபட்ட பல சமயங்கள் இருந்தது தெரியாது. அவருக்கு இந்தியா என்றால் ஒரு தேசம், அங்கே இருந்தது ஒரு மதம்...அது இந்து மதம் என்றே தான் தெரியும். அதனால் தான் காந்திக்கு அவர் கடிதம் எழுதுகையில் 'இந்துக்கு ஒரு கடிதம்' என்றே எழுதுகின்றார்.

அக்கடிதத்தில் மக்களைப் பற்றியும், உலக சமயங்களைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் அவர் காந்தியிடம் பேசுகின்றார். மேலும் குறிப்பாக அன்பினைப் பற்றியும் பேசுகின்றார். அவ்வாறு பேசும் பொழுது திருக்குறளில் இருந்து சில குறள்களை எடுத்துக்காட்டாக காட்டியே அவர் பேசுகின்றார். பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதனைப் பற்றி பேசும் பொழுது 'இன்னா செய்யாமை' என்ற அதிகாரத்தில் இருந்து சில குறள்களை அவர் மேற்கோள்களாக காட்டுகின்றார்.

இதன் மூலமாக திருக்குறள் என்ற நூலினைப் பற்றி காந்தி அவர்கள் அறிந்துக் கொள்வதற்கு டால்ஸ்டாய் உதவி இருக்கின்றார் என்பதனை நாம் அறிந்துக் கொள்கின்றோம். நிற்க

திருக்குறளினை அறிமுகம் செய்ய உதவியது என்பதற்காக மட்டுமே டால்ஸ்டாய்க்கும் காந்திக்கும் இடையில் இருந்தத் தொடர்பினைப் பற்றி நாம் இங்கே காணவில்லை. மாறாக நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் சமயங்களைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி ஆன்மீகப் பொதுவுடைமையினைப் பற்றிய கருத்துக்களுக்கும் சரி இவர்கள் இருவரும் மிக முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசியல் பொதுவுடைமை என்றக் கோட்பாடு ரஷ்ய நாட்டினில் லெனின் ஸ்டாலின் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தினில் ஆன்மீகப் பொதுவுடைமைக்கான விதை டால்ஸ்டாயின் மூலமாகவும் காந்தியின் மூலமாகவும் விதைக்கப்பட்டு கொண்டிருந்தது. இதனைப் பற்றி நாம் விரிவாகக் காண வேண்டும். எனவே வேறு பதிவுகளில் அவற்றைப் பற்றி காணலாம்.

பி.கு:

காந்திக்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தினை முன்னரே நாம் சில பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். அந்த பதிவுக்களுக்கான இணைப்புகள்:

சமயங்களைப் பற்றியே நம்முடைய பதிவுகளில் நாம் பெருவாரியாகக் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். நம்முடைய கூற்றுகளுக்கு சான்றாகப் பல்வேறு விடயங்களையும் நாம் கண்டே தான் வந்துக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறு பல்வேறு சமய நூல்களும் சரி இதிகாச நூல்களும் சரி கடலினில் மூழ்கிய ஒரு கண்டத்தினைப் பற்றிப் பேசுகின்றன என்றும் எவ்வாறு அந்த செய்திகள் தமிழர்கள் கூறும் குமரிக்கண்டத்தினுடன் பொருந்திப் போகின்றது என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. முதல் மனிதனின் காலடித்தடம் என்றும் சிவனின் காலடித் தடம் என்றும் புத்தனின் காலடித் தடம் என்றும் உலக சமயங்கள் அனைத்தும் உரிமைப் பாராட்டும் ஒன்றைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் இலங்கையைப் பற்றி காண வேண்டி இருக்கின்றது.

இலங்கை...இந்தியாவின் தெற்கில் கண்ணீர் துளிப்போல் அமைந்து இருக்கும் ஒரு தீவு. குமரிக்கண்டமானது எங்கே அமைந்து இருந்தது என்று தமிழர்கள் கூறுகின்றனரோ அப்பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்பாக இலங்கை வீற்று இருக்கின்றது. இலங்கை என்று இன்று இருக்கும் இந்தத் தீவானது கடற்கோள்களால் அழிந்தது போக மீதி இருக்கும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
குமரிக்கண்டமானது கடற்கோள்களால் அழிந்தது சரி. ஆனால் முழுமையாக அழிந்ததா அல்லது அதன் பகுதிகளில் இன்னும் எஞ்சி இருக்கும் பகுதிகள் இருக்கின்றனவா என்றால் இன்னும் பகுதிகள் எஞ்சி இருக்கும் என்றே தான் நாம் கருத முடிகின்றது. நம்முடைய பூம்புகார் நாகரீகமாக இருக்கட்டும் அல்லது ஏனைய கடற்கோள்களால் அழிந்த இடங்களாக இருக்கட்டும், அவற்றின் பகுதிகள் மீதம் இருக்கத் தான் செய்கின்றன. அவ்வாறு இருக்கையில் அவற்றை விட மிகப் பெரியதாக கருதப்படும் குமரிக்கண்டத்தின் பகுதிகளும் மிஞ்சி இருக்கத் தான் வேண்டும். சரி இருக்கட்டும்...இப்பொழுது இலங்கையில் இருக்கும் ஒரு மலையினைப் பற்றித் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
இலங்கையில் இருக்கும் ஒரு மலையான ஆதாம் முகடு மலை (அல்லது) சிவனொளி பாதமலை ஒரு வரலாற்றுச் சிறப்பும் சமயச் சிறப்பும் மிக்க ஒரு மலையாகும். அந்த மலையின் உச்சியில் ஐந்தடி பதினோரு அங்குலம் அளவிலான ஒரு மனிதனின் காலடித் தடம் இருக்கின்றது.
 
அதனை,
 
சிவனின் பாதம் – என்று சைவர்கள் அழைப்பர்
 
முதல் மனிதனான ஆதாமின் பாதம் – என்று இசுலாமியர்களும் கிருத்துவர்களும் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி முதல் மனிதனான ஆதாம் உலகில் வந்த பொழுது முதன் முதலில் பதிந்த காலடித்தடம் அது.
 
புத்தனின் பாதம் (ஸ்ரீ பாதம்) – என்று பௌத்தர்கள் அழைப்பர். அவர்களின் கருத்தின்படி புத்தர் இந்த உலகினை விட்டுச் செல்லும் பொழுது இறுதியாக பதிந்த காலடித்தடம் அது.
 
அந்த மலையானது சைவர்கள், இசுலாமியர்கள், கிருத்துவர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய நான்கு சமயத்தினருக்கும் புனிதமான ஒரு இடமாக இருக்கின்றது. இறைவன் மனிதனை படைத்தது அங்கே தான் என்றே அவர்கள் நம்புகின்றனர்.
 
குமரிக்கண்டத்தில் மனிதன் தோன்றினான் என்று தமிழர்கள் கூறுவதும், குமரிக்கண்டத்தின் பகுதிகளுள் ஒன்று என்று கருதப்படும் இலங்கையில் முதல் மனிதனின் காலடித்தடம் இருக்கின்றது என்று சமயங்கள் கூறுவதும் சிந்திக்கத்தக்கவைகளாக இருக்கின்றன.

தொடர்புடைய இடுகைகள்:

மனிதனின் வாழ்விற்குத் தேவையான அற விடயங்களை வள்ளுவர் அறத்துப்பாலில் விளக்குகின்றார். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் ஒன்று துறவறத்தை மேற்கொள்ளலாம். அல்லது இல்லறத்தை மேற்கொள்ளலாம். இவ்விரண்டு அறத்தினுள் இல்லறமே சிறந்தது என்று வள்ளுவர் கருதியதினால் தான் அதனை முதலில் வைத்து இருக்கின்றார். ஆணும் பெண்ணும் இணைந்து சமூகத்தில் நல்லறமாக இல்லற வாழ்வினை நடத்த வள்ளுவர் கூறும் வழிமுறைகள் என்னவென்றால்...

இல்வாழ்க்கை – அறவழியில் இல்லற வாழ்வினை நடத்துவதே மனிதனின் கடமையாகும்.

வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பினைப் பொறுத்தே இல்லறத்தின் சிறப்பு விளங்கப் பெறுகின்றது

புதல்வரைப் பெறுதல் – நற்பண்புகளுடன் உடைய புதல்வரை உருவாக்குவதிலேயே ஒரு தம்பதியினரின் சிறப்பும் கடமையும் அடங்கி இருக்கின்றது. 

அன்புடைமை – அன்புடன் இருக்கும் தன்மையே மனிதன் உயிருடன் இருக்கும் தன்மைக்கு சான்றாகும். அன்பே ஒருவனை இறைவனுடன் இணைக்கின்றது. அன்பினை அடிப்படையாகக் கொண்டே இல்லத்தை மக்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விருந்தோம்பல் – இல்லறமாக வாழ்வது என்பது மக்கள் ஒன்றிணைந்து மற்ற மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே. அனைவருக்கும் உதவும் சமூகத்தினை உருவாக்குவதே இல்லறம் பூண்டவர்களின் கடமையாகும்.

இனியவைக்கூறல் – அன்பினை அடிப்படையாகக் கொண்டு வஞ்சம் சிறிதும் அற்ற இனியச் சொற்களை உள்ளத்தில் இருந்து கூறுவோர் உலகில் தீமையை வென்று நன்மையைப் பரப்புகின்றனர். அதுவே மனிதர்களுக்கு அழகான ஒரு அணிகலனாக இருக்கின்றது. இனிமையான நல்ல சொற்களே இல்லத்திலும் சரி சமூகத்திலும் சரி நிறைந்து இருக்க வைப்பதே இல்லத்தாரின் கடமையாகும்.

செய்ந்நன்றி அறிதல் – எவ்வித பலனையும் கருதாது மற்றவர்களுக்கு உதவுவதே ஒருவனுக்கு கடமையாக இருக்கின்றது. அத்தகைய உதவியினை மறவாது அதனை நினைவிற் கொண்டு அதனைப் போல் தாமும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவதே உதவியினைப் பெற்றவர்களுக்குச் சிறந்த அறமாக இருக்கின்றது. 

நடுவு நிலைமை – மக்களுள் பாரபட்சம் பார்க்காமல் நன்மையின் பக்கம் நடுநிலையோடு நிற்பதே ஒருவனின் தலையாய கடமையாகும்.

அடக்கமுடைமை – ஒருவன் தன்னைத் தானே மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக கருதிக் கொள்ளாது எப்பொழுதும் அடக்கமாக பணிவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னைத் தானே உயர்த்துகின்றவர்கள் தாழ்த்தப்படுவார்கள். தன்னைத் தானே தாழ்த்துகின்றவர்களோ உயர்த்தப்படுவார்கள்.
 
ஒழுக்கமுடைமை – ஒழுக்கம் உடையவர்களே மேன்மையான சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். எனவே இல்லறம் மேற்கொள்வோர் ஒழுக்கத்தினை உயிரினும் மேலாக கருதி அதன் அடிப்படையில் மேன்மையான குணங்களைக் கொண்ட சமூகத்தினை உருவாக்கிட வேண்டும்.

பிறனில் விழையாமை – ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கைக்கு மாறாக நடக்கும் மக்கள் இழிவான ஒரு சமூகத்தினை உருவாக்குகின்றார்கள். கடவுளிடம் இருந்து விலகி தீமையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செல்லும் அவர்கள் உயிரோடு இருந்தாலும் இறைவனின் முன்னர் இறந்தவர்களுக்கு சமமாவார்கள். நல்ல மக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று இறைவன் வகுத்த கொள்கையோடு இறைவனுடன் ஒன்றிணைந்து இருப்பர்.

பொறையுடைமை – தீயினைத் தீயினால் அணைக்க முடியாது. அதனைப் போன்றே தீமையை தீமையால் அழிக்க முடியாது. எனவே தனக்கு ஒருவர் தீமையினச் செய்து இருந்தால் அதனைப் பொறுமையாகப் பொறுத்து மன்னித்து அருள வேண்டும். அன்பினாலேயே தீமையை வெல்ல முடியும். எனவே இல்லறம் புரிவோர் எக்கணமும் பொறுமையுடன் அன்பாலேயே அனைத்துப் பிரச்சனைகளையும் அணுக வேண்டும்.

அழுக்காறாமை – பொறாமை என்பது ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய எதிரி ஆகும். ஆள் இல்லாத வீட்டினில் பாம்புகள் குடிக் கொள்வது போல அன்பில்லாத இதயத்தினில் பொறாமை போன்ற தீய குணங்கள் குடியேறிக் கொண்டு அந்த இதயத்தினை அழித்து விடுகின்றன. எனவே இல்லறம் புரிவோர் அத்தகைய தீய குணத்தினை தங்களது இல்லத்திலும் சரி தாங்கள் வாழும் சமூகத்திலும் சரி நுழைய விடாத வண்ணமே வாழ வேண்டும்.

வெஃகாமை – பிறரது பொருளினை கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொள்ளாது சந்தேகப்படும் நிலையினை உருவாக்கி விடுகின்றது. ஒற்றுமையாக இருக்கும் சமூகத்தினை உருவாக்காது ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொள்ளும் ஒரு மிருக சமூகத்தினை உருவாக்குகின்றது. இல்லறம் மேற்கொள்வோர் அவ்வாறு பிறரின் பொருட்களின் மீது ஆசைக் கொள்ளாது ஒற்றுமையாக அன்புடன் இருக்கும் ஒரு சமூகத்தினையே உருவாக்கிட வேண்டும்.

புறங்கூறாமை – ஒருவரைப் பற்றி அவர் இல்லாத பொழுது புறங் கூறும் செயலானது அவர் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை உடைக்கத் தக்கதாக இருக்கின்றது. அவ்வாறு ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்று இருக்கும் நிலையினில் இருக்கும் சமூகத்திலேயே தான் தீய குணங்கள் செழித்து வளர்கின்றன. எனவே இல்லறம் மேற்கொள்வோர் புறங் கூறாது இருப்பது என்பது மிகவும் முக்கியமானதொன்று.

பயனில சொல்லாமை – பயனற்ற தீய விடயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது தீமையையே பரப்புகின்து. மனிதனால் அவனுடைய வாழ்வினில் பல நன்மைகளை செய்ய முடியும் இருந்தும் அவ்வாறுச் செய்யாமல் பயனற்ற தீய சொற்களையே ஒருவன் பேசி வருவான் என்றால் அவன் தனது வாழ்வினை பயனற்ற ஒன்றாக ஆக்குவதுடன் அவன் வாழும் சமூகத்தினை தீய சமூகமாகவும் ஆக்குகின்றான். எனவே இல்லறம் மேற்கொள்வோர் பயனற்ற காரியங்களிலும் சொற்களிலும் நேரத்தை விரயமாக்காது இருக்க வேண்டும்.

தீவினையச்சம் – தீமையை பார்ப்பதால், கேட்பதால், பேசுவதால் தீமையானதே பரவுகின்றது. தீமையை தீமையால் அழிக்க முடியாது. தன்னைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தே ஒரு சராசரி மனிதன் தனது வாழ்வினை அமைத்துக் கொள்கின்றான். எனவே நம்முடைய செயல்கள் மற்றவர்களை பாதிக்கும் என்று கருதி தீமையானச் செயல்களைச் செய்வதற்கு இல்லறம் மேற்கொள்வோர் அச்சம் கொள்ள வேண்டும்.

ஒப்புரவறிதல் – இறைவன் அளித்த இந்த வாழ்வானது நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் மக்களுடன் ஒன்றாக இணைந்திருந்து ஒவ்வொருவரும் பிறருக்கு உதவிக் கொண்டு சகோதரர்களாக வாழ்வதற்காகத் தான். பிறருக்கு உதவுவதிலேயே வாழ்வின் அர்த்தமானது அடங்கி இருக்கின்றது. எனவே இல்லறம் மேற்கொள்வோர் பிறருக்கு உதவும் குணத்தினை சமூகத்தினில் வளர்க்கும் வண்ணமே வாழ வேண்டும்.

ஈகை – பிறருக்கு தருவதனால் வரும் ஒருவன் அடையும் மகிழ்ச்சியே உண்மையான இன்பமாகும். அடுத்தவருக்கு உதவியாக இருக்கும் வண்ணம் வாழும் வாழ்வே மெய் வாழ்வாகும். எனவே இல்லறம் மேற்கொள்வோர் எப்பொழுதும் தங்களால் இயன்ற வண்ணம் ஈகை குணத்தினை சமூகத்தினில் வளர்க்க வேண்டும்.  

புகழ் – தான் மறைந்தப் பின்னரும் தன்னுடைய செயல்களால் இறவாத் தன்மையினை ஒருவன் அடைவதே அவன் வாழ்வினை நன்றாக வாழ்ந்ததற்கு அர்த்தமாகும். சுய நலமாக தன்னை மற்றும் பார்த்துக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் உயிரோடு இருந்தும் மரித்தவர்களாக இருக்கின்றனர். தாங்கள் வாழும் காலத்தில் சமூகத்தில் மற்ற மக்களுக்காக அன்பால் உழைத்தவர்களே இறந்த பின்பும் புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய புகழையே இல்லறம் மேற்கொள்வோர் நாட வேண்டும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு