சிவன் என்பவர் யார் - ஆண் கடவுள்.
பெருமாள் என்பவர் யார் - ஆண் கடவுள்.
ஐயப்பன் எவ்வாறு பிறந்தார் - சிவனும், மோகினி வடிவத்தில் பெருமாளும் ஒன்றிணைய ஐயப்பன் தோன்றினார்.
அப்படி என்றால் ஒரு ஆண் கடவுளும் மற்றொரு ஆண் கடவுளும் ஒன்றிணைந்து ஒரு குழந்தையைப் பெறுகின்றனர். இது ஓரினச் சேர்க்கையைக் குறிப்பது தானே?
என்றே தான் இன்று பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் கேள்வியினை முன் வைக்கின்றனர். இதற்கு விடையினைக் கூற முடியாமல் இறை நம்பிக்கையாளர்களும் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அவர்கள் கேட்கும் கேள்வியும் மிகவும் சிக்கலானதொரு கேள்வி அல்ல...பொதுவான கேள்வி தான். அதனைப் போன்றே அதற்கு பதில் சொல்ல முடியாது இருக்கும் நிலையும் ஒரு பொதுவான நிலை தான். ஏனென்றால் சிவனும் பெருமாளும் ஆண் கடவுளர் என்றே அவர்கள் பொதுவாக அறிந்து இருக்கின்றனர். பிரச்சனை இங்கே தான் இருக்கின்றது...சமூகத்தில் பரவி இருக்கும் விடயங்களை 'பொதுவாக' மட்டுமே அறிந்து இருப்பதில் தான் இங்கே பிரச்சனையானது அடங்கி இருக்கின்றது. அதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டும்...அதற்கு நாம் முதலில் வேறு சில 'பொதுவான' கருத்துக்களைக் காண வேண்டி இருக்கின்றது.
இன்று பொதுவாக நாம் பொதுவுடைமைவாதிகளைப் பார்த்து கேள்வி கேட்கலாம்...
'இந்த பொதுவுடைமைக்காரனுன்களே இப்படித் தான்பா...அமெரிக்காகாரன் கொண்டு வந்தா எதிர்பானுங்க...ஆனா ரஷ்யாகாரன கொஞ்சுவானுங்க...கேரளாவுல அணுவுலைய எதிர்பானுங்க...ஆனா தமிழ்நாட்டுல ஆதரிப்பானுங்க...தனி ஈழம் வேணாம்னு சொல்லுவானுங்க...ஆனா பாலஸ்தீன் வேணும்னு சொல்லுவானுங்க...எல்லாம் திருட்டுபயலுக...பொதுவுடைமையே திருட்டுத்தனம்...' என்றே நாம் கூறலாம்...!!!
இதனை நம்முடைய தோழர்கள் முற்றிலுமாக மறுக்க முடியாது...ஆனால் அவர்களுடைய பதில்கள் எவ்வாறு இருக்கும் என்றால்...
'தோழர்...!!! இன்றைக்கு பொதுவுடைமை என்றுக் கூறி கொண்டு அரசியல் செய்து கொண்டிருப்பவர்களுள் அனைவரும் உண்மையான பொதுவுடைமைவாதிகள் என்றுக் கூற முடியாது. அவர்கள் அரசியல்வாதிகள்...அரசியல் செய்கின்றார்கள்...அவர்களை வைத்து நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையையும்...உண்மையான பொதுவுடைமைவாதிகளையும் கணிக்காதீர்கள்...பொதுவுடமையினைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தப் புத்தகங்களைப் படியுங்கள்...பொதுவுடைமை என்பது தூய்மையானது என்று நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள்' என்றே அவர்கள் நமக்கு சில புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைப்பர்.
இந்நிலையில் பொதுவான கருத்துக்களை மட்டும் வைத்துக் கொள்ளாது, அவர்கள் தந்த நூலினைப் படித்து அதனைப் பற்றிச் சிந்தித்து உண்மை என்னவென்று அறிந்துக் கொள்வது தான் நாம் செய்ய வேண்டிய ஒரு செயலாக இருக்கும். அதைத் தவிர்த்து பொதுவான கருத்துக்களை மட்டுமே நாம் கொண்டிருப்போம் என்றால் அதனால் எந்தொரு பயனும் இல்லை.
மேற்கூறிய அதே எடுத்துக்காட்டு பெரியாரின் இயக்கங்களுக்கும் பொருந்தும். பெரியார் வாழ்ந்த காலகட்டத்தையும், அவரின் எழுத்துக்களையும், செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துக் கொள்ளாது, இன்று அவரது பெயரினால் நடக்கும் கோமாளித்தனங்களை மட்டும் வைத்துக் கொண்டு பொதுவாக அவரை விமர்சனம் செய்வது என்பது பொருந்தாத ஒரு செயலாகும். இதனைச் சிந்திப்பவர் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
இப்பொழுது அதனைப் போன்றே தான் நாம் அய்யனாரையும் காண வேண்டி இருக்கின்றது. சமூகத்தில் பொதுவாக பரவி இருக்கும் கருத்துக்களைத் தவிர்த்து சமயங்கள் அடிப்படையாக எதனைக் கூறுகின்றன என்றே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாக கிட்டுபவை இவை தாம்....
பெருமாள் என்றொரு கடவுள் தனித்து கிடையாது. இறைவனின் ஆற்றலினை சிலர் பெண்ணாக உருவகப்படுத்தினர். அது அம்மன் என்று பெண் உருவகமாயிற்று. இறைவனின் ஆற்றலினை சிலர் ஆணாக உருவகப்படுத்தினர். அது பெருமாள் என்று ஆண் உருவகமாயிற்று. அம்மனும் பெருமாளும் இரு வேறு தெய்வங்கள் அல்ல...அவர்கள் இறைவனின் ஆற்றலின் வெவ்வேறு உருவகங்களே...!!!
சைவ அறிஞரான கா.சு.பிள்ளை அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார்,
1) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)
2) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."
3) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."
4) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)
மேலும் திருநாவுக்கரசரும்,
“அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று சக்தியும் பெருமாளும் ஒன்று என்றே கூறுகின்றார்.
அதனால் தான்,
சிவனுக்கு அம்மனின் மூலமாக இரண்டு குழந்தைகள் கூறப்படும் பொழுது சிவனுக்கு பெருமாளின் மூலமாகவும் இரண்டு குழந்தைகள் கூறப்படுகின்றன. மேலும் பெருமாளுக்கு வேறு குழந்தைகள் இல்லாத நிலையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சைவத்தில்,
சிவன் (இறைவன்) - சக்தி (ஆற்றல்) - முருகன்/பிள்ளையார் (மகன்)
என்றிருக்கும் நிலை தான் வைணவத்தில்
சிவன் (இறைவன்) - பெருமாள் (ஆற்றல்) - பிரமன்/ஐயப்பன் (மகன்)
என்று இருக்கின்றது.
எனவே உண்மையான சமயக் கருத்துக்களின் அடிப்படையில் ஐயப்பன் என்பவர் ஓரினச் சேர்க்கையின் மூலமாக பிறந்தவர் அல்ல. ஐயப்பனின் பிறப்பு ஒரு உருவகம் தான். ஏன் ஐயப்பனே ஒரு உருவகம் தான்...ஆனால் அதனைப் பற்றிய கருத்துக்கள் இங்கே தேவை இல்லை. அதனை நாம் மற்றொரு பதிவில் விரிவாக காணலாம்...
இங்கே நமக்குத் தேவையானது என்னவென்றால் ஐயப்பனின் பிறப்பு ஓரினைச் சேர்க்கையைக் குறிப்பது அல்ல என்பதே.
பி.கு:
தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்...மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்த காலத்தில் உருவான திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும் இன்னும் 100 வருடங்களைக் கூட முழுமையாகக் காணவில்லை. இருந்தும் அவற்றுள் எத்தனை மாற்றங்கள். நூல்களைப் பத்திரமாக வைத்து இருக்கும் வசதி வாய்ப்புகள் வளர்ந்திருக்கின்ற இந்த காலத்திலேயே இத்தனை முரண்பாடுகள் இருந்தது என்றால்...அவ்வசதி இல்லாத காலத்தில் மன்னராட்சி நடக்கையில் கருத்துக்கள் எந்தளவு மாற்றப்பட்டு இருக்கும் என்பதனை நீங்கள் சிந்தித்தாலே அறிவீர்கள். எனவே சமயங்களைக் குறித்து நீங்கள் கற்கும் பொழுது பொதுவான கருத்துக்களை மற்றும் கருதாது, உங்களின் இயல்பின் படியே கேள்விகளைக் கேட்டே தெளிவாக அறிந்துக் கொள்ள முயலுங்கள்.
தொடர்புடைய இடுகைகள்: