சோவியத் ஒன்றியம் என்ற ஒன்று இன்றில்லை...அது துண்டுத் துண்டாகப் போய் ஆண்டுகள் பல கடந்து விட்டன...இருந்தும் பலரின் நினைவுகளிலும் கனவுகளிலும் சோவியத் ஒன்றியம் இருந்தக் காலம் ஒரு பொற்காலமாகத் தான் இருந்து கொண்டு இருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் அக்கருத்து சரியா என்பதனைக் குறித்து என்னால் விடை பகிர முடியாது எனினும், நூல்களைக் குறித்து என்னால் நிச்சயம் கூற முடியும்...சோவியத் ஒன்றியத்தின் காலம் நிச்சயம் நூல்களின் பொற்காலம் தான்.

ஏன், எவ்வாறு என்று எதையும் சிந்தித்துப் பார்க்கத் துவங்கும் காலத்திற்கு முன்னரே என்னைச் சுற்றி சோவியத் நாட்டின் நூல்கள் ஒரு மாபெரும் கோட்டையை எழுப்பி விட்டுத் தான் இருந்தன. படக்கதைகள், சிறுவர் சாகசக் கதைகள், நாடோடிக் கதைகள் என்று பல்வேறு வகையான உலகங்களை என் முன்னே விரித்து அவற்றிலே பயணிக்கும் வாய்ப்பினையும் எனக்கு அளித்து காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.பேராசைக் கொண்ட அன்னப்பறவை ஒவ்வொரு பறவையிடம் இருந்தும்அவற்றின் சிறப்புகளைப் பெற்றுக் கொண்டு இறுதியில் வாழ வழியின்றி மடியும் கதையாக இருக்கட்டும்....


விவசாயின் மகன் இவான் பறவை நாகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் கதையாக இருக்கட்டும்...

 

புரட்சியினை அடிப்படையாகக் கொண்ட மூன்று தடியர்கள் கதையினைப் போன்ற கதைகளாக ஆகட்டும்...


அல்லது சிறுவர்களின் வாழ்வினையும் அவர்களுடனே அவர்களது கிராமத்து பண்ணை வீடுகளில் வளரும் விலங்குக் குட்டிகளின் வாழ்வினையும் ஒருங்கிணைத்து அருமையாக விவரிக்கும் 'குழந்தைகளும் குட்டிகளும்' போன்ற கதைகளாக இருக்கட்டும்...அல்லது பூனையார், கரடியார், நரியார் போன்று விலங்குகள் ஆட்சிப் புரியும் கானகக் கதைகளாக இருக்கட்டும்...


அல்லது சபிக்கப்பட்ட இளவரசிகளைத் தேடி அலையும் வில்லாளர்களின் கதையாக இருக்கட்டும்...
அல்லது மாஷா, க்ரிஷ்காவின் விண்வெளிப் பயணம் போன்று சிறுவர்களின் கதைகளாக இருக்கட்டும்...ஒவ்வொன்றும் ஒரு வகையாக மனதினைக் கொள்ளைக் கொள்ளும் தன்மையினைப் பெற்றவைகள் தான்.


இன்று நான் நானாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் அப்புத்தகங்களும் ஒன்று என்பதனை என்னால் மறுத்தல் இயலாது. ஏன் அப்புத்தகங்களைக் கடந்து வந்த எவராலும் அப்புத்தகங்களை மறத்தல் இயலாது...எங்கே செல்லுகின்றோம் என்பதனை அறியாது ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் நம்மை நாம் கவலைகள் இன்றித் திரிந்த ஒரு காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை இப்புத்தகங்களுக்கு உண்டு என்பதை இப்புத்தகங்களோடு வளர்ந்தவர்கள் நிச்சயம் உணரத்தான் செய்வர்.

அப்புத்தகங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் பலமுறை மேலெழுந்தது உண்டு...இருப்பீனும் ஏற்கனவே ஆரம்பித்த பல தொடர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் இந்தப் புத்தகங்களைப் பற்றிய பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணத்தினை தவிர்த்து விட்டேன். இருந்தும் இப்பொழுது எழுதுவதற்கு காரணம் ஒரு தேடல் தான்...!!!


சிறு வயதில் என்னைக் கவர்ந்த அந்த நூல்களும் பல காலத்தில் எங்கோ சென்று விட்டன...அந்த அற்புதமான புத்தகங்கள் (தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள்) அடுத்த தலைமுறையையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பழைய புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றேன்.


பழைய புத்தகக் கடைகளில் அவற்றுள் சில புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன..இருந்தும் பல புத்தகங்கள் என்னவாயின என்றே தெரியாத நிலை இருக்கின்றது. இந்நிலையில், ஒருவர் தேடுவதற்கு பதிலாக ஒரே சிந்தனையுடைய பலர் தேடினால் மேலும் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தினால் இந்த பதிவை இடுகின்றேன்.


நண்பர்களே, பழைய சோவியத் ஒன்றியத்தின் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதையோ அல்லது அவைகள் எங்காவது விற்பனைக்கு இருந்தாலோ தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். மேலும் நீங்களும் அப்புத்தகங்களைப் படித்து இருந்து அவற்றினை நீங்களும் ரசித்து இருந்தீர்கள் என்றாலும் உங்களின் அனுபவங்களையும் நீங்கள் படித்த புத்தகங்களைப் பற்றியும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்..அதுவும் நன்றாக இருக்கும்.


நன்றி...!!!

4 கருத்துகள்:

தோழர் வழிப்போக்கன் அவர்களுக்கு வணக்கம்! உங்களது இந்த பதிவு என்னை பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்று விட்டது. நானும் உங்களைப் போல பழைய சோவியத் யூனியன் பிரியன்தான். வண்ணப் படங்கள் நிரம்பிய அந்நாளைய ரஷ்ய உக்ரேனிய நாடோடிக் கதைகள், குழந்தைகள் கதைகள் மற்றும் ரஷ்ய தமிழாக்க நூல்கள் போல் இன்று காணமுடியாது. விலையும் மலிவு. சோவியத யூனியன் உடைந்த பிறகு எல்லாம் போயிற்று.

நானும் உங்களைப் போல அந்தநாள் நூல்களைத் தேடி அலைந்தேன். கிடைக்கவில்லை. NCBH கடையில் பணிபுரிந்த தோழர் ஒருவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் NCBH புத்தக குடோனில் இருப்பதாகவும் நேரில் போய் கேட்டுப் பார்க்கவும் சொன்னார். அவர் சொல்லி மூன்று ஆண்டுகள் இருக்கும். இப்போதும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

நானும் இந்த புத்தகக் கடையுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்! என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/07/blog-post_16.html ஒரு பதிவும் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

தங்களின் பகிர்வுக்கு நன்றி!

@தமிழ் இளங்கோ,

தங்களது கருத்திற்கு நன்றி அய்யா...!!!

//NCBH கடையில் பணிபுரிந்த தோழர் ஒருவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் NCBH புத்தக குடோனில் இருப்பதாகவும் நேரில் போய் கேட்டுப் பார்க்கவும் சொன்னார்.//

தகவலுக்கும் நன்றி அய்யா...வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் சென்று பார்க்க வேண்டும்...இதனைப் போன்றே கோவையில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருந்த பொழுது அரிய புத்தகங்களான இப்புத்தகங்கள் சில கிட்டப் பெற்றன...!!!

நான் வாங்கியது போக இன்னும் சில புத்தகங்களும் அங்கே இருக்கின்றன...வாய்ப்பிருந்தால் நிச்சயமாக சென்று பார்க்கவும் ஐயா...

இடம் கோவை டவுன் ஹால்...மஜெஸ்டிக் புத்தகக் கடை (Majestic)

நன்றிகள் அய்யா!!!

Nostalgic post.

I remember reading 'Clever Masha' series that belonged to my sister.

பழைய சோவியத் ரஸ்யாவின் MIR பதிப்பகத்தின் அருமையான புத்தகங்கள் உங்களுக்காக இங்கே
http://mirtitles.org/

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு