இரண்டாம் உவமை:

சில மனிதர்கள் மாவு, பால் மற்றும் அனைத்து வகையான உணவுப்பண்டங்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பொறாமைக் கொண்டு, விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தினாலும் எவ்வளவு சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவும் அவர்களுடைய பொருள்களுடன் விலைக் குறைந்த ஆபத்தான கலப்படப் பொருட்களைக் கலக்கத் துவங்கினர். பாலுடன் தண்ணீரையும் சாக்கட்டியையும் கலந்தனர். நுகர்வோரை அப்பொருட்கள் சென்றடையாத வரையில் அனைத்தும் நன்றாகத் தான் சென்றுக் கொண்டிருந்தது. இவர்கள் இவர்களது பொருட்களை மொத்த விற்பனையாளர்களுக்கு விற்றனர். அந்த மொத்த விற்பனையாளர்களோ அப்பொருட்களை சில்லறை வியாபாரிகளுக்கு விற்றனர்.

மிகுந்த அளவில் சேமிப்புக் கிடங்குகளும் கடைகளும் அங்கே இருந்தன. வாணிகமும் சீராகச் சென்றுக் கொண்டிருப்பது போன்றே தோன்றியது. வணிகர்கள் திருப்தி அடைந்து இருந்தனர். ஆனால் அப்பொருட்களைத் தயாரிக்க இயலாத நிலையில் அவற்றை வெளியே வாங்கியே தீர வேண்டிய சூழலில் இருந்த அந்த நகரத்து நுகர்வோர்களான மக்களுக்கோ அப்பொருட்கள் ஆபத்தானதாகவும் தொந்தரவானதாகவும் இருந்தன.

மாவு மோசமானதாக இருந்தது. அவ்வாறே பாலும் சரி இதர பொருட்களும் மோசமானதாக இருந்தன. ஆனால் கலப்படம் பண்ணப்பட்ட பொருட்களைத் தவிர அந்த நகரத்தின் சந்தையில் வேறு பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் அந்த நகரத்து மக்களும் அப்பொருட்களையேத் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு வாங்கப்பட்ட தரமற்ற பொருட்களால் வீட்டில் செய்த உணவு சுவையற்றதாகவும் நோயினைத் தருவதாகவும் இருந்தாலும் மக்கள் அக்கலப்பட பொருட்களை குறை கூறுவதற்கு பதிலாக அவர்களின் தயாரிப்பு முறைகளையே உணவு சுவை அற்றதாகவும் நோய்களை உருவாக்குவதாகவும் இருப்பதற்கு காரணமாய் கூறிக் கொண்டு இருந்தனர். மக்கள் அவ்வாறு இருக்கையில் அந்த வணிகர்களோ தொடர்ந்து தரமற்ற விலைக் கம்மியான அந்நிய பொருட்களை உணவுப் பொருட்களுடன் அதிக அளவு கலந்த வண்ணமே இருந்தனர். இவ்வாறே சில காலமும் நகர்ந்தது. அந்த நகரத்து மக்கள் துயர் உற்றனர் இருந்தும் அவர்களது திருப்தியின்மையை வெளிக்காட்டிக் கொள்ள யாரும் எண்ணவே இல்லை.

இந்நிலையில் தனது குடும்பத்திற்கான உணவை முழுக்க முழுக்க வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டே செய்து பழகி இருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி அந்த நகரத்திற்கு வர நேர்ந்தது. தனது வாழ்நாள் முழுவதும் அப்பெண் உணவினைத் தயாரித்து இருந்தாள். பேர் பெற்ற சமையல்காரியாக அவள் இல்லாது இருந்தப் போதிலும் ரொட்டியினைச் சுடுவதற்கும் உணவினை சமைப்பதற்கும் அவள் நன்கு அறிந்து இருந்தாள்.

நகரத்தில் இருந்த கடைகளில் அவள் பொருட்களை வாங்கி சமைக்கத் துவங்கினாள். அவள் சுட்ட ரொட்டிகள் நன்றாக வரவில்லை...அவற்றின் சுவையும் நன்றாக இல்லை. இதே நிலை தான் மற்ற பொருட்களிலும் இருப்பதனை அவள் கண்டாள். உடனடியாக அவள் அவளிடம் இருந்த பொருட்கள் தரமானவை அல்ல என்பதை யூகித்துக் கொண்டாள். உடனே அவள் அப்பொருட்களை ஆராயத் துவங்கினாள். ஆராய்ந்துப் பார்க்கையில் அவளது யூகம் சரியானதொன்றாக இருப்பதை அவள் கண்டுப்பிடித்தாள். மாவில் அவள் எலுமிச்சை கலந்திருப்பதைக் கண்டாள், பாலில் சாக்கட்டித் தூள் கலந்திருப்பதைக் கண்டாள். அவ்வாறே அனைத்துப் பொருட்களிலும்  பல்வேறு கலப்படங்கள் இருப்பதையும் கண்ட அவள் உடனடியாக சந்தைக்குச் சென்று சத்தமாக அந்த வணிகர்களை குற்றம் சாட்டவும், ஒன்று கலப்படமற்ற நல்ல ஆரோக்கியமான பொருட்களை கடைகளில் வைத்து இருங்கள் இல்லையேல் வணிகம் செய்வதனை நிறுத்தி விட்டு கடையை மூடி விடுங்கள் என்று நிர்பந்திக்கவும் ஆரம்பித்தாள். ஆனால் அந்த வணிகர்கள் அவளுடைய பேச்சிற்கு எவ்வித கவனமும் செலுத்தாது, அவர்களின் பொருட்கள் மிகவும் சிறந்தத் தரமான பொருட்கள் தாம் என்றும் அந்த நகரத்தில் பல வருடங்களாக அப்பொருட்களைத் தான் மக்கள் வாங்கிக் கொண்டு இருக்கின்றனர் என்றும், அதற்காக அவர்கள் பல பதக்கங்களையும் வாங்கி இருக்கின்றனர் என்றும் கூறி அவர்கள் கடையினில் இருந்த பதக்கங்களை அவளிடம் காட்டினர். ஆனால் அவைகளால் அப்பெண்ணை அமைதி படுத்தமுடியவில்லை.

"பதக்கங்கள் எனக்குத் தேவை இல்லை...மாறாக எனது குழந்தைகளுக்கு வயிற்றுவலியினை உருவாக்காத ஆரோக்கியமான உணவே எனக்கு வேண்டும்" என்றே அவள் கூறினாள்.

"அருமைப் பெண்ணே...ஒருக்கால் நீ உண்மையான மாவினையோ அல்லது வெண்ணையினையோ கண்டு இருக்க மாட்டாய் என்றே தெரிகின்றது." என்றே அந்த வணிகர்கள் கூறி அவர்கள் கடையில் இருந்த சுத்தமான மாவினை வைத்து இருந்த மாவுப் பெட்டிகளையும், அழகான கிண்ணங்களில் இருந்த வெண்ணையைப் போன்ற பொருளையும், மின்னும் பாத்திரங்களில் இருந்த வெண்ணிற திராவகத்தையும் நோக்கி அவளுக்கு சுட்டிக் காட்டினர்.

"என் வாழ்நாள் முழுவதும் எனது குழந்தைகளுக்கு உணவினைச் சமைத்தும் அவர்களுடன் அமர்ந்து அதனை உண்டுமே நான் காலத்தைக் கழித்து வந்து இருக்கின்றேன்..இந்நிலையில் உண்மையான பொருட்களைப் பற்றி நான் அறியாது இருப்பது எங்கனம்?...உங்களது பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள்..இதோ சாட்சி" என்றுக் கூறியவாறே பாழான ரொட்டியையும், பாலையும் அவர்களுக்கு அவள் காட்டினாள். "உங்களது பொருட்கள் அனைத்தும் ஆற்றில் கொட்டிவிடவோ அல்லது எரித்து விடவோ உகந்தவை...அதற்கு மாறாக வேறு நல்ல பொருட்களை நீங்கள் வாங்க வேண்டும்" என்றே அவள் கூறினாள்.

அந்த பெண் அக்கடைகளின் முன்னர் தொடர்ந்து நின்றுக் கொண்டு அங்கே பொருட்களை வாங்க வரும் மக்களை நோக்கி அழைக்கத் துவங்கினாள்...அதனால் அம்மக்கள் சற்று குழம்பத் துவங்கினர்.

அந்த தைரியமான பெண்ணினால் தங்களது வணிகத்திற்கு ஆபத்து வரும் என்பதனைக் கண்ட அக்கடை முதலாளிகள் பொருட்களை வாங்க வந்து இருந்த மக்களைப் பார்த்து "இனிய மக்களே...பார்த்தீர்களா எவ்வளவு முட்டாளாக இப்பெண் இருக்கின்றாள் என்று..இவள் மக்களை பட்டினியால் சாக அடிக்க விரும்புகின்றாள். இவள் நம்மிடம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் தண்ணீரில் கொட்டிவிடவோ அல்லது எரித்து விடவோ வேண்டும் என்கின்றாள். இவளது பேச்சினைக் கேட்டு பொருட்களை விற்பதை நிறுத்தி விட்டால் நீங்கள் எதனை உண்பீர்கள்?...ஆதலால் அவளுக்கு யாதொரு கவனத்தையும் செலுத்தாதீர்கள். அவள் பொருட்கள் என்றால் என்னவென்றே அறியாத ஒரு அகம் பிடித்த கிராமத்துப் பெண்...நம் மீது உள்ள பொறாமையால் அவள் நம்மைத் தாக்குகின்றாள். அவள் ஏழையாக இருப்பதனால் நாமும் ஏழையாக வேண்டும் என்றே அவள் விரும்புகின்றாள்." என்றே, அப்பெண் உண்மையில் பொருட்களை அழிக்க வேண்டும் என்றுக் விரும்பவில்லை மாறாக மக்களுக்கு தீய பொருட்களுக்கு பதிலாக நல்ல பொருட்களைத் தாருங்கள் என்றே விரும்பினாள், என்ற கருத்தினை நயவஞ்சகமாய் மறைத்து அவ்வணிகர்கள் அங்கே கூடி இருந்த மக்களிடத்துக் கூறினர்.

அதனைக் கெட்ட மக்கள் அப்பெண்ணைத் தாக்கவும் அவரை பல பேரிட்டு அழைக்கவும் துவங்கினர். அந்த பெண் எவ்வளவு தான், அவள் பொருட்களை அழிக்க விரும்பவில்லை மாறாக அனைவருக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்கும் தனக்கும் உணவிட்டே கழித்த அவள் எவ்வாறு உணவுப் பொருட்களை அழிக்க வேண்டும் என்று கூறுவாள் என்றும் எடுத்துக் கூறியும் அதனை அம்மக்கள் கூட்டம் கேட்க தயாராக இல்லை. அவள் எவ்வளவு நேரம் எடுத்து அவளது பக்க விடயங்களைக் கூறினாலும் அவற்றை மக்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அவர்களுக்கு இன்றியமையாத உணவை அவர்களிடம் இருந்து பறிப்பதற்கு அவள் விரும்பினாள் என்ற எண்ணம் அம்மக்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு விட்டு இருந்தது.

இதே நிலை தான் இன்றைய அறிவியலையும் கலையையும் ஒட்டி எனக்கு நேர்ந்தது. அறிவியல் மற்றும் கலையாகிய உணவினைத் தான் என் வாழ்நாள் முழுவதும் நான் உட்கொண்டு இருந்தேன், நலமாக இருந்தாலும் சரி அல்லது நோய் வாய்ப்பட்டு இருந்தாலும் சரி என்னால் எட்ட முடிந்த மக்களுக்கு அந்த உணவினை நான் வழங்கிக் கொண்டே இருந்து இருக்கின்றேன். இவைகள் ஆடம்பரமான பொருளாகவோ அல்லது வணிகப் பொருளாகவோ அல்லாது எனது உணவாக இருந்த காரணத்தினால் எவ்வித சந்தேகமுமின்றி உணவு எப்பொழுது உணவாக இருக்கின்றது என்றும் எப்பொழுது உணவினைப் போன்ற ஒரு பொருளாக இருக்கின்றது என்பதனையும் என்னால் அறிய முடியும். இன்றைய தினத்தில் சந்தையில் அறிவியல் மற்றும் கலை என்ற போர்வையில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த உணவினை நான் உண்டுப் பார்த்தப் பொழுதும், அதனை நான் அன்புக் கொண்டிருந்த பிறர்க்கு வழங்க முயற்சிச் செய்த பொழுதும் உணவு என்று அவர்கள் அளித்த பொருளில் பெரும் பகுதி உண்மையானதாக இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இவ்வாறு சந்தையில் கலை, அறிவியல் என்றப் பெயரில் இன்று விற்கப்படும் பொருட்கள் எனக்கும் எனக்கு நெருங்கியவர்களுக்கும் சேராமல் போனது மட்டுமல்லாமல் பெரும் தீங்காகவும் அமைந்ததை கண்டதன் மூலம், இன்று சந்தையில் விற்கப்படும் கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் பல தீமையான அந்நிய பொருட்கள் கலந்து இருந்து அவற்றை உண்மையான கலை மற்றும் அறிவியலிடம் இருந்து பிரிப்பதை என்னால் உறுதியாக அறிந்துக் கொண்டு கூற முடிந்தது.

இதனை நான் அப்பொருட்களை விற்பவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் கோபம் கொண்டு என்னை நோக்கி கத்தத் துவங்கினர். அவ்வாறே அவர்களின் பொருட்களை நான் அறிந்துக் கொள்ள முடியாது இருப்பதன் காரணம் நான் கல்லாதவனாக இருந்ததும் மேலும் அத்தகைய நுண்ணியமான பிரிவுகளை கையாளும் தன்மையினை பெற்று இல்லாது இருந்ததுமே ஆகும் என்ற எண்ணத்தினையும் என்மேல் அவர்கள் சுமத்த முயன்றனர்.

ஆனால், அத்தொழிலில் இருக்கும் வணிகர்கள் பலரும் தங்களுக்குள்ளேயே பிறரது பொருட்கள் ஏமாற்றுப் பொருட்கள் என்று கூறிக் கொள்வதனை நான் எப்பொழுது நிரூபிக்க ஆரம்பித்தேனோ, அனைத்து காலத்திலும் கலை மற்றும் அறிவியல் என்ற பெயரில் பெருவாரியாக எவை கெட்டதாகவும் தீமை பயப்பதாகவும் இருந்ததோ அதுவே மக்களுக்கு தரப்பட்டு வந்து இருக்கின்றது, அச்செயலே இன்று நமது காலத்திலேயும் தொடர்கின்றது என்ற விடயத்தை நியாபகப்படுத்தினேனோ, இப்பிரச்சனை சாதாரண பிரச்சனை அல்ல மாறாக உடலினை நஞ்சாக்குவதனை விட மிகக் கொடியதான ஆன்மீக சிந்தனைகளை நஞ்சாக்கும் தன்மைப் பெற்றது எனவே மிகப் பெரிய அக்கறையுடன் இப்பொருட்களை நாம் ஆராய்ந்து அவற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு தீமை பயக்கும் அனைத்து விடயங்களையும் அவற்றில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினேனோ, எப்பொழுது ஒரு மனிதனோ அல்லது ஒரு கட்டுரையோ அல்லது ஒரு புத்தகமோ என்னுடைய வாதத்தை தவறென்று நிருபிக்கவில்லை என்றுக் கூறினேனோ, அப்பொழுது அவர்கள் அனைவரும் எப்படி கடைகளில் இருந்த அனைவரும் அப்பெண்ணினைப் பார்த்து கத்தினார்களோ அவ்வாறு கத்தத் துவங்கினர்.

"இவன் கிறுக்கன்...இவன் நாம் எதன் வழி வாழுகின்றோமோ அவைகளான கலையையும் அறிவியலையும் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றான்..இவனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்...அவனை கண்டுக் கொள்ளாதீர்கள்...!!!" என்று கூறி "இந்த வழியாக வாருங்கள் மேன்மக்களே...எங்களிடம் புத்தம் புதிதான இறக்குமதிப் பொருட்கள் இருக்கின்றன" என்றவாறே அவர்களது வணிகத்தை தொடர ஆரம்பித்தனர்.

தொடரும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

முந்தையப் பகுதி

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு