இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 

                                                  7                    

"குழந்தைகளே, உங்கள் காலின் கீழே உள்ள மலர்களைப் பாருங்கள், அவற்றின் மீது நடந்து அவற்றை நசுக்காதீர்கள். அதேப போல் உங்களின் மத்தியில் இருக்கும் அன்பினைப் பாருங்கள்...அதைப் புறக்கணிக்காதீர்கள்." - கிருசுனர்

"அனைத்து மனிதர்களின் மனதிற்கு மேலேயும் ஒரு உயர்ந்த சிந்தனை வீற்று இருக்கின்றது. அது தொலைவாகவும் உள்ளது அருகாமையிலும் உள்ளது. அது எல்லா உலகங்களையும் நிரப்பி உள்ளது அதே நேரத்தில் அது அந்த எல்லா உலகங்களையும் விட கணக்கிட முடியாத அளவு பெரியதாக உள்ளது. எல்லாப் பொருட்களும் அந்த உயர்ந்த சக்தியினாலே இருப்பதைக் காணும் ஒருவனால் வேறு எவரையும் சற்றும் வெறுப்புடன் நடத்த முடியாது. அனைத்து சக்திகளும் அந்த உயர்ந்த சக்தியின் பகுதிகள் தான் என்று எவன் உணருகின்றானோ அவனது வாழ்வில் எமாற்றதிற்கோ அல்லது வருத்ததிற்கோ இடம் இருக்காது. அறியாமையினால் மதங்களின் செயல்பாடுகளுக்கே கட்டுப்பட்டு இருப்பவர்கள் காரிருளினுள் கிடக்கின்றனர். அதே நேரம் பலனில்லா மந்திரங்களையும் வேள்விகளையும் நம்பியே இருக்கும் மக்கள் இன்னும் பெரிய இருளினுள் மூழ்கிக் கிடக்கின்றனர். - உபநிடங்கள் (வேதங்களில் இருந்து)

ஆம்! மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட, இன்று மிகுந்த தீவீரமாக  வளர்ந்து நிற்கும் இந்த அழிவுகளில் இருந்து மனிதகுலம் பிழைக்க வேண்டும் என்றால் மேலே நாம் கண்ட அனைத்து வித மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துகளையும் நமது காலத்திலேயே நாம் ஒழித்து விட வேண்டும். ஒரு இந்தியன் ஆங்கிலேயரின் கீழ் இருந்து விடுதலைப் பெற முயற்சித்தாலும் அல்லது வேறு யாராவது தங்களை அடக்கி வைத்து இருக்கும் ஒரே இனத்தவருக்கு எதிர்த்தோ அல்லது வேற்று இனத்தவரை எதிர்த்தோ போராடினாலும்... அல்லது வட அமெரிக்கர்களிடம் இருந்துத் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு நீக்ரோவானாலும் சரி... அல்லது பெருசிய, ருசிய மற்றும் துருக்கி நாட்டின் அரசாங்கங்களுக்கு எதிராய் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பெருசிய, ருசிய மற்றும் துருக்கி நாட்டு மக்களானாலும் சரி... அல்லது ஒரு மாபெரும் நலனை தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ தேடும் ஒரு மனிதனானாலும் சரி.. அவர்களுக்கு, உங்கள் விவேகானந்தர்கள், பாபா பாரதிகள் மற்றும் அவர்களைப் போன்றே கிருத்துவ உலகில் இருக்கும் பலக் கருத்தாளர்களும் வகுத்த அந்தப் பழைய மத மூட நம்பிக்கைகள் கூறும் விளக்கங்களும் நியாங்களும் நிச்சயம் தேவைப்படாது. அதைப் போன்றே எண்ணிலடங்காத அறிவியல் கோட்பாடுகளும் அவர்களுக்குத் தேவைப்படாது என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அந்தக் கருத்துக்களே அவர்களுக்கு தீமையாகவும் அமைந்து விடுகின்றன.(இந்த ஆன்மீக உலகத்தில் எதுவும் நிராகரிக்கப்பட தக்கதல்ல... எது நமக்கு பயனாக இல்லையோ அது நமக்கு நிச்சயம் தீங்கான ஒன்றாகத் தான் இருக்கும்.)

இந்தியர்களுக்கும் சரி, ஆங்கிலேயர்கள், செர்மானியர்கள், பிரன்ச்சுகாரர்கள் மற்றும் ரசியர்களுக்கும் சரி தேவையானது அரசாங்க அமைப்புகளோ அல்லது புரட்சிகளோ அல்ல...;கட்சிகளோ அல்லது பல விதமான கருத்தரங்குகளோ அல்ல...; நீர்மூழ்கிக் கப்பலிலும், வானூர்தியின் செயல்பாட்டிலும் பயன்படும் பல கருவிகளும் அல்ல...; சக்தி வாய்ந்த வெடி குண்டுகளும் அல்ல...; பணக்கார ஆளும் வர்க்கத்தினரின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்படும் பல்வேறு வேடிக்கைகளும் அல்ல...; எண்ணிலடங்காத அறிவியல் கருவிகளைக் கொண்ட பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் அல்ல...; புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் எழுச்சியும் அல்ல...; கிராமாபோன்களோ அல்லது திரைப்படக் கருவிகளோ அல்ல...; மேலும் குழந்தைத்தனமானதும் மற்றும் முட்டாள்த்தனமானதுமான கலையும் அல்ல...; ஒன்றே ஒன்று தான் அவர்களுக்குத் தேவை. மத மற்றும் அறிவியல் மூட நம்பிக்கைகள் சிறிதும் கலக்கப் பெறாது எல்லா ஆன்மாக்களிலும் இயல்பாக இடம் பிடிக்க கூடியத் தெளிவும் மற்றும் எளிமையும் நிறைந்த ஒரு உண்மையைப் பற்றிய அறிவே அவர்களுக்குத் தேவை. அன்பின் விதியே நமது வாழ்விற்கு உகந்த ஒரே விதி என்பதும் அந்த விதி எல்லையில்லா மகிழ்ச்சியினை ஒவ்வொரு மனிதனுக்கும் அதன் மூலம் மனிதகுலத்திற்கும் வழங்குகின்றது என்பதே அந்த உண்மையாகும்.

இந்த உண்மையினை உங்களது மனது அறியா வண்ணம் மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த போலி மதக் கருத்துக்களில் இருந்து உங்களது மனதினை எப்பொழுது நீங்கள் விடுவிக்கின்றீர்களோ அப்பொழுது அந்த உண்மை அதுவாகவே உங்கள் முன் வெளிப்படும். மனிதனுள் இயல்பாகவே இருக்கும் இந்த உண்மையானது மறுக்க முடியாதது. உலகில் உள்ள மாபெரும் சமயங்களில் ஒன்றாக இருக்கும் ஒரேப் பொருளும் இந்த உண்மைதான்.

உரிய காலத்தில் இந்த உண்மையானது நிச்சயம் வெளிப்பட்டு பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அப்பொழுது, அந்த உண்மையினை மூடி இருந்த முட்டாள்தனங்கள் மறைந்து விடும். அவற்றுடனே மனிதக்குலத்தினை இப்பொழுது வாட்டிக் கொண்டு இருக்கும் தீமையும் மறைந்து விடும்.

"குழந்தைகளே, உங்களது மூடப்பட்டு இருக்கும் கண்களைத் திறந்து மேலே பாருங்கள்... என்னுடைய அறிவினால் உருவாக்கப்பட்ட ஒரு சமமான உலகம்...  முழுவதும் அன்பினை வைத்தும் மகிழ்ச்சியினை வைத்தும் நிரப்பப்பட்டு இருக்கும் ஒரு உலகம்... உங்களின் முன் வெளிப்படும்... அது ஒன்று தான் உண்மையான உலகம். அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்... அன்பு உங்களை வைத்து என்ன செய்து இருக்கின்றது என்றும்... அன்பு உங்களுக்கு எவற்றை வழங்கி இருக்கின்றது என்றும்... அன்பு உங்களிடம் இருந்து எவற்றை வேண்டுகின்றது என்றும்." - கிருசுனர்

                                                                                                                யாசானையா போல்யானா 
                                                                                                                          (Yasnaya Polyana)
                                                                                                                          டிசம்பர் 14, 1908முற்றும். 

இத்துடன் லியோ டால்சுடாய் எழுதிய கடிதம் முடிந்தது. இந்தக் கடிதத்திற்கு மகாத்மா காந்தி எழுதிய பதில் கடிதத்தை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு