தமிழ் தனது முதல் எழுத்தான 'அ'கரத்தை எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதினை நாம் கண்டாயிற்று. அதேப் போல் தமிழ் தனது எழுத்துப் பிரிவுகளின் மூலம் உயிரும் உடலும் இயங்கும் விதத்தை எவ்வாறு விளக்குகின்றது என்பதனையும் நாம் கண்டாயிற்று.
 
இனி அந்த இரண்டு விடயங்களைக் கொண்டு தமிழ் எவ்வாறு உலகின் மிகச் சிறந்த உறவினை சிறப்பிக்கின்றது என்பதனைப் பார்க்கலாம்.

உலகின் மிகச் சிறந்த உறவா... சிறிதும் சந்தேகம் இன்றி எவரும் சொல்லிவிடுவார்கள் 'அம்மா' என்று. அப்பேர்ப்பட்ட உறவிற்கு தமிழ் தனது முதல் எழுத்தினைக் கொடுத்து சிறப்பித்து இருக்கின்றது என்றுக் கண்டோம். ஆனால் தமிழ் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

அந்த உயர்ந்த உறவினைக் குறிக்கும் சொல்லுக்குள் உயிரையும் உடலையும் விளக்கிக் கொண்டு இருக்கும் தனது தத்துவத்தையும் அது மறைத்து வைத்து இருக்கின்றது. அதைப் பற்றி நாம் இப்பொழுது விரிவாகப் பார்ப்போம்...

'அம்மா' என்றச் சொல்லை சற்று கவனித்துப் பார்த்தால் அச்சொல்லினுள் தமிழ் மொழியின் மூன்று எழுத்துப் பிரிவுகளும் அடங்கி இருப்பது தெரிய வரும். அதே போல், உயிர் இருந்தால் தான் உடல் இயங்கும் என்றக் கருத்தை விளக்கும்படி உயிரைத் தொடர்ந்து மெய்யும், இவை இரண்டும் இருந்தால் தான் உணர்ச்சி இருக்கும் என்பதனை விளக்கும்படி உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் தொடர்ந்து உயிர் மெய் எழுத்து வந்து இருப்பதையும் நாம் காணலாம்.

அ --> உயிர் எழுத்து.
ம் --> மெய் எழுத்து. (உயிரைத் தொடர்ந்து மெய் வருகின்றது)
மா--> உயிர் மெய் எழுத்து. (உயிரையும் மெய்யையும் தொடர்ந்து உணர்ச்சி வருகின்றது).

இந்த எழுத்து அமைப்பு முறையின் மூலம், உயிரும் உடலும் ஒன்றி இருக்கும் இடத்தில தான்  எவ்வாறு உணர்ச்சிகள் இருக்க முடியுமோ அதேப் போல உயிரும் உடலும் ஒருசேர இணைந்து இருக்கும் அன்னையிடம் அன்பின் உணர்ச்சிகள் இயல்பிலேயே அமைந்து இருக்கும் என்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

இந்த விதி 'அப்பா', 'அண்ணா', 'அக்கா' போன்ற வாழ்வின் ஒரு சில முக்கியமான உறவுகளுக்கும் பொருந்துவதை நாம் சற்று உணர்ந்துப் பார்த்தாலே புரியும். இப்படி நமது நெருங்கிய உறவுகளைச் சிறப்பிக்கும் விதியினை வேறு எந்த மொழியிலாவது காணக் கூடுமா?....

சரி... நமது இன்றியமையாத உறவுகளை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்த்தோம். இப்பொழுது தமிழ் என்னும் சொல்லையே நமது மொழி எவ்வாறு சிறப்பித்து இருக்கின்றது என்பதனை நாம் பார்ப்போம்.

நம் மொழியில், மெய் எழுத்துக்களை மூன்று இனமாக பிரிப்பார்கள்.

க் ச் ட் த் ப் ற் -  என்ற எழுத்துக்கள் வல்லினம் எனவும்

ங் ஞ் ண் ந் ம் ன் - என்ற எழுத்துக்கள் மெல்லினம் எனவும்

ய் ர் ல் வ் ழ் ள் - என்ற எழுத்துக்கள் இடையினம் எனவும் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.

இந்த மூன்று இனங்களும் நம் மொழிக்கு மிகவும் முக்கியமானவை. எனவே இந்த மூன்று இனங்களும் சேர்ந்து அமைந்து இனிதாய்... அழகாய்.. பொருள் தருமாறு, தமிழ் என்று நமது மொழி வழங்கப் பெறுகின்றது.

த --> வல்லின எழுத்து
மி --> மெல்லின எழுத்து
ழ் --> இடையின எழுத்து.

தமிழ் --->; அழகு (பொருள்)

இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் எழலாம், 'இடையினம் என்று சொல்லுகின்றோம், அப்படி என்றால் அந்த எழுத்துக்கள் ஒரு சொல்லின் இடையில் அல்லவா வர வேண்டும்... ஆனால் தமிழ் என்னும் சொல்லில், இடையினம் இறுதியில் அல்லவா வருகின்றது... இது சரியா...?'

இந்தக் கேள்விக்கு பதிலினை அறிய நாம் நம் மொழியின் இலக்கணத்தினை அறிய வேண்டும்.

நமது தமிழ் எழுத்துக்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் எழுத்துக்கள், வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற வரிசைப் படியே அமைந்து இருக்கின்றன.

இதே வரிசை தான் நன்னூலிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே வல்லினத்தையும் மெல்லினத்தையும் தொடர்ந்தே இடையினம் வரும் என்பது  நம் மொழியின் இலக்கணம் என்பது நமக்கு புலனாகின்றது.

எனவே தமிழ் என்ற சொல்லின் அமைப்பும் சரி தான்... அதுவும் நம் மொழியின்  சிறப்புத் தான்!!!

தமிழின் சிறப்புகளைத் தொடர்ந்து அறிவோம்....!!!!!

(நன்றி: தமிழ் எழுத்துக்களைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு