பெரிய மீன்: (Big Fish)

கதை சொல்பவர்களைக் கண்டு இருக்கின்றீர்களா?. 
"ஒரு ராட்சசன் வந்தான்...இறுதியில் நான் அவனை வென்றேன்.." போன்றக் கதைகள் எல்லாம் அவர்களின் வாழ்வில் நடந்ததாக சிறுவர்கள் நம்பும்படி அழகாகக் கூறுவார்கள். ஆனால் காலங்கள் நகர நகர, சிறுவயதில் அந்தக் கதைகளை ஆவலுடன் பலமுறைக் கேட்ட அந்தச் சிறுவர்கள் தாங்கள் வளர்ந்தப் பின் அதேக் கதைகளைக் கேட்டு சலித்துப் போய்விடுகின்றார்கள்...ஏன், கதைகள் என்றாலே அவர்கள் சலித்துக் கொள்கிறார்கள்... உலகம் நகர்ந்துக் கொண்டு இருக்கும் வேகத்தில் இந்தக் கதைகளினால் என்ன பயன்... இவை நேரத்திற்குப் பிடித்த கேடு என்று எண்ணி அவர்கள் அந்தக் கதைகளில் இருந்து தங்களை முற்றிலும் துண்டித்துக் கொள்கின்றனர்... அப்படியே அந்த கதையினை சொல்பவரிடம் இருந்தும் தான்.

ஆனால் அந்தக் கதை சொல்பவரோ, காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும் சரி... தன்னை மறந்து மற்றவர்கள் விலகி நடந்தாலும் சரி... அவரது கதையினை அவர் மாற்றுவதில்லை. அது அவருடைய கதை...!!! காலங்கள் பல மாறினாலும் அவர் இருக்கும் வரை அந்தக் கதைகள் இருக்கும்... அதேப் போல்... அந்தக் கதைகள் இருக்கும் வரை அவர் இருப்பார். இப்படிப்பட்ட மனிதர்களை பொதுவாக எவரும் முழுமையாக அறிந்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சிறுவயதில் இருந்த 'டினோசார் தாத்தா' வளர்ந்தப் பின்னும் 'டினோசார் தாத்தாவாகவே' இருக்கின்றார். அந்தக் கதைகளுக்கு பின்னால் இருக்கும் ஒரு மனிதரை நாம் பொதுவாக பார்ப்பதேயில்லை... அப்படிப் பார்க்கவும் நமக்கு என்றும் தேவை வந்ததே இல்லை.

ஆனால், அந்தக் கதைகளுக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தேவை வந்தது என்றால்?... அந்தக் கதைகளுக்குள்ளே மறைந்து இருப்பது நம்முடைய தந்தையாக இருந்தால்?...நிச்சயம் நாம் அந்தக் கதைகளையும் அந்தக் கதைகளை வைத்தே அவற்றினுள் இருக்கும் நமதுத் தந்தையின் உண்மைக் கதையையும் அறிய முயற்சிப்போம் அல்லவா ... அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் இந்தத் திரைப்படம். 

மரணப்படுக்கையில் இருக்கும் தனது தந்தையை அவரின் கதைகள் மூலமாக மட்டுமே அறிந்து இருக்கும் ஒருவன் அவரின் உண்மைக் கதையை அறிய முயற்சிக்கும் ஒரு தேடல் தான் 'பெரிய மீன்' (Big Fish).

மரணப்படுக்கையில் தனது மகனிற்காக காத்து கிடக்கும் ஒருத் தந்தையும், தனது தந்தையைப் பற்றிய உண்மை எதுவுமே தனக்கு தெரியாது என்றக் குற்ற உணர்ச்சியுடன் அவரைப் பற்றி அறிய எத்தனிக்கும் அவரது மகனும் தான் இந்தக் கதையின் முக்கிய மாந்தர்கள்.

தனது தந்தை எட்வர்டு புளுமின் (Edward Bloom) சாகசக் கதைகளை சிறு வயதில் மிகவும் ஆர்வமாய் கேட்ட வில் புளும் (Will Bloom), நாளடைவில் அதேக் கற்பனைக் கதைகளைக் கேட்டுக் கேட்டு சலித்துப் பொய் விடுகின்றான். அவனைப் பொறுத்தவரை அவனது தந்தையின் கதைகள் அனைத்தும் பொய்... நேரத்திற்கு பிடித்தக் கேடு. ஆனால் அவனது தந்தைக்கோ அந்தக் கதைகள் தான் அவரது வாழ்க்கை. இவ்வாறு தனது தந்தையுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் என்றாவது அவர் மாறுவார் என்ற எண்ணத்தில் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான் வில். ஆனால் அவனது திருமணத்தின் போதும் கூட அவனது தந்தை அங்கு கூடியிருந்தவர்களிடம் அதேக் கதையினைக் கூறிக் கொண்டு இருக்க வில் கோபம் அடைந்து "எனக்கு உங்களுடைய பொய்கள் சலித்து விட்டன அப்பா... நீங்கள் எப்பொழுது உண்மையினைக் கூற ஆரம்பிக்கின்றீர்களோ அப்பொழுது நான் உங்களை சந்திக்கின்றேன்" என்றுக் கூறி தனது மனைவி யோசெப்பினை (Josephine) அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளி ஏறுகின்றான்.

காலங்களும் நகர்கின்றன. ஆனால் எட்வர்டும் வில்லும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ள மறுக்கின்றனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரே தொடர்பு வில்லின் அன்னையான சாண்டிரா (Sandra). கணவனும் சரி மகனும் சரி பேசிக் கொள்ள மாட்டேன் என்கின்றார்களே என்ற எண்ணத்தில் அவள் வாடிக் கொண்டு இருக்கும் பொழுது தான் எட்வர்டின் உடல் நலம் குன்றுகின்றது. மருத்துவர்கள் அவர்களின் கையினை விரித்து விட, இறுதிக் காலத்தில் தனது தந்தையின் அருகிலேயும் தனது அன்னைக்கு துணையாகவும் இருக்க அவனது வீட்டினை நோக்கி யோசெப்பினுடன் கிளம்புகின்றான் வில்.

இறுதி வரை அவனது தந்தையினைப் பற்றிய உண்மையினை அறிந்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் அவனை வாட்டுகின்றது. அவன் அவனது தந்தையை பற்றி அறிந்து வைத்து இருந்தவை எல்லாம் அவரது கதைகளை மட்டுமே...!!! தனது தந்தையை கடைசியாகப் பார்க்க போகும் வில், அவர் கூறியக் கதைகளை நினைத்துப் பார்க்கத் தொடங்குகின்றான்.

அந்தக் கதைகளின்படி, பிறப்பில் இருந்தே மற்றவர்களை விட வித்தியாசமாக இருந்த எட்வர்டு மிகவும் துணிச்சல்காரனாகவும் இருந்து இருக்கின்றான். ஊரில் உள்ள அனைவரும்  காண பயப்படும் ஒரு சதுப்பு நில மந்திரக்காரப் பாட்டியை தனியாகப் இரவில் சென்றுப் பார்த்து அவரிடம் இருந்து அவன் இறப்பினைப் பற்றி அறிந்துக் கொண்டப் பின் துணிந்து ஊரில் உள்ள மக்களுக்கு உதவி செய்கின்றான். மிக விரைவில் தனது திறமைகளால் ஆசுடன் (Ashton) என்னும் அந்த ஊரின் நாயகன் ஆகின்றான் எட்வர்டு.

அந்த நிலையில் தான் அந்த ஊரின் ஆடுகளும் கோழிகளும் திடீர் என்று காணாமல் போக, அவற்றை திருடித் தின்பது ஒரு ராட்சசன் என்று அந்த ஊர் மக்கள் அறிய வருகின்றார்கள். அந்த ராட்சசனை அழிப்பவர்களுக்கு ஊரின் மிகச் சிறந்த மரியாதை வழங்கப்படும் என்று அந்த ஊரின் அதிபர் அறிவித்ததும், அந்த ராட்சசனை தான் அழிப்பதாகக் கூறிச் செல்கின்றான் எட்வர்டு. ஆனால் எதிர்ப்பாராவிதமாக அந்த ராட்சசன் நல்லவன் என்று அறிந்துக் கொண்ட எட்வர்ட், கார்ல் (Carl) என்னும் அந்த ராட்சசனை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்கு புதிய சாகசங்களைத் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.

ஆனால் போகும் வழியில் பாதை இரண்டாக பிரியவே, தாங்கள் முன்பு பேசியவாறு மற்றொரு ஊரில் கார்லை சந்திப்பதாக சொல்லி விட்டு கடினமான பாதையினைத் தான் தேர்ந்து எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடருகின்றான் எட்வர்டு. அந்தப் பாதையில் அவன் வழித் தொலைந்துப் போய் ஒரு அழகான இடத்தினை வந்து அடைகின்றான். அங்கு இருக்கும் மக்களும் அவனை எதிர்ப்பார்த்தே காத்து இருப்பதில் ஆச்சர்யம் அடைந்த எட்வர்ட் சிறிது நேரம் அங்கே தங்கி இருந்து விட்டே செல்லலாம் என்று முடிவு எடுக்கின்றான். ஆனால் சில நேரங்கள் சில நாட்களாகியும் அவனால் அந்த ஊரினை விட்டுப் போக முடியவில்லை. அவனது மனம் ஏனோ அந்த ஊரினை விட்டுப் போக அவனுக்கு இடம் கொடுக்க மறுக்கின்றது. ஆனால், அங்கு இருந்தால் அவனது கனவுகளை அடைய முடியாது என்றும் அவனுக்காக கார்ல் காத்துக் கொண்டு இருப்பான் என்றும் உணர்ந்த எட்வர்ட் மிகவும் கடினப்பட்டு அந்த ஊரினை விட்டு வெளி ஏறுகின்றான். கிளம்பும் முன் அந்த ஊரில் உள்ள சென்னி (Jenny) என்னும் சிறுமிக்கு தான் மீண்டும் அந்த ஊருக்கு ஒரு நாள் வருவேன் என்று உறுதிக் கூறி விட்டே கிளம்புகின்றான்.

தொடர்ந்து பயணிக்கும் எட்வர்டு, தனக்காக காத்துக் கொண்டு இருந்த கார்லையும் சேர்த்துக் கொண்டு ஒரு சாகச நிறுவனத்தை (Circus Company) வந்து அடைகின்றான். அங்கு கார்லைக் கண்டு அதிர்ச்சி அடையும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்லை அவரின் சாகச நிறுவனத்தில் பணிப்புரியும் படி கேட்டுக் கொள்ளவே அவனும் அதற்கு சம்மதிக்கின்றான். 

இந்த நிலையில் தான் எட்வர்டு சாண்டிராவினை முதல் முறையாக காண்கிறான். கண்டதும் காதலும் கொள்கின்றான். ஆனால் அவளிடம் பேச அவன் முயற்சிப்பதற்குள் அவள் எங்கோ போய் விடவே அவளைத் தேட ஆரம்பிக்கின்றான். அடையாளம் தெரியாத அவளைப் பற்றி அவன் அறிய வேண்டும் என்றால் தனக்கு கீழே வேலை செய்ய வேண்டும் என்று அந்த சாகச
நிறுவனத்தின் உரிமையாளர் சொல்ல, அந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய ஆரம்பிக்கின்றான் எட்வர்டு. ஒருக் கட்டத்தில் அவன் தேடும் அந்தப் பெண்ணினைப் பற்றிய தகவல் அவனுக்கு வந்து சேரவே அவளைத் தேடி புறப்படுகின்றான் எட்வர்டு. அவளைக் கண்டு கொண்டு, சிறிது பிரச்சனைகளுக்கு அப்புறம் சாண்டிராவினை மணமும் முடிக்கின்றான் எட்வர்டு. மணம் முடிந்த சில நாட்களிலேயே நாட்டுக்காக போரினில் அவன் பங்குக் கொள்ள வேண்டி வரவே சாண்டிராவினை விட்டுவிட்டு கொரியா யுத்தத்தில் பங்குப் பெற கிளம்புகின்றான் எட்வர்டு. போரினில் எட்வர்டு கொல்லப்பட்டு விட்டதாக சாண்டிராவிற்கு செய்தி வரவே அவள் மனம் உடைந்துப் போகின்றாள். ஆனால் சில நாட்களுக்கு பின் எட்வர்டு உயிருடன் அவளைத் தேடி வருகின்றான். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

வில் அவனது தந்தையின் வரலாற்றினைப் பற்றி அறிந்து இருந்தது அவ்வளவு தான். இப்பொழுதாவது தனது தந்தை தன்னிடம் உண்மையினைச் சொல்வார் என்று எதிர்ப்பார்த்து வந்து இருந்த வில்லுக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இம்முறையும், அந்தக் கதைகளைத் தவிர வேறு எதையும் எட்வர்டு கூறவில்லை. அந்தக் கதைகள் வில்லுக்கு கோபத்தினை உண்டாக்கிய போதும் யோசெப்பின் அந்தக் கதைகளைக் கேட்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். அவளைப் பொறுத்த வரை உண்மையோ அல்லது பொய்யோ கவலையில்லை... ஆனால் அந்தக் கதைகளில் இருந்த காதல், உணர்ச்சிகள் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

மனைவியும் சரி அன்னையும் சரி தனது தந்தையின் பொய்க் கதைகளுக்கு ஆதரவு தருகின்றார்களே என்று எண்ணிக் கொண்டே தனது வீட்டின் பொருட்களை அடுக்கி வைக்கும் பொழுதுதான் அந்தக் கடிதத்தை அவன் முதல் முறையாகப் பார்க்கின்றான். அவனது தந்தை இறந்துப் போய் விட்டதாக அவனுடைய அன்னைக்கு ராணுவத்தில் இருந்து வந்து இருந்த ஒரு கடிதம் அது. சற்று அதிர்ந்து தான் போகின்றான் வில். இது வரை அவனின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியதை வெறும் கதை என்றே நம்பி இருந்தான் அவன். அந்தக் கடிதத்தைப் பற்றி அவனின் அன்னையிடம் வில் கேட்க, "உன்னுடைய தந்தை சொல்லியக் கதைகள் அனைத்தும் பொய் என்றே நீ முடிவு செய்து விட்டாயா?" என்று பதில் சொல்லி விட்டு அதற்கு மேல் எதுவும் பேசாது கிளம்பி விடுகின்றார் சாண்டிரா. என்ன சொல்வது என்றுத் தெரியாமல் வில் மேலும் சிலப் பொருட்களை ஒதுக்கும் பொழுது அவனது தந்தை சொன்னக் கதைகளை மெய்யாக்கும் படி சில ஆவணங்களைப் பார்க்கின்றான். 

தந்தை சொன்ன கதைகள் அனைத்தும் உண்மையா?... நாம் தான் அவரைப் புரிந்துக் கொள்ள முடியாது போய்விட்டோமா?... உண்மையிலே எனது தந்தை யார்?... என்ற கேள்விகளுக்கு பதில் தேட கிளம்புகின்றான் வில். 

பதிலினை அவன் கண்டுக் கொண்டானா?... எட்வர்டின் கதைகள் அனைத்தும் உண்மையா?... அந்தச் சிறுமி சென்னிக்கு கொடுத்த வாக்கின் படி மீண்டும் அந்த நகரத்திற்கு எட்வர்டு சென்றானா?... தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டனரா?... என்பதே மீதிக் கதை.

உணர்ச்சிகரமான கதை... சந்தேகமில்லை!!! ஆனால் உண்மையான மந்திரம் இயக்குனர் டிம் பர்டனின் (Tim Burton) கற்பனையிலும் திரைக்கதையிலும் தான் அடங்கி உள்ளது. அந்த அற்புதமான கற்பனை உலகிற்கு பக்க பலமாய் இசை. எட்வர்டின் பயணத்தோடு நாமும் பயணிக்கும் உணர்வை ஏனோ மறுக்க முடியவில்லை.

அனைவரும் பார்க்கக் கூடிய ஒரு அருமையான திரைப்படம் இது. உறவுகளும் கனவுகளும் நிறைந்து இருக்கும் அந்த உலகத்தின் முடிவில், நம் கண்களின் ஓரம் தவிர்க்க முடியாது வந்து எட்டிப் பார்க்கும் ஒருச் சின்ன கண்ணீர்த் துளியே சாட்சி... படத்தின் தரத்திற்கு!!!

ஒருவன் சொல்லும் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு கதை இருக்கின்றது... அந்தக் கதைக்குள் அந்த ஒருவன் வீற்று இருக்கின்றான்.... அந்தக் கதையாய்!!!

பி.கு:

இந்தத் திரைப்படம் பெரிய மீன் என்ற பெயரிலேயே வந்த ஒரு புத்தகத்தை தழுவி எடுத்தத் திரைப்படம் ஆகும்.

61 ஆவது ஆசுகர் விருதுகள் வழங்கும் விழாவில் அதிக விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட படமும் இது தான். ஆனால் ஒரு விருதும் கிட்டவில்லை.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு