" ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்."
வீடும் நெருங்கிக் கொண்டு இருந்தது. எதாவது ஒரு சந்தினில் அல்லது கடையினில் மறைந்து நின்று என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள் என்ற எனது எண்ணமும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுடனும் கரைந்துக் கொண்டு இருந்தது.
"அம்மா .... அண்ணன் வந்திரிச்சி...".
என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எனது தங்கை மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அவளின் பின்னாடியே வீட்டினுள் இருந்து அம்மாவும் அப்பாவும் புன்னகையுடன் வந்தனர். கூடவே சில உறவினர்களும். அவர்களுள் அவள் இல்லை.
ஒரு வேளை வீட்டினில் அவள் இருக்க கூடும் என்ற எனது கடைசி நம்பிக்கையும் சிதைந்து போனது.
அவள் என்னை காண வரவில்லை.
சோகம் தான். இருந்தும் ஏனோ மனம் நிலை குழையவில்லை. எதிரினில் என்னை நோக்கி பாசத்துடன் வரும் தங்கையின் புன்னகை, ஒரு வருடம் பெற்ற பிள்ளையை காணாது இருந்து விட்டு பாசத்துடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் எனது பெற்றோரின் புன்னகை... என்னை புன்னகைக்க தூண்டிக் கொண்டு இருந்தன. நானும் என்னை அறியாது புன்னகைத்துக் கொண்டு இருந்தேன். பாதி மனது ஒருத்தியை தேடிக் கொண்டு இருந்தது. மற்றோர் பாதியோ துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னால் மீண்டும் என்னுடைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றேன்." இது என் உலகம். இங்கு எனக்கு தீங்கு எதுவும் நேராது." என்று எண்ணியவாறு வீட்டினுள் செல்லத் தொடங்கினேன். என் தோட்டத்து மலர்கள் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருந்தன. உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். அவள் நன்றாகத் தான் இருக்கின்றாள். என்னை விட்டு வேறு எங்கு சென்று விடுவாள். வரட்டும். அவளைப் பார்த்துக் கொள்கிறேன்!!!
ஊர்க்கதைகள் அனைத்தும் பேசி விட்டு உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னும் கூட அவளின் சுவடு தெரியவில்லை. சரி சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் அவள் வீட்டிற்க்கு நாமே போகலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில்,
"என்ன சக்தி... யாரையோ தேடுற மாதிரி இருக்கு?... குமாரயா!!!" என்று ஆரம்பித்து வைத்தாள் பிரியா.
திரும்பி அவளை முறைத்தேன்.
"நான் யார தேடுறேன்னு உனக்குத் தெரியும்... நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்... எங்கடி அவ... நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்... அவளைக் காணோமே?" என்றேன்.
"எனக்கும் தெரியல சக்தி.. நேத்து வரைக்கும் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்தாங்க... ஒரு வேளை நீ ஊருக்கு வரது தெரிஞ்சி இருக்குமோ?... ஐயோ தொல்லை வருதேனு நெனச்சி தப்பிச்சி இருக்கலாம்... அவுங்க புத்திசாலினு நான் அப்பவே சொன்னேன்ல" என்றாள் நக்கலாய்.
"உன்னை... " என்று நான் அவளுக்கு பதில் கூறத் தொடங்கும் போது வாசலில் அவளின் தந்தையின் குரல் கேட்டது.
"சண்முகம்!!!".
விரைவாகச் சென்று சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தேன். அவள் அவளது பெற்றோர் உடன் நின்று கொண்டு இருந்தாள். கோவிலுக்கு சென்று வந்து இருந்தனர் போல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் எப்படி இருந்தாளோ அதை விட மேலும் அழகு கூடி இருந்தாள். அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்விகளுள் "நாளுக்கொரு தரம் அழகைக் கூட்டிக் கொண்டே போகின்றாயே... அதை எப்படி என்று சொல்கின்றாயா?" என்ற இந்த கேள்வியையும் சேர்த்துக் கொண்டேன்.
"ஏன்டா முருகா... நீ முன்னமே வருவேனு நெனச்சேன்... ஏண்டா இவ்வளவு நேரம்... சரி சரி உள்ள வா" என்று எனது தந்தை அவர்களை வீட்டினுள் அழைத்து வந்தார். ஓடிச் சென்று நானும் அவர்களை வரவேற்க வேண்டும் போல் இருந்தது, இருந்தும் "அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாத சக்தி... பொறுமையா இரு.. கூப்பிடுவாங்க!!" என்ற எனது மனசாட்சியின் கூற்றுக்கு மரியாதை கொடுத்து எனது அறையின் உள்ளே இருந்தேன்.
"அது இல்லடா சண்முகம்... இன்னிக்குனு பார்த்து பக்கத்து ஊர்ல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்னு என் பொண்ணு ஒரே அடம்பிடிச்சிச்சி... அதான் போயிட்டு வர தாமதம் ஆயிடிச்சி.. சரி சக்தி வந்துட்டான்ல" என்றவாறே அவளின் தந்தை எனது வீட்டினுள் வந்தார். அவளும் தொடர்ந்து உள்ளே வந்தாள்.
"கேட்டியா சக்தி... கோவிலுக்கு போயிட்டு வந்து இருக்காங்களாம்... "ஆண்டவா என்னை காப்பாத்துனு வேண்டிட்டு வந்து இருப்பாங்க போல" என்றாள் பிரியா.
"அடி..." என்று நான் அவளை அடிக்க போகும் முன் வேகமாக ஓடி,
"வாங்கக்கா.." என்றவாறு அவளின் அருகே போய் நின்றுக் கொண்டாள்.
"டேய் சக்தி... இங்கவா.. உன்ன பார்க்க முருகன் அண்ணாச்சி வந்து இருக்காங்க" என்று அழைப்பு விடுத்தார் அம்மா. அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தவன், இயல்பாய் அவர்களை பார்க்க வருவதைப் போல்
"வாங்க மாமா... வாங்க அத்தை... நல்லா இருக்கீங்களா?..." என்று கூறியவாறே அறைக்குள் நுழைந்தேன். வேண்டும் என்றே அவளைப் பார்க்காது கவனத்தை அவளின் பெற்றோர்களின் மீது வைப்பதை போன்று நடித்துக் கொண்டு நின்றேன்.
"நாங்க நல்லா இருக்கோம்பா... நீ எப்படி இருக்க... படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா" என்றார் அவளின் தந்தை.
"எனக்கென்ன மாமா... நல்லா இருக்கேன்... எல்லாம் நல்ல படியா முடிந்தது!!!" என்றேன் ஒரு புன்னகையுடன். அவள் மௌனமாய் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"நல்லதுப்பா... எப்படியோ கடைசில ஊர் பக்கம் வந்துட்ட... சரி.. எதாவது புதுசா சொல்லிக் குடுத்தானுங்களா அந்த ஊர்ல... விவசாய புரட்சி அது இதுனு எதாவது பண்ணிக்கிட்டு இருப்பானுங்களே... அப்படி ஏதாவது இருந்தா சொல்லு... நம்மளும் முயற்சி பண்ணிப் பார்ப்போம்..." என்றார்.
"புரட்சியா!!!" சிரித்தேன். "மாமா... அவன் விவரமாத்தான் இருக்கான். அவன் புரட்சினு, பூச்சிக் கொல்லி, உரம் அது இதுனு கண்டுபிடிச்சி நம்மளுக்கு கொடுத்துட்டு போயிட்டான். அங்க அவன் இத எல்லாம் அதிகமா பயன்படுத்துரதே இல்ல... நம்ம ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்த விவசாய முறையத் தான் அவன் புரட்சினு இப்போ பண்ணிக்கிட்டு இருக்கான்... நம்ம ஆளுங்க தான் வெளிநாட்டுக்காரன் எத சொன்னாலும் தலைய ஆட்டிருவோமே... அதான் இன்னும் அவன் தூக்கி போட்ட முறையையே இன்னும் பயன் படுத்திக்கிட்டு இருக்கோம்" என்றேன்.
"என்ன சக்தி சொல்ற" என்றார் ஆச்சர்யமாய்.
"ஆமாம் மாமா... இப்போ எல்லாம் அவன் நம்ம பண்ணிக்கிட்டு இருந்த இயற்கை விவசாய முறையைத் தான் அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சி இருக்கான்... நாம தான் இன்னும் அவன் சொன்னதையே கேட்டுக் கிட்டு இருக்கோம்" என்றேன்.
"அப்படினா..." என்று அவளின் தந்தை தொடங்கும் போது இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதை போல்,
"அண்ணே!!! இன்னிக்கு தான் புள்ள ஊரில இருந்து வந்துருக்கு... நீங்க இந்த கேள்வி எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாமே... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் அவன்" என்றார் என் அம்மா.
"அதுவும் சரிதான்... நம்ம அப்புறம் பேசலாம் சக்தி.. நீ போயி ஓய்வு எடுத்துக்கோ... நாங்களும் கிளம்புறோம்... கோவில்ல இருந்து நேரா உங்க வீட்டுக்குத் தான் வந்தோம்... நாங்களும் போயிட்டு அப்புறமா வறோம்" என்று கூறியாவாறு அவளின் தந்தையும் கிளம்ப ஆரம்பித்தார்.
"சரிமா ... அப்படியே நானும் வெளியே போயிட்டு சீக்கிரமா வர பார்க்கிறேன்..." என்று கூறி விட்டு நானும் வேகமாக வெளியே கிளம்பத் தயார் ஆனேன்.
"டே... நீ எங்கடா போற?"
"போகும் போதே எங்க போறேன்னு கேக்குறீயேம்மா!!! வெளிநாட்டுல இருந்து நீங்க வந்தீங்களா...இல்ல நான் வந்தேனா... எல்லாத்தையும் மறந்துட்டிங்களே..." என்று விளையாட்டாய் அம்மாவை கிண்டல் அடித்து விட்டு " சும்மா ஊர சுத்திப் பார்த்துட்டு வந்துடுறேன்மா... ரொம்ப நாள் ஆச்சில... எவனாவது வந்து தேடுனானுங்கன்னா ஏரிக்கரை பக்கம் இருப்பேன்னு சொல்லுங்க.. சீக்கீரம் வந்துருவேன்" என்று சொல்லி வெளியே கிளம்பினேன். நான் சொன்னது நிச்சயம் அவளின் காதிலேயும் விழுந்து இருக்கும் என்று நம்பியவாறு ஏரியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
போலக் ... போலக் ... போலக்....
நான் எறிந்த கல் ஏரி நீரினில் மூன்று முறை குதித்து எழுந்து விட்டு நான்காவது முறை நீரினுள் மூழ்கியது. நான் எதிர்ப்பார்ததைப் போலவே ஏரிக்கரை யாரும் இன்றி அமைதியாய் இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் என்னிடம் பல கதைகள் பேசிக் கொண்டு இருக்க, அவள் வருவாள் என நான் காத்து இருக்க தொடங்கி 20 நிமிடங்கள் கழிந்து இருந்தன.
தூரத்தில் எங்கோ கேட்ட கொலுசுச் சத்தம அவள் வருகையை எனக்கு முன் கூட்டியே அறிவிக்க நான் தயாரானேன்.
சில கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.
சிறிது நேரத்தில் அவளும் ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தாள். ஏனோ முகம் வாடி போய் இருந்தது.
சொல்லாமலே அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்தேன்.
"ஏய் என்னாச்சி?" என்றேன்.
பதில் வரவில்லை.
"எதாவது பிரச்சனையா...?" தொடர்ந்தேன்.
"இல்லை..." என்றாள்.
பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். நிச்சயப் படுத்திக் கொண்டேன். அவள் ஏதோ பிரச்சனையில் தான் இருகின்றாள்.
" சரி... ஏன் என்னைப் பார்க்க முன்னாடியே வரல" என்றேன்.
மீண்டும் பதில் எதுவும் வரவில்லை.
"இங்க பாரு... நீ என்ன நினைகிறேன்னு எனக்கு தெரியல்ல.. ஆனா அது என்னனு சொன்னாத் தான் நான் எதாவது சொல்ல முடியும்...உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு... நான் கட்டாயப்படுத்தல... சரியா" என்று கூறி விட்டு மீண்டும் ஏரியைநோக்கித் திரும்பினேன்.
அவளின் மௌனத்தை கலைக்குமே என்று எண்ணி கையில் இருந்த கல்லை நீரில் எறியாது கையிலையே வைத்துக் கொண்டு ஏரியை கண்டு கொண்டு நின்றேன்.
"நீங்க என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?"
சிறிது நேர மௌனத்திற்கு பின் அவள் பேசி இருந்தாள். ஆச்சர்யத்தோடு திரும்பினேன்.
"இன்னும் காதலிக்கிறீங்களாவா?"... புரியவில்லை.
"என்ன கேக்குற" என்றேன்.
"சொல்லுங்க... என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?" என்றாள் மீண்டும்.
"இன்னுமாவா!!! நான் உன்னை காதலிப்பதை எப்ப நிறுத்தினேன் ... அதைத் தொடர்வதற்கு... என்ன ஆச்சி மலர்... ஏன் இந்த கேள்வி" என்றேன்.
மௌனத்தை கலைத்தாள்.
"என்னோட தோழிங்க தான் சொன்னங்க...." ஆரம்பித்தாள்.
ஒ! பிரச்சனை அப்படி வருதா என்று நினைத்தவாறே,
"என்ன சொன்னார்கள்" என்றேன்.
"நீங்க வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் எனக்கு ஒரு கடிதாசி கூட போடலைல.. உங்க வீட்டுக்கு எழுதுன கடிதத்துல கூட என்னை பத்தி கேக்கல... அத பத்தி என்னோட தோழிங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது தான் அவளுக சொன்னாளுக... வெளிநாட்டுப் பொண்ணுங்க எல்லாம் அழகா இருப்பாங்கலாம். அந்த நாடுங்க எல்லாம் வளமான நாடுங்களாம். அங்க போன யாரும் திரும்பி இங்க வர மாட்டங்களாம். அங்கயே யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்." என்றாள்.
"ஒ! அதுனால நானும் உன்ன மறந்துட்டு அங்கயே யாரையாவது காதலிச்சிருப்பேன்னு நினைச்சியாக்கும் !" என்றேன் புன்னகையை அடக்கிக் கொண்டு.
ஆம் என்பதைப் போல் தலையாட்டினாள்.
"அடி அப்பாவி!!! அப்படி யாரையாவது நான் கூட்டிகிட்டு வந்து நின்று இருந்தேன்னா எங்க அம்மாவே என்ன ஊர் முழுக்க துரத்தி துரத்தி அடிச்சி இருப்பாங்க என்கிறத மறந்துவிட்டியேடி" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு "உன் தோழிங்க சொன்னது உண்மை தான்" என்றேன்.
அதிர்ச்சியாய் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
"என்ன..."
"ஆம்... அந்த நாட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள். உன் தோழிகள் சரியாகத்தான் அதை சொல்லி இருகின்றார்கள்." என்றேன்.
மௌனம். அவள் பேசவில்லை.
"ஆனால், உன்ன போல ஒரு பொண்ணு அங்க கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்கள சொல்லி தப்பு இல்லை. அவங்க அந்த நாட்டுக்கு எல்லாம் போனது கிடையாது. நான் சொல்றேன், அங்க பொண்ணுங்க அழகா இருப்பாங்க. ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க அளவுக்கு அழகா இருக்க மாட்டாங்க. அதுவும் உன்ன போல ஒரு பொண்ண உலகத்துல வேறு எங்கயும் யாரும் பார்த்து இருக்க முடியாது. இத தெரிஞ்சிக்கோ " என்றேன்.
சிறிது புன்னகைத்தாள்.
"அப்புறம் வளமான நாடுன்னு சொன்னாங்களோ... வளம் நாட்டுக்கு நாடு வேறுபடும். அவனுங்க பொன்னையும் எண்ணையையும் வைச்சி வளமான நாடுன்னு சொல்லுவானுங்க. ஆனா என் கணக்கே வேற. நான் என்னையும் உன்னையும் வைச்சே வளமான நாட்டை முடிவு செய்றேன். உனக்கு ஒரு உண்மை தெரியுமா, இன்னிக்கு நான் பேருந்து நிறுத்தத்துல இருந்து எங்க வீடு வரைக்கும் உன்ன தான் தேடிக்கிட்டே வந்தேன். கூட வேற யாரும் வரல. ஆனாலும் நான் தனியா இல்லை. நம்மள சுத்தி முழுதும் இருந்தும், நமக்குள்ளேயும் இருந்தும், கண்ணுக்கு தெரியாத கடவுள போல தான் நீயும் இருந்த. எனக்குள்ளேயும், நான் வந்த பாதை முழுதும் நினைவுகளாவும். என் கண்ணுக்கு தான் நீ தெரியல. ஆனா நீ என் கூடத் தான் இருந்த. அப்படி பார்க்கும் போது எனக்கு சந்தோசத்த குடுக்குற இந்த ஊர் தான் என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்திலேயே வளமான ஊர். புரிஞ்சதா!!" தொடர்ந்தேன்.
அவள் கண் கலங்கி இருந்தது. இருந்தும் முகத்தில் சிறு புன்னகை அரும்பிக் கொண்டு இருந்தது.
"ம்ம்ம்.... அப்புறம் ஏன் கடிதம் எதுவுமே போடல" என்றாள்.
சிரித்தேன்.
"எப்படி... எங்க வீட்டுக்கு எழுதுற கடிதத்துல, அப்புறம் அம்மா, உங்க மருமக எப்படி இருக்கானு கேக்க சொல்றியா... இல்ல உங்க வீட்டுக்கு தனியா ஒரு கடிதத்தை போட்டு, என்னடா இதுன்னு உங்க அப்பாவ யோசிக்க வைக்க சொல்றியா... நான் என்னவோ, சரி நம்ம ஆளு தான.. ஒரு வருஷம் தான ... புரிஞ்சிப்பானு நெனச்சேன்... எனக்கு மட்டும் உன் கூட பேசணும்னு ஆசை இல்லைன்னு நெனச்சியா?" என்று முடித்தேன்.
மீண்டும் மௌனம்.
அவளே ஆரம்பித்தாள்.
"மன்னிச்சிகோங்க... அவளுக சொன்னதை நான் கேட்டு குழம்பிட்டேன்" என்றாள்.
"அடி பைத்தியம்! உன்ன மன்னிக்கிறதுக்காக நான் இங்க வரல.. உன்ன காதலிக்கிறதுக்காகவே வந்து இருக்கேன்" என்று கூறி அவளின் கைப் பிடித்தேன்.
என் தோளில் மெதுவாய் சாய்ந்தாள்.
"நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன்.
"வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றேன் புன்னகைத்தவாறு.
"நல்லவேளை... நான் கணக்குல கொஞ்சம் சுமாரா இருந்தேன். இல்லைனா நீ எப்படி எனக்கு சொல்லிக்குடுக்க வந்து இருப்ப... நான் எப்படி உன்கிட்ட பேசி இருப்பேன். சில நேரம் இந்த நாள் வரைக்கும் கூட உன்கிட்ட பேசாம இருந்திருப்பேன்... நன்றி எங்க அம்மாவுக்குத் தான் சொல்லணும்... அவங்க மட்டும் உன்ன எனக்கு சொல்லிக் குடுக்க சொல்லலைனா..." என்று தொடர்ந்தேன்.
தோள் மீது சாய்ந்து இருந்தவள் திடீர் என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
பின் புன்னகைத்தாள்.
"நீங்க யோசிச்சே பார்க்கலையா" என்றாள்.
எனக்கு புரியவில்லை.
"என்ன யோசிக்கணும்?" என்றேன்.
மீண்டும் புன்னகைத்தாள்.
"எனக்கு கணக்கு நல்லா வரும்னு உங்க அம்மாகிட்ட யார் சொல்லி இருப்பானு நீங்க யோசிச்சிக் கூட பார்க்கலையா... இல்ல நான் உங்களுக்கு சொல்லித் தந்தா நீங்க தேர்ச்சி ஆகலாம்னும் யார் சொல்லி இருப்பாங்கனும் யோசிச்சிப் பாக்கல சரியா" என்றாள்.
சிறிது யோசித்தேன். மெதுவாய் பொறி தட்டியது.
"நீயா!!"
சிரித்தாள். ஆம் என்பது போல் தலை ஆட்டினாள்.
"அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றேன்.
"ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள்.
"சரி... அப்புறம் ஏன் நான் உன்ன பிடிச்சி இருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் நீ என்ன பிடிச்சி இருக்குனு சொல்லல" தொடர்ந்தேன்.
சிரித்தாள்... " சும்மா தான்!!!" என்றுக் கூறி என் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.
"சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டே தொடங்கினேன் " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றேன்.
"ம்ம்ம்!!!" என்றாள்.
"நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றேன்.
நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! என் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே
"அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.
"என்ன கேள்வி" என்றேன்.
"உண்மையிலேயே வெளிநாட்டிற்கு போய் என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள்.
புன்னகைத்தேன்.
"உன்னை எவ்வளவு காதலிக்கின்றேன் என்பதை கற்றுக் கொண்டேன்" என்றேன்.
மீண்டும் வெட்கம். பின் மீண்டும் பதில்.
"ஐயோ... இதுக்கு வெளிநாட்டுக்கு போயி தான் கத்துக்கணுமா ... நான் இங்கயே தான கத்துகிட்டேன், உங்கள எவ்வளவு காதலிக்கிறேன்னு" என்றாள்.
"சரி தான். ஆண்கள் எளிதானவர்கள் அவர்களை பற்றி இங்கேயே அறிந்து கொள்ளலாம். ஆனால் நீயோ புத்திசாலி உன்னைப் பற்றி அங்கே போயி தான கத்துக்க முடியும்" என்றேன்.
"நான் புத்திசாலி எல்லாம் இல்லை..." என்றாள்.
"ஆம் ... நீ புத்திசாலியான முட்டாள்" என்றேன்.
"அப்போ நீங்க?" என்றாள் குறும்பாய்.
"நானும் அதே தான். காதலில் அனைவரும் புத்திசாலியான முட்டாள்கள் தான்" என்றேன்.
மீண்டும் ஒரு புன்னகையோடு என் நெஞ்சினில் சாய்ந்தாள். அவளை பாதுகாப்பாய் அணைக்க கையில் இருந்த கல் தடையாய் இருந்ததால் கல்லை தண்ணீரில் எறிந்து விட்டு அவளை அணைத்தேன்.
அவளுக்கு என் இதயம் சொல்லிக் கொண்டு இருக்கும் சேதிக்கு தடங்கலாய் சத்தம போடக் கூடாது என்று சத்தம இடாது நீரினுள் சென்றது அநதக் கல்.
அவள் என் இதயம் அவள் பேர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.
நானோ என் உலகத்துக்குள் மீண்டும் வந்ததை மகிழ்ச்சியுடன் எண்ணிக் கொண்டு இருந்தேன்.
தூரத்தில் கதிரவனோ மறைந்து கொண்டு இருந்தான்.
முற்றும்.