"எனக்கு தோல்வி என்பதே கிடையாது". மதனின் வார்த்தைகளில் ஆவேசம் கொந்தளித்தது.
"ஆம்" என்றார் சார்லஸ்.
மதன் நிமிர்ந்து சார்லெஸை பார்த்தான். பின் மீண்டும் குனிந்து தன்னுடைய குத்துச்சண்டை கையுறைகளை பார்த்தவாறு "எனக்கு வலிக்காது சார்ல்ஸ். நான் வெல்லப்பிறந்தவன்" என்றான்.
"ஆம்!" என்றார் சார்ல்ஸ். அவருக்கு மதனின் வார்த்தைகள் புதிதல்ல. மதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவனை அவர் கண்டு இருக்கிறார். புதிதாய் அவன் அவரிடம் எதையும் சொல்ல போவதில்லை. இப்போது அவன் சொல்லும் வார்த்தைகள்அவனுக்காக மட்டுமே. அவருக்கு தெரியும், அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறான்.
"என் மகனை ஒரு பெரிய குத்துச்சண்டை வீரனாக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவனுக்கு பயிற்சி அளிக்க சரி என்று சொல்ல வேண்டும்." 15 வருடங்களுக்கு முன்னால் மதனின் தந்தை உதிர்த்த வார்த்தைகள் இன்றும் அவருக்கு நன்றாக நினைவில் இருந்தன.
"மன்னிக்கவும்! என்னால் பயிற்சி அளிக்க முடியாது. உங்கள் விருப்பங்களை உங்கள் குழந்தைகளின் மீது சுமத்துவது சரியல்ல."
"இல்லை... இல்லை நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். அவனுக்கு குத்துச்சண்டை பிடிக்கும்" என்று மதனின் தந்தை தொடங்கினார்.
"6 வயதுச் சிறுவனுக்கு குத்துச்சண்டை சரியான ஒன்றல்ல. நீங்கள் போகலாம்" என்று உரையாடலை முடித்து விட்டவராய் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. வேண்டாம் என்று எந்தச் சிறுவனைப்பார்த்து சொன்னாரோ அந்தச் சிறுவன் அவருடைய கையுறைகளை அணிந்துக்கொண்டு விளையாட்டாய் சண்டைப்பயிற்சி செய்யும் பையை குத்திக்கொண்டு இருந்தான்.
நின்றார் சார்ல்ஸ். ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தார்.
இவன் சராசரி சிறுவனல்ல.
" எனக்கும் குத்துச்சண்டைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் ஏனோ இவன் குத்துச்சண்டையில் பெரிய ஆளாய் வருவான் என்று எனக்கு தோன்றுகின்றது" மதனின் தந்தை தொடர்ந்தார். சார்ல்ஸ் அவரை அமைதியாய் திரும்பி பார்த்தார்.
"தினமும் காலை 6 மணிக்கு பயிற்சி தொடங்கும். நீங்கள் போகலாம்" என்று கூறிநகர்ந்தார் சார்ல்ஸ்.
அவை நடந்து 15 வருடங்கள் முடிந்து போயிருந்தன. அந்த வருடத்திலேயே மதனின் பெற்றோர் ஒரு சாலை விபத்தில் காலமாக, சார்ல்ஸ் மதனை தன் வளர்ப்பு மகனாக தத்து எடுத்து இருந்தார். மதன் தன்னை ஒரு முழு நேர குத்துச்சண்டை வீரனாக தயார் செய்து கொள்ள ஆரம்பித்து இருந்தான். அன்று தொடங்கி அவன் தோற்று அவர் கண்டதில்லை. வெற்றி... அது ஒன்றே இலக்கு என்று வென்ற போட்டிகள் தந்த வேகம், வேகம் தந்த வெறி , வெறி தந்த வெற்றி .... என்றே அவன் தன்னை ஒரு முன்னணி குத்துச்சண்டை வீரனாக நிலை நிறுத்தி கொண்டு இருந்தான். இதோ அவன் கனவான உலக சாம்பியன் பட்டம் அவன் கைக்கு அருகே இருக்கின்றது.
இடையில் ஒரே போட்டி.
ஒரே நபர்.
கார்த்திக்... சாமானியன் அல்ல. கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்தை தன் வசம் வைத்து இருப்பவன். செய்திகளின் கூற்று உண்மையானால் அவனை போல் ஒரு வீரனை குத்துச்சண்டை உலகம் இது வரை கண்டதில்லை. வெற்றி கடினம் தான். ஆனால் முடியாததில்லை. சார்ல்ஸ் மதனை கூர்ந்து பார்த்தார். மதன் தயாராகவே இருக்கின்றான். அவனிடம் பயமில்லை. அவன் வெல்வான்.
"மக்களே!!! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி இதோ சற்று நேரத்தில் தொடங்க போகிறது." அறிவிப்பாளரின் குரல் அரங்கமெங்கும் ஒலித்தது. உடை மாற்றும் அறையில் மதன் எழுந்து தனது மேல் அங்கியை அணிந்தான். அரங்கமெங்கும் ஒலிக்கும் மக்களின் கரகோசங்கள் அவனின் வெற்றித் தாகத்தை மேலும் அதிகரித்தன.
மதன் சார்லசை பார்த்தான். சார்ல்ஸ் தலை அசைத்தார். நம் நேரம் வந்து விட்டது.
போகலாம்...
"இதோ... உலக சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடும்... 21 வயதே ஆன... இது வரை தோல்விகளே காணாத ...மதன்....!!!"
மதன் தனது அறையிலிருந்து அரங்கத்தின் உள் நுழைந்தான். சார்ல்ஸ் பின் தொடர்ந்தார்.
"வரலாறு படைப்பாரா?... பார்ப்போம்... இதோ உங்களுக்காக ... மதன்" அறிவிப்பாளர் தொடர்ந்தார்.
அரங்கமெங்கும் மதனின் பெயர் எதிரொலித்தது மக்களின் குரலோடு சேர்ந்து.
மதன் புன்னகைத்தான். இதை தான் அவன் எதிர்பார்த்தான். உலகமே அவன் பெயர் சொல்ல வேண்டும்.
"3 சுற்றுகளுக்குள் வெல்ல வேண்டும். என்னால் முடியும்.
எனக்கு வலிக்காது. நான் தோற்க மாட்டேன்."
மதன் குத்துச் சண்டை மேடையுள் நுழைந்தான்.