"ஏலேய்! இன்னும் பந்த எடுக்காம என்னல பண்ணிகிட்டு இருக்க?"
" டேய் இருடா ! நல்லா முள்ளுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்குடா. இங்க பாரு கைய வேற கிழிச்சி விட்டுறிச்சி"
"முள்ளுனா கிழிக்கதான் செய்யும். பார்த்து சீக்கிரம் எடுடா. விளையாட வேண்ணாமா"
இவ்வாறு, சுடுமணலும், முட்கள் குத்தி வரும் குருதியும் கூட எங்களின் ஆட்டத்தை நிறுத்தும் வலிமைப் பெற்றுத் திகழவில்லை. அல்லது அவையும் எங்களின் ஆட்டத்தை நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து கொண்டிருந்தது எங்களின் ஆட்டம். தாகம் வரும் வரை. அனைத்தையும் தந்த எங்கள் ஊர் தாகத்தை அடக்கும் வழியை தரவில்லை. இயற்கையால் முடியவில்லையா! சரி, அங்க ஒரு கடைய போடு என்று அங்கும் ஒரு அண்ணாச்சி கடையைப் போட்டு இருப்பார்.
தண்ணீர் விற்பனைக்கு வராத காலம் அது. வேண்டிய அளவிற்கு இலவசமாகவே கிடைக்கும். எங்கள் தாகம் தணிக்க தண்ணீர் போதும் தான், ஆனால் எங்களை நம்பி கடை வைத்திருக்கும் அந்த அண்ணாச்சியின் பாடு?...
"டேய்!! எம்புட்டு ரூபா வச்சிருக்கீங்க?"
"என்கிட்ட 2.00பா"
"நம்மகிட்ட வழக்கம் போல சுத்தம்"
"இங்க 5.00"
"சரி! என்கிட்ட 3.00 ரூபா இருக்கு! அண்ணாச்சி 5 ஜூஸ் பாக்கெட் எடுத்துக்கிறோம்."
பத்து பேர் விளையாட போனா, அஞ்சு பேர்க்கிட்ட காசு இருக்காது. 5 ஜூஸ் பாககெட்ட 10 பேர் சேர்ந்து காலிபண்ணுனத்துக்அப்புறமும் தாகம் தீர்ந்து இருக்காது.
"அண்ணாச்சி. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?"
"எடுத்துக்கோங்கபா! இத போயி என்ன கேட்டுக்கிட்டு, அதோ அந்த பானைல இருக்குல." என்று கடையின் ஓரமாய் இருக்கும் பானையை காட்டியத்தோடு முடிந்துவிடும் அண்ணாச்சியின் வேலை. தாகம் தணியும் வரை தண்ணீய குடித்துவிட்டு மீண்டும் மைதானத்தை நோக்கி எங்கள் பயணம் தொடரும்.
சில சமயம் அண்ணாச்சி கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு போயிருக்கும் நேரங்களில் தான் எங்கள் பாடு திண்டாட்டமாக இருக்கும். மிதிவண்டிய எடுத்துகொண்டு தண்ணீர் தேடி அலைய ஆரம்பிப்போம். வழிப்போக்கர்களை உபசரிக்க திண்ணைகளை உருவாக்கிய தமிழ் கலாசாரம் மண்ணின் மைந்தர்களையா தாகத்தோடு பரித்தவிக்க விடும்?... எங்கள் தாகம் தணிக்க பல வீட்டிற்கு வெளியே மண்பானைகள் காத்துக்கொண்டு இருந்தன, பாசமான ஆச்சிகளால்.
"கொளுத்துர வெயில்ல அப்படி என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு. பேசாம வெயில் தனிஞ்சதுக்அப்புறமா விளையாடலாம்ல" என்று அக்கறையோடு விசாரிக்கும் ஆச்சிகளும், எங்களுக்காக குளிர்ந்த தண்ணீரை சுமக்கும் மண்பானைகளும் அர்த்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் எங்களின் விளையாட்டுக்கும்...வாழ்க்கைக்கும்!!!
"அது ஒரு காலம்!!! கையில் காசின்றி இருந்தாலும் உண்மையான தாகத்தோடு இருந்த காலம். இன்றோ கையில் காசு இருக்கின்றது... ஆனால் உண்மையான தாகத்தை தான் எங்கேயோ தொலைத்து விட்டோம். அன்று விளையாடிய சில இடங்கள் இன்று பாதி முட்காடுகளாய், மீதி வீடுகளாய். அண்ணாச்சி இன்றும் கடை வைத்து இருக்கிறார், இன்றும் இலவசமாக தண்ணீர் கொடுக்கிறார், ஆனாலும் தண்ணீர் என்றவுடன் முதலில் Aquafina வா என்ற கேள்வி புதிதாக வருகின்றது.அன்று வியர்வையை மட்டும் கண்ட எங்கள் மைதானங்கள் இன்று புதிதாய் எங்கள் கண்ணீரை காண்கின்றது. காலத்தை துரத்தியததில் எதையோ எங்கேயோ தொலைத்து விட்டோமோ என்ற உள் உணர்வை மட்டும் அலட்சிய படுத்த முடியவில்லை. முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். சந்தேகமில்லை. ஆனால் மனதையும் வாழ்க்கையையும் பின்னாடி விட்டுவிட்டு எதற்காக முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்று தான் தெரியவில்லை. அன்று நண்பர்களின் வருகைக்காக மைதானத்தில் காத்திருக்கும் போது என்னுடன் காத்திருந்த காலம், இன்று எங்கோ விரைந்து கொண்டு இருக்கிறது என்னையும் அழைத்து கொண்டு. இது வாழ்வின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா? தெரியவில்லை. இருந்தும் அலைகிறேன்.
இதோ அன்று வீட்டிற்கு வெளியே இருந்த மண்பானைகளை இப்பொழுது காணவில்லை. அந்த ஆச்சிகளையும் தான்!!! "அந்த காலத்துல" என்று அவர்கள் அன்று கூறிய வார்த்தைகள் சற்று நினைவிற்கு வந்து போயின. அவற்றை அப்பொழுது கேலி செய்த நாங்கள் இன்று எங்களை அறியாமல் சொல்லுகின்றோம் "அந்த காலத்துல..."!!!
ஆம்! அந்த காலத்தில் நாங்கள் நாங்களாய் இருந்தோம். சற்று யாராவது தேடி தருகிறீர்களா! அந்த பானைகளையும் அதனுடன் தொலைந்த எங்களையும்!!!
முற்றும்.