வியாழன், 19 ஜனவரி, 2017

காந்தி, டால்ஸ்டாய் - கடிதத் தொடர்புகள் - 1



காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக தன்னுடைய சத்தியாக்கிரக போராட்டத்தினைத் துவங்கிய காலகட்டத்தினில் இந்தக் கடித உரையாடலானது நிகழப்பெற்றது. தென்னாப்பிரிக்காவில் இந்திய மக்களின் உரிமைகளானவை மறுக்கப்பட்ட பொழுது காந்தி அவர்கள் அந்த அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக தனது போராட்டத்தினை துவங்குகின்றார். அத்தகைய போராட்டமானது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, இங்கிலாந்திலுள்ள அரசு அதிகாரிகளைச் சந்தித்து தென்னாப்பிரிக்காவில் இருக்கின்ற ஆங்கிலேய இந்தியர்கள் படும் இன்னல்களைக் குறித்து மனு ஒன்றினை அளிக்க அவர் சென்றிருந்த பொழுது டால்ஸ்டாயுடனான அவரது இந்தக் கடிதப்போக்குவரத்து துவங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற அந்த வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற காந்தியின் நூலினை படிப்பது உதவியாக இருக்கும்.

கடிதம் 1

வெஸ்ட்மின்ஸ்டர் பிளேஸ் ஹோட்டல்
4 ,விக்டோரியா ஸ்ட்ரீட்,
இலண்டன்,S.W.
அக்டோபர் 1,1909.

டால்ஸ்டாய் பிரபு அவர்களுக்கு:

டிரான்ஸ்வாலில் (தென்னாப்பிரிக்கா) கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உங்களது கவனத்திற்கு கொண்டு வருவதற்கான உரிமையினை இக்கடித்ததின் வாயிலாக நான் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அங்கே கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் ஆங்கிலேய இந்தியர்களைக் கொண்ட ஒரு குடியேற்றப்பகுதி இருக்கின்றது. அங்கிருக்கின்ற இந்த இந்திய மக்களானவர்கள் பல வருடங்களாக, சட்டபூர்வமாக்கப்பட்ட பல்வேறு விதமான உரிமை மறுப்புகளுக்கு மத்தியிலேயே உழைத்து வந்து இருக்கின்றனர். நிறத்தினை மையமாக வைத்தும், ஆசியர்கள் என்கின்ற காரணத்தினை மையமாக வைத்தும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக்கூடிய தவறான கருத்துக்கள் அந்தக் குடியேற்றப்பகுதியில் தீவிரமாக பரவி இருக்கின்றன. ஆசியர்களைப் பொருத்தவரை, அத்தகைய தவறான எண்ணமானது நிலைபெற்று இருப்பதற்கு, வணிகத்தினை அடிப்படையாகக் கொண்ட பொறாமையே தான் ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சட்டத்தின் வாயிலாக அங்கிருந்த நிலையானது அதன் உச்சத்தை எட்டியது.

அந்த சட்டமானது எவர்களுக்கு எல்லாம் பொருந்துமோ, அவர்கள் அனைவரையும் அது தரம் தாழ்த்துவதுடன் நில்லாமல், அவர்கள் அனைவரும் மனிதர்களே அல்ல என்று கருதப்படும் ஒரு நிலைக்கே அது அவர்களைக் கொண்டு வந்து விடும் என்றே நானும், ஏனைய மக்கள் பலரும் கருதினோம். அத்தகைய ஒரு சட்டத்திற்கு அடிபணிவது என்பது மெய்யான சமய உணர்ச்சியுடன் ஒன்றிப்போகக் கூடியது அல்ல என்றே எனக்குத் தோன்றியது. நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும், தீமையை வன்முறையால் எதிர்க்கக் கூடாது என்கின்ற கோட்பாட்டினில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தோம். இன்றும் அந்தக் கோட்பாட்டினில் தீவிர நம்பிக்கையினைக் கொண்டே தான் இருக்கின்றோம். மேலும் உங்களுடைய எழுத்துக்களைப் படிக்கக் கூடிய பேறும் எனக்கு கிட்டி இருந்தது. உங்களுடைய அந்த எழுத்துக்கள் என்னுடைய சிந்தனையில் ஒரு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டிருந்தன.

எங்களுடைய நிலையினைக் குறித்து முழுமையாக அங்கிருந்த ஆங்கிலேய இந்திய மக்களுக்கு  விளக்கிய பொழுது அவர்கள், 'அந்த சட்டத்திற்கு நாம் அடிபணியக்கூடாது மாறாக அச்சட்டத்தினை மீறுவதனால் கிடைக்கப்பெறும் சிறைத் தண்டனையையும் ஏனைய மற்றத் தண்டனைகளையும் நாம் அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்' என்ற எங்களது ஆலோசனையினை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவாக, அங்கிருந்த இந்திய மக்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர், அந்தப் போராட்டத்தின் வீரியத்தினை தாங்கிக் கொள்ள முடியாமலும், சிறைத் தண்டனையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமலும், மேலும் தங்களைத் தரம் குறையச் செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் அந்தச் சட்டத்திற்கு அடிபணிய விரும்பாமலும் டிரான்ஸ்வாலில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்கு குடியேறி விட்டனர்.

எஞ்சி இருந்த மக்களில், கிட்டத்தட்ட இரண்டாயிரத்தி ஐந்நூறு பேர் தங்களது மனசாட்சிக்கு ஏற்ப தங்களைத் தாங்களே சிறைத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் ஐந்து முறை கூட சிறைக்குச் சென்று இருக்கின்றனர். அத்தகைய சிறைத் தண்டனைகள் சில நேரங்களில் நான்கு நாட்களாகவும் இருந்து இருக்கின்றன, சில நேரங்களில் ஆறு மாதங்களாகவும் இருந்து இருக்கின்றன. அநேக நேரங்களில் அந்த சிறைத் தண்டனைகளின் பொழுது கடினமான உடற் வேலையினையும் மக்கள் சந்திக்க வேண்டி இருந்தது. பலர் பொருளாதார ரீதியாக பெரும் நாசத்தினை சந்தித்து இருக்கின்றனர். தற்சமயம் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான அகிம்சை வழி போராளிகள் டிரான்ஸ்வால் நகரச் சிறைகளினில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மிகவும் ஏழ்மையான நிலையினில் இருப்பவர்கள். தங்களது வாழ்விற்குத் தேவையானவற்றைத் தங்களது தினசரி உழைப்பினால் மட்டுமே ஈட்டிக் கொள்ளக் கூடிய நிலையினில் இருப்பவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் சிறையினில் இருப்பதன் விளைவாக, அவர்களது மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக திரட்டப்படுகின்ற காணிக்கைகளின் மூலமாகவே ஆதரவினை வழங்க வேண்டி இருக்கின்றது. அத்தகைய பொதுவான காணிக்கைகளையும் அகிம்சை வழிப் போராளிகளே பெருவாரியாக  திரட்டுகின்றனர்.

இத்தகைய நிலையானது ஆங்கிலேய இந்தியர்களை ஒரு மாபெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. இருந்தும், என்னுடைய கருத்தின்படி, அவர்கள் அந்த சூழலிற்கு ஏற்ப உறுதியாக எழுந்து இருக்கின்றனர். எப்பொழுது முடிவிற்கு வரும் என்பதனை அறியாது இன்றும் இப்போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எது எப்படி இருந்த போதிலும், முரட்டுத்தனமான வன்முறையானது எந்த இடத்தினில் தோற்குமோ, அந்த இடத்தினில் அகிம்சை வழியிலான எதிர்ப்பானது நிச்சயமாக வெல்லும் என்பதனை எங்களுள் ஒரு சிலரேனும் தெளிவாக அறிந்து இருக்கின்றோம். மேலும், எங்களது இந்தப் போராட்டமானது இத்தனை காலமாக நீடித்துக் கொண்டே போவதற்கு எங்களுடைய பலவீனமே முக்கியமான காரணமாக இருக்கின்றது என்பதனையும், அந்த பலவீனமே அரசாங்கத்தின் சிந்தனையில் 'நாங்கள் தொடர்ச்சியான இடர்பாடுகளைத் தாக்குப்பிடிக்க மாட்டோம்' என்கின்ற நம்பிக்கையினை விதைத்து இருக்கின்றது என்பதனையும் அறிந்து இருக்கின்றோம்.

என்னுடைய நண்பர் ஒருவருடன், இம்பீரியல் அதிகாரிகளை (ஆங்கிலேயே அரசு) சந்தித்து அவர்களின் முன்னே எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வினைக் காண்பதற்காக ஒரு விண்ணப்பத்தினை வைப்பதற்கு நான் இங்கே வந்துள்ளேன். அகிம்சை வழியிலான போராளிகள், அரசாங்கத்துடன் மன்றாடும் வண்ணம் யாதொரு செயலினையும் தாங்கள் செய்ய கூடாது என்பதனை உணர்ந்தே தான் இருக்கின்றார்கள். இருந்தும் அரசாங்கத்துடன் இங்கே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதற்கு காரணம், எங்களது சமூகத்தில் இருந்த வலு குறைந்த மக்களின் வேண்டுகோளே ஆகும். இத்தகைய ஒரு செயலானது அவர்களது பலத்தைக் காட்டிலும் அவர்களது பலவீனத்தையே அதிகமாக காட்டுகின்றது.

ஆனால் இங்கே நான் கண்டறிந்து கொண்ட விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, நீதிநெறிகளைப் பற்றியும் அகிம்சை வழியிலான போராட்டத்தின் பலன்களைப் பற்றியும் பொதுவான ஒரு கருத்தரங்கினை இங்கே நாம் நடத்த முற்பட்டோம் என்றால், அத்தகைய ஒரு செயலானது இங்கே இருக்கின்ற மக்களின் மத்தியில் இந்த இயக்கத்தை பிரபலமடையச் செய்வதோடு அவர்களைச் சிந்திக்க வைக்கவும் செய்யும் என்றே எனக்கு தோன்றுகின்றது. ஆனால் அப்படி ஒரு கருத்தரங்கினை நடத்துவது என்பது சரியான ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி ஒன்றினை என்னுடைய நண்பர் ஒருவர் எழுப்பி இருக்கின்றார். அவருடைய பார்வையின்படி, அத்தகைய ஒரு முயற்சியானது அகிம்சை வழியிலான எதிர்ப்பின் உண்மை உணர்வோடு ஒவ்வாத ஒன்றாக இருப்பதோடு நில்லாமல், கருத்துக்களை வாங்குவதற்கு சமமான ஒரு செயலாகவும் இருக்கும்.

எனவே இத்தகைய முயற்சியானது சரியானதொன்றாக இருக்குமா இல்லையா  என்பதனைப் பற்றிய உங்களது கருத்தினை எனக்குத் தந்தருளுமாறு உங்களிடம் நான் கேட்டுக் கொள்ளலாமா? இத்தகைய முயற்சிக்கு பங்களிப்புகளை வரவேற்பதில் தவறேதும் இல்லை என்றே நீங்கள் நினைத்தீர்களேயானால், இந்தத் தலைப்பினில் கட்டுரைகளை எழுதுவதற்கு நான் எவரை எல்லாம் குறிப்பாக அணுக வேண்டுமோ அவர்களது பெயர்களை எல்லாம் எனக்குத் தருமாறும் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

உங்களுடைய நேரத்தினை நான் அத்துமீறி எடுத்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. இன்றைக்கு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்ற அமைதியற்ற சூழலினைக் குறித்த உங்களது 'இந்துவிற்கு ஒரு கடிதம்' என்ற படைப்பின் பிரதி ஒன்று, ஒரு நண்பரின் வாயிலாக என்னுடைய கையிற்கு வந்து சேர்ந்து இருக்கின்றது. வெளிப்புறமாகப் பார்க்கும் பொழுது அது உங்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதனை போன்றே தான் தோன்றுகின்றது. உங்களுடைய அந்த படைப்பினை, கிட்டத்தட்ட இருவதாயிரம் பிரதிகள், தன்னுடைய சொந்த செலவினில் அச்சடித்து அவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்பதே எனது நண்பரின் எண்ணமாக இருக்கின்றது. மேலும் அந்த படைப்பினை அவர் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் எண்ணுகின்றார். ஆனால் எங்களால் எவ்வளவு முயன்றும் அந்தப் பிரதியின் அசலினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அந்தக் கடிதமானது உங்களுடையது தான் என்பதனையும் அது எவ்விதமான மாற்றத்தினையும் அடைந்து இருக்கவில்லை என்பதனையும் உறுதி செய்து கொள்ளாமல் அதனை அச்சடிப்பது என்பது சரியான ஒரு செயலாகாது என்றே நாங்கள் எண்ணுகின்றோம். எனவே இந்த மடலுடன் எங்களிடம் இருக்கின்ற அந்தப் பிரதியினை இணைத்து அனுப்பி இருக்கின்றேன். அந்த படைப்பானது உங்களுடையது தானா என்பதனையும், அது எவ்விதமான மாற்றத்தினையும் கொண்டிராமல் சரியாக இருக்கின்றதா என்பதனையும், அத்துடன் அதனை நாங்கள் மேற்கூறியவாறு வெளியிடுவதற்கு நீங்கள் சம்மதிக்கின்றீர்களா என்பதனையும் நீங்கள் தயை கூர்ந்து தெரிவித்தீர்கள் என்றால் அது எனக்கு மிக்க உதவியாக இருக்கும். நீங்கள் அந்தக் கடிதத்துடன் வேறு ஏதேனும் சேர்க்க விரும்பினீர்கள் என்றால், உங்களின் விருப்பப்படி அவ்வாறே செய்யுங்கள்.

மேலும் இங்கே நான் என்னுடைய ஒரு கருத்தினையும் கூற விரும்புகின்றேன். உங்களுடைய கடிதத்தின் இறுதி பத்தியில் மறுபிறவிக் கொள்கையில் இருக்கும் நம்பிக்கையில் இருந்து விடுபடுமாறே நீங்கள் வாசகர்களைக் கேட்பது போல் தோன்றுகின்றது. குறிப்பிட்ட அந்தக் கொள்கையினைப் பற்றி நீங்கள் படித்து இருக்கின்றீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது (இதனை நான் ஆணவத்தினால் குறிப்பிடவில்லை). மறுபிறவி என்பதும் கூடு விட்டு கூடு பாய்வதும் இலட்சக்கணக்கான இந்திய மக்களினால் போற்றப்படும் நம்பிக்கைகளாகும். சீனர்களும் இவற்றை நம்புகின்றனர். இந்தக் கோட்பாடுகளானவை, வெறும் பாடங்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையினைத் தாண்டி, பலரால் உணரப்பட்ட அனுபவங்களாகவே இருக்கின்றன என்றே ஒருவரால் கிட்டத்தட்ட கூற முடியும். வாழ்வின் பல மர்மங்களை இது நியாயமான முறையில் விளக்குகின்றது. டிரான்ஸ்வாலில் சிறைத் தண்டனைக்கு உட்பட்ட பல அகிம்சை வழிப் போராளிகளுக்கு இந்தக் கோட்பாடே தான் ஆறுதலாக இருந்து இருக்கின்றது.

நான் இதனை எழுதுவதன் நோக்கம், அந்தக் கொள்கையின் உண்மைத்தன்மையினை உங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால் உங்களது கடிதத்தில் நீங்கள் உங்களது வாசகர்களை எவற்றில் இருந்து எல்லாம் அவர் விலக வேண்டும் என்றே குறிப்பிட்டு இருக்கின்றீர்களோ, அதில் இருந்து இந்த 'மறுபிறவி கோட்பாட்டினை' மட்டும் தயைக்கூர்ந்து விலக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளுவதற்காகவே தான் நான் இதனை எழுதுகின்றேன்.

மேலும், எந்தக் கடிதத்தினைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமோ, அந்தக் கடிதத்தில் நீங்கள் பெருவாரியாக கிருஷ்ணரின் உபதேசங்களையும், பிற பகுதிகளுக்கு குறிப்புகளையும் தந்து இருக்கின்றீர்கள். அந்த உபதேசங்களை நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து எடுத்து இருக்கின்றீர்கள் என்று அந்த நூலின் பெயரினை என்னிடம் சொன்னீர்கள் என்றால் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன்.

இந்தக் கடிதத்தின் மூலமாக நான் உங்களைக் களைப்படையச் செய்து இருக்கின்றேன். உங்களை மதித்து, உங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உங்களுடைய நேரத்தினை அத்துமீறி எடுத்துக் கொள்வதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்பதனை நான் அறிவேன். மாறாக தங்களால் இயன்ற அளவு உங்களுக்குத் தொந்தரவு தராத வண்ணம் இருக்க முயல்வதே அவர்களது கடமையாக இருக்கின்றது. இருந்தும் உங்களுக்கு முற்றிலுமாக அந்நியனாக இருக்கின்ற நான், உண்மையின் மீது இருக்கின்ற ஆர்வத்தின் காரணமாகவும், உங்களுடைய வாழ்வினில் நீங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலமாக நீங்கள் பெற்று இருக்கின்ற தீர்வினை அடிப்படையாக வைத்து, சில பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காண உங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே உங்களிடம் நான் தொடர்பு கொள்ளக்கூடிய இந்த உரிமையினை எடுத்து இருக்கின்றேன்.

மதிப்புடன்,
என்றென்றும் உங்களது சேவகனாய்
மோ.. காந்தி
அக்டோபர்
 

புதன், 4 ஜனவரி, 2017

இந்துவிற்கு ஒரு கடிதம் - லியோ டால்ஸ்டாய்

என்னுடைய இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல். 'ப்ரீ ஹிந்துஸ்தான்' என்கின்ற பத்திரிக்கையின் ஆசிரியரான தாரக்நாத் தாஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்தினைக் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய பதிற் கடிதமே தான் இந்த 'இந்துவிற்கு ஒரு கடித'மாகும். இச்சம்பவமானது 1908 ஆம் ஆண்டினில் நிகழப்பெற்றது. இந்திய மக்களின் விடுதலையோடு நில்லாமல், ஒட்டுமொத்த உலக மக்களும் எவ்வாறு அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள் என்பதனையும், அவர்கள் எவ்வாறு உண்மையான சுதந்திரத்தினைப் பெற முடியும் என்பதனையும் மிகவும் தெளிவாக டால்ஸ்டாய் அவர்கள் விளக்கி இருக்கும் இந்த கடிதமானது காந்தியின் கவனத்தை ஈர்த்தது. டால்ஸ்டாயின் நூல்களாலும் கொள்கைகளாலும் ஏற்கனவே கவரப்பட்டிருந்த காந்தியினை, இந்திய நாட்டினைக் குறித்த இந்த கடிதமானது, டால்ஸ்டாய் அவர்களை கடிதங்களின் வாயிலாகத் தொடர்புக்கொள்ளச் செய்தது. அவர்கள் தங்களுக்குள் கடிதங்கள் மூலமாக பரிமாறிக் கொண்ட விடயங்களும் இந்த நூலினில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழைமையான அந்த கடிதத்தினை இங்கே நான் மொழிபெயர்த்து இருப்பதன் காரணம், டால்ஸ்டாய்யைக் குறித்து மக்கள் அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோ அல்லது காந்தியைக் குறித்து மக்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோ அல்ல. மாறாக, அந்த கடிதத்தினில் கூறப்பட்டு இருக்கின்ற விடயங்கள் இன்றளவும் உண்மையானவையாக இருந்து கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் தான் அந்த கடிதத்தினைக் குறித்து நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு நம் நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமில்லாத ஒரு வாழ்வினை மறக்கடிக்கும் வண்ணம் நுகர்வுக் கலாச்சாரம் முதலாளித்துவத்தினால் போற்றி வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமைதியான வாழ்வென்பது மறைந்து இயந்திரமயமான ஒரு வாழ்வானது மனிதர்களை இயந்தரமாக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் விளைவாக கொலைகள், கொள்ளைகள், தற்கொலைகள் என்று சமூகமே ஒரு நிலையற்றுக் காணப்படுகின்றது.

"உலகிலுள்ள பல்வேறு நம்பிக்கைகளும் செழித்து விளங்குகின்ற பள்ளியாக இருக்கின்ற இந்தியாவில், எப்பொழுது 'நாகரீகம்' என்ற பெயரினில் துப்பாக்கிச் தொழிற்சாலைகளும், ஐரோப்பிய மக்களை அடிமைகளாகச் சுருங்கவும், மனித குடும்பத்தின் அடிப்படை இயல்பாக அமைந்திருக்கும் அனைத்து விதமான அன்பு உணர்ச்சிகளை மங்கவும் வைத்திருக்கின்ற அந்த வெறுக்கத்தக்க  முதலாளித்துவமும் அனுமதிக்கப்படுகின்றதோ அன்று இந்தியா சுதந்திர இந்தியாவாக இருக்காது." என்ற காந்தியின் கூற்றினை இன்றைய சூழ்நிலை மெய்ப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

சமயங்கள் மனிதர்களுள் பிரிவினை உண்டாக்கி அவனை முட்டாளாக வைத்து இருக்கின்றன என்று கூறி அறிவியல் என்ற ஒன்றினை மனிதனின் விடுதலைக்காக, மனிதன் சிந்திக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தோம். ஆனால் இன்று அந்த சமயங்களை விட அறிவியலே மனிதனை அதிகமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதனை நம்முடைய வணிக வளாகங்களில் கைகளில் புத்தம் புது கைபேசிகளுடன் உலக அக்கறை சிறிதும் அற்று தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையினைக் காணும் பொழுது நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மின்சாரம் வேண்டுமா...உடனடியாக திற கூடங்குளம் அணுவுலையை. தண்ணீரின்றி இலட்சக்கணக்கான மக்கள் வாடுகின்றார்களா..கவலையில்லை நமக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கின்றதா என்று அறிந்து கொள்வதே முக்கியம்...அதுவே முன்னேற்றம். விவசாயிகள் தண்ணீரின்றி கவலைப்படுகின்றார்களா, அது அவர்களது கவலை...நமக்கு நம்முடைய கிரிக்கெட் விளையாட்டிற்கு எந்த பங்கமும் வந்து விடக் கூடாது என்ற சிந்தனைகளைத் தான் நம்முடைய அறிவியலானது இங்கே விதைத்துக் கொண்டிருக்கின்றது.

கண்மூடித்தனமாக அறிவியலைக் குறைக் கூறுவது எனது நோக்கமல்ல. 'சூரியனுக்கு என்ன காப்புரிமையா இருக்கின்றது...சூரியன் எல்லாருக்கும் பொதுவாக இருப்பதனைப் போலவே என்னுடைய கண்டுபிடிப்புகள் மக்கள் அனைவருக்கும் உரித்தானவை' என்று கூறிய அறிவியலானது காலாவதியாகி விட்டதனை சிந்திப்போர் அனைவரும் அறிந்தே தான் இருப்பர். இன்றைக்கு அறிவியல் என்ற ஒன்று அறிவினைக் கொடுத்து மக்களை சிந்திக்க வைப்பது அல்ல, மாறாக பொருட்களைக் கொடுத்து மக்களை பொழுதுபோக்க வைப்பதாகவே பெரிதும் இருக்கின்றது. இத்தகைய அறிவியலைத் தான் டால்ஸ்டாய் அவர்கள் போலி அறிவியல் என்று சாடுகின்றார்.

தன்னுடைய கடிதத்தில் 'ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுது, தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.' என்றே டால்ஸ்டாய் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார். சற்று நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் இன்றும் கூட அதே நிலையில் தான் நாம் இருக்கின்றோம் என்பது தெளிவாக நமக்குப் புலப்படும். நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்போரின் பலத்தினால் அல்ல, நம்முடைய பலவீனத்தினாலேயே தான் நாம் அடிமைகளாக ஏமாந்துக் கொண்டிருக்கின்றோம்.

எவ்வாறு ஒரு காலத்தில் சமயங்களின் பெயரினால் மக்கள் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டார்களோ, அதனைப் போன்றே தான் இன்று அறிவியலின் பெயரினால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றார்கள். ஒருவன் தன்னுடைய நலனைப் பற்றி மட்டுமே சிந்தனை செய்கின்ற ஒரு நிலையானது நம்முடைய சமூகத்தினில் இன்று பெருவாரியாக காணப்படுகின்றது. அவ்வாறு தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பது என்பது தவறல்ல என்ற கருத்தும் பெருவாரியாக சமூகத்தினில் காணப்படுகின்றது. இதன் விளைவாகத் தான் கொத்துக் கொத்தாக மக்கள் உலகமெங்கும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும் நம்மால் நிம்மதியாக தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க முடிகின்றது.

இன்றைக்கு உலகில் பலர் வாடிக்கொண்டு இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம், அவர்களிடம் பணமில்லாததோ அல்லது வலிமை இல்லாததோ அல்லது அறிவில்லாததோ அல்ல. அவர்கள் வாடிக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் உலகில் உள்ள பெருவாரியான மக்களிடம் அன்பு என்ற ஒன்று இல்லாததே ஆகும். இதனையே தான் டால்ஸ்டாய் அவர்களும் தன்னுடைய கடிதத்தினில் குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய உலகமானது சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் அன்பினையே அவர் தீர்வாகத் தருகின்றார்.

இந்த மெய்யான அன்பானது மனிதர்களிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று என்று கூறுகின்ற டால்ஸ்டாய் அவர்கள், அந்த அன்பினை மனிதர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாதபடி போலியான சமய ஆசிரியர்கள் அவர்களை திசை திருப்பி விடுகின்றனர் என்றுமே கூறுகின்றார். 'ஆசை அறுமீன்கள்...ஆசை அறுமீன்கள்' என்று எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்ற கூறுகின்ற சைவத்தின் பெயரைக் கூறிக் கொண்டே 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று கூறுகின்ற மனிதர்கள், டால்ஸ்டாயின் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் நம்முடைய சமூகத்தினில் இருப்பதை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.

'உன்னை நீ நேசிப்பதனைப் போல் பிறரையும் நேசி...மனிதர்கள் அனைவரும் சகோதர்கள்...ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தினையும் காட்டு...இறைவனின் முன்னால் தேசங்கள் என்று எதுவும் இல்லை...தேசங்கள் என்பது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட பிரிவினைகள்...எனவே தேசங்களுக்கு இடையே வேறுபாடுகளைக் காணாதீர்கள்' என்ற இயேசுவின் கூற்றினை இன்று எந்தொரு கிருத்துவ தேசமும் பின்பற்றுவதில்லை. அதனை கிருத்துவ மதகுருக்களும் கண்டிப்பதில்லை. இதனையும் டால்ஸ்டாய் அவர்கள் மிகவும் வன்மையாக கண்டித்து இருக்கின்றார். கிருத்துவம் என்ற பெயரிலேயே இயேசுவிற்கு எதிரான கருத்துக்களை கிருத்துவ சமயமானது பரப்பிக் கொண்டிருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார். அதற்கு தக்க ஆதாரங்களையும் அவர் அவருடைய மற்ற நூல்களில் வழங்கி இருக்கின்றார்.

சமயங்களைக் குறித்து அவர் முன்வைக்கின்ற கருத்து இதுதான்...மெய்யான சமயம் அன்பினை மட்டுமே போதிக்கின்றது. அதனை மக்கள் அறிந்துவிடாமல் இருக்கும் வண்ணம் போலியான சமய ஆசிரியர்கள் சமயங்களை சிதைத்து வைத்து இருக்கின்றனர். அதனால் வாழ்வென்றால் என்ன, அதனை எவ்வாறு வாழ வேண்டும் என்று ஒரு மனிதனுக்கு எடுத்துக் கூறி அவனை நல்வழியில் நடக்க வைக்க வேண்டிய சமயங்கள் இன்று மனிதர்களை தவறான வழியில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு திரிக்கப்பட்டு இருக்கின்ற ஆன்மீக போதனைகளில் இருந்து மெய்யான ஆன்மீகத்தினை விடுதலை செய்து, அவனுள் இயல்பாகவே வீற்று இருக்கின்ற அன்பினை மனிதனானவன் முழுமையாக உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் செய்வதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் என்றே அவர் கூறுகின்றார்.

ஒன்று இந்த உலகினில் அன்பினை மட்டுமே பரப்புகின்ற உண்மையான சமயமானது இருக்க முடியும் அல்லது மக்களை பிரித்து வைத்திருக்கும் தேசங்கள் இராணுவங்கள் போன்ற பிரிவுகள் இந்த உலகினில் இருக்க முடியும் மாறாக முற்றிலுமாக முரண்பட்ட அந்த இரண்டும் ஒன்றாக இவ்வுலகில் இருக்க முடியாது...ஒன்று தேசப் பிரிவினையானது மெய்யான சமயத்தினை அழித்து விடும் அல்லது மெய்யான சமயமானது தேசப் பிரிவினைகளை அழித்து விடும் என்ற டால்ஸ்டாயின் கூற்றில் உள்ள உண்மையினை நம்மால் மறுக்க முடியாது.

பெரும்பணக்காராக, ஒரு இராணுவ வீரராக, உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக, நம்பிக்கையற்றவராக (நாத்திகராக), ஆன்மீகப் போராளியாக, 'காந்தி' 'மார்ட்டின் லூதர் கிங்' போன்றவர்களுக்கு அகிம்சை வழிப் போராட்டத்தின் வழிகாட்டியாக, தனது நூல்களை பொதுவுடைமையாக்கிய ஒரு பொதுவுடைமைவாதியாக என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு அமைந்து இருக்கின்ற வாழ்க்கையினை கொண்டிருக்கின்ற அவரின் அனுபவத்திற்கும் சரி கூற்றிற்கும் சரி நாம் செவி கொடுத்ததாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதுவும் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவராக இருந்து கொண்டு திருக்குறளினையும் (காந்திக்கு திருக்குறளினை அறிமுகம் செய்து வைத்தவர் டால்ஸ்டாய் தான். இந்த கடிதத்தினில் திருக்குறளினை அவர் 'இந்து குறள்' என்றே குறிப்பிட்டு இருக்கின்றார்) கிருஷ்ணரின் உபதேசங்களையும் உபநிடதங்களையும் பற்றி கூறி இருக்கின்ற அம்மனிதரின் கூற்றினை நாம் சற்று பொறுமையாக சிந்தித்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

இளவயதில் நம்பிக்கையற்றவராக இருந்து, பின்னர் வாழ்வென்றால் என்னவென்ற ஒரு தேடலினைக் கொண்டு, அதன் முடிவில் ஒரு ஆன்மீகப் போராளியாக போலி சமயங்களையும் போலி அறிவியலையும் ஒரு சேர எதிர்த்த அவரது வாழ்வில் இருந்தும் சரி அவரது படைப்புகளில் இருந்தும் சரி இன்றைக்கு இருக்கின்ற இளைய தலைமுறையினர் நிச்சயமாக அதிகம் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள வேண்டும்.

டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும் என்றும் அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் இந்நூலானது வழிவகுக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்ற வள்ளுவரின் குரளிற்கேற்ப அன்பினையே தங்களது ஆயுதமாக அமைத்துக் கொண்ட அவர்களது வழிமுறைகளில் இருந்தே நமது சமூகம் அநேகம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. எவ்வாறு தீயினைக் கொண்டு தீயினை அழிக்க முடியாதோ அதனைப் போன்றே தான் தீமையான செயல்களை வேறொரு தீமையான செயலினைக் கொண்டு அழிக்க முடியாது. நல்ல செயல்களாலேயே தான் தீய செயல்களை அழிக்க முடியும். அதனையே தான் சமயங்கள் போதிக்கின்றன. அவற்றையே தான் காந்தியும் சரி டால்ஸ்டாயும் சரி நமக்குத் தெளிவுபடுத்துகின்றனர். அன்பும் மற்ற நற்பண்புகளும் நலிந்து போய் கிடக்கின்ற நம்முடைய இன்றைய காலகட்டத்தினில் நாம் அவர்களது கூற்றினுக்கு செவி சாய்த்தாகத்தான் வேண்டி இருக்கின்றது. அன்பே அனைத்திற்குமான தீர்வாக இருக்கின்றது. அன்பே இறைவன்.

சனி, 11 ஜூன், 2016

எனது முதல் புத்தகம் - சுவிஷேசங்களின் சுருக்கம்!!!

ஒரு வழியாக முதல் புத்தகத்தினை எழுதி முடித்தாயிற்று...சரியாக சொல்ல வேண்டும் என்றால் மொழிப்பெயர்த்து முடித்தாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'Gospel in Brief ' என்ற நூலினைத் தான் தமிழினில் 'சுவிஷேசங்களின் சுருக்கம்' என்று நான் மொழிபெயர்த்து இருக்கின்றேன். இப்பொழுது அந்த நூலினைப் பற்றியும் அதனை எதற்காக நான் மொழிபெயர்த்திருக்கின்றேன் என்பதனைப் பற்றியும் உங்களிடம் சிறிது மேலோட்டமாக பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.

டால்ஸ்டாய் என்றாலே சிறு கதைகளும், உலக பிரசித்திப் பெற்ற காவியங்களான 'போரும் அமைதியும்' 'அன்னா கரெநேனா' என்பன போன்ற நூல்களும் தான் பலரின் நினைவிற்கு வரும். ஆனால் டால்ஸ்டாய் அவர்களுக்கு பலரும் அறியாத வேறொரு முகமும் இருக்கத்தான் செய்கின்றது. வாழ்வென்றால் என்னவென்ற ஒரு தேடலினை மேற்கொண்ட ஒருவன், இறுதியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதே வாழ்வின் நோக்கமாகும் என்பதனையும், அவ்வாறு மக்கள் அனைவரையும் ஒற்றுமையாக வாழ வழி செய்வதே இங்கே ஒவ்வொருவரின் கடமையாகும் என்பதனையும் கண்டு கொண்டு, ஒரு ஆன்மீகப் பொது உடைமைவாதியாக அதற்காக போராடிய ஒரு வரலாறே டால்ஸ்டாயின் மற்றொரு முகமாகும்....இந்த நூல் டால்ஸ்டாயின் அந்த ஆன்மீகப் பொதுவுடைமைவாத முகத்தினையே பிரதிபலிக்கின்றது.

நிச்சயமாக இந்த நூல் அனைவருக்குமான ஒரு நூல் அல்ல...இந்த நூல் குறிப்பாக நான்கு தரப்பினரை குறி வைத்து எழுதப்பட்டு இருக்கின்றது.
  • கிருத்துவர்கள்
  • சமயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்
  • நாத்திகர்கள்/பொதுவுடைமைவாதிகள்
  • வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை கொண்டவர்கள்
இந்த நான்கு தரப்பு மக்கள் அல்லாது, டால்ஸ்டாயின் மற்ற காவியங்களை மனதிற் வைத்துக் கொண்டு அதனைப் போன்றே இந்த நூலும் இருக்கும் என்ற எண்ணத்துடன் இந்நூலினை படிக்கும் நண்பர்களுக்கு இந்நூலானது ஏற்றதாக இருக்குமா என்பதனை என்னால் கூற முடியவில்லை. சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த நூலின் சாரம் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

வாழ்வினைக் குறித்து கிருத்துவம்...மன்னிக்கவும்...வாழ்வினைக் குறித்து இயேசு எதனைக் கூறி இருக்கின்றார் என்பதே இந்த நூலின் மையக் கருத்தாக இருக்கின்றது. ஏன் என்றால் இயேசுவின் கருத்துக்களை கிருத்துவ திருச்சபைகள் முற்றிலுமாக மக்களிடம் இருந்து மறைத்து வைத்து இருக்கின்றன என்றும், வாழ்வென்றால் என்னவென்று ஒருவன் அறியாத நிலையிலேயே ஆன்மீக நிறுவனங்கள் ஒருவனை வைத்து இருக்கின்றன என்றே டால்ஸ்டாய் அவர்கள் ஆன்மீக நிறுவனங்களை, கிருத்துவ திருச்சபைகளை சாடுகின்றார்.

"கிருத்துவம் என்ற பெயரிலேயே, இயேசுவின் கருத்திற்கு மாறாக இருக்கின்ற திருச்சபையின் கருத்தானது இயேசுவின் கருத்தாகப் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. இதுவே தவறான விளக்கங்களைப் பரப்புவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வழியாகும். நாம் அனைவரும் இந்தத் தவறான விளக்கத்தினைக் கொண்டே வளர்ந்தும் இருக்கின்றோம். திருச்சபையின் போதனைகளானவை இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போதனைகளாகவே இருக்கின்றன." என்ற தனது கூற்றுக்கு தகுந்த ஆதாரங்களையும் டால்ஸ்டாய் தந்தே தான் இருக்கின்றார். அதன் விளைவாக இந்த நூல், கிருத்துவ சபைகளின் ஆதிக்கத்தில் இருந்த ரஷ்யாவினில் அன்று தடைசெய்யப்பட்டதொரு நூலாக இருந்தது என்பதில் நமக்கு வியப்பொன்றும் இல்லை தான்.

நம்பிக்கையற்ற ஒருவனாக இருந்த நிலையில் இருந்து, வாழ்வென்றால் என்னவென்ற தேடலினை தன்னுடைய ஐம்பதாவது வயதினில் மேற்கொண்ட ஒருவனாக மாறி, இறுதியில் வாழ்வினுடைய அர்த்தத்தினை இயேசுவின் கருத்துகளில் இருந்து அறிந்துக் கொண்ட ஒருவனின் மனதினில் என்ன கேள்விகள் இயல்பாக வருமோ அதே கேள்விகள் தான் டால்ஸ்டாய் அவர்களுக்கும் வருகின்றது.

ஏன் இது நாள் வரை வாழ்வென்றால் என்னவென்று எனக்கு புலப்படாமல் இருந்தது? ஆன்மீக நிறுவனங்களும் திருச்சபைகளும் எதற்காக வாழ்வினைப் பற்றி எனக்கு போதிக்காமல் வெறும் சடங்குகளையும் அதிசயங்களையும் பற்றி மட்டுமே எனக்கு போதித்து வந்து கொண்டிருக்கின்றன? ஏன் அந்த திருச்சபைகளுக்குள் இத்தனை வேறுபாடு?

இந்த கேள்விக்கான விடைகளைத் தேடும் பொழுது, அனைத்து திருச்சபைகளும் தங்களது சுய ஆதாயத்திற்காகவே இயேசுவின் பெயரைக் கூறிக் கொண்டு, இயேசுவின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை போதித்து வந்து கொண்டிருக்கின்றன என்பதனை அவர் காணுகின்றார். வெறும் அதிசயங்களையும் சடங்குகளையும் முன்னிறுத்தி வைத்துவிட்டு இயேசுவின் கருத்துக்களை புறக்கணிக்கும் ஒரு செயலினையே அனைத்து திருச்சபைகளும் செய்து கொண்டிருக்கின்றன என்பதனையும் அவர் காணுகின்றார். திருச்சபைகளின் அந்த நடவடிக்கைகளினால் இயேசுவின் கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் இருப்பதனையும், மக்கள் இயேசுவின் கருத்துக்களை விட அவர் செய்த அதிசயங்களையையே பெரிதாக கருதிக் கொண்டு அர்த்தமற்ற வாழ்வினை வாழ்ந்துக் கொண்டிருப்பதனையும் அவர் காணுகின்றார்.

அந்நிலையில், இயேசுவின் வாழ்வில் இருந்து அனைத்து அதிசயங்களையும் எடுத்து விட்டு, இயேசு கூறிய விடயங்களின் மெய்யான அர்த்தத்தினை மட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க கூடிய ஒரு நூலாக இந்நூலினை டால்ஸ்டாய் அவர்கள் எழுதி இருக்கின்றார்.

"கிருத்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினைத் தரும் ஒரு போதனையாகவே நான் அதனைக் காணுகின்றேன். வரலாற்று நிகழ்வுகளைக் குறித்த தேடல்களோ அல்லது இறைவனைக் குறித்த தேடல்களோ என்னை கிருத்துவத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை. மாறாக என்னுடைய ஐம்பதாவது வயதில் நான் கொண்ட ‘நான் யார்’ என்ற தேடலும் ‘என்னுடைய வாழ்வின் அர்த்தம் என்ன ’ என்ற தேடலுமே என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது." என்று கூறுகின்ற டால்ஸ்டாய் அவர்கள், இந்த நூலின் வாயிலாக வாழ்வினைக் குறித்து தான் அறிந்தவற்றை தன்னுடைய சகோதரர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகின்றார்.

விவிலியத்தின் புனிதத்தன்மை, அதிசயங்கள் போன்ற அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் டால்ஸ்டாய் அவர்கள் வாசகர்கள் முன்னே முன்வைப்பது ஒன்றினைத் தான்...ஒன்றினை மட்டும் தான்...!!! அதிசயங்கள் இல்லாத இயேசுவின் வாழ்வினையும் அவரது கருத்துக்களையும் மட்டுமே தான் அவர் இந்த நூலின் வாயிலாக நம் முன்னே வைக்கின்றார். திருச்சபைகள் போதித்துக் கொண்டிருக்கும் தவறான விளக்கங்களில் இருந்து இயேசுவின் போதனைகள் எவ்வாறு மாறுபட்டு இருக்கின்றன என்பதனை சுவிஷேசங்களில் இருந்தே நமக்கு தெளிவாக அவர் விளக்குகின்றார்.

சமயங்களைப் பற்றியும் வாழ்வினைப் பற்றியும் நாம் கண்டு வந்து கொண்டிருக்கும் நமது பயணத்திலே இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாகும்.

"இறைவன் மக்களுக்குப் போதிப்பதற்காகவே உலகிற்கு வந்திருந்தார் என்றால், தன்னுடைய போதனைகளை அவர் தெளிவாகக் கூறி இருப்பார். அவருடைய நோக்கே போதிப்பதாக இருக்கும் பட்சத்தில் அவர் போதித்த கருத்துக்கள் ஒரே அர்த்தத்தினைத் தான் கொண்டிருக்கக்கூடும். நிச்சயமாக பல்வேறு விதமான முரண்பட்ட விளக்கங்களை அவருடைய போதனையானது கொண்டிருக்காது. உண்மையினை வெளிப்படுத்துவதற்காக இறைவன் உலகிற்கு வந்தார் என்றால் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமே அவர் அதனை வெளிப்படுத்தி இருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் இறைவனாக இருக்க முடியாது. மேலும் இறைவனாலேயே மனிதர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்க இயலாத வண்ணமே தெய்வீக உண்மைகள் இருந்தன என்றால் நிச்சயமாய் மனிதரால் அவற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியாது." - லியோ டால்ஸ்டாய்

பி:கு:
  1. இந்த நூலில் இருக்கும் டால்ஸ்டாயின் முன்னுரையினை முதலில் படிக்கவும்.
  2. சுவிசேஷங்கள் என்பன இயேசுவின் வாழ்வினைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும்.
புத்தகத்தினை வெளியிட்டோர் : பாரதி புத்தகாலயம்

வியாழன், 26 மே, 2016

மரணமும்…கனவும்-9!!!

கனவினையும் மரணத்தினையும் ஆன்மாவினையும் பற்றி நாம் கண்டு வந்துக் கொண்டிருக்கும் இத்தொடரினில் 'ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் உணர்வது எதனால்?' என்பதனையே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மிக முக்கியமான கேள்வியினை காண வேண்டி இருக்கின்றது.

'ஆன்மாவினது ஆற்றலின் எல்லை என்ன?' என்கின்ற கேள்வி தான் அது.

சமயங்களின் கூற்றின்படி இறைவனின் ஒரு பகுதி தான் ஆன்மா. ஆகையால் தான் ஆன்மாவினை உடைய மனிதனால் இந்த உலகினை ஆள முடிகின்றது. அனைத்தையும் அவன் காண்கின்றான்...அனைத்தினைப் பற்றியும் அவன் அறிகின்றான்...அறிந்து அதனை மாற்றவும் செய்கின்றான். இந்த ஆற்றலினை ஒரு மனிதனுக்கு வழங்குவது அவனது ஆன்மா என்றே சமயங்கள் கூறுகின்றன.

அதனை மெய்ப்பிப்பதனைப் போன்றே பல நிகழ்வுகளையும் நாம் அறிய வருகின்றோம் தான். உதாரணமாக,
செவ்விந்தியப் பழங்குடி மக்களைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர்கள் வசிக்கும் இடத்தில் மழை பெய்ய வேண்டுமென்றால் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் அனைவரது சிந்தனையும் மெய்யாக ஒன்றுபட்டு இருக்கும் பொழுது அங்கே மழையும் பொழியுமாம்.

அதனைப் போன்றே தான் நாம் குறி சொல்லும் மக்களையும் காண வேண்டி இருக்கின்றது. போலியான நபர்கள் பலர் இருப்பீனும், மெய்யான நபர்களும் இங்கே இருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் தங்களது மனதினை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக அதன் ஆற்றலினை பெருக்கிக் கொள்ளுகின்றனர். அவ்வாறு அவர்கள் பெற்ற அந்த ஆற்றலின் மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதனை அவர்கள் கூறுகின்றனர். (முதலில் நான் இவற்றை நம்பியதில்லை என்றாலும் அனுபவங்களின் மூலமாக இவற்றில் உண்மை இருப்பதனை அறிந்திருப்பதால் இதனைப் பற்றி இங்கே கூறி இருக்கின்றேன்)

இத்தகைய ஆற்றலினை வழங்கக் கூடியத் தன்மையினை ஆன்மாவானது பெற்று இருக்கின்றது. எப்பொழுது ஒரு மனிதனானவன் தனது ஆன்ம பலத்தினை பெருக்கிக் கொள்ளுகின்றானோ அப்பொழுது அவன் அந்த ஆற்றலினை அறிந்துக் கொள்ளுகின்றான். சரி இருக்கட்டும்...ஆன்மாவின் ஆற்றலினைப் பற்றி சிறிது கண்டாயிற்று...இப்பொழுது அது எவ்வகையில் நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கப் போகின்றது என்பதனையே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவினில் நாம் கிருத்துவத்தில் இருந்து ஒரு நிகழ்வினைக் கண்டு இருந்தோம். தன்னுடைய சீடன் ஒருவன் தன்னை மூன்று முறை மறுப்பான் என்று இயேசு கூறுகின்றார்...அதன்படியே அச்சீடனும் இயேசுவை மூன்று முறை மறுக்கின்றான். இதனையே நாம் விரிவாக சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இப்பொழுது அந்நிகழ்வினையே நாம் மீண்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

இயேசுவின் நிலை:

இயேசுவை ஒரு மனிதனாகவே தான் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. கிருத்துவத்தின்படி இயேசு சாத்தானின்(ஆசையின்) தூண்டுதல்களில் இருந்து விலகி தியானத்தின் மூலம் தன்னுடைய ஆவியின் ஆற்றலினை அறிந்து கொள்ளுகின்றார். எனவே அவரது ஆன்ம நிலை வேறு. தனது ஆன்மாவின் ஆற்றலினை இயேசு அறிந்து இருக்கின்றார். அத்தகைய ஆன்மாவானது தனக்கு கட்டுப்பட்டு இருக்கக் கூடிய உலகினைப் பார்க்கின்றது...அங்கே பல்வேறு ஆன்மாக்களும் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் அவரால், இயேசுவின் ஆன்மாவினால், காண முடிகின்றது. அந்த ஆன்மாக்கள் இருக்கின்ற நிலையினையும் அவரால் உணர முடிகின்றது. சில ஆன்மாக்கள் அவரை கைது செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன...சில ஆன்மாக்களோ அவரை விசாரிக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றன...இவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவின் நிலையினையும் அவரால் அறிந்து உணர்ந்துக் கொள்ள முடிகின்றது. அதன் அடிப்படையிலேயே அவரால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கூற முடிகின்றது.

சீடர்கள் மற்றும் மற்ற மக்களின் நிலை:

இயேசுவின் சீடர்களோ அல்லது மற்ற மக்களோ தங்களது ஆன்ம பலத்தினைப் பற்றி அறியாதே இருந்தார்கள். அவர்களது ஆன்மாவானது எத்தகைய புரிதலினைக் கொண்டிருந்ததோ அதன் அடிப்படையிலேயே தான் அவர்களது செயல்களும் இருந்தன. அதாவது தன்னுடைய ஆற்றலினை அறியாத நிலையிலேயே தான் அவர்களது ஆன்மாவானது இருந்தது.

இவ்வாறு இரண்டு வெவ்வேறு நிலைகளில் ஆன்மாவானது இருப்பதனை நாம் காணுகின்றோம். ஒன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலை...மற்றொன்று தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலை. தன்னுடைய ஆற்றலினை அறிந்துக் கொண்ட நிலையினில் ஒரு ஆன்மாவினால் மற்ற ஆன்மாக்களையும் அறிந்துக் கொண்டு, 'என்ன நடக்கும்' என்று கூற முடிகின்றது. ஆனால் ஆற்றலினை அறிந்துக் கொள்ளாத நிலையிலோ, தன்னுடைய புரிதலினை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஒரு ஆன்மாவானது இருக்கின்றது. நிற்க.

மேலே நாம் கண்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே...இதனை அனைவரும் நம்புவர் என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளுவர் என்றோ நாம் எண்ணுவது முட்டாள் தனமாகும். மேலும் அவ்வாறு அவர்கள் நம்ப வேண்டும் என்பதும் நமது குறிக்கோள் அல்ல. ஏனென்றால் சில மக்கள் சமயங்கள், இறைவன் என்று நாம் பெயர்களை பயன்படுத்தி இருப்பதினால் மட்டுமே நாம் மேலே கூறி இருப்பதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சில மக்களோ நாம் அவ்வாறு பெயர்களைக் கூறி இருப்பதனால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். இவ்விரண்டினையுமே நாம் இங்கே விரும்பவில்லை. நமது இலக்கானது இங்கே என்னவென்றால், இந்த விடையங்களைக் குறித்து மக்களை சிந்திக்க வைப்பது மட்டுமே தான். ஒரு நூலினில் கூறி இருக்கின்றது என்பதினால் மட்டுமே ஒன்றினை நம்புவது என்பது முட்டாள்தனமாகும். மாறாக நம்மால் எதனை உணர முடிகின்றதோ அதனை நம்புவதே தெளிவான ஒரு செயலாக அமையும்.

ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நம்மில் பலரும் உணர்ந்து இருப்போம். இதனை நாம் நூல்களில் இருந்து அறிந்துக் கொள்ளவில்லை...உணர்வதினால் அறிந்து இருக்கின்றோம்...இப்பொழுது இத்தகைய ஒரு உணர்வினையே நாம் மேலே கண்டுள்ள எடுத்துக்காட்டின் மூலமாக விளக்க வேண்டி இருக்கின்றது.

நாம் கடந்த பதிவுகளில் கண்டிருக்கின்றோம்...நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது நம்முடைய ஆன்மாவானது உறங்குவதில்லை என்று...அது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு விழித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் செயலினை நம்மால் வரையறை செய்ய இயலாது...காரணம் ஆன்மாவின் ஆற்றல் அத்தகையது. நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம்முடைய காரண அறிவானது துடிப்பாக இருப்பதில்லை...மாறாக ஆன்மாவின் உணர்வுகளே மேலோங்கி இருக்கின்றது. அந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...அவ்வாறே தன்னுடைய ஆற்றலினையும் சுதந்திரமாக செயல்படுத்துகின்றது.

அதாவது...உடலானது உறங்கிக் கொண்டிருக்கின்றது...இந்த உலகியல் அனுபவங்களின் மூலமாக நாம் பெற்று இருக்கும் காரண அறிவும் துடிப்பாக இல்லை...இந்நிலையில் ஆன்மாவானது சுதந்திரமாக செயல்படுகின்றது...சில நேரங்களில் அது தான் கண்டிருந்த காட்சிகளையும் அனுபவங்களையும் கொண்டு சிந்திக்கின்றது (ஊ.தா - பேய் கனவுகள்...மற்ற கனவுகள்), சில நேரங்களில் உறங்குவதற்கு முன்னர் நாம் எதனைக் குறித்து நம்முடைய அறிவினைக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தோமோ அதனைக் குறித்து அது சிந்திக்கின்றது (உ.தா - ஊர் வரும் பொழுது சரியாக முழிப்பு வருவது...புதிய விடைகள்)...மேலும் சில நேரங்களில் ஆன்மாவானது இந்த உலகினையும் மற்ற ஆன்மாக்களின் நிலையையும் காணுகின்றது...இந்த நிலையினில் தான் நம்முடைய கேள்விக்கு பதில் இருக்கின்றது.

சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவானது, சில நேரங்களில் இந்த உலகினை முழுமையாக காணுகின்றது...நடந்த நிகழ்வுகள்...நடக்கின்ற நிகழ்வுகள்...மற்ற ஆன்மாவின் நிலைகள்...போன்றவற்றை கண்டு...அதன் அடிப்படையில் எந்த நிகழ்வு நிகழும் என்பதனை அது அறிந்துக் கொண்டு அந்த நிகழ்வை அது காணுகின்றது...!!!

அதாவது நம்முடைய/தன்னுடைய நிலையும் ஆன்மாவிற்கு தெரியும்...அதாவது நாம் கொண்டிருக்கும் ஆசைகள், சிந்தனைகள், அறிவு போன்றவற்றை ஆன்மாவானது அறிந்து இருக்கின்றது. அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இவன்/நான் எங்கு செல்வேன் என்பதனையும் எதற்காக செல்வேன் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதனைப் போன்றே தான் சுதந்திரமாக, காரண அறிவின் தாக்கம் இல்லாது, இருக்கின்ற பொழுது அது மற்ற ஆன்மாக்களையும் காணுகின்றது...தன்னுடைய ஆற்றலின் விளைவால் அந்த மற்றொரு ஆன்மாவின் சிந்தனை/தன்மை போன்றவற்றை அது அறிந்துக் கொள்ளுகின்றது. அதன் அடிப்படையில் அந்த ஆன்மாவானது எங்கு செல்லும் என்பதனையும் எதற்காக செல்லும் என்பதனையும் அது அறிந்துக் கொள்ளுகின்றது.

அதாவது...நான் இருக்கின்ற நிலையில் நான் ஒரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரும் என்பதனை என்னுடைய ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது...அதனைப் போன்றே அங்கே வந்து சேரக் கூடிய தன்மையினை உடைய மற்றொரு ஆன்மாவினையும் அது உணர்ந்துக் கொள்ளுகின்றது...இரண்டு ஆன்மாக்களும் சந்திக்கும் என்றும் அவை எதற்காக சந்திக்கும் என்றும் தன்னுடைய ஆற்றலின் மூலமாக அறிந்துக் கொள்ளுகின்ற ஆன்மாவானது...அந்த சந்திப்பினை ஒரு முறை காட்சியாக கண்டு கொள்ளுகின்றது...அது ஆன்மாவின் நினைவில் பதிந்துக் கொள்ளுகின்றது.

அந்த நினைவு தான், அந்த நிகழ்வானது உண்மையில் நிகழும் பொழுது 'இது ஏற்கனவே நடந்து இருக்கே' என்ற எண்ணத்தினை நம்முள் விளைவிக்கின்றது...அதாவது நம்முடைய ஆன்மாவானது அந்த நிகழ்வினை ஏற்கனவே கண்டு விட்டது...அந்த நினைவும் நம்முடைய மனதில் பதிந்து விட்டது...ஆனால் அந்த நிகழ்வு பிற்காலத்தில் தான் நிகழ்கின்றது...ஆகையால் தான் அந்த நிகழ்வினை நாம் முன்னரே கண்டு இருப்பது போன்றும்...அடுத்து நாம் இதனைத் தான் பேசுவோம் என்றோ அல்லது மற்றவர் இதனைத் தான் செய்வார் என்றோ நம்மால் யூகிக்க முடிகின்றது. அவ்வாறு யூகிப்பதும் பெரும்பாலும் சரியாகவே இருக்கவும் செய்கின்றது.

இதனால் தான் ஒரு நிகழ்வானது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் பொழுது...அது ஏற்கனவே நிகழ்ந்திருப்பதனைப் போன்ற ஒரு உணர்வினை நாம் பெறுகின்றோம்...சரி இருக்கட்டும்...!!!

கிட்டத்தட்ட இந்த தொடரின் முடிவிற்கு வந்து விட்டோம்...இது வரை நாம் கண்ட விடயங்களை சுருக்கமாக கண்டு விட்டு இத்தொடரினை முடிவு செய்வோம்...!!!

அடுத்த பதிவில் முடியும்...!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 15 மே, 2016

இயேசுவும் பேதுருவும் சுய சிந்தனையும்...!!!

சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம். அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் வரும் ஒரு நிகழ்வினை நாம் காண்பது நலமாக இருக்கும். அந்த நிகழ்வு இது தான் :

தன்னை யூதர்கள் கைது செய்வார்கள் என்றும் அவ்வாறு அவர்கள் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்றுமே இயேசு கூறுகின்றார். அதனை கேட்ட பேதுரு என்கின்ற சீடன் ஒருவன், மற்றவர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றாலும் அவன் அவரை விட்டு செல்ல மாட்டான் என்றே உறுதி கூறுகின்றான். ஆனால் அதற்கு இயேசுவோ, மறுநாள் விடியற்பொழுதினில் சேவல் கூவுவதற்கு முன்னர் மூன்று முறை அவன் அவரை மறுப்பான் என்றே கூறுகின்றார். அவர் கூறியதனைப் போன்றே 'இயேசுவை தனக்கு தெரியாதென்று' அவன் மூன்று முறை கூறியதாக கிருத்துவத்தில் வருகின்றது. இங்கே தான் நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது.

1) ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கின்றது. அதன்படி தான் பேதுரு 'உங்களை நான் மறுக்க மாட்டேன்' என்று இயேசுவிடம் கூறுகின்றான். அந்நிலையில் எதற்காக இயேசு அவனை நோக்கி 'நீ நாளை மூன்று முறை என்னை மறுப்பாய்' என்று கூற வேண்டும்? அல்லது எப்படி அவரால் அவ்வாறு கூற இயலும்?

அதாவது...நீ நாளை இதனைத் தான் செய்வாய் என்று தெளிவாக கூறி விட்டால், அங்கே அவனுடைய சிந்தனைக்கோ அல்லது சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கோ என்ன வேலை இருக்கின்றது?

கிருத்துவத்தின்படி இயேசு கடவுள். கடவுளே ஒருவனை நோக்கி நீ இதனைத் தான் செய்வாய் என்று கூறி விட்டால், அவனால் அதனை மாற்ற இயலுமா? இயேசுவை மறுக்க கூடாது என்ற எண்ணத்தினை பேதுரு உறுதியாக கொண்டிருந்தாலும், இயேசுவே 'நீ என்னை மறுப்பாய்' என்று கூறிய பின்னர், அவனால் அவரை மறுக்காது இருக்க முடியுமா? அவ்வாறு அவன் மறுக்காது இருந்திருத்தால் இயேசு கூறியது நடக்காது போய் இருக்குமே. அவர் பொய்/தவறாக கூறியதாக போய் இருக்குமே. ஆனால் இறைவன் எதனையும் தவறாக கூற முடியாதே. அந்நிலையில் பேதுருவினால் இயேசுவை மறுக்காமல் இருந்து இருக்க முடியுமா என்ன? அவனுக்கு சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பயன்பட்டு இருக்குமா என்ன? அப்படி இருக்க இயேசு எதற்காக அவ்வாறு அவன் தன்னை மறுப்பான் என்று கூறி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால், நீ இதனைத் தான் எதிர்காலத்தில் செய்வாய் என்று உறுதியாக ஒருவர் கூறும் பொழுது அந்த சுயமாக முடிவெடுக்கும் உரிமை கேள்விக்குள்ளாகின்றது.

'இதனைத் தான் நான் செய்வேன் என்று சொல்லுகின்றீர்கள். ஆனால் நான் அதனை செய்ய விரும்பவில்லை என்றால் என்னால் என்னால் அதனை செய்யாது இருக்க முடியுமா அல்லது என் விருப்பத்திற்கு மாறாக அதனைத் தான் நான் செய்துக் கொண்டிருப்பேனா?...அவ்வாறு என் விருப்பத்திற்கு மாறாக நான் செய்வேன் என்றால் இங்கே என்னுடைய விருப்பத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் திறனுக்கும் பயன் என்ன?' என்கின்ற கேள்வி இயல்பாகவே அந்த சூழலில் எழத் தான் செய்யும். இப்பொழுது இக்கேள்விக்குத் தான் நாம் பதிலினைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு கிருத்துவத்தில் நாம் கண்ட அந்த நிகழ்வினையே மீண்டும் காணலாம்...வேறு கோணத்தில்.

யூதர்கள் தன்னை கைது செய்வார்கள் என்று இயேசு கூறிய பொழுது அவருடைய சீடர்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அத்தகைய ஒரு நிகழ்வானது உடனடியாக நிகழ்வும் என்று அவர்களில் ஒருவன் கூட கற்பனை செய்து இருக்கவில்லை. இயேசுவை கைது செய்ய முடியாது என்றும் அவ்வாறு ஏதேனும் நடந்தாலும் ஏதேனும் அதிசயம் பண்ணி அவர் தப்பி விடுவார் என்றுமே அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய தெளிவினைத் தான் அவர்களது ஆன்மாவானது பெற்று இருந்தது. இயேசு அதனை அறிவார். தன்னுடைய சீடர்களின் புரிதலையும் அவர்களது ஆன்மாவினது நிலையினையும் அவர் நன்கறிந்து இருந்தார். ஆகையால் தான் அவர்கள் தன்னை விட்டு விலகி ஓடுவர் என்று அவரால் கூற முடிந்தது.

இயேசு கைது செய்யப்படுவார் என்பதனை அவரது சீடர்கள் எவரும் நம்பி இருக்கவில்லை. ஆனால் அவர்களது அந்த நம்பிக்கையினை உடைக்கும் வண்ணம் எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ, அப்பொழுது என்ன செய்வது என்பதனை அறியாது அவர்கள் தப்பி ஓடினர். ஏனென்றால் அவர்களது ஆன்மாவின் தெளிவு அந்நிலையில் தான் இருந்தது. சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் அவர்களிடம் அப்பொழுதும் இருக்கத் தான் செய்தது...அவர்களால் ஓடாமல் இருந்து இருக்க முடியும் தான்...ஆனால் அந்த ஆற்றலினை பயன்படுத்தும் தெளிவு அவர்களிடம் அங்கே இல்லாது இருந்தது. இயேசுவை அவர்கள் தெளிவாக புரிந்துக் கொள்ளாமல் தான் இருந்தனர். இயேசு அவர்களுக்கு இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார் என்றே அவர்கள் நம்பி இருந்தனர். அவரை யாரும் கைது செய்ய முடியாது என்றும் அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு மாறாக எப்பொழுது இயேசு கைது செய்யப்பட்டாரோ அப்பொழுது 'என்னயா நடக்குது...கைது செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தோம்...ஆனால் இயேசுவை கைது செய்து விட்டார்களே...இனி நம்மையும் அல்லவா பிடித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது...' என்ற குழப்பத்தின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடினர். அவர்களால் வேறொன்றும் செய்து இருக்க முடியாது...காரணம் அவர்களது புரிதல் அந்நிலையில் தான் இருந்தது.

அதே நிலை தான் பேதுருவுக்கும். இயேசுவை அவனாலும் முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத ஒரு நிலை தான் இருந்தது. அதனால் தான் போர் வீரர்கள் இயேசுவை கைது செய்ய வரும் பொழுது, ஒரு வாளினை எடுத்து ஒரு வீரனின் காதினை வெட்ட அவன் முயன்றான். 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்ற இயேசுவின் போதனையினை அவன் முழுவதுமாக புரிந்து இருக்கவில்லை. அதனை இயேசுவும் அறிவார். மேலும் மற்ற சீடர்களை விட பேதுரு தன்னிடம் அதிகம் நம்பிக்கையினை உடையவனாக இருந்தான் என்பதனையும் அவர் அறிந்து இருந்தார். அதனை மெய்ப்பிப்பது போன்றே தான் பேதுரு மட்டும், இயேசு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது , அவரை பின்தொடர்ந்து செல்லுகின்றான். வேறு சீடர்கள் எவரும் அவ்வாறு செல்லவில்லை. ஏனென்றால் 'இயேசு எப்படியாவது தப்பி விடுவார்' என்ற நம்பிக்கை பேதுருவிடம் அதிகமாக இருந்தது. அவரை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றே அவன் நம்பி இருந்தான். ஆனால் எப்பொழுது யூதர்கள் இயேசுவை குற்றவாளியாக முடிவு செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுது பேதுரு கொண்டிருந்த அந்த மிச்ச நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது. பயம் அவனை ஆட்கொண்டது. எனவே தான் எங்கே நம்மையும் பிடித்து தண்டனைக்கு உள்ளாக்கி விடுவரோ என்ற அச்சத்தினால் அவன் இயேசுவை மறுத்தான்.

இவை அனைத்தையும் இயேசு முன்னமே அறிந்து தான் இருந்தார். தன்னுடைய போதனைகளையும் தன்னையும் தன்னுடைய சீடர்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்பதனை அவர் அறிந்து இருந்தார். அவர்களது ஆன்மாவானது அடைந்திருந்த புரிதலின் அளவினையும் அவர் அறிந்து இருந்தார். அதன் அடிப்படையிலேயே தான் அவர், அவரது சீடர்கள் அவரை விட்டு விலகி ஓடுவர் என்றும் பேதுரு தன்னை மறுத்தளிப்பான் என்றும் கூறினார்.

இயேசுவின் சீடர்களால் அவரை விட்டு ஓடாமலும், பேதுருவினால் இயேசுவை மறுக்காமலும் இருந்திருக்க முடியும் தான். அவர்களுக்கு அந்த உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை இருக்கத் தான் செய்தது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் அவனது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுக்கின்றான். எனவே இயேசுவின் சீடர்களும் அவர்களது புரிதலின் அடிப்படையிலேயே தான் முடிவெடுத்தனர்.

'இயேசுவை யாரும் எதுவும் செய்து விட முடியாது...அவர் தேர்ந்து எடுக்கப்பட்டவர்...அவர் இசுரவேலரின் இராஜ்யத்தினை மீட்டுக் கொடுப்பார்' என்றே அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு மாற்றாக அங்கே காரியங்கள் நிகழ்ந்த பொழுது, இயல்பாக ஒரு மனிதன் என்ன செய்வானோ அதனையே தான் அவர்கள் செய்து இருந்தனர்.அவர்களது புரிதலின் அளவினை அறிந்திருந்த இயேசுவும் அதன் அடிப்படையிலேயே தான் அவர்கள் எதனை செய்வார்கள் என்பதனை முன் கூட்டியே கூற முடிந்தது.

அதாவது நீ இதனைத் தான் செய்வாய் என்று இயேசு எவரையும் சபிக்கவில்லை...மாறாக அவர்களது ஆன்மாவானது இருந்த நிலையினை அடிப்படையாக கொண்டு அவர்கள் எதனை செய்வர் என்பதனை அவர் முன் கூட்டியே கூறினார். சரி இருக்கட்டும்...இப்பொழுது இந்த சம்பவத்தினை வைத்து எப்படி 'சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் சில முறை பெற்று இருப்போம்' என்பதனை விளக்க முடியும் என்றே காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

சனி, 7 மே, 2016

மரணமும்…கனவும்-8!!!

நம்முடைய கனவுகளில் சுதந்திரமாக சிந்தித்துக் கொண்டிருப்பது நம்முடைய ஆன்மா தான் என்றே நாம் சென்ற பதிவினில் கூறி இருக்கின்றோம். இப்பொழுது அதைப் பற்றியே தான் நாம் சற்று விரிவாக பார்க்க வேண்டி இருக்கின்றது...முதலில் இரண்டு நிகழ்வுகளைக் கண்டு விடலாம்...!!!

முதல் நிகழ்வு: நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த தருணம் அது. என்னுடைய விலங்கியல் பாட ஆசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையில் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதனை வழக்கமாக கொண்டிருப்பவர். அப்படி ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கனவினைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

'கடினமான கணக்கு ஒன்றிற்கு விடையினை அறிய முடியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது உறங்கி விட்டேன்...ஆனால் என்னுடைய கனவினில் நான் அப்புத்தகத்தின் பக்கங்களை திருப்பிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்...இறுதியாக நான் விழித்து எழுந்த பொழுது அக்கணக்கிற்கான விடையினை நான் அறிந்து இருந்தேன்...கனவில் அவ்விடையினை நான் கண்டு பிடித்து இருந்தேன்' என்றே அவர் கூறினார்.

"டேய்...சார் கனவிலேயே படிக்கிறாரு டோய்...பெரிய ஆளு தான்" என்று நண்பர்களுடன் அவரை நம்பாது அமைதியாக கிண்டல் அடித்துக் கொண்டு சிரித்தது இன்றும் நினைவில் இருக்கத் தான் செய்கின்றது. ஏனெனில் இத்தகைய விடயங்கள் பொதுவாக நம்ப முடியாதவை தான்...அனுபவங்கள் கிட்டும் வரை!!! ஆனால் இன்று அந்நிகழ்வுகளை எல்லாம் நினைவுக்கூரும் பொழுது அவற்றை நிச்சயம் நம்பவோ/மறுபரிசீலனை பண்ணவோ தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அனுபவங்கள். பலரும் அத்தகைய அனுபவங்களைப் பெற்றுத் தான் இருக்கின்றனர். நீண்ட நாள் தேடிக் கொண்டிருந்த விடைகளை சிலர் கனவுகளில் கண்டு அறிந்து இருக்கின்றனர். இது எப்படி சாத்தியமாகின்றது?

இரண்டாம் நிகழ்வு: இதனை நம்மில் பலரும் கடந்து வந்து இருப்போம். இரவு நேரப் புகை வண்டிப் பயணங்களின் பொழுதோ அல்லது பேருந்துப் பயணங்களின் பொழுதோ, நாம் இறங்க வேண்டிய ஊர் வந்து சேரும் பொழுது அது வரை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நாம் திடுக்கிட்டு எப்படியோ எழுந்து விடுவோம். அது வரை நன்கு உறங்கிக் கொண்டு இருந்திருப்போம். வழியில் வேறு எத்தனை ஊர்கள் வந்தன என்பதனை எல்லாம் நாம் அறிந்து இருக்க மாட்டோம். கனவுகளின் மத்தியில் உலாவிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் எப்பொழுது நாம் இறங்க வேண்டிய ஊர் வருகின்றதோ அப்பொழுது சரியாக நமக்கு விழிப்பு வந்து விடுகின்றது. சில நேரங்களில் இவ்வாறு நமக்கு முழிப்பு வராவிடிலும், பல நேரங்களில் பலருக்கும் கிட்டி இருக்கும் ஒரு அனுபவம் தான் இது.

இப்பொழுது இவற்றுக்கு தான் நாம் விடையினைக் காண வேண்டி இருக்கின்றது. நாம் சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்...உடலானது உறங்கும் பொழுது உடல் உறுப்புக்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன என்று. அவற்றைப் போன்றே தான் ஆன்மாவானதும், என்ன செய்யலாம் என்று எண்ணியவாறே விழித்துக் கொண்டு தான் இருக்கின்றது. சமயங்களின் கூற்றின் படி 'ஐம்புலன்களை அமைச்சராக வைத்து கொண்டு, அவற்றின் கூற்றுகளை அடிப்படையாக கொண்டு அரசாளும் ஒரு அரசனைப் போன்றே தான் ஆன்மாவானது இருக்கின்றது. (சிவஞானபோதம்)' அதாவது ஐம்புலன்களின் மூலமாக பெற்ற அறிவினை வைத்து செயலாற்றும் தன்மையினை ஆன்மாவானது கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு பேய்படம் ஒன்றினை நாம் காணும் பொழுது கண்களின் வழியாக பேயின் உருவத்தினையும் செவியின் வழியாக பேயின் அலறலையும் ஆன்மாவானது அறிந்துக் கொள்ளுகின்றது. அவை பயம் தரும் வண்ணம் இருப்பதனால் ஆன்மாவானது பயப்படுகின்றது.

'பேயானது உண்மையில் என்னைத் துரத்தினால்' என்னவாகும் என்ற சிந்தனையின் விளைவாக, பேயினைப் பற்றியும் தான் இருக்கின்ற இடத்தினைப் பற்றியும் தன்னுடைய மூளையில் பதிந்து இருக்கும் விடயங்களை வைத்து தன்னை அப்பேய் துரத்துவதாக ஆன்மாவானது, உறங்கும் பொழுது ஒரு சிந்தனையை உருவாக்கி கொள்கின்றது. அதன் விளைவாகத் தான் நன்கு பழக்கப்பட்ட இடத்தில் பேய்கள் துரத்துவதனைப் போன்ற கனவுகள் எழுகின்றன.

அதனைப் போன்றே தான் மேலே நாம் கண்ட இரண்டு நிகழ்வுகளும் நிகழ்கின்றன...ஒரு விடயத்தினைக் குறித்து நாம் முழு மனதாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்...அப்படியே நாம் உடல் அசதியினால் உறங்கிப் போய் விடுகின்றோம். ஆனால் நம்முடைய ஆன்மாவோ விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது...அப்படியே அந்த விடயத்தினைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால் தான் நாம் உறங்கி எழுகின்ற பொழுது சில கேள்விகளுக்கு விடைகள் சட்டென்று புலனாகின்றன...சில புதிய விடயங்களும் புலனாகின்றன. ஏனென்றால் உடலானது அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

ஆகையால் தான் பயணத்தின் பொழுது நாம் உறங்கிக் கொண்டிருந்தாலும், 'இந்த ஊரில் நாம் இறங்க வேண்டும்' என்கின்ற சிந்தனையை ஆன்மாவானது கொண்டிருப்பதினால், அந்த ஊரானது வந்து விடுகின்ற பொழுது நாம் நம்மை அறியாமலேயே விழித்து விடுகின்றோம்.

 சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய உடலானது உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஆன்மாவானது உறங்காது விழித்துக் கொண்டே தான் இருக்கின்றது. உறங்குவதற்கு முன்னால் நாம் எந்த வேலையையாவது முழு மனதுடன் செய்து வந்துக் கொண்டிருந்தோமேயானால், நாம் உறங்கியதற்குப் பின்னரும் கூட ஆன்மாவானது அந்த வேலையைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாய் நாம் பயணம் செய்யும் பொழுது சரியான நேரத்தில் சரியான ஊரில் நாம் விழித்து எழும் நிகழ்வினையும், விடை அறியா கேள்விகளுக்கு உறங்கி எழுந்த உடன் விடை அறிந்து விடும் நிகழ்வினையும் எடுத்துக்காட்டாய் கொள்ளலாம்.

மேலும் நாம் உறங்குவதற்கு முன்னர் எந்தொரு குறிப்பான விடயத்தினைப் பற்றியும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், ஆன்மாவானது, நம்முடைய மூலையினில் பதிவாகி இருந்த மற்ற விடயங்களை எடுத்துக் கொண்டு அதனைப் பற்றி சிந்திக்கத் துவங்குகின்றது. அதன் விளைவாகத் தான் சாதாரண கனவுகள் ஏற்படுகின்றன.

மேலும் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி கனவுகளில் இறைவன் ஆன்மாவினை வழிநடத்துவதும் உண்டு. உதாரணத்திற்கு மகாயான பௌத்தத்தின் கூற்றின்படி

'சம்போக காயா நிலையில் புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் தனது தர்மகாயா நிலையுடன் ஒன்றிணைக்கின்றார். கனவுகள் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ சம்போக காயா நிலை புத்தர் ஒவ்வொரு போதிசத்துவரையும் வழிநடத்துகின்றார்.'

இதைப் போன்ற விடயங்கள் அனைத்து சமயங்களிலும் காணப்படுகின்றன. சரி இருக்கட்டும், ஆன்மாவின் சிந்தனைகளே கனவுகள் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது சில சம்பவங்கள் நிகழும் பொழுது, அவை ஏற்கனவே நிகழ்ந்து இருப்பதனைப் போன்ற உணர்வினை நாம் பெற்று இருக்கின்ற நிலையினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...