சமீபமாக சார்லி சாப்ளின் அவர்களின் திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. மிகவும் அருமையானத் திரைப்படங்கள். விவரங்கள் ஏதும் அறியாத சிறு வயதினில் சார்லி சாப்ளின் அவர்களின் படங்களைக் கண்டதற்கும் இப்பொழுது காண்பதற்கும் மாபெரும் வித்தியாசங்கள் இருப்பதை உணர்கின்றேன். சிறு வயதில் எனது கண்களுக்கு வெறும் நகைச்சுவைக் கதாநாயகனாக மட்டுமே தெரிந்த அவர், இன்றோ ஒரு மாபெரும் திறமையினைக் கொண்ட உன்னதக் கலைஞனாகவே புலப்படுகின்றார். அப்படிப்பட்ட ஒரு கலைஞன் நம்மிடம் விட்டுச் சென்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த விடயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இப்பதிவு.
 
 தி கிரேட் டிக்டேடர் : (The Great Dictator)
முதலாம் உலக யுத்தத்தின் இறுதிக் காலத்திற்கும் இரண்டாம் உலக யுத்தம் துவங்கப் பெறும் காலத்திற்கு சற்று முந்தைய காலத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளியில் நிகழ்வதாக அமைந்துள்ள இக்கதையில் இரண்டு முக்கியமான வேடங்களில் சார்லி சாப்ளின் நடித்து உள்ளார்.

ஒன்று செர்மானிய சர்வாதிகாரி - ஹிட்லர்
மற்றொன்று ஹிட்லரின் காலத்தில் செர்மானியில் வாழும் சவரத் தொழில் செய்யும் யூதர்.

இவ்விரண்டு கதாபாத்திரங்களையும் அக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையுமே வைத்தே கதை நகர்கின்றது.

ஹிட்லரின் யூத எதிர்ப்புச் சிந்தனை, நாடு பிடிக்கும் ஆசை, சந்தர்ப்பவாத அரசியல் ஆகியன ஒரு புறமும், யூதர்கள் செர்மானியர்களால் பட்ட கடினங்கள், இழப்புகள் ஆகியன மற்றொரு புறமும் நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவ்விரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக விளக்கப்படுகின்றன.

இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் செர்மனி ஆஸ்திரியா நாட்டின் மீது படை எடுக்கத் துவங்கும் முன் தவறுதலாக யூத சவரக்காரர் என்று எண்ணப்பட்டு ஹிட்லர் கைது செய்யப்படும் நிகழ்வும், ஹிட்லர் என தவறுதலாக அந்த யூத சவரக்காரரும் எண்ணப்படும் நிகழ்வும் நிகழ (இருவரும் உரு அமைப்பில் ஒருவரைப் போலவே இருப்பர்) ஒரு மாபெரும் ஆள் மாறாட்டம் நிகழ்கின்றது. உண்மையான ஹிட்லர் சிறையில் அடைக்கப்படுகின்றார். யூதரான சவரக்காரரோ செர்மானியப் படைக்கு தலைமை தாங்கும் பணியில் அமர்த்தப்படுகின்றார்.

இந்நிலையில் செர்மனி ஆஸ்திரியா மீது படை எடுத்து மாபெரும் வெற்றியும் பெறுகின்றது. அவ்வெற்றி விழாவில் ஹிட்லரின் பேச்சினைக் கேட்க அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். மிக முக்கியமான அந்த காட்சியினையும் அக்காட்சியில் ஹிட்லராக இருந்த அந்த யூத சவரக்காரர் ஆற்றிய உரையையுமே நாம் காண வேண்டி இருக்கின்றது.

முதலில் வெற்றியினைப் பற்றி பேச செர்மனியின் செய்தித் தொடர்பு/பிரச்சாரத் துறை அமைச்சர் வருகின்றார்.

பிரச்சாரத் துறை அமைச்சர் : "தகுதி உடையவர்களுக்கே வெற்றி வந்துச் சேரும். இன்றைக்கு சனநாயகம், சமத்துவம், சுதந்திரம் என்பன மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படும் வார்த்தைகள். அத்தகைய சிந்தனைகளைக் கொண்டு எந்தொரு தேசமும் முன்னேற முடியாது. நம்முடைய முன்னேற்ற நடவடிக்கைகளின் வழியிலே தடையாய் அவை இருக்கின்றன. எனவே அவைகள் நீக்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நாட்டின் தேவைக்கே பூரணப் பணிவுடன் சேவை செய்ய வேண்டும். யூதர்கள் மற்றும் ஏனைய ஆரியர் அல்லாதவர்களிடம் இருந்து குடி உரிமை பறிக்கப் படும். அவர்கள் தாழ்ந்தவர்கள். நாட்டின் எதிரிகளும் ஆவர். எனவே அவர்களை வெறுப்பது அனைத்து உண்மையான ஆரியர்களுக்கும் கடமை ஆகின்றது.

இதோ இன்று இந்த ஆஸ்திரிய நாடு செர்மானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டு விட்டது. இந்த தேசத்தின் மக்கள் நம் மீது நம்முடைய மாபெரும் தலைவரால் சுமத்தப்படும் விதிகளுக்கு கட்டுப்படவேண்டும். இதோ செர்மானியாவின் சர்வாதிகாரி...ஆஸ்திரியாவினை வெற்றிக் கொண்ட வீரர்...உலகத்தின் எதிர்காலச் சக்கரவர்த்தி..!!!

(என்று ஹிட்லர்ஐ பேச அழைக்கின்றார். யூத சவரக்காரரோ (ஹிட்லர் வேடத்தில் உள்ள சாப்ளின் முழிக்கிறார். அப்பொழுது அவருடைய உண்மையான முகத்தினை அறிந்த தளபதி ஒருவர் அவரை பேசச் சொல்கின்றார்.)

தளபதி (சவரக்காரரின் காதில்) : போய் பேசு...!!!
ஹிட்லர் (சவரக்காரர்) : என்னால் முடியாது...!!!
தளபதி : நீ பேசித்தான் ஆக வேண்டும்...அது தான் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

நம்பிக்கை என்ற சொல்லினைக் கேட்ட உடன் மெதுவாக அதனைத் தனக்குள் சொல்லியவாறே கூடி இருக்கும் கூட்டத்தினை நேர்கொண்டு பேச தயாராகிறார் ஹிட்லர்.

ஹிட்லர் (சவரக்காரர்) : என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்...ஆனால் நான் பேரரசனாக ஆக வேண்டும் என்று விரும்பவில்லை. அது என்னுடைய பணியும் அல்ல. நான் யாரையும் ஆள வேண்டும் என்றோ அல்லது வெற்றிக் கொள்ள வேண்டும் என்றோ விரும்பவில்லை. முடியுமானால் நான் பிறருக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன்...அது யூதனாக இருக்கட்டும்..கருப்பராக இருக்கட்டும்...அல்லது வெள்ளையராக இருக்கட்டும். நாம் அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யவே விரும்புகின்றோம். மனிதர்கள் இயல்பிலேயே அப்படித்தான். ஒவ்வொருவரது மகிழ்ச்சியினாலேயே நாம் வாழ விரும்புகின்றோமே அல்லாது மற்றவர்களின் துன்பத்தினால் அல்ல. நாம் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கவோ அல்லது கடிந்துக் கொள்ளவோ விரும்புவதில்லை.

இந்த உலகில் அனைவருக்கும் இடம் இருக்கின்றது. இந்த நல்ல உலகு வளம் வாய்ந்தது...நம்முடைய அனைவரின் தேவையையும் அதனால் பூர்த்திச் செய்ய முடியும். சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் நமது வாழ்க்கையின் வழியினால் இருக்க முடியும்...ஆனால் நாம் நமது வழியினைத் தொலைத்து விட்டோம்.

பேராசை, மனிதனின் ஆன்மாவை நஞ்சாக்கி விட்டது, வெறுப்பினால் இவ்வுலகை அடைத்து விட்டது, நம்மை துயரத்திற்கும் இரத்தம் சிந்துதலுக்கும் ஆளாக்கி விட்டது.

நாம் வேகத்தை உருவாக்கி விட்டோம்...ஆனால் நம்மை நாமே உள்ளே வைத்துப் பூட்டிக் கொண்டோம். அதிகமான உற்பத்தியினைச் செய்யும் செய்யும் இயந்திரங்கள் நம்மை இல்லாமையிலேயே விட்டு விட்டன. நமது அறிவு நம்மை சுயநலவாதியாக மாற்றி விட்டது. நமது புத்திக்கூர்மை, அன்பில்லாதவனாகவும் கல்நெஞ்சக்காரனுமாகவே நம்மை மாற்றி விட்டது. நாம் நிறைய சிந்திக்கின்றோம்...ஆனால் மிகக் குறைவாகவே உணருகின்றோம்.

இயந்திரங்களை விட மனிதத்தன்மையே நமக்கு தேவை. புத்திக்கூர்மையை விட அன்பும் எளிமையுமே நமக்குத் தேவை. இக்குணங்கள் இல்லாமல் வாழ்க்கை என்பது வன்முறையான ஒன்றாக மாறி விடும்...அனைத்தும் தொலைந்து விடும்...

வானூர்தியும், வானொலியும் நம்மை மிக அருகில் கொண்டு வந்துள்ளன...இத்தகைய கண்டுபிடிப்புகளின் இயல்புகளே மனிதனுள் இருக்கும் நன்மையினை நோக்கி குரல் எழுப்புகின்றன...உலகளாவிய சகோதரத்துவத்தினை நோக்கி குரல் எழுப்புகின்றன...நம் அனைவருடைய ஒற்றுமைக்காகவும் அவை குரல்கள் எழுப்புகின்றன.

இப்பொழுதும் கூட என்னுடைய குரல் இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துக் கொண்டிருக்கின்றது, துயரத்திலும் துன்பத்திலும் உழன்றுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என்று, அப்பாவிகளை தண்டிக்கவும் சிறையில் அடைக்கவும் மனிதர்களை அனுமதிக்கும் ஒரு இயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்துக் கொண்டிருக்கின்றது.

என்னுடைய பேச்சினைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் சொல்லுகின்றேன்...கவலைக் கொள்ளாதீர்கள். நம் மீது இப்பொழுது இருக்கும் துயரம் நம்மைக் கடந்துச் செல்லும் பிறரின் பேராசையே அன்றி வேறல்ல...மனித குலம் முன்னேறிக் கொண்டிருக்கும் பாதையினைக் கண்டு அஞ்சும் சில மனிதர்களின் கடினத்தன்மையே அன்றி வேறல்ல. மனிதர்களின் வெறுப்பு கடந்து சென்று விடும்...சர்வாதிகாரிகள் மரணமடைவர்...எந்த மக்களிடம் இருந்து அவர்களால் உரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவ்வுரிமைகள் மீண்டும் மக்களிடத்தே சென்று சேரும். மனிதர்கள் மரணித்துக் கொண்டு இருக்கும் வரை சுதந்திரம் அழிவதில்லை.

வீரர்களே...!!! உங்களை நீங்களே அயோக்கியர்களிடம் ஒப்புக் கொடுக்காதீர்கள்...எவன் உங்களை வெறுக்கின்றானோ...எவன் உங்களை அடிமைப்படுத்துகின்றானோ...உங்களின் வாழ்வையே படைப் பிரிவுகளில் அடைக்கின்றானோ...நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் எதனை சிந்திக்க வேண்டும் என்றும் எதனை உணர வேண்டும் என்றும் முடிவு செய்கின்றானோ...உங்களை பயிற்றுவித்து, உணவினைக் கட்டுப்படுத்தி...மாடுகளைப் போல் நடத்தி...உங்களை ஆயுதங்களுக்கு தீனியாக எவன் எண்ணுகின்றானோ அவனிடம் உங்களை நீங்களே ஒப்புக் கொடுக்காதீர்கள்.

இயந்திர மனம் மற்றும் இயந்திர இதயத்தினைக் கொண்டு இயந்திர மனிதனாகவே இருக்கும் அத்தகைய செயற்கை மனிதர்களுக்கு உங்களை நீங்களே ஒப்புக் கொடுக்காதீர்கள். நீங்கள் இயந்திரங்கள் அல்ல...நீங்கள் ஆட்டு மந்தைகளும் அல்ல...நீங்கள் மனிதர்கள்...உங்களுடைய இதயத்தில் மனிதத்தில் மேல் ஒரு காதலை நீங்கள் கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எவரையும் வெறுப்பதில்லை...அன்பில்லாதவர்களே வெறுக்கின்றார்கள்...அன்பில்லாதவர்களும் செயற்கையான மனிதர்களுமே வெறுக்கின்றனர். வீரர்களே...!!! அடிமைத்தனத்திற்காக போராடாதீர்கள்...சுதந்திரதிற்காகப் போராடுங்கள்.

தூய லூக்காவின் 17 வது அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது..."கடவுளுடைய இராஜ்யம் மனிதனுள் உள்ளது" என்று. ஒரு மனிதனுக்குள் மட்டும் அல்ல...ஒரு குழுவினைச் சார்ந்த மனிதர்களுக்கும் மட்டும் அல்ல...ஆனால் அனைத்து மனிதர்களுக்குள்ளும் 'கடவுளுடைய இராஜ்யம்' உள்ளது. உங்களிடமும் உள்ளது. நீங்கள், மக்களாகிய உங்களிடம் ஆற்றல் இருக்கின்றது...இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல். மகிழ்ச்சியினை உருவாக்கும் ஆற்றல். நீங்கள், மக்களாகிய நீங்கள், இந்த வாழ்வினை சுதந்திரமானதாகவும் அழகானதாகவும், இந்த வாழ்க்கையை ஒரு அற்புதமான சாகசமாக ஆக்கும் ஆற்றலைப் பெற்று இருக்கின்றீர்கள்.

எனவே, சனநாயகத்தின் பெயரால்...அந்த ஆற்றலை நாம் பயன்படுத்துவோம்...நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். ஒரு புதிய உலகிற்காக, மனிதர்களுக்கு வேலைகளையும், இளைய தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலத்தையும், முதியோர்களுக்கு பாதுகாப்பும் தரக்கூடிய ஒரு நல்ல உலகிற்காக நாம் போராடுவோம். இவற்றை தருவோம் என்று உறுதிமொழிகளைத் தந்துவிட்டே அயோக்கியர்கள் அதிகாரத்தினைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பொய் கூறுகின்றனர். அவர்களது உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை...நிறைவேற்றவும் மாட்டார்கள்.

சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக்கிக் கொள்கின்றனர் ஆனால் மக்களை அடிமைப்படுத்துகின்றனர். இப்பொழுது அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் போராடுவோம். இந்த உலகத்தை விடுவிப்பதற்காக நாம் போராடுவோம்...தேசிய எல்லைக்கோடுகளை நீக்குவதற்காக, பேராசை, வெறுப்பு, பொறுமை இல்லாதத்தன்மை ஆகியவற்றை நீக்குவதற்காக நாம் போராடுவோம். அர்த்தமுள்ள ஒரு உலகிற்காக, எந்த உலகில் அறிவியலும் முன்னேற்றமும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்குமா அந்த உலகிற்காக நாம் போராடுவோம். வீரர்களே..!!! சனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்றுபடுவோம்...!!!

(வீரர்களின் பலத்த கைதட்டலின் நடுவே தனது உரையினை முடித்துக் கொள்கின்றார்). நிற்க!!!

சார்லி சாப்ளினின் மிகவும் பிரசித்திப் பெற்றப் பேச்சினையே மேலே தந்துள்ளேன். மனித குலத்திற்கு அதனில் முக்கியமான பல விடயங்கள் அடங்கி உள்ளன. அவற்றை அறிவதும்...சிந்திப்பதும்...செயல்படுவதும் ஆகிய செயல்களே மனித குலத்தினை அன்பின் அடிப்படையிலான சமூகமாக அமையச் செய்யும்.

அன்பின் அடிப்படையிலானதொரு சமூகத்தினை அமைத்துச் செல்ல வேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது. நன்றி

பி.கு:

இந்த உரையின் ஆங்கில மூலத்தினைக் காண இந்த இணைப்பினை சொடுக்கவும்

சாப்ளின் உரை

இந்தக் காட்சியினைக் காண இந்த இணைப்பினைச் சொடுக்கவும்

காட்சி

3 கருத்துகள்:

இரண்டாம் உலக போரின் போது அந்த படம் வெளிவந்த சூழ்நிலையை அவதாணித்தால் சார்லி சாப்ளினின் சமூக கோபமும், தைரியமும் புரியும்.

தி கிரேட் டிக்டேட்டர் மற்றும் மாடர்ன் டைம்ஸின் சில, இல்லையில்லை பல காட்சிகள் இன்றைய ஜனநாயக அரசியல், சமூக சூழ்நிலைக்கும் பொருந்துவது முரன்நகைதான் !!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...

http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

நேரம் கிடைப்பின் படித்துவிட்டு உங்களின் கருத்தினை பதியுங்கள்.நன்றி

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி அண்ணா :)!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு