வட இந்தியாவினில் இருந்த இந்திய அரசனை சூழ்ச்சியால் வீழ்த்தி அங்கு ஆரிய வர்த்தம் என்று தங்களின் அரசினை அமைத்த ஆரியர்கள் முழு இந்தியாவினையும் கைப்பற்றிக் கொள்ள உதவும் வண்ணம் அன்று இந்தியாவினில் எழுந்திருந்த பக்தி இயக்கத்தினை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர் என்று நாம் கண்டு வருகின்றோம். இப்பொழுது இதனைத் தொடர்ந்து நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில முக்கியமான விடயங்களைக் கண்டு விடுவது நன்றாக இருக்கும்.

௧) சைவமும் வைணவமும் தமிழகத்திலே தோன்றிய சமயங்கள்.

௨) சைவக் கோவில்களின் தலைமையிடம் சிதம்பரம். வைணவக் கோவில்களின் தலைமையிடம் திருவரங்கம். இவைகள் இரண்டுமே தமிழகத்திலேயே தான் இருக்கின்றன.

௩) சைவம் வளர்த்த நாயன்மார்கள் அறுபத்தி மூவரும் தமிழ்நாட்டையேச் சார்ந்தவர்கள். அவ்வாறே வைணவம் வளர்த்த ஆழ்வார்களும் தமிழ் நாட்டையேச் சார்ந்தவர்கள்.

௪) ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!! ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

௫) இன்று வேதங்கள் என்று சிலர் கொண்டாடும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை தொகுத்தவர்கள் தமிழர்களே ஆவர்.

௬) உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், ஆகமங்கள், மகாபாரதம், இராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்கள், இதிகாசங்கள் போன்றவைகளை உருவாக்கியோர் அனைவரும் தமிழர்கள்.

௭) தமிழர்கள் உருவாக்கிய புதிய மொழியான சமசுகிருதத்திலேயே அந்நூல்களை அவர்கள் படைக்கின்றனர்.

௮) மேலும் சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!! நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின்படி அனைத்து ஆன்மீக நூல்களும் தமிழர்களாலேயே இயற்றப்பட்டு உள்ளன. ஆரியர்கள் எழுதிய நூல்கள் என்று எதுவுமே இல்லை. அனைத்தும் தமிழர்கள் எழுதியவை.

அட என்னங்க அனைத்தும் தமிழர்கள் எழுதியது என்றால் ஆரியர்கள் ஒன்றுமே செய்யவில்லையா என்ற எண்ணம் இங்கே வரலாம்...அவர்களும் அவர்கள் பங்குக்கு செய்து தான் இருக்கின்றனர்.

மேலே நாம் கண்ட நூல்களில் இடைச் செருகல்கள் பல செய்து உள்ளனர் (தொடக்கத்தில் இருந்த இராமாயணத்தை விட இப்பொழுது இருக்கும் இராமாயணம் அதிக மடங்கு பெரிதாக இருக்கின்றது...காரணம் பல இடைச் செருகல்கள். இதே நிலை தான் மகா பாரதத்திற்கும்)... அந்நூல்களுக்கு தவறான உரை எழுதி அர்த்தத்தினை மாற்ற முயன்று உள்ளனர்.

அவ்வாறு மேலே தமிழர்களால் உருவாக்கப்பட்ட நூல்களுக்கு தவறான உரை எழுதியவர்களுள் ஒருவர் தான் ஆதி சங்கரர். அவ்வாறு தவறான உரை எழுதி அவர் கண்டு வைத்த தத்துவம் தான் அத்வைதம். இதனைப் பற்றி நாம் விரிவாக நாம் இங்கே காணத் தேவை இல்லை. ஆனால் ஆதி சங்கரரைப் பற்றி நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

காரணம் சென்றப் பிறவியில் ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒருவன் இப்பிறவியில் பிராமணனாகவோ அல்லது சூத்திரனாகவோ பிறக்கின்றான் என்று சமண பௌத்தச் சமயங்கள் கூறிய பிறவிச் சுழற்சிக் கொள்கையோடு வருணப் பாகுபாட்டையும் கொண்டு வந்து இணைத்து இன்று நம் மண்ணில் இருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற நிலைக்கு வித்திட்ட பெருமை ஆதி சங்கரரையே சாரும். அக்கொள்கையைப் பரப்பவே சங்கர மடங்கள் என்னும் நிறுவனங்களையும் அவர் நிறுவுகின்றார்.

இன்று வரை அம்மடங்கள் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகாணும் கொள்கையை சிறப்பாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றன. காரணம் பிறப்பால் ஏற்றத் தாழ்வு என்றக் கொள்கையில் பிராமணர்கள் அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவதற்கு ஒன்றும் செய்யாமல் வெறுமனவே பிறந்தால் மட்டும் போதுமே. அதனால் தான் இன்று வரை பிராமணர்கள் சங்கர மடத்தினை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். சரி அது வேறு கதை. இப்போதைக்கு நமக்கு அது தேவை இல்லை.

நமக்கு இப்போதைக்கு வேண்டியது எல்லாம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்றக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆதி சங்கரரே ஆவார். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

ஒரு ஆங்கிலேயன் இருக்கின்றான்...அவனிடம் போய் நீ தாழ்த்தப்பட்டவன்...எனக்கு அடிமையாக நீ வேலை செய்ய வேண்டும் என்றுக் கூறினால் அவன் என்ன செய்வான்?

நம்மளை வெளுத்து வாங்கி விடுவான். சரி தானே. ஒருவனும் தான் மற்றவனுக்குத் தாழ்ந்தவன் என்று ஒரு காலமும் கருத மாட்டான் தானே. அப்படி இருக்க மாபெரும் வரலாற்றினையும் அறிவுக் கூர்மையையும் கொண்டிருந்த தமிழர்களிடம் ஒருவன் வந்து "தம்பி...நீ தாழ்ந்தவன்" என்றுக் கூறினான் என்றால் அவன் ஏற்றுக் கொண்டிருப்பானா அல்லது எதிர்த்து இருப்பானா?

எதிர்த்து தானே இருப்பான். சரி இப்பொழுது இன்னொரு சூழல்.

ஹிட்லரின் படை வென்று விட்டது. சர்வாதிகாரியாக ஹிட்லர் இருக்கின்றான். அப்பொழுது ஹிட்லரின் படையிடம் தோற்ற ஒரு நபரை "தம்பி...நீ பிறப்பால் தாழ்த்தப்பட்டவன்" என்று கூறினால் அவன் ஏற்றுக் கொள்வானா மாட்டானா? ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவன் உயிர் போய் விடும். அந்நிலையில் அவன் அவன் தாழ்ந்தவன் என்று ஏற்றுக் கொள்ளத் தானே செய்வான். சரி தானே.

இந்நிலையில் தான் நாம் பிறப்பால் ஏற்றத் தாழ்வுக் கொள்கை இந்தியாவில் பரவிய விதத்தைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது. பொது மக்களுள் பிரிவுகளை உண்டாக்க வேண்டும் என்றால் அரசனின் ஒத்துழைப்பு வேண்டும். அரசனின் ஒத்துழைப்பினைப் பெற என்ன வேண்டும்? அது ஒவ்வொரு அரசனைப் பொருத்தும் மாறும்... சிலருக்குப் பொன், சிலருக்கு பெண்...சிலருக்கு அதிகாரம்...இவைகளை ஆரியர்கள் நன்றாக உணர்ந்து இருந்தனர் என்பதனை நமக்கு வரலாறு காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.

இருந்தும் அனைத்து அரசர்களும் அவ்விதிகளுக்குள் அடைப்பட்டு விட மாட்டார்கள் தானே. சிலருக்கு வீரமும் மானமும் மட்டுமே கண்ணாக இருப்பதும் உண்டே. அவர்களை என்ன செய்ய முடியும்?

சூழ்ச்சியால் கொலை செய்ய முடியும்.

தமிழகத்தின் ஆதித்த கரிகாலனின் மரணம் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றது. சோழர்கள் மீண்டும் தலை எடுத்து வரும் காலம் நிகழ்கின்றது அக்கொலை. செய்தவர்கள் பிராமணர்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (இதனைப் பற்றி விரிவாக வேறொரு பதிவில் காண்போம்)

ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இருந்தே நாம்இப்பொழுது தமிழர்களின் நிலையைக் குறித்து காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  வியாசர் என்பவர் தனி மனிதர் அல்ல. வியாசர் என்னும் சொல் தொகுப்பவர் என்றே பொருள் தருவது. அதாவது வேத வியாசர் என்றால் வேதங்களைத் தொகுப்பவர் என்றே பொருள் வரும். அது ஒரு காரணிப் பெயர். எனவே வேதங்களையும் மற்ற நூல்களையும் தொகுத்தவர்கள் அனைவரையும் வியாசர் என்றப் பொதுப் பெயரால் அழைத்தார்கள்.

4) சமசுக்கிருதம் என்ற மொழி தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி. சமசுகிருதம் என்றால் செம்மையாகச் செய்யப் பட்டது என்றே பொருள் தரும். இதனைப் பற்றி மேலும் அறிய (சமசுகிருதம் என்று ஒரு மொழி) என்ற பதிவினைப் பார்க்கவும்.

1 கருத்துகள்:

தோழரே ...
தங்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது ....

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு