கி.பி ஏழாம் நூற்றாண்டு இந்தியாவின் ஒரு பகுதியை ஆரியர்கள் கைப்பற்றி விட்டனர் என்றும் அப்படிக் கைப்பற்றப்பட்ட பகுதியினைத் தான் ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் பெயரிட்டு அழைத்தனர் என்றும் நாம் சென்றப் பதிவில் கண்டோம். மேலும் அவ்வாறு கைப்பற்றப் பட்ட இடத்தில் இருந்த மக்களுக்கு இயற்றப்பட்ட சட்ட நூல் தான் மனு தர்மம் என்பதனையும் நாம் கண்டோம்.

இப்பொழுது நாம் இங்கே காண வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் எண்ணிக்கை...மக்கள் தொகை எண்ணிக்கை!!! என்ன தான் ஆரியர்கள் சூழ்ச்சியின் மூலமாக ஆட்சியினைப் பிடித்து இருந்தாலும் இந்திய மக்களோடு ஒப்பிடும் பொழுது அவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் (இன்றளவிலும் கூட அவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தான் இருக்கின்றனர்). இந்நிலையில் வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்தால் ஆரியர்களால் நீண்ட காலம் ஆட்சியினைப் புரிய முடியாது. இதனை அவர்கள் நன்றாக புரிந்து வைத்துத் தான் இருந்தனர். அவர்கள் வேற்றவர்கள் என்று இந்திய மக்கள் உணர்ந்து, இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டால் நீண்ட நாட்களுக்கு ஆரியர்களால் அங்கே ஆதிக்கம் செலுத்த முடியாது.

அந்நிலையில் இந்திய மக்களை இவர்களை அவர்களுள் ஒருவராகக் கருத வைக்கவும் வேண்டும்...ஆனால் அதே சமயம் அவர்களின் ஆதிக்கமும் குறையக் கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றே ஆரியர்கள் சிந்திக்கலாயினர்?

மக்களை ஏமாற்ற என்ன செய்ய வேண்டும்...சூழ்ச்சி செய்ய வேண்டும். சூழ்ச்சி செய்வதற்கு ஆரியர்களுக்கு சொல்லித் தரவா வேண்டும்...இந்திய மக்களுள் கலக்கவும் அம்மக்களைப் பிரிக்கவும் சூழ்ச்சியினை செய்யத் துவங்குகின்றனர்.

அதனை அவர்கள் மிகவும் சிறப்பாக செய்ய காலமும் வசமாகத் தான் இருக்கின்றது.  ஏன் என்றால் அன்றையக் காலத்தில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தினைக் கண்டு கொண்டு இருந்தது. அது வரை இந்திய மண்ணில் செல்வாக்குப் பெற்று இருந்த சமண பௌத்த சமயங்களுக்கு மாறாக புதிய இறைக் கொள்கை வளர்ந்துக் கொண்டு இருந்தது. ஆம் சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தின் விளைவாக இந்திய மண்ணில் வளர்ந்துக் கொண்டிருந்த காலம் தான் அது.

ஆரியர்கள் அம்மாற்றத்தினைக் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், ஆரியர்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் இந்தியாவின் மீது படை எடுத்து வந்து வந்தவர்கள் அல்ல என்றும் பல்வேறுக் காலங்களில் படை எடுத்து வந்து இந்தியாவில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்து பின்னர் ஒரு காலத்தில் ஒன்றிணைந்த அன்னியர்களே ஆரியர்கள் ஆவர் என்று.

அவர்கள் இந்திய மண்ணில் பௌத்த சமயத்தைக் கண்டு இருக்கின்றனர். சமணத்தைக் கண்டு இருக்கின்றனர். அதனை எதிர்த்தும் இருக்கின்றனர். காரணம் அச் சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். விலங்குகளைப் பலி இடாதீர்கள் என்பதே அவற்றின் போதனை. ஆனால் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையோ பலியினையும் தீ வழிப்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டது. முற்றிலும் மாறுப்பட்ட கொள்கைகள் தானே. அப்படி என்றால் அங்கே மோதல்கள் வந்து இருக்கத் தானே செய்து இருக்க வேண்டும். அது தான் நிகழ்ந்து இருந்தது வரலாற்றில்.

சுங்க அரசினை நிறுவிய பெர்சிய வம்சாவளியினைச் சார்ந்த புஷ்ய மித்திர சுங்கனின் காலத்தில் பௌத்தர்கள் வேட்டையாடப்பட்டனர் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அக்காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. ஆனால் காலத்தில் சுங்கனின் அரசு வீழ்ந்தது ஆனால் அவனால் ஒடுக்கப்பட்ட பௌத்த சமயமோ இந்தியா முழுவதும் பரவத் தான் செய்தது. அதனை அவர்களால் தடுக்க முடியவில்லை.சரி இருக்கட்டும் நாம் இப்பொழுது மீண்டும் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கே வர வேண்டி இருக்கின்றது.

பக்தி இயக்கத்தின் வளர்ச்சியை ஆரியர்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றனர். மக்கள் பெரும்பான்மையாக அவ்வியக்கத்தில் ஈடுபாடு காட்டுவதனையும் காணுகின்றனர்.

"மக்களின் செல்வாக்கு இருக்கின்றது...மேலும் பௌத்த சமண சமயங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு வேறு இருக்கின்றது...நன்று...மிக நன்று...இந்த இயக்கத்தினை மட்டும் நம்முடைய நோக்கிற்கு கைப்படுத்திக் கொண்டு விட்டோம் என்றால் நம்முடைய செல்வாக்கினை பலமாக வலுப்படுத்திக் கொள்ள முடியும்" என்று எண்ணியே சைவ வைணவ சமயத்தின் மீது அவர்களின் பார்வையினைப் படர விடுகின்றனர். சைவ வைணவ சமயங்களுள் தங்களின் கருத்துக்களை நுழைக்க சூழ்ச்சியினை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

சைவ வைணவ போர்வையில் அவர்களின் வேள்விக் கோட்பாடுகளை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அதனை தமிழகத்தில் தொடங்கி வைப்பவர் வேறு யாருமல்ல... திருஞானசம்பந்தர் தான்.

என்ன அதிர்ச்சியாக இருக்கின்றதா? நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். காரணம் திருஞானசம்பந்தரின் மேல் இன்று நம் நாட்டினில் கட்டப்பட்டு உள்ள பிம்பம் அத்தகையது. எனவே சைவத்தை திசைத் திருப்பியது திருஞானசம்பந்தர் என்றால் நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் திருஞானசம்பந்தரை நாம் மட்டுமே குறைக் கூற வில்லை. திருநாவுக்கரசரும் கூறி இருக்கின்றார்.

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"


என்று ஞானசம்பந்தர் குற்றங்கள் புரிகின்றார் என்றே திருநாவுக்கரசர் கூறி இருக்கின்றார். அது ஏன் என்றும் நாம் சிந்திக்கத் தானே வேண்டி இருக்கின்றது. மேலும் வேள்விகளுக்கு துளியும் தொடர்பில்லாத சைவ சமயத்தினுள் வைதீக கருத்துக்களைப் பரப்பியவரும் சம்பந்தர் தாம்.


"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."


மேலே உள்ள வரிகள் மூலம் சமணர்களை சம்பந்தர் வெறுக்கின்றார் என்றும், அவர்கள் வேள்வியினை மதிப்பதில்லை என்ற காரணத்திற்காகவே அவர்களை வெறுக்கின்றார் என்பதும் புலனாகின்றது அல்லவா.

மேலும் பெரிய புராணத்தினைத் தொகுத்த சேக்கிழார் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கின்றார்...

" இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
  வந்த வைதீக மாமணி " என்று.

அதாவது திரு ஞானசம்பந்தர் சைவ சமயத்தை அல்ல வைதீக சமயத்தினையே வளர்த்தார் என்றே தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அரசனைக் கைக்குள் வைத்துக் கொண்டு அன்பைப் போதித்த சைவ சமயத்தின் வாயிலாக 8000 சமணர்களையும் கொலை செய்தார் திருஞான சம்பந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (அவ்வாறு சம்பந்தர் கொலை செய்த தமிழ் சமணர்களின் உறவினர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சம்பந்தரை தீ வைத்துக் கொன்றனர் என்றக் கூற்றும் இருக்கின்றது)

மேலும் சமயக் குரவர்களுள் தமிழரான திருநாவுக்கரசரைப் பின் தள்ளி விட்டு திருஞானசம்பந்தருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருப்பதும், வேதாரணியத்தில் திருநாவுக்கரசர் பாடி திறக்காத கதவு திருஞானசம்பந்தர் பாடி திறந்தது என்று திருநாவுக்கரசரை தாழ்த்தி திருஞானசம்பந்தரை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பன்னிரு திருமுறைகளிலும் திருஞானசம்பந்தரே முதன்மைப் படுத்தப்பட்டு இருப்பதும் தற்செயலான விடயம் அல்ல. காரணம் அவற்றைத் தொகுத்ததும் நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு ஆரியர் தாம்.நிற்க. (தொடர்புடைய பதிவுகள்: உலகின் வரலாறு – 4, உலகின் வரலாறு – 5)

சுருக்கமாகக் காண வேண்டும் என்றால் சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத வைதீகக் கருத்துக்கள் பக்திஇயக்கக் காலத்தில் அச் சமயங்களுடன் மெதுவாக இணைக்கப்படுகின்றன. ஆரியர்கள் மெதுவாக தமிழர்களின் சமயங்களின் மேல் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

ஒருவன் ஒரு அரசியல் கட்சியின் தலைமையில் அமர வேண்டும் என்று எண்ணினால் என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு போட்டியாக இருக்கும் நபர்களை முதலில் ஒதுக்க வேண்டும்...பின்னர் கட்சியின் தலைமையில் இருக்கும் நபர்களை ஏமாற்றி அவ்விடத்தை அவன் பிடிக்க வேண்டும். பின்னர் பிடித்த அவ்விடத்தை தக்க வைத்துக் கொள்ள அக்கட்சியின் கொள்கைகளை அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்ற வேண்டும். சரி தானே. இயல்பான நிலை அப்படி இருக்க ஒரு ஆன்மீக இயக்கத்தினை பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களை ஒதுக்க வேண்டும்...அச் சமயக் கருத்துக்களை தமக்கு ஏற்றார்ப் போல் மாற்றிக் கொண்டு அச் சமயத்தின் தலைமையைப் பிடிக்க வேண்டும். சரி தானே. இங்கே அது தான் நடந்து இருக்கின்றது.

ஆன்மீகத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர். பலர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இறுதி நாயன்மாரான நந்தனாரும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் சரி கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. சித்தர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. வள்ளலாரும் கொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

பல நாயன்மார்கள்/ஆழ்வார்கள் தாழ்த்தப்பட்ட இனங்களில் இருந்து வந்து இருக்கின்றனர் என்றே இன்றுக் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வில்லை (அன்று தான் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது பிறப்பின் அடிப்படையில் வேறு பிரிவுகளோ நம்மிடையே இல்லவே இல்லவே)... பிற்காலத்திலேயே தான் சதிகள் காரணமாக அவர்களின் இனம் தாழ்த்தப்பட்ட இனமாக மாற்றப்பட்டது. காரணம்...சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் மேல் அவர்களின் செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அச்சமயத்திற்கு உண்மையிலேயே உரிமையானவர்களை தாழ்த்தினால் தானே முடியும். அது தான் இங்கே நடந்து இருக்கின்றது. சரி அவற்றைப் பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது ஆரியர்களின் வைதீகச் சமயம்தமிழர்களின் சைவ வைணவ சமயங்களினுள்மெதுவாகநுழைய ஆரம்பித்து இருக்கின்ற காலக் கட்டத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டி இருக்கின்றது.

காரணம் இன்றைய இந்தியாவில் திகழும் அனைத்து சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணியாக கருதப்படுகின்ற ஒரு நபர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறு யாரும் இல்லை...இன்று சங்கர மடங்களால் கொண்டாடப்படும் ஆதி சங்கரர் தான் அது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) "குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது." என்றே மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கூறுகின்றார்.

1 கருத்துகள்:

இந்த பதிவு ஆச்சரியமாயமாய் இருக்கிறது

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு