இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்ற நிலை தான் உள்ளது. சேவை என்ற நிலையில் இருந்து தாழ்ந்து வணிகம் என்ற நிலைக்கு மருத்துவம் சென்று நாட்கள் பலவாகி விட்டன. மருத்துவ செலவுகள், மருந்துகளின் விலைகள் மற்றும் நமது அரசின் தனியார் மருத்துவமனைகளை ஆதரிக்கும் மனப்பாங்கு போன்ற விடயங்களால் இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே அது பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலையினைத் தான் நாம் இங்கே கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

மருத்துவ வசதி பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவத்தினை வழங்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமைகளும் ஒன்று. அவ்வாறு இருக்க ஒரு அரசு அதன் கடமையை புறக்கணித்து விட்டு மருத்துவத்தினை தனியார் மயமாக்குவது என்பது எங்ஙனம் நியாயமாகும்? தனியாரிடம் மருத்துவம் இருப்பது தான் வளர்ச்சியா? போன்ற பல கேள்விகளை நாம் எழுப்பலாம். இக்கேள்விகளுக்கு பொது விடையாக நமக்குக் கிட்டுவது,

"அது எப்படிங்க அரசால எல்லாரையும் கவனிக்க முடியும். அரசால் தரமான மருத்துவ சேவையினை தர இயலாதக் காரணத்தினால் தனியாரிடம் அச்சேவைகளைக் கொடுக்கின்றது. மேலும் இலவசமாகவா மருத்துவத்தினைப் பெற முடியும்...அவ்வாறு இலவசமாகத் தந்தனர் என்றால் அம்மருத்துவர்கள் எங்கே செல்வர்...மேலும் ஒவ்வொரு மருத்துவ சேவைக்கும் ஒவ்வொரு வகையான கட்டணங்கள் இருப்பது சரியான ஒன்று தானே...அவ்வாறு இருக்கையில் நாம் இதனை எவ்வாறுக் குறை கூற முடியும்" என்பதே ஆகும்.

அதாவது சுருக்கமாக காண வேண்டும் என்றால், ஒன்று...மருத்துவத்தினை அரசே அனைவருக்கும் தருவது என்பது இயலாதக் காரியம்...இரண்டு...இலவசமாக மருத்துவ வசதியினை மக்கள் பெறுவது என்பதும் முடியாத ஒரு காரியமே. இதுவே சிலரின் கூற்று.

ஆனால் இவர்கள் எதனை முடியாதக் காரியம் என்றுக் கூறுகின்றனரோ அக்காரியங்களை பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக செய்துக் கொண்டு தான் வருகின்றன. கனடா, பிரான்சு, இங்கிலாந்து, கியூபா...போன்ற நாடுகளில் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்கும் ஒரு சேவையே ஆகும். அந்நாடுகள் அவர்களின் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாகத் தான் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்பொழுது நாம் அவற்றைப் பற்றி விவரிக்கும் ஒரு ஆவணப் படத்தைத் தான் காணப் போகின்றோம்.

சிக்கோ: (Sicko)

அமெரிக்காவில் மரம் அறுக்கும் தொழிலைச் செய்து கொண்டு வரும் நபர் ஒருவருக்கு ஒரு சிறிய விபத்தில் மோதிர விரலும் நடு விரலும் வெட்டுப்பட்டுப் போய் விடுகின்றன. எந்த ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் இல்லாத அவர் மருத்துவமனையினை அணுகுகின்றார்...வெட்டுப்பட்ட அவரது இரு விரல்களைத் தூக்கிக் கொண்டு.

மருத்துவமனையில் அவரைக் காணுகின்றனர்...மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏதும் இல்லை...இவர் தான் கட்டணத்தினைக் கட்ட வேண்டும்....'சரி இதோ நாங்கள் உங்களுக்கு தரும் வாய்ப்புகள்...உங்களின் மோதிர விரலை கையோடு இணைக்க வேண்டும் என்றால் ஆகும் செலவு 12,000 டாலர்கள்...அதுவே நடு விரல் என்றால் 60,000 டாலர்கள். முடிவு செய்து விட்டு சொல்லுங்கள்...நாம் ஆக வேண்டியக் காரியங்களை மேற்கொள்ளலாம்' (அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்றால் மருத்துவச் சேவையினைப் பெற நாம் தான் அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

கடினப்பட்டு 12000 டாலர்கள் சேர்த்து மோதிர விரலை மட்டும் சரிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு திரும்புகின்றார் அவர்...ஒரு கேள்வியோடு....ஒரே கேள்வியோடு. "என் உடம்பிற்கு விலை நிர்ணயம் செய்கின்றனரே...இது சரியா?"

இக்கேள்விக்கு விடையினைத் தேடித் தான் கிளம்புகின்றார் மைகேல் மூரே. (பாரன்ஹீட் 9/11 என்ற படத்தினை எடுத்தவர்). ஆனால் அவ்விடையினைத் தேடும் முன்னே அவருக்கு முன்னே இருக்கும் ஒரு முக்கியமான விடயத்தினை அவர் கண்டாக வேண்டி இருக்கின்றது. அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பவர்களே. ஒருவேளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இல்லாததால் தானா அந்த மரம் அறுக்கும் நபரால் முழுமையான சேவையைப் பெற இயலாது போனது? என்பதே அவ்விடயம் ஆகும். அதனை பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அவர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு மக்களிடம் அவர்களின் மருத்துவமனை அனுபவங்களைப் பற்றி விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றார். அந்த விவரங்களின் மூலம் அவர் அறிந்துக் கொள்ள வருவது,

1) மருத்துவக் காப்பீடு இருந்தாலும்...செலவாகும் தொகையில் மருத்துவ சேவையினை எடுப்பவரும் ஒரு பங்கினை அவர் பக்கம் இருந்து கட்டத் தான் வேண்டும்.

2) பெரும்பாலும் மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் முழுமையான மருத்துவத் தொகையை வழங்குவதில்லை...ஏதாவது காரணம் கூறி தொகையினை வழங்காது இருக்கவே முயல்கின்றனர்.

அதாவது மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் அக்காப்பீடுகளை மக்களின் சேவைக்கான திட்டங்களாகக் காணாது அதனை தங்களுக்கு இலாபங்களை ஈட்டுத் தரும் திட்டங்களாகவே பார்க்கின்றன என்பதனை அவர் அறிகின்றார். இதனைப் பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்க மருத்துவத் துறையைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

அமெரிக்கா என்பது தனியார்மயத்தை ஊட்டி வளர்க்கும் ஒரு தேசம் என்பதனை நாம் அறிவோம். அங்கே காப்பீட்டுத் துறையும் தனியார் வசம்...மருத்துவத் துறையும் தனியார் வசம். சரி...இப்பொழுது காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

நமக்கு ஏதாவது எதிர்பாராத இழப்பு நேர்ந்து விட்டால் அதனை நாம் ஈடு கட்டிக் கொள்ள நமக்கு உதவும் ஒரு திட்டம் தானே. உதாரணத்திற்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒருவேளை எதிர்பாராத ஒரு விபத்து நமக்கு நேர்ந்து விட்டால் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வழி செய்யும் ஒரு திட்டம் தானே அது. அதற்கு நாம் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு பணம் செலுத்திக் கொண்டு வருவோம்.

அதனைப் போன்று தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும். நமக்கு ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் நமக்கு உதவ அந்த காப்பீட்டுத் திட்டத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவுப் பணம் செலுத்திக் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவில் அத்தகைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களே. நிற்க.

இப்பொழுது அந்த நிறுவனங்கள் இலாபம் காண வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...

1) மக்களிடம் இருந்து அதிகமாக பணம் பெற வேண்டும்.
2) பெற்றப் பணத்தினை திரும்பத் தரும் நிலை எழக் கூடாது. அதாவது மக்கள் எவரும் மருத்துவச் சேவைக்கென்று பணத்தினைக் கோரக் கூடாது. ஒருவேளை மக்கள் பணத்தினை வேண்டினால் அதனை தராது தவிர்க்க வேண்டும்.

அப்படி இருந்தால் தான் அவர்கள் இலாபத்தினைப் பார்க்க முடியும். அப்படித் தான் அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று அந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களே கூறுகின்றனர். அவர்களின் கூற்றின்படி,

1) அந்த காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வழிகளை தேடுவதற்கு மாறாக அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்காது தவிர்க்கவே வழிகளைத் தேடுகின்றன. அவ்வாறு இழப்பீட்டினை வழங்காது தவிர்க்க உதவும் ஊழியர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படுகின்றது.

2) ஒருவேளை ஒரு நபருக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டால், எவ்வகையிலாவது அந்த நபருக்கு வழங்கப்பட்டத் தொகை தவறாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்று நிரூபிக்க முடியுமா என்றே அந்நிறுவனங்கள் பார்கின்றன. அதற்கென்று தனியாக ஊழியர்களும் இருக்கின்றனர். அவர்களின் பணி என்னவென்றால், நாம் ஒரு இழப்பீட்டுத் தொகையைக் கோரி இருக்கின்றோம் என்றால், அக்கோரிக்கையை செல்லாத ஒன்றாக ஆக்கி நமக்கு பணத்தினை மறுக்கும் வழியைக் கண்டுப் பிடிப்பதே அவர்களின் பணி ஆகும்.

3) இந்த நிறுவனங்களின் இப்போக்கிற்கு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கின்றது. காரணம் அரசில் பதவியில் இருப்பவர்கள் பலர் இந்நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும் பதவிகளை வகிப்பவர்களாகவும் இருக்கின்றனர். (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள படிக்கவும் இணைப்பு : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்)

அதாவது மருத்துவத்தினை சேவையாகக் காணாது ஒரு வணிகமாகவே அந்நிறுவனங்கள் காணுகின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.  மைகேல் மூரே இதைப் பற்றித் தான் தன்னுடைய ஆவணப் படத்தினில் விரிவாக அலசுகின்றார். அவரின் அனுபவங்கள் மூலம் எவ்வாறு அமெரிக்க மருத்துவத்துறை வணிகமாக மாறி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதை அவர் அறிந்துக் கொள்கின்றார்.

இப்பொழுது அவர் முன் இன்னொரு கேள்வி நிற்கின்றது. ஒரு வேளை மருத்துவம் என்பது இப்படித் தான் இருக்குமோ? இலவச மருத்துவம் என்பது இயலாத ஒன்றா? இக்கேள்விக்கு விடையினைத் தேடும் பொழுது தான் அண்டை நாடான கனடாவில் சென்று மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொண்டு திரும்பும் ஒரு அமெரிக்கப் பெண்மணியினைக் காணுகின்றார்.

அப்பெண்மணி கனடாவில் சென்று மருத்துவ சேவை பெற்று வருவதற்கு காரணம் அங்கே மருத்துவம் இலவசம். முற்றிலும் இலவசம். மக்களிடம் இருந்துப் பெரும் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கான சேவையான மருத்துவம் போன்றவைகளை அந்த அரசாங்கம் இலவசமாக வழங்குகின்றது. 'நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் சரி...நீங்கள் என் நாட்டினைச் சார்ந்தவர் உங்களுக்கு மருத்துவ சேவையினை வழங்குவது இந்த நாட்டின் கடமை' என்றே அந்நாடு அதன் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாக வழங்கிக் கொண்டு இருக்கின்றது. சாதாரண காய்ச்சல் என்றாலும் சேவை இலவசம் தான்...புற்று நோய் என்றாலும் சேவை இலவசம் தான். அதிர்ந்து தான் போகின்றார் மூரே. பக்கத்து நாட்டில் கோடி கோடியாய் மக்கள் செலவு பண்ணி பார்க்கும் சேவைகள் இங்கே இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதனைப் பற்றி ஒரு கனடா நாட்டினைச் சேர்ந்தவரிடம் பேசும் பொழுது,

"இலவச மருத்துவ சேவையை எவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்....ஒருவன் குறைந்த அளவு வரி கட்டுகின்றான்...நீங்கள் அதிகமாக வரி கட்டுகின்றீர்...இந்நிலையில் அவன் மருத்துவ சேவையை உங்களின் காசில் அல்லவா பெற்றுக் கொள்கின்றான்...மேலும் அவர்களின் பிரச்சனைக்கு நீங்கள் ஏன் உதவ வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்" என்ற கேள்விக்கு...

"முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் உதவுவது சரியான ஒன்று தானே...எனக்கும் அத்தகைய சூழ்நிலை உருவானால் நானும் அதைத் தானே எதிர்பார்ப்பேன்..." என்றே பதில் வருகின்றது. அருமையான பதில் தானே. ஒரு அருமையான ஆரோக்கியமான சமூகத்தினை அது காட்டுகின்றது. நிற்க.

கனடாவினைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு மூரே செல்கின்றார்...இங்கிலாந்து...பிரான்சு...கியூபா போன்ற நாடுகளில் மருத்துவம் முற்றிலுமாக இலவசமாக இருப்பதனைக் காணுகின்றார். மேலும் அந்நாடுகளில் மக்களுக்கு இருக்கும் மருத்துவ சலுகைகள், வசதிகள் போன்றவைகளைப் பற்றியும் அவரது இந்தத் திரைப்படத்தில் விரிவாக கூறி இருக்கின்றார். அவற்றுள் சில,

1) அந்த நாடுகள் அனைத்திலும் மருத்துவம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாகவே அம்மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

2) அனைத்து மருத்துவர்களும் அரசால் நியமனம் செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு சம்பளம் அரசாலேயே வழங்கப்படுகின்றது.

3) மருத்துவம் இலவசம் என்ற நிலையில் மருத்துவமனைகளில் பணம் கட்டும் தேவையே இல்லாது இருக்கின்றது. மேலும் ஒரு வேளை மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்லும் செலவினை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள் என்றால் அச்செலவினை மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது. (அதாவது உடல் நலக் கோளாறுக் காரணமாக நீங்கள் மருத்துவமனை செல்ல 50 ரூபாய் ஆகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதனை மருத்துவமனையிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்)

4) அமெரிக்காவில் 120 டாலருக்கு கிடைக்கும் மருந்து கியூபாவில் 5 சென்டுக்கு கிடைக்கின்றது. (அதாவது அமெரிக்காவில் 120 ரூபாய் என்றால் அதே மருந்து கியூபாவில் 5 பைசா). அதே போல் இங்கிலாந்தில் மருந்துகளுக்கு ஒரு குறைந்த கட்டணத்தினை நிர்ணயம் செய்து வைத்து இருக்கின்றார்கள். 6.65 பவுண்டினை செலுத்தி விட்டால் போதும் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கிக் கொள்ளலாம். 10 மருந்து வாங்கினாலும் அதே விலை...100 மருந்து வாங்கினாலும் அதே விலை. சில நேரம் அவ்விலையினை நம்மால் தர இயலாத நேரம் இலவசமாகவும் மருந்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

5) மருத்துவ செலவுகள், நோயாளிகளின் இன்ன பிற தேவைகள் போன்றவைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கவனிக்கப்படுகின்றன. வரி செலுத்துவதன் நோக்கம் அது தானே. நிற்க.

அந்த நாடுகளில் இந்த நிலை நீடிக்க காரணம் என்று அம்மக்கள் கூறுவது அந்த நாட்டினில் மக்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகின்றது. மக்கள் ஒன்றிணைந்து அந்நாடுகளில் போராடுகின்றனர்...எனவே அரசு மக்களுக்காக செயல்படுகின்றது.

ஆனால் அமெரிக்காவில் மக்கள் அரசைப் பார்த்து அஞ்சுகின்றனர்...அதனால் அரசு அதன் கடமைகளை மறந்து மக்களுக்கு சேவை ஆற்றாமல் தனியார்கள் இலாபம் குவிக்க உதவிக் கொண்டு இருக்கின்றது. மருத்துவம் என்பது உரிமையாக இல்லாது பணம் இருப்பவர்கள் மட்டும் பெற்றுக் கொள்ளும் ஒரு பொருளாக மாறி விட்டது அதனால் தான். இந்நிலையில் அரசின் கடமைகளை அதற்கு வலியுறுத்தப் போகின்றோமா அல்லது உரிமைகளைப் பெறாமலேயே அச்சத்தில் வாழ்ந்து இருக்கப் போகின்றோமா என்பதே நமக்கு முன்னே இருக்கும் கேள்வி...என்றுக் கூறியே இந்த ஆவணப் படத்தினை முடிக்கின்றார் இயக்குனர் மூரே.

இந்தியர்களாகிய நம் முன்னும் அக்கேள்வி தான் இருக்கின்றது...!!!

கிட்டத்தட்ட இந்தியாவினை அமெரிக்க மயமாக்கும் அரசு முயன்றுக் கொண்டு இருக்கும் சூழலில் தான் நாமும் இருக்கின்றோம். அரசு தனது கடமைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு அனைத்தையும் தனியார்களின் கைகளுக்கு மாற்றித் தந்து கொண்டிருப்பதை நாமும் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்.

1) அரசு மருத்துவமனைகள் பேணப் படாமல் தனியார் மருத்துவமனைகள் அரசில் பதவிகளில் இருப்பவர்களாலேயே தொடங்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் இருக்கின்றன.

2) போலி மருத்துவர்களும், மருந்துக்களும் வெறும் இலாபத்திற்காக நம்முடைய உடலினை பதம் பார்க்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். அரசு அதனைத் தடுக்க யாதொரு வழிமுறையையும் எடுக்கவில்லை.

3) மருத்துவம் என்றாலே செலவு அதிகம் ஆகும் என்றும் பணம் இல்லை என்றால் நமக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள தகுதி இல்லை என்ற நிலையம் இன்று வளர்ந்துக் கொண்டு வருகின்றன.

4) அமெரிக்காவில் கொள்ளையடிக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களைப் போலவே இந்தியாவிலும் நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. அரசுகளும் அவற்றை ஊக்குவிக்கின்றன.

கிட்டத்தட்ட மருத்துவம் என்பது வணிகமாகி விட்டு முடிந்த ஒரு சூழலில் தான் நாம் நிற்கின்றோம்...ஆனால் இதுவே முடிவு அல்ல. முடிந்தது என்று நாம் எண்ணும் வரை எதுவுமே முடிந்தது அல்ல. நாம் கட்டும் வரிகள் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன என்று நமக்குத் தெரியாது....இருந்தும் தொடர்ந்து நாம் வரி செலுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகின்றோம்? பொறுப்பினை செய்யாது இருக்கும் அரசைக் கண்டிக்கப் போகின்றோமா அல்லது அச்சத்தால் முடங்கியே கிடக்கப் போகின்றோமா?

நம்முடைய பதிலில் தான் அடங்கி இருக்கின்றது நமது சமூகத்தின் நிலைமை...எதிர்காலம்!!!

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

தொடர்புடைய இடுகைகள்:

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!

இன்றைக்கு தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. தமிழ் நாட்டின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்றன. இதனைக் தடுக்க வேண்டிய தமிழ் மக்களோ ஒரு புறம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்...மற்றொரு புறமோ அவர்களுக்குள்ளேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று வேறுபாடுகளைக் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். உண்மையிலேயே இக்கட்டான ஒரு நிலை தான்.

இந்நிலையில் தமிழர்களின் இத்தகைய நிலைக்கு காரணம் என்ன என்று நாம் தேடினோம் என்றால் விடை பிராமணர்கள்/ஆரியர்கள் என்றே வருகின்றது. அனால் இன்று தமிழர்கள் பலரே இக்கூற்றினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..."அட என்னங்க...எதுக்கு எடுத்தாலும் பிராமணன் தானா...இங்க ஒவ்வொரு சாதிக்காரனும் சாதி வெறி பிடித்து அடுத்த சாதிக்காரன் கூட சண்டை போடுறான்...அதுக்கு எப்படி பிராமணன் காரணமாக இருப்பான்?...பேராசை பிடிச்சி தமிழகத்தை சுரண்டுறது பல தமிழ் மக்கள் தான்...அதுக்கும் பிராமணனை குறைக் கூறினால் எவ்வாறு?" என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

இப்பொழுது இவர்களின் இந்தக் கேள்விக்கே நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து இருக்கின்றனர். சிலர் உயர்ந்த சாதிகள் என்றும் பலர் தாழ்ந்த சாதிகள் என்றுமே இன்று பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் மூலமாகத் தான் இன்று சாதிப் பிரச்சனைகள் பெரும்பாலும் எழுகின்றன. இப்பொழுது ஒரு கேள்வி...எதனால் ஒரு மனிதன் அவன் சாதியை உயர்ந்த சாதி என்று எண்ணுகின்றான்?

இறைவன் அவ்வாறு படைத்தான் என்று அவன் நம்புவதினால் அவன் அவ்வாறு எண்ணுகின்றான். அவன் அவ்வாறு இறைவன் சாதிகளைப் படைத்தான் என்று நம்புவதற்கு காரணம் அவனிடம் அவ்வாறு தான் கூறப்பட்டு இருக்கின்றது. அதனை அவன் கேள்வி கேட்காமல் நம்புகின்றான். அவ்வளவே. மாறாக அவன் அவனது சமய நூல்கள் அனைத்தையும் கற்று அதனில் அவனது சாதி உயர்ந்த சாதி என்று கூறப்பட்டு இருப்பதனால் அவன் உயர்ந்தவன் என்ற எண்ணத்தினைக் கொண்டு இருக்கவில்லை. அவ்வாறு அவன் அவனது சமய நூல்களில் மெய்யாகவே தேடி இருந்தான் என்றால் அவனுக்கும் சாதி ஏற்றத் தாழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை அவன் அறிந்து இருப்பான். ஆனால் நீங்களே எண்ணிப் பாருங்கள் இன்று எத்தனைத் தமிழர்களுக்கு அவர்களின் சமய நூல்களோ அல்லது கருத்துக்களோ தெரியும்? நூல்களின் பெயர்களே அறியாத தமிழர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவனிடம் அவன் சாதி உயர்ந்த சாதி என்றுக் கூறப்படுகின்றது அவன் அதனை அப்படியே நம்புகின்றான். அவ்வாறு அவனிடம் கூறுபவர்கள்/கூறியவர்கள் யார்?

கோவிலைக் கைப்பற்றி அங்கே அமர்ந்துள்ள பிராமணர்கள். அவர்கள் அவ்வாறு ஏன் கூற வேண்டும்? இறைவன் மனிதனை வர்ணங்களாகப் பிரித்து உள்ளான் என்றால் அவர்களுக்கு இயல்பாகவே முதல் இடம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற மக்கள் அனைவரும் அவர்களுக்கு கீழ் நிலையில் தான் இருப்பர். அதனால் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். இறைவன் கூறினான் என்றுக் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பதனால் இறைவனின் பெயரினை பயன்படுத்தி மக்களை அவர்கள் பிரித்து வைக்கின்றனர்.

சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையை தங்களின் சுயநல ஆதிக்கத்திற்காக அச்சமயங்களுடன் சேர்த்து மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். அதனால் தான் அவர்களை தமிழகத்தின் இழி நிலைக்கு காரணம் என்று சொல்கின்றோம். இங்கே நாம் மேலும் சில விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

1) வரலாற்றில் இருந்து நாம் கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் தமிழ் கோவில்கள் பிராமணர்களின் கீழ் போகின்றன என்றும் விசயநகர பேரரசில் தான் அனைத்து கோவில்களும் பிராமண மயமாக்கப் படுகின்றன என்றும் நாம் அறிகின்றோம். அதற்கு முன்னர் அக்கோவில்களில் பூசை செய்துக் கொண்டு இருந்தவர்கள் தமிழர்கள் தாம்.

இந்நிலையில் இன்று 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு பிராமணர்கள் உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்கி வைத்து இருக்கின்றனர். கேட்டால் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆனால் தீட்டு பட்டுவிடுமாம். சைவ ஆகமங்களிலும் சரி ஏனைய சமய நூல்களிலும் சரி இன்ன சாதியினர் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று எந்தக் குறிப்பும் இல்லாத பொழுது இவர்கள் எதன் அடிப்படையில் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆவதை தடுக்கின்றனர்? மேலும் விசயநகர அரசின் காலத்தில் தான் இவர்களே கோவிலை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கின்றனர்...அப்படி இருக்கையில் அக்கோவில்கள் அதற்கு முன்பு வரை தீட்டுப் பட்டா இருந்தன?

அப்படி இருக்கையில் கோவிலில் வேற்று சாதியினரை விடாது இருப்பதன் காரணம் கோவிலின் மேல் தங்களுக்கு உள்ள பிடியினை விடக் கூடாது என்ற அரசியல் எண்ணம் தானே...இதனை அவர்களால் மறுக்க முடியுமா?

2) இராச இராச சோழன் காலத்திலும் அதனைத் தொடர்ந்த காலத்திலும் சரி கோவில்களில் தமிழ் ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருந்து இருக்கின்றது. இந்நிலையில் இன்று இவர்கள் தமிழை தீட்டு மொழி...நீச பாஷை என்று கூறுவதன் காரணம் என்ன?

சமசுகிருதம் போய் தமிழ் மீண்டும் வந்து விட்டால் கோவில்களில் இவர்களது செல்வாக்கு சரிந்து விடும் என்பதனாலா...இல்லை தமிழ் வெளிச்சத்திற்கு வந்து விட்டால் சைவ வைணவ சமயங்களை தாங்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் விடயம் வெளியே வந்து விடும் என்பதனாலா?

3) படித்தால் கேள்வி கேட்டு விடுவான் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. இந்நிலையில் சுதந்திரம் பெற்ற பின்னர் இராசாசி என்ற பிராமணர் குலக் கல்வியினைக் கொண்டு வந்து 3000 பள்ளிகளை மூடியது எதனால்?

அவன் அவன் அவனவன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம தர்மத்தினை நிலை நாட்டுவதற்குத் தானே...இதனை மறுக்க முடியுமா?

4) அக்குலக் கல்வி திட்டத்தினை ஒழித்து 6000 பள்ளிகூடங்களையும் இன்ன பல திட்டங்களையும் அமைத்து தமிழர்களின் வளமும் தரமும் வளர காரணமாக இருந்த காமராசரைக் கொல்ல பிராமணர்கள் முயன்றது ஏன்? (இதனைப் பற்றி மேலும் படிக்க இணைப்பு: காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் )

ஒரு தமிழனின் கீழ் தமிழர்கள் வளர்கின்றனரே என்பதினாலா அல்லது ஒரு சூத்திரன் அரசாள்வதா என்ற மனு தர்ம வெறியினாலா?

5) அவன் அவன் அவனவன் வேலையை செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்...அப்படி என்றால் மந்திரம் ஓதுவது தானே உமது வேலை...அதை விட்டுவிட்டு அரசினை ஆள்வதற்கும் அரசாங்க பணிகளுக்கும் நீங்கள் ஏன் சண்டை இடுகின்றீர் என்று பிராமணர்களை காந்தி கேட்டதன் காரணமாகத் தான் அது வரை பிராமணர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய காந்தியை பிராமணர்களே கொலை செய்தார்கள் என்ற பெரியாரின் கூற்றினை மறுக்க முடியுமா?

6) ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் கிடைக்க இட ஒதுக்கீட்டை வ.பி. சிங் தலைமையிலான அரசு 1989 ஆம் ஆண்டு நிறைவேற்ற, அந்த ஒரே காரணத்திற்காக அவரது ஆட்சியை ஒரு வருடத்தில் கலைத்தனர் பிராமணர்கள் என்றும் இட ஒதுக்கீட்டின் மூலமாக, இது வரை எந்த மக்களின் வளர்ச்சியை தடுத்து பிராமணர்கள் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருந்தனரோ, அம்மக்களும் தமக்கு சமமாக வந்து விடுவர் என்று எண்ணியதினாலேயே 1991 இல் தனியார்மயக் கொள்கைக்கு குடைப்பிடித்து அமெரிக்காகாரனை இந்தியாவினுள் வர வைத்தனர் பிராமணர்கள் என்று நாம் கூறினால் அவர்களால் மறுக்க முடியுமா? இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமலுக்கு வந்ததற்கு பின்னர் பெருமளவு வேலைகள் தனியாருக்கு சென்றதற்கும், அரசாக செயல்பாடுகள் முடங்கியதற்கும் பிராமணர்களே காரணம் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா? நாட்டினை விற்றாலும் விப்பேன் ஆனால் மற்ற மக்களோடு ஒருத்தனாய் இருக்க மாட்டேன் என்ற மனு தர்ம வெறி தானே இங்கே தெரிகின்றது?

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொமொரு விடயம் என்னவென்றால் சிரியன் கிருத்துவர்களும் உயர் சாதியாய் அறியப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் சிரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கியவர்களே அன்றி மதம் மாறியவர்கள் அல்ல. அவ்வாறு இருக்க எவ்வாறு அவர்கள் உயர் சாதியாய் இருக்கின்றனர் என்பதும் ஆய்வுக்கு உரியது.

பிராமணர்கள் எவ்வாறு தங்களின் செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருப்பதற்கு முயன்றுக் கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு இன்னும் பல விடயங்களையும் காரணங்களையும் நாம் கூறிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கின்றன.

இத்தனைக் காரியங்களையும் அவர்கள் தைரியமாகச் செய்வதற்கு சமயங்கள் உதவி புரிகின்றன. அதனால் தான் சமயங்களின் மீது உள்ள பிடியினை அவர்கள் விட மறுக்கின்றனர். அவர்களுக்குத் தெரியும் சமயங்களின் மேல் உள்ள அவர்களது பிடி தமிழினாலும் தமிழர்களினாலும் மட்டுமே பறிபோகக் கூடும் என்று.

ஏன் என்றால் பிராமணர்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை தமிழ் உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. சமசுகிருதம் என்பது தேவ மொழி இல்லை என்பதை தமிழ் தான் தைரியமாக பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றது. அக்கருத்துக்கள் வெளியே வந்தால் நிச்சயமாக பிராமணர்களின் செல்வாக்கு சரியும்...அதனால் தான் அவர்களால் இயன்ற அளவு தமிழர்களையும் தமிழையும் ஒடுக்க முயன்றுக் கொண்டே இருக்கின்றனர்.

"விடுதலைப் புலிகள் தான் இராசீவ் காந்தியை கொன்றவர்கள்" என்று புலிகளின் மீது முதன் முதலில் பழியினைப் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்ற பிராமணர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இராசீவ் காந்தியின் கொலையில் சுப்பிரமணிய சாமிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற கூற்றும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ் இனம் படும் இன்னல்களுக்கு இதுவே தான் அடிப்படைக் காரணம். சண்டையிட்டுக் கொள்வது தமிழ் மக்கள் தான்...ஆனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணி அவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு இருக்கின்றனர்.

இந்நிலை தொடரும் வரை தமிழ் இனம் எழப் போவது கிடையாது....பழம் பெருமை பேசிக் கொண்டே காலத்தினைக் கடத்த வேண்டியது தான். தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தான் தமிழ் இனம் விடுதலைப் பெரும். தமிழ் இனம் விடுதலைப் பெற்றால் தான் தமிழ் விடுதலைப் பெரும்...தமிழ் விடுதலைப் பெற்றால் தான் தமிழில் உள்ள அறிவியலும் ஆன்மீகமும் விடுதலைப் பெரும். அப்பொழுது தான் இந்திய தேசம் முழுவதும் இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற நோய் குணமாகும்.

அதற்கு தமிழ் இளைஞர்கள் முன் வர வேண்டும். தமிழ் வரலாறு, அறிவியல், ஆன்மிகம் போன்றவற்றினை மீட்டு மீண்டும் ஒரு நல்ல சமூகத்தினை கட்டமைக்க இன்றைய இளைஞர்கள் வர வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது கோட்பாட்டின் அடிப்படையில் வேற்றுமைகள் இல்லாது அன்பின் அடிப்படையிலும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலும் நமது வாழ்வினையும் சரி சமூகத்தினையும் அமைக்க வேண்டும். அக்கடமை தமிழ் இளைஞர்களின் கைகளிலேயே இன்று இருக்கின்றது.

நமது சமூகம் அன்பின் சமூகம்....இங்கே நமக்கு யாருக்கும் எதிரிகள் அல்ல...பிராமணர்களும் நமது எதிரிகள் அல்ல...அவர்களும் மனிதர்கள் தான். அனைத்து மனிதர்களும் சமம் என்று அவர்கள் கருதினால் பிரச்சனைகளே இல்லையே...அவர்கள் கருதாது இருப்பதினால் தான் பிரச்சனை. அப்பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவினைக் கொண்டு வர தமிழால் இயலும். தமிழால் மட்டுமே இயலும்.

தமிழ் நமக்காக காத்து இருக்கின்றது. என்ன செய்ய போகின்றோம்... வெறும் தமிழ் பெருமையினைப் பேசிக் கொண்டு இருக்கப் போகின்றோமா இல்லை தமிழை வைத்து மாபெரும் சமூகத்தினைக் கட்டமைக்கப் போகின்றோமா?

என்ன செய்யப் போகின்றோம் நாம் என்பதில் அடங்கி இருக்கின்றது எதிர்காலம்.

இத்துடன் தமிழர்களின் சாதி ஏற்றத்தாழ்வினைக் குறித்த இந்தத் தொடர் ஒரு முடிவிற்கு வருகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

தென்னாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11

சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இங்கே சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால் சில காலங்களுக்கு முன்பு வரை நாடார் இன மக்கள் பஞ்சமர்கள் என்ற நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

பள்ளர் பறையர் சாணார் சக்கிலியர் என்று பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்த மக்களுள் சாணார் என்ற மக்கள் தான் இன்று நாடார்கள் என்று அழைக்கப் பெறுபவர்கள். அப்படி இருக்கையில் பஞ்சமர்கள் என்று தாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த அவர்களும் தாங்கள் சத்திரியர்கள் என்றுக் கூறுகின்றனரே? அது எவ்வாறு என்று கேள்வியினை எழுப்பியப் பொழுது அதற்கு விடையாய் அப்பெரியவர் சொன்னது..."விசய நகர ஆட்சியில் தான் நாடார்கள் தாழ்த்தப்பட்டு பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டனர்" என்பதே.

அதாவது விசயநகர படை எடுப்பின் பொழுது இங்கே அரசாண்டுக் கொண்டு இருந்த தமிழ்த் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் தான் சாணார்கள் பஞ்சம வரிசையில் இருந்தனர் என்பதே அவர் கூறிய விளக்கத்தின் பொருள் ஆகும்.

சரி...சரியான ஒரு விளக்கமாகத்தான் படுகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால் பஞ்சம வரிசையில் வைக்கப்பட்டு இருந்த அனைவருமே அக்காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்து இருக்கலாம் தானே....பள்ளர்கள் பறையர்கள் போன்ற தமிழ் மக்களும் விசயநகர அரசின் கீழ் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் தானே...? இதையே அப்பெரியவரிடம் கேட்ட பொழுது அவரால் அதனை ஏற்க முடியவில்லை..."அது எப்படி தம்பி...அவங்க எல்லாம் முன்னாடியே தாழ்த்தப்பட்டவங்க அப்படின்னு சமயங்களில் இருக்கே..." என்றே அவர் கூறினார். சமயங்களில் இருந்தமைக்கு சான்றுகளை அவரால் தர முடியவில்லை இருந்தும் மற்ற மக்களும் விசயநகர ஆட்சியின் காலத்தில் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணத்தினை அவரால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரச்சனையே அதில் தான் இருக்கின்றது.

இன்றைக்கு தங்களை ஆண்ட இனம் என்றுக் கூறிக் கொள்ளும் மக்களுள் பெரும்பான்மையான மக்கள் தங்களின் சாதிப் பெருமையினைப் பேசுவதற்கே அவ்வாறு கூறுகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் சாதி உயர்ந்த சாதி...அதே சமயம் மற்ற சாதிகள் தாழ்ந்த சாதிகள். அவ்வளவே.

ஒருவன் தன்னை சத்திரியன் என்று எப்பொழுது கூறுகின்றானோ அவன் அப்பொழுது தன்னை விட மேலாக பிராமணன் இருக்கின்றான் என்றும் தனக்கு கீழாக சூத்திரன் என்று ஒருவன் இருக்கின்றான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். மேலும் மனிதர்களைப் பிறப்பால் பிரிக்கும் மனு நீதியையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். இந்த நிலைப்பாட்டால் தமிழர்களுக்கோ அல்லது தமிழ் நாட்டுக்கோ யாதொரு நலனும் கிட்டப் போவதில்லை...மாறாக சாதிச் சண்டைகள் வன்முறைகள் நிம்மதி இன்மை போன்றத் தீமைகள் தான் கிட்டப்பெரும்.

இந்த நிலைப்பாடு, சாதி ஏற்றத்தாழ்வு என்றால் என்ன...நமது சமயங்கள் அதைத் தான் கூறுகின்றனவா...தமிழனின் வரலாற்றில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தனவா என்பதனைப் போன்ற விடயங்களை அறியாமல் அறியாமையிலேயே தமிழன் இருக்கின்றனத் தன்மையினால் ஏற்படுகின்ற ஒன்றாகும்.

உதாரணத்திற்கு...இன்று மக்களிடையே சில கேள்விகளை வையுங்கள்...

உலகின் முதல் மொழி என்ன என்றுக் கேட்டால் சமசுகிருதம் என்றுக் கூறுவார்கள்...வேதங்கள் என்ன என்றுக் கேட்டால் அவை ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள் என்றுக் கூறுவார்கள்...இறைவன் மனிதனை எத்தனைப் பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றான் என்றுக் கேட்டால் நான்கு...அவை பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்றுக் கூறுவர். இவைகள் சரியானவைகளா இல்லையா என்பதனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது...அவர்களுக்கு அவ்வாறு தான் சொல்லித் தரப் பட்டு இருக்கின்றது...அதனால் அதை அவர்கள் கூறுகின்றனர்.

இதே நிலையில் தான் இன்று தாங்கள் ஆண்ட இனத்தவர்கள்...சத்திரியர்கள்... என்றுக் கூறிக் கொள்ளும் தமிழர்கள் இருக்கின்றனர். நிற்க.

தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்று பெரும்பாலான சாதிகள், 'நாங்கள் ஆண்ட இனம்' என்றுக் கூறிக் கொண்டு சோழனுக்கும் பாண்டியனுக்கும் உரிமைக் கொண்டாடுகின்றனவேத் தவிர எந்த சாதியும் நாங்கள் அறிஞர்களாக இருந்தவர்கள்...ஆன்மீகச் சான்றோர்களாக இருந்தவர்கள்...என்று உரிமை பாராட்ட பெருமளவில் முன்னே வருவது இல்லை.

ஆண்ட இனத்திற்குத் தான் அத்தனைப் போட்டியும்... !!! ஏன் அரசர்களும் வீரர்களும் மட்டும் சேர்ந்து உருவாக்கிய நாகரீகமா தமிழ் நாகரீகம்? இல்லையே!!! அப்படி இருக்கையில் ஆண்ட இனத்திற்கு மட்டும் போட்டி இருப்பது எதனால் என்றே நாம் கண்டோம் என்றால் விடையாய் வருவது இன்றைய சமூகத்தின் பொது நிலையான எண்ண ஓட்டமே ஆகும்.

ஒருவன் பத்து பேரினை அடித்தான் என்றால் அவன் வீரன். அவன் தான் பெரியவன். அப்படி வீரத்துடன் இருந்தால் தான் கௌரவம்...அது தான் அவன் குலத்திற்கு...சாதிக்கு அழகு...பெருமை. இந்த எண்ண ஓட்டத்தினில் தான் இன்று பெரும்பாலான சாதிகள் ஆண்ட சாதிகள் என்ற பட்டத்திற்கு போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. 'ஆள்வது' என்ற ஒரு விடயத்தினை மாபெரும் பொறுப்பாகப் பார்க்காமல் வெறும் பெருமையாகக் காணும் நிலை மட்டுமே அவர்களிடையே பெருவாரியாக இருக்கின்றது. 'வீரப் பரம்பரைக்குத்' தான் அனைத்துப் போட்டியும் இருக்கின்றவே ஒழிய 'அறிஞர் பரம்பரை'...'ஆன்மீகப் பரம்பரை' போன்றவைக்கு போட்டிகள் பெருவாரியாக இங்கே இருப்பதில்லை. இது ஒரு மிகவும் மோசமான நிலை ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு புலிகளை எடுத்துக் கொள்வோம்...ஈழத்தில் அவர்கள் பல பிரிவுகளைக் கொண்டு பல கடமைகளை செய்து வந்தனர். அவைகள் அனைத்தும் இன்று ஒடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மீண்டும் முன்னேறி வரும் நிலையில்...அவர்களுக்குள்ளேயே 'ஏய் நான் வான்புலி...நான் உயர்ந்தவன்...நீ கடற்புலி...நீ தாழ்ந்தவன்' என்று பிரிவினைகளைக் கொண்டு இருந்தால் உண்மையான எழுச்சி என்பது அங்கே இருக்குமா? இருக்காது தானே. அதைப் போன்று தான் தமிழகத்திலும்...தோற்கடிக்கப்பட்டு இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எழவில்லை என்றால் தமிழ் இனம் இன்று இருக்கும் நிலையிலேயே தான் தொடர்ந்து இருக்கும்.

தமிழர்களின் அரசர்கள் மட்டும் கொல்லப்படவில்லை...ஆன்மீகத் தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். தமிழர்களின் அரசுகள் மட்டும் அடிமைப்படுத்தப்படவில்லை அவர்களின் அறிவியலும் சரி ஆன்மீகமும் சரி சேர்ந்தே தான் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் இனம் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அடிமைப்படுத்தப் பட்ட அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற வேண்டும். அனைத்துத் துறைகளும் விடுதலைப் பெற அனைத்து தமிழ் இனங்களும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வு என்பது தமிழ் மண்ணுக்கு உரியதல்ல என்றும் நான் வீரன் என்றால் அவன் அறிஞன் என்ற சகோதர நேசமும் தெளிவும் வர வேண்டும்...இத்தெளிவு வரலாற்றினைப் பார்த்தால் மட்டுமே கிட்டும்.

நாடார்கள் என்பவர்கள் சாணார்கள் என்று கண்டோம் அல்லவா. அந்தச் 'சாணார்' என்றச் சொல் 'சான்றோர்' என்றச் சொல்லின் திரிபே ஆகும்.

சான்றோர்--->சான்றார்--->சானார் என்றே மருவி உள்ளது. தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற ஒரு கூற்றும் இங்கே கருதத்தக்கது.

திருவள்ளுவர் பறையர் சாதியைச் சார்ந்தவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வள்ளுவ சாதி என்றே ஒரு சாதி இருக்கின்றது...அதுவும் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கின்றது. சைவ கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்த நாயனார் பறையர் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் வரலாறு.

இதனைப் போன்று ஒவ்வொரு தமிழ் இனத்திற்கும் மிகப் பெரிய வரலாறு இருக்கின்றது...அது மறைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் விடுதலைப் பெற வேண்டும் என்றால் அவ்வரலாற்றினை நாம் ஆய்வு செய்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் என்று எவருமே தமிழகத்தில், தமிழ் கலாச்சாரத்தில் கிடையாது. ஏன் பிறப்பின் அடிப்படையில் பிரிவுகளே தமிழகத்தில் கிடையாது...தொழில் அடிப்படையான பிரிவுகள் தான் தமிழர்களின் பிரிவுகள். இதனை ஆய்வுகள் நிச்சயம் உறுதி செய்யும்.

இதனை உணராது நான் ஆண்ட சாதி அவன் தாழ்ந்த சாதி என்று தமிழர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டை இட்டுக் கொண்டு இருந்தனர் என்றால் தொடர்ந்து அடிமையாகவே நமக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்து விட வேண்டியது தான்....உண்மையிலேயே தமிழ் இனத்தினைக் கட்டி எழுப்பிய மக்கள் நம்மை அப்பொழுது நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |

சென்ற பதிவில் தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள் தாம் என்றே கண்டு இருந்தோம். இங்கே தான் சில நண்பர்கள் சில கேள்வியினை எழுப்புகின்றனர். "அதெப்படி தமிழர்கள் அனைவரையும் சூத்திரன் அல்லது பஞ்சமன் என்றுக் கூறுகின்றீர்?...நாங்கள் ஆண்ட இனம்...அப்படி என்றால் நாங்கள் சத்திரியர்கள் அல்லவா? அவ்வாறு இருக்கையில் சத்திரியர்களான எங்களை எவ்வாறு சூத்திரர் மற்றும் பஞ்சமர் என்று கூறுகின்றீர்?"

இது தான் அக்கேள்வி. இக்கேள்விக்குத் தான் நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது. காரணம் இன்றைக்கு நம்முடைய நாட்டினில் 'யார் ஆண்ட இனம்' என்றும் 'நாங்கள் ஆண்ட இனத்தவர்' என்றும், கேள்விகளும் சரி முழக்கங்களும் சரி எல்லாத் திசைகளில் இருந்தும் கேட்ட வண்ணம் தான் இருக்கின்றது. அக்கேள்விகளுக்கு சரியான விடையினை அறியாது நம்மால் தமிழ் இனத்தை ஒன்றிணைக்க முடியாது.

சரி இப்பொழுது இக்கேள்விகளுக்கு விடையினைத் தேட நாம் இரு விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

ஒன்று...மருத்துவர் இராமதாசு அவர்களின் ஒரு கூற்று. வன்னியர்கள் சத்திரியர்கள் என்றும் அவர்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் அவர் கூறி இருந்தார்.

இப்பொழுது இக்கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்கள். சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றும் அவர்கள், இறைவன் உலகினையும் மனிதர்களையும் படைத்தான் என்ற கருத்தினை உடையவர்கள். அவ்வாறு இருக்க அக்னி குண்டத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது இறைவன் மனிதனைப் படைத்தான் என்றக் கோட்பாட்டிற்கு ஏதுவான ஒன்றா அல்லது எதிரான ஒன்றா? நிச்சயம் எதிரான ஒன்று தான்.

அவ்வாறு இருக்க இறைவன் மனிதனைப் படைத்தான் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள் எதற்காக நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றினோம் என்றுக் கூற வேண்டும்?

இக்கேள்விக்கான விடை நமக்காக கி.பி ஏழாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றது. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் அக்காலத்தில் தான் வடக்கே இருந்த இந்திய அரசனைக் கொன்று விட்டு ஆரியர்கள், இந்தியாவில் அவர்கள் பிடித்த பகுதியினை ஆரியவர்த்தம் என்றுப் பெயரிட்டு ஆட்சிப் புரியலாயினர் என்றும் அவர்கள் அவர்களுள் அமைத்துக் கொண்ட பிரிவுகள் தாம் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் என்றும். சத்திரியர்கள் என்பவர்கள் ஆரியர்களுள் போர் செய்யும் பிரிவினைச் சார்ந்தவர்கள்.

அவ்வாறு வட இந்தியாவின் ஒரு பகுதியினை பிடித்த அவர்கள் அவர்களுக்கென்று இட்டுக் கொண்ட கதை தான் 'நாங்கள் அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள்' என்பது. ஆரியர்கள் இறைவனை அறியாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தீ வழிபாடு தான். அதனால் தான் அவர்கள் மேலான பொருளாக கருதிய நெருப்பில் இருந்து அவர்கள் தோன்றியதாக அவர்கள் கதையினைக் கட்டி விட்டனர். "நாங்கள் உயர்ந்தவர்கள்...நாங்கள் மேலான தேவனாக வணங்கும் அக்னியில் இருந்து நாங்கள் தோன்றி இருக்கின்றோம்" என்ற பொருளிலேயே அவர்கள் அக்கதையினைப் புனைந்துக் கொண்டனர்.

பிற்காலத்தில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிராமணர்கள் சூழ்ச்சியினால் நுழைய, அவர்கள் பரப்பிய கதைகளும் பரவுகின்றது. ஒரு காலத்தில் மக்கள் பிராமணர்களின் வர்ணாசிரமதர்மம் (இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான்) என்ற ஒரு கூற்றினை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டப் பொழுது, அரசர்கள் என்றால் அவர்கள் சத்திரியர்கள் என்றக் கருத்து பரவ ஆரம்பித்தது.

அதாவது அரசையும் சரி ஆன்மீகத்தையும் சரி பிராமணர்கள் பிடித்தாயிற்று. அவர்கள் சொல்வது தான் ஆன்மிகம்/சட்டம் என்ற நிலையும் வந்தாயிற்று. மேலும் அவர்கள் சொல்வதனை சரி பார்க்க நூல்களைப் படிக்கலாம் என்றால் நூல்களை பிராமணர்கள் தவிர எவரும் படிக்கக் கூடாது என்ற சட்டம் வேறு இருக்கின்றது. இந்நிலையில் பிராமணர்கள் கூறுவது/கூறியது தானே உண்மை என்ற நிலை இருக்கும்.

அவர்கள் சொன்னார்கள் "பிராமணர்கள் உயர்ந்தவர்கள்...அரசர்கள் சத்திரியர்கள்...வணிகர்கள் வைசியர்கள்...அடிமைகள் சூத்திரர்கள்...இது இறைவன் கூறியது" என்று, அடிமையாய் இருந்த மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று அழிக்கப்பட்டனர்/ ஒடுக்கப்பட்டனர்.

பிராமணர்கள் கூறிய அக்கூற்றினை வேறு வழியில்லாது நம்பிய மக்கள் அரசர்கள் என்றால் சத்திரியர்கள் என்றே எண்ணிக் கொண்டனர். சத்திரியர்கள் எங்கே இருந்து தோன்றினர்....?அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றினர்... எனவே நான் சத்திரியன் என்றால் நானும் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்றே மக்களும் எண்ணிக் கொள்ளத் தலைப்பட்டனர்.

அதன் விளைவு தான் இன்று தமிழர்கள் தங்களை சத்திரியர்கள் என்றும் தாங்கள் அக்னிக் குண்டத்தில் இருந்து தோன்றியவர்கள் என்றும் கூறிக் கொண்டு இருப்பது.

சத்திரியர்கள் என்பது ஆரியர்களின் ஒரு பிரிவு, அதற்கும் தமிழர்களுக்கும் சரி இந்தியாவிற்கும் சரி சைவ வைணவ சமயங்களுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை. இது பிராமணர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தமிழன் சத்திரியன் என்றுக் கூறினால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் கூற்றின் படியும் மனு நீதியின் படியும் இன்று இந்தியாவில் இருப்பது இரண்டே வகை மக்கள் தான்...ஒரு சாரார் பிராமணர் மற்றொருவர் சூத்திரர். ஒருவர் ஆரியர் மற்றொருவர் திராவிடர். அவ்வளவே.

ஆனால் நம் மக்கள் தான் அறியாது தங்களை சத்திரியர்கள் என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனர். காரணம் தெளிவான வரலாற்றுப் பார்வையும் ஆன்மீக அறிவும் இன்னும் நம் மக்களிடையே பரவவில்லை...காரணம் இன்னும் நம் இனம் முழுமையாக விடுதலை அடையவில்லை.

பாண்டியர்களோ, சோழர்களோ, சேரர்களோ, பல்லவர்களோ சத்திரியர்கள் கிடையாது. அவ்வாறு இருக்கையில் அவர்களின் வம்சாவளியினர் மட்டும் எவ்வாறு சத்திரியர்களாக இருப்பார்கள்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு ரஷ்ய நாடு தமிழர்களின் மீது படை எடுத்து வந்து வென்று விட்டது. ரஷ்யர்களின் அரசனின் பொதுப் பெயர் ஜார் என்பது ஆகும். இந்நிலையில் ஆள்பவர்களை ஜார் என்று அழைக்கின்றனர், நானும் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்தவன் தான்...எனவே நானும் ஜார் தான் என்று ஒரு தமிழன் கூறுவான் ஆயினில் அது சரியான ஒன்றாக அமையுமா?

அதனைப் போன்று தான் தமிழன் தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்வதும் பொருந்தாத ஒன்றாகும்...தமிழன் தன்னை தமிழ் அரசன் என்றுக் கூறிக்கொள்ளலாம்...பாண்டியன் என்றோ சோழன் என்றோ சேரன் என்றோ பல்லவன் என்றோ இன்னும் அநேக தமிழ் அரச பெயர்களின் மூலமாகவோ அவனை அழைத்துக் கொள்ளலாம்...அது சரியானதொன்றாக இருக்கும்.

அதனை விடுத்து தான் ஆண்ட இனம் அதனால் நான் சத்திரியன் என்று ஒருவன் கூறுகின்றான் என்றால் அது அவர்களது அறியாமையைத் தான் காட்டும். ஒரு மனிதன் எப்பொழுது தன்னை சத்திரியன் என்று அழைத்துக் கொள்கின்றானோ அப்பொழுதே அவன் மனு நீதியையும் வருணாசிரமத்தையும் சாதி ஏற்றத் தாழ்வினையும் ஏற்றுக் கொள்கின்றான்.

அது தமிழர்களுக்கு உரியதல்ல....இத்தெளிவினை நாம் நமது சமயங்களின் வாயிலாகவே அறிந்துக் கொள்ள முடியும்.

சத்திரியன், அரசன், ஜார் (TSAR), பாரோ (Pharoah) - போன்ற சொற்கள் ஆட்சிப் புரிபவர்களைக் குறிக்கும். ஆனால் இவை அனைத்தும் பொருளில் ஒன்றாய் இருந்தாலும் வெவ்வேறு இனங்களுக்கு உரிய சொற்கள்.

எனவே எவ்வாறு ஒரு தமிழன் ஜார் இனத்தைச் சார்ந்தவனாக இருக்க முடியாதோ அதனைப் போன்றே அவன் சத்திரிய இனத்தினைச் சார்ந்தவனாக இருக்க முடியாது.

சரி இருக்கட்டும்...இப்பொழுது இரண்டாவது விடயத்தினைப் பற்றி சற்றுக் காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

சென்ற பதிவில் எவ்வாறு சோழர்கள் எவ்வாறு சூழ்ச்சிக்கு வீழ்ந்து இருக்கலாம் என்றே கண்டோம். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது. அது, இராச இராச சோழனின் காலத்தில் மக்களுள் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளோ இருந்ததா இல்லையா என்பதே அது.

இதனைக் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். என்னுடைய பார்வை இராச இராச சோழனின் காலத்தில் வருணப் பாகுபாடுகளோ அல்லது பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளோ தமிழக மண்ணில் இருந்ததில்லை என்பதே. இதனை நான் அத்தோழரிடம் கூறிய பொழுது அவர் ஏற்கவில்லை. அவர் அக்கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கொண்டு இருந்தார்.

பின்னர் சில நாட்கள் கடந்தன...மீண்டும் அந்த நண்பரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது பேசுகையில் அவர் இராச இராச சோழனின் காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது வருணப் பாகுபாடுகளோ இல்லாது இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றே கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்,

இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது. மற்றொரு நாடோ பிறப்பின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்து படையினை உருவாக்குகின்றது. அதாவது நூறு பேரில் நாற்பது பேர் போர் செய்யும் குலத்தில் பிறந்து இருக்கின்றார்கள். அப்படிப் பிறந்த அவர்கள் அனைவருமே போர் செய்ய வல்லுனர்களாக இருக்க முடியுமா? வாத்தியார் பையன் மக்கு என்பதனைப் போல் அந்த நாற்பது பேரினில் பலர் போர் செய்யும் தகுதி இல்லாது தான் இருப்பர். அது தான் நியதி.

இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளும் போர் புரிந்தன என்றால் எந்த நாடு வெல்லும்? திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா அல்லது பிறப்பின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடா?

திறமையின் அடிப்படையில் படையினை வைத்து இருந்த நாடு தானே வெல்லும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது இராச இராச சோழன் பெற்ற வெற்றிகள் யாவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்த படையினை வைத்து பெற்று இருக்க முடியாது. திறமையின் அடிப்படையில் படையினை அவன் வைத்து இருந்தான் என்றால் தான் அவ்வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியும். எனவே இராச இராச சோழனின் காலத்தில் தமிழகத்தில் வருணப் பாகுபாடுகளோ அதன் தாக்கமான பிறப்பால் ஏற்றத் தாழ்வு முறைகளும் இல்லை என்றே நாம் கருத முடியும்.

இது தான் அவர் கூறியக் காரணம். சரியான காரணம் தானே. இப்பொழுது இந்தக் காரணத்தினைத் நாம் இன்னும் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது, ஆனால் அதனைப் பின்னர் காண்பது நலமாக இருக்கும் என்பதினால் இப்பொழுது சோழர்களுடன் நம் பயணத்தினைத் தொடரத் தான் வேண்டி இருக்கின்றது.

இராச இராசன் பிறப்பால் வேற்றுமைகளைக் காணும் அரசினை வைத்து இருந்தான் என்றால் அவன் பெற்ற வெற்றிகளை அவன் பெற்று இருக்க முடியாது, எனவே அவன் காலத்திலும் சரி அவனின் மகனின் காலத்திலும் அத்தகைய நடைமுறை அதாவது பிறப்பால் ஏற்றத் தாழ்வினைக் காணும் நடைமுறை தமிழ் மண்ணில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நாம் கருத முடிகின்றது அல்லவா. இதனை மெய்ப்பிப்பதனைப் போல் அவர்கள் காலத்தில் சோழ பேரரசின் புகழ் சிறந்து விளங்குகின்றது.

அதனைப் போலவே எப்பொழுது சாளுக்கிய சோழனாக குலோத்துங்கன், இறுதி சோழனான அதி இராசேந்திர சோழனின் மர்மமான மரணத்தினைத் தொடர்ந்து அரியணை ஏறுகின்றானோ அப்பொழுது இருந்து சோழர்களின் ஆட்சி வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று இருக்கின்றது.

சூழ்ச்சியினால் வந்த அரசன் வலுவான அரசனாக இருக்க முடியாது. அவனை வைத்துக் கொண்டு மற்றவர்கள் பல காரியங்களை செய்துக் கொள்ள முடியும். அரசன் நமது கைகளுக்குள் இருந்தால் நம் விருப்பப்படி அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....ஆன்மீகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்....என்ன சரி தானே.

அது தான் தமிழகத்தில் நடந்து இருக்கின்றது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசனைக் கைக்குள் வைத்து இருந்தால் அவனை மட்டுமே கட்டுப் படுத்த முடியும், ஆனால் ஆன்மீகத்தினை கையில் வைத்து இருந்தால் யாரை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்ற உண்மை ஆரியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால் அரசனின் துணையுடன் ஆன்மீகத்தினை தங்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றனர்.

ஒரு நாட்டினைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசனை வெல்ல வேண்டும். அதனைப் போன்று ஆன்மீகத்தை தங்களுக்கு உரிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களைக் கொல்ல வேண்டும். அது தான் தமிழக வரலாற்றில் நிகழ்ந்து இருக்கின்றது. சித்தர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பிராமணர்களை எதிர்த்த சித்தர்கள் காடுகளுக்குள் விரட்டப்படுகின்றனர். பின்னர் அதுவும் போதாதென்று உயிருடன் குகைகளுள் அடைக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுக்கு 'ஜீவ சமாதி' அடைந்தார் என்று பட்டத்தையும் தந்து சிறப்பித்தனர் என்பது வரலாறு. மேலும் சிலரை உயிருடன் எரித்து விட்டு அவர் முக்தி அடைந்து விட்டார் என்றப் பட்டத்தையும் தந்து அவர்கள் கொலை செய்யப்பட்டதை மறைத்த செயல்களும் இங்கே நிகழத் தான் பெற்று இருக்கின்றன.


அதனைப் போன்றே இறுதி நாயன்மாரான நந்தனாரின் கொலையும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரின் கொலையும் நிகழப் பெற்று சைவ கோவிலின் தலைமையிடமான சிதம்பரமும், வைணவக் கோவிலின் தலைமையிடமான திருவரங்கமும் பிராமணர்களின் வசம் செல்லுகின்றது.

சோழர்களின் வீழ்ச்சியும், தமிழக கோவில்கள் பிராமணர்களின் கைகளின் செல்வதும் தற்செயலான செயல்களா அல்லது ஒரு மிகப் பெரிய சதியின் பகுதிகளா என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

சோழர்களின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து பாண்டியர்கள் சிறிது வலு பெறுகின்றார்கள். ஆனால் அவர்களும் என்ன செய்ய முடியும், நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம் ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பாண்டியர்களும் சிறிதுக் காலத்தில் வீழ்ச்சியினைத் தான் அடைகின்றனர்.

இக்காலத்தில் தான் பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது.


கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன...

"அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமும் அரசு ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

திருமலை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட பின் முதல் வேலையாகக் கோவில் வழிபாட்டிற்கு என்று பார்ப்பனர்களான குலசேகரப் பட்டன் வகையறாவினரையும் விக்கிரம பட்டன் வகையறாவினரையும் நியமித்துக் கொழுக்க வைத்தான்" என்றே பார்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலினில் புலவர். கோ. இமயவரம்பன் கூறுகின்றார்.

இதைப் போன்ற நிலை தான் பழனிக் கோவிலிலும் நிகழ்ந்து இருக்கின்றது என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மன்னராட்சிக் காலத்தில் அரசன் நமக்குத் துணை நின்றான் என்றால் நாம் கூறுவது தானே உண்மை. அவ்வாறே உண்மைகள் புனையப்படுகின்றன...தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இக்கொடுமைகளை எதிர்த்த ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், வீரர்கள் ஆகியோர் அனைவரும் தாழ்த்தப்படுகின்றனர். அவர்கள் பஞ்சமர்கள் என்று முத்திரைக் குத்தப் பெற்று நாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைக்கு தாழப்பட்டவர்களாக இருப்பவர்கள். மேலும் தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக மாற்றம் பெறத் துவங்கியது இக்காலத்தில் தான் என்பதும் சிலரும் கூற்று.

பிராமணர்களின் இச்செயல்களுக்கு உறுதுணையாக இருந்து அதிகாரங்களையும் செல்வங்களையும் பெற்ற தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்றே மாற்றப்பட்டார்கள். இன்றுக் கூட சைவ வைணவ மடங்களில் இருப்பவர்கள் பிராமண செல்வாக்கு உடனேயே இருப்பதும், சமசுகிருதத்தை மீறி தமிழ் வர கூடாது என்று இருப்பதும், அம்மடங்களில் குறிப்பிட்ட சாதியினரே இருக்கலாம் என்று பிறப்பின் அடிப்படையில் பிரிவினையை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதனையும் நாம் காணத் தானே செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காக அவர்களுக்கு பிராமணர்கள் கொடுத்த பட்டம் தான் சற்சூத்திரர். அதாவது சிறந்த அடிமைகள் என்றே பொருள் வரும்.

தமிழன் பிராமணனோ, சத்திரியனோ அல்லது வைசியனோ கிடையாது...அவன் சூத்திரன் அல்லது பஞ்சமன். அதன் அடிப்படையில் தான் பிராமணர்கள் தங்களுக்கு உதவிய தமிழர்களை சிறந்த அடிமைகள் என்ற பொருள் படி 'சற் சூத்திரர்' என்றும்...ஒன்றுமே செய்யாது இருந்த சாதாரண மக்களை அடிமைகள் என்னும் பொருள் படி 'சூத்திரர்' என்றும், அவர்களை எதிர்த்த தமிழ் அறிஞர்களை பஞ்சமர்கள் என்றும் பிரித்து வைக்கலாயினர்.

அரசனின் செல்வாக்கினைப் பெற்ற பிராமணர்களை மக்களால் ஒன்றும் செய்ய இயலாது போயிற்று. தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து அடிமைகளாயினர். கல்வியினைக் கண்ணாக மதித்து வந்த ஒரு சமூகம் அறியாமை இருளில் மூழ்கத் தொடங்கியது....இன்று வரை அது அவ்வாறு தான் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இராச இராச சோழன்!!!

என்ன தான் சொல்லுங்க... இந்தப் பெயரைக் கேட்ட உடன் ஒரு பெருமித உணர்ச்சி தமிழர்களுக்குள் வருவதனைத் தடுக்க முடியாது தான். காரணம் அவன் செய்த செயல்கள் அத்தகையவை. தமிழர்களின் புகழை மீண்டும் உலகறியச் செய்தவன் அவன்....செந்தமிழை வளர்த்தவன் அவன்...தமிழரின் பெருமையை நிலை நாட்டியவன் அவன்... என்று இராச இராச சோழனை கொண்டாடுவதற்கு இங்கே ஆயிரம் காரணங்களைக் கூறுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர்.

அதைப் போலவே அக்கூற்றுக்களை மறுப்பதற்கும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களின் கூற்றின் படி இராச இராச சோழன் என்ற மன்னன் ஒரு பிராமண அடிவருடி என்றும் அவனின் காலத்தில் தான் தமிழர்களும் சரி பெண்களும் இழிவுப்படுத்தப் பட்டு அடிமைகளாயினர் என்றே அவர்கள் கருதுகின்றனர் என்று நமக்குப் புலனாகின்றது.

அட என்னடா இது...ஒரு தரப்பினர் இராச இராச சோழனை தமிழ் இனக் காவலனாகக் காணுகின்றனர்...அதே சமயம் அவனை மற்ற சிலரோ தமிழ் இனத்தினை இழிவுப் படுத்த வந்த ஒருவனாகப் பார்கின்றனரே..ஏன் இந்த முரண்பாடு என்ற எண்ணம் நிச்சயம் நம்முள் எழும்...அந்நிலையில் ஏன் அந்த முரண்பாடுகள் என்றக் கேள்விக்கு நாம் விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது. இருந்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து நாம் கண்டுக் கொண்டு வரும் இத்தொடரில் அக்கேள்விக்கான விடையினைத் தேடுவது என்பது தொடர்பில்லாது சென்று விட வாய்ப்புகள் இருப்பதினால் அதனைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாகக் காண முயலலாம். இருந்தும் இராச இராச சோழனுக்காக அம்முரண்பாடுகளைக் குறித்து நாம் இங்கே சிறிது பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

௧) இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்றால்.... அவன் ஆட்சியில் கோவில்கள் அனைத்திலும் பிராமணர்களே இருந்து இருக்க வேண்டும்... ஆனால் உண்மை என்னவென்றால் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னர் அமைந்த விசய நகரப் பேரரசிலும் தான் கோவில்கள் பிராமணர்களின் கைவசம் செல்லுகின்றது. அது வரை கோவில்களில் தமிழர்களே இருந்து இருக்கின்றார்கள். மேலும் கோவில்களில் தமிழே ஒலித்து இருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் அவனை எவ்வாறு பிராமண அடிவருடியாக கருத முடியும்.

௨) இராச இராசன் தேவ அடியார்கள் முறையை அறிமுகப்படுத்தினான். அதன் மூலம் பெண்களைத் தாழ்த்தினான் என்ற ஒரு கூற்று இருக்கின்றது...

இக்கேள்விக்கு விடையினைக் காண நாம் பிரபாகரனையும் புலிகளையும் காண வேண்டி இருக்கின்றது. புலிகளில் பெண்களுக்கு என்று இடம் தனியே இருந்தது. அவ்வீர தமிழ் மகளிர் பெண் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். புலிகளின் காலத்தில் அவர்களுக்கு நிச்சயம் சிறப்பான நிலை இருந்து இருக்கும்...ஆனால் அதே நிலை இன்று நிலவும் என்றா கூற முடியும்? இழிவான நிலைக்கு அவர்கள் சிங்களவர்களால் தள்ளப் பட்டு இருப்பார்கள் தானே. அதற்காக புலிகளின் காலத்திலேயும் பெண் புலிகள் இன்று இருந்த நிலையிலேயே இருந்தார்கள் என்றுக் கூற முடியுமா? அதே நிலையைத் தான் நாம் தேவ அடியார்கள் முறையிலும் காண வேண்டி இருக்கின்றது.

சமணசமயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அவள் அடுத்தப் பிறவியில் ஆணாக பிறந்தால் ஒழிய அவளுக்கு முக்தி கிடையாது. ஆனால் சைவ வைணவ சமயங்களிலோ பெண்ணுக்கு சிறப்பான இடம் இருந்தது. அவ்விடத்தை கோவிலிலும் கொண்டு வந்தவன் தான் இராச இராச சோழன். கோவில் என்பது இறைவனை நாம் நினைக்கும் இடம். அங்கே ஆணும் பெண்ணும் சமம் தான் என்று அவன் கொண்டு வந்த ஒரு திட்டம் தான் தேவ அடியார்கள் திட்டம். ஆனால் பிற்காலத்தில் தமிழர்களின் கோவில்களையும் சமயத்தினையும் ஆட்க்கொண்ட ஆரியர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய விசய நகரப் பேரரசின் மன்னர்கள் அத்திட்டத்தினை அவ்வாறே வைத்து இருப்பரா அல்லது அவர்களின் வசதிக்கேற்ப மாற்றி இருப்பரா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. (இதனைப் பற்றியும் விரிவாக வேறு பதிவில் காணலாம்)

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இராச இராச சோழன் கோவிலினுள் பெண்களுக்கு இடம் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்தினானே ஒழிய தாழ்த்தவில்லை. அப்பெண்களின் நிலை தாழ்த்தப்பட்டது விசய நகர பேரரசின் காலத்திலேயே ஆகும்.

௩) இராச இராசன் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான்...தமிழை அவன் வளர்க்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழன் உருவாக்கிய ஒரு மொழிக்கு தமிழன் முக்கியத்துவம் கொடுத்தது என்ன தவறு? மேலும் அவனின் காலத்தில் கோவிலுள் சமசுகிருதம் இருந்ததா இல்லை தமிழ் இருந்ததா? தமிழ் தானே இருந்தது. அப்படி இருக்க இராச இராசன் தமிழை வளர்க்கவில்லை என்று நாம் எவ்வாறு கருதுவது.

எனவே இராச இராச சோழன் பிராமண அடிவருடி என்பதற்கோ அவன் தமிழை வளர்க்க வில்லை என்பதற்கோ சான்றுகள்பெரிதாய் ஏதும் இல்லை. மேலும் இத்தலைப்பினைப் பற்றி நாம் பின்னர் விரிவாக காணலாம். இப்பொழுது நாம் மீண்டும் ஆதித்தக் கரிகாலனின் மரணத்திற்கு செல்ல வேண்டி இருக்கின்றது.

ஆதித்த கரிகாலன்...சோழர்களின் பட்டத்து இளவரசன். இவன் சதியால் கொலை செய்யப்பட்டு இருக்கின்றான் என்றே நாம் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிகின்றோம். பட்டத்து இளவரசனை யார் கொலை செய்வார்?

ஆட்சியினைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொலை செய்வார்கள். அந்நிலையில் ஆதித்த கரிகாலனைக் கொன்றால் நன்மை யாருக்கு வரும் என்று பார்த்தால் பொதுவாக அடிபடும் பெயர்கள் எவை என்றால்

குந்தவை
மதுராந்தகன்
இராச இராச சோழன்
பாண்டிய ஆபத்துதவிகள்

ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா...இன்றைய வரலாறு இராச இராச சோழனையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் தான் நாம் உடையாளூர் கல்வெட்டுக்களைக் காண வேண்டி இருக்கின்றது.

உடையாளுர்க் கல்வெட்டுக்கள் ஆதித்தக் கரிகாலனை பிராமணர்கள் கொன்று விட்டனர் என்றும் அவர்களின் நிலங்களை இராச இராசன் பறிக்க உத்தரவிட்டான் என்றும் இருக்கின்றது. இதன் மூலம் பிராமணர்களே ஆதித்தக் கரிகாலனை கொன்று இருக்கின்றனர் என்ற ஒரு கருத்து நம்மிடையே வருகின்றது.

இந்நிலையில் தான் இன்னொரு கல்வெட்டுக் கூறும் செய்தியினை நாம் காண வேண்டி இருக்கின்றது. அக்கல்வெட்டு இராச இராசனின் காந்தளூர்ச் சாலைப் போரினைப் பற்றிக் கூறுகின்றது.

காந்தளூர்ச் சாலைப் போர் என்பது இராச இராசன் அரசனாக முடியேற்றப் பின்னர் நடத்திய முதல் போர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. காந்தளூர்ச் சாலை என்பது ஒரு பாட சாலை. அங்கே போர் கலைகள் பயிற்றுவிக்கப் பட்டுக் கொண்டிருந்தன என்றும் அது பிராமணர்களின் (ஆரியர்கள்) கட்டுக்குள் இருந்த ஒரு அமைப்பு என்றும், அங்கிருந்த நபர்களின் சூழ்ச்சியால் தான் தனது அண்ணன் கொலை செய்யப்பட்டான் என்பதினால் தான் தனது முதல் யுத்தத்தினை காந்தளூர்ச் சாலைக்கு எதிராக நடத்தினான் இராச இராச சோழன் என்றே ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். (புத்தகம்: இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - அலைகள் பதிப்பகம். மேலும் பல கருத்துக்களும் இப்போரினைப் பற்றி இருக்கத் தான் செய்கின்றன...ஆனால் அவற்றை நாம் வேறொரு பதிவில் பின்னர் காணலாம்).

இப்போதைக்கு இராச இராசன் அவனது அண்ணனை பிராமணர்கள்/ஆரியர்கள் கொன்று விட்டார்கள் என்றும் அதனால் தான் அவன் காந்தளூர் சாலையின் மீது போர் தொடுத்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிகின்றோம்.

இங்கே தான் நாம் மற்றொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. சோழர்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிம்மதியாக இருக்கவில்லை. போர்கள் அவர்களை அழைத்துக் கொண்டே தான் இருந்தன. அதுவும் வடக்கில் இருந்து யுத்தம் அவர்களுக்கு தூது விட்டுக் கொண்டே இருந்தது. (வடக்கே ஆரியர்களின் செல்வாக்கு ஏற்கனவே பலமாக இருந்தது என்று நாம் கண்டிருக்கின்றோம்)

இந்நிலையில் சோழ மன்னர்களின் வீழ்ச்சி வடக்கில் இருந்தவர்களுக்கு நிச்சயம் உதவும் தானே. அப்படிப்பட்ட ஒரு வீழ்ச்சிக்காக சோழ மன்னர்களை சதியால் கொல்ல முயலலாம் தானே...அதனால் தான் ஆதித்த கரிகாலன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் நாம் கருதலாம் தானே. நிற்க

ஆனால் அந்த சூழ்ச்சிகளானது இராச இராச சோழனின் காலத்திலும் சரி அவனின் மைந்தன் இராசேந்திர சோழனின் காலத்திலும் எடுபடாமல் சென்று விட்டதினை நாம் வரலாற்றினில் காணுகின்றோம். ஆனால் பின்னர் வந்த சோழர்கள்அத்தகைய சதிகளை கண்டறிந்து வென்றார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாகவே இருக்கின்றது. காரணம் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒன்றிணைந்து சாளுக்கிய சோழர்கள் என்று உருவாகி இருக்கின்றனர். சாளுக்கியர்களுடன் போரிட்டு வந்துக் கொண்டிருந்த சோழர்கள் அவர்களுடன் இணைந்ததற்கு காரணம் என்ன?

சோழ அரசனான அதி இராசேந்திர சோழன் மர்மமான நிலையில் வாரிசின்றி இறக்க சாளுக்கிய வம்சத்தைச் சார்ந்த முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறுகின்றான். எதனால் அதி இராசேந்திர சோழன் இறந்தான்? சாளுக்கியர்கள் அரியணை ஏற அவன் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டானா? என்பதெல்லாம் ஆராய வேண்டிய விடயங்களாகத் தான் இருக்கின்றன. ஆராய வேண்டியக் காரணம்...அதற்குப் பின்னர் தமிழ் நாட்டினை தமிழரே முழுமையாக ஆண்ட நிலை இன்று வரை பெருமளவு வரவே இல்லை என்ற உண்மை தான்.

தமிழர்களுள் சாதி ஏற்றத் தாழ்வுகளும், தமிழர்கள் தாழ்த்தப்பட்டமையும் ஏற்படத் தொடங்கியது அக்காலத்தில் இருந்து தான் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
(தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

இதன் மூலம் இராச இராசனின் காலத்தில் பெண்கள் தாழ்தப்பட வில்லை என்று நாம் அறிய முடிகின்றது தானே. (தகவல் அறிய உதவிய ம. செந்தமிழன் அவர்களுக்கு நன்றி)

வட இந்தியாவினில் இருந்த இந்திய அரசனை சூழ்ச்சியால் வீழ்த்தி அங்கு ஆரிய வர்த்தம் என்று தங்களின் அரசினை அமைத்த ஆரியர்கள் முழு இந்தியாவினையும் கைப்பற்றிக் கொள்ள உதவும் வண்ணம் அன்று இந்தியாவினில் எழுந்திருந்த பக்தி இயக்கத்தினை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர் என்று நாம் கண்டு வருகின்றோம். இப்பொழுது இதனைத் தொடர்ந்து நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில முக்கியமான விடயங்களைக் கண்டு விடுவது நன்றாக இருக்கும்.

௧) சைவமும் வைணவமும் தமிழகத்திலே தோன்றிய சமயங்கள்.

௨) சைவக் கோவில்களின் தலைமையிடம் சிதம்பரம். வைணவக் கோவில்களின் தலைமையிடம் திருவரங்கம். இவைகள் இரண்டுமே தமிழகத்திலேயே தான் இருக்கின்றன.

௩) சைவம் வளர்த்த நாயன்மார்கள் அறுபத்தி மூவரும் தமிழ்நாட்டையேச் சார்ந்தவர்கள். அவ்வாறே வைணவம் வளர்த்த ஆழ்வார்களும் தமிழ் நாட்டையேச் சார்ந்தவர்கள்.

௪) ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!! ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

௫) இன்று வேதங்கள் என்று சிலர் கொண்டாடும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களை தொகுத்தவர்கள் தமிழர்களே ஆவர்.

௬) உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், ஆகமங்கள், மகாபாரதம், இராமாயணம், பகவத் கீதை போன்ற நூல்கள், இதிகாசங்கள் போன்றவைகளை உருவாக்கியோர் அனைவரும் தமிழர்கள்.

௭) தமிழர்கள் உருவாக்கிய புதிய மொழியான சமசுகிருதத்திலேயே அந்நூல்களை அவர்கள் படைக்கின்றனர்.

௮) மேலும் சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!! நிற்க.

மேலே நாம் கண்ட விடயங்களின்படி அனைத்து ஆன்மீக நூல்களும் தமிழர்களாலேயே இயற்றப்பட்டு உள்ளன. ஆரியர்கள் எழுதிய நூல்கள் என்று எதுவுமே இல்லை. அனைத்தும் தமிழர்கள் எழுதியவை.

அட என்னங்க அனைத்தும் தமிழர்கள் எழுதியது என்றால் ஆரியர்கள் ஒன்றுமே செய்யவில்லையா என்ற எண்ணம் இங்கே வரலாம்...அவர்களும் அவர்கள் பங்குக்கு செய்து தான் இருக்கின்றனர்.

மேலே நாம் கண்ட நூல்களில் இடைச் செருகல்கள் பல செய்து உள்ளனர் (தொடக்கத்தில் இருந்த இராமாயணத்தை விட இப்பொழுது இருக்கும் இராமாயணம் அதிக மடங்கு பெரிதாக இருக்கின்றது...காரணம் பல இடைச் செருகல்கள். இதே நிலை தான் மகா பாரதத்திற்கும்)... அந்நூல்களுக்கு தவறான உரை எழுதி அர்த்தத்தினை மாற்ற முயன்று உள்ளனர்.

அவ்வாறு மேலே தமிழர்களால் உருவாக்கப்பட்ட நூல்களுக்கு தவறான உரை எழுதியவர்களுள் ஒருவர் தான் ஆதி சங்கரர். அவ்வாறு தவறான உரை எழுதி அவர் கண்டு வைத்த தத்துவம் தான் அத்வைதம். இதனைப் பற்றி நாம் விரிவாக நாம் இங்கே காணத் தேவை இல்லை. ஆனால் ஆதி சங்கரரைப் பற்றி நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

காரணம் சென்றப் பிறவியில் ஒருவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஒருவன் இப்பிறவியில் பிராமணனாகவோ அல்லது சூத்திரனாகவோ பிறக்கின்றான் என்று சமண பௌத்தச் சமயங்கள் கூறிய பிறவிச் சுழற்சிக் கொள்கையோடு வருணப் பாகுபாட்டையும் கொண்டு வந்து இணைத்து இன்று நம் மண்ணில் இருக்கும் பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற நிலைக்கு வித்திட்ட பெருமை ஆதி சங்கரரையே சாரும். அக்கொள்கையைப் பரப்பவே சங்கர மடங்கள் என்னும் நிறுவனங்களையும் அவர் நிறுவுகின்றார்.

இன்று வரை அம்மடங்கள் பிறப்பால் ஏற்றத் தாழ்வுகாணும் கொள்கையை சிறப்பாக வளர்த்துக் கொண்டு இருக்கின்றன. காரணம் பிறப்பால் ஏற்றத் தாழ்வு என்றக் கொள்கையில் பிராமணர்கள் அவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவதற்கு ஒன்றும் செய்யாமல் வெறுமனவே பிறந்தால் மட்டும் போதுமே. அதனால் தான் இன்று வரை பிராமணர்கள் சங்கர மடத்தினை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். சரி அது வேறு கதை. இப்போதைக்கு நமக்கு அது தேவை இல்லை.

நமக்கு இப்போதைக்கு வேண்டியது எல்லாம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்றக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆதி சங்கரரே ஆவார். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

ஒரு ஆங்கிலேயன் இருக்கின்றான்...அவனிடம் போய் நீ தாழ்த்தப்பட்டவன்...எனக்கு அடிமையாக நீ வேலை செய்ய வேண்டும் என்றுக் கூறினால் அவன் என்ன செய்வான்?

நம்மளை வெளுத்து வாங்கி விடுவான். சரி தானே. ஒருவனும் தான் மற்றவனுக்குத் தாழ்ந்தவன் என்று ஒரு காலமும் கருத மாட்டான் தானே. அப்படி இருக்க மாபெரும் வரலாற்றினையும் அறிவுக் கூர்மையையும் கொண்டிருந்த தமிழர்களிடம் ஒருவன் வந்து "தம்பி...நீ தாழ்ந்தவன்" என்றுக் கூறினான் என்றால் அவன் ஏற்றுக் கொண்டிருப்பானா அல்லது எதிர்த்து இருப்பானா?

எதிர்த்து தானே இருப்பான். சரி இப்பொழுது இன்னொரு சூழல்.

ஹிட்லரின் படை வென்று விட்டது. சர்வாதிகாரியாக ஹிட்லர் இருக்கின்றான். அப்பொழுது ஹிட்லரின் படையிடம் தோற்ற ஒரு நபரை "தம்பி...நீ பிறப்பால் தாழ்த்தப்பட்டவன்" என்று கூறினால் அவன் ஏற்றுக் கொள்வானா மாட்டானா? ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவன் உயிர் போய் விடும். அந்நிலையில் அவன் அவன் தாழ்ந்தவன் என்று ஏற்றுக் கொள்ளத் தானே செய்வான். சரி தானே.

இந்நிலையில் தான் நாம் பிறப்பால் ஏற்றத் தாழ்வுக் கொள்கை இந்தியாவில் பரவிய விதத்தைப் பற்றிக் காண வேண்டி இருக்கின்றது. பொது மக்களுள் பிரிவுகளை உண்டாக்க வேண்டும் என்றால் அரசனின் ஒத்துழைப்பு வேண்டும். அரசனின் ஒத்துழைப்பினைப் பெற என்ன வேண்டும்? அது ஒவ்வொரு அரசனைப் பொருத்தும் மாறும்... சிலருக்குப் பொன், சிலருக்கு பெண்...சிலருக்கு அதிகாரம்...இவைகளை ஆரியர்கள் நன்றாக உணர்ந்து இருந்தனர் என்பதனை நமக்கு வரலாறு காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.

இருந்தும் அனைத்து அரசர்களும் அவ்விதிகளுக்குள் அடைப்பட்டு விட மாட்டார்கள் தானே. சிலருக்கு வீரமும் மானமும் மட்டுமே கண்ணாக இருப்பதும் உண்டே. அவர்களை என்ன செய்ய முடியும்?

சூழ்ச்சியால் கொலை செய்ய முடியும்.

தமிழகத்தின் ஆதித்த கரிகாலனின் மரணம் அதைத் தான் உறுதிப்படுத்துகின்றது. சோழர்கள் மீண்டும் தலை எடுத்து வரும் காலம் நிகழ்கின்றது அக்கொலை. செய்தவர்கள் பிராமணர்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (இதனைப் பற்றி விரிவாக வேறொரு பதிவில் காண்போம்)

ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இருந்தே நாம்இப்பொழுது தமிழர்களின் நிலையைக் குறித்து காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  வியாசர் என்பவர் தனி மனிதர் அல்ல. வியாசர் என்னும் சொல் தொகுப்பவர் என்றே பொருள் தருவது. அதாவது வேத வியாசர் என்றால் வேதங்களைத் தொகுப்பவர் என்றே பொருள் வரும். அது ஒரு காரணிப் பெயர். எனவே வேதங்களையும் மற்ற நூல்களையும் தொகுத்தவர்கள் அனைவரையும் வியாசர் என்றப் பொதுப் பெயரால் அழைத்தார்கள்.

4) சமசுக்கிருதம் என்ற மொழி தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழி. சமசுகிருதம் என்றால் செம்மையாகச் செய்யப் பட்டது என்றே பொருள் தரும். இதனைப் பற்றி மேலும் அறிய (சமசுகிருதம் என்று ஒரு மொழி) என்ற பதிவினைப் பார்க்கவும்.

கி.பி ஏழாம் நூற்றாண்டு இந்தியாவின் ஒரு பகுதியை ஆரியர்கள் கைப்பற்றி விட்டனர் என்றும் அப்படிக் கைப்பற்றப்பட்ட பகுதியினைத் தான் ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் பெயரிட்டு அழைத்தனர் என்றும் நாம் சென்றப் பதிவில் கண்டோம். மேலும் அவ்வாறு கைப்பற்றப் பட்ட இடத்தில் இருந்த மக்களுக்கு இயற்றப்பட்ட சட்ட நூல் தான் மனு தர்மம் என்பதனையும் நாம் கண்டோம்.

இப்பொழுது நாம் இங்கே காண வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் எண்ணிக்கை...மக்கள் தொகை எண்ணிக்கை!!! என்ன தான் ஆரியர்கள் சூழ்ச்சியின் மூலமாக ஆட்சியினைப் பிடித்து இருந்தாலும் இந்திய மக்களோடு ஒப்பிடும் பொழுது அவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் (இன்றளவிலும் கூட அவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே தான் இருக்கின்றனர்). இந்நிலையில் வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்தால் ஆரியர்களால் நீண்ட காலம் ஆட்சியினைப் புரிய முடியாது. இதனை அவர்கள் நன்றாக புரிந்து வைத்துத் தான் இருந்தனர். அவர்கள் வேற்றவர்கள் என்று இந்திய மக்கள் உணர்ந்து, இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டால் நீண்ட நாட்களுக்கு ஆரியர்களால் அங்கே ஆதிக்கம் செலுத்த முடியாது.

அந்நிலையில் இந்திய மக்களை இவர்களை அவர்களுள் ஒருவராகக் கருத வைக்கவும் வேண்டும்...ஆனால் அதே சமயம் அவர்களின் ஆதிக்கமும் குறையக் கூடாது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றே ஆரியர்கள் சிந்திக்கலாயினர்?

மக்களை ஏமாற்ற என்ன செய்ய வேண்டும்...சூழ்ச்சி செய்ய வேண்டும். சூழ்ச்சி செய்வதற்கு ஆரியர்களுக்கு சொல்லித் தரவா வேண்டும்...இந்திய மக்களுள் கலக்கவும் அம்மக்களைப் பிரிக்கவும் சூழ்ச்சியினை செய்யத் துவங்குகின்றனர்.

அதனை அவர்கள் மிகவும் சிறப்பாக செய்ய காலமும் வசமாகத் தான் இருக்கின்றது.  ஏன் என்றால் அன்றையக் காலத்தில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தினைக் கண்டு கொண்டு இருந்தது. அது வரை இந்திய மண்ணில் செல்வாக்குப் பெற்று இருந்த சமண பௌத்த சமயங்களுக்கு மாறாக புதிய இறைக் கொள்கை வளர்ந்துக் கொண்டு இருந்தது. ஆம் சைவமும் வைணவமும் பக்தி இயக்கத்தின் விளைவாக இந்திய மண்ணில் வளர்ந்துக் கொண்டிருந்த காலம் தான் அது.

ஆரியர்கள் அம்மாற்றத்தினைக் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், ஆரியர்கள் என்பவர்கள் ஒரு காலத்தில் இந்தியாவின் மீது படை எடுத்து வந்து வந்தவர்கள் அல்ல என்றும் பல்வேறுக் காலங்களில் படை எடுத்து வந்து இந்தியாவில் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்து பின்னர் ஒரு காலத்தில் ஒன்றிணைந்த அன்னியர்களே ஆரியர்கள் ஆவர் என்று.

அவர்கள் இந்திய மண்ணில் பௌத்த சமயத்தைக் கண்டு இருக்கின்றனர். சமணத்தைக் கண்டு இருக்கின்றனர். அதனை எதிர்த்தும் இருக்கின்றனர். காரணம் அச் சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். விலங்குகளைப் பலி இடாதீர்கள் என்பதே அவற்றின் போதனை. ஆனால் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையோ பலியினையும் தீ வழிப்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்டது. முற்றிலும் மாறுப்பட்ட கொள்கைகள் தானே. அப்படி என்றால் அங்கே மோதல்கள் வந்து இருக்கத் தானே செய்து இருக்க வேண்டும். அது தான் நிகழ்ந்து இருந்தது வரலாற்றில்.

சுங்க அரசினை நிறுவிய பெர்சிய வம்சாவளியினைச் சார்ந்த புஷ்ய மித்திர சுங்கனின் காலத்தில் பௌத்தர்கள் வேட்டையாடப்பட்டனர் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அக்காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. ஆனால் காலத்தில் சுங்கனின் அரசு வீழ்ந்தது ஆனால் அவனால் ஒடுக்கப்பட்ட பௌத்த சமயமோ இந்தியா முழுவதும் பரவத் தான் செய்தது. அதனை அவர்களால் தடுக்க முடியவில்லை.சரி இருக்கட்டும் நாம் இப்பொழுது மீண்டும் கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கே வர வேண்டி இருக்கின்றது.

பக்தி இயக்கத்தின் வளர்ச்சியை ஆரியர்கள் கண்டு கொண்டு தான் இருக்கின்றனர். மக்கள் பெரும்பான்மையாக அவ்வியக்கத்தில் ஈடுபாடு காட்டுவதனையும் காணுகின்றனர்.

"மக்களின் செல்வாக்கு இருக்கின்றது...மேலும் பௌத்த சமண சமயங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு வேறு இருக்கின்றது...நன்று...மிக நன்று...இந்த இயக்கத்தினை மட்டும் நம்முடைய நோக்கிற்கு கைப்படுத்திக் கொண்டு விட்டோம் என்றால் நம்முடைய செல்வாக்கினை பலமாக வலுப்படுத்திக் கொள்ள முடியும்" என்று எண்ணியே சைவ வைணவ சமயத்தின் மீது அவர்களின் பார்வையினைப் படர விடுகின்றனர். சைவ வைணவ சமயங்களுள் தங்களின் கருத்துக்களை நுழைக்க சூழ்ச்சியினை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

சைவ வைணவ போர்வையில் அவர்களின் வேள்விக் கோட்பாடுகளை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அதனை தமிழகத்தில் தொடங்கி வைப்பவர் வேறு யாருமல்ல... திருஞானசம்பந்தர் தான்.

என்ன அதிர்ச்சியாக இருக்கின்றதா? நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். காரணம் திருஞானசம்பந்தரின் மேல் இன்று நம் நாட்டினில் கட்டப்பட்டு உள்ள பிம்பம் அத்தகையது. எனவே சைவத்தை திசைத் திருப்பியது திருஞானசம்பந்தர் என்றால் நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் திருஞானசம்பந்தரை நாம் மட்டுமே குறைக் கூற வில்லை. திருநாவுக்கரசரும் கூறி இருக்கின்றார்.

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"


என்று ஞானசம்பந்தர் குற்றங்கள் புரிகின்றார் என்றே திருநாவுக்கரசர் கூறி இருக்கின்றார். அது ஏன் என்றும் நாம் சிந்திக்கத் தானே வேண்டி இருக்கின்றது. மேலும் வேள்விகளுக்கு துளியும் தொடர்பில்லாத சைவ சமயத்தினுள் வைதீக கருத்துக்களைப் பரப்பியவரும் சம்பந்தர் தாம்.


"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."


மேலே உள்ள வரிகள் மூலம் சமணர்களை சம்பந்தர் வெறுக்கின்றார் என்றும், அவர்கள் வேள்வியினை மதிப்பதில்லை என்ற காரணத்திற்காகவே அவர்களை வெறுக்கின்றார் என்பதும் புலனாகின்றது அல்லவா.

மேலும் பெரிய புராணத்தினைத் தொகுத்த சேக்கிழார் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கின்றார்...

" இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
  வந்த வைதீக மாமணி " என்று.

அதாவது திரு ஞானசம்பந்தர் சைவ சமயத்தை அல்ல வைதீக சமயத்தினையே வளர்த்தார் என்றே தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அரசனைக் கைக்குள் வைத்துக் கொண்டு அன்பைப் போதித்த சைவ சமயத்தின் வாயிலாக 8000 சமணர்களையும் கொலை செய்தார் திருஞான சம்பந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (அவ்வாறு சம்பந்தர் கொலை செய்த தமிழ் சமணர்களின் உறவினர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சம்பந்தரை தீ வைத்துக் கொன்றனர் என்றக் கூற்றும் இருக்கின்றது)

மேலும் சமயக் குரவர்களுள் தமிழரான திருநாவுக்கரசரைப் பின் தள்ளி விட்டு திருஞானசம்பந்தருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருப்பதும், வேதாரணியத்தில் திருநாவுக்கரசர் பாடி திறக்காத கதவு திருஞானசம்பந்தர் பாடி திறந்தது என்று திருநாவுக்கரசரை தாழ்த்தி திருஞானசம்பந்தரை உயர்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பன்னிரு திருமுறைகளிலும் திருஞானசம்பந்தரே முதன்மைப் படுத்தப்பட்டு இருப்பதும் தற்செயலான விடயம் அல்ல. காரணம் அவற்றைத் தொகுத்ததும் நம்பியாண்டார் நம்பி என்ற ஒரு ஆரியர் தாம்.நிற்க. (தொடர்புடைய பதிவுகள்: உலகின் வரலாறு – 4, உலகின் வரலாறு – 5)

சுருக்கமாகக் காண வேண்டும் என்றால் சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத வைதீகக் கருத்துக்கள் பக்திஇயக்கக் காலத்தில் அச் சமயங்களுடன் மெதுவாக இணைக்கப்படுகின்றன. ஆரியர்கள் மெதுவாக தமிழர்களின் சமயங்களின் மேல் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

ஒருவன் ஒரு அரசியல் கட்சியின் தலைமையில் அமர வேண்டும் என்று எண்ணினால் என்ன செய்ய வேண்டும்? அவனுக்கு போட்டியாக இருக்கும் நபர்களை முதலில் ஒதுக்க வேண்டும்...பின்னர் கட்சியின் தலைமையில் இருக்கும் நபர்களை ஏமாற்றி அவ்விடத்தை அவன் பிடிக்க வேண்டும். பின்னர் பிடித்த அவ்விடத்தை தக்க வைத்துக் கொள்ள அக்கட்சியின் கொள்கைகளை அவனுக்கு ஏற்றார்ப் போல் மாற்ற வேண்டும். சரி தானே. இயல்பான நிலை அப்படி இருக்க ஒரு ஆன்மீக இயக்கத்தினை பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மீகத் தலைவர்களை ஒதுக்க வேண்டும்...அச் சமயக் கருத்துக்களை தமக்கு ஏற்றார்ப் போல் மாற்றிக் கொண்டு அச் சமயத்தின் தலைமையைப் பிடிக்க வேண்டும். சரி தானே. இங்கே அது தான் நடந்து இருக்கின்றது.

ஆன்மீகத் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர். பலர் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இறுதி நாயன்மாரான நந்தனாரும், இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் சரி கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. சித்தர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. வள்ளலாரும் கொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

பல நாயன்மார்கள்/ஆழ்வார்கள் தாழ்த்தப்பட்ட இனங்களில் இருந்து வந்து இருக்கின்றனர் என்றே இன்றுக் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வில்லை (அன்று தான் சாதி ஏற்றத் தாழ்வுகளோ அல்லது பிறப்பின் அடிப்படையில் வேறு பிரிவுகளோ நம்மிடையே இல்லவே இல்லவே)... பிற்காலத்திலேயே தான் சதிகள் காரணமாக அவர்களின் இனம் தாழ்த்தப்பட்ட இனமாக மாற்றப்பட்டது. காரணம்...சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் மேல் அவர்களின் செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அச்சமயத்திற்கு உண்மையிலேயே உரிமையானவர்களை தாழ்த்தினால் தானே முடியும். அது தான் இங்கே நடந்து இருக்கின்றது. சரி அவற்றைப் பற்றி நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

இப்பொழுது ஆரியர்களின் வைதீகச் சமயம்தமிழர்களின் சைவ வைணவ சமயங்களினுள்மெதுவாகநுழைய ஆரம்பித்து இருக்கின்ற காலக் கட்டத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டி இருக்கின்றது.

காரணம் இன்றைய இந்தியாவில் திகழும் அனைத்து சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணியாக கருதப்படுகின்ற ஒரு நபர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறு யாரும் இல்லை...இன்று சங்கர மடங்களால் கொண்டாடப்படும் ஆதி சங்கரர் தான் அது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) "குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது. ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது." என்றே மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கூறுகின்றார்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு