லூக்காவின் ஓவியம்:

லூக்கா அவருடைய எழுத்துக்களில் மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஏன் இயேசுவின் சீடர்கள் எவருமே மரியாளை கடவுளாக சித்தரித்து இருக்கவில்லை. ஒரே கடவுள் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலையில் இருக்கின்றார் என்பதே அவர்களின் கருத்து. அவ்வாறு இருக்கையில் கி.பி 30இல் லூக்கா மரியாளை கடவுளாக சித்தரித்து ஓவியம் வரைந்தார் என்பது எவ்வாறு ஏற்புடையது?

மேலும் விவிலியத்தின் படி இயேசுவே தான் இறக்கும் தருவாயில் மரியாளிடம் 'இதோ உன் மகன்' என்று யோவானைக் காட்டி விட்டுத் தான் இறந்து இருக்கின்றார்.

"அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்."

அவ்வாறு இருக்கையில் எவ்வாறு மரியாள் கடவுளாக ஆக்கப்பட்டார்? மரியாளை கடவுளாக சித்தரித்து லூக்கா வரைந்தார் என்று ஏன் கூற வேண்டும்?

பலி கேட்ட கடவுளும் பலியான கடவுளும்:

பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கடவுள் ஒரு இனத்தாருக்கு மட்டுமே உரியக் கடவுளாக, பலி கேட்கும் கடவுளாக அறியப்படுகின்றார்.

"நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்." - லேவியராகமம் 1

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இறைவன் அன்பே உருவானவராக மக்களுக்காக மனிதனாக உலகில் வந்து பலியானவராக அறியப்படுகின்றார். புதிய ஏற்பாட்டுக் கடவுள் பலி கேட்கவில்லை...மேலும் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்' என்றக் கருத்தினையும் கூறி இருப்பவராய் இருக்கின்றார்.

ஏன் இந்த முரண்பாடு...முரண்பாடுகள் உடையவர் கடவுளாக இருக்க முடியுமா? இல்லை தானே... அப்படி என்றால் பிழை எங்கே இருக்கின்றது கடவுளிலா அல்லது நூலிலா அல்லது நூலினைப் புரிந்துக் கொண்ட விதத்திலா?

தோமாவும் இந்தியாவும்:

தோமா இந்தியா வந்தார் அதுவும் குறிப்பாக தமிழகம் வந்தார்...அங்கேயே அவர் கொலையும் செய்யப்பட்டார் என்றக் கருத்து இங்கே இருக்கின்றது. சென்னையில் புனிதத் தோமா மலை, சாந்தோம் தேவாலயம் போன்றவைகள் தோமா இங்கே இருந்தார் என்று கூறிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் போப்போ 'தோமா இந்தியா சென்றார் என்பது ஒரு கட்டுக்கதை' என்றுக் கூறுகின்றார். ஏன் இவ்வாறு போப் கூற வேண்டும்? இவ்விரண்டுக் கூற்றுகளில் எது உண்மை?

தோமா இந்தியா வந்தார் என்பதனை ஏற்றுக் கொண்டால் தோமாவின் கருத்துக்கள் இங்கே எந்தளவு பரவி இருக்கின்றன என்று ஆராய வேண்டி வரும், அவ்வாறு ஆராய்ந்தால் கிருத்துவத்தினை ரோமர்களும் போப்களும் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர் என்பது புலனாகி விடும் என்ற அச்சத்தினால் தோமாவின் வருகையை மறுக்கின்றாரா போப்?

இல்லை தோமா தமிழகம் வரவே இல்லை என்றால் எதற்காக முன்னர் கபாலீஸ்வரர் கோவில் இருந்த இடத்தினை இடித்து விட்டு அங்கே தோமாவின் கல்லறை இருக்கின்றது என்றுக் கூறி எதற்காக ஒரு தேவாலயம் கட்ட வேண்டும்?

ஒன்று போப்பின் கூற்று உண்மையாக இருக்க வேண்டும் இல்லை தோமா இந்தியா வந்தது உண்மையாக இருக்க வேண்டும், அதற்கு மாறாக வேறு ஒரு விடை இருக்க வாய்ப்பே இல்லை.

இந்நிலையில் ஒன்று போப் அவரின் கூற்றினைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தோமா தமிழகம் வந்தார் என்றுக் கூறும் கிருத்துவர்கள் அக்கூற்றினை மாற்றிக் கொண்டு சென்னையில் தோமாவின் அடையாளங்கள் என்று அவர்கள் கூறுவனவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். மாறாக இருவருமே அவர்களதுக் கருத்துகளை மாற்றிக் கொள்ளாது இருப்பது அரசியலே ஆகுமே அன்றி ஆன்மீகமாகாது.

தொடர்புடைய இடுகைகள்: (இந்தியாவில் தோமா, கபாலீசுவரர் கோவில்,)

கிருத்துவமும் மனு தர்மமும்:

அனைத்து மனிதர்களும் சமம் என்றுக் கூறுவது கிருத்துவம். ஆனால் அதற்கு மாறாக மனிதர்களைப் பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுடன் பிரிப்பது மனு தர்மம். அவ்வாறு இருக்கையில் இவ்விரண்டுக்கும் தொடர்பே இருக்க முடியாது. முற்றிலுமாக மாறுப்பட்ட இரு கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றன இரண்டும்.

அவ்வாறு இருக்க...மனுதர்மத்தினை மொழிபெயர்த்து அதனை இந்தியாவில் உள்ள பெருவாரியான சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றிய மக்களுக்கு சட்ட நூலாக ஆக்கிய சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களுக்கு இங்கிலாந்து தேவாலயத்தில் சிலை எதற்கு....அதுவும் மனு தர்ம நூலினை கையில் ஏந்திக் கொண்டு இருப்பதனைப் போன்ற சிலை எதற்கு?

"கிருத்துவ சமயத்தினை அடிமைப்படுத்தி அதன் வாயிலாக உலகின் பல்வேறு மக்களை கட்டுக்குள் இன்று தேவாலயங்களும் போப்களும் வைத்து இருப்பதனைப் போன்று, சைவ வைணவ சமயங்களை அடிமைப்படுத்தி இந்திய மக்களை கட்டுக்குள் வைத்து இருக்கின்றனர் என்பதனால் பிராமணர்களுடன் ஏற்பட்ட கூட்டுக் காரணமாக, எக்காலத்திலும் உண்மை வெளிப்பட்டு நம்முடைய மேலாதிக்கம் குறைந்து விடக் கூடாது என்றே மனு தர்மத்தினை தேவாலயத்தில் வைத்து அழகுப் பார்கின்றனரா?"

நிறவெறியுடன் கூடிய இனவெறியினை கத்தோலிக்கத் திருச்சபை வளர்க்கின்றது...சாதி வெறியுடன் கூடிய இனவெறியினை இங்கே மனு தர்மம் வளர்க்கின்றது...அவ்வாறு ஏற்படும் கலவரங்கள் மூலமாக சிலர் தங்களது அரசியல் செல்வாக்கினை பலப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் தான் சமயங்களை அடிமைப்படுத்தியவர்கள் தங்களுக்குளே ஏற்படுத்திக் கொண்ட கூட்டின் வெளிப்பாடாக மனுதர்மம் கிருத்துவர்களின் கோவிலினுள் இருக்கின்றதோ?

போப்:

கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னர் ரோமர்கள் மட்டுமே போப் ஆக வர முடிகின்ற நிலை இருந்தது.

இயேசு கிருத்து ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்.
அவரின் சீடர்கள் அனைவரும் ஆசிய நாட்டினைச் சார்ந்தவர்கள்.
அவர் பேசிய மொழி ஆசிய மொழி.
விவிலியம் தொகுக்கப்பட்டது ஆசியாவில்.

அவ்வாறு இருக்கையில் ரோம நாட்டினைச் சார்ந்தவர்கள் மட்டுமே அச்சமயத்தின் தலைவர்களாக வர முடியும் என்பது அரசியலா ஆன்மீகமா? கிருத்துவச் சமயம் அடிமையாக்கப்பட்டதைத் தானே இது காட்டுகின்றது.

மாட்ரின் லூதர் என்பவரின் எழுச்சிக்கு பின்னர் தான் ரோமர்களைத் தவிர மற்ற ஐரோப்பியர்களும் போப் ஆக வரலாம் என்ற நிலை வருகின்றது. இப்பொழுதும் ஐரோப்பியர்களே போப் ஆக வர முடியும் என்றால் இது ஆன்மீக ரீதியிலான ஏற்பாடா இல்லை அரசியல் ரீதியான ஏற்பாடா?

இயேசுவின் சீடர்கள் அனைவரும் அவர்களின் கருத்துக்களுக்காக கொல்லப்பட்டனர் என்பதும் கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னரே கிருத்துவம் அரச சமயமாக வடிவு பெறுகின்றது என்று நாம் கண்டிருக்கின்றோம். அக்காலத்திலேயே அது ஆன்மீக பாதையில் இருந்து அரசியல் பாதைக்கு அடிமையாக்கி மாற்றப்பட்டு விட்டது என்று நாம் கருத முடிகின்றதா இல்லையா?

தொடர்புடைய இடுகைகள்: (கிருத்துவத்தின் வரலாறு)

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.
2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

சைவ வைணவ சமயங்களைப் பற்றி சில கேள்விகளை சென்றப் பதிவினில் கண்டாயிற்று. இப்பொழுது கிருத்துவ சமயத்தினைப் பற்றியே நாம் காண வேண்டி இருக்கின்றது. (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

இன்றைக்கு இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அவர்களின் சமயங்களில் வழங்கப்பெறும் நூல்களையே இறைவன் அளித்த நூல்கள் என்றும் அந்நூல்கள் இறவாத்தன்மை உடையன என்றுமே பெரும்பாலும் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையே இன்றைய கிருத்துவ சமயத்திலும் காணப்படுகின்றது. முரண்பாடுகள் எத்தனை இருந்தாலும் சரி அது இறை வாக்கு அதனை நாம் கேள்விக் கேட்க கூடாது என்ற எண்ணத்துடனே விவிலியத்தினை அவர்கள் காணுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறுக் கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது…முரண்பாடுகள் இருக்கின்றன என்றால் அவை ஏன் இருக்கின்றன எதனால் இருக்கின்றன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்.

உலகத் தொடக்கம்:

1) பழைய ஏற்பாட்டின்படி முதல் மனிதன் ஆதாம் என்றும் முதல் பெண் ஏவாள் என்றும் அழைக்கப் படுகின்றனர்…மேலும் வெள்ளத்தில் பிழைத்த மனிதன் நோவா என பெயர் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் இதே படைப்புக் கதை விவிலியம் தொகுக்கப் படுவதற்கு வெகு காலங்கள் முன்னரே சுமேரிய/பாபிலோனிய இலக்கியங்களில் காணப்படுகின்றதே… அதனில் முதல் மனிதனின் பெயர் ஆதப்பா என்றும் வெள்ளத்தில் இருந்து பிழைத்த மனிதனின் பெயர் ஊத் நா பிச்டிம் என்றும் இருக்கின்றதே அது ஏன்? விவிலியத்தில் இருப்பது அனைத்தும் உண்மை என்றால் ஏன் இந்தப் பெயர் வித்தியாசங்கள்?

2) ஆதியாகமத்தில் இறைவன் கிழக்கே ஏதேன் என்ற தோட்டத்தினை உருவாக்கி அங்கே முதல் மனிதனை வைத்தார் என்ற செய்தி வருகின்றது. நமது உலகமோ உருண்டை…மேலும் இறைவனுக்கு ஏது கிழக்கு மேற்கு? அவ்வாறு இருக்க அங்கே கிழக்கு என்று குறிப்பாக குறிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்ன?

விவிலியம் தொகுக்கப்பட்டது மத்திய ஆசிய நிலப்பரப்பில்…எனவே அந்த இடத்திற்கு கிழக்கே இருந்த பகுதியில் இறைவன் மனிதனைப் படைத்தார் என்ற பொருள்பட ‘கிழக்கு’ என்றச் சொல் பயன் படுத்தப்பட்டு இருக்கின்றது என்று நாம் கருத முடியும் தானே?

பார்க்க: (உலகின் தோற்றம் , ஆதாம் என்ற தமிழன், நோவாவின் கதை)

3) //இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.// – ஆதியாகமம் 2-13

எத்தியோப்பியா என்ற தேசம் உலகத் தொடக்கம் முதலேவா இருந்து வந்தது? அப்படி இருந்தால் அப்பிரதேசமோ சரி சுமேரிய/பாபிலோனிய இடப் பிரதேசங்களோ வெள்ளத்தால் அழிந்தமைக்கு சான்றுகள் இல்லையே…அவ்வாறு இருக்க அந்த இடம் தான் இறைவன் மனிதனைப் படைத்த இடம் என்றுக் கூறுவது எவ்வாறு?

மேலும் மத்திய ஆசிய நிலப்பரப்பில் காணப்படும் நாகரீகங்களின் காலங்களை விட மிகப் பழைய நாகரீகங்கள் தமிழகத்தில் காணப்படுவதன் காரணம் என்ன?

4) //பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்//

//இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.//

உலகத் தொடக்கத்திலேயே மனிதன் ஆடுகளை மேய்க்கவும் விவசாயம் பண்ணவும் அறிந்துக் கொண்டானா? விவிலியத்தின் படி ஆதாமுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர்…அதில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விடுகின்றான். அவ்வாறு இருக்க காயின் உலகின் மற்ற மக்கள் என்னைக் கொன்றுப் போடுவார்கள் என்றுக் கூறுவது போல் வருகின்றதே அது ஏன்? மற்ற மக்கள் எங்கே இருந்து வந்தனர்? எப்பொழுது வந்தனர்?

5) //அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.//

இராட்சசர்கள் பூமியில் இருந்தனர் என்றால் அவர்களைப் படைத்தது யார்? அவர்கள் என்னவானார்கள்?

ஆபிரகாமும் ஊரும்:


1) ஆபிரகாம் ஊர் என்ற இடத்தில் இருந்து கிளம்பினான் என்றச் செய்தி விவிலியத்தில் வருகின்றது…(ஆதியாகமம் – 11: 28:31).

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் ஊர் என்பது சுமேரியாவில் இருந்த ஒரு ஊரின் பெயர் என்று. மேலும் ‘ஊர்’ என்றச் சொல் எந்த மொழிச் சொல் என்றும் நமக்கு வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. மேலும் சுமேரியர்கள் தமிழர்களே என்றே இன்றைக்கு ஆராய்ச்சிகள் பலவும் கூறுகின்றன? இந்நிலையில் ஆபிரகாம் யார்? தமிழனா?


பார்க்க: (யாகோவா, எல் என்றொரு கடவுள், மேசொபோடமியர்கள் தமிழர்களா)

2) ஒருவனுக்கு ஒருத்தி என்பதே புதிய ஏற்பாட்டின் கருத்து…அதையே தான் இயேசுவும் கூறுகின்றார்… ஆனால் ஆபிரகாமிற்கு மூன்று மனைவிகள் கூறப்பட்டு உள்ளனரே… ஒருவர் சுமேரியாவைச் சார்ந்தவர், மற்றொருவர் எகிப்தினைச் சார்ந்தவர்…மற்றொருவர் கிழக்கில் இருந்து வந்தவர் என்று இருக்கின்றதே… மீண்டும் கிழக்கு வருகின்றது… கிழக்கு என்றால் என்ன? சிந்து சமவெளியா? மேலும் ஆபிரகாம் செய்ததற்கு மாறாக கிருத்து கூறுகின்றாரே… அது ஏன்?

மோசே:

1) இன்றைக்கு இராசபக்சே ஒரு இனவெறி பிடித்த கொலைகாரன் அவ்வளவே…அதில் மாற்றுக் கருத்துக்கள் மனசாட்சியுடன் இருப்பவர்களுக்கு நிச்சயம் இருக்காது. ஆனால் அவனையும் மிஞ்சிய செயலை செய்தவனாக அல்லவா மோசே இருக்கின்றான்…

//எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்//

இதற்கு என்ன விளக்கம் கூற முடியும்? இறைவன் கூறினார் என்றா? இவ்வாறு மனசாட்சி இல்லாத இறைவனா அவரது மகனையே மக்களுக்காக பலியாக்க அனுப்புவார்?

2) “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை” (யோவான் 10:8) என்று இயேசு கூறியது யாரை?

//அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை// மத்தேயு 19:8

இதன்படி இறைக் கருத்துக்கு மாறாக மோசே செயல் பட்டு இருக்கின்றார் என்று நாம் அறிகின்றோம்? ஏன் அவ்வாறு அவர் செயல்பட்டார்? இப்படி இருக்க அவர் செய்ததை எல்லாம் எப்படி நாம் இறைவன் கூறியதாக ஏற்றுக் கொள்ள முடியும்?

புதிய ஏற்பாடு:

1) பழைய ஏற்பாடு யூதர்களின் நூல் என்றும் அது யூத இனத்தினைச் சார்ந்தவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் வரலாற்றையும் கருத்துக்களையும் கொண்டு உள்ளது என்றே நாம் கூறுகின்றோம். சிலர் மறுக்கின்றனர்…அதற்கு அவர்கள் காட்டும் வசனம்,

//நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.// மத்தேயு 5: 17

புதிய ஏற்பாட்டினில் இயேசு இவ்வாறு கூறுகின்றது போல் வருகின்றது, இதனை அடிப்படையாகக் கொண்டு பழைய ஏற்பாட்டிற்கு ஆதரவாக பேசும் மக்கள் ‘இதோ இயேசுவே பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்றுக் கூறி இருக்கின்றாரே….பின்னர் எவ்வாறு பழைய ஏற்பாடு கிருத்துவர்களுக்கு தொடர்பில்லாத ஒன்றாகும்” என்றுக் கேட்கின்றனர். சரியான கேள்வி தான், ஆனால் இயேசுவின் பின் வரும் கருத்துக்களோ முற்றிலும் பழைய ஏற்பாட்டிற்கு மாறாக அல்லவா உள்ளன…

//தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.// (இயேசுவின் கருத்து)

//கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.// (இயேசுவின் கருத்து)

//உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.//(இயேசுவின் கருத்து)

இந்த வசனங்களின் மூலம் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்கள் தவறென்றும் அதற்கு பதிலாக வேறு கருத்துக்களை இயேசு கருதி கூறி இருப்பது தெளிவாகின்றது. அது ஏன்? இறைவனின் கருத்துக்கள் மாறிக் கொண்டே இருக்குமா? இல்லை தானே… அப்படி இருக்க இயேசு பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மறுத்ததன் காரணம் என்ன?

(மேலும் படிக்க - பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்)

மரியாள் வணக்கம்:


விவிலியத்தின் படி இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான். அவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது. இந்நிலையில் எவ்வாறு மரியாள் வணக்கம் கிருத்துவத்தின் ஒரு பகுதியாயிற்று? எப்பொழுது அது ஒரு பகுதியாயிற்று?

கான்சுடன்டைன் காலத்திற்கு முன்னர் மரியாள் வணக்கம் கிருத்துவர்களின் மத்தியில் இருந்தமைக்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா?

இயேசுவின் சீடர்கள் மரியாளை இறைவனாக குறிக்கும் வண்ணம் குறிப்புக்கள் ஏதேனும் எழுதிச் சென்று இருக்கின்றனரா? அவ்வாறு ஏதும் இல்லாத நிலையில் எவ்வாறு மரியாள் இறைவனாக்கப்பட்டார்? பெண் தெய்வங்களைக் கொண்ட நாகரீகங்களைக் கவர கான்சுடன்டைனால் பயன்படுத்தப்பட்ட ஒரு யுக்தியா இது?

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

எனது சுற்றத்தினன் டோடோரோ: (My Neighbour Totoro)

சில நேரங்களில் உங்களை அறியாமலேயே சில படங்களினுள் மூழ்கித் தொலைந்து போய் இருக்கின்றீர்களா? என்றோ நாம் வாழ்ந்துக் கடந்த நாட்களை நினைவுகளில் தேடிக் கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு படம் நாம் தொலைத்த அத்தருணங்களை, நாம் வாழ்ந்து மகிழ்ந்த அத்தருணங்களை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதனை உணர்ந்து இருக்கின்றீர்களா? இல்லையா...பிரச்சனை இல்லை...இந்தப் படத்தினைப் பாருங்கள் ஒரு வேளை என்னைப் போல் நீங்களும் இப்படத்தினுள் தொலைந்துப் போகக் கூடும்...!!!

சட்சுகி மற்றும் மெய் ஆகிய இரு சிறுமிகள் தங்களின் தந்தையோடு ஒரு புதிய ஊருக்கு வருவதில் இருந்தே இக்கதை தொடங்குகின்றது. அச்சிறுமிகளின் தாயார் உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்க, அவருக்கு அருகாமையிலேயே இருப்பதற்காக புதிய ஊருக்கு தனது மகள்களைக் அழைத்துக் கொண்டு வருகின்றார் பேராசிரியரான டாட்சுவோ குசக்காபே அவர்கள். புதிய வீடு, புதிய ஊர், புதிய மக்கள் என்று அனைத்தும் புதிதாக இருந்த போதும் சட்சுகிக்கும் அவளின் தங்கைக்கும் அவை அனைத்தும் விரைவில் பிடித்துப் போய் விடுகின்றன...பின்னே பரந்து விரிந்து இருக்கும் வயல்கள், அவற்றின் குறுக்கே ஓடும் நீரோடைகள், எங்கு காணிலும் இயற்கையின் எழில் ஓவியங்கள்...இவை போதாதென்று அவர்களை தங்களின் வீட்டினில் ஒருவராகவே எண்ணும் சுற்றத்தினர் என்று அனைத்தும் அருமையாக இருக்கும் பொழுது யாருக்குத் தான் அங்கே வாழப்பிடிக்காதுப் போய் விடும்.

புதிய வீட்டினை சுற்றிப் பார்ப்பதும், தங்களின் தந்தைக்கு உரிய உதவிகளைச் செய்வதம் ஒருவருடன் ஒருவர் விளையாடுவதும் என்றே பொழுதினை கழிக்கின்றனர் சட்சுகியும் மெய்யும். அவர்களின் தாயார் மருத்துவமனையில் இருப்பதினால் வீட்டினில் கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு கூடுதலாக 'அக்கா என்பவள் இன்னொரு அம்மாவுக்கு சமம்' என்பதனைப் போன்றே தனது தங்கையையும் மிக்க கவனத்துடன் கவனித்து வருகின்றாள் சட்சுகி.

இவ்வாறு நாட்கள் நகர சட்சுகியின பள்ளியும் ஆரம்பமாகின்றது. பள்ளிக்குச் செல்ல தொடங்குகின்றாள் சட்சுகி. மெய்க்கு வருத்தம் தான் ஆனாலும் பெரிய கவலையில்லை...மாலையில் அவளின் அக்கா திரும்பி வந்து விடுவாள்...அதுவரை பொழுதினைப் போக்க இருக்கவே இருக்கின்றது தோட்டம்...அதனில் விளையாடிக் கொண்டிருந்தால் நேரம் போவதனைக் கேட்கவா வேண்டும். தோட்டத்தினில் அவளாய் விளையாட ஆரம்பிக்கின்றாள் மெய். அப்பொழுது தான் அந்த வினோத மிருகங்களை அவள் காணுகின்றாள்.

இரு சிறிய மிருகங்கள் அவர்களின் தோட்டத்தின் வழியாக ஒரு மூட்டையினில் சில விதைகளை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கின்றன. வினோதமான மிருகங்களாக இருக்கின்றனவே என்று எண்ணியே அவைகளை மெய் துரத்த ஆரம்பிக்க, அந்த மிருகங்கள் அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு புதரினுள் நுழைக்கின்றன. அவைகளைத் தொடர்ந்து மெய்யும் அப்புதரினுள் நுழைகின்றாள். அப்புதரின் வழியே செல்லும் பாதை அவளை ஒரு பெரிய கற்பூர மரத்தின் அடியே கொண்டு சென்று விடுகின்றது. அம்மரத்தின் மீது அவ்விலங்குகள் ஏறி ஓட மெய்யும் தொடர்ந்து துரத்துகின்றாள்...அவ்வாறுத் துரத்துகையில் அம்மரத்தில் உள்ள ஒரு பொந்தினில் தவறி விழுந்தும் விடுகின்றாள்.

எழுந்துப் பார்க்கும் மெய்க்கு ஆச்சர்யம் காத்து இருக்கின்றது...அங்கே அவள் துரத்திச் சென்ற விலங்குகளைப் போன்ற ஒரு மிகப் பெரிய விலங்கு உறங்கிக் கொண்டு இருக்கின்றது. அதன் மேல் ஏறி அதனுடன் பேசி அதற்கு பெயரினை டோடோரோ என்றுச் சூட்டியப் பின் களைப்பில் அம்மிருகத்தின் வயிற்றின் மேலேயே உறங்கிப் போகின்றாள் மெய்.

அதே நேரம் பள்ளி முடிந்து வந்த சட்சுகி மெய்யினை காணாது வீடு முழுவதும் தேடுகின்றாள். பின்னர் மெய் நுழைந்த புதரின் வெளியே அவளின் தொப்பிக் கிடப்பதனைக் கண்டு சட்சுகியும் அப்புதரின் உள்ளே நுழைகின்றாள். அங்கே புதரின் வழியே செல்லும் பாதையில் சிறு தொலைவில் மெய் உறங்கிக் கொண்டு இருப்பதனைக் கண்டு அவளை எழுப்புகின்றாள் சட்சுகி. எழுந்த மெய் அவளின் அக்காவிடம் அவள் கண்ட மிருகம் டோடோரோவினைப் பற்றியும் அந்த மரத்தினைப் பற்றியும் ஆவலுடன் கூறுகின்றாள்...ஆனால் அதனை நம்புவது சட்சுகிக்கு கடினமாக இருக்கின்றது. காரணம் அந்த புதரின் வழியே எந்த ஒரு மரமும் அவள் பார்வைக்குக் காணப்படவில்லை மேலும் மெய்யாலும் மீண்டும் அந்தப்பாதையினை அடையாளம் காட்ட முடியவில்லை. அந்த புதரின் பாதை மீண்டும் மீண்டும் அவர்களின் தோட்டத்திலேயே சென்று முடிந்தது.

"நான் பொய் சொல்லவில்லை" என்று வருத்தத்துடன் மெய் சொல்ல அவளைப் புரிந்துக் கொண்ட அவளின் தந்தை "நானும் சட்சுகியும் உன்னை நம்புகின்றோம் மெய்....ஒருவேளை நீ வன தேவதைகளைப் பார்த்து இருக்கலாம்...அவைகளை அனைவரும் காண முடியாது...அவைகள் யாரைப் பார்க்க விரும்புகின்றனவோ அவர்கள் மட்டுமே அவைகளைக் காண முடியும்...நீ மிகவும் கொடுத்து வைத்தவள் மெய்...உனக்கு வன தேவதைகள் காட்சி அளித்து உள்ளன. வா நாம் அவைகளுக்கு நன்றி செலுத்துவோம்" என்றுக் கூறி தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வன தேவதைகள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே மெய்யின் ஆச்சர்யத்திற்கு அவள் டோடோரோவை சந்தித்த கற்பூர மரம் அங்கே இருந்தது. அதனை மெய் சட்சுகியிடனும் அவர்களின் தந்தையிடனும் கூற சட்சுகி சிறிது வருத்தமடைகின்றாள்..."ஏன் வன தேவதைகள் அவளை வந்துக் காணவில்லை என்றே...". ஆனால் அவளும் நீண்டக் காலம் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை, ஒரு நாளில் வன தேவதைகள் அவளையும் வந்துப் பார்கின்றன. சட்சுகியும் மெய்யும் வனதேவதைகளின் உதவியோடு அவர்களின் தோட்டத்தினை நன்றாக வளர்க்கத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு நாட்கள் மகிழ்ச்சியாய் கழிய, சட்சுகியும் மெய்யும் அவர்களின் தாயார் முழுவதும் நலமாகி வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்...அப்பொழுது தான் அந்தத் தந்தி அவர்களுக்குக் கிடைக்கின்றது. அவர்களின் அன்னைக்கு திடீர் என்று சிறிது உடல் நலம் குறைந்து விட்டதால் அவரால் வீட்டிற்கு வர இயலாது என்ற விடயம் சட்சுகிக்கு தெரிய வர 'இப்படித்தான் சென்ற முறையும் கூறினார்கள்...எங்களின் அன்னை வீட்டிற்கு வரப் போவதே கிடையாது..அவர்கள் எங்களிடம் பொய் கூறுகின்றார்கள்' என்றே மனம் உடைந்து அழத் துவங்குகின்றாள் சட்சுகி. அக்கா அழுவதனைப் பார்த்த மெய், தங்களது அம்மாவிற்கு ஏதோ நிகழ்ந்து விட்டு இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டே அவளின் அன்னை இருக்கும் மருத்துவமனையை நோக்கி யாரும் அறியாமலேயே ஓட ஆரம்பிக்கின்றாள்.

அச்சிறுமிகளின் தாயாருக்கு என்ன ஆயிற்று? தனியாக மருத்துவமனையை நோக்கிச் சென்ற மெய் என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு உணர்வுகள் மிகுந்த ஒரு அற்புதமான பயணமாய் விடை அளிக்கின்றது இப்படம்.

குழந்தைகளுக்கான ஒரு படத்தினை...இல்லைஇல்லை...ஒரு உலகத்தினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டே இப்படத்தினை எடுத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் மியாசாகி. அப்படிப்பட்ட ஒரு குழந்தைகளின் உலகத்தினுள் அனைத்து வயதினரும் ஈர்க்கப்பட்டு விடுவதில் தான் அவரின் வெற்றி அடங்கி இருக்கின்றது. மந்திரமயமான நிமிடங்கள், நம் மனதினுள் ஒளிந்துக் கிடக்கும் சிறுவனை/சிறுமியை மெதுவாய் உயிர்ப்பித்து, நாம் என்றோ சிறுவர்களாய் கடந்து வந்திருந்த வாழ்விற்கே நம்மை மீண்டும் அழைத்துச் செல்கின்றன.

"சிறு வயதில் என் கண்களுக்கு வன தேவதைகள் தென்பட்டன...ஆனால் ஏனோ தெரியவில்லை நான் வளர்ந்ததிற்குப் பின்னர் அவைகள் என் கண்களுக்குப் புலனாகவில்லை" என்றே இப்படத்தினில் ஒரு கதாப்பாத்திரம் கூறுகின்றார். எண்ணிப்பார்த்தால் சரி தான்...சிறுவர்களாக இருப்பவர்களின் உலகம் மிகவும் விசித்திரமானது...ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. ஆனால் அவ்வுலகங்கள் ஏனோ ஒவ்வொரு சிறுவனும் வளர்ந்து விடும் பொழுது மெதுவாய் மறைந்துத் தான் போய் விடுகின்றன. அவ்வுலகங்களை உயிரோடு வைத்துக் கொண்டே வளர்கின்றவர்கள் சிலரே.

அப்படிப்பட்ட ஒரு உலகிற்குத் தான் இங்கே உயிர் தந்து இருக்கின்றனர்...'இது நாம் வாழ்ந்த உலகம்...அதுமட்டுமல்ல நாம் வாழ வேண்டிய உலகும் இது தான்' என்றே இப்படம் நம்மை உணரச் செய்கின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உலகினைப் போன்று விரைவாக ஓடுவதில்லை...மாறாக அது ஒவ்வொரு நொடியும் வாழ்வினை ரசித்துக் கொண்டே நகரும் ஒரு உலகம்...அதனைப் போன்றேத் தான் இப்படமும்....மெதுவாக வாழ்வின் பொன்னான நொடிகளை, அதன் அதிசயங்களை நம்முன்னே எடுத்து வைத்துக் கொண்டே நகர்கின்றது. அதனிலேயே நாமும் மூழ்கிப் போகின்றோம்....சிறுவர்களாக!!!

குழந்தைகளாக இருப்பது ஒரு வரம் தான்...!!!

பி.கு:

1) இப்படத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்துமே கைகளாலே வரையப்பட்டவைகள். (ஓவியத்தினில் ஆர்வம் உடையவர்களுக்கு நிச்சயமாய் இந்த ஓவியங்கள் ஆர்வமூட்டக் கூடும்).

பிற திரைப்பட விமர்சனங்கள்:

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands)
அன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love)
மைதானத்தில் தேவதைகள் : (Angels in the outfield )
கனவுலகத்தை தேடி: (Finding Neverland)
பெரிய மீன்: (Big Fish)
உணவு.Inc : (Food.Inc)

உணவு.Inc : (Food.Inc)

"கடந்த 10000 வருடங்களில் நம்முடைய உணவுப் பழக்கங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விட கடந்த 50 ஆண்டுகளில் மிகுந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இன்று காலங்கள் பாராது அனைத்து வகைப் பழங்களும் சரி காய்கறிகளும் சரி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. எலும்பில்லாத இறைச்சி உங்களை எதிர்பார்த்து பல் பொருள் அங்காடிகளில் காத்துக் கொண்டு இருக்கின்றது.

பல்வேறு நிறுவனங்கள் அவற்றின் உணவுத் தயாரிப்பினை நீங்கள் வாங்குவதற்காக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவைகளுக்கு நீங்கள் அப்பொருட்களை வாங்க வேண்டும்..தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவே.

ஆனால் அந்த நிறுவனங்கள் நீங்கள் உண்ணும் உணவினைப் பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்துக் கொள்வதை விரும்புவதில்லை...ஏனெனில் உண்மையினை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் அந்த உணவினை உண்பதற்கு நீங்கள் விரும்பாது போகலாம். அதனால் அவைகள் உங்களிடம் இருந்து உண்மையினை மறைப்பதை முக்கியமான ஒரு விடயமாகக் கொண்டே இயங்குகின்றன.

இந்தப் படம் அவ்வாறு மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றியே...பெரு நிறுவனங்கள் உங்களிடம் இருந்து மறைப்பவைகளைப் பற்றியே இந்தப் படம்" என்றுக் கூறியே தொடங்கும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அதிர்ச்சி அடையத் தான் வைக்கின்றன.

விதைகளில் இருந்துத் தொடங்கி பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்காக வரும் நிலை வரை உணவினை சில பெரு நிறுவனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன, மக்களின் உரிமைகளை அவைகள் எவ்வாறு பறிக்கின்றன, அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கங்கள் எவ்வாறு அந்த நிறுவனங்களுக்குச் சார்பாக செயல்படுகின்றன, விவசாயிகளை அந்த பெரு நிறுவனங்கள் எவ்வாறு எல்லாம் பாடு படுத்துகின்றன என்பதனைப் பற்றி எல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் இந்தப் படம் உணவு அரசியலைப் பற்றிப் புரிந்துக் கொள்ள எண்ணுவோர் மற்றும் நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் எங்கே சென்றுக் கொண்டு இருக்கின்றன என்பதனைப் பற்றி அறிந்துக் கொள்ள விரும்புவோர் ஆகியயோர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படம்.

இப்பொழுது இந்த படம் கூறும் சில முக்கியமான விடயங்களைப் பார்த்து விடுவோம்... (இந்தப் படம் அமெரிக்காவில் உள்ள நிலையினைப் பற்றி எடுக்கப்பட்டதால் நம்முடைய நாட்டில் நிகழும் முறைக்கு சற்று மாறாகத் தெரியும்....ஆனால் நம்முடைய முறைகளையும் அமெரிக்காவினைப் போல் மாற்ற துடித்துக் கொண்டு இருக்கும் அரசை வைத்துக் கொண்டு இருப்பதால் நாமும் இவற்றை அறியத்தான் வேண்டி இருக்கின்றது)

1 ) நாம் எண்ணுவதனைப் போல் நம்முடைய உணவு இன்றுத் தோட்டங்களில் இருந்தோ அல்லது வயல்களில் இருந்தோ பெறப்படுவதில்லை...மாறாக தொழிற்சாலைகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

2 ) இன்று பல் பொருள் அங்காடிகளில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் உணவுப் பொருட்கள் பலவற்றிலும், ஒன்று சோளம் முக்கியமான கருப்பொருளாக இருக்கும் அல்லது சோயா பீன் முக்கியமான கருப்பொருளாக இருக்கும். பெரும்பாலும் அவை இரண்டுமே முக்கியமான கருப்பொருள்களாக இணைந்தே இருக்கும். காரணம் அந்த இரண்டுப் பொருட்களை எளிதாக வேதியல் மாற்றங்கள் மூலம் பல்வேறுப் பொருள்களாக மாற்றி விடலாம். அதனால் தான் கிட்டத்தட்ட அமெரிக்காவின் 30 சதவீத நிலப்பரப்பில் சோளம் பயரிடப்படுகின்றது. அரசாங்கமும் சோளத்திற்கு என்று மானியமும் அதிகமாக வழங்குகின்றது. அதனால் தான் சோளத்தின் விலை அதன் தயாரிப்பு விலையினை விட மிகவும் கம்மியாக இருக்கின்றது. அதனால் தான் சோளத்தினை முக்கிய கருப்பொருளாக கொண்ட பொருட்களின் விலைகள் கம்மியாக இருக்கின்றன. இந்த நடைமுறையால் கொள்ளை இலாபம் அடைவது சில தனியார் நிறுவனங்களே, அதனால் தான் அந்த நிறுவனங்களுக்கு சாதகமான அமெரிக்க அரசு சோளத்திற்கு மானியம் அதிகமாக வழங்கி வருகின்றது.

3) தனியார் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு சாதகமாக இருப்பதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களே பின்னர் அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு சென்று அமெரிக்க அரசினை கைப்பற்றியது தான். அதாவது நிறுவனங்களே மறைமுகமாக அரசினை கட்டுப்படுத்துகின்றன. (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள ஜான் பெர்கின்ஸ் அவர்கள் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்றப் புத்தகத்தினைப் படிக்கவும்)

4 ) சோளத்தின் உற்பத்தி அதிகமாக இருப்பதும் அதற்கு அரசு மானியம் அளிப்பதும் சோளத்தினைக் பெருவாரியாக கொண்டு இருக்கும் பொருட்களின் விலையை குறைக்கின்றன. அதனால் தான் சோளத்தினைக் கொண்டுள்ள பர்கரின் விலையினை விட பழங்களின் விலை அதிகமாக இருக்கின்றது. 'எங்களிடம் ஒரு டாலர் இருக்கின்றது...அதற்கு இரு பர்கர்கள் கிடைக்கும் ஆனால் ஒரு பழம் கூட கிடைக்காது...இந்நிலையில் நாங்கள் விலைக் குறைந்த உணவினைத் தானே உண்ணுவோம்...அப்படி சாப்பிட்டால் தானே எங்கள் குடும்பம் முழுவதும் உண்ண முடியும்' என்றே கூறுகின்றனர் இத் திரைப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர்.

5 ) "நாங்கள் இங்கே கோழிகளை உருவாக்கவில்லை...கோழிகளைப் போன்ற உணவினைத் தான் நாங்கள் உருவாக்குகின்றோம்.." என்று ஒரு உணவுத் தொழிற்சாலையின் உறுப்பினர் கூறுகின்றார். மேலும் மக்கள் அனைவரும் கொழுத்த கோழிகளை விரும்புவதனால் கோழிகளுக்கும் சோளத்தினைப் போட்டே வளர்கின்றனர். சோளம் உயிர்களை கொழுக்க வைக்கின்றது.

6) அதே முறையினைத் தான் பசுக்களிலும் பயன்படுத்துகின்றனர். சோளத்தைச் சாப்பிடும் பசுக்கள் விரைவில் கொழுக்கின்றன...ஆனால் அதனுடன் மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் ஒரு புது பாக்டீரியாவையும் உருவாக்கத் தான் செய்கின்றன.

7 ) உணவின் மேல் தன்னுடைய செல்வாக்கினை நிறுவ முயன்றுக் கொண்டு இருக்கும் பெரும் நிறுவனங்கள் சாதாரண விவசாயிகள் மீது தொழில்நூட்பம் என்ற ஒன்றை திணித்து அவர்களைக் கடனாளியாக ஆக்கி எவ்வாறு உணவு உற்பத்தியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தினை நிலை நிறுத்திக் கொள்கின்றன என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுக்களின் மூலம் இப்படம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இன்னும் பல பல மிக முக்கியமான விடயங்கள் இப்படம் முழுவதுமே கூறப்பட்டு உள்ளன. சமூக சிந்தனை உள்ள அனைவரும் நிச்சயம் காண வேண்டியதொரு படம் இது. காண மட்டும் அல்ல, கண்ட பின் மற்ற நண்பர்களுக்கு பகிர்வதற்கும் ஏற்றதொரு படம்.

சில நண்பர்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழலாம்..."சும்மா தொழில்நூட்பத்தை குறைகூறுவதே இவர்களுக்கு பொழப்பா போச்சி...வேகமாக வளர்ந்துக் கொண்டு இருக்கும் மக்கள் தொகைக்கு உணவு வேணும்னா உணவுல தரத்தை எதிர்பார்த்தா ஆகுமா?" என்றக் கேள்வித் தான் அது. இக்கேள்விக்கு விடையாய் ஒரு சிறு சம்பவத்தினை கூற விரும்புகின்றேன்.

நான் கைதராபாடில் இருந்தத் தருணம் நண்பர்களுடன் ஒரு இயற்கை விவசாயியினை காணச் சென்று இருந்தேன். எங்களுக்கு தெலுகு தெரியாது என்பதனை அறிந்த அவர் ஆச்சர்யமாய் தமிழிலேயே பேசத் தொடங்கினார். அவருடன் நீண்ட நேரம் உணவு, விவசாயம் போன்றத் தலைப்புகளில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதே கேள்வியினை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் கூறிய பதில்...

"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்...ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...நான் எடுத்து இருக்கேன்...அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்...அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது...காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்...அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்...நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செத்து போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது...ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."

அவர் பெயர் நாக இரத்தின நாயுடு...அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் (http://www.srinaidu.com/). நம்மாழ்வாரின் நண்பர் என்றே நினைக்கின்றேன். சரி அது நமக்கு முக்கியமில்லை.

உலகம் இது வரைக் கண்டிராத அதிகாரம் படைத்த மனிதர்கள் நம்முடைய உணவினைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்...அவர்களுக்கு நம்முடைய பதில் என்ன என்பதே முக்கியம்.

நம் உணவு நம் உரிமை!!!

1988...!!!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிக் காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு வருகின்றது. அட என்னடா இது...பிரச்சனை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் தானே...அப்படி இருக்கும் பொழுது அமைதியினை நிலைநாட்டச் சென்ற இந்தியப் படை எதற்காக தமிழர்களுக்கு எதிராக
சண்டையிட வேண்டும் என்றக் கேள்வி இங்கே பலருக்கும் இயல்பாக எழும் (வரலாற்றில் இப்படிப்பட்ட குழப்படிகள் தான் அதிகமாக இருக்கின்றன)...அக்கேள்விக்குரிய விடையினை கணித்துக் கொள்ள உதவுகின்ற சில விடயங்களை நாம் ஏற்கனவே சென்ற பதிவினில் கண்டு இருக்கின்றோம்.

சரி அது இருக்கட்டும்...இப்பொழுது நாம் 1989 ஆம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது...அந்த ஆண்டில் தான் ஜெயவர்தனேவை ஓரம் கட்டி விட்டுவிட்டு பிரேமதாசா இலங்கையின் சனாதிபதியாக ஆட்சியில் அமர்கின்றார். ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருந்த இலங்கை பிரேமதாசாவினைப் பார்கின்றது. பிரேமதாசா இலங்கையைப் பார்க்கின்றார்.

தெற்கே 'எதற்காக இந்திய வீரர்களை இலங்கையினுள் அனுமதித்தாய்...இலங்கையில் இந்தியாவிற்கு என்ன வேலை..திரும்பிப் போகச் சொல் அவர்களை' என்றவாறே சிங்கள போராளி அமைப்புக்கள் போராடிக் கொண்டு இருந்தன. வடக்கேயோ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே பலத்த சண்டை ஓடிக் கொண்டிருக்கின்றது. இலங்கை முழுவதுமே ஒரு குழப்பமான நிலை நிலவிக் கொண்டிருந்தது. ஒரு சனாதிபதியாய் அவரிடம் இருந்து அந்நாடு நிறைய எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்தே இலங்கையில் இந்தியா தலையிடுவதினை அவர் விரும்பி இருக்கவில்லை...அதுவும் குறிப்பாக இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருப்பதினை அவர் சிறிதும் விரும்பவில்லை...பின்னே யார் தான் மற்றொரு நாட்டின் இராணுவம் தமது நாட்டினில் இருப்பதனை விரும்புவார்?

சிந்தித்தார் பிரேமதாசா. 'தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இங்கேயே இருப்பவர்கள்...இங்கேயே தான் இருக்கவும் போகின்றோம்...சில பிரச்சனைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளை நாங்களே பார்த்துக் கொள்ள முடியும்...இந்நிலையில் எதற்காக தமிழர்களும் சிங்களவர்களுக்கும் இடையில் மற்றொரு நாட்டின் தலையீடு? இந்தியா இலங்கையில் இருப்பது சிங்களர்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி நன்மையான ஒரு விடயம் அல்ல...பின்னர் எதற்காக அவர்கள் இங்கே இருக்க வேண்டும்...அவர்கள் செய்த செயல்களுக்கெல்லாம் நன்றி என்று கூறி வழி அனுப்பி விடலாம் தானே' என்று எண்ணி அவ்வாறே செய்யவும் செய்தார்.

"அன்புள்ள இந்தியாவிற்கு... உங்களின் உதவிக்கு மிக்க நன்றிகள்...இங்கே அனைவரும் நலமாக இருக்கின்றோம்...அமைதி தழைத்தோங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே தங்களின் அமைதிக் காக்கும் படையினை சற்று திரும்பப் பெற்றுக் கொள்கின்றீர்களா...நன்றி...!!!' என்றுக் கூறி போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றார்.

பிரேமதாசா அறிவித்த போர் நிறுத்தத்தினை முதலில் சந்தேகத்துடன் பார்த்து அதனை ஏற்காத புலிகளும் சில நாட்களில் போர் நிறுத்தத்தினை அறிவிக்கின்றனர். இலங்கை அதிகாரிகளுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளும் நிகழத் தொடங்குகின்றன.

பிரேமதாசாவின் அந்த அறிவிப்பினைக் கேட்ட இந்திய இராணுவம் அதிர்கின்றது...இந்தியாவும் தான்..."என்ன இராணுவம் திரும்ப வேண்டுமா...என்ன சொல்லுகின்றீர்...உங்களுக்கு புலிகளைப் பற்றித் தெரியவில்லை...அவர்கள் இன்னும் பலம் பொருந்தியவர்களாகத் தான் இருக்கின்றனர்...இந்நிலையில் நாங்கள் இல்லை என்றால் இலங்கைக்கு அது மாபெரும் ஆபத்தாக முடியும்" என்று இந்திய இராணுவம் இலங்கையிடம் கூற சிரித்துக் கொண்டே மறுக்கின்றார் பிரேமதாசா.

"இல்லை இருக்கட்டும்...புலிகளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்...தெரியவில்லை என்றாலும் இதோ பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன, அதன் மூலம் தெரிந்துக் கொண்டு விட்டால் போயிற்று அவ்வளவு தானே...இதில் உங்களுக்கு என்ன கவலை...உங்களுக்கு இரு மாதங்கள் அவகாசம் தருகின்றேன்...29 யூலை 1989 க்குள் பத்திரமாக உங்களின் தேசத்திற்கு திரும்பி விடுங்கள்...நன்றி" என்றே ஒரு கெடு நாளினையும் விதிக்கின்றார். புலிகளும் இலங்கை அரசும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்கின்றன. நிற்க...!!!

இங்கே நாம் காண வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது... அதே 1989 ஆம் ஆண்டிலேயே தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் மேற்பார்வையில் நடந்திருந்த தேர்தலில் வெற்றிப் பெற்று வரதராஜ பெருமாள் என்பவர் முதலமைச்சராக பதவி ஏற்று இருந்தார். அத்தேர்தலை பல அமைப்புகள் புறக்கணித்து இருந்தன...விடுதலைப் புலிகளும் தான். தேர்தலைப் புறக்கணித்த விடுதலைப் புலிகள் புதிய முதலமைச்சரையும் புறக்கணிக்கத் தான் செய்தனர்...காரணம் அவர்களின் பார்வையில் வரதராஜ பெருமாள் இந்தியாவின் ஒரு கை பொம்மை... அவ்வளவே. கிட்டத்தட்ட அதே கண்ணோட்டத்தினை பிரேமதாசாவும் கொண்டிருந்தார். அவர்கள் அப்பார்வையினைக் கொண்டமைக்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

வரதராஜ பெருமாளினை மற்றொரு ஆயுதப் போராளி இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப் (E.P.R.L.F) அமைப்பு ஆதரித்துக் கொண்டிருந்தது...ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இந்திய அமைதிக் காக்கும் படை தனது ஆதரவினை வழங்கிக் கொண்டிருந்தது. கூடுதலாக அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களையும் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாக சேர்த்து ஒரு படையினை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு இருந்தனர்...தமிழ் தேசிய இராணுவம் (Tamil National Army T.N.A) என்று அவர்களுக்கென்று ஒரு படையினையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தும் தான் விடுதலைப் புலிகளையும் சரி பிரேமதாசாவினையும் சரி இந்தியா அதன் நலன்களுக்காக வடக்கிழக்கில் ஒரு பொம்மை ஆட்சியினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது...அது நமக்கு நல்லதல்ல என்ற முடிவிற்கு வர வைத்தது. இந்த அடிப்படையிலும் தான் விடுதலைப் புலிகளும் பிரேமதாசாவும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருகின்றனர்...பிரேமதாசா இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற ஒரு கெடுவும் விதிக்கின்றார்.

சரி..தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் பிரச்சனை, அதை நாம் தீர்த்து வைப்போம் என்றே களம் இறங்கிய இந்தியா நியாயப்படிஇப்பொழுது இலங்கை விதித்துள்ள கெடுவினை மதித்து இலங்கையில் இருந்து கிளம்பி இருக்க வேண்டுமா கூடாதா... கிளம்பி இருக்க வேண்டும் தானே...ஆனால் அது தான் நடக்கவில்லை.

"உங்களுக்கு விவரம் போதவில்லை பிரேமதாசா அவர்களே...புலிகள் ஆபத்தானவர்கள்...எனவே நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி உங்களைக் காக்க வேண்டியது எங்களது கடமை..." என்றுக் கூறியே இலங்கையில் தொடர்ந்து இருக்க ஆரம்பிக்கின்றது இந்தியா. அவர்களின் கூற்றினை மெய்ப்பிப்பதினைப் போலவே சில கொலைகள் மற்றும் சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றன.

தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன், புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் ஆகியோர் கொல்லப்படுகின்றனர். பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவினால் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்திகளும் வெளி வருகின்றன. அந்த அனைத்துக் கொலைகளுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கமே காரணமாக கூறப்படுகின்றது. விடுதலைப்புலிகள் மறுக்கின்றனர்...'நாங்கள் இந்தக் கொலைகளை செய்யவில்லை. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர்.

அதையே தான் சிங்கள அரசாங்கமும் கூறியது....“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான டெய்லி நியூஸ் வெளியிட்ட செய்தி. அவர்கள் அவ்வாறு வெளியிட்டதற்கு காரணமும் இருக்கின்றது.

அந்த கொலைகள் நிகழ்ந்த காலம், இலங்கையும் விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்தக் காலம்...மேலும் முக்கியமாக இந்திய அமைதிப் படை இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விதிக்கப்பட்டு இருந்த கெடுக் காலம். யூலை 29 1989 குள் இந்தியா இலங்கையினை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரேமதாசா கூறி இருந்தார்...அதே நேரத்தில் ஆச்சர்யவசமாக அந்த அனைத்துக் கொலைகளும் யூலை மாதம் 1989 ஆம் ஆண்டிலேயே நிகழப் பெற்று இருந்தன.

இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்பதே முக்கியமான இலக்காக விடுதலைப் புலிகளுக்கும் சரி இலங்கைக்கும் சரி இருந்து வந்த காலத்தில் அதனை கெடுக்கும் வண்ணம் இந்தக் கொலைகளை அப்பொழுது விடுதலைப்புலிகள் செய்வார்களா...மேலும் அதனைச் செய்வதனால் அவர்களுக்கு எந்தொரு நலனும் இல்லையே என்பதனை பிரேமதாசா அறிந்து இருந்தார். அதனால் தான் புலிகள் மீது பிறர் வீண் பழியினைப் சுமத்துகின்றனர் என்று இலங்கை அறிவித்தது.

பிரேமதாசா அறிவித்த கெடுக் காலம் முடிவடைந்த போதும், இந்தியப் படைகள் திரும்பிச் செல்லவில்லை...வடக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வன்முறைகளை ஏவிக் கொண்டிருந்தது. கூடுதலாக புதிதாக ஒரு படை வேறு அங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

பிரேமதாசா பார்த்தார்...நிலைமை சரியில்லை. விடுதலைப்புலிகளை அழைத்தார்..."வடக்கே நிலைமை சரியில்லை...நமக்கு எதிராக அங்கே ஏதோ நடந்துக் கொண்டு இருக்கின்றது...அதை நாம் கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும்...அதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார்.

"ஆயுதங்கள்..." என்றனர் புலிகள்.

"சரி...!!!" என்றுக் கூறி புலிகளுக்கு ஆயுதங்களை அளித்தார் பிரேமதாசா. வடக்கே மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. இந்தியப் படைகளுடன் சேர்த்து மற்ற போராளி அமைப்புக்களையும் எதிர்க்க ஆரம்பித்ததனர் புலிகள். சிங்களர்களை நாங்கள் பின்னர் கண்டுக் கொள்கின்றோம்...ஆனால் அதற்கு முன்னர் துரோகிகளை களைய வேண்டி இருக்கின்றது என்றே மற்ற போராளிக் குழுவினரை தாக்க ஆரம்பிக்கின்றனர்.

யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. அதே நேரத்தில் தான் இந்தியாவிலும் தேர்தல் களம் சூடாகின்றது. இராசீவ் காந்திக்கு பின்னர் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கின்றார் திரு.வி.பி.சிங்.(என்னைப் பொருத்தவரை இந்தியா இது வரை கண்ட பிரதம மந்திரிகளிலேயே மிகவும் சிறந்த பிரதம மந்திரி இவர் தான் - ஆனால் நல்லவர்கள் ஆண்டார்கள் என்றாலே நம் நாட்டிற்கு ஆகாதே...எண்ணி ஒரே வருடம் இவரின் பிரதமர் பதவிக்கு ஒரு முடிவு விழாவினை கொண்டாடி விட்டார்கள் நம் நாட்டிலே...சரி அது வேறு கதை இப்பொழுது இலங்கைக்கு வருவோம்.)

இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக பதவி ஏற்கின்றார் திரு வி.பி.சிங் அவர்கள். இலங்கையைக் காணுகின்றார்...அமைதியினை நிலை நிறுத்தச் சென்று இருந்த படை அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்தது...மேலும் படையினை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொல்லி இலங்கை அரசாங்கமும் கூறி இருந்தது...இந்தியாவிலும் அக்குரல்கள் கேட்கத் தொடங்கி இருந்தன. சிறிதும் யோசிக்கவில்லை சிங்...அவரின் முடிவில் அவர் தெளிவாக இருந்தார்.

"இந்தியப் படைகளை நாம் திரும்பிப் பெற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..." என்றார். சிலர் மறுத்தனர்..."அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அது நமக்கு பெரிய அவமானமாக போய் விடும்" என்றனர். முற்றிலுமாக அதனை மறுத்தார் சிங்.

"அடுத்த நாட்டிலே புகுந்து இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருப்பது தான் அவமானம்...எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன...வேறு பேச்சே இல்லை...இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து திரும்ப வேண்டும்...இது எனது உத்தரவு" என்றார்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து கிளம்ப ஆரம்பித்தன. முதன் முதலில் அப்படைகள் இலங்கையில் கால் வைத்தப் பொழுது ஆரவாரத்தோடு அவர்களை தமிழ் மக்கள் வரவேற்று இருந்தனர். ஆனால் வழி அனுப்புவதற்கு ஒருவர் கூட இல்லாத நிலையில் இந்திய வீரர்கள் இந்தியா திரும்பினர்.

ஆதரிக்க இந்தியப்படைகள் இல்லாத நிலையில் மற்ற போராளி அமைப்புக்களால் விடுதலைப் புலிகளை சமாளிக்க முடியவில்லை. வரதராஜ பெருமாள் சிறிது தாக்குப் பிடிக்கப் பார்த்தார்...ஆனால் அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் புலிகளின் முன்னால் நிற்க முடியாது வீழ, வரதராஜ பெருமாள் இந்தியாவினுள் அடைக்கலம் புகுந்தார்.

ஒரு வழியாக இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டு இருந்தன...ஆனால் அரசியல் வெளி ஏறவில்லை...!!!

தொடரும்...!!!

பின் குறிப்பு:

1) தொடர்புடைய இடுகைகள்...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15623:-5&catid=1342:2011&Itemid=589
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15961:1988-90-8&catid=1355:2011&Itemid=602
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15505:-4&catid=1342:2011&Itemid=589
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72476
http://expressindia.indianexpress.com/news/ie/daily/19980418/10850534.html
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=72857

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு