இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:
 
இந்தப் பதிவு சுதந்திர இந்தியா என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய கடிதத்திற்கு லியோ டால்சுடாய் அவர்கள் எழுதிய பதில் கடிதத்தின் மொழிபெயர்ப்பே ஆகும்.                     

கடிதத்திற்கு காந்தியின் முன்னுரை:

பின் வருவது 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் ஆசிரியரினுடைய கடிதத்திற்கு, ரசிய மொழியில் டால்சுடாய் எழுதிய பதில் கடிதத்தின் மொழியாக்கமே ஆகும். பல கைகள் மாறி இந்தக் கடிதம் என் நண்பனின் வாயிலாக என்னிடம் வந்து சேர்ந்தது. இயல்பிலேயே டால்சுடாய் அவர்களின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இந்தக் கடிதத்தை நாம் வெளியிடலாமா என்ற அந்த நண்பனின் கேள்விக்கு உடனேயே சரி என்று பதில் கூறி அதை குசராத்தி மொழியில் மொழிப்பெயர்க்கும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன். அதே போல் இந்தக் கடிதத்தை இந்தியாவின் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்க மற்றவர்களை உந்த வேண்டும் என்றும் நான் முடிவு எடுத்துக் கொண்டேன்.

என் கைக்கு வந்த இந்தக் கடிதம் தட்டச்சு மூலமாக அச்சிடப்பட்ட நகலாக இருந்தமையால் இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்துக் கொள்ள நான் டால்சுடாய் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் இந்தக் கடிதம் அவருடையது தான் என்று உறுதி செய்ததோடு நில்லாமல் இந்தக் கடிதத்தை பிரசுரிக்க அவருடைய சம்மதத்தையும் வழங்கினார். நீண்ட காலமாக என்னுடைய வழிகாட்டிகளுள் ஒருவராக திகழும் அந்த ஆசானின் கடிதத்தை பிரசுரிப்பதில், அதுவும் குறிப்பாக இந்தக் கடிதத்தை உலகிற்காக பிரசுரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

ஒவ்வொரு இந்தியனிடத்தும், அவன் அதை ஏற்றுக் கொள்ளுகின்றானோ இல்லையோ, தேசியத்தைப் பற்றிய வேட்கையும் லட்சியமும் நிச்சயம் உள்ளது. அது உண்மை. அதைப் போலவே, எத்தனை தேசப் பக்தி மிக்கவர்கள் இருக்கின்றனரோ அதே எண்ணிக்கையில் அந்த இலட்சியத்தைப் பற்றியும் வேட்கையைப் பற்றியும் விதவிதமான கருத்துக்கள் உள்ளன என்பதும் உண்மை. அதுவும் குறிப்பாக அந்த இலட்சியத்தை அடையும் வழியினைப் பற்றிய கருத்துக்களில் உள்ள வேறுபாடுகள் அநேகம்.
அந்த வழிகளில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, காலத்தால் போற்றப்பட்ட ஒரு வழி தான் வன்முறை. சர் கர்சன் வயலி (Sir Curzon Wylie) அவர்களின் கொலை அந்த வன்முறை வழியின் ஒரு வெறுக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். டால்சுடாய் அவர்கள் சர்வாதிகாரத்தை ஒழிக்கவும் மாற்றங்களைக் கொண்டு வரவும், வன்முறைக்கு பதிலாக அன்பின் வழியாகவே தீமையை எதிர்ப்பதற்கு தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இருக்கின்றார். அவர் வன்முறையின் மூலம் தோன்றும் வெறுப்பை, பிறருக்காக தன்னையே வருத்துவதினால் வெளிப்படும் அன்பின் மூலமே ஈடு கட்டலாம் என்ற விதியை மெய்பித்துக் கொண்டு இருக்கின்றார். இந்த புனிதமான அன்பின் விதியை அவர் எதற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டார். இந்த விதியை அவர் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும்  பொதுவான தீர்வாக கூறுகிறார். 

டால்சுடாய், மேற்கத்திய உலகம் கண்ட மிகச் சிறந்த எழுத்தாளர்கள் மட்டும் சிந்தனையாளர்களுள் ஒருவர். மேலும் தான் ஒரு போர் வீரனாக இருந்த காரணத்தினால் வன்முறை என்றால் என்ன என்பதனையும், வன்முறையின் விளைவுகள் என்ன என்பதனையும் மிகவும் தெளிவாக அறிந்தவர். அப்பேர்ப்பட்ட ஒருவர், "'நவீன அறிவியல்' என்று தவறாக கூறப்படும் ஒரு விதியைப் கண்மூடித்தனமாக சப்பான் பின் பற்றுகிறது என்றும் அதன் விளைவுகள் மிகவும் பயங்கர அழிவுகளாக இருக்கும்" என்றும் கூறும் பொழுது நாமும் சற்று நின்று யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஆங்கிலேயரின் ஆட்சியின் மேல் பொறுமை இல்லாத காரணத்தினால் நாம் அவசரப்பட்டு ஒரு தீமையைக் களைந்து விட்டு அதற்குப் பதிலாக அதை விட மிகவும் கொடிய ஒன்றை நிலை நிறுத்தும் செயலைச் செய்ய கூடாது. உலகில் உள்ள பல்வேறு நம்பிக்கைகளும் செழித்து விளங்கும் பள்ளியாக இருக்கும் இந்தியாவில், எப்பொழுது நாகரீகம் என்ற பெயரில் துப்பாக்கிச் தொழிற்சாலைகளும், ஐரோப்பிய மக்களை அடிமைகளாகச் சுருங்க செய்து இருக்கும் முதலாளித்துவமும் அனுமதிக்கப்படுகின்றதோ அன்று இந்தியாவின் தேச பக்தியும் , அது போற்றி காக்கும் மனித குடும்பத்தின் இயல்பான அன்பு உணர்ச்சிகளும் குறைந்து இறுதியில் அனைத்தும் அமைதியாகிப் போகும். 
நமது மண்ணில் ஆங்கிலேயர்கள் வேண்டாம் என்றால் அதற்குரிய விலையை நாம் கொடுத்தே ஆக வேண்டும். டால்சுடாய் குறிப்பிடுகின்றார் "தீமையை எதிர்க்காதீர்கள்... ஆனால் நீங்களும் தீமையில் பங்கு ஏற்காதீர்கள்.. அது வரிகள் வசூலிப்பதில் உள்ள தீமையாய் இருக்கட்டும், இல்லை நீதி மன்றங்களில் வெளியாகும் வன்முறை சட்டங்கள் ஆகட்டும், இல்லை போர் வீரர்களால் ஏற்படும் தீமைகள் ஆகட்டும். அந்த தீமைகளுக்கு பதிலாய் நீங்களும் தீமைகள் செய்யாமல், அவற்றை ஒன்றிணைந்து அன்பினால் எதிர் கொள்ளுங்கள். அப்படி செய்தால் இந்த உலகத்தில் உங்களை யாருமே அடிமையாக்க முடியாது" என்கிறார் யாசானையா போல்யானாவை  (Yasnaya Polyana) சேர்ந்த அந்தத் துறவி. 
"ஒரு வியாபார நிறுவனம், 20 கோடி பேர் கொண்ட ஒரு நாட்டினை அடிமைப்படுத்தி உள்ளது. இதை மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாத ஒரு மனிதனிடம் சொல்லுங்கள், அவன் அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள கடினப்படுவான். அந்த வாக்கியத்தின் படி, 30,000 சாதாரண, வலுவில்லாத மக்கள், இருபது கோடி அறிவோடு உடற்வலுவும் அவற்றுடன்  சுதந்திர வேட்கையும் நிறைந்த மக்களை அடிமைப் படுத்தி உள்ளனர். இந்த எண்களே உங்களுக்கு புலப்படுத்த வில்லையா?... ஆங்கிலேயர்கள் அல்ல... இந்தியர்களே அவர்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளனர்" என்று அவர் கூறும் போது அந்த கூற்றில் உள்ள உண்மையை மறுக்க நம்மால் இயலுமா?.
தற்போது நம் நாட்டில் உள்ள நிலைமையின் அடிப்படை உண்மையை நாம் உணர்ந்து கொள்ள டால்சுடாய் கூறும் அனைத்துக் கருத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை (அவருடைய சில கூற்றுகள் சரியான அடிப்படையில் அமையவில்லை). அன்பே நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டிய உண்மை. நமது ஆத்மாவின் ஒரு பகுதியான அன்பு நமது உடம்பின் மேல் தவிர்க்க முடியாத சக்தி வைத்து இருப்பதோடு நில்லாமல் நமக்குள் உண்டாகும் தீய எண்ணங்கள் வெளிப்படுத்தும் வன்முறை சக்தியின் மேலும் தனது ஆதிக்கத்தை வைத்து உள்ளது. அன்பின் மூலமே நாம் அவற்றை கட்டுப் படுத்த முடியும்.

டால்சுடாய் அவர்கள் போதிப்பதில் எந்த ஒரு புது கருத்துக்களும் இல்லை என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும் அந்த பழைய உண்மைகளை அவர் போதிக்கும் முறைகள் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அவருடைய ஏரணம்(Logic) வீழ்த்த முடியாதது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் எதை போதிக்கின்றாரோ அதையே அவர் பின்பற்றவும் செய்கின்றார். நம்மை தெளிவுப்படுத்துவதற்கே அவர் போதிக்கின்றார். நேர்மையாகவும் உறுதியாகவும் அவர் சொல்லுகின்ற கருத்துகளுக்கு நாம் நிச்சயம் நமது கவனத்தை கொடுக்க வேண்டும்.
                                                                                                                                       மோ.க.காந்தி
                                                                                                                                  நவம்பர் 19 , 1909 

கடிதம் தொடரும்...!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு