புரியவில்லை அம்மா உன் அன்பு
    உலகிற்கு வளர்ந்தவளாக தெரியும் நான்
எப்படி உன் கண்களுக்கு மட்டும்
    சிறுமியாகவே தெரிகின்றேன்" என்றேன்
“ஏன் என்றால் நீ இன்னும் சிறுமி தான்" என்றாய் புன்னகைத்துக்   கொண்டே.
“நான் சிறுமி அல்ல! வளர்ந்து விட்டேனாக்கும்” என்றேன்.
“ஆம்! வளர்ந்து விட்டாய்…சிறுமியாகவே!!!” என்றாய்.
உண்மை புரிந்தது அம்மா,
காலங்களில் உன் பாசம் வளரும்
ஆனால்
உன் பார்வையில் நான் வளர்வதில்லை என்று !!!!          
                                                                   இப்படிக்கு,
                                                                                                             - உன் அன்பு மகள்!!!

ஒரு மாலை நேரம். ஒரு தென்றலோடு உரையாடிக் கொண்டு பூங்காவினில் நடந்துச் சென்று கொண்டு இருந்தேன்.

அவளைத் தென்றல் என்றால் சிலர் சண்டைக்கு வரலாம். இவள் தென்றலை விடவும் மெலிதானவள் எனலாம். தென்றல் கூட எதிர்க்காற்றாய் வீசும் போது அதன் கனம் தெரியும் ஆனால் இவள் ஒரு கணமும் கனப்பதில்லை என்று விளக்கமும் தரலாம்.

தவறு. இவள் கனக்கிறாள். இவள் என்னை பிரிந்து இருக்கும் கணங்களில் நினைவாய் கனக்கிறாள். எனவே இவள் தென்றல் தான்.


இவளைக் காண்பதற்கு இயற்கை அலங்காரம் சூடிக் கொண்டு நின்றது. 


 "விந்தையடி பெண்ணே நீ!!!
 இதோ பார்,
 நீ நடக்கையில் சிந்திய வண்ணங்களை
 மேகங்கள் எடுத்துச் சூடிக்கொள்வதை!!!" என்றேன்.

நின்றாள்.

நீ ஆரம்பித்துவிட்டாயா என்று சொல்வது போல் ஒரு பார்வையை என் பக்கம் வீசினாள். நீண்ட காலமாகவே கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி ஒன்று நினைவிற்கு வந்தது.
"உன்கிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேட்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன். கேட்கலாமா??" என்றேன்.
பெண்களுக்கே உரிய சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வார்த்தையும் பேசாமல் தங்களது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துவது பெண்களுக்கு இயற்கை தந்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை.


"சற்றே புருவம் உயர்த்துகிறாள்
       அவளின் ஆளுமை உணர்த்துகிறாள்!!

"ஏய்! நீ சந்தேகப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. எதுவும் கேட்க வேண்டாம்னா சொல்லு... கேட்கல... முறைக்காத!!! என்றேன்.
"நான் ஒண்ணும் முறைக்கல" என்றாள்.
"அப்படினா கேட்கலாமா" என்றேன்
"ம்ம்ம்!!!". என்றாள்.

 "பேசுவதற்கு தான் கண்களை
        வைத்து இருக்கின்றாயே   
பின் ஏன் இதழ்களை தேவை இல்லாது
        அலங்கரித்து  கொண்டிருக்கிறாய்!!!" என்றேன்.

சற்று முகம் மலர்ந்தாள். பின் என்னை நோக்கித் திரும்பி


“..ம்ம்ம் ..!! கண்களால் முத்தமிட முடியாதே!!!”  என்று கூறி ஓடி மறைந்தாள்.

அப்படி என்றாள் இதழ்களுக்கு அலங்காரம் சரி தான்!!! 

"அக்கா ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா". 

எங்க ஊர் பங்குனி பொங்கல் என்றால் ஞாபகத்திற்கு வரும் பல விசயங்களில் இந்த குரல்களும் முக்கியமானவை. பொங்கலை முன்னிட்டு கோவிலைச் சுற்றி புதிதாய் முளைத்திருக்கும் பல கடைகளுள் பொம்மை விற்பவர்கள் தான் பெருன்பான்மையாக இருப்பார்கள். பொம்மை என்றால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் அல்ல. அம்மனின் அருள் பெற நமக்கு வேண்டியவர்களுக்காக வேண்டி வைக்கப்படும் பொம்மைகள்.

கை குணமாக கை பொம்மை. காலுக்கு கால் பொம்மை. குழந்தைகளுக்கு சிறுவர் பொம்மை. பெரியவர்களுக்கு அவர்களுக்கு உரிய பொம்மை என்று பல வகையான பொம்மைகளை விற்று கொண்டு இருப்பர்.

"பையனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல. ஒரு பையன் பொம்மை தாங்கமா." என்றார் ஒரு சிறுவனின் அன்னை.
"என்ன ஆச்சிமா பிள்ளைக்கு?" பல வருடங்களாகவே அந்த அன்னையையும் சிறுவனையும் பொங்கல் அன்று கண்டு பழகி இருக்கும் அந்த கடைக்கார பாட்டி அக்கறையுடன் விசாரித்தார்.
"கொஞ்ச நாளா காய்ச்சல் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குமா. என்ன பண்றதுனே தெரியல" என்றார் அந்த அன்னை.
"கவலைப்படாதேமா! இந்தா... இந்த பக்கத்துக் கடையில கொஞ்சம் பூவை வாங்கி இந்த பொம்மையில சுத்தி அம்மன் கோவிலுக்குள்ள வச்சிரு... அப்புறம் எல்லாம் அந்த மாரித்தாய் பாத்துப்பா. நீ கவலைப்படாதே" என்று சொல்லி ஒரு பொம்மையை அந்த பாட்டி கொடுத்தார்.
"சரிமா!" என்று அந்த பொம்மையை வாங்கி தன் மகனிடம் கொடுத்தார் அந்த அன்னை.   
"அம்மா... அம்மா... எனக்கு கடிகாரம் வச்ச பொம்மை தான் வேண்ணும்" என்றான் அவன்.
"கடிகாரம் வச்ச பொம்மை தானே ராசா... இந்தா எடுத்துக்கோ " என்று அந்த பாட்டி அவனுக்கு பிடித்த பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு மகிழ்ச்சியுடன் அவன் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். பின்னால் அவன் அன்னை நம்பிக்கையுடன் நகர ஆரம்பித்தார்.

மேலே சொன்னது போல் பல கதைகளை அந்த பொம்மைகள் சுமந்து கொண்டு தான் அலைகின்றன இன்றும், அந்த பொம்மைகளை சுமப்பவர்களோ ஒரு புது நம்பிக்கையை சுமந்து கொண்டு தான் செல்கின்றனர்.

 "இந்த பொம்மையை வச்சா மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திடுமா? இது எல்லாம் மூட நம்பிக்கையா தெரியில" என்று கேட்டேன். அந்த பாட்டியிடம்.
என்னை அந்த பாட்டி சற்று உற்றுப் பார்த்தார். "நம்ம நல்லா இருப்போம்னு நம்புறது மூட நம்பிக்கையாப்பா?" என்றார்.
"இல்லை!!... ஆனா.."
"யாருக்கும் தீங்கு செய்யாம நமக்கு அந்த நம்பிக்கைய ஒண்ணு தருதுனா அது தப்பாப்பா" அந்த பாட்டி தொடர்ந்தார்.
"இல்லை!!"
"மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம். அந்த நம்பிக்கைய இதுங்க தருதுங்க. இதை போயி மூடநம்பிக்கைனு சொல்லிகிட்டு...நம்ம நல்லா இருப்போம்னு யாருக்கும் எந்த தீங்கும் தராம நம்பிக்கை கொடுக்குற எந்த விஷயமும் மூட நம்பிக்கை இல்லை...!!! அப்புறம் பிரச்சனைகள் தீர்ந்திடுமான்னு கேட்டேல... தீரும் ... தீர்ந்திருக்கு!!!" என்று கூறி முடித்துவிட்டு தன் கடை வேலையை பார்க்க தொடங்கினார் அந்த பாட்டி.
நானும் அந்தக் கடையை விட்டு நகர்ந்தேன் ஒரு தெளிவுடன்...

விருதுநகர் பொங்கல்னா கண்டிப்பா பொம்மைகள் இருக்கும்... அவை இல்லாம பொங்கலா... வாய்ப்பே இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு!!! நம்புவோம்!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.


மழை! எங்கள் ஊர் மிகவும் எதிர் பார்க்கும் ஒரு விருந்தாளி. வேலைக்கு வெளியூர் சென்ற மகன் எப்பொழுது ஊர் திரும்புவான் என்று காத்திருக்கும் அன்னையைப் போல், எங்கள் ஊரும் மழைக்காக காத்து இருக்கும். நாங்கள் சற்றும் எதிர் பார்க்காத பொழுது அவனும் வருவான், சில நேரங்களில் தன் உள்ளத்தில் மறைந்து இருக்கும் காதலை கயல்விழி அசைவில் வெளிப்படுத்தும் பெண்ணைப் போல் ஒரு கவிதையாய்- குற்றாலத்து  சாரலாய்!!! சில நேரங்களில் இன்று உலகத்தின் கடைசி நாள் என்று அறிந்தவுடன் இது வரை தன் நெஞ்சத்தில் சேர்த்து வைத்து இருந்த காதலை தன் காதலியிடம் சொல்லும் காதலனை போல் - பெரு மழையாய்!!! இருக்கும் வரை ஊரை நன்றாக மகிழ்விப்பான். பின் எவ்வாறு சொல்லாமல் வந்தானோ அவ்வாறே சொல்லாமல் சென்று விடுவான். நாங்களும் அவன் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

உலகமெங்கும் சுற்றினாலும் வீட்டில் ஒரு விழா என்றால் எப்படியாவது வீட்டிற்கு வந்து தன் தாயின் மனத்தை குளிர்விக்கும் மகனை போல் எங்கள் ஊருக்கு தவறாமல் மழை வந்து செல்லும் ஒரு விழா உள்ளது. அது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா. பங்குனி மாதத்தில் மாரியம்மனை துதித்து நடத்தும் பொங்கலை அவன் இது வரை காணாமல் விட்டதில்லை. எதிர்பார்க்காத பொழுதே வந்து பழகியவனை நிச்சயமாய் வருவான் என்று நாங்கள் எதிர் பார்ப்பது அப்பொழுது தான். இது வரை அந்த எதிர்பார்ப்பு பொய்தததில்லை.

இன்றும் அப்படித்தான், மேகம் இல்லா வானில் கதிரவன் கொழுத்திக் கொண்டு இருந்தான். ஊரில் பொங்கல். அருகிலிருந்த சிறுவன் எதிர்பார்ப்போடு கேட்டான்,

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.
"எப்படினே.. ஒரு மேகத்தை கூட காணோம்... அப்புறம் எப்படி வரும்?" என்றான்.
"வரும்டா!... பொறுமையா இரு... வராம எங்க போகும்..." என்று சொல்லி நகர்ந்தேன். அவனும் "ஆகோ.... அய்யாகோ" என்று கூறியவாரே கோவிலை நோக்கி செல்லத் தொடங்கினான். நானும் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.

மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டினுள் இருந்த சமயம் வெளியே இருந்து மண் வாசனை வீச ஆரம்பித்தது. ஆவலுடன் வெளியே சென்று பார்த்தேன். எப்படியோ மேகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தன. மழை மண்ணை நனைத்துக் கொண்டு இருந்தது. மண்ணோ மணத்தை பரப்பிக் கொண்டு இருந்தது. மீண்டும் நிமிர்ந்து வானத்தை பார்த்தேன். ஒரு மழைத்துழி என் கண் சேர மனம் சிலிர்த்தது.
மழை அருமையானவன் தான்!!! இந்த வருடமும் பொங்கலுக்கு  தன் அன்னையை காண வந்து விட்டான்.
புன்னகைத்தேன்.
"எங்க ஊர்ல பொங்கல்னா மழை வரும்டே!!!!"

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு