சில நேரங்களில் 'என்ன செய்ய முடியும்?' என்கின்ற கேள்வியானது தலையைப் பிக்க வைத்து விடுகிறது. எளிமையாக இருக்க வேண்டிய ஒரு வாழ்வினை, மிகுந்த சிக்கல் நிறைந்த ஒன்றாக நாமே திறம்பட அமைத்து வைத்துக் கொண்டு, பின்னர் சிக்கலான வாழ்வினை எவ்வாறு எளிமையாக மாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு வகையான கோபம், ஒரு வகையான இயலாமை நம்மை மெதுவாக ஆட்கொள்ளத்தான் செய்கிறது.

'என்ன செய்ய முடியும்? ' என்கின்ற கேள்விக்கு விடையினை வேறு யாராவது தந்தார்கள் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருவதனை அந்நிலையில் தவிர்க்க முடிவதில்லை. 'வாழ்க்கையானது உண்மையில் எளிமையானது' என்கின்ற உண்மையை மக்களுக்கு உணர்த்தக்கூடிய எளிய வழிமுறைகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே மனம் எண்ணவும் செய்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு எளிய வழிமுறையாகத்தான் நான் இந்த 'ஸ்மர்ப்ஸ் (Smurfs)' படக்கதையினைக் காணுகின்றேன். பள்ளி செல்லுகின்ற வயதிலே கார்ட்டூன் நெட்ஒர்க் சேனலில்தான் முதலில் ஸ்மர்ப்ஸ் கார்ட்டூனை நான் கண்டிருந்தேன். அப்பொழுது அவை என்னை பெரிதாக ஈர்த்து இருக்கவில்லை. ஆனால் சில காலங்களுக்கு முன்பாக அவற்றை புத்தக வடிவில் படிப்பதற்கு வாய்ப்பு கிட்டிய பொழுதுதான், அந்த கதாபாத்திரங்களின் அருமை எனக்கு விளங்கலாயிற்று. மிகவும் அருமையாக மனித வாழ்வினைப் பற்றியும், தற்சார்புப் பொருளாதாரத்தைப் பற்றியும் நகைச்சுவை உணர்வுடன் அந்த புத்தகங்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே 'என்ன செய்ய வேண்டும்?' என்ற ஒரு கேள்வி என்னுடைய மண்டையைக் குடைந்து கொண்டிருந்த பொழுது, 'இந்த கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது ஒரு பயனுள்ள விடயமாக இருக்கும்' என்ற எண்ணம் தோன்றியதால் இப்பதிவு. இனி அந்த நீலப் பொடியர்களின் உலகத்திற்குள் செல்வோம்...!!!

ஸ்மர்ப்ஸ் (தமிழில் நீலப் பொடியர்கள்) ஒரு அழகிய உலகத்தினில், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தினர். அவர்களுக்குள் எந்தொரு பிரிவினையும் பிரச்சனையும் கிடையாது. ஒவ்வொரு ஸ்மர்ப்பும் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கின்ற வண்ணம் ஒரு தொழிலை செய்து வருகின்றான். அவர்கள் அனைவருக்கும் தலைவராக 'சீனியர் ஸ்மர்ப்' என்ற புத்திக்கூர்மை மிக்க வயதானதொரு ஸ்மர்ப் இருக்கின்றார். அவர் சொல்லைத்தான் அவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டு அமைதியாக ஆட்டம் பாட்டம் என்று ஒரு அருமையான வாழ்வினை வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவரும் அவர்களைத் திறம்பட வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.

அணை கட்ட வேண்டுமா, அனைத்து ஸ்மர்ப்களும் வேலை செய்வார்கள்...பாலம் கட்ட வேண்டுமா...அனைவரும் வேலை செய்வார்கள்...அவர்கள் அனைவரும் அவர்கள் அனைவருக்கும் ஒற்றுமையுடன் இருப்பதால், 'என்னுடைய வேலைக்கு இவ்வளவு கூலி' என்ற கேள்விகளை அவர்கள் முன்வைப்பதில்லை...எனவே பணம் என்கின்ற ஒரு விடயமும் அவர்களின் உலகத்தினில் இல்லை. நாங்கள் சமூகமாக வாழ்கின்றோம், அந்த சமூகத்திற்கு எங்களால் என்ன செய்ய முடிகிறதோ அதை செய்கின்றோம்...என்றே அவர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகின்றார்கள். ஒற்றுமை என்று சொன்னவுடன், அவர்களுக்குள் பிரச்சனையே வராது என்றும் அவர்கள் சண்டையே போட மாட்டார்கள் என்றும் எண்ணி விடாதீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை அவர்கள் மறந்து மீண்டும் வழக்கம் போல இயல்பாய் மாறி விடுவதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது.

எனவே, அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு தற்சார்பு வாழ்வினை வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம் தான் கதைக்களம்...இப்பொழுது இந்த சமூகத்தில் நம்முடைய மனித சமூகத்தினை சீரழித்து வைத்திருக்கும் சில விடயங்களை நாம் அறிமுகப்படுத்தினால் என்னவாகும் என்பதை மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இந்த படக்கதைகள் விளக்கி இருக்கின்றன.

உதாரணத்திற்கு மனித உலகத்தில் பணம் என்கின்ற ஒன்று பயன்படுத்தப்படுவதைக் கண்ட ஒரு ஸ்மர்ப், 'ஆகா உழைப்பிற்கு பரிசா - நன்றாக இருக்கின்றதே' என்றெண்ணி பணம் என்கின்ற ஒரு கோட்பாட்டினை ஸ்மர்ப் உலகத்திற்கும் கொண்டு வருகின்றான். முதலில் அவனது இந்த கோட்பாட்டினை வெறும் ஒரு புதுமையான விளையாட்டாக எடுத்துக் கொண்ட மற்ற ஸ்மர்ப்ஸ், விரைவில் அந்த கோட்பாட்டிற்கு அடிமையாகின்றனர். சுயநலம், பேராசை, கடன், போன்ற விடயங்கள் மிக வேகமாய் அந்த சமூகத்தினில் பரவி, விரைவில் அவர்களது கிராமமே அழிவிற்கு வந்து விடுகிறது. இறுதியில் அவர்கள் அந்த பணம் என்கின்ற ஒன்றை துரத்திவிட்டு மீண்டும் தங்களது இயல்பான தற்சார்பு வாழ்வினையே மேற்கொள்ளத் துவங்குகின்றனர். அந்த கிராமமும் பிழைக்கிறது. உண்மையில், 'ஒரு சமூகத்தில் பணத்தின் தாக்கம்' என்கின்ற தலைப்பு மிகவும் சிக்கலானதொரு தலைப்பு. அதனை விளக்குவதற்கு நாம் மிகவும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தலைப்பினை, நகைச்சுவை கலந்த ஒரு திரைக்கதை அமைப்பில், மிகவும் அருமையாக ஸ்மர்ப்ஸ் நமக்கு வழங்குகின்றார்கள்...இது ஒரு தனிக்கலைதான். ஆம், அந்த கதைகள் நம்மை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன.

பெரும்பாலும் படக்கதைகள் என்பன சிறுவர்களுக்கானவை என்கின்ற ஒரு தவறான கருத்து நம்முடைய சமூகத்தில் பரவியிருக்கின்றது. அக்கருத்து தவறான ஒன்று. உண்மையில், இத்தகைய படக்கதைகள் மிகவும் சிக்கலான சமூக அவலங்களை, சமூக சூழ்நிலைகளை மிகவும் எளிமையாக விளக்குகின்ற வண்ணமே இருக்கின்றன. இவற்றை நாம் சிறுவர்களிடம் கொண்டு செல்வதும் எளிமையாக இருக்கும்...ஒரு நல்ல சமூகம் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும், அதனில் பிரச்சனைகள் எவ்வாறு வரும்? என்கின்ற விஷயங்களை இக்கதைகள் மிகவும் எளிமையாக சிறுவர்களுக்கு விளங்க வைத்து விடுகின்றன. எனவே இக்கதைகளை நாம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லவும் வேண்டியிருக்கிறது!!!

கொண்டு செல்ல முயல்வோம்...!!!

பி.கு:

தமிழில் இந்த படக்கதைகள் லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
http://lion-muthucomics.blogspot.com/2016/08/blog-post_30.html

பயணிகள்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி