அன்புள்ள ராஜீவ் காந்தி அவர்களுக்கு,
நிச்சயம் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும் கடிதம் எழுதியாக வேண்டிய சூழ்நிலை இருப்பதினால் எழுதித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. இன்று மீண்டும் உங்களது கொலை வழக்கைப் பற்றிய விவாதங்களும் அநியாயமாய் தண்டனைப் பெறப்பெற்ற அப்பாவிகளின் விடுதலையைக் குறித்த குரல்களும் எழத் துவங்கி உள்ளன. இந்நிலையில் என் மனதில் இருக்கும் எண்ணங்களையும் கேள்விகளையும் உங்களிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றே தோணுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை இருந்தும் இன்றைக்கு உங்களின் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள் தான் என்ற எண்ணம் இந்திய மக்களின் இடையே வெகுவாக பரப்பப்பட்டு உள்ளது. ஈழத்தில் நீங்கள் தமிழர்களைக் கொன்றீர்கள் அதனால் பழிக்கு பழியாக உங்களை விடுதலைப் புலிகள் கொன்று விட்டனர் என்றே மக்கள் நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். "பழிக்கு பழி...இரத்தத்திற்கு இரத்தம்" என்ற வகையிலான திரைப்படங்களை மட்டுமே கண்டு வளர்ந்த ஒரு சமூகத்திடம் அக்கருத்து விரைவாக சென்று அடைந்ததில் நமக்கு வியப்பு ஒன்றும் இல்லை தான்.
இராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்...!!!
யாரால்?
விடுதலைப்புலிகளால்...!!!
ஏன்?
ஈழத்தில் அவர் தமிழர்களைக் கொன்றார் அதனால்...!!!
ஆ...சரிதான்...அப்படித்தான் இருக்க வேண்டும்...!!!
என்றவாறே தான் இன்றைய மக்களுள் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. பிழை அவர்களின் மேல் இல்லை...காரணம் அவர்களை அந்த அளவு அரசியல் தெளிவோடு தான் இன்றைய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வைத்து இருக்கின்றன. நாட்டின் நிலைமை அவ்வாறு தான் இருக்கின்றது.
ஆனால் நிச்சயம் உண்மையை நீங்கள் அறிந்து இருப்பீர்...ஒரு விடுதலைப் போராட்டத்தில் பழி வாங்கும் எண்ணம் சிறிதும் உதவாது என்பதனை. விடுதலையை நோக்கிப் போராடும் ஒவ்வொரு போராளியின் இலக்கும் விடுதலையாகவே இருக்குமே அன்றி, தனி மனித விருப்பங்களோ அல்லது வெறுப்புகளோ முக்கியமாக இருக்காது. ஆயிரம் இழப்புகளைச் சந்தித்தாலும் இலக்கு விடுதலையாகவே இருக்கும். அதற்கு பங்கம் விளைவிக்கும் யாதொரு செயலையும் எந்த ஒரு விடுதலைப் போராளியும் எப்பொழுதும் செய்ய மாட்டான். இதனை நீங்கள் நன்றாக அறிவீர்கள்...விடுதலைப் புலிகளும் அறிந்து தான் இருப்பர்.
அந்நிலையில் அவர்கள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உங்களைக் கொன்றால், அண்டை நாடான இந்தியாவின் ஆதரவினை நிரந்திரமாக இழக்க வேண்டி வரும் என்பதையும்...தாய் தமிழகத்தின் ஆதரவையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்தே தான் இருப்பர். அதனை விட பெரிய இழப்பு அவர்களுக்கு நிச்சயம் கிடையாது. உங்களின் மரணத்தினால் புலிகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக கிட்டி இருக்கும்...மேலும் அவர்களின் விடுதலை போராட்டமும் ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கும்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் நிச்சயம் அவர்கள் உங்களைக் கொலை செய்ய எந்த ஒரு காரணமும் இல்லை என்றே தோணுகின்றது. காரணம் அதில் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாயமும் இல்லை.
இங்கே ஒரு புத்தகம் எனக்கு நியாபகம் வருகின்றது 'தி கவுன்ட்ஆப் மோன்டே கிறிஸ்டோ' என்றொரு புத்தகம் அது. அதில் ஒரு அப்பாவி இளைஞன் எந்த ஒரு தவறுமே செய்யாது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பான். ஏன் தான் சிறையில் இருக்கின்றோம் என்றே அவன் குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு பெரியவர் "ஏன் காரணமே அறியாது துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்று எண்ணுகின்றாயா...உன்னுடைய துன்பத்தினால் யார் யார் எல்லாம் இன்பமும் பலனும் அடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்...அப்பொழுது உன்னுடைய துன்பத்திற்கான காரணத்தை நீ கண்டு அறிவாய்" என்றே கூறிச் செல்வார்.
அதையேதான் நாமும் இங்கே முயன்றுப் பார்க்க வேண்டி இருக்கின்றது. உங்களின் மரணத்தினால் நிச்சயம் விடுதலைப்புலிகளுக்கு யாதொரு நன்மையையும் இல்லாத நிலையில்...உங்களின் மரணத்தினால் யாரெல்லாம் ஆதாயம் அடைந்து இருப்பார்கள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் உங்களின் வாழ்க்கையை சற்று திரும்பித் தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.
பிறப்பும் இறப்பும் நமது கைகளில் இல்லை. நீங்கள் பிறக்கும் பொழுதே நூறு கோடி மக்களை ஆளும் வாய்ப்பினைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தீர்கள். இருந்தும் ஆட்சியில் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா என்பது தெரியவில்லை. காரணம் உங்களின் அண்ணன் சஞ்சய் காந்தி அப்பொறுப்புகளில் ஆர்வம் கொண்டு இருந்தமையால் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து இருக்க சாத்தியக் கூறுகள் அதிகமாகத் தான் இருக்கின்றது.
ஒருவேளை உங்களது அண்ணனும் மர்மமாக இறக்காமல் உங்களது தாயும் கொலை செய்யப்படாமல் இருந்து இருந்தால் நீங்கள் அரசியலுக்கு வராமலே போயிருந்து இருக்கலாம். எனக்கும் இந்த கடிதத்தை எழுத வேண்டிய தேவை இல்லாது போயிருக்கும். ஆனால் அவை அனைத்தும் நிகழ்ந்து விட்டன. எனவே நாமும் அவற்றைக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.
நீங்கள் ஒரு அரசியல்வாதி அல்ல ராஜீவ் அவர்களே...அண்ணன் எப்பொழுது செல்வான் திண்ணை எப்பொழுது காலி ஆகும் என்று அரசியலையே கண்ணாக வைத்து கொண்டு இருந்தவராக எனக்குத் தெரியவில்லை...உங்களின் அண்ணனின் மறைவிற்குப் பின்னர் தான் நீங்கள் களம் இறக்கப்படுகின்றீர்கள். சந்தர்ப்பம் உங்களை அரசியலுக்கு இழுத்து வருகின்றது.
அப்பொழுது கூட நீங்கள் பிரதமராக ஆவீர்கள் என்று எண்ணினீர்களா இல்லையா என்றுத் தெரியவில்லை...காரணம் நாட்டினை ஆண்டுக் கொண்டு இருக்கும் நமது அம்மா மரணம் அடைவார்கள் என்று எந்த பிள்ளையுமே எண்ணி இருக்க மாட்டான் தான். ஆனால் உங்களின் தாயார் கொலை செய்யப்பட நாட்டின் தலைமைப் பொறுப்பு உங்களின் வசம் வருகின்றது. இங்கே தான் சில கேள்விகள் கிளம்புகின்றன...
1) உங்களின் தலைமைப் பொறுப்பை அதாவது நீங்கள் பிரதமர் ஆவதை உங்களின் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்களா?
2) பிரதமராவதற்கு உரிய பக்குவம் உங்களுக்கு இருந்து இருக்குமா?
இவ்விரண்டுக் கேள்விகளுக்குமே விடைகள் இல்லை என்றே வருகின்றது.
நிச்சயமாய் இந்திரா காந்தி அவர்கள் இருந்து இருக்கக் கூடிய கால கட்டம் வரைக்கும் அவரைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரதம மந்திரி ஆகி இருக்க முடியாது. அந்நிலையில் அவருக்கு அடுத்து சஞ்சய் காந்தி என்று ஒருவர் வரிசையில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனைகள் தான். அந்நிலையில் அவ்விருவரின் மரணத்தையும் சிலர்....உங்கள் கட்சிக்காரர்களே கொண்டாடி இருப்பர். அவர்களுக்கு நிச்சயமாய் நீங்கள் அரசியலுள் நுழைந்தது கசப்பாகத் தான் இருந்து இருக்கும். எப்பொழுது நீங்கள் இறப்பீர்கள் எப்பொழுது அவர்கள் பிரதமர் ஆகலாம் என்றே அவர்களின் சிந்தனை இருக்கும் தானே.
அதன் அடிப்படையில் பார்த்தால் இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக பிரதமர் ஆகி இருக்க வேண்டிய திரு. நரசிம்ம ராவ் அவர்கள் உங்களால் அந்த வாய்ப்பினை இழந்து விட்டார். நீங்கள் பிரதமராக ஆக்கப்பட்டு விட்டீர்கள். இனி நீங்கள் இருக்கும் வரை அப்பதவி அவருக்கு கிடையாது.
இந்நிலையில் உங்களின் மரணத்திற்கு பின்னர் திரு.நரசிம்ம ராவ் அவர்களே பிரதமர் ஆகி இருப்பதும், உங்களுடைய மரணத்திற்கான சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் சந்திராசாமியும் நரசிம்ம ராவும் தோழர்கள் என்பதும் இங்கே நாம் சிந்தித்துப் பார்த்தாக வேண்டிய விடயங்களாக இருக்கின்றன.
மேலும் நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுதே உங்களை சதியால் அகற்ற நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, சந்திராசாமி போன்றவர்கள் முயன்றார்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே இருந்தீர்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
அதாவது நீங்கள் பிரதமர் ஆனதில் உங்கள் கட்சிக்கு உள்ளேயே புகைச்சல் இருந்து இருப்பது புலனாகின்றது. சரி இது இருக்கட்டும்...!!!
உங்களின் தாயார் தீவிர சோவியத் ஆதரவாளர். சோவியத் ஆதரவாளர் என்றால் அமெரிக்க எதிர்ப்பாளர் என்பது மறைமுகப் பொருள் தானே. இது நிச்சயமாய் அமெரிக்காவிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விடயமாக இருந்து இருக்காது என்பது தெளிவு.
நூறு கோடி மக்கள் தொகையினைக் கொண்ட நாட்டினை இழக்க நிச்சயம் அமெரிக்கா தயாராக இருக்காது. இந்தியாவின் கொள்கைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தால் அமெரிக்கா பெறப் போகும் இலாபங்கள் கணக்கில் அடங்காதவை என்பதை அமெரிக்கா அறிந்தே தான் இருக்கும். அதற்குத் தேவை எல்லாம் அதனை நாட்டிற்குள் அனுமதிற்கும் ஒரு தலைவர். அமெரிக்காவின் அடிமையாக இருக்க காத்து இருக்கும் ஒரு தலைவர். ஆனால் அந்த தலைவர் தான் அதற்கு கிட்டவில்லை.இந்திரா காந்தி சோவியத் ஆதரவாளராக இருந்தார்.
இந்நிலையில் வந்தால் நூறு கோடி மக்கள் இருக்கும் ஒரு மாபெரும் சந்தை...அள்ள அள்ள குறையாத இயற்கை வளங்களைக் கொண்டுள்ள ஒரு பூமி...அதற்கு வேண்டியது ஒரு தலைவரின் மரணம்...ஒரே ஒரு தலைவரின் மரணம்..என்ற நிலையில்...அமெரிக்கா என்ன செய்து இருக்கும். வரலாற்றில் அது என்ன செய்து இருக்கின்றதோ அதையே தான் செய்து இருக்கும். அந்த தலைவரைக் கொலை செய்ய முயற்சி செய்து இருக்கும். இந்திரா காந்தியின் மரணத்திலும் சந்திராசாமியின் பெயர் அடிபடுவதுடன் அவரின் மரணத்திலும் மர்மம் நிலவுதும் அமெரிக்காவின் தலை ஈட்டினை நிச்சயமாய் உறுதி செய்கின்றன.
இந்திரா காந்தியின் மரணத்துடன் சந்திராசாமியின் தோழரான நரசிம்ம ராவ் பிரதமராகி இருந்தால் அன்றே அமெரிக்கா இந்தியாவினுள் நுழைந்து இருக்கும். ஆனால் எதிர்பாராவிதமாய் நீங்கள் உள்ளே புகுந்து இருக்கின்றீர்கள். யாரும் இதனை எதிர் பார்த்து இருக்க முடியாது. அமெரிக்காவும் தான். கூடுதலாக நீங்களும் சோவியத் ஆதரவாளர். அமெரிக்காவின் நிச்சயமாய் தீர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்களின் பெயரைச் சேர்க்க அந்த ஒரு காரணம் போதாதா.
போதாகுறைக்கு வளைகுடா போரில் நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக பேசியதும்...'என்றுமே இந்தியா அமெரிக்காவிற்கு வால் பிடிக்காது...நாங்கள் முன்னேற்றத்திற்காக ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளை நாடுவோம்...' என்று அமெரிக்காவை எதிர்த்ததும் நிச்சயமாய் அமெரிக்காவிற்கு இனித்து இருக்காது.
இந்நிலையில் உங்களை நீக்கவே அமெரிக்கா முயன்று இருக்கும். உங்களை நீக்கி விட்டு அதன் கொள்கைகளுக்கு கதவினை திறந்து விடும் ஒரு அடிமைத் தலைவனைத் தான் அமெரிக்கா இந்தியாவின் பிரதமராக அமைக்கப் பார்க்கும்.
இதன் அடிப்படையில் பார்த்தோம் என்றால்...
அமெரிக்காவினை எதிர்த்த தலைவரான உங்களின் மரணத்திற்கு பின்னர், உங்களின் மரணத்தைக் காரணமாக வைத்தே ஆட்சியில் அமர்ந்த உங்களது கட்சியானது செய்த முதல் வேலை உங்களின் கொலைக்கான வழக்கை முடக்க முயன்றதும்...அமெரிக்காவினை இந்தியாவினுள்...'தாராளமயமாக்கம்...தனியார்மயமாக்கம்...உலகமயமாக்கம்...' என்ற கொள்கையின் வாயிலாக அனுமதித்ததுமே ஆகும்.
இதனை இன்று வரை எந்த ஒரு ஊடகமுமே கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பது நிச்சயமாய் ஆச்சரியப்படத் தான் வைக்கின்றது.
கடிதம் தொடரும்...!!!
பி.கு:
1) இவை சில நூல்களில் இருந்தும் பதிவுகளில் இருந்தும் நான் அறிந்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்டு எழுதுவதே ஆகும்...மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்...விவாதிக்கலாம்...!!!
2) தொடர்புடைய புத்தகங்கள்/பதிவுகள் சில
- ராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுசாமி
- http://greatgameindia.wordpress.com/2013/03/07/subramanian-swamy-the-mossad-stooge-the-assassination-of-rajiv-gandhi/
- http://realkillersofrajiv.blogspot.in/
- http://www.outlookindia.com/article.aspx?205868
- http://www.nytimes.com/1991/01/30/world/india-in-an-uproar-over-refueling-of-us-aircraft.html