ஆரியர்கள் என்பவர்கள் யார் என்றக் கேள்வியினை இன்று நம்மிடையே வைத்தோம் என்றால்... அவர்கள் நாடோடிகள், இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டு இருந்தவர்கள்...குதிரைகளை வைத்து இருந்தவர்கள்...வெளியே இருந்து இந்தியாவின் மீது போர் எடுத்து வந்து இந்திய மக்களை அடிமைப்படுத்தியவர்கள் என்றே விடைகள் வரும்.

சரியான விடைகள் தாம்...ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஆரியர்கள் என்று வழங்கப்பெருவோர் இந்தியாவின் மீது எக்காலத்தில் படை எடுத்து வந்தனர் என்பதனையே நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை ஆரியர்கள் என்பவர்கள் சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்து விட்டார்கள் என்பதே...ஆனால் அது தவறான கருத்து என்றும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் மேல் படையெடுத்த பல்வேறு வேற்று இனத்தவர்களே என்று புதிய ஆராய்ச்சிகள் கூறிக் கொண்டு இருக்கின்றன. அதனைப் பற்றி நாம் விரிவாகப் முன்னரே கண்டு இருக்கின்றோம் என்பதனால் அதனைப் பற்றிச் நாம் இங்கே மீண்டும் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். இருந்தும் நண்பர்கள் அப்பதிவுகளையும் படித்து விடுவது நலமாக இருக்கும். (அப்பதிவுகள் : ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2 )

சரி இப்பொழுது நாம் மீண்டும் மனு தர்மத்திற்கு வர வேண்டி இருக்கின்றது.

"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது." - மனு அத்தியாயம் 2 - 22

"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்த இடத்தில் அடைய மாட்டானோ அந்த இடத்தில் வசிக்கத்தக்கது" - மனு அத்தியாயம் 2 - 24

மேலே உள்ள மனு தர்ம வாக்கியத்தின் படி ஆர்ய வர்த்தம் எனப்படுவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியாகும்.



 

சரி இருக்கட்டும்...இப்பொழுது இன்னொரு வாக்கியத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

"பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநய முதலிய கர்ம லோபத்தினாலும் மேற்ச் சொல்லும் சத்திரிய சாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்." - மனு அத்தியாயம் 10 -43

"பௌண்டரம், ஒவண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்ச் சொன்னபடி சூத்திரளாகி விட்டனர்." - மனு அத்தியாயம் 10 -44

அதாவது பிராமணர்களை வணங்காமையினால் பல தேசங்கள் சூத்திரத் தன்மையை அடைந்து விட்டன என்றே மேலே உள்ள வாக்கியங்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டு உள்ள தேசங்களில் சில பெயர்கள் நமக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர்கள்

திராவிடம்
யவனம் - தமிழகத்தில் வந்திருந்த ரோமர்கள்/கிரேக்கர்கள் ஆகியோருக்கு தமிழில் வழங்கப்பட்ட ஒருச் சொல்.

இங்கே இன்னொரு இனத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவர்கள் சகர்கள்.

பொதுவாக இன்றைக்கு மனுதர்மம் எப்பொழுது இயற்றப்பட்டது என்றால், அது மனு என்ற மகானால் ஆதிக் காலத்தில் இயற்றப்பட்டது என்றே விடையினை சிலர் கூறுவர். ஆனால் நாம் இங்கே காண வேண்டியது என்ன வென்றால் சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்.

பல்வேறு காலங்களில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் நுழைந்த பல்வேறு நாடோடிக் கூட்டங்களில் சகர்களும் ஒருவர். மேலும் அவ்வாறு நுழைந்த பல்வேறு அன்னியர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆர்ய வர்த்தத்தில் சகர்களும் இருந்தனர் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. அப்படி இருக்கையில் ஆதி காலத்தில் வாழ்ந்த மனுவிற்கு கி.பி காலத்தில் இருந்த சகர்களைப் பற்றித் தெரிந்து இருப்பது ஆச்சர்யம் தான் அல்லவா? மேலும் திராவிடர்கள் வேறு தேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் இங்கே கவனிக்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் மேலே உள்ள வாக்கியங்களை வரலாற்றின் அடிப்படையில் காண முயல்வோம். அதற்கு நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

1) நாடோடி இனத்தவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் இருவகைப்படுபவர்கள். ஒன்று உணவினைத் தேடி பயணம் மேற்கொள்பவர்கள். இரண்டாமவர்கள் இடத்தினைப் பிடிக்க ஊர் ஊராய் அலைபவர்கள். இவ்விரண்டு வகையினைச் சார்ந்தவர்களும் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.

2) இந்தியாவின் தெற்குப் பகுதியைப் போல் அல்லாது இந்தியாவின் வட மேற்குப் பகுதி பெரும்பாலும் அந்நியர்களின் ஆதிக்கத்திலேயே தான் இருந்து இருக்கின்றது. பெர்சியர்கள், கிரேக்கர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள் போன்றவர்கள் அங்கே ஆட்சியினைப் பிடித்து இருக்கின்றனர்.

3) அவ்வாறு அங்கே ஆண்ட வேற்று இனத்து மக்கள் காலத்தில் அங்கே ஏற்கனவே இருந்த இந்திய/ திராவிட மக்களுடன் சேர்ந்து தனி இனமாகவே உருவாகி விட்டனர். அதாவது மௌரியப் பேரரசன் பிரகரதத்தனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பெர்சிய வம்சாவழியினைச் சார்ந்த புஷ்ய மித்திரனின் காலத்தில் பெர்சிய இனவழி மக்கள் இந்தியாவில் இருந்து தான் இருக்கின்றனர். அவனின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டப் பின்னும் அவர்கள் அங்கேயே இருந்து தான் வந்து இருக்கின்றனர். இதே கதை தான் மற்ற இன மக்களுக்கும். அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள்.

4) அவ்வாறு இந்தியாவில் வந்து வாழ்ந்து இருக்கும் அம்மக்கள் இந்தியாவில் நிகழும் மாற்றங்களைக் கண்டுக் கொண்டே தான் இருந்து இருக்கின்றனர். அதுதானே வழக்கம்...நாம் வேறொரு நாட்டில் சென்றுத் தங்கும் பொழுது அந்நாட்டின் பழக்க வழக்கங்களை நாம் அறிந்துக் கொள்வது இயல்பு தானே. அவ்வாறு அந்த பல்வேறு இனக்குழுக்களுள் சில இந்திய மக்களைப் பற்றியும், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்களுள் நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றியும் நன்றாக அறிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் வெளியில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருக்கும் அவர்களுக்கு இந்தியாவினை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ஆள்வார்களா மாட்டார்களா? ஆள்வதற்கு முயல்வார்களா மாட்டார்களா? முயல்வார்கள் தானே. முன்னர் அதற்காக வந்த இனம் தானே அவர்கள்...முன்னர் தோற்றனர்...இப்பொழுது இங்கே இருக்கும் மக்களைப் பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றனர்...கூடுதலாக வேறு இன மக்களின் உதவி வேறு கிட்டும் என்றால் ஆள்வதற்கு முயல்வார்கள் தானே.

இப்பொழுது இந்தியாவில் இந்தியாவினைச் சார்ந்த மக்கள் (திராவிடர்கள்) இருக்கின்றனர். வேறு இடங்களில் இருந்து வந்த பல்வேறு இனக்குழுவினைச் சார்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சண்டை என்று வந்தால் கூட்டணிகள் எவ்வாறு உருவாகும்?

அன்னியர்கள் எல்லாம் ஒன்றாக முயல்வர். அவற்றில் சில இனக்குழுக்கள் போரினை விரும்பாது நடுநிலையில் நிற்கும். சில குழுக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும். இதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன தானே. இதன் அடிப்படையில் தான் நாம் மனு தர்மத்தின் வாக்கியத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் நுழைந்த பல்வேறு இனக் குழுக்களும் சில ஒன்றிணைந்து வடக்கில் இந்திய அரசனான ஹர்ஷவர்தனை சூழ்ச்சியால் கொன்று விட்டு வடக்கே ஆட்சியினைப் பிடிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு பிடித்த இடம் தான் ஆர்ய வர்த்தம். அக்காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. அவ்வாறு அவர்கள் பிடித்த இடத்தில் இருந்த மக்களுக்காக அவர்கள் தொகுத்தது தான் மனு நூல் என்ற சட்ட நூல். அது ஆர்யவர்தத்திற்கு வெளியே செல்லாது. அவ்வாறு ஆர்ய வர்தத்தினைப் பிடித்த ஆரியர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்டப் பிரிவுகள் தான் ஆர்யப் பிரோகிதர், சத்திரியர், வைசியர் ஆகியப் பிரிவுகள். அவர்கள் இந்தியாவில் பிடித்தப் பகுதிகளில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அடிமைகளாகிப் போனார்கள் என்றதன் படி அவர்கள் அனைவரும் சூத்திரர் என்று வழங்கப்பெற்றனர்.

மேலும் அந்த அந்நியக் குழுக்களுக்கு உதவாத வேறு இனக்குழுக்கள் எல்லாம் எதிரிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டன. அதனால் தான் தமிழகத்தில் இருந்த யவனர்கள் சூத்திரர்களாகி விட்டனர் என்று இருக்கின்றது.

அவ்வாறு வடக்கே ஆட்சியினைப் பிடித்த ஆரியர்களுக்கு இந்தியர்களை நன்றாகத் தெரியும்...வரலாறும் புரியும். எனவே வரலாற்றினை மாற்ற ஆரம்பிக்கின்றனர். இன்று நம்மிடையே இருக்கும் பல நூல்கள் பல இடைச் செருகல்களைக் கொண்டு விளங்குபவையே. மனு தர்ம நூல் கூட காலங்களில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுத் தான் வந்துக் கொண்டே இருந்து இருக்கின்றது.

ஒரு இனத்தினைத் தோற்கடிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் வரலாற்றினை முதலில் மறைக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும்...அது நமது மண்ணில் இன்று வரை வெற்றிகரமாக செய்யப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. சரி அது இருக்கட்டும்.

நம்முடையக் கூற்றின் படி கி.பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் மனு தர்மமும் சரி நான்கு வர்ணப் பிரிவுகளும் சரி நம் மண்ணில் அதுவும் குறிப்பாக ஆரிய வர்த்தத்தில் உருவாக்கம் பெறுகின்றன.

அக்காலத்தில் தான் அவை தோற்றமே பெறுகின்றன என்றால் அதற்கு முன்னர் இந்திய மண்ணில் சாதி ஏற்றத்தாழ்வுகளோ வர்ணப் பிரிவுகளோ இல்லை என்பது உறுதி தானே. அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு சாதி ஏற்றத் தாழ்வு என்ற வியாதி அக்காலத்தில் வந்து இருக்கவே இல்லை என்பதும் உறுதி தானே.

இந்நிலையில் தமிழகத்திற்கு அவ்வியாதி எப்பொழுது வந்து இருக்கலாம் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  தொடர்புடைய பதிவுகள்:
ஆரியர்கள் யார் -1 
ஆரியர்கள் யார் -2
சமசுகிருதத்தின் காலம்
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்!!!
வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1
வேதத்தில் பலியான கடவுள்
சமசுகிருதம் என்று ஒரு மொழி

மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்.

இன்றைக்கு நம் நாட்டினில் 'தர்மம் காக்கவும்...தர்மம் தழைக்கவும்...' என்று பல இந்துத்துவ அமைப்புகள் முழங்குவது எல்லாம் மேலே நாம் கண்டுள்ள மனு தர்மத்தையே ஆகும். அப்படிப்பட்ட ஒரு நூலினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்று வேதத்தில் ஒரு வரியோடு நின்று விட்ட ஒரு விடயத்தினைப் பற்றி விரிவாக பேசுவது இந்த நூலே ஆகும். பிறப்பால் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று கூறும் நூலினை நாம் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பார்க்கும் பொழுது நிச்சயம் காணத் தானே வேண்டி இருக்கின்றது.

"அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம் தோள் தொடை பாதம் இவைகளில் இருந்து உண்டான பிராமண, சத்திரிய, வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்" - மனு அத்தியாயம் 1 - 87

"நாலு வருணத்தாருக்குள் பிராமணன் சத்திரியன் வைசியன் இம்மூவரும் இரண்டு விதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். சூத்திரனுக்கு உபநயம் முதலியன இல்லாததால் ஒரு சாதியாகவே இருக்கின்றான். இந்த நான்கு வருணத்தார் தவிர ஐந்தாவது வருணத்தான் கிடையாது." மனு அத்தியாயம் 10 - 4

பிரம்மா மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் படைத்து அவர்களுக்கென்று தனித்தனி கர்மங்களை வகுத்து வைத்தார் என்றும் இவர்களைத் தவிர வேறு வருணத்தார் கிடையாது என்றக் கருத்தினை நாம் மேலே உள்ள மனு தர்ம வசனங்களால் அறிந்துக் கொள்கின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் மட்டுமே அங்கே கூறப்பட்டு இருக்கவில்லை...கூடுதலாக பிராமண, சத்திரிய மற்றும் வைசிய வருணத்தினைச் சார்ந்தவர்கள் துவிஜாதிகள் என்றுக் குறிக்கப்பட்டு இருக்கின்றது. சூத்திரன் துவிஜாதி அல்ல என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் துவிஜாதி என்றால் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

துவிஜாதி என்றால் இருப்பிறப்பாளர்கள் என்றே, அதாவது இரண்டு முறை பிறந்தவர்கள் என்றே அர்த்தம் வரும். ஒரு மனிதன் ஒருமுறைப் பிறப்பான் அதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...ஆனால் இங்கே இரண்டு பிறப்பு பிறக்கின்றார்கள் என்றே கூறுகின்றார்களே அது ஏன்? மேலும் அது என்ன இரண்டாம் பிறப்பு என்றக் கேள்விகள் இங்கே இயல்பாக எழும் தானே. அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடினால் மனு தர்மத்திலேயே விடை கிட்டுகின்றது.

"துவிஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும், இரண்டாவது உபநயநத்தாலும் மூன்றாவது எக்கிய தீட்சையிலாலும் உண்டாகின்றது என்று வேதத்திற் சொல்லப்படுகின்றது." மனு அத்தியாயம் 2 - 169

அதாவது இரு பிறப்பாளர்கள் எனப்படும் முதல் மூன்று வருணத்தார் முதல் பிறப்பினை தாயிடம் இருந்து பெறுகின்றனர் என்றும் இரண்டாவது பிறப்பு உபநயம் செய்வதன் மூலமாகவும் பெறுகின்றனர் என்றுமே நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்ளுகின்றோம். மேலும் மூன்றாவது பிறப்பினைப் பற்றிய ஒரு குறிப்பும் அங்கே இருக்கின்றது, ஆனால் அது இப்போதைக்கு நமக்குத் தேவை இல்லாததால் அதனைப் பற்றி நாம் காண வேண்டியதில்லை.

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி உபநயம் செய்வதால் மட்டுமே பிராமண, சத்திரிய, வைசிய வருணங்களைச் சார்ந்தோர் இருப்பிறப்பாளர்கள் என்று அறியப்படுகின்றனர் என்றும் உபநயம் செய்ய தடை உள்ளதால் சூத்திர வருணத்தார் ஒருப் பிறப்பினை மட்டுமே உடையவராய் இருக்கின்றனர் என்றும் நாம் அறிந்து இருக்கின்றோம். இந்நிலையில் தான் மற்றுமொரு மனு தர்ம வசனத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

"உபநயம் செய்துக் கொள்வதற்கு முன்னால் இவன் சூத்திரனுக்கு ஒப்பானவன். ஆனால் மாதா பிதா கர்மத்தில் மாத்திரம் அதற்கு வேண்டிய வேத மந்திரத்தைச் சொல்லலாம்." மனு அத்தியாயம் 2 - 172

உபநயம் செய்தால் இருப்பிறப்பாளர்கள் ஆகின்றனர் என்றுக் கண்டோம் சரி...ஆனால் இங்கே அவன் உபநயம் செய்யும் வரை, அது பிராமணனாக இருக்கட்டும்...சத்திரியனாக இருக்கட்டும்...வைசியனாக இருக்கட்டும் , அவர்கள் சூத்திரர்களாகவே காணப்படுவர் என்றே கூற்று வருகின்றதே.

இதன் படி பார்த்தோம் என்றால் தாயின் மூலம் வரும் முதல் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகவே பிறக்கின்றனர் என்றே பொருள் வருகின்றதே. சூத்திரனாக பிறந்த ஒருவன் உபநயம் செய்துக் கொள்வதன் வாயிலாகவே இரு பிறப்பாளன் ஆகின்றான் என்றால்,

பிரமன் படைக்கும் போதே பிராமணன் ஆக படைத்தான் சத்திரியனாகப் படைத்தான் என்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய் விடுகின்றதே. ஏனென்றால் ஒருவன் உபநயம் செய்யாமல் இருந்தால் அவன் மனு தர்மத்தின் கூற்றின் படி இறுதி வரை சூத்திரனாகவே தானே இருப்பான்.

மேலும் சூத்திரத்தன்மையோடு இருப்பவர்கள் உபநயம் செய்வதன் மூலம் உயர் நிலையை அடைகின்றனர் என்றால் இவர் தான் உபநயம் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் எல்லாம் செய்யக் கூடாது என்று எதன் அடிப்படையில் யார் பிரித்துக் கூற முடியும்? ஏனெனில் முதற் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகத் தானே பிறக்கின்றனர். அவர்களுள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் வேற்றுமைகளைக் காண முடியும்?

மேலும், பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணங்கள் ஆகிய நான்கு வர்ணங்களைத் தவிர வேறு வர்ணங்கள் இல்லை என்றே மனு தர்மத்தில் வருகின்றது...ஆனால் பஞ்சமர் என்ற வர்ணம் கடவுளில் இருந்து வாரா ஒரு வர்ணமாக இன்று அறியப்படுகின்றது. நிற்க.

இப்பொழுது ஏன் இந்த முரண்பாடுகள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் சில விடயங்களை நாம் அறிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1) இப்பொழுது இலங்கை ஈழத் தமிழர்களின் மேல் படை எடுத்துச் சென்று போரில் வெற்றிப் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் அங்கே அடிமையாக இருப்பர். சிங்களவர்களின் சட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் சிங்களவர்களின் சட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மேல் செல்லுபடியாகாது. சரி தானே.

அதைப் போல் தான் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்குப் பகுதியை பிடித்த ஆரியர்கள் அவர்கள் பிடித்த பகுதியை ஆரிய வர்த்தம் என்று அழைத்துக் கொண்டு, அப்பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களை அடிமைகள் என்ற பொருள்படி சூத்திரர்கள் என்றுக் குறித்து சட்டம் இயற்றினர். அச்சட்டம் தான் மனு தர்மம்.

அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்காக ஆரியர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்ட நூல் தான் மனு தர்மம். அச் சட்டத்தின் படி,

பிராமணர்கள் - ஆரிய பிரோகிதர்கள்
சத்திரியர்கள் - போர் செய்யும் ஆரியர்கள்
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்

என்ற ஆரியப் பிரிவுகள் உயர்ந்ததாகவும்....அங்கே வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அனைவரும் அடிமைகள் என்று குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சூத்திர பிரிவு தாழ்ந்ததாகவும் அமைக்கப்பட்டது.

அவர்களின் ஆட்சிக்கு அடிபணியாத மற்ற தேசங்களில் ஆரியர்களின் செல்வாக்கும் செல்லாது அவர்களின் சட்டமும் செல்லாது என்பதனால் அவர்கள் பஞ்சமர் அல்லது எதிரிகள் என்று குறிக்கப்பட்டனர்.

2) இருப்பிறப்பாளர்கள் என்றச் சொல் ஆன்மீகச் சான்றோர்களைக் குறிக்கும் சொல். முதல் பிறப்பு மானுடப் பிறப்பு...இரண்டாம் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு. இதற்கும் உபனயதிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. (இருப்பிறப்பினைப் பற்றி நாம் மற்றதொரு பதிவில் காண்போம்)

இந்தியாவின் மேல் படை எடுத்து வந்த ஆரியர்கள், இந்தியாவில் நிலவிய பல வழக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை காலங்களில் மாற்றிக் கொண்டனர்.

சற்று புதிதான/புதிரான கூற்றுகளாகத் தானே இருக்கின்றன. இப்பொழுது இவற்றைப் பற்றித் தான் நாம் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்....!!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

"கடவுள் சாதிய படைத்தாரப்பா...அவன் அவன் போன பிறவில பண்ணுன புண்ணிய பாவத்திற்கேற்ப உயர்ந்தவனாவும் தாழ்ந்தவனாவும் பிறக்கின்றான்...சரி தான" என்று சிலர் இன்றைக்கு நம்மிடையே இருக்கும் சாதிய அமைப்பிற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இப்பொழுது இவர்களின் இந்தக் கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இவர்களின் இந்தக் கூற்றினை நாம் காணும் பொழுது சில கேள்விகள் எழுவதனை தடுக்க இயலவில்லை. இவர்கள் சாதியினை இறைவன் படைத்ததாகக் கூறுகின்றனர். சாதிகள் என்பது தேவர், பள்ளர், பறையர், கவுண்டர், நாடார், வேளாளர், வன்னியர், நாயக்கர்,ஐயர்....போன்றப் பிரிவுகள் ஆகும். இப்பிரிவுகளில் சில உயர்ந்தவைகளாகவும் சில தாழ்ந்தவைகளாகவும் இன்று இருப்பதனை நாம் காணுகின்றோம்.

இங்கே நம்முடையக் கேள்வி என்னவென்றால் இந்த இந்த சாதி உயர்ந்த சாதி இன்னின்ன சாதி தாழ்ந்த சாதி என்று இறைவன் கூறியதாக கூறும் இலக்கியமோ அல்லது வேறு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா? அவ்வாறு இல்லாத பொழுது எந்த அடிப்படையில் சாதிகள் ஏற்றத் தாழ்வுடன் அமைக்கப்பட்டன?

மேலும் இறைவனின் அருள் பெற்றவர்களாக அறியப்பெறும் சித்தர்கள் எதனால் சாதி ஏற்றத்தாழ்வினை எதிர்க்க வேண்டும்? இறைவன் சாதியினைப் படைத்து இருந்தான் என்றால் அவன் படைத்ததை எதற்காக சித்தர்கள் மறுக்க வேண்டும்?

"சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளி, காரை, கம்வி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?"
-ஆசான் சிவவாக்கியார்

"சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு"
-ஆசான் கொங்கணச்சித்தர்

மேலும் சரி சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மனிதன் இப்பிறவியில் சாதிகளில் பிறக்கின்றான் என்று கூறினால் மறுபிறப்பு என்பதே கிடையாது என்று சித்தர் கூறுகின்றனரே அது ஏன்?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


இவ்வாறு கேள்விகள் பல இருக்கின்றன...இவைகளுக்கு விடைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில் ஆகும். சாதிகள் அடிப்படையில் இறைவன் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை.

"அட என்னங்க பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று இறைவன் மக்களைப் படைத்தான் என்று வேதத்துல சொல்லி இருக்குல...அப்புறம் எப்படி நீங்க இறைவன் சாதியின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை அப்படின்னு சொல்றீங்க" என்று சில நண்பர்கள் இங்கே கேள்விகள் கேட்கலாம். அவர்களுக்கு ஒரு கேள்வி...!!!

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பன சாதிகளா? அவைகளும் பள்ளர், வன்னியர், தேவர், நாடார், பறையர், செட்டியார் போன்றப் பிரிவுகளும் ஒன்றா?

இல்லை தானே. பிராமணன்,சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைகள் வருணங்கள் எனப்படுபவை. அவைகளும் சாதிகளும் வெவ்வேறுப் பொருள் கொண்டவை. இன்னும் கூற வேண்டும் என்றால் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும் சரி மற்ற தமிழ் சாதிகளும் சரி அனைத்தும் சூத்திர வர்ணத்தின் கீழேயே வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் சாதிகளை இரண்டுப் வர்ணங்களுக்குள் அடக்கி விடலாம்...

ஒன்று ஐயர், ஐயங்கார் போன்றச் சாதிகள்...அவர்கள் பிராமண வர்ணத்தின் கீழ் சென்று விடுவர்.
பின்னர் பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரும் சூத்திர வர்ணத்தின் கீழ் வருவர் (சிலர் சற் சூத்திரர் எனப்படுவர்...சிலர் பஞ்சமர் வரிசையில் வருவர் அவற்றினைப் பற்றி நாம் பின்னர் விரிவாகக் காணலாம்).

"எவ்வாறு தமிழர்கள் எல்லோரும் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனர்...இங்கே பல நண்பர்கள் தாங்கள் ஆண்ட இனத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் தாங்கள் சத்திரியர்கள் என்றும் கூறுகின்றனரே...அவ்வாறு இருக்க அனைவரும் சூத்திரர்கள் என்றுக் கூறுவது எங்கனம் முறையாகும்" என்று இங்கே நண்பர்கள் சிலர் சில சந்தேகங்களை முன் வைக்கலாம்....!!!

இந்த கேள்விக்கு நாம் விடையினைக் காண முயல வேண்டும் என்றால் நாம் வர்ணங்களைப் பற்றியும் அவை தமிழ் சமுதாயத்திற்கு உரியனவா என்றும் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்றும் இறைவனின் வாயில் இருந்து வந்தவர்கள் பிராமண வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் கையில் இருந்து வந்தவர்கள் சத்திரிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் தொடையில் இருந்து வந்தவர்கள் வைசிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறுதியாக இறைவனின் காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது.

இப்பொழுது இந்தக் கருத்தினைத் தான் நாம் சில கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

இறைவன் படைத்தான் என்று கூறுகின்றார்களே அதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதேனும் இருக்கின்றதா என்று நாம் வினவினால், சான்றுகள் வேதத்தில் இருக்கின்றது என்றே கூறுகின்றனர் (வேதங்கள் என்று அவர்கள் கூறுவது ரிக், யசுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஆகும்). சரி வேதத்தில் இருக்கின்றதா என்று நாம் கண்டோமே என்றால் ரிக் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அத்தகையக் குறிப்பு வருகின்றது. மற்றபடி வர்ணங்களைப் பற்றி வேறு எந்தக் குறிப்புகளும் அவர்கள் கூறும் வேதங்களில் இல்லை. அவ்வாறு இருக்க நமதுக் கேள்வி இங்கே என்னவென்றால் வேதங்கள் என்று இன்று வழங்கப்பெறும் நூல்களில் ஏன் இத்தகையக் கருத்தினை இடைச் செருகலாக சிலர் நுழைத்து இருக்கக் கூடாது? சரி அது இருக்கட்டும்... இப்பொழுது வேதங்களுக்கு வருவோம்...!!!

ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் யாருக்கு உரியவை? இந்துக்களுக்கா? இன்று இந்துக்கள் என்றால் அவர்கள் சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மக்களே ஆவர். அவ்வாறு இருக்க அவ்வேதங்கள் அவர்களுக்கு உரியவை என்றால் அவர்களின் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வேதங்களில் காணப்படவேண்டும் அல்லவா?

ஆனால் வேதங்கள் என்று இன்றுக் கூறப்படுபவைகளில், சிவன் என்றப் பெயரோ...கோவில் வழிபாடோ, சிவலிங்க வழிபாடோ, பெருமாள் வழிபாடோ, முருகன், பிள்ளையார், அம்மன் போன்ற தெய்வங்களின் பெயரோ எவையுமே காணப்படவில்லையே. மேலே நாம் கண்டவைகள் இல்லாது சைவ வைணவ சமயங்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ரிக், யசுர் சாம அதர்வண வேதங்கள் என்பன இந்துக்களுக்கு உரிய வேதங்கள் என்று எதனை வைத்துக் கூற முடியும்?

சிலர் ருத்திரன் என்ற பெயர் சிவனையும் விஷ்ணு என்றப் பெயர் பெருமாளையும் குறிக்கும் என்றுக் கூறினாலும், வேதத்தில் ருத்திரன் காற்றுக் கடவுளாகவும், விஷ்ணு வான் கடவுளாகவுமே குறிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதனை அவர்களால் மறுக்க முடியாது.

மேலும் தமிழர் கூறும் நான் மறை வேதங்கள் வேறு 'ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள்' வேறு என்று பல தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து கூறிச் சென்று இருக்கின்றனர். அவ்வாறு இருக்க தமிழர்களுக்கும் சரி தமிழர் கடவுள்களுக்கும் சரி சற்றும் தொடர்பில்லாத நூல்களில் ஏதோ ஒரு இடத்தில் 'இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான்' என்று வந்து இருப்பதை எவ்வாறு தமிழர்களுக்கு உரியதாக நாம் கருத முடியும்?

மேலும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட புனித நூல்கள் என்றால் இறையருள் பெற்றச் சித்தர்கள் அவற்றை எதற்காக தாக்க வேண்டும் என்றக் கேள்வியும் இங்கே இருக்கின்றது...

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. - சிவவாக்கியர்


சரி ...சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

1) இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்பது இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவைகளில் உள்ள இடைச் செருகலே ஆகும்.
2) அவ்வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
3) சைவ வைணவ சமயங்களுக்கும் நான்கு வர்ணங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால் இந்திய மக்களுக்கும் அந்த வர்ணங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

அவ்வாறு மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்பில்லாத பட்சத்தில் எவ்வாறு சில சாதிகள் பிறப்பிலேயே உயர்ந்ததாகவும் சில சாதிகள் பிறப்பிலேயே தாழ்ந்ததாகவும் ஆகும்?

(மேலே உள்ள கருத்துக்கள் வேறு தொடரில் விரிவாக விளக்கப்பட்டு இருப்பதனால் அதனை இங்கே விலாவரியாக கூறவில்லை. அக்கருத்துகளைப் பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் இப்பதிவுகளைப் படிக்கலாம்- முகப்பு , வேதங்களும் சைவ வைணவமும், வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1 )

சரி இருக்கட்டும்... இப்பொழுது வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றுக் கண்டு இருக்கின்றோம்...ஆனால் அவ்வாறு நாம் கூறுவதற்கு நாம் மேலே கண்டுள்ள விடயங்கள் போதுமா என்றால் இல்லை என்றே பதில் வரும். அந்நிலையில் நாம் மேலும் சில விடயங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வேதத்தில் ஒரே இடத்தில் வரும் வர்ணங்களைப் பற்றி விலாவரியாக பேசும் ஒரு நூல் நம்மிடையே இருக்கின்றது. அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட அதாங்க மனு நூல்....!!!

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நண்பர் ஒருவர் ஒரு நல்ல கேள்வியினைக் கேட்டு இருந்தார்..."எதற்காக சாதியினைப் பற்றி பதிவிடுகின்றீர்கள்...அந்தக் குப்பைகளை எரித்து தள்ள வேண்டும்...அப்படி இருக்க அதனைப் பற்றிய பதிவுகள் ஏன்?"

நல்ல கேள்வி தான்...இன்றைக்கு சமூகத்தில் சாதியின் பெயரால் கொடுமைகளையும், வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மனிதாபிமானமற்ற வன்முறை செயல்களையும் ஒடுக்குமுறைகளையும் நாம் காணும் பொழுது நிச்சயமாய் சாதியினை எரித்துத் தள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தே தான் தீரும்.

ஆனால் நம்முடையக் கடமை சாதி ஏற்றத் தாழ்வினைக் குறித்து கோவப்படுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அப்பிரச்சனைகளுக்குத் தீர்வினையும் தேட வேண்டியதாக விரிகின்றது. மேலும் ஐயன் வள்ளுவனின் வாக்குப்படி ஒரு நோய்க்கு தீர்வினைக் காண வேண்டுமானால் முதலில் அந்த நோய்க்குரிய காரணிகளைக் கண்டறிய வேண்டும். இந்தப் பதிவு அத்தகைய ஒரு சிறு முயற்சியே.

இந்நிலையில் தான் நாம் சாதி ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய மண்ணில் எப்பொழுது, எதனால், யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்று காண வேண்டி இருக்கின்றது.

மேலும் தெலுங்கர்களின் வருகையினால் தமிழர்கள் தாழ்த்தப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையிலேயே வைத்து இருக்கப்பட்டு இருக்கின்றதே தவிர அவர்களை எதிரிகளாக சித்தரிக்கும் எண்ணத்துடன் அல்ல. போரில் வெல்வதும் தோற்பதும் உலகெங்கும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒன்று. அவ்வாறு இருக்க நாம் அவர்களை இங்கே குறை கூறவில்லை. ஆனால் அவர்களின் வருகைக்கும் தமிழர்கள் தாழ்த்தப்பட்டமைக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அவர்களையும் நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

உதாரணத்திற்கு,

தெலுங்கு தேசத்து மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்கள். அப்பேர்ப்பட்ட அவர்கள் தமிழகத்தினைப் பிடிக்கும் பொழுது இங்கே யார் செல்வாக்கினைப் பெற்று இருப்பார்? இங்குள்ள வைணவர்கள் செல்வாக்கினைப் பெற்று இருப்பர். சரி தானே. அதனாலே தான்,

ஐயன் என்ற தமிழ்ச் சொல்லோடு 'கார்' என்ற மரியாதைக்குரிய தெலுங்கு விகுதியையும் சேர்த்து இன்று வைணவர்கள்களுள் சிலர் 'ஐயன் + கார் = ஐயங்கார்' என்று அழைக்கப்படுகின்றனர். இது தெலுங்கர்களின் ஆட்சிக் காலத்தில் வைணவர்கள் செல்வாக்கினைப் பெற்றமையைக் காட்டுகின்றதா என்றும் நாம் ஆராயத் தான் வேண்டி இருக்கின்றது.

இன்று ஐயங்கார் என்பது ஒரு சாதி...அதுவும் உயர்ந்த சாதி. நிற்க.

எனவே இன்றைய சாதி ஏற்றத்தாழ்வினை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் சாதியினைப் பற்றியும் வரலாற்றினைப் பற்றியும் அறிந்துக் கொள்ள முயலத் தான் வேண்டி இருக்கின்றது. முதலில் சாதி என்றால் என்ன என்பதனில் இருந்தே தொடங்குவோம்...

சாதி என்றால் என்ன என்றும் சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்பொழுதில் இருந்து இருக்கின்றன என்றக் கேள்விக்கு இரு வகையான பதில்கள் வருகின்றன...

1) சாதிகள் என்பது அவர் அவர்கள் செய்த தொழில்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதாவது,

இன்று மருத்துவம் பார்ப்பவர் என்றால் - மருத்துவர் - மருத்துவ சாதி
பொறியியல் நிபுணர் என்றால் - பொறியாளர் - பொறியாள சாதி
ஓவியம் வரைபவர் என்றால் - ஓவியர் - ஓவிய சாதி

அதாவது சாதிகள் என்பவை தொழிற்பிரிவுகளே அன்றி வேறல்ல. ஆனால் பிற்காலத்தில் இவ்வகைப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படையில் மாற்றி சிலரைத் தாழ்ந்தவர் என்றும் சிலரை உயர்ந்தவர் என்றும் மாற்றி விட்டனர் என்பது ஒரு சிலரின் கூற்றாக இருக்கின்றது.

2) சாதிகள் என்பன இறைவனால் படைக்கப்பட்டவை...இவர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் உயர்ந்தவர்கள்...இவர்கள் இந்த வேலையினைத் தான் செய்ய வேண்டும் என்பது அவன் வகுத்தப் பாதை...எனவே ஆதி முதலே சாதிகளும் ஏற்றத் தாழ்வுகளும் இங்கே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது மற்ற சிலரின் கூற்று.

இப்பொழுது இந்த இரு கூற்றுகளையும் பற்றி நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. முதலில் சாதிகள் என்பன தொழிற்பிரிவுகளாக இருந்தவை என்றக் கூற்றினைக் காண்போம்.

தொழில் அடிப்படையில் மக்கள் பிரிந்து இருப்பது என்பது வரலாற்றில் இயல்பான ஒன்றாகும். உதாரணத்திற்கு இன்றைய தொழிற் சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஒவ்வொரு தொழிலிற்கும் அந்தந்த தொழிலினைச் செய்யும் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் தொழிற் சங்கங்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சங்கம் என தொழில் அடிப்படையில் அவர்கள் பிரிந்து தான் இருக்கின்றனர்...ஆனால் சமூகத்தில் அவர்களின் நிலை சமமாகவே இருக்கின்றது.

அதாவது தொழில் வேறுபட்டாலும், தொழிற் குழுக்கள் வேறு பட்டாலும் அவர்கள் அனைவரும் சமூகத்தில் சமமாகவே இருக்கின்றனர். அவர்களுள் ஏற்றத் தாழ்வு வர வாய்ப்புகள் இல்லை.

"அட என்னங்க... இப்போ ஒருத்தர் மருத்துவராக இருக்காரு...இன்னொருத்தரு மருந்துச் சீட்டு எடுத்து தரவரா இருக்காரு...ரெண்டுமே தொழில் தான். ஆனா இதுல வேறுபாடு இருக்குள்ள...மருத்துவருக்கு தர மரியாதைய சீட்டு எடுத்துக் கொடுக்கும் தம்பிக்கு யாராவது தருவாங்களா? வித்தியாசம் இருக்குள்ள...அந்த வித்தியாசம் தான் காலப்போக்குல நிரந்திரம் ஆகி...மருத்துவர் ஒசந்த சாதி...சீட்டு எடுத்து கொடுக்குற தம்பி தாழ்ந்த சாதி அப்படின்னு வந்துருச்சி" என்று இங்கே சில நண்பர்கள் கருத்தும் கூறலாம்.

அவர்களுக்கு ஒரு கேள்வி..."அந்த சீட்டு எடுத்துக் கொடுப்பவரின் பிள்ளை மருத்துவராக படித்து தேர்ச்சிப் பெற்றால் அவர் ஒசந்த சாதியாக இருப்பாரா அல்லது தாழ்ந்த சாதியாகவே இருப்பாரா?"

தொழிலின் அடிப்படையில் ஒருவரின் தகுதி முடிவு செய்யப்படுகின்றது என்றால் அவர் உயர்ந்த சாதியாக இருக்க வேண்டும். இல்லை அவர் தாழ்ந்த சாதியாகத் தான் இருப்பார் என்றால் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் எங்கேயோ பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்று விட்டன என்றே பொருள் வருகின்றது.

அத்தகைய ஒரு மாற்றம் இயல்பாக ஒரு சமூகத்தில் வந்திருக்க வாய்ப்பே இல்லை...இந்நிலையில் சாதிகள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றன என்றும் எக்காலத்தில் இருந்து அத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் நிலைப் பெறத் துவங்கின என்றும் நாம் காண வேண்டித் தான் இருக்கின்றது.

பொதுவாக நமது சமூகத்தின் எண்ணம் எவ்வாறு இருக்கின்றது என்றால் ஆதி முதல் இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் நம்முடைய சமூகத்தில் நிலவிக் கொண்டு தான் வருகின்றன என்று தான் இருக்கின்றது. ஆனால் இதனை மெய்ப்பிப்பதற்கு சான்றுகள் அரிதாகவே உள்ளன. அதுவும் குறிப்பாக கி.மு நூற்றாண்டுகளில் அத்தகைய சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தமைக்கு சான்றுகள் மிகக் குறைவு. மாறாக அத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாததற்கே சான்றுகள் கிட்டப் பெறுகின்றன.

உதாரணமாக,

கி.மு நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் இந்தியாவினைப் பற்றி எழுதியக் குறிப்பில் இந்திய மக்களின் பிரிவுகளைப் பற்றி எழுதி உள்ளார். அவரின் குறிப்புகள் படி மக்களுள் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, மேலாக இன்றுப் பார்க்கும் பிரிவுகளும் அன்று நமது நாட்டினில் இருக்க வில்லை. அவரின் குறிப்பின் படி மக்கள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

முதல் இடத்தில் தத்துவ ஞானிகள் இருந்தனர்.
இரண்டாம் இடத்தில் விவசாயிகள் இருந்தனர்.
மூன்றாம் இடத்தில் ஆடு/மாடு மேய்ப்பவர்கள் இருந்தனர்.
நான்காம் இடத்தில் வணிகர்கள் மற்றும் பொருள் செய்வோர்கள் இருந்தனர்.
ஐந்தாம் இடத்தில் போர் வீரர்கள் இருந்தனர்.
ஆறாம் இடத்தில் ஒற்றர்கள் இருந்தனர்.
ஏழாம் இடத்தில் அரசாங்க அலுவலர்கள் போன்றோர் இருக்கின்றனர்.

இதனைப் பற்றி மேலும் படிக்க ( ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்)

இந்தப் பிரிவுகள் இன்று நம்மிடையே காணப்படும் பிரிவுகளுக்கு முற்றிலுமாக வேறாக இருக்கின்றன.

இந்நிலையில் மெகஸ்தனிஸ் உண்மையினைக் கூறி இருக்கின்றாரா என்றும் அவர் அவ்வாறு உண்மையினைக் கூறி இருந்தால் எவ்வாறு மக்கள் பிரிவுகள் அவர் கூறிய நிலையில் இருந்து மாறி இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வந்து இருக்கின்றது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

சரி அது இருக்கட்டும். அதனைக் காணும் முன்னர் நாம் சாதிகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற கேள்விக்கு 'கடவுள் அவ்வாறு படைத்தார்' என்று கூறுபவர்களின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது...

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சொந்த இடத்திலேயே அகதிகளாய் வாழும் நிலை இருக்கின்றது.

மறுபுறமோ, கடலிற்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உயிர்கள் கேட்பார் எவருமின்றி பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...கூடங்குளத்துப் போராட்டங்களிலும் சரி, முல்லைப் பெரியார், காவேரி நதி நீர்ப் பிரச்சனைகளிலும் சரி தமிழன் அவனது உரிமையினை இழந்தே நிற்கின்றான். வற்றிப் போகும் ஆறுகள், நலிந்துப் போகும் சிறு தொழில்கள், மறைந்துக் கொண்டிருக்கும் தமிழ் கலைகள், வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் விவசாய நிலங்கள் என்று தமிழகம் இன்று ஒரு அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

காரணம் என்னவென்றுப் பார்த்தால் விடையாய் கிட்டுவது - தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஏன் ஒற்றுமை இல்லை என்றுப் பார்த்தால் அதற்கு காரணியாக விளங்குவது சாதிகள்...குறிப்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள். இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகளின் மூலமாகத் தான் தமிழன் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அவனுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றான்.

இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற ஒரு கொடிய நோய் அவனை பலமாக ஆட்க்கொண்டு இருக்கின்றது. அந்த நோயின் காரணமாக சிலர் தங்களைப் பிறப்பால் உயர்ந்த சாதி என்றுக் கூறி மற்றவர்களை பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று வைத்து இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் எண்ணினால், அவர்களோ நான் தாழ்த்தப்பட்டவன் தான் ஆனால் இவன் என்னை விடத் தாழ்த்தப்பட்டவன் என்று அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாய் பிரிந்து அடுத்தவனை ஒடுக்குவதில் சுகம் கண்டுக் கொண்டு இருக்கின்றனர். அந்தளவு அந்த சாதி ஏற்றத் தாழ்வு என்னும் நோய் இங்கே பரவி இருக்கின்றது.

இப்பொழுது அந்த நோயினைப் பற்றித் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வரலாற்றினைப் பற்றியும் சமயங்களைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு தமிழர்கள் என்பவர்கள் ஒரு தோற்ற இனம்....அதில் மாற்றுக் கருத்தே இல்லை. வெறும் ஈழத்தில் பெற்றத் தோல்வியினை வைத்து மட்டுமே நாம் இதனைக் கூறி விடவில்லை. தமிழர்களின் வரலாற்றினைப் பார்த்தால் இராசேந்திர சோழனின் காலத்திற்குப் பின்னர் மாபெரும் தமிழ் மன்னர்கள் இங்கே எழவே இல்லை. மேலும் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இருந்து தெலுங்குப் பேரரசான விஜயநகர பேரரசின் தமிழகத்தின் பெரும் பகுதி வந்து விட்டு இருந்தது. அதாவது தமிழர்கள் தோற்று இருந்தனர்.

ஒரு போரில் தோற்ற இனத்திடம் என்ன இருக்கும்? அடிமைத்தனம் மட்டுமே இருக்கும். வென்றவர்கள் தோற்றவர்களின் அனைத்து உரிமைகளையும் சரி உடைமைகளையும் சரி எடுத்துக் கொண்டு அவர்களை அடிமையாக்கத்தானே செய்து இருப்பர்? இன்று ஈழத்தில் அவ்வாறு தானே நிகழ்ந்து இருக்கின்றது...தோற்றவர்கள் நிலங்கள், உரிமைகள் என்று அனைத்தையும் இழந்து ஒடுக்கப்பட்டு தானே இருப்பர். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

இன்று ஈழத்திலே போர் நடந்து முடிந்து இருக்கின்றது. இப்பொழுது அங்கே மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கும்?

முதல் நிலையில் போரில் வென்ற சிங்களவர்கள் இருப்பர்.
இரண்டாம் நிலையில் காட்டிக் கொடுத்த எதிர் அணியினைச் சார்ந்த கருணா போன்றோர் இருப்பர்.
மூன்றாம் நிலையில் 'யார் ஆண்டால் என்ன' என்ற மனநிலையில் இருக்கும் தமிழ் மக்கள் இருப்பர்.
நான்காம் நிலையில் சிங்களவர்களை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்த வீரர்கள், தலைவர்கள் இருப்பர்...மிகுந்த ஒடுக்கப்பட்ட நிலையில். இவர்கள் மீண்டும் எழவே கூடாது என்பதில் முதல் நிலையில் இருப்பவர்கள் உறுதியாய் இருப்பர் தானே.

ஈழத்தில் நிலை இவ்வாறு தானே இருக்கின்றது? ஏன்... எங்கு போர் நிகழ்ந்தாலும் நிலை இவ்வாறு தானே இருக்கக் கூடும்? இந்த நிலையில் தான் நாம் விஜயநகர பேரரசின் ஆட்சியினையும் தமிழர்களின் சாதிகளையும் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு போர் நிகழ்ந்து இருக்கின்றது...அதனில் தமிழர்கள் தோற்று இருக்கின்றனர். இந்நிலையில் தமிழர்களின் தலைவர்கள் ஒடுக்கப்பட்டு இருப்பார்களா இல்லையா? தேசத்தினை விட்டு அவர்களின் வம்சம் துரத்தப்பட்டு இருக்குமா இருக்காதா? அவர்கள் நிலையில் தாழ்த்தப்பட்டு இருப்பார்களா இல்லையா?

தாழ்த்தப்பட்டு இருப்பார்கள் தானே...அவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் மீண்டும் எழுந்து வர வாய்ப்பே கிட்டவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களாகத் தானே இருந்து வருவர்..அவர்களின் உடைமைகளும் சரி உரிமைகளும் சரி போனது போனவாறே தானே இருக்கும்?

தெலுங்கர்களிடம் அடிமையாகி உடைமைகளை இழந்த தமிழர்கள் அடுத்து ஆங்கிலேயர்களுடன் அடிமையாகின்றனர்...ஆனால் முன்பிருந்த அதே தாழ்த்தப்பட்ட நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலைப் பெறுகின்றனர்...ஆனால் முன்னர் அவர்கள் தெலுங்கர்களிடம் இழந்த உடைமைகளும் சரி பெற்ற தாழ்த்தப்பட்ட நிலையும் சரி மாறவே இல்லை. இந்நிலையிலேயே தான் நாம் இன்று தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அணுக வேண்டி இருக்கின்றது. நிற்க...!!!

இங்கே சில கேள்விகள் எழலாம்...

1) தமிழ் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருப்பர் என்றுக் கூறினால்...இன்று தாழ்த்தப்பட்டோராக இருப்பவர்கள் தமிழ் அரசர்களாக இருந்தவர்கள் என்று கூறுகின்றீர்களா?

2) விஜயநகர பேரரசின் காலத்தில் தான் தமிழர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றால் அதற்கு முன்னர் தமிழகத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளே இல்லையா?

3) இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழர்கள் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனரே அது உண்மையா?

மேலும் பல கேள்விகள் இருக்கலாம்...அக்கேள்விகளுக்கு எல்லாம் இப்பொழுது விடையினைத் தேடுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் நாம் பல வரலாற்று விடயங்களோடு சாதிய அடிப்படைகளையும் வரலாற்றையும் காண வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக,

1) விஜயநகர பேரரசுக் காலத்தில் தான் தமிழ் கோவில்களில் இருந்து பெருமளவில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் கருவறையினுள் நுழைகின்றனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் பல இருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா?



 2) பள்ளர், பறையர், சானார், சக்கிலியர் என்ற சாதியினைச் சார்ந்த மக்கள் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சானார் சாதியினைச் சார்ந்த மக்களை பார்க்கத்தகாதவர்களாக வைத்து இருந்தனர்.

அப்படி இருந்த சானார் மக்கள் தான் இன்றைக்கு சமூகத்தில் நாடார் இனமாக திகழ்கின்றனர் என்றுத் தெரியுமா?

இறைவனால் பஞ்சமர் என்று வைக்கப்பட்டு இருந்தால் எவ்வாறு அவர்கள் மாறினர்? மேலும் அவர்களை அவர்கள் சத்திரியர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனரே...அவர்கள் சத்திரியர்களாக இருந்தால் எவ்வாறு பஞ்சமராக ஆக்கப்பட்டனர்?

தமிழர்கள் சத்திரியர்களா?

3) சைவ சமயத்தின் இறுதி நாயன்மாரான நந்தனார் என்பவர் பறையர் குலத்தினைச் சார்ந்தவர் என்பதும் அவர் சைவ சமயத்தின் தலைமைக் கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்தவர் என்றக் குறிப்புகளும், அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் இருக்கின்றது என்பதும் தெரியுமா? அதே போல் தான் இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் தெரியுமா?

அவர்களின் இனம் எவ்வாறு தாழ்த்தப்பட்டு பஞ்சம வரிசைக்கு வந்தது?

விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது...!!!

தேடுவோம்...!!!


பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இயேசுவின் இரண்டாம் வருகை அவர் உயிர்தெழுந்தப் பின்னர் பரிசுத்த ஆவியாக உலகிற்கு வந்ததே என்ற கருத்தினைக் கண்டு கொண்டு வருகின்றோம்...அக்கருத்தினைக் குறித்து மேலும் காண்பதற்கு நாம் பரிசுத்த ஆவியினைக் குறித்து இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

இயேசு அவர்கள் அவருடைய மரணத்திற்கு முன்னர் அவருடைய சீடர்களிடம் பேசும் பொழுது அவர் பலியாகிச் சென்றால் தான் பரிசுத்த ஆவியானவர் உலகினில் வர முடியும் என்றும் அவர் அவ்வாறு பலியாகா விட்டால் பரிசுத்த ஆவியானவர் உலகினில் வர இயலாது என்று கூறுவதனைப் போல் வருகின்றது.

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்."  யோவான் 16:7

மேலும் அவ்வாறு வரும் ஆவியானவரே மக்களை வழிநடத்துவார் என்றும் கூறுகின்றார்.

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." யோவான் 16:13

மேலும் விவிலியத்தில் உள்ள கூற்றின் படி பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உடலினுள் வாசம் செய்கின்றார் என்றக் கூற்றும் வருகின்றது.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6

கூடுதலாக பரிசுத்த ஆவியினை அறியாது இருக்கின்ற காரணத்தினால் மக்களால் அவரைப் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் இயேசு கூறுவதனைப் போல் வருகின்றது.

 "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." யோவான் 14:17

நிற்க...!!! இப்பொழுது இந்த கருத்துக்களை சற்று வரிசையாகப் பார்ப்போம்.

1) இறைவனின் ஒரு பகுதியான பரிசுத்த ஆவி மனிதனின் உடலினுள் இருக்கின்றார்.

2) ஆதியிலே பாவம் செய்த முதல் மனிதனின் காரணமாக பாவம் உலகில் நுழைந்து மனிதன் இறைவனிடம் இருந்து விலகிப் போகின்றான். அதன் காரணமாக அவனுள் இருக்கும் பரிசுத்த ஆவியினை அவன் அறியாமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது.

3) மனிதன் அவன் பாவத்தின் காரணமாக, அவனது பாவத்தினையும் இறைவனையும் உணராது இருக்கும் நிலையில் அவனது பாவத்தினைப் போக்கி அவனுக்கு நல்வழி காட்ட இறைவன் பலியாக உலகிற்கு வருகின்றார்.

4) அவ்வாறு பலியாவதன் மூலம் மனிதனை அவனது பாவக் கட்டினில் இருந்து விடுவித்து, பரிசுத்த ஆவியினை அவன் அடைந்துக் கொள்ளும் நிலைக்கு அவனை உயர்த்த முடியும். அதனால் தான் அங்கே பலி முக்கியமாகின்றது.

5) பாவத்தில் சிக்கிய மனிதனால் உணர முடியா நிலையில் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உலகிற்கு வந்து பலியாகி மனிதனின் பாவங்களை இறைவனின் மைந்தன் நீக்கிச் சென்றப் பின்னர் தான் மனிதனால் உணரப்படக் கூடியவராக இருக்கின்றார். அதனால் தான் இயேசு அவர்கள் அவர் பலியாகி செல்லாவிட்டால் ஆவியானவர் வர இயலாது என்று கூறி இருக்கின்றார்.

"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." கொரிந்தியர் 2:14

6) அவ்வாறு பாவம் தீர்க்கப்பட்டு பரிசுத்த ஆவியினைப் பெற்ற மனிதனோ, இறைவனை உணர்ந்து இறைவனுக்கான செயல்களை செய்ய தொடங்குவர். பரிசுத்த ஆவியினைப் பெறாமல் இறைவனை உணர முடியாது.


"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ரோமர் 8:9

"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்." யோவான் 15:26

நிற்க...!!!

சுருக்கமாக கூற வேண்டுமெனில் பாவத்தினால் இறைவனை அறியாது இருந்த மனிதனுக்கு நெறியினைக் காட்டி அவனை பாவ விலங்கில் இருந்து விடுவிக்க பலியாகிய இறைவன் பின்னர் பரிசுத்த ஆவியாக அவனை ஆட்கொள்ள வந்ததே இரண்டாம் வருகை. அவ்வாறு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெறாது இருக்கும் வரை இறைவனை உணர முடியாது என்பதே அவர்கள் கூறும் கருத்து ஆகும். மேலும் நாம் விவிலியத்தின் உள்ள குறிப்பின் படி இயேசுவும் ஆவியானவரும் ஒருவரே என்றே அறிந்தும் இருக்கின்றோம் (அது சரி மூஒருமைக் கோட்பாடு என்றால் ஒரே இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றார் என்று தானே பொருள்)

"கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." கொரிந்தியர் II 3:17

எனவே பரிசுத்த ஆவியாய் இயேசு உயிர்த்தெழுந்தப் பின்னர் வந்தது/வருவது தான் இரண்டாம் வருகை. அவ்வருகை நிகழ்ந்து முடிந்து விட்டது. இறைவன் பரிசுத்த ஆவியாக உலகிற்கு வந்த பொழுது இயேசுவின் சீடர்களுள் யூதாசு மரணம் அடைந்து இருந்தான். எனவே

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

 என்ற வசனம் உண்மையாகும்படி யுதாசினைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் பொழுதே பரிசுத்த ஆவியாக இறைவன் வந்து விட்டார்.

இந்நிலையில் தான் நாம் இன்றைய கிருத்துவர்கள் இயேசுவின்இரண்டாம் வருகையினை சரியாகப் புரிந்துக் கொள்ளாது 'இயேசு வருகின்றார்' என்றுக் கூறிக் கொண்டு இருக்கின்றனரோ என்றே எண்ண வேண்டி வருகின்றது.

ஆனால் இங்கே வேறுக் கேள்விகளும் எழலாம்...நாம் மேலே கண்டுள்ள கருத்துக்களும் அவற்றின் விளக்கங்களும் எவ்வாறு சரியானதொன்றாக இருக்கும் என்ற சந்தேகங்களும் எழலாம்... அவ்வாறு இருக்க நாம் அக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில்கள் வேறு இடத்தில் இருக்கின்றதா என்றே காண வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு தேடினோம் என்றால் 'அக்கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடைகள் இருக்கின்றன' என்றே பதில் நமக்கு கிட்டுகின்றது. அத்தகைய பதில்களை நமக்குத் தருபவை ... சைவ சித்தாந்த சாத்திரங்கள்.

ஆம்...சைவ சித்தாந்த சாத்திரங்களில் தான் தெளிவான விடைகள் ஒளிந்திருக்கின்றன. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விடயங்களுக்கு சைவ சித்தாந்த சாத்திரங்களில் விரிவான விளக்கங்களும் விடையும் இருக்கின்றதா?... ஏன் அவ்வாறு இருக்கின்றது? போன்றக் கேள்விகள் இங்கே நம்முள் இயல்பாகவே தோன்றலாம்...அக்கேள்விகளுக்கே நாம் இப்பொழுது விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6

என்று புதிய ஏற்பாட்டில் வரும் கருத்தினைப் போன்றே,

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்


உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம்
உடம்பினில் உத்தமன் காண். - ஔவையார்

தமிழ் இலக்கியங்களிலும் சரி சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் சரி, கருத்து வருகின்றதே அவற்றின் பொருள் யாதாக இருக்கலாம்?

அறிய முயல்வோம்....!!!

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

3) நான் அறிந்த அறிஞர்களின் கருத்தினை நான் அறிந்துக் கொண்ட வண்ணம் இங்கே இட்டு உள்ளேன். அவ்வளவே.

"இயேசு வருகின்றார்" என்ற சுவரொட்டிகளையும் முழக்கங்களையும் நாம் இன்று நிச்சயம் கண்டோ அல்லது கேட்டோ இருப்போம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் அதனைக் கேட்டு இருப்பர்...ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களும் அதனைக் கேட்டு இருக்கக் கூடும். காரணம் எளிது...இன்று இயேசுவை பின் பற்றும் மக்கள் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள படியே இயேசு இரண்டாம் முறையாக உலகிற்கு வருவார்...அப்படி அவர் வரும் பொழுது அவரை உண்மையிலேயே நேசிக்கும் மக்களை அவர் இரட்சிப்பார் என்றே நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் படியே அவர்கள் காலம் காலமாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கேட்ட குரல்கள் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இங்கே நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்னும் எத்தனை வருடங்கள் அவர்கள் காத்துக் கொண்டே இருக்கப் போகின்றனர்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் 'இயேசு வருகின்றார்' என்றுக் கூறினர்...நூறு வருடங்களுக்கு முன்னரும் கூறினர்...இன்றும் கூறுகின்றனர்...நாளையும் கூறக் கூடும்...ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூறக் கூடும். அவ்வாறு இருக்கையில் இயேசு வருவார் என்பதனை நாம் எங்கனம் நம்ப இயலும்? மேலும் நம்முடைய கேள்விக்கு வலு சேர்ப்பதாக விவிலியத்தில் இயேசு கூறிய வசனங்களும் இருக்கின்றன.

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

"இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." - லூக்கா 21:32

என்றே இயேசு கூறி இருக்கின்றார். அவரின் இக்கூற்றுகள் படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள் பலர் இறப்பதற்குள் அவர் இரண்டாம் முறையாக உலகிற்கு வந்து விட்டு இருப்பார் என்றே நாம் அறிய முடிகின்றது. ஆனால் இன்றோ அம்மக்களுள் எவரும் உயிரோடு இலர்...ஆனால் இன்னும் இயேசு வரவில்லை என்ற கருத்தின் படி 'இயேசு வருகின்றார்' என்று கிருத்துவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒன்று இயேசுவின் கூற்று பொய்யான ஒன்றாக இருக்க வேண்டும்...இல்லையேல் இன்றைய கிருத்துவர்களின் எதிர்பார்ப்பு பொய்யானதொன்றாக இருக்க வேண்டும். இவ்விரண்டு விடைகளைத் தவிர வேறு பதில்கள் இருக்க வாய்ப்பே இல்லை. இந்நிலையில் தான் இயேசுவின் இரண்டாம் வருகையினைக் குறித்து நாம் காண வேண்டி இருக்கின்றது.

இயேசு இறைவனின் மைந்தனாக அறியப்படுகின்றார். அவர் பொய் கூறி இருப்பாரா என்றால் இல்லை என்றே அனைத்து கிருத்துவர்களும் கூறுவர். எனவே அதன் அடிப்படையிலேயே இயேசுவின் இரண்டாம் வருகையினைக் குறித்து இன்றையக் கிருத்துவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையிலிலேயே குழப்பம் இருக்கலாம் என்று நாம் கருத முடிகின்றது. இக்கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதைப் போன்றே சில கிருத்துவர்கள் 'இயேசுவின் இரண்டாம் வருகை' முடிந்து விட்டது...அதனை அறியாமலேயே இன்றைக்கு பல கிருத்துவர்கள் 'இயேசு இனிமேல் தான் வரப் போகின்றார்' என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர் என்றே கூறுகின்றனர். இவர்களின் கூற்றினைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் யூதர்களைப் பற்றி சிறிது பார்த்து விடுவது நலமாக இருக்கும்.

பழைய ஏற்பாடு கிட்டத்தட்ட முழுக்க முழுக்க யூதர்களின் நம்பிக்கையினையும் வரலாற்றினையும் கொண்டு திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு நூல். யூதர்களின் நம்பிக்கைப்படி அவர்களுக்கான தேசத்தினை இறைவன் உலகினில் வந்து அவர்களுக்காக ஏற்படுத்தித் தருவார்...அதற்காகவே அவர்கள் காத்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் தான் இயேசு அங்கே தோன்றுகின்றார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவனாக இயேசுவை யூதர்கள் ஏற்றுக் கொள்ளாதது தான் இயேசுவின் மரணத்திற்கு வழிவகுத்தது. அவர்களின் பார்வைக்கு இயேசு ஒரு ஏமாற்றுப் பேர்வழி. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னால் பல யூதர்கள் இயேசு தான் தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவன் என்று நம்பத் தொடங்கி இயேசுவின் கருத்துக்களைப் பின் பற்ற ஆரம்பித்து கிருத்துவர்களாக ஆக ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் இயேசுவினை நம்பாத யூதர்களோ தொடர்ந்து யூத நம்பிக்கையினையையே வைத்துக் கொண்டு இறைவனின் முதல் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். கிருத்துவ கருத்துக்களை ஏற்றுக் கொண்ட யூதர்களோ, இயேசுவின் வழியாக முதல் முறையாக இறைவன் உலகிற்கு வந்தாயிற்று என்று நம்பினாலும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேசத்தினை அவர் உருவாக்கித் தராத ஒரு காரணத்தினால், இறைவன் மீண்டும் உலகிற்கு வருவார் என்றும் அப்பொழுது இறைவனின் தேசத்தினை அவரினை நம்பியவர்களுக்கு அவர் அமைத்துத் தருவார் என்றும் நம்பிக் கொண்டு இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் நாம் இயேசுவின் இரண்டாம் வருகை ஏற்கனவே நடந்தாயிற்று என்றுக் கூறுபவர்களின் கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கருத்தின் படி,

இயேசுவின் முதல் வருகை மக்களின் பாவத்தினைப் போக்கும் பலியாக இறைவனின் மகனாக மனிதனாக வந்தது.

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." - ரோமர் 8:3

இரண்டாம் வருகையானதோ அவர் இறந்து உயிர்த்தெழுந்தப் பின் பரிசுத்த ஆவியானவராய் வந்தது.

"அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;" - யோவான் 20:22

புதிதான கருத்தாக இருக்கின்றது அல்லவா...இப்பொழுது இக்கருத்தினைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது...அதற்கு நாம் விவிலியத்தில் உள்ள சில குறிப்புகளைக் காண வேண்டி இருக்கின்றது.

விவிலியத்தின்படி உலகில் முதல் மனிதன் செய்த பாவத்தின் காரணமாக பாவம் உலகினுள் நுழைகின்றது...அப்பாவத்தினால் இறைவனை அறிய முடியாது இருக்கின்றான் அவன். அப்படிப்பட்ட மனிதனின் பாவத்தினைப் போக்க இறைவனே உலகினில் மனிதனாக வந்து மனிதனின் பாவத்தினைப் போக்க பலியானார்.

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்."  ரோமர் 8:3

"இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று."   ரோமர் 5: 12

"அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்."  ரோமர் 5:19

அவ்வாறு இறைவன் பலியானதன் வாயிலாக மனிதன் செய்த பாவங்கள் தீர்க்கப்பட்டன. இதுவே தான் விவிலியம் கூறும் கருத்து.

மேலும் மனிதனாக வந்த இயேசு பலியான போது அவருடைய சீடர்களே கலக்கம் அடைந்து தான் இருந்தனர். இயேசுவின் மேல் அவர்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டு இருக்கவில்லை என்றும் அவர்களுக்குக் குழப்பங்களும் சரி கேள்விகளும் சரி இருந்துக் கொண்டே தான் இருந்தன என்பதையும் நாம் விவிலியத்தில் இருந்தே அறிந்துக் கொள்ளலாம். மேலும் இயேசு சிலுவையில் அறையப்படும் தருணம் அவருடைய சீடர்களுள் யோவான் மட்டுமே அங்கே இருந்தான் என்பதும் அதுவும் அவன் இயேசுவின் உறவினனாக இருந்த காரணத்தினாலேயே அங்கே இருந்தான் என்றும் நாம் அறிய முடிகின்றது.

இயேசு உயிர்த்தெழுந்து அவரின் மூலம் பரிசுத்த ஆவியினை அவர்கள் பெறும் வரை அவர்களின் நிலை அவ்வாறே தான் இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியினை அவர்கள் பெற்றப் பின் அவர்களின் நிலை மாறுகின்றது. அதாவது அவர்கள் பரிசுத்த ஆவியினால் மாறுகின்றனர்.

இந்த இடத்தில் தான் நாம் பரிசுத்த ஆவியினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!


பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

2) (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு

விவிலியமும் போப்பும்:

இன்று விவிலியம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு மக்களும் அதன் கருத்துக்களை எளிதாக அறிந்துக் கொள்ளும் வண்ணம் திகழ்கின்றது. இவ்வாறு பல்வேறு மொழிகளில் இருப்பதனால் விவிலியத்தின் புனிதத்தன்மை என்று நம்பப்படும் ஒன்று கெட்டுவிடவில்லை என்றே நம்புகின்றேன். நிலை இவ்வாறு இருக்க எதற்காக கிருத்துவ தேவாலயமும் சரி போப்பும் சரி விவிலியத்தினை 'புனித மொழியான இலத்தீனில் இருந்து மற்ற மொழிகளில் மற்ற மக்களுக்கு புரியுமாறு விவிலியத்தினை மொழிப்பெயர்த்தால் அந்நூலின் புனிதத்தன்மை கெட்டு விடும்' என்றுக் கூறி கிட்டத்தட்ட கி.பி பதினாறாம் நூற்றாண்டு வரை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க தடை செய்ய வேண்டும்? அவ்வாறு மொழிபெயர்க்க முயன்றவர்களை 'இவர்கள் இறைவனுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்' என்றுக் கூறி எதற்காக தீயில் இட்டு எரிக்க வேண்டும்? (அவ்வாறு எரிக்கப்பட்டவர்களுள் சிலர் ஜான் ஹஸ், வில்லியம் டிண்டேல்...)

இயேசு பேசிய மொழி அரமேயம். பழைய ஏற்பாடு முதலில் எழுதப்பட்ட மொழி எபிரேயம். புதிய ஏற்பாடோ கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இம்மொழிகளில் இருந்தே இலத்தீனிற்கு விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது. அவ்வாறு இருக்க இலத்தீன் மட்டுமே புனித மொழியானது எவ்வாறு? எப்பொழுதில் இருந்து?

மேலும் கான்சுடன்டைன் காலத்திற்கு பின்னர் வந்த போப் முதலாம் டமாஸ்கஸ் அவர்களின் ஆணைப்படி விவிலியத்திற்கு அதுவரை இலத்தீனில் இருந்த விளக்கத்திற்கு மாறாக புதிதாய் விளக்க உரை எழுதப்பட்டு உள்ளது (அந்த விவிலிய பதிப்பிற்கு பெயர் வல்கேட்). அந்த விளக்க உரையையும் பழைய இலத்தீன் விளக்க உரையையும் படித்து ஆய்வு செய்த அறிஞரான லினேகர் அவர்கள் பின் வருமாறுக் கூறி இருக்கின்றார்.

"வல்கேட் என்னும் இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பு தான் விவிலியம் என்றால் இது விவிலியமும் இல்லை...நாம் கிருத்துவர்களும் இல்லை". அவர் ஏன் அவ்வாறு கூற வேண்டும்? ஏன் போப் அவர்கள் விவிலியத்திற்கு தவறான உரையினை எழுத முற்பட வேண்டும்?

பொதுவாக எதற்காக விவிலியத்தினை பொது மக்களிடம் இருந்து பிரித்து வைத்து இருக்க வேண்டும்?

"படைப்புகளுக்கெல்லாம் சென்று நற்செய்தியை தெரிவியுங்கள்" என்ற இயேசுவின் கூற்றுக்கு மாறாக மக்களிடம் இருந்து இயேசுவின் கருத்துக்களை இவர்கள் ஏன் மறைக்க முயல வேண்டும்? ஏன் தவறானக் கருத்துக்களை எழுத வேண்டும்?

'சமசுகிருதம் புனிதமான மொழி அதனை பிராமணர்களைத் தவிர வேறு யாரும் பயிலக் கூடாது, அதேப் போல் சமசுகிருதத்தில் உள்ள வேதங்களையும் பிறர் படிக்க கூடாது...அவ்வாறு படித்தால் அவரைக் கொல்ல வேண்டும்' என்று இந்தியாவில் நிலவிய நிலையைப் போல் அல்லவா போப் இலத்தீனைத் தூக்கிப் பிடித்த நிலையும் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க கூடாது என்றுக் கூறிய நிலையும் உள்ளது. இது சமயங்களைக் கைப்பற்றி மக்களை அதன் மூலமாக அடிமையாக்கி வைத்துள்ள நிலையைத் தானே குறிக்கின்றது. இதில் ஆன்மிகம் எங்கிருந்து வருகின்றது?

இல்லை இலத்தீன் தான் புனிதமான மொழி என்றால் பின்னர் எதற்காக மக்கள் புரட்சியின் காரணமாக உலகின் அனைத்து மொழிகளிலும் விவிலியத்தினை மொழிபெயர்க்க கி.பி பதினாறாம் நூற்றாண்டில் இருந்து அனுமதி வழங்க வேண்டும்? மக்கள் புரட்சி செய்து அதனால் மாறுவது என்கின்ற ஒன்று அரசியலா ஆன்மீகமா?

இவ்வாறு தன் விருப்பத்திற்காக விவிலியத்தின் கருத்துக்களை மாற்றியும் மறைத்தும் தன்னுடைய செல்வாக்கினை வளர்த்துக் கொண்ட போப்பையும் அவர்கள் அதிகாரங்களையும் எவ்வாறு கிருத்துவத்தினையையும் இயேசுவையையும் உண்மையாக இன்று குறிப்பவர்களாக நாம் கருத முடியும்?. அரசியலின் மூலமாக சமயத்தினை கட்டுப்படுத்தி அதன் மூலமாக தங்களது செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொண்டுள்ள அரசியல்வாதிகளாகத் தானே அவர்களை நாம் காண முடியும்.

இயேசுவின் இரண்டாம் வருகை:

"இயேசு வருகின்றார்...இயேசு வருகின்றார்" என்றுக் கூறி இன்றைய கிருத்துவ சமூகமே கிட்டத்தட்ட 2000 வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இயேசு இரண்டாம் முறையாக உலகிற்கு வருகையினைப் புரிவார் என்பதே அவர்களின் நம்பிக்கை. ஆனால் இங்கே தான் நமக்கு கேள்விகள் இருக்கின்றன... விவிலியத்தின் படி,

"அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" - மாற்கு 9:1

" இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." - மத்தேயு 16:28

"இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." - லூக்கா 21:32

இயேசு அவர்கள் அங்குள்ள மக்கள் பலர் இறப்பதற்கு முன்னரே இரண்டாம் வருகை நிகழ்த்து விடும் என்று கூறுவதனைப் போல் இருக்கின்றது. ஆனால் இன்று வரை இயேசு வருவார் இயேசு வருவார் என்றே கிருத்துவர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர். அதாவது அவர்களின் கூற்றின் படி இயேசு இன்னும் இரண்டாம் முறையாக உலகிற்கு வரவில்லை...!!!

2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் யாரும் இன்று உயிருடன் இல்லை... அவ்வாறு இருக்க அன்றுள்ள மக்கள் பலர் மரணிப்பதற்குள் இரண்டாம் வருகை நிகழும் என்று இயேசு கூறியது ஏன்?

இயேசு பொய் கூறி இருக்கின்றாரா அல்லது அவரின் இரண்டாம் வருகை என்பது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டு இருக்கின்றதா? தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்டு இருக்கின்றது என்றால் இரண்டாம் வருகை என்றால் என்ன, அது எப்பொழுது நிகழ்ந்தது/நிகழப் போகின்றது என்று எவரேனும் கூற இயலுமா? (இதனைப் பற்றி ஒரு தனிப் பதிவு காத்துக் கொண்டு இருக்கின்றது.)

கிருத்துவமும் சைவமும்:

1) விவிலியத்தில் இயேசு வாழும் கல் என்று அழைக்கப்பட்டு இருப்பது எதனால்?

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )

2) மூஒருமைக் கோட்பாடு என்பது கிருத்துவக் கோட்பாடு...அதே கோட்பாடு சைவ வைணவ சமயத்திலும் காணப்படுவது எதனால்?

3) //உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது சவுலின் கூற்று. இதன் மூலம் சவுல் எதனைக் கூற வருகின்றார்?

இதனையொத்த கருத்தினை திருமூலரும் கூறி இருப்பது எதனால்?

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்


4) சிவலிங்கத்தின் முன்னே கன்றினை வைத்து வழிபடுவது இன்று சைவத்தில் இருக்கின்றது. ஆனால் அதனையொத்த குறிப்புகள் விவிலியத்தில் காணப்படுவது ஏன்?

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

5) இன்று திருநீறு என்பது சைவர்களின் சின்னம்...ஆனால் அதே சின்னம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது எதனால்?


"ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்." - விடுதலைப் பயணம் 13 : 9 (பழைய ஏற்பாடு)

"மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்." - திருவெளிப்பாடு 14 : 1 (புதிய ஏற்பாடு)


தொடர்புடைய இடுகைகள்: (விவிலியமும் சிவலிங்கமும், யாகோவா, கிருத்துவமும் திருநீறும்,  மூவொரு கடவுள் கோட்பாடு)

ஏன் இந்த ஒற்றுமைகள் என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது...மேலும் இன்னும் பல ஒற்றுமைகளை/கேள்விகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்... ஆனால் இப்போதைக்கு இக்கேள்விகள் போதும் என்றே எண்ணுகின்றேன்... மேலும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து இப்பொழுது நாம் காண வேண்டி இருப்பதனால் ஒற்றுமைகளுக்கும் கேள்விகளுக்கும் சிறிது விடை கொடுத்து விட்டு இரண்டாம் வருகையை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கின்றது....

பயணிப்போம்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு