உலகம் எவ்வாறு தோன்றிற்று…
அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்?

இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்துக் கொண்டே இருக்கின்றன. ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை.

சரி இப்பொழுது அந்தப் பதில்களைப் பற்றிப் பார்க்கலாம்!!! பொதுவாக இந்தக் கேள்விக்குரிய பதில்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்..

உலகத்தினை கடவுள் படைத்தார். மனிதனையும் அவரே படைத்தார். - இது இறை நம்பிக்கையாளர்களின் கூற்று.

உலகம் ஒரு விபத்தினால் உருவானது. அதில் தற்செயலாய் உயிர் உருவானது. அந்த உயிரின் பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உருவானான். - இது அறிவியல் நம்பிக்கையாளர்களின் கருத்து.

உலகத்தினையும் மனிதனையும் கடவுள் படைத்தார்… ஆனால் மனிதன் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியினால் வந்தான். பரிணாம வளர்ச்சி இறைவனின் செயல் - இது இறைவனையும் விட முடியாமல் அறிவியலையும் விட முடியாமல் இருப்பவர்களின் கருத்து. (இன்றைய காலத்தில் இந்தக் கருத்தினை உடையவர்களே அதிகமாக இருக்கின்றனர்)

சரி… இப்பொழுது உலகத்தின் தோற்றம் பற்றி பல காலமாக கூறிக் கொண்டு இருக்கும் நூல்களையும் கதைகளையும் அறிவியலையும் பற்றிப் பார்ப்போம்.

முதலில் வட நாட்டுக் கதை.

வடநாட்டுக் கதை கூறும் உலகின் தோற்றம்:

வடநாட்டுக் கதை என்பது ஆரியர்களின் கதை.

இக்கதையின் படி, சிவனும் பார்வதியும் ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்து இருந்ததினால் உலகம் தோன்றிற்று. அப்படிப்பட்ட உலகத்தினில் பிரம்மன் மனிதர்களை நான்கு விதமாய் பிரித்துப் படைத்தான்.

பிராமணர்கள் - பிரமனின் தலையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சத்திரியர்கள் - பிரமனின் நெஞ்சில் இருந்துத் தோன்றியவர்களாம்.

வைசியர்கள் - பிரமனின் தொடையில் இருந்துத் தோன்றியவர்களாம்.

சூத்திரர்கள் - பிரமனின் பாதத்தில் இருந்துத் தோன்றியவர்களாம்.

மேலும் இந்தக் கதையின் படி இறைவனிடம் இருந்து பிறக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பஞ்சமர்களாம். நிற்க.

இந்தக் கதையினில் அறிவியலினை நாம் எங்காவது காண முடிகின்றதா… இல்லை ஆன்மீகத்தினையாவது காண முடிகின்றதா?

கதையினை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால், இல்லை என்பதே நமது பதிலாக இருக்க முடியும். அதுவும் கடவுள் தான் மனிதனைப்  படைத்தார் என்றக் கொள்கையினை இந்தக் கதையே மறுத்துக் கொண்டு இருக்கின்றது (பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் மக்களை கடவுள் படைக்கவில்லை என்றால் அவர்கள் தோன்றியது எப்படி?).

அறிவியலும் இல்லை, ஆன்மீகமும் இல்லை, வரலாற்றுச் சான்றுகளும் இல்லை… அனைத்துக்கும் மேலாக தெளிவான படைப்பின் விளக்கமும் இல்லை. எனவே இந்தக் கதை வரலாற்று உண்மை அல்ல… வெறும் கதை என்றே நாம் முடிவிற்கு வர வேண்டி இருக்கின்றது.

இப்பொழுது நாம் அறிவியல் கூறும் கூற்றினைக் காண்போம்:

உலகம், விண்வெளியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடி விபத்தினால் (Big Bang Theory) தற்செயலாய் தோன்றியது. முதலில் மிகவும் சூடாக இருந்த உலகம் சுழற்சியினால் குளிரக் குளிர உயிர் தோன்றும் வாய்ப்புகள் பெருகின.
அப்படி பட்ட ஒரு காலத்தில், உயிர் தோன்றுவதற்கு ஏதோ ஒரு சூழ்நிலை ஏதுவாக அமைந்ததினால் உயிர் தோன்றிற்று.

ஒரு செல் உயிரியாய்!!!.

அந்த ஒரு செல் உயிரி காலத்தின் போக்கில் பல்வேறு உயிரினமாய் பரிணாம வளர்ச்சியினை அடைந்து இறுதியில் மனிதனாய் ஆகி உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சி அனைத்து உயிரினங்களின் உடல்களைப் ஆராய்ந்துப் பார்த்தால்
நமக்கு புலனாகும். பாருங்கள் குரங்கின் உடம்பும் மனிதனின் உடம்பும் ஒன்றுப் போலவே அமைந்து இருக்கின்றன. எனவே மனிதன் குரங்கினில் இருந்து தான் வந்து இருக்க வேண்டும்.

இதுவே அறிவியலின் கூற்று… மன்னிக்கவும்… ஐரோப்பிய அறிவியலின் கூற்று!!!

ஐரோப்பிய அறிவியலா… இது என்ன புது கதை என்கின்றீர்களா? இந்தக் கதையையும் தான் பார்த்து விடுவோமே!!!

ஐரோப்பிய அறிவியல் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உடலினை மட்டுமே ஆராய்ச்சி செய்யும் ஒன்றாக உள்ளது. உயிரினைப் பற்றிய ஆராய்ச்சி ஐரோப்பிய அறிவியலில் இல்லை.
ஐரோப்பிய அறிவியல் உலகின் பொருட்களை இரண்டு விதமாக பிரித்து உள்ளது.

உயிருள்ள பொருட்கள் - மனிதன், விலங்குகள் (Living Things ) (இங்கே அறிவியல் மனிதனை ஒரு பொருளாகப் பார்க்கும் தன்மையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.)

உயிரற்றப் பொருட்கள் - கல், மரம் (Non - Living things )

அந்த அறிவியலில் வேறு விதமான பிரிவுகள் இல்லை. எனவே வெறும் உடலினை வைத்து மட்டுமே ஆராயும் இந்த அறிவியலினை நாம் ஏற்றுக் கொள்ளலாமா என்றக் கேள்வி வருகின்றது.

கூடவே இந்த அறிவியல் உயிரினைப் பற்றி ஆராயவில்லை என்றால் உயிரினைப் பற்றி ஆராயும் அறிவியல் இருக்கின்றதா என்றக் கேள்வியும் வருகின்றது. அந்தக் கேள்விக்கு பதில்… ஆம்! உயிரினைப் பற்றி அறிந்த அறிவியல் இருக்கின்றது. நீண்ட காலமாக நம்முடனே இருக்கும் தமிழ் அறிவியல் தான் அது.

ஐரோப்பிய அறிவியல் பொருட்களைப் உயிரின் அடிப்படையில் பிரிக்கின்றது என்றுக் கண்டோம். வேறு பிரிவுகள் அதில் கிடையாது.

ஆனால் தமிழ் உயிரினங்களையே அறிவின் வழி பிரித்து இருக்கின்றது.
ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை என்று அந்தப் பிரிவுகள் நீள்கின்றன.

மேலும் தமிழ் தன் திணை இலக்கணத்தின் மூலம் மனிதர்களுக்கு உயர்திணை (அவர்கள் மற்ற உயிர்களில் இருந்து சிறந்தவர்கள் என்ற எண்ணத்தில்) என்றச் சிறப்பினையும் கொடுத்து இருக்கின்றது.

இத்தகைய பிரிவுகளை அறியாத தொடக்க நிலையிலேயே ஐரோப்பிய அறிவியல் நிற்கின்ற காரணத்தினால் உயிரின் தோற்றம் பற்றிய ஐரோப்பிய அறிவியலின் கூற்றினை நாம் ஏற்க முடியாது.

ஐரோப்பியர்களின் அறிவியல் உலகம் தட்டையானது என்று கூறிக் கொண்டு இருந்தக் காலத்தில், உலகை கப்பலில் சுற்றிய அறிவியல் நம்முடையது. எனவே நாம் அவர்கள் கூற்றினை ஆராயாது ஏற்றுக் கொண்டால் தட்டையான உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
எனவே,
  1. ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியாத நிலையினாலும்,
  2. டார்வினின் கருத்து வெறும் கருத்தே அன்றி அறிவியல் கிடையாது என்ற நிலையினாலும்,
  3. குரங்கில் இருந்து எந்த ஒரு மனிதனையும் உருவாக்கிக் காட்டாமையினாலும்,
  4. வெற்று இடத்தில் இருந்து உயிரினை உருவாக்கிக் காட்டாமையினாலும்,

ஐரோப்பிய அறிவியலின் உயிரின் தோற்றம் பற்றியக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வட நாட்டுக் கதையும் விளக்கம் தரவில்லை… ஐரோப்பிய அறிவியலும் தெளிவானக் கருத்தினைத் தரவில்லை.  எனவே இப்பொழுது நாம் இரு வேறு கதைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

ஒன்று பரிபாடல் - தமிழ் சங்க இலக்கியம்.

இரண்டு விவிலியம் (பைபிள்)

இந்த இரண்டுக் கதைகளிலும் ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை இருக்கின்றது. இரண்டுமே உலகம் ஆறு ஊழிக் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றன.

‘பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட’ - என்னும் பரிப்பாடல் பாட்டின் மூலம்,
கடவுள் முதலில் ஆகாயத்தினை படைத்ததாகவும், பின்னர் காற்று, செந்தீ, மழை, நிலம் ஆகியவற்றை படைத்து முடித்து பின்னர் இறுதியாக மனிதனைப் படைத்ததாகவும் அறிய வருகின்றோம்.

கிட்டத்தட்ட இதேக் கருத்து விவிலியத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது.
விவிலியத்தின்படி இறைவன் ஐந்து ஊழிக் காலத்தில் உலகினைப் படைத்து முடித்து இறுதியாக ஆறாவது ஊழிக் காலத்தில் மனிதனைப் படைத்தார்.
சிறிது நிறுத்துங்கள்…!!!

நீங்கள் பாட்டுக்கு ஊழிக் காலங்கள் என்று சொல்லுகின்றீர்கள்… கடவுள் 6 ஊழிக் காலங்களில் அல்ல, ஆறு நாட்களில் உலகினைப் படைத்து உள்ளார்… என்கின்றீர்களா?

அப்படி என்றால் உங்கள் கவனத்திற்கு…
விவிலியம் என்பது ஒரு தொகுக்கப் பட்ட நூலே ஆகும்.
விவிலியத்தின் மூல மொழி எபிரேயம். அந்த மொழியில் இருந்தே எல்லா மொழிகளுக்கும் அது மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பில் சில கருத்துக்கள் மாறுப்பட்டு வந்து இருக்கலாம். ஆங்கிலத்தில் ஊழி என்ற சொல்லுக்கு தகுந்த வார்த்தை இல்லாதக் காரணத்தினால், ஆறு ஊழிக் காலங்கள் என்ற கால அளவு ஆறு நாட்களாக மாறிப் போய் உள்ளது. உதாரணத்திற்கு தூத்துக்குடி டுடிகொரின் (Tutikorin ) ஆக மாறியது உங்களுக்குத் தெரியுமல்லவா!!! அதுப் போலத் தான்!!!

சரி… எங்கேயோ எழுதப்பட்ட தமிழ் சங்க நூலுக்கும் விவிலியத்திற்கும் ஒற்றுமை இருக்கின்றது என்பதினைப் பார்த்தோம். ஆனால் அந்த செய்திகள் உண்மையினைச் சொல்லுகின்றனவா? விவிலியத்தில் உண்மை இருக்கின்றதா? … என்பதனை ‘ஆதாம் என்ற தமிழன்’ என்ற அடுத்த பதிவில் பார்ப்போம்.

விவிலியம் அழைக்கின்றது!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5

பி.கு:
தமிழில் எழுதப்பட்ட பரிபாடல் கருத்துக்கும் விவிலியக் கதைக்கும் ஏன் இந்த ஒற்றுமை என்று எண்ணுகின்றீர்களா?

உலகின் முதல் மனிதன் தமிழன் என்னும் கூற்றின் படி. உலகம் முழுவதும் பரந்து சென்று பரவிய தமிழன் தன் கதைகளையும் தன்னுடன் சுமந்துச் சென்றுள்ளான். அந்தக் கதையே தமிழகத்தில் பரிபாடலாவும், எபிரேயத்தில் ஆதியாகமக் கதைகளாகவும் தொகுக்கப் பட்டு உள்ளன என்பது அறிஞர்கள் கருத்து!!!

திருவாசகம்…!!!

மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால் எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.”

சரி அது அப்படியே இருக்கட்டும். பிழையில்லை… ஆனால் நம்முடைய கேள்விக்கு பதில் இந்த நூலினில் இருக்கின்றது என்று சொன்னீர்களே அது எங்கே?
ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அந்தச் சமயங்கள் வளர்ந்தன… தமிழில் அவ்வாறு என்ன இருக்கின்றது?” என்று கேட்கின்றீர்களா…

இதோ மாணிக்கவாசகரின் பதில்.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

தமிழர்களின் சிந்தனை எப்பொழுதும் பரந்து விரிந்தது. இதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” போன்ற கூற்றுகளின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?
அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

“அட என்னங்க… மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” என்றுக் கூறுகின்றீர்களா. உங்களின் கவனத்திற்கு,

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

‘தென்னவனின் நாடா???”

சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி அறிஞர்கள் நம் உதவிக்கு
வருகின்றார்கள்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

“பழைய நாடா???” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக்கண்டத்தையேதான்.

ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான்.

ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில் எழுந்தது?

ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் இறைவனிடம் பேசிய மொழி தமிழ்!!! இவை தான் அந்தக் கேள்விகளுக்கு பதில்… நிற்க!.

இப்பொழுது புதிதாய் பல கேள்விகள், மறுப்புக் கருத்துக்கள், விமர்சனங்கள் நிச்சயம் உங்கள் மனதில் தோன்றி இருக்கும். அவற்றிற்கு அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று செய்திகள் மூலமாகவும் விடையினை நாம் மெதுவாகப் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னாள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன.

ஒன்று:
இன்று அறிவியல், மனிதகுலம் தோன்றி இருக்க கூடும் என்று எண்ணும் இடம், இன்றைக்கு ஆப்பிரிக்காவிற்கும் ஆசுதிரேலியாவிற்கும் இடையில் இருக்கும் இந்து மகாக்கடலே ஆகும். உயிர் தோன்ற அங்கே இருந்த சூழலே சரியாக இருந்து இருக்கும் என்று அறிவியல் எண்ணுகின்றது.
அந்த இடம் நம் தமிழ் இலக்கியச் செய்திகளில் குமரிக்கண்டம் எங்கே இருந்தது என்றுக் கூறப்படுகின்றதோ அதே இடத்துடன் ஒத்துப் போகின்றது.

குமரிக்கண்டம், இந்தியா- ஆசுதிரேலியா-ஆப்பிரிக்கா ஆகிய இந்த மூன்று நிலங்களையும் இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு என்பது ஒருக்கருத்து.

இந்தக் கருத்து சில ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாய் ஆசுதிரேலியாவில் உள்ள பழங்குடி மக்களின் மொழியினைப் பற்றிய ஆராய்ச்சியில் அம்மொழி தமிழினை ஒத்து இருக்கின்றது என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது.
அவர்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள்.
இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரண்டு:
எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதாக இல்லாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துக் கொண்டு நிற்கும் மொழி உலகில் தமிழன்றி வேறு இல்லை. தமிழில் மட்டுமே அனைத்து சமயங்களுக்கும் மூல நூல்கள் தோன்றியுள்ளன. மொழிப்பெயர்ப்பது வேறு. அந்த மொழியினைக் கற்றுக் கொண்டு அம்மொழியினில் தங்களின் சமயத்தினைப் பற்றி எழுதுவது வேறு.
தமிழில் உலகில் உள்ள பெரு மதங்கள் அனைத்திற்கும் மூல நூல்கள் உள்ளன.

சைவம் - பன்னிரு திருமுறை

வைணவம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

சமணம் - சிலப்பதிகாரம்

பௌத்தம் - சீவக சிந்தாமணி

கிருத்துவம் - தேம்பாவணி

இசுலாம் - சீறாப்புராணம்

உலகில் உள்ள வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை!!! மேலும் தமிழ் ஆன்மீக மொழியாக மட்டும் இல்லாமல் அறிவியல் மொழியாகவும் திகழும் பாங்கும் இங்கு கவனிக்கத்தக்கது.

சரி…!!!

இப்பொழுது ‘உலகின் முதல் மனிதன் தமிழன்- அவன் படைக்கப் பட்டது குமரிக்கண்டத்தில்’ என்ற செய்தியினை நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. அதற்கு உலகம் முதலில் எவ்வாறு தோன்றிற்று என்பதனை நாம் பார்க்க வேண்டும்.

உலகத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை பலக் கதைகளும் நூல்களும் விளக்கிக் கொண்டு இருக்கின்றன.

வடநாட்டுக் கதை
விவிலியம்
பரிபாடல் (தமிழ் சங்க இலக்கிய நூல்)
கூடவே அறிவியலும் ஒரு விளக்கத்தினைக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றது.
அடுத்தப் பதிவுகளில் நாம் இவற்றினைப் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். அதுவும் குறிப்பாக விவிலியத்தினைப் பற்றி.

கடவுள் உலகினைப் படைத்தாரா? இல்லை உலகம் அதுவாக ஒரு விபத்தினால் உருவாயிற்றா? முதல் மனிதன் யார்… முதன் மொழி என்ன?
காண்போம்!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4

இந்தப் பதிவு இப்படத்தினைப் பற்றிய ஒரு விமர்சனம் அல்ல. ஏனெனில் இப்படத்தினை வெறும் பொழுதுப்போக்குத் திரைப்படமாக நான் கருதவில்லை மாறாக இக்காலத்தில் தமிழையும் தமிழர்களையும் அவர்கள் அறியாமலையே அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் ஒரு சதி வலையினைப் பற்றிய எச்சரிக்கை மணியாக நான் கருதுகின்றேன்.

போதிதர்மன் சீனத்துக்கு சென்று அங்கே தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகின்றான்.
நம் களரியும் வர்மக்கலையும் அங்கே சென்று வளர்கின்றன. அக்குப்பஞ்சர்...சூடோ... போன்று பல கலைகளாக மாறி அவை அங்கே அந்த மக்களால் போற்றப்படுகின்றன.
ஆனால் அந்தக் கலைகள் தோன்றிய மண்ணில் இன்று அந்தக் கலைகளைக் காணவில்லை.
காரணம் - அந்தக் கலைகளால் காசில்லை. காசில்லாக் கலைகள் பயனில்லை. எனவே அக்கலைகள் நமக்கு பயனில்லை என்று நாம் ஒதுக்கி விட்டோம். அவர்களுக்கு நல்லதாக போயிற்று. அக்கலைகளை அவர்களை செதுக்கி விட்டனர். இன்று நாம் "கராத்தே - சீனக் கலையாக்கும்... தமிழிலே இதுப் போல ஏதாவது உண்டா" என்று சீனதினை உயர்த்திப் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.

அவர்கள் அவர்கள் மொழியினை நேசித்தனர். அவர்கள் பண்பாட்டினை காத்தனர். ஒரு இனமாக இருந்தனர். அவர்களை அடுத்தவன் ஆள அவர்கள் ஒருக்காலும் அனுமதித்தது இல்லை. சில காலம் சப்பானுக்கு அடிமையாய் இருந்த பொழுதும் இன உணர்ச்சியுடன் போரிட்டார்களே அல்லாது சப்பானிடம் அடிப்பணிய வில்லை. அவர்கள் மொழியிலேயே பேசினர்...படித்தனர்...வளர்ந்தனர். அவர்கள் மொழியும் வளர்ந்தது...கலையும் வளர்ந்தது..; இனமும் வளர்ந்தது...புகழும் வளர்ந்தது.

ஆனால் வீரம், நேர்மை, கொடை என்ற மாபெரும் பண்புகளைக் கொண்டு வாழ்ந்த தமிழன் இன்று அடிமையாய், தம் பெருமையினை அறியாதவனாய் வாழுகின்றான். வந்தோரை எல்லாம் வாழ வைத்த தமிழன் இன்று அந்நிய நாட்டவரை அண்டி வாழுகின்றான். தமிழில் பேசினால் கேவலம் என்று எண்ணி அந்நிய மொழியினை பேசுகின்றான். அவனைப் பொறுத்தவரை அவன் இனத்தினை தவிர அனைவரும் உயர்ந்தவர்கள். கற்பது வேற்று மொழி...பேசுவது வேற்று மொழி...பிழைப்பிற்கும் வேற்று மொழி... பின் எவ்வாறையா அவன் மொழி வளரும்... அவன் இனம் வளரும்... அவன் வளர்வான்? ஆங்கிலம் பேச முடியவில்லையே என்ற ஆதங்கத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வரும் அளவிற்கு எப்படி ஐயா என் இனத்து மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்து போனார்கள்.? உன் மொழி நீச மொழி... உன் இனம் நீச இனம் என்று தமிழகத்தில் இருந்துக் கொண்டே சிலர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு எவ்வாறையா அவர்கள் உணர்ச்சி இன்றி இருப்பவர்களாக ஆனார்கள்?

இந்த நிலைமை எதனால் ஏற்பட்டது?... எப்படித் தாழ்ந்தான் தமிழன். சிந்திக்க இங்கே ஒருவரும் தயாரில்லை. சிந்திப்பவரை கவனிப்பாரில்லை. அடிமையாய் விடுவித்து விடலாம். அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்டவனை விடுவிக்க முடியாது.

படத்தில் நாயகி பேசுகின்ற வசனங்கள்...
"தமிழில் இருக்கும் ஒரே காரணத்திற்க்காக நீங்கள் தமிழ் கூறும் அறிவியலை மறுக்கின்றீகள். அதை காணக் கூட நீங்கள் தயாரில்லை."
"இந்தியன்னா உலகத்துல மதிக்க மாட்டான். தமிழன்னா இந்தியாவுல மதிக்க மாட்டான்."

இந்த வசனங்கள் உண்மையா... இல்லையா.?

தமிழில் அறிவியல் இருக்கின்றது என்று கூறினால் அதை நம்பக் கூட நம்மில் பலர் தயங்கும் நிலை தான் இன்று உள்ளது. திருமந்திரம், சிவஞானபோதம் போன்ற நூல்களில் உள்ள கருத்துக்களை ஆங்கில அறிவியல் அறிந்துக் கொள்ள எத்தனை யுகங்கள் ஆகுமோ நான் அறியேன். ஆனால் இந்த நூல்களைப் பற்றிய விழிப்புணர்வு எங்கே சென்றது?

ஐரோப்பிய அறிவியல் உடம்பினை இன்றும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கின்றது. அனால் நம் முன்னோர்களோ உடம்பைப் பற்றிய ஆராய்ச்சியினை முடித்து, உயிரினைப் பற்றியும் ஆராய்ந்து முடித்து இறுதியில் ஆன்மாவினைப் பற்றியும் ஆராய்ந்து முடித்து விட்டார்கள். இதனை... இந்தக் கூற்றினை தமிழனே நம்ப மறுக்கும் சூழ்நிலை தான் இன்று நம் நாட்டில் நிலவுகின்றது.

கதாநாயகி தன்னுடைய அப்பாவினைப் பற்றி கூறும் காட்சி. அவளின் தந்தை ஒரு சித்த வைத்தியர். ஆங்கில வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோய்களை எளிதில் குணப்படுத்தி விடுகின்றார். அந்த ஒருக் காரணத்தினாலையே அவர் மேல் போலி மருத்துவர் என்று வழக்கினைப் போட்டு சிறையில் அடைக்கின்றனர். அவரது கலையும் திறமைகளும் அவரின் உயிர் செல்லும் பொது அவருடனையே மறைந்து விடுகின்றன.

இந்த வசனம் இக்கால அடக்குமுறையை குறிக்கின்றது. மருத்துவம் என்றோ சேவை நிலையில் இருந்து மாறி வணிகமாக மாறி விட்டது. இந்தியா என்பது அந்நிய மருந்து நிறுவனங்களின் சந்தையாக மாறி விட்டது. படிப்பிற்கு பணம் வேண்டும். போட்ட பணத்தினை எடுக்க மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே இன்றைய நிலையாக மாறி விட்டது. ஒருக்காலத்தில் உணவே மருந்தாக இருந்த நிலைப் போய் இன்று மருந்தே உணவாகும் நிலை வந்ததற்கு யார் காரணம். நம்முடைய கலைகளை வளர்ப்பதற்கு பதிலாக அரசியல்வாதிகளும் பெரிய மருத்துவமனைகளும் சேர்ந்து அயல் நாட்டில் காசினை வாங்கிக் கொண்டு நம்மை அந்நிய மருந்துக்களுக்கு அடிமையாகுகின்றார்களே இதற்கு யாருடைய அறியாமைக் காரணம்? இந்த அறியாமையினால் இந்தியா நோய்வாய் பட்ட ஒரு நாடாக, அந்நிய நாடுகளின் சோதனைக் கூடமான ஒரு நாடாக மாறி வருவதனை நாம் என்று அறியப் போகின்றோம்?

பக்கத்துக்கு நாட்டினில் 7 பெரும் நாடுகள் சேர்ந்துக் கொண்டு நம் இனத்து மாவீரர்களைக் கொன்றுக் குவித்தனர். நம் போராட்டங்கள், குரல்கள் ஏதாவது ஒரு பலனைத் தந்ததா?... கடலில் தினமும் நம் மீனவர்களை கொன்று குவிக்கின்றார்கள்... அதையாவது தடுக்க முடிந்ததா?

ஆசுற்றளியாவில் ஒரு சிங்கின் தலைக் குல்லாவினைக் கழட்ட செய்த அதிகாரிக்கு இந்தியாவின் பிரதமர் கண்டனங்களைத் தெரிவிக்கின்றார். ஆனால் ஆயிரம் தமிழர்கள் பலி ஆனாலும் சிங்களம் நல்லவன். தமிழன் கெட்டவன்.

நாம் ஒரு மாபெரும் வரலாற்றின் சொந்த மக்கள் என்னும் உண்மையினை நாம் என்றையா அறிந்துக் கொள்ள போகின்றோம்?

உடனே சிலர் கூறி விடுவார்கள்...."இவனுங்க தமிழன் தமிழன் அப்படினே சொல்லுவானுங்க... இவங்களுக்கு வேற வேலையே கிடையாது... உலகமே முன்னேறிக் கொண்டு போகும் பொழுது இவனுங்க பின்னாடி நோக்கிச் செல்லுவானுங்க".

அவர்களுக்கு...

தமிழன் தமிழன் என்று கூறுவது கேவலம் கிடையாது. எங்கள் இனத்தினை நாங்கள் நேசிக்கின்றோம். எங்கள் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். இப்படி குரல் குடுப்பதினால் நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்றோ சிறந்தவர்கள் என்றோ நாங்கள் கர்வம் கொள்ளவில்லை. அடிமையாய் கிடக்கும் எங்கள் இனத்தினை விடுவிக்க இந்த ஓலம் ஒவ்வொரு தமிழனின் கடமை.

உலகம் முன்னேறவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவீனம். உலகம் அமெரிக்காவாகிக் கொண்டு வருகின்றது. அவன் வைத்தது தான் சட்டம். அவன் பயங்கரவாதி என்று சொல்லுகின்றவன் பயங்கரவாதி. கெட்டது என்று சொல்வது கெட்டது. அவன் கூற்று தான் வேத வாக்கு. இது தான் உங்கள் முன்னேற்றமா? மதிப்பெண்களையும் பணத்தினையும் மட்டுமே பெற கற்றுக் கொடுக்கும் இன்றைய கேவலமான கல்வி முறையின் பின் விழைவுகள் தான் உங்களின் இந்தக் கூற்று.

73 நாடுகளில் தடை செய்யப்பட்ட மரபணு மாற்றுப் பயிர்களை இந்தியாவில் கொண்டு வந்தே சேர்ப்போம் என்று குதிக்கும் மத்திய அரசின் தன்மைக்கு யார் காரணம்? மக்கள் நலமா... பணமா?

1000 வகையான நெல் கதிர்களை கண்டு வைத்து இருந்த நம்மிடம் பசுமை புரட்சி என்ற ஒன்றின் பயனாக 900 மேலான கதிர் வகைகள் அழிவுற்று விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக போனதிற்கு என்ன காரணம்? மக்கள் நலனா ... பணமா.?

சுதேசி இயக்கம் என்று தன்மானமுள்ள இந்தியர்களால் துவங்கப்பட்ட ஒரு இயக்கம் இன்று இருந்த இடம் தெரியாமல் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உடன் போய் விட்டதே இதற்கு என்ன காரணம்?... மக்கள் நலனா... பணமா?

குலக்கல்வி என்ற ஒன்றினை மீண்டும் கொண்டு வர ராசாசி எண்ணியதற்கு காரணம் என்ன?... மக்கள் நலனா?

பணம் என்ற ஒன்றிற்காக நம்முடைய மற்ற அனைத்துத் தகுதிகளையும் அடகு வைத்து விட்டோமே நண்பர்களே... இன்று நமக்காக இல்லாவிடினும் நம் இனத்திற்காக அடகு வைத்ததை மீட்க வேண்டி இருக்கின்றது.

12 நாட்களில் போதிதர்மன் திரும்பி வருவது ஒரு உவமை...

அதன் பொருள், நம் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வரலாற்றினை உருவாகிடும் தன்மையினைக் கொண்ட ஒருவன் ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். உன் இனத்தினைக் காக்க அவன் வெளி வர வேண்டும்... வந்தே ஆக வேண்டும்...!!!

இல்லையெனில் தமிழன் உலக அரங்கினில் நிமிர்ந்து நிற்கவே முடியாது போய் விடும்.

உன்னை வயிற்றினுள் கொண்ட நாள் முதலாக உன்னை கவனிக்க தொடங்கும் தாய் போல, நீ அம்மா என்று அழைக்க ஆரம்பித்த நாள் முதலாக உன்னை தமிழ் அன்னை தத்து எடுத்து விட்டாள். நீ வளர, அறிவையும் ஆற்றலையும் அவள் தன்னிடம் காத்து வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.... அன்புடன். அவளைப் புறக்கணித்தது போதும்...நாமின்றி அவளுக்கு வேறு துணை யார்?... எண்ணுவாய் தமிழா...எண்ணிப் பொங்குவாய்... அன்புடன்...பண்புடன்..தெளிவுடன்!!!

பொறுத்தது போதும் தமிழா...!!!

காசி ஆனந்தன் கூறியது போல ...

" இருப்பாய் தமிழா நெருப்பாய்!
  இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!".

இதை உணர ஏழாம் அறிவு தேவை இல்லை. ஆறாம் அறிவே போதும்...!!! என்ன செய்யப் போகின்றோம் நாம்?

மாணிக்கவாசகர்…!!!இத்தனை வருடங்களுக்குப் பின் நாம் இப்பொழுது அவரைப் பற்றிப் பார்ப்பதற்கு இரண்டுக் காரணங்கள் உள்ளன.

ஒன்று… இவர் வாழ்ந்தக் காலம்.
இரண்டு… இவர் எழுதிய வரிகள்.

முதலில் இவர் வாழ்ந்தக் காலத்தினைப் பற்றிப் பார்ப்போம்.

இவர் காலம் ‘பக்தி இயக்கக்’ காலம்.

“பக்தி இயக்கமா அப்படினா???” என்கின்றீர்களா.
சொல்கிறேன்.

சென்றப் பதிவில் இந்தியா முழுவதும் எவ்வாறு சமணமும் பௌத்தமும் பரவி இருந்தன என்பதனைப் பார்த்தோம்.

கடவுள் இல்லை என்றக் கோட்பாடு தமிழகத்திலும் பரவி இருந்தது.

சைவ வைணவச் சமயங்கள் என்ன ஆகுமோ என்றுப் பலரும் எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்தக் காலம் வந்தது.

திடீர் என்று சைவக் கருத்துக்கள் ஒரு எழுச்சியைக் கண்டன. கூடவே வைணவக் கருத்துக்களும்.

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றியச் செய்தி இங்கும் அங்குமாக கேட்க ஆரம்பித்தன.

இறை பக்தர்கள் ஊர் எங்கிலும் தோன்றத் தொடங்கினர்.
காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், அப்பர், சுந்தரர், திருமூலர் போன்ற நாயன்மார்களும் ஒவ்வொருக் காலத்தில் தோன்றி சைவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

அதைப் போலவே நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்களும் வைணவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

தத்துவக் கருத்துக்கள் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடின.

மன்னர்கள் மாறத் தொடங்கினர்.

“கடவுள் இல்லையா… எம்பிரானை உணர்ந்த பின் நான் எவ்வாறு ஐயா அவ்வாறு சொல்லுவேன்… அவனின் திருவிளையாடல்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?… அவனது செய்திகள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?… பின் எவ்வாறு ஐயா அவன் இல்லை என்கின்றீர்?”
என்று மன்னர்கள் கூற சமணமும் பௌத்தமும் பின் வாங்கத் தொடங்கின.

“உனக்கு தெரியுமா, சோழன் வைணவத்திற்கு மாறி விட்டாராம்… பாண்டியரும் சைவத்திற்கு மாறி விட்டாராம்…” என்று மக்களும் மாறத் தொடங்கினர்.

பக்தி இலக்கியங்கள் முன்பில்லா அளவிற்கு வளர்ச்சி அடைந்தன.

திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் போன்ற நூற்கள் இறைவனை மக்களிடத்துக் கொண்டுப் போய் சேர்த்துக் கொண்டு இருந்தன.

கோவில்களில் தேவாரங்கள், திருவாசகப் பாடல்கள் பக்தியினைப் பறைசாட்டிக் கொண்டு இருந்தன.

மக்கள் இறைவனை உணர்ந்துக் கொண்டு இருந்தனர்.
இறைவன் உணர்த்திக் கொண்டு இருந்தான்.

அத்தனையும் நடந்தது தமிழில்…. தமிழ்நாட்டில்!!!

தமிழ்நாட்டில் எழுந்த இவ்எழுச்சி இந்தியா முழுவதும் பரவுகின்றது.
சமணமும் பௌத்தமும் இந்த எழுச்சியின் முன் நிற்க முடியாது கரைகின்றன.

இந்தியா மாறுகின்றது…

கடவுள் இல்லை என்ற நிலையில் இருந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலைக்கு!!!

இந்தக் எழுச்சியின் காலம் தான் பக்தி இயக்கக் காலம் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை).

இந்த எழுச்சியைப் பரப்பியது தான் ‘பக்தி இயக்கம்’.

அடடே, இவ்வளவு நடந்து இருக்கு ஆனா நமக்கு எதுவுமே தெரியலையே என்று எண்ணுகின்றீர்களா?

தவறில்லை. இது நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.

 ஏனெனில்,

சைவ வைணவ மதங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பகுதியான இந்த பக்தி இயக்கக் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருட்டடிப்பா ஏன் என்றுக் கேட்பவர்களுக்கு…

“ஏங்க நாங்க சமசுகிருதம் தான் இறைவன் மொழி அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்…. அப்படி இருக்கும் போது ஏன் சைவ வைணவ சமயங்கள் சமசுகிருதத்தில் எழுச்சி பெறாமல் தமிழில் எழுச்சி பெற்றன அப்படின்னு நீங்க கேட்டா நாங்க என்னங்க விடை சொல்றது. கேள்வி கேட்குறது சுலபம்… விடை சொல்றது தான் கடினம்… புரிஞ்சிக்கோங்க!!!”

வடநாட்டில் வடமொழியில் உருவான மதம் என்று சொல்லப்படும் ஒன்று ஏன் தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் எழுச்சிப் பெற வேண்டும் என்றக் கேள்விக்கு வடமொழியின் புகழினைப் பாடுபவர்களிடம் இருந்து விடை இல்லை என்பதே உண்மை.

நிற்க!!!

சரி… பக்தி இயக்கத்தினை கண்டாயிற்று.

கடவுள் இல்லை என்ற நிலைமை தமிழால் தமிழ் நாட்டில் கடவுள் இருக்கின்றார் என்ற நிலையாய் மாறிவிட்டது.

இப்பொழுது நாம் மாணிக்கவாசகரிடம் மீண்டும் செல்லலாம்.
அவர் சில வரிகளை கூறி இருக்கின்றார்.

அந்த வரிகள் நம் பயணத்திற்குரிய அடுத்தக் கதவினை திறக்கும் சாவிகள்!!!
பயணிப்போம்…!!!

முந்தையப் பதிவு : 1 | 2 | 3

வெற்றி… மாபெரும் வெற்றி!!!

இருந்தும் அமைதி கிட்டவில்லை அசோகருக்கு…!!!

“சக்கரவர்த்தி தான்… உலகில் உள்ள அனைத்து வசதியும் உள்ளது தான்… ஆனால் நிம்மதி இல்லையே… கண் மூடினால் சடலங்கள் அல்லவா நினைவிற்கு வருகின்றன.. ஒன்றா இரண்டா… லட்சக்கணக்கான சடலங்கள் அல்லவா தோன்றுகின்றன… இந்தப் பாழாய்ப்போன கலிங்கத்து யுத்தத்தை நடத்தாமலேயே இருந்திருக்கலாமே!!!” என்று தனது அரண்மனையில் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது புத்தரைப் பற்றிய எண்ணம் வருகின்றது அசோகருக்கு.

“ஆ… புத்தர்!!! அவரின் கருத்துகள் தான் எத்தனை அழகானவை… ஆழமானவையும் கூட. அவற்றினை நான் ஏன் கவனிக்க மறந்தேன். எல்லா உயிர்களும் சமம், அவை அனைத்திற்கும் அன்பினை நாம் காட்டுவதே இப்பிறவியின் பயன் என்ற அந்தக் கருத்துக்களை நான் எவ்வாறு கேளாது போனேன்.

அன்பினை முற்றிலும் மறந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேனே…!!!
போதும் இந்த வெறி… பணம், பதவி, சுகம் ஆகியவற்றினைத் துறந்த புத்தனின் வழி தான் இனி என் வழி…!!!
அமைச்சரே… அழையுங்கள் புத்தத் துறவிகளை…
கூடவே எனது அன்புப் புதல்வியையும் புதல்வனையும் சேர்த்தே அழையுங்கள்!!!
உலகில் அன்புத் திகழ அவர்கள் திக்கெட்டும் புத்தத்தை பரப்பட்டும்!!!
அசோகன் போர்வெறியன் அல்ல… அவன் மனித நேயத்தினைப் பரப்பியவன் என்றே உலகம் அவனை நினைவில் கொள்ளட்டும்” என்றவாறே அசோகர் புத்த மதத்தினை பரப்ப ஆரம்பிகின்றார்.

புத்தமும் பல்வேறு நாடுகளில் பரப்பப்படுகின்றது.

இந்தக் காலம் கி.மு 1 ஆம் நூற்றாண்டு!!! (இதை இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவோரும் உளர்).

அந்தக் காலத்தில் கிட்டதட்ட வட மற்றும் மத்திய இந்தியா முழுவதும் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால் புத்தம் அங்கே எளிதாக பரவியது. அந்தத் தாக்கம் தமிழகத்திலும் ஏற்ப்பட புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது.

ஏற்கனவே மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயமும் தமிழகத்தில் அந்தக் காலக் கட்டத்தில் பரவி இருந்தது என்றச் செய்தியையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்…!!!

சரி அசோகர் புத்த சமயத்தினைப் பரப்பிக் கொண்டு இருக்கட்டும்… நாம் அதற்குள் சற்று சமணம் மற்றும் புத்த சமயங்களைப் பற்றி ஒரு எட்டு சென்றுப் பார்த்து விட்டு வந்து விடலாம்…!!!

இவ்விரண்டு மதங்களுமே நாத்திக மதங்கள்… அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுபவை!!!

கடவுள் இல்லை…!!!

அனைத்து உயிர்களும் சமம், மனித உயிராய் இருந்தாலும் சரி அது மிருக உயிராய் இருந்தாலும் சரி…!!!

நீ செய்யும் செயல்களுக்கு ஏற்ப உனக்கு அடுத்த பிறவி ஏற்படும்…!!!

இவை தான் அந்த இரண்டு சமயங்களின் முக்கியக் கோட்பாடுகள். நிற்க!!!

இப்பொழுது ஒருக் கேள்வி, ஏன் இந்தச் சமயங்கள் தோன்றின?

தெரியவில்லையா…!!!

சரி அப்படி என்றால் இன்னொருக் கேள்வி, பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று முதலில் கூற ஆரம்பித்தார்?

சாதி இல்லை…!!!

அப்படி இல்லாத சாதிகளை (சாதி ஏற்றத் தாழ்வுகளை) படைத்தது  இறைவன் என்றால் அந்த இறைவனும் இல்லை…!!!

இது தான் பெரியாரின் கூற்று.

சாதி ஏற்றத் தாழ்வுகளை பெரியார் எதிர்த்தார். அந்த ஏற்றத் தாழ்வுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்றதினால் அவர் கடவுளை எதிர்த்தார்!!!
கடவுள் இல்லை எனக் கூற ஆரம்பித்தார்!!!

அதேப் போல் தான் இந்த சமயங்களும் தோன்றின!!!

இவை சாதிகளை எதிர்க்கவில்லை (ஏனெனில் அப்பொழுது ஏற்றத் தாழ்வுகள் இல்லை)…!!!

ஆனால் இவை பலி இடும் பழக்கத்தை எதிர்த்தன.

அந்தக் காலத்தில் இறைவனை வழிப்பட விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. (ஏன் இன்னுமே சில கோவில்களில் இந்தப் பழக்கம் இருக்கின்றதை நம்மால் காண முடிகின்றது. அட அதாங்க ’கடா வெட்டு’).

சமணமும் பௌத்தமும் உயிர்களைக் கொல்வதை எதிர்த்தன.
அவை எல்லா உயிர்களும் சமம் என்றன.

“இல்லை… இந்த பலிகள் கடவுளுக்காக” என்றனர் மக்கள்.

“அப்படியா… அப்படியென்றால் கடவுள் என்ற ஒருவர் இல்லை… இல்லாத ஒருவருக்கு பலி எதற்கு” என்றன அந்தச் சமயங்கள்.

மக்கள் சிந்தித்தார்கள்.

“அப்படி என்றால் நான் இறந்தால் எங்கே செல்லுவேன்” என்றார்கள்.

“உன் முன் வினைப்படி நீ மீண்டும் பிறப்பாய், மனிதனாய் இல்லை மிருகமாய் இல்லை மரமாய்… ஏனெனில் அனைத்தும் ஒன்றே…” என்றன அந்த மதங்கள்.
மக்கள் அந்த மதங்களுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார்கள்!!!

இது தான் அந்த மதங்கள் தோன்றியமைக்கு உரிய முக்கிய காரணம்.

இப்பொழுது நாம் அசோகரிடம் மீண்டும் செல்வோம்…!!!

அசோகரின் காலம் கிமு 1 ஆம் நூற்றாண்டு என்று நாம் கண்டோம்.

அவர் புத்தத்தை இந்தியா முழுமையும் பரப்புகின்றார் என்றும் கண்டோம்.

சரி, இப்பொழுது ஒருக் கேள்வி… (என்னய்யா கேள்வி கேள்வியா கேட்டுத் தள்ளுகின்றீர் அப்படின்னு கேட்குறீங்களா…

சரி உங்களுக்காக இந்தக் கேள்வியை தேர்ந்து எடுக்கும் முறையில் கேட்கிறேன் :))

தமிழகத்தில் ஒருக் கருத்தினைப் பரப்ப எந்த மொழியில் நாம் அதனைப் பரப்ப வேண்டும்?
அ) இந்தி
ஆ) பிரஞ்சு
இ) தமிழ்
ஈ) பஞ்சாபி
(எப்படி கடினப்பட்டு கோடிசுவரன் நிகழ்ச்சிக்கு ஒரு கேள்வியை தயார் பண்ணிட்டோம்ல)

விடை என்ன?

தமிழ் அப்படின்னு சட்டுன்னு சொல்றீங்களா…வாழ்த்துக்கள்!!! (எனக்குத் தெரியுமுங்க நீங்க புத்திசாலின்னு)

ஒரு நாட்டில் ஒருக் கருத்தினை பரப்ப வேண்டும் என்றால், அந்தக் கருத்தை அந்த நாட்டின் மொழியிலேயே பரப்ப வேண்டும்.

நமக்குத் தெரிந்து இருக்கும் இந்த விடயம், அசோகருக்குத் தெரியாமலா இருக்கும்.

அப்படி என்றால் ஏன் அவர் சமசுகிருதத்தில் கல்வெட்டுக்களை செதுக்கவில்லை???

சமசுகிருதம் கோடி வருடங்களுக்கு முன்னரே இருக்கின்றது… அது தான் மற்ற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால்… ஏன் அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்லை.

பாலி, தமிழ், அரமியம் மற்றும் கிரேக்கத்தில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகள், ஏன் சமசுகிருதத்தில் இல்லை?

அது தேவமொழிங்க.. அதை மக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தமாட்டார்கள். அப்படின்னு சொன்னீங்கனா?

ஏங்க திடீர்னு கிபி 2 ஆம் நூற்றாண்டுல மட்டும் சமசுகிருதத்துல கல்வெட்டுகள் கிடைக்குது. அப்ப அது தேவமொழி கிடையாதா?

உண்மையில் அசோகர் சமசுகிருதம் பயன்படுத்தவில்லை.

ஏனெனில் அப்பொழுது உலகில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை!!! (இதைப் பற்றியும் பல தகவல்களை நாம் விரிவாக வேறு பதிவுகளில் பார்ப்போம்).

எனவே உலகில் அப்பொழுது இருந்த மற்ற மொழிகளில் புத்தத்தை அசோகர் பரப்புகிறார்.

‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று புத்தம் பரவுகின்றது. வேகமாக!!!

சரி கிமு ஒன்றாம் நூற்றாண்டு போதும் இப்பொழுது நாம் கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு போகப் போகின்றோம்.

இடம்: தமிழகம்

சைவ வைணவச் சமயங்கள் தோன்றி இருந்தாலும் ஒருத் தெளிவின்றி இருக்கின்றன. சங்கத் தமிழ் வளர்த்த தமிழகத்திலும் சமணம் மற்றும் புத்த சமயங்கள் கடவுளை மறுத்துக் கொண்டு பரவி இருக்கின்றன.

சமண மன்னர்களும் இருக்கின்றனர்.

எனவே சமண மக்களும் இருக்கின்றனர்.

தமிழகத்திலே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிறப்பகுதிகளில் சமணம் மற்றும் புத்தம் மட்டுமே இருக்கின்றன.

இந்தக் காலத்தில் தான் மதுரையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது.

“நமச் சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க!!!” என்று மாணிக்க வாசகரின் குரல் அதோ கேட்கின்றது… போய் பார்ப்போம். அடுத்த பதிவில்…!!!

முந்தையப் பதிவு : 1 | 2

பின்குறிப்பு:

இந்தப் பதிவில் நாம் பார்த்த பலி வழிப்பாட்டு முறையினை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் பின்னர் பார்க்கப் போகும் பலப் பதிவுகளுக்கு அது முக்கியமான ஒன்றாகும்.

முக்கியச் செய்திகள்:
இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர்…!!!
வடநாட்டில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கலவரம்…!!!

என்னடா முக்கியச் செய்திகள் அப்படின்னு சொல்லிட்டு அரதப் பழசான செய்தியைச் சொல்றானேன்னு பார்க்காதீங்க!!!

அந்த செய்திகளில் ஒரு விசயம் இருக்கின்றது…!!!

கடந்த பதிவில் கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களைத் தவிர மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களை இந்துக்கள் என்று எப்படி அழைக்கத் தொடங்கினார்கள் என்றுப் பார்த்தோம்.

ஆனால் இப்பொழுது மீண்டும் முதலில் கொடுத்து இருக்கும் செய்திகளை படித்துப் பாருங்களேன்.

அந்தச் செய்திகளின்படி,
இந்து மதம் வேறு புத்த மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சீக்கிய மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சமண மதம் வேறு…!!!

அப்படி என்றால் இந்து மதம் என்றால் என்ன என்றக் கேள்வி எழுகின்றது.
அக்கேள்விக்கான விடை

இந்து மதம் என்பது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மதங்களின் தொகுப்பே ஆகும்.
இந்துக்கள் என்பவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய மதங்களை பின்பற்றியவர்களே ஆவார்கள்!!!

சைவம் மற்றும் வைணவம் பற்றி அறியாத நண்பர்களுக்குஇதோ தசாவதாரத்துல (அதாங்க கமல் படம்) இருந்து ஒருக் காட்சி

நெப்போலியன் (பாண்டிய மன்னன்) : ஓம் நமச்சிவாய என்று சொல்லிவிடு நம்பிஉனக்கு உயிர் பிச்சை அளிக்கின்றேன். (இவரு சைவம்)

கமல் (இவரு வைணவத் துறவி) : ஓம்….. நமோ நாராயணா … (இவரு வைணவம்)

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால்,
சிவனை வணங்குபவர்கள் சைவர்கள்…!!!
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள்…!!!
நிற்க…!!!

இப்பொழுது நாம் இந்து மதம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டோம்… (ஏற்கனவே தெரிஞ்ச விசயத்த தான்யா சொல்லிருக்க.. புதுசா ஏதாவது சொல்லு அப்படின்னு சொல்றீங்களா :) … சொல்லிருவோம்)

இப்பொழுது இந்து மதம்அதாவது சைவம் மற்றும் வைணவ மதங்கள் எங்கே உருவாகியன என்பதினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னாடி நீங்கள் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்இந்து மதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் என்று…!!!

உங்கள் மனதில் இமயமலை (வட நாடுஎன்ற எண்ணம் வந்ததா???
ஏன் எனில் கயிலாயம், அதாங்க சிவன் இருக்குறதா சொல்றாங்களே அந்த இடம்இமயமலையில் இருக்கின்றதுசிவனின் தலையில் இருந்து படரும் கங்கையும் அங்கேத் தான் இருக்கின்றதுவேதங்கள் என்று சொல்பவைகளும் இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..” என்றக் காரணங்களும் தோன்றியனவா!!!
நல்லது…!!!

ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!

இப்பொழுது ஒருக் கேள்வி…!!!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???

சைவத்தின் தலைமைக் கோவில்  : சிதம்பரம்தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில்திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!

மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!!

ஏங்க சமசுகிருதத்தினால் வட நாட்டினில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏங்க?

சமசுகிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமசுகிருதம் பேசப்பட்ட இடத்தில சமசுகிருதத்தை பேசியவர்களால் சமசுகிருததால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன???

பதில் கூற மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன் கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியையும் பௌத்த மதத்தினையும் சற்றுப் பார்ப்போம்.
பயணிப்போம்..!!!
முந்தையப் பதிவு : 1 |


நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.”கடவுள் இல்லை!!!”இதற்கு மாற்றுக் கருத்தே அவர்களிடம் கிடையாது. ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள்.
“கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம்!!!” என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இன்னும் சிலர் இதற்கு எல்லாம் ஒருப் படி மேலே போய் ‘நான் கடவுள்’ என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது.

கடவுள் இருக்கின்றாரா?

அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?

மனிதன் என்பவன் யார்?

அவன் படைக்கப்பட்டானா அல்லது ஒரு விபத்தினால் உருவானானா?
போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! எனவே உங்களது விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க்கப்படுகின்றன.
*********************************************************************************************************
உங்களுக்குத் தெரியுமா???

உலகில் உள்ள மதங்கள் யாவும் ஆசிய கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன. அவை கிருத்துவம், இசுலாம், சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம்.

இதில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை கடவுள் இல்லை என்றக் கொள்கையினை உடையவை.

மற்ற சமயங்கள் முழுவதும் ஆத்திக சமயங்கள்.

இதில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியத் தகவல் என்னவென்றால் உலகில் நாத்திக சமயங்கள் இந்தியாவினால் மட்டுமே தோன்றி இருக்கின்றன.

புத்தரால் தோற்றுவிக்கப் பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப் பட்ட புத்த மதம், இலங்கையில் இருக்கின்றது… சீனத்தில் இருக்கின்றது… சப்பானில் இருக்கின்றது…. ஆனால் அது பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை.

இதே நிலை தான் சமணத்திற்கும்…!!!

ஏன்?

இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்… அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன?.
இந்து மதம் என்றால் என்ன?… இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!!!

1794 …

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!!!

தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones)  முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.

கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.

இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.

ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???

“சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்…” என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.

அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.

“ஆ!!! விடை கிடைத்தாயிற்று!!!” என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே ”இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம்” என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.

“சரி… அதனால் என்ன கெட்டு போய் விட்டது” என்கின்றீர்களா… நிச்சயம் ஒன்றுமில்லை… ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…!!!

இந்து மதம் எங்கே தோன்றியது…???

“வட நாட்டில்… இமாலயத்தில்” என்கின்றீர்களா!!!

“இல்லை!!!” என்கின்றேன் நான்.

என்னுடைய கூற்றிற்கு நான் ஆதாரங்களைக் கூறும் முன் நாம் சற்று இந்து மதத்தை விரிவாகப் பார்ப்போம்!!!

பயணிப்போம் வரலாற்றினுள்…!!!


பி.கு :
மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை. நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும்,
நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில்,
அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.
தவறு என்று நினைத்தால் கூறுங்கள்… விவாதிப்போம்… நான் தவறென்றால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்!!!

இந்தச் செய்திகளை நான் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய ’குமரிக்கண்டம்’ மற்றும் ’தமிழர் சமயம்’
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.

அந்தச்செய்திகளை என்னுடைய நடையில் என்னுடைய பார்வையினையும் சேர்த்து
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு.

நன்றி!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு