மாயாவி...!!!
1980களில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் இருந்த இளம் வயதினர் நிச்சயம் இந்த பெயரைக் கேள்விப்படாது இருந்திருக்க முடியாது. அதுவும் குறிப்பாக தமிழ் காமிக்ஸ் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த அனைவராலும் தவிர்க்க முடியாத பெயராய் மாயாவி விளங்கிற்று என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அப்படி என்னயா மாயம் அந்த பெயரில் இருக்கு என்கின்றீர்களா?.
அதான் மாயாவி!!!.
காமிக்ஸ் உலகத்தில் வாத்துக்களோடும் முயல்களோடும் தவழ்ந்து கொண்டு இருந்த இளைய சமுகத்தை, எங்கள் கை பிடித்து அதிரடி சாகசங்கள் என்னும் அடுத்தக் கட்ட கற்பனை உலகத்திற்கு கூட்டிச் சென்றவர் அவர்.
சுருக்கமாகச் சொன்னால் எங்கள் தலைமுறையின் முதல் அதிரடி நாயகன் அவர் - மாயாவி.
"அது எப்படி உங்க தலைமுறையை மட்டும் சொல்லலாம்... எங்க காலத்துலையும் அவர் தான்பா நாயகன்" என்று எங்களின் முந்தைய தலைமுறையும் கூட சண்டைக்கு வரலாம். தவறில்லை. மாயாவியின் தாக்கம் அப்படி.
1980களையும் 90களையும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் என்பார்கள். அந்த காலம் எப்பொழுது தொடங்கிற்று என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் மாயாவி இன்றி அது தொடங்கி இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும். அது வரை வெள்ளித்திரையில் மட்டுமே கதாநாயகர்களை கண்டு கொண்டு இருந்த எங்களின் கைகளில் வெள்ளித்திரை காணாத நாயகர்களை காமிக்ஸ்கள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்த காலம்.
அது ஒரு கனாக்காலம்...
எப்படி வெள்ளித்திரையில் ரஜினியின் படம் என்றால் போட்ட காச எடுத்து விடலாம் என்ற உத்திரவாதம் ஒன்று இருந்ததோ அதே போல் தான் மாயாவியின் கதைகளுக்கும்.
"மாயாவி கதையா... நிச்சயம் எல்லா பிரதியும் வித்துரும்னே" என்பது தான் விற்பனையாளர்களின் கூற்றாக இருந்தது.
புத்தகம் வெளியான அன்றே 'இப்பொழுது விற்பனையில்' என்று ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் செய்யும் அளவுக்கு காமிக்ஸ்களின் தாக்கம் இருந்தது. அதுவும் மாயாவியின் தாக்கம் குறிப்பாக அதிகம் இருந்தது.
அறிந்தோ அறியாமலோ மாயாவி ஒரு புரட்சி செய்து கொண்டு இருந்தார். இல்லையா சமூகத்திடம் உள்ள படிக்கும் குணத்தை அவர் பெருக்கிக் கொண்டு இருந்தார்.
பள்ளி முடிந்து வந்த உடனே "அம்மா அம்மா ... ஒன்னா ரூபா தாங்கமா... புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்" என்று ரூபாயை கேட்டு வாங்கிக் கொண்டு விரைவாக மிதிவண்டியில் போய் புத்தகம் வாங்கிப் படித்தது இன்றும் அப்படியே ஞாபகம் இருக்கின்றது. அந்த புத்தகமும் தான். ஆனால் மாயாவி முன்பு இருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்றைய இளைய சமுதாயம் மாயாவியை புறக்கணித்துக் கொண்டு இருகின்றனர். மாயாவியை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ்களையே, ஏன் கிட்டத்தட்ட தமிழ் நூல்களையே தங்களை அறியாது புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மாயாவி இன்றும் பெருநகரங்களில் ஆங்கில புத்தக கடைகளில் ஆங்கிலம் பேசிக் கொண்டு சண்டையிட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் தமிழ் பேசிய நூல்கள் தான் எங்கோ பின் தங்கி விட்டன.
"பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்" என்றார் பாரதி.
ஆனால் இன்று இந்த இளைய சமுதாயம் நம் மொழியின் மகிமையை அறியாது நின்றுக் கொண்டு இருக்கும் காரணத்தால், நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு இருந்த நிறுவனங்கள் இன்று அந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பெயர்ந்து கொண்டு இருக்கின்றன.
எனவே தான் ஆங்கிலம் பேசும் மாயாவியை 400 ரூ கொடுத்து வாங்க ஆட்கள் இருகின்றார்கள். ஆனால் 4 ரூ கொடுத்து தமிழில் வாங்க ஆட்கள் யாருமில்லை.
இந்த பதிவு என்னுடைய கற்பனை உலகில் நான் கடந்த கதாநாயகர்களை பற்றியே... என்னை அதிரடி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த மாயாவியை விட்டு விட்டு வேறு யாரைப் பற்றியும் எழுதத் தொடங்க மனம் ஒத்துழைக்கவில்லை. எனவே இதோ மாயாவியை பற்றிய ஒரு சிறு பதிவு. தங்களின் சிறு வயதை மாயாவியோடு கடந்தவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சின்னத் திரும்பிப் பார்க்கும் படலமாக இருக்கும். மாயாவியை அறியாதவர்களுக்கோ அவரை நான் அறிமுகம் செய்து வைக்கும் படலமாக இருக்கும்.
ஆரம்பிக்கும் முன் என்னை மாயாவிக்கு அறிமுகம் செய்து வைத்து என்னை காமிக்ஸ் உலகத்திற்குள் குறைந்த செலவினுள் உலாவ வைக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸிக்கு எனது நன்றிகள்.
இதோ பெங்காலியாவின் கானகத்தின் வெளியே நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். உள்ளே எங்கேயோ ஒரு மண்டை ஓட்டுக் குகையுள் சுற்றியும் விஷ அம்புடன் குள்ளர்கள் காவல் காக்க நம்மளை எதிர்ப் பார்த்து மாயாவி காத்துக் கொண்டு இருகின்றார்.
பயணிப்போம்.....
ஒரு வேண்டுகோள் :
அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பை உடைய இன்றைய பெற்றோர்களுக்கும் உழைக்கும் தலைமுறைக்கும்... உங்களின் பிள்ளைகளுக்கு ஒரு நல்லத் தோழனை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நல்ல புத்தகத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அவன் எங்கே இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி அந்த புத்தகங்கள் அவனுக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்கும். நல்ல புத்தகங்கள் எந்த மொழியில் இருந்தாலும் தவறில்லை ... ஆனால் அவனது தாய் மொழியில் இருந்தால் இன்னும் சிறப்பாக அவன் மனதில் பதியும்.