என்னுடைய மூன்றாவது மொழிபெயர்ப்பு நூல். தஸ்தோவஸ்கி, மனித உணர்வுகளையும் மனித இயல்புகளையும் மிகவும் துல்லியமாக தன்னுடைய எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலினைப் பெற்ற ஒரு மாபெரும் எழுத்தாளர். ஒரு மனிதனின் ஆன்மாவினுள் நிகழப்பெறும் போராட்டங்களே அவரது கதைகளின் அடிப்படை அம்சமாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த கலைஞருடைய இரண்டு சிறுகதைகளைத் தான் இந்த நூலினில் மொழிபெயர்த்து இருக்கின்றேன்.

'தலைமை விசாரணையாளன்' என்கின்ற அந்த முதல் சிறுகதையானது 'கரமசெவ் சகோதரர்கள்' என்ற தஸ்தோவஸ்கியின் உலகப்புகழ் பெற்ற நூலில் வருகின்ற ஒரு சிறு பகுதியாகும். இயேசு இந்த உலகிற்கு மற்றொருமுறை வந்தால் என்னவாகும் என்ற ஒரு சிறு மையப்புள்ளியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, மனித வரலாறு, மனித இயல்புகள், மனிதர்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் என்று மிகவும் முக்கியமான விடயங்களைக் குறித்து தஸ்தோவஸ்கி அவர்கள் இந்த பகுதியில் தெளிவாக விளக்கியுள்ளார். அதுவும் குறிப்பாக எவ்வாறு திருச்சபைகள் இயேசுவின் பேரைக் கூறிக் கொண்டே அவருக்கு எதிராக இருக்கின்றன என்பதனையும் மனிதர்களை அவை எவ்வாறு ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன என்பதனையும் அவர் திறம்பட இந்த கதையின் வாயிலாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இறைவனை மூன்று கேள்விகள் மூலமாக சாத்தான் சோதித்ததாக விவிலியத்தில் வருகின்ற பகுதியினை ஒரு கதையினைப் போன்றே தான் கிருத்துவர்களும் கூட இன்று கேட்டு விட்டு நகன்று சென்று கொண்டிருக்கின்றனர். இறைவனை சாத்தானால் சோதிக்க முடியுமா? அவ்வாறு இருக்கையில் இறைவனை சாத்தான் சோதித்தது என்றால் அதன் மெய்யான அர்த்தம் என்ன? என்பன போன்ற கேள்விகள் இங்கே பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமலே இருந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் மிகவும் முக்கியம் வாய்ந்த அந்த மூன்று கேள்விகளை அடிப்படையாக வைத்தே மனித இயல்புகளையும், மனிதனிடம் இருந்து இறைவன் எதனை எதிர்பார்கின்றான் என்பதனையும் தஸ்தோவஸ்கி அவர்கள் இந்நூலில் விளக்க முற்பட்டு இருக்கின்றார். அர்த்தம் நிறைந்த அவரது அந்த முயற்சிக்கு, கிருத்துவர்களும் சரி வாழ்வென்றால் என்னவென்ற தேடலினைக் கொண்டவர்களும் சரி, நாத்திகர்கள்/பொதுவுடைமைவாதிகளும் சரி தங்களது கவனத்தினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

முதல் கதையினைப் போன்றே இரண்டாவது கதையும் வாழ்வின் அர்த்தத்தினைப் பற்றியே தான் அமைந்திருக்கின்றது. வாழ்வென்பது அர்த்தமற்ற ஒன்று என்கின்ற சிந்தனையின் விளைவாக தற்கொலை செய்து கொள்ள ஒரு மனிதன் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். அத்தகைய ஒருவன் வாழ்வின் அர்த்தத்தினை அறிந்துக் கொள்வதே 'கேலிக்குரிய மனிதனின் கனவு' என்கின்ற சிறுகதையின் சாராம்சமாக இருக்கின்றது. வாழ்வென்றால் என்ன? மரணத்திற்கு பின்னர் ஏதேனும் இருக்கின்றதா? பிறப்பு இறப்பு என்கின்ற இரு கால இடைவெளிகளுக்கு நடுவே இருந்து கொண்டிருக்கின்ற வாழ்வென்ற ஒன்றிற்கு அர்த்தமேதும் இருக்கின்றதா? ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? என்கின்ற கேள்விகளையும் அதற்கான தன்னுடைய பதில்களையும் தற்கொலை செய்து கொள்ள சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாயிலாக தஸ்தோவஸ்கி அவர்கள் தன்னுடைய இந்த சிறுகதையில் வெளிப்படுத்தி இருக்கின்றார். தற்கொலைகளும் அர்த்தமேதுமின்றி கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகளும் பெருகி இருக்கும் இன்றைய சூழலில், தஸ்தோவஸ்கி அவர்கள் தன்னுடைய இந்த நூலில் வெளிப்படுத்தி இருக்கின்ற சிந்தனைகள், வெறும் ஒரு கதையில் வருகின்ற விடயங்கள் என்கின்ற நிலையினைத் தாண்டி மனிதர்களின் வாழ்விற்கும் சரி சிந்தனைக்கும் சரி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்பு : 044 24332424 24332924

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு