அவர்களை நிச்சயம் பாராட்டி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது. ஆம். கண்டிப்பாக பாராட்ட வேண்டித் தான் இருக்கின்றது. இல்லாவிடில் மக்கள் அனைவரும் சுயநலத்துடன் தங்களையும் தங்களது குடும்பத்தையும் மட்டுமே கண்டுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இக்காலத்தில் ஆன்மீகப் பண்டிகைகளை முன்னின்றி நடத்தி மக்களுக்கு ஆன்மீக தெளிவை தர முயற்சிக்கும் இவர்களது முயற்சிகளை நாம் பாராட்டித் தீரத் தான் வேண்டி இருக்கின்றது.
அதுவும் சமீப காலங்களில் இவர்களின் வேலைகள் மிகவும் சமூகத்தில் பெருகி இருக்கின்றன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. இதுவரை இல்லாத அளவில் வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது சமீப காலங்களில் தமிழகத்தின் தெருக்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும் நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம். இப்பேற்பட்ட மாற்றத்தை நிகழ்த்த அவர்கள் எவ்வளவு முயற்சியினை மேற்கொண்டு இருக்க வேண்டும். நினைக்கையிலேயே ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது. இங்கே நம்மை மேலும் ஆச்சர்யப்படவும் பெருமிதம் கொள்ளவும் செய்வது யாதென்றால் விநாயகரை சிறப்பித்து கொண்டாடப்படும் விழாவில் விநாயகரைப் பற்றி மற்றும் மக்கள் அறிந்துக் கொண்டால் போதாது, மாறாக மற்ற சமயத்தைப் பற்றியும் அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கில் மற்ற சமயத்தினைப் பற்றியும் அவர்கள் மக்களிடம் கருத்துகளைத் தெரிவிப்பது தான்.
உதாரணமாக நேற்று எனது வீட்டிற்கு அருகே வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு முன்னர் சமயங்களைப் பற்றிப் பேசும் பொழுது தோழர்கள் சிலர்
"நம்மகிட்ட மட்டும் தான் மூட நம்பிக்கைகள் இருப்பது போல் பேசுகின்றார்கள்...இசுலாமியர்களிடம்
மூட நம்பிக்கை கிடையாதா? நம்மகிட்ட மட்டும் தான் சாதி பிரிவு இருக்கா
அவங்ககிட்ட இல்லையா? இசுலாமியர்களிடமும் கிருத்துவர்களிடமும் எத்தனைப்
பிரிவுகள் இருக்கின்றன என்று தெரியுமா...இந்துக்கள் நாம் அமைதியாக இருப்பதனால் நம்மை மட்டும் அனைவரும் குறைக் கூறிக் கொண்டு இருக்கின்றனர்" என்றவாறே இசுலாமியச் சமயத்தைப் பற்றியும் கிருத்துவ சமயத்தைப் பற்றியும் ஆன்மீகக் கருத்துக்களை மக்கள் அறிந்துக் கொள்ளுமாறு கூறி இருக்கின்றனர்.
மக்கள் அனைவரும் அனைத்து சமயங்களைப் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் மேற்கொண்ட இச்செயலை நாம் பாராட்டித் தான் ஆக வேண்டி இருக்கின்றது. ஆனால் பாராட்டி விடுவதுடன் நின்று விடுவதில் ஏனோ மனம் அமைதி கொள்ள மாட்டேன் என்கின்றது. அவர்கள் எவ்வளவு கடினப்பட்டு தகவல்களை திரட்டிக் கொண்டு மக்களிடத்து சேர்கின்றனர். இந்நிலையில் நாமும் அவர்களுக்கு உதவியாக கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்வது தானே முறையாகும். அதுவும் அவர்களுக்கு இருந்த அவசரத்தில் சில தகவல்களை அவர்கள் தெரியாது தவறாகக் கூறி இருக்கின்ற படியினால் அவற்றையும் சரி செய்வது என்பது நம்முடைய கடமையாக அமைகின்றது.
அந்தக் கடமையைத் தான் நாம் இப்பொழுது மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
முதலில் அவர்கள் கூறிய கருத்துக்களில் இருக்கும் உண்மையான விடயங்களைக் கண்டு விடுவோம். அவர்கள் கிருத்துவ சமயத்திலும் இசுலாமியச் சமயத்திலும் பிரிவுகள் உண்டென்று கூறி இருக்கின்றனர்.
மிகத் தெளிவான உண்மை. ஆம் அச்சமயங்களில் பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. அப்பிரிவுகளுக்குள் போர்களும் சண்டை சச்சரவுகளும் இருந்துக் கொண்டே இருப்பதை நாம் வரலாற்றிலும் சரி இன்றைய செய்திகளிலும் சரி கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்.
உதாரணத்திற்கு இசுலாமியர்களின் இரு பிரிவினரான சியா பிரிவினருக்கும் சுன்னி பிரிவினருக்கும் இடையே நடக்கும் சண்டைகளும் படுகொலைகளும் இன்றும் மத்திய ஆசிய நாடுகளில் இக்கட்டினை உண்டு பண்ணிக் கொண்டு தான் இருக்கின்றன.
அதனைப் போன்றே தான் கிருத்துவத்தின் பல்வேறு பிரிவுகளாக விளங்கும் 'இரோம கத்தோலிக்கச் திருச்சபை', 'சமய சீர்திருத்த வாத திருச்சபை' போன்ற பிரிவுகளுக்குள் நிகழும் கருத்து வேறுபாடுகளும் சண்டைச் சச்சரவுகளும் வரலாற்றில் நிறைந்து உள்ளன.
எனவே இத்தகவல்களை மிகவும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளனர். ஆனால் இதில் பிழையை அவர்கள் எங்கே விட்டு உள்ளனர் என்றால் அச்சமயப் பிரிவுகளுடன் சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகப் பிரிவினை ஒப்பிட்டுக் கூறி உள்ளனர்.
இசுலாம், கிருத்துவ சமயங்களில் இருப்பது சமயப் பிரிவுகள்
சாதி ஏற்றத்தாழ்வு என்பது சமூகப் பிரிவு
இதனை ஒப்பிடுவது என்பது சரியானதொரு செயலாக அமையாது. மாறாக சமயப் பிரிவுகளை சமயப் பிரிவுகளுடன் ஒப்பிடுவதே சரியான செயலாக இருக்கும். அப்படிப் பார்க்கையில் இந்து சமயத்தில் பிரிவுகள் உள்ளனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.
அவ்வாறு காணுகையில் நமக்கு இரண்டு விடயங்கள் விடையாகக் கிடைக்கின்றன.
1. ஆம் இன்று இந்து சமயம் என்று வழங்கப்படுவதில் பிரிவுகள் பல இருக்கின்றன.
2. அவைகள் பிரிவுகள் அல்ல...மாறாக தனித்தனியாகயும் ஒன்றை ஒன்று மறுத்துக் கொண்டும் இருந்த பல்வேறு சமயங்களும் தத்துவங்களும் ஆகும்.
இவ்விடைகளைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
இன்று இந்து சமயம் என்று வழங்கப்படுவது தனித்தனியாக இருந்த ஆறு சமயங்கள் மற்றும் பல்வேறு தத்துவங்களின் கூட்டே ஆகும் என்றே கூறி இருக்கின்றோம். அச்சமயங்கள் யாதென்றால்,
சைவம்
வைணவம்
சாக்தம்
கௌமாரம்
காணபத்தியம்
செளரம்
இவைகள் சமயப் பிரிவுகள். இவற்றைத் தவிர தத்துவப் பிரிவுகளும் உள்ளன.
அத்வைதம் - ஆதிசங்கரர் வேதாந்தத்திற்கு தந்த விளக்கவுரை
விசிட்டாத்வைதம் - ராமானுசர் வேதாந்தத்திற்கு தந்த விளக்கவுரை. இது அத்வைதத்தை மறுக்கும்.
துவைதம் - மாத்வர் வேதாந்தத்திற்கு தந்த விளக்கவுரை. இதுவும் அத்வைதத்தை மறுக்கும்.
சைவ சித்தாந்தம் - இது மேலே கூறிய அனைத்துத் தத்துவங்களையும் மறுக்கும்.
மேலும் சைவ சித்தாந்தமானது சமயங்களை நான்கு விதமாகக் பிரிக்கின்றது.
1. அகச் சமயம் - தன்னுடைய கருத்துக்களை அனைத்து விதத்திலும் ஏற்றுக் கொண்ட சமயங்கள். அவை
- சைவவாதி
- பாடாணவாதி
- சிவசமவாதி
- சங்கிராகதவாதி
- ஈகர அவிகாரவாதி
- நிமித்தகாரண பரிணாமவாதி
2. அகப்புறச் சமயம்
- பாசுபதம்
- மாவிரதம்
- காபாலம்
- வாமம்
- பைரவம்
- ஐக்கியவாத சைவம்.
3. புறச் சமயம் - தன்னுடைய கருத்துக்களுக்கு எதிர் மாறான கருத்துக்களைக் கொண்டவை
- நியாயம்
- சாங்கியம்
- யோகம்
- மீமாஞ்சை
- ஏகான்மவாதம் (ஆதி சங்கரரின் கொள்கை)
- பாஞ்சராத்திரம்
4. புறப்புறச் சமயம் - முற்றிலும் எதிரான கருத்தினைக் கொண்டவை
- உலகாயதர்
- சமணர்
- செளத்திராந்திகர்
- யோகசாரர்
- மாத்யமிகர்
- வைபாடிகர்
நிற்க. இவை அனைத்தும் முக்கியமான விடயங்கள்...இவற்றைப் பற்றி நாம் விரிவாகத் தான் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் இப்பொழுது அவ்வளவு விரிவானத் தகவல்கள் இங்கே தேவை இல்லை.
இங்கே நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், பல்வேறு சமயங்களும் தத்துவப் பிரிவுகளும், அவைகள் கொள்கையின் அடிப்படையில் வேறுபட்டு நின்று இருந்தாலும் அவைகள் அனைத்தையும் இந்து சமயம் என்ற ஓர் பெயரின் கீழ் இன்று வைத்து இருக்கின்றனர். இது நிகழ்ந்தக் காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு.
- சைவமும் வைணவமும் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவை
- அவை ஆதி சங்கரரின் 'நான் கடவுள்' என்ற நாத்திகக் கொள்கைக்கு மாறானவை (அதனால் தான் சைவம் அதனை புறச் சமயமாகக் கொண்டு உள்ளது)
- சைவம் இறைவன் உலகிற்கு ஒரே ஒரு முறை தான் வந்தான் என்று கூறும். அது வைணவம் இன்று கூறும் 10 அவதாரங்களை ஏற்றுக் கொள்ளாது. சைவத்தின் கருத்தின் படி பெருமாள் என்பது சக்தியின் ஆண் வடிவமே. அதாவது சக்தி என்ற கடவுளும் இல்லை பெருமாள் என்ற கடவுளும் இல்லை என்பதே.
- இத்தத்துவங்களுக்கும் வருணாசிரம தர்மத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
- ஏன் பிராமணர்கள் பெருமையாகப் பேசும் வேதத்தில் சைவ வைணவ கடவுளரின் பெயர்களே கிடையாது.
அவ்வாறு இருக்க சைவ வைணவ சமயங்கள் இன்று சாதி ஏற்றத்தாழ்வுகளில் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆதி சங்கரரை சிறப்பாகக் கொண்டுள்ள பிராமணர்கள் அவரது கொள்கையை மறுத்த சைவ வைணவ சமயத்தை கையில் வைத்து இருக்கின்றனர். அது ஏன் என்றும் சமயங்களைப் பற்றிப் பேசும் தோழர்கள் கூறினால் நன்றாக இருக்கும். அவ்வாறே சைவ அறிஞரான திரு.கா.சு.பிள்ளை அவர்களே உண்மையில் இந்து சமயம் என்ற ஒரு சமயமே கிடையாது என்று கூறி இருப்பதைப் பற்றியும் அவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கத்தான் செய்யும்.
ஆனால் இதை எல்லாம் செய்யாமல் 'இந்து மதம்' 'இந்து மதம்' என்று கூறி மக்களை கூட்டமாகச் சேர்ப்பது என்பது ஓர் ஏமாற்றுச் செயல் தான் ஆகும்.
பி.கு:
மேலே கூறியுள்ள தத்துவங்களைப் பற்றி விரிவாக வேறு பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.