இயேசுவை யூதர்கள் கொன்றதற்கான காரணம் யூத தேசியம் தான் என்றே நாம்  கொண்டிருக்கின்றோம். நாம் அவ்வாறு கூறுவதற்கு சான்றாக, இப்பொழுது இரண்டாவது நிகழ்வினை நாம் காண வேண்டியிருக்கின்றது.

இரண்டாவது நிகழ்வு : இயேசுவை கிரேக்கர்கள் சந்திக்க விரும்புதல் 

யூதர்களின் பஸ்கா பண்டிகையின் பொழுது இயேசு மீண்டும் எருசலேம் நகருக்குச் செல்லுகின்றார். அது பண்டிகை காலம் என்பதினால் எருசலேம் நகரில் யூத மக்களுடன் பல்வேறு இன மக்களும் இருக்கின்றனர். அங்கே அவர் மக்களுக்கு போதனைகள் செய்ய ஆரம்பிக்கின்றார். அப்பொழுது அங்கிருந்த கிரேக்க மக்களுள் சிலர் இயேசுவைத் தாங்கள் சந்திக்க விரும்புவதாக பிலிப்பிடம் கூறுகின்றனர். இங்கே தான் நாம் பிலிப்பின் செயலினைக் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

இயேசுவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று கிரேக்கர்கள் தன்னிடம் கேட்டதற்கு ஒன்று 'சரி' என்று சொல்லிவிட்டு அவர்களை இயேசுவிடம் பிலிப்பு அழைத்துச் சென்றிருக்கலாம், அல்லது 'இல்லை' என்று மறுத்திருக்கலாம். ஆனால் பிலிப்பின் செயலோ வேறாக இருக்கின்றது. பிலிப்பு முதலில் தயங்குகிறான் - பின்னர் கிரேக்கர்கள் இயேசுவை சந்திக்க விருப்பம் தெரிவிப்பதாக அந்திரேயுவிடம் அவன் கூறுகின்றான். பின்னர் அவர்கள் இருவருமாய் சென்று இயேசுவிடம் அந்த கிரேக்க மக்களைப் பற்றி கூறுகின்றனர். மேலும், கிரேக்கர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக தன்னுடைய சீடர்களிடமிருந்து கேள்விப்பட்ட இயேசுவின் செயல்களும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. அவர் கலக்கமடைகின்றார், பின்பு தன்னுடைய மரணத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பிக்கின்றார். தான் மரணமடைவதற்கான தருணம் நெருங்குவதனை அறிந்தவராய், மனிதர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வினை பெரிதாக எண்ணக் கூடாது என்றும் அதனை இழப்பதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றுமே அவர் கூறுகின்றார். அதாவது கிரேக்கர்கள் தன்னைச் சந்திப்பதற்கு விரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வதற்கு முன்பு இயல்பாக இருக்கின்ற அவர், அந்த விடயத்தினை அறிந்து கொண்டதற்குப் பின்னர் கலக்கமடைகின்றார். ஏன் அவர் அவ்வாறு கலக்கமடைய வேண்டும்? ஏன் அவர் அவ்வாறு மாற வேண்டும்?

முதலில் சீடர்கள் தயங்குகின்றனர். கிரேக்கர்கள் இயேசுவை சந்திப்பதில் ஏன் அந்த சீடர்களுக்கு அவ்வளவு தயக்கம்? பின்னர் இயேசுவே கலங்குகிறார்...ஏன் அவர் அவ்வாறு மாறுகின்றார்?

இந்த கேள்விகளுக்கு விடை எளிதானதொன்று தான். யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் மட்டுமே தான் இறைவனுக்கு உரியவர்கள். மற்ற இனத்தவர்களை அவர்கள் புற ஜாதியினராக - தகுதி குறைந்தவர்களாக கருதி வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இறைவனிடம் இருந்து வரும் தீர்க்கத்தரிசிகள் யாவரும் யூதர்களுக்காக மட்டுமே வருபவர்கள். மற்ற இன மக்கள் இறைவனை அறியாதவர்கள் எனவே அவர்களுக்கு இறைவன் உதவ மாட்டார் - இதுவே தான் யூதர்கள் கொண்டிருந்த நம்பிக்கை.

இந்நிலையில் தான் நாம் இயேசுவை சந்திக்க வேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பிய அந்த சூழலினைக் காண வேண்டியிருக்கின்றது. லாசருவை உயிர்த்தெழ செய்ததால் இயேசுவின் புகழ் மக்களிடம் அதிகமாக பரவியிருக்கின்றது. தங்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு தங்களுடைய இராஜ்யத்தை மீண்டும் வென்று தருவதற்கு வந்திருக்கும் மீட்பர் அவர் தான் என்கின்ற நம்பிக்கையும் யூத மக்களிடம் பரவலாக பரவியிருக்கின்றது. எனவே ரோமர்களின் பிடியில் இருந்து அவர்களை மீட்டு அவர்களது இராஜ்யத்தை தரப்போகின்ற அந்த 'மீட்பரை'க் காணவும் அவர் கூறுவதைக் கேட்கவும் அவர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால் இங்கே ஒரு சின்ன சிக்கல் இருக்கின்றது. யூத இன மீட்பர் யூத மக்களுக்கு மட்டுமே உரியவர். யூதர்களின் நம்பிக்கை வரலாறுதோறும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது. ஏனென்றால் அவர்களது கூற்றின்படி அவர்கள் மட்டுமே தான் இறைவனை அறிந்திருக்கின்றார்கள் - மற்ற இன மக்கள் எல்லாம் இறைவனை அறியாமல் சிலை வழிபாடு செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசு யூத மக்களால் புற ஜாதியினர் என்று கருதப்படுகின்ற கிரேக்கர்களையும் யூதர்களுக்கு சமமாக மதித்து அவர்களுக்கும் போதித்தார் என்றால், 'என்ன இவர்...மற்ற இன மக்களுக்கும் போதனை செய்கின்றாரே...அவர்களையும் சமமாய் நடத்துகின்றாரே...இறைவனை அறியாத அவர்களுடன் இவர் தொடர்பு கொள்கின்றார் என்றால் இவர் உண்மையிலேயே நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் தானா? இல்லையேல் நம்முடைய மதகுருக்கள் கூறுவது போல இவர் இறைவனுக்கும் யூதர்களுக்கும் விரோதமானவரா?' என்ற எண்ணம் நிச்சயமாய் அங்கிருந்த யூத மக்களுக்குள் எழத்தான் செய்யும். யூதர்களும் மற்ற மக்களும் சமமே என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காகவே இயேசுவை அந்த மக்கள் வெறுக்கவும் வாய்ப்பிருக்கத் தான் செய்கின்றது.

இயேசுவின் சீடர்கள் அதனை அறிந்து தான் இருந்தனர். அதனாலேயே தான் அவர்கள் இயேசுவிடம் கிரேக்க மக்களின் அந்த விருப்பத்தைக் கொண்டு செல்வதற்கு யோசிக்கின்றனர். இருந்தும், அவர்கள் முடிவில் இயேசுவிடம் கிரேக்கர்களின் அந்த விருப்பத்தைக் கூறத்தான் செய்கின்றனர்.

இயேசுவின் அதனை அறிந்தே தான் இருந்தார். கிரேக்கர்களுக்கும் போதித்தால் யூத மக்கள் தன்னை வெறுக்கக் கூடும் என்பதனை அவர் தெளிவாக அறிந்திருந்தார். மேலும் அதனை அடிப்படையாக வைத்தே யூத மதகுருக்கள் மக்களை தண்னிடமிருந்து பிரிப்பர் என்பதனையும் அவர் அறிந்திருந்தார். ஏற்கனவே 'ரோமர்களிடம் பணிபுரிகின்ற வரி வசூலிக்கும் யூதர்களுடன் நெருங்கிப் பழகுகின்றார்' என்று அவர் மீது யூத சமய மதகுருக்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கிரேக்கர்களுக்கும் இயேசு முக்கியத்துவம் தந்து அவர்களுக்கும் போதனை செய்தார் என்றால் நிச்சயமாக அதனை வைத்தே 'இவன் நம்மை மீட்க வந்த மீட்பர் அல்ல. இவன் யூத இன துரோகி. ஏதோ தீய சக்தியின் ஆற்றலினால் இவன் அதிசயம் செய்கின்றான். இவன் யூதர்களைப் பிரிக்கின்றான்' என்று கூறி மக்களை தனக்கு எதிராக அவர்கள் திருப்புவர் என்பதனை அவர் அறிந்திருந்தார்.

எனவே தான் அந்த நேரத்தில் இயேசு கலக்கமடைந்தார். தன்னை கொலை செய்வதற்கு யூத மதகுருக்கள் ஆயுத்தமாகி விட்டனர் என்பதனை அவர் அறிந்திருந்தார். லாசருவை மரணத்திலிருந்து அவர் எழுப்பிய பொழுதே அவர் அதனை அறிந்திருந்தார். இப்பொழுதோ, கிரேக்கர்களுக்கும் சேர்த்து தான் போதனை செய்தால், அதனைக் காரணமாக வைத்தே மக்களை யூத மதகுருக்கள் தம்மிடமிருந்து பிரித்து விடுவர் என்பதனையும் அவர்கள் அவ்வாறு பிரித்து மக்களை குழப்பி விட்டால் தன்னைக் கொல்வது அவர்களுக்கு மேலும் எளிதாகி விடும் என்பதனையும் அவர் அறிந்திருந்தார். தான் மரணமடைய வேண்டிய தருணம் அருகில் வந்து விட்டதை அவர் உணர்ந்தார். ஏனென்றால் நிச்சயமாக கிரேக்கர்களை அவரால் புறக்கணிக்க முடியாது - மக்கள் அனைவரும் சமமே, இறைவனின் முன்னே பல்வேறு தேசங்கள் என்ற பிரிவினைகள் எதுவும் கிடையாது என்கின்ற அவரது போதனைகளுக்கு ஏற்ப அவரால் நிச்சயம் கிரேக்கர்களைப் புறக்கணிக்க முடியாது. யூதர்கள் நம்பியது போல அவர் யூதர்களின் மீட்பராக வரவில்லை மாறாக உலக மீட்பராகவே வந்திருந்தார். எனவே கிரேக்கர்களை அவரால் புறக்கணிக்க முடியாது. கிரேக்கர்களை அவர் புறக்கணிக்காவிட்டால் நிச்சயமாக மக்களை அவருக்கு எதிராக யூத மதகுருக்கள் திருப்பி விடுவார்கள். அந்நிலையில் தான் மரணமடைய வேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டதை அவர் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஆகவே தான் ஒரு மனிதனாய் அவர் கலக்கமடைகின்றார். தன்னுடைய மரணத்தைப் பற்றியும் பேசுகின்றார். நிற்க.

இயேசுவை கொலை செய்தது யூத தேசியமே என்றே நாம் இந்த பதிவில் கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். அதற்கு சான்றாய் இரண்டு நிகழ்வுகளையும் கண்டு இருக்கின்றோம். 'தேச நலனுக்காகவும் தேச மக்களின் ஒற்றுமைக்காகவுமே தான் இயேசுவை கொலை செய்ய யூத சமய மதகுருக்கள் முடிவெடுக்கின்றனர் என்பதனை முதலாம் நிகழ்வில் கண்டோம். அவ்வாறே யூதர்களை மற்ற இனமக்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காததால் தான் மரணம் அடைய நேரிடும் என்று இயேசு அறிந்து கொண்டதை இரண்டாவது நிகழ்வின் மூலமாக கண்டோம்.

இதன் மூலமாக 'எங்கள் தேசம் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்...மற்ற மக்களும் நாங்களும் ஒன்றல்ல' என்று இருக்கின்ற அந்த தேசியச் சிந்தனையே தான் இயேசுவைக் கொன்றது என்பதனை நாம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் வருத்தகரமாக கிருத்துவ மக்கள் இதனை அறிந்து கொள்வதில்லை. மக்களைப் பிரித்து வைக்கின்ற அந்த தேசியச் சிந்தனைகளையையே அவர்களும் போற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சிந்தனையே இயேசுவை கொலை செய்திருந்த போதிலும், அவர்கள் இன்றும் கூட இயேசுவை கொலை செய்த அந்த கொள்கையையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்ற கொள்கையினை, அதாவது ஒரு தேசத்தைச் சார்ந்தவர்கள் மற்ற தேசத்தைச் சார்ந்தவர்களை விட உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சமமானவர்கள் அல்ல என்றும் எண்ணிக் கொள்ளுகின்ற தேசியக் கொள்கையினை எந்த கிருத்துவன் ஏற்றுக் கொள்ளுகின்றானோ, அது இஸ்ரேலை ஆதரிக்கும் தேசியமாக இருக்கட்டும், அமெரிக்க தேசியமாகட்டும், இந்திய தேசியமாகட்டும், தமிழ் தேசியமாகட்டும், அவன் "பரபாஸை விடுதலை செய்...இயேசுவை தூக்கில் போடு" என்று கோஷமிட்ட யூதனாகவே இருக்கின்றானே ஒழிய இயேசு கூறிய கிருத்துவனாக இருக்கவில்லை. இது நிச்சயம். இயேசு கூறிய வழிகளின்படி வாழுகின்ற ஒருவனால் நிச்சயமாக தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் ஒருபோதும் காண முடியாது. அவ்வாறு வேறுபாடுகள் காண்பவர்களால் இயேசு கூறிய வழிகளின்படி வாழ முடியாது.

ஏனென்றால் தேசியம் மக்களைப் பிரிக்கின்றது...ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துகிறது.

காந்தியை கொலை செய்கின்றது...
ஹிட்லர் போன்றவர்களை வளர செய்கின்றது...
தேசங்களுக்கு இடையே யுத்தங்களை வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட ஒன்றை ஒரு கிருத்துவன் ஆதரிக்கின்றான் என்றால் அவன் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.

"பரபாஸை விடுதலை செய்...இயேசுவை கொலை செய்..." என்று கூறிய யூதர்களைப் போன்றே அவனும் இயேசுவை கொலை செய்த ஒன்றினை ஆதரித்துக் கொண்டிருக்கின்றான்...இயேசுவை அவனும் கொலை செய்து கொண்டிருக்கின்றான்.

காரணம் - தேசியக் கொள்கையே இயேசுவை கொலை செய்தது!!!

பி.கு:

மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு