கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள், கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

தன்னுடைய மகனுக்கு ரொட்டிக்குப் பதிலாக கல்லையோ அல்லது மீனுக்கு பதிலாக பாம்பையோ தரும் தந்தையானவன் எங்காவது இருக்கின்றானா? தீய மக்களாகிய நமக்கே நம்முடைய குழந்தைகளுக்கு வேண்டியதனை எவ்வாறு தர வேண்டும் என்று தெரிந்து இருக்கையில் எவ்வாறு விண்ணுலகத்தில் இருக்கும் உங்களது தந்தையானவருக்கு நீங்கள் அவரிடம் கேட்கும் பொழுது உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியவற்றை தராது இருக்க இயலும்? கேளுங்கள், கேட்பவருக்கே வாழ்விற்குரிய ஆவியை பரலோகத் தந்தையானவர் தருகின்றார். 

வாழ்விற்குரிய பாதை குறுகலானதாக இருக்கின்றது. ஆனால் அந்தக் குறுகிய வழியினிலேயே தான் நீங்கள் நுழைய வேண்டி இருக்கின்றது. வாழ்விற்குள் நுழைய ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. அது குறுகலானதாகவும் நெரிசலானதாகவுமாய் இருக்கின்றது. அவ்வழியைச் சுற்றி இருக்கும் இடமோ பரந்து விரிந்துக் கிடக்கின்றது. ஆனால் அது அழிவிற்கே இட்டுச் செல்லுகின்றது. குறுகலான பாதையே வாழ்விற்கு இட்டுச் செல்லுகின்றது. ஒரு சிலரே அவ்வழியைக் கண்டுப் பிடிக்கின்றனர்.

இருந்தும், அஞ்சாதீர்கள் சிறு மந்தைகளே! தந்தை பரலோக இராஜ்யத்தை உங்களுக்கு கொடுக்க விருப்பமாக இருக்கின்றார். போலி தீர்க்கத்தரிசிகளைக் குறித்தும் போதகர்களைக் குறித்துமே எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலினைப் போர்த்திக் கொண்டே உங்களிடம் வருகின்றனர். ஆனால் அடிப்படையில் அவர்கள் வேட்டையாடும் ஓநாய்களாகவே இருக்கின்றனர். அவர்களது செயல்களில் இருந்து பெறப்படும் கனிகளின் வாயிலாகவே அவர்களை நீங்கள் அறிந்துக் கொள்வீர். முட்செடிகளில் இருந்து திராட்சைப் பழத்தையோ அல்லது முட்பூண்டுகளில் இருந்து அத்திப்பழத்தையோ ஒருக்காலும் உங்களால் பெற முடியாது. நல்ல மரமானது நல்ல கனியைத் தரும். தீய மரமோ தீய கனியையே விளைவிக்கும். எனவே அவர்களின் போதனைகளின் கனிகளில் இருந்தே நீங்கள் அவர்களை அறிந்துக் கொள்வீர்.

ஒரு நல்ல மனிதன் தனது மனதில் இருந்து நல்லவனவற்றையே வெளிப்படுத்துகின்றான். ஆனால் ஒரு தீய மனிதனோ தனது தீய இதயத்தில் இருந்து தீயவற்றையே உருவாக்குகின்றான். எனவே எந்த ஒரு ஆசிரியன் பிறருக்குத் துயரம் தரும் செயல்களை உங்களைச் செய்யச் சொல்லி சொல்லுகின்றானோ அவனைப் போலி ஆசிரியன் என்றே அறிந்துக் கொள்ளுங்கள். உதாரணமாக யுத்தம், வன்முறை, தண்டனைகள் போன்றவை உங்களுக்கு துயரத்தை உண்டாக்கும். அவ்வாறு இருக்க அச்செயல்களை ஒருவன் பிறருக்கு செய்ய சொல்லி உங்களுக்கு சொல்லுவான் என்றால் அவன் போலி ஆசிரியன் என்றே அறிந்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் எவன் ஒருவன் 'கர்த்தரே...கர்த்தரே' என்று கூறுகின்றானோ, அவன் பரலோக இராஜ்யத்தினுள் நுழைவது இல்லை. மாறாக எவன் ஒருவன் பரலோகப் பிதாவின் சித்தத்தை செய்கின்றானோ அவனே பரலோக இராஜ்யத்தினுள் நுழைகின்றான்.

"கர்த்தரே...கர்த்தரே...உம்முடைய நாமத்தினாலே பேய்களை விரட்டினோம் அல்லவா...உம்முடைய போதனைகளின்படியே போதித்தோம் அல்லவா.." என்றே அவர்கள் கூறுவர். ஆனால் நான் அவர்களின் குரலுக்குச் செவி கொடுக்காது திரும்பி "ஒருபோதும் நான் உங்களை என்னுடையவர்கள் என்று உரிமைப் பாராட்டி இருக்கவில்லை...இப்பொழுதும் உங்களை என்னுடையவர்கள் என்று உரிமைப் பாராட்டவும் இல்லை. என்னிடம் இருந்து விலகிப் போங்கள். நீங்கள் செய்யும் காரியங்கள் அக்கிரமமாக இருக்கின்றன" என்றே கூறுவேன்.

எனவே எவன் ஒருவன் என்னுடைய போதனைகளான 'கோபம் கொள்ளாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள், உறுதிமொழி எடுக்காதீர்கள், தீமையை எதிர்க்காதீர்கள், உங்களுடைய மக்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்' இவற்றை எல்லாம் கேட்டு அதனை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளுகின்றானோ, அவன் பாறையின் மீது தனது வீட்டினைக் கட்டிய ஒரு புத்தியுள்ள மனிதனைப் போல் இருக்கின்றான். எத்தகைய புயலையும் அவனது வீடானது தாங்கி நிற்கும். ஆனால் எவன் ஒருவன் இந்த கட்டளைகளை எல்லாம் கேட்டும் அதனை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளாது இருக்கின்றானோ அவன் மணலின் மீது தனது வீட்டினைக் கட்டிய ஒரு அறிவற்ற மனிதனைப் போலவே இருக்கின்றான். எப்பொழுது ஒரு புயல் வருகின்றதோ அப்பொழுது அவனது வீடு இடிந்து விழுந்து அனைவரும் மரித்துப் போய் விடுவர்." என்றே இயேசு போதித்தார்.

அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அனைத்து மக்களும் இயேசுவின் இந்த போதனையைக் குறித்து வியப்படைந்தனர். ஏனென்றால் இயேசுவின் போதனையானது பழைமைவாத நம்பிக்கையாளர்களின் போதனைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருந்தது. பழைமைவாத நம்பிக்கையாளர்கள் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய ஒரு சட்டத்தினைக் குறித்தே போதித்தனர். ஆனால் இயேசு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றனர் என்றே போதித்தார்.

முற்றும்...!!!


பி.கு:
டால்ஸ்டாயின் 'சுவிசேஷங்களின் சுருக்கம் (Gospel In Brief)' என்ற நூலில் வரும் பகுதி இது.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி