இறைவன் எதற்காக மனிதனாக வர வேண்டும், அதற்கான தேவை என்ன என்றே நாம் கண்டு கொண்டு வருகின்றோம். சர்வ வல்லமை உடைய இறைவனால் எளிதாக சாத்தானையும் பாவத்தையும் வெல்ல முடியும் என்கின்ற பொழுது, எதற்காக அவர் மனிதனாக வந்தார்? என்பன போன்ற கேள்விகளையும் அக்கேள்விகளுக்கான விடைகளையுமே நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். சரி, இப்பொழுது நாம் இறைவன் மனிதனாக வந்த தருணம் வரை நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கிருத்துவ சமயம் கூறுகின்ற கருத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துவ சமயத்தின் கூற்றின் படி,

  • இறைவன் உலகினையும் மனிதனையும் படைக்கின்றார்
  • மனிதன் சாத்தானின் சூழ்ச்சியில் விழுந்து இறைவனின் கட்டளையை மீறுகின்றான்.
  • அதனால் இறைவன் மனிதன் மீது கோபம் கொண்டு அவனை ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றுகின்றார். மரணம் உலகிற்குள் வருகின்றது.
  • தொடர்ந்து மனிதர்கள் பாவம் செய்பவர்களாக இருக்க இறைவன் ஒரு மனிதனையும் அவனது குடும்பத்தாரையும் மட்டும் மனிதர்களுள் நல்லவர்களாக தேர்ந்து எடுத்துக் கொண்டு உலகினை வெள்ளத்தின் மூலமாக அழிக்கின்றார்.
  • ஆனால் அதன் பின்பும் மனித இனமானது பாவம் செய்து கொண்டிருக்க, இறைவன் ஆபிரகாம் என்பவனின் சந்ததியை தன்னுடயவர்களாக தேர்ந்து எடுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவுகின்றார்.
  • அவர்களின் இனத்தினை அவர் காக்கின்றார். அவர்களை எதிர்க்கும் மற்ற இன மக்களை அழிக்கின்றார்.
  • பின்னர் ஒரு காலத்தில் அனைத்து இன மனிதர்களுக்கும் நல்வழிகாட்டி அவர்களை பாவத்தில் இருந்து மீட்பதற்காக மனிதனாக வந்து பலியாகின்றார். நிற்க (இப்பொழுது உயிர்த்தெழுதல் போன்ற விடயங்கள் நமக்கு தேவை இல்லை...அதனை பின்னர் தேவைப்படும் பொழுது காணலாம்)
சுருக்கமாக இது தான் கிருத்துவ சமயத்தின் நம்பிக்கை. இதன்படி நாம் அறிந்து கொள்ளக் கூடியது என்னவாக இருக்கின்றதென்றால்,

  • இறைவன் மனிதனை பாவமற்றவனாக படைத்தார். அவன் பாவம் செய்வான் என்று அவர் உணர்ந்திருக்கவில்லை.
  • எனவே அவன் எப்பொழுது பாவம் செய்தானோ, அப்பொழுது அவன் மீது கோபம் கொண்டு அவர் அவனைத் துரத்தி விடுகின்றார்.
  • அந்த மனிதர்கள் தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தபடியினால், ஒரே ஒரு நல்ல மனிதனையும் அவனது குடும்பத்தையும் தேர்ந்து எடுத்துக் கொண்டு, உலகில் உள்ள மற்ற அனைவரையும் அழித்து விடுகின்றார். இவ்வாறு அவர் செய்தது உலகத்தில் பாவத்தை ஒழிக்க அவர் தேர்ந்தெடுத்த முதல் வழியாகும்.
  • ஆனால் நல்லவர்கள் என்று அவர் தேர்ந்து எடுத்த அந்த மனிதர்களின் சந்ததியினரும் தொடர்ந்து பாவம் செய்ய (உலகை இறைவன் அழித்ததால் பாவம் அழிந்து இருக்கவில்லை), அந்த மனிதர்களுள் இருந்து ஒருவனை அவர் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றார்.
  • அவர்கள் அவர் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களை அவர் ஆசீர்வதிக்கின்றார். எப்பொழுது அவர்கள் அவரது சொல்லை மீறுகின்றார்களோ அப்பொழுது அவர் அவர்களை தண்டிக்கின்றார். அவர்களுக்காக மற்ற மக்கள் இனத்தையும் அவர் அழிக்கின்றார்.
  • ஆனால் என்னதான் செய்தாலும், பாவமானது அழியாமல் உலகில் இருந்து கொண்டிருப்பதால் அவர் தன்னைத்தானே பலியாக்குவதற்கு மனிதனாக வருகின்றார்.

இதனையே தான் நம்மால் அவர்களின் நம்பிக்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அதாவது பாவத்தை அழிக்க இறைவன் எடுத்த முதல் நடவடிக்கை உலகை அழித்தது. அது வெற்றி பெறவில்லை. எனவே அவர் எடுத்த இரண்டாவது நடவடிக்கை தான் மனிதனாக வந்து பலியானது. இதனைத் தான் அவர்களது நம்பிக்கை நமக்கு தெரிவிக்கின்றது.

ஆனால், உண்மையைக் கூற வேண்டும் என்றால்...அவர்களது இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையினையும் விவிலியத்தில் வருகின்ற ஒரே ஒரு வசனமானது தகர்த்து விடுகின்றது. அந்த வசனம் இது தான்...

"அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்." - 1 பேதுரு 1:20

இந்த வசனத்தின் அர்த்தம் இதுதான்...'உலக தோற்றத்திற்கு முன்னரே மக்களுக்காக பலியாவதற்காக இயேசு தயாராகி விட்டார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்த இறுதிக் காலங்களில் மக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டு பலியாகி இருக்கின்றார்'. இந்த கருத்தைத் தான் பேதுரு கூறி இருக்கின்றார். இப்பொழுது இதன்படி நாம் கண்டோம் என்றால்,

உலகத்தைப் படைப்பதற்கு முன்னரே இறைவன் தெளிவாக அறிந்து இருக்கின்றார், தான் படைக்க போகும் மனிதன் பாவம் செய்வான் என்று. அவனை அந்த பாவத்திலிருந்து எந்த வழியாக மீட்க முடியும் என்பதனையும் அவர் அறிந்து இருக்கின்றார் (அதனால் தான் உலகத் தோற்றத்தின் முன்னரே இயேசு தயாராக இருக்கின்றார்). அதாவது,

  • மனிதன் நிச்சயமாக பாவம் செய்வான் என்று அறிந்தே தான் இறைவன் அவனைப் படைக்கின்றார்.
  • சாத்தான் மனிதனைத் தூண்டுவான் என்பதனையும் மனிதன் அதன் வலைகளில் விழுவான் என்பதனையும் அறிந்தே தான் அவர் சாத்தானையும் படைத்து இருக்கின்றார்.
  • சாத்தானின் வலையில் சிக்கி பாவம் செய்துக் கொண்டு பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் மனிதர்களை காப்பாற்றுவதற்காக தானே மனிதனாக உலகிற்கு வர வேண்டும் என்பதனையும் அவர் அறிந்தே தான் இருக்கின்றார். அவ்வாறே அவர் செய்யவும் செய்கின்றார். நிற்க

இங்கே நமக்கு மேலும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன...!!! பாவம் செய்வான் என்று அறிந்தும் இறைவன் எதற்காக மனிதனைப் படைக்க வேண்டும்? பாவம் செய்யாதவாறு அவனை இறைவனால் படைத்து இருக்க முடியாதா? அல்லது மனிதனைச் சோதிப்பான் என்று அறிந்தும் எதற்காக சாத்தானைப் படைக்க வேண்டும்? பின்னர் எதற்காக அந்த சாத்தானை வெல்வதற்காக மனிதனாக வர வேண்டும்?

சரி இதுவாவது இருக்கட்டும். மனிதன் பாவம் செய்வான் என்றும் அவனை மீட்பதற்கு தானே மனிதனாக வர வேண்டும் என்பதனை ஆரம்பத்திலேயே அறிந்திருந்த இறைவன் எதற்காக உலகத்தினை வெள்ளத்தால் அழிக்க வேண்டும்? எதற்காக ஒரு இனத்தினை மட்டும் தன்னுடைய இனமாகத் தேர்வு செய்ய வேண்டும்?

இந்த கேள்விகளுக்கு பெரும்பாலான கிருத்துவர்களிடம் பதில்கள் கிடையாது. ஏன்...இப்படி கேள்விகள் இருக்கின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. காரணம் கேள்விகள் கேட்பது என்பது, அரசியலாக்கப்பட்ட அனைத்து சமயங்களிலும், தவறானதொரு செயல் என்றே போதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. கண்மூடித்தனமாக நம்ப வேண்டும் என்பதே அந்த சமயங்கள் கூறுகின்ற வழிமுறையாக இருக்கின்றது. கிருத்துவமும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலே கூறுகின்ற கேள்விகளுக்கு அவர்கள் பொதுவாக கூறுகின்ற பதில் என்னவாக இருக்கின்றது என்றால் 'மனிதன் இறைவன் படைத்த ஒரு பொருள்...இறைவனுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கின்றது...அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்...எப்படி வேண்டுமென்றாலும் செய்வார். அதனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உலகை அழிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார் என்றால் அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கின்றது. மனிதர்களை படைத்த அவருக்கு அவர்களை அழிப்பதற்கும் உரிமை இருக்கின்றது'. இதுவே தான் அவர்கள் பொதுவாக கொடுக்கும் பதிலாக இருக்கின்றது.

இவர்களது இந்த பதில், 'அதிகார வெறி பிடித்த ஒரு ஆணவ மனிதன்' என்கின்ற பிம்பத்தைத் தான் இறைவனுக்கு தருகின்றது. ஆனால் இவர்கள் இறைவனுக்கு கொடுக்கும் பிம்பத்தை இயேசு தந்திருக்கவில்லை 'இறைவன் அன்பானவராகவே இருக்கின்றார்...அவர் நல்லோர் மீதும் தீயோர் மீதும் வேறுபாடுகள் காணாமல் அனைவரின் மீதும் மழையைப் பொழிகின்றார்.' என்றே இயேசு கூறி இருக்கின்றார். மேலும் இயேசுவே (மனிதனாக வந்த இறைவன்) 'தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்' என்று கூறி தனது சீடர்களின் (வெறும் மனிதர்கள்) கால்களைக் கழுவி விட்டு இருக்கின்றார்.

இயேசுவின் கூற்றுகளும் சரி அவரது நடவடிக்கைகளும் சரி 'என்னிடம் அதிகாரம் இருக்கின்றது...எனவே நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன்' என்பதைப் போல் ஒரு துளியளவு கூட அமைந்திருக்கவில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது, கிருத்துவர்கள் கொடுக்கின்ற அந்த பொதுவான பதிலினை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சரி இருக்கட்டும்...கேள்விகள் கேட்டாயிற்று...அதற்கு அவர்கள் தரும் பதிலை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியாயிற்று...அவ்வாறு இருக்க, அந்த கேள்விகளுக்கு விடை இருக்கின்றதா இல்லையா? என்கின்ற கேள்வி இப்பொழுது நிச்சயமாக எழத் தான் செய்யும்.

அந்த கேள்விகளுக்கான விடையினைத் தான் நாம் இப்பொழுது தேட வேண்டி இருக்கின்றது.

தேடுவோம்...!!!

தட்டுங்கள் திறக்கப்படும்...கேளுங்கள் கொடுக்கப்படும்...தேடுங்கள் கிடைக்கப்படும்!!!

பி.கு:
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

தேடுவோம்...!!!
தட்டுங்கள் திறக்கப்படும்...
கேளுங்கள் கொடுக்கப்படும்...
தேடுங்கள் கிடைக்கப்படும்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு